சிலம்போ சிலம்பு/சிறப்பான சுவைச் செய்திகள்

விக்கிமூலம் இலிருந்து



29. சிறப்பான சுவைச் செய்திகள்

சிலம்பில் இடம் பெற்றுள்ள சிறப்பானவையும் சுவை மிக்கனவுமாகிய செய்திகளுள் சிலவற்றை இந்தத் தலைப்பில் காதை வாரியாகக் காண்பாம்:

மங்கல வாழ்த்துப் பாடல்

திருமண அழைப்பு

அரை நூற்றாண்டுக்கு முன்பு பெரும்பாலான குடும்பங்களில் திருமணம் நடைபெறின் அழைப்பிதழ் அச்சிடுவதில்லை. யான் சிறுவனாயிருந்தபோது, வீட்டுக்கு வீடு சென்று வெற்றிலை பாக்கு வைத்து வாயால் அழைப்பு விடுத்ததையே பார்த்திருக்கிறேன். வெளியூர் உறவினர்க்கும் நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து வாயால் அழைப்பு விடுப்பர்.

இப்போது, மிகப்பெருஞ் செலவில் (காசுக் கொழுப்பால்) அழைப்பிதழ் அச்சடிக்கப்படுகிறது. இருவீட்டார் அழைப்பு - மங்கையர் அழைப்பு - முதலியன அச்சடிக்கப்படும். சிலர் செய்தித் தாள்களில் திருமண விளம்பரம் செய்து இதையே அழைப்பாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுவது முண்டு. இப்போது பெரிய இடத்துத் திருமண அழைப்பிதழுக்கு ஆகும் பணச் செலவில் அன்று என் பாட்டனாரின் திருமணம் நடைபெற்றிருக்கும்.

புகாரில் அன்று கண்ணகியின் தந்தை குடும்பமும் கோவலனின் தந்தை குடும்பமும் மிகவும் பெரிய இடமாகும். எனவே, அவர்கள், கண்ணகி - கோவலன் திருமணத்தை யானையின் முதுகில் பெண்களை ஏற்றிப் புகாரில் தெருத்தெருவாய் வலம்வரச் செய்து ஊரார்க்கு அறிவிக்கச் செய்தனர். இது பெரிய இடத்து விவகாரம். யானையைக் கண்டு ஆண்களே இன்று அஞ்சுவதுண்டு; அன்று பெண்கள் யானை மீதேறி அறிவித்தது வியப்பு.

“யானை எருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்”
(1: 43, 44)

என்பது பாடல் பகுதி. ‘ஈந்தார் மணம்’ என்னும் தொடர் மிகவும் அழகியது - சுவையளிப்பது.

இக்காலத்தில், அழைப்பிதழ் அச்சடிக்கும் பெண் வீட்டார் பெண்ணின் பெயரை முதலிலும் மாப்பிள்ளையின் பெயரை அடுத்ததாகவும் அமைக்கின்றனர்; மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளையின் பெயரை முதலாவதாகவும் பெண்ணின் பெயரை இரண்டாவதாகவும் அமைப்பர்.

சிலப்பதிகாரத்தில் திருமண அழைப்பிதழ் அமைத்துள்ள இளங்கோவடிகள் கண்ணகியின் பெயரை முன்னும் கோவலன் பெயரைப் பின்னும் அமைத்துள்ளார். (இளங்கோ பெண் வீட்டாரா? இல்லையே).

நூலின் பெயராகிய சிலப்பதிகாரம் (சிலம்பு அதிகாரம்) கண்ணகியின் கால் சிலம்பு தொடர்பாக எழுந்தது. காப்பியத்தில் கதைத் தலைவனினும் கதைத் தலைவியே பெரிய அளவில் - இன்றியமையாத இடம் பெற்றுள்ளாள். எனவே, கண்ணகிக்கு முதலிடம் தரப்பட்டிருக்குமோ?

மற்றும், உமாபதி, உமா மகேசுவரன், அம்பிகாபதி, மீனாட்சி சுந்தரன், வள்ளி நாயகன், வள்ளி மணாளன், (சித்தி விநாயகர்), இலட்சுமி காந்தன், இலட்சுமி நாராயணன், இராதா கிருட்டிணன், சீதாராமன், சானகி ராமன் - என்பன போன்ற அடிப்படையில், கணவன் பெயரின் அறிமுகத்திற்கு முன் கண்ணகியின் பெயர் அறிமுகப் படுத்தப்பட்டிருக்குமோ? இளங்கோ இப்போது நம் எதிரில் வரின் அவரைச் சரியான காரணம் கேட்கலாம்! ஒருவேளை அந்தக் கால மரபாயும் இருக்கலாம் இது! அதாவது:- பெண் மலையாளம் - மருமக்கள் தாயம் என்பன போன்ற அடிப்படையில் சேரராகிய இளங்கோ பெண்மைக்கு முதலிடம் தந்திருப்பாரோ?

அந்தி மாலைச் சிறப்புச் செய்காதை

இல்(மனை) வளர் முல்லை

மலர் பரப்பிய படுக்கை,

“இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளி”
(4; 27, 28)

என்று கூறப்பட்டுள்ளது. புறஞ்சேரி இறுத்த காதையிலும், மாதவி (குருக்கத்தி), மல்லிகை, முல்லை ஆகிய மலர்களின் மாலை என்னும் பொருளில்,

“மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்
போதுவிரி தொடையல்”
(13. 120, 121)

என இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது.

கற்புடைய மகளிர் இல்லத்தில் (மனையில்) முல்லை வளர்ப்பார்களாம். இல்வளர் முல்லை, மனைவளர் முல்லை என்பன இதைத்தான் அறிவிக்கின்றன. இந்தக் கருத்து, குறுந்தொகை நூலில் .

“மனை எல்லறு மெளவல் நாறும்
பல்லிருங் கூந்தல்”
(மெளவல் - முல்லை - 19:4,5)

எனவும், நற்றிணையில்

“மனைகடு மெளவலொடு ஊழ் முகை யவிழ்” (115:6)

எனவும், அகநானுாற்றில்

“மனைய மெளவல் மாச்சினை காட்டி” (23:12)

எனவும், பெருங்கதையில்

“இல் லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப்
பெருமணம் கமழவும்”
(1:33:13, 74)

எனவும், மற்றும் பல இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல்களின் அடிப்படையில், ஒட்டக் கூத்தர் தக்க யாகப் பரணி என்னும் நூலில் உமாதேவிகூட முல்லை வளர்த்ததாகப் பாடியுள்ளார். உமாதேவி வளர்க்கும் முல்லைக் கொடி நூறாயிரமாகக் கிளைத்து விண்ணில் சென்று திங்களைத் தடவுகின்றதாம். திங்களிலுள்ள கறையாகிய மான், தேவி வளர்க்கும் முல்லை என அஞ்சி அதை மேயவில்லையாம்.

“நுதிக்கோடு கூர்கலை உகைப்பாள் விடாமுல்லை
நூறாயிரம் கிளைகொடு ஏறா விசும்பிவர்
மதிக்கோடு தைவர எழுந் தண் கொழுந்துகளை
வாயாது எனக்கொண்டு மேயாது மான் மறியே”
(75)

என்பது பாடல். கற்புடைய பெண்டிர் வீட்டில் முல்லை வளர்ப்பதால், முல்லைக்குக் ‘கற்பு’ என்னும் பெயரும் உண்டென ஆசிரிய நிகண்டு (137) கூறுகிறது. மேலும் பல இலக்கியங்களில் முல்லையும் கற்பும் இணைக்கப்பட்டுள்ளன.

புகழ் வெண்மை

புகழின் நிறம் வெண்மை என்று கூறுவது இலக்கிய மரபு. சிலம்பில் உள்ள

“அந்தி வானத்து வெண்பிறை தோன்றி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து”
(4:23 - 26)

என்னும் பகுதியில் உள்ள விளக்கம் என்பதற்குப் புகழ் என்னும் பொருளும் உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். புகழ் வெள்ளியாய் - வெள்ளை நிறத்ததாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இகலென்னும் எவ்வநோய் நீங்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்”
(853)

என்னும் குறளிலுள்ள ‘விளக்கம்’ என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் முதலியோர் ‘புகழ்’ என்னும் பொருளே தந்துள்ளனர்.

வெள்ளைக் கொடிகள், புகழ் போலவும் வெண்மையான அலை போலவும் பரந்து பறந்தன எனக் கம்ப இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

“தானை மாக்கொடி... புகழ்எனக் கால்பொரப் புரண்ட
வானயாற்று வெண்திரை என வரம்பில பரந்த”
(5-9-7)


என்பது பாடல் பகுதி. மற்றும், நிலவின் வெள் ஒளி, இராமனது புகழ் புகுந்து உலவியது போல் இருந்ததாம்.

“அன்னவன் புகழ் புகுந்து உலாயதோர்
பொலிவும் போன்றதே”
(5-1-65)

இது கம்பரின் பாடல் பகுதி. கம்பரே இன்னும் இதுபோல் வேறிடங்களிலும் கூறியுள்ளார். இன்னும் ஒன்று கூறி முடித்து விடலாம். சிவனது புகழ் திரண்டது போன்று வெள்ளைக் கைலை மலை இருந்தது எனப் பிரபுலிங்கலீலை என்னும் நூலில் சிவப்பிரகாசர் கூறியுள்ளார்:-

“வள்ளல் வெண் புகழ் திரண்ட வளங்கெழு
கைலைக் குன்று”
(2-4)

என்பது பாடல் பகுதி.

கோவலன் இழப்பு

கோவலன் கண்ணகியைப் பிரிந்து விட்டதால், அவளுடைய கால்கள் சிலம்புகளையும், அல்குல் மேகலையையும், கொங்கை குங்குமச் சாந்து எழுதுதலையும், காது குழையையும் மங்கல நாணைத் (தாலியைத்) தவிர மற்ற உறுப்புகள் மற்ற அணிகலன்களையும், முகம் சிறு வியர்வையையும், கண் மையையும், நெற்றி பொட்டையும், வெண்மையான ஒளி பொருந்திய பற்களிலிருந்து வெளிப்படும் சிரிப்பு கோவலனையும், கூந்தல் நெய்யணியையும் இழந்து விட்டனவாம்.

"அஞ்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறு வியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்துதல் திலகம் இழப்பத்
தவள வாள் நகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி" (4:47-57)

என்னும் பகுதி சுவை மிக்கது. அதை அதை அணியவில்லை என்று கூறியதோடு, இது இது இன்னின்னதை இழந்துவிட்டதாகவும் கூறியிருப்பது ஒரு புது முறை, ஒரே பொருளில் ஒழிய, நீங்க, இரிய, மறப்ப, இழப்ப என்னும் சொற்களை மாறி மாறிக் கையாண்டிருப்பதும் ஒரு சுவை. புணர்ச்சி இன்மையால் முகம் வியர்வையை இழந்ததாம்.

அடி முதலாய்த் தொடங்கி முடிவரை சொல்லிக் கொண்டு போவதைப் 'பாதாதி கேசம்' எனவும், முடி முதலாய்த் தொடங்கி அடிவரை சொல்லிக் கொண்டு போவதைக் 'கேசாதி (கேச + ஆதி) பாதம்' எனவும் வட மொழியில் கூறுவர். தமிழில், 'அடி முதல் முடி' எனவும், ‘முடி முதல் அடி எனவும் கூறலாம். இந்த இடத்தில் இளங்கோ அடி முதல் முடி முறையைக் கையாண்டுள்ளார்.

'அஞ் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய' என்று தொடங்கி, 'மை யிருங் கூந்தல் நெய்யணி மறப்ப' என்று முடித்துள்ளார். இந்த முறை இந்நூலுக்கு மிகவும் பொருத்தமாகும். சிலம்பு தொடர்பான சிலப்பதிகாரத்தில 'சிலம்பு ஒழிய' எனச் சிலம்புக்கு முதலிடம் தந்திருப்பது மிக்க சுவை பயக்கிறது.

'தவள வாள் நகை கோவலன் இழப்ப' என்பதற்கு, சிரிப்பு கோவலனை இழந்ததாக யான் பொருள் கூறியுள்ளேன். மற்ற அமைப்புகளை நோக்கின், அவை போல இவ்வாறு கூறுவதுதான் பொருத்தம் என்பது தெளிவாகும். ஆனால், கோவலன் கண்ணகியின் சிரிப்பை இழந்து விட்ட தாக உரையாசிரியர்கள் பொருள் செய்துள்ளனர். மற்ற அமைப்புகளை நோக்க இது பொருந்தாது கருத்தின் நயமான சிறப்பும் கெட்டுப்போகும். சிரிப்பு கோவலன் முன்னால் மட்டுமே நிகழும் . இப்போது கோவலன் இல்லாததால் சிரிப்பே இல்லை - எனவே தான், சிரிப்பு கோவலனை இழந்தது - சிரிப்புக்கு வேலையே இல்லை - எனக் கூறுதலே பொருந்தும். மாதவியைப் பிரிந்து கோவலன் மீண்டும் கண்ணகியை அடைந்ததும், அவனைக் கண்டு கண்ணகி சிரித்ததாகக் கூறியுள்ள பகுதி ஈண்டு நினைவுக்கு வரவேண்டும்.

"நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி" (9:72)

என்பது அந்தப் பகுதி. .

இந்தப் பகுதியில், ஒரு சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மங்கல வாழ்த்துப் பாடல் காதையில் உள்ள 'அகலுள் மங்கல அணி எழுந்தது' என்னும் பகுதிக்கு, 'மங்கல அணி எங்கும் எழுந்தது' என அடியார்க்கு நல்லார் உரை எழுதியுள்ளார். அடியார்க்கு எல்லாம் நல்லவராயிற்றே - அவர் மீது குறை சொல்லக் கூடாதுதான். ஆனால் இந்த விளக்கம் தெளிவாய் இல்லையே. இதற்கு, ஊரில் மங்கல நாண் வலம் வந்தது என்பது சிலர் கூறும் பொருள். கோவலன் கண்ணகி கழுத்தில் தாலி கட்டினானாஇல்லையா என்பது ஓர் ஆராய்ச்சி. அடியார்க்கு நல்லாரின் உரையைக் கொண்டு, தாலி கட்டவில்லை என்பர் சிலர். மற்ற ஒர் உரையைக் கொண்டு தாலி கட்டினான் என்பர் சிலர். இவ்விரண்டனுள் பின்னதே பொருத்தமானது. இதற்கு அகச்சான்று, மேலே காட்டியுள்ள

"மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்" (4:50)

என்பது தான். தாலியைத் தவிர வேறு அணி அணியவில்லையாம். தாலி எப்போதும் இருப்பதாயிற்றே!

மற்றும் ஒர் அகச்சான்று வருமாறு:- மனையறம் படுத்த காதையில் - கோவலன் கண்ணகியைப் பின்வருமாறு பாராட்டுகிறான். மணமலர் அணிந்த கண்ணகியே! உன்னை அணி செய்கின்ற (அலங்கரிக்கின்ற) தோழியர், உனக்கு மங்கல அணி (தாலி) இருக்கும்போது வேறு அணிகலன் களையும் அணிவது எதற்காகவாம்? பாடல்.

"நறுமலர்க் கோதை கின்கலம் பாராட்டுநர்
மறுவில் மங்கல அணியே அன்றியும்

பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்" (2:62-64)

என்பது பாடல் பகுதி. இதனாலும் தாலி கட்டிய உண்மை தெளிவாகும்.

இந்திர விழவூர் எடுத்த காதையில், இந்திரவிழாவின் போது தெருவில் திரியும் பொது மகளிரைப் பற்றி இளங்கோ அடிகள் செய்துள்ள கற்பனைப் புனைவு சுவை நயம் மிக்கது. பாடலைப் படித்துப் பார்க்கவேண்டும். ஈண்டு விரிப்பின் பெருகும்.

நாடு காண் காதை

உழவர்கள் உழைத்து விளைவிப்பதால் தான் இரப்பவரின் சுற்றமும் புரக்கும் அரசரின் கொற்றமும் காக்கப்படுகின்றன. காவிரியின் வளத்தால் உழவு செய்ய முடிகிறதாதலின், உழவர்கள் 'காவிரிப் புதல்வர்' எனச் சிறப்பிக்கப்பெற் றுள்ளனர்,

"பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்

உழவிடை விளைப்போர்" (10; 148 - 150)

என்பது பாடல் பகுதி. காவிரி மக்களாகிய தன் குழந்தைகளைத் தாய்போல் காக்கிறது என்னும் இந்தக் கருத்து வேறு தலைப்பில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

காடு காண் காதை

கண்ணின் கட்டளை

திருவரங்கத்தையும் திருவேங்கடமலையையும் காட்டுக என்று தன் கண் கட்டளையிட்டதால் மாங்காட்டு மறையவன் புறப்பட்டு வந்தானாம்.

"திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் (11:40)
செங்கண் நெடியோன் கின்ற வண்ணமும்
என்கண் காட்டென்று என்னுளங் கவற்ற

வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்" (11:51-53)

என்பது பாடல் பகுதி. கண் காட்டும்படி வற்புறுத்தியதாகக் கூறுவது ஒரு சுவையாகும். இத்தகைய ஒரு கற்பனை 'தெய்விகத் திருமணம்' என்னும் புதினத்தில் (நாவலில்) உள்ளது. வருமாறு:

"ஆனால் அந்த இளைஞரால் கண்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவளைப் பார்க்கவேண்டும் என்று அவர் கண்கள் அவருக்கு முதலில் நினைவுறுத்தின - அவர் பொருட் படுத்தவில்லை. அவளைப் பார்க்க வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கெஞ்சின - அவர் புறக்கணித்துவிட்டார். பின்னர், பார்க்கத்தான் வேண்டும் என அடம்பிடித்துப் பார்த்தே விட்டன"

இந்த உரைநடை இலக்கியத்திலும் இந்தக் கற்பனை உள்ளதைக் காணலாம்.

மாங்காட்டு மறையவன் திருவரங்கத்தையும் திருவேங்கடத்தையும் கண்ணுக்குக் காட்டச் செலவு மேற்கொண்டான். இது தொடர்பான சேக்சுபியரின் கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது, கையை, ஏழையாக்கிக் கண்ணைப் பணக்கார ணாக்கு என்று ஓரிடத்தில் அவர் கூறியுள்ளார். கையை ஏழையாக்குதல் என்றால், கைப் பணத்தைச் செலவிடு என்று பொருளாம். கண்ணைப் பணக்காரனாக்கு என்றால், பல காட்சிகளையும் கண்ணால் கண்டு மகிழ்ச்சியுடன் பொது அறிவு பெறுக என்று பொருளாம். ஊர் சுற்றி உலக அறிவு பெறுக என்பதை மாங்காட்டு மறையவன் வாயிலாக இளங்கோ குறிப்பாகக் கூறியுள்ளார்.

உலகுதொழு மண்டிலம்

தாமரையை மலரச் செய்யும் ஞாயிறு தோன்றிச் செழியனது மதுரையைத் துயில் எழுப்பியதாம்.

"மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம்

ஓங்குயர் கூடல் ஊர்துயில் எழுப்ப" (14:46)

ஞாயிறை உலகம் தொழுவதாலும் அதைச் சுற்றிப் பல கோள்கள் இருப்பதாலும் அது உலகுதொழுமண்டிலம் எனப்பட்டது. நீர்ப்படைக் காதையில்,

"காலைச் செங்கதிர்க் கடவுள்" (27:137)
என ஞாயிறு கடவுளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிறு வணக்கம் உலகில் பல்வேறிடங்களிலும் செய்யப்படுகிறது. இளங்கோவே ‘ஞாயிறு போற்றுதும்’ என்று கூறியுள்ளார். ஞாயிறுக்குக் கோயிலும் உண்டு. சூரியநாயனார் கோயில் என்னும் பெயரில் ஓர் ஊரும் உள்ளது. எகிப்திலும் கோயில் உண்டு. திருமுருகாற்றுப்படையை, நக்கீரர்,

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு” (1,2)

என ஞாயிறு போற்றித் தொடங்கியுள்ளார். ‘அதோ எரிந்து கொண்டு போகிறானே சூரிய நாராயணன் - அவன் கேட்பான்’ என மக்கள் நீதி பெற ஞாயிறைத் துணைக்கு அழைக்கின்றனர். நம் மண்ணுலகைப் பெற்ற தாயும் ஆகும் ஞாயிறு.

வழக்குரை காதை

சொல்லின் செல்வி

அனுமன் இராம இலக்குமணரிடம் தன்னைப் பற்றிச் சுருக்க விளக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்ட சொல் வன்மையால் சொல்லின் செல்வன் எனப்பட்டான். ‘யாரையோ நீ மடக் கொடியோய்’ எனப் பாண்டியன் வினவியலும் கண்ணகி சொல்லின் செல்வியாய் மாறி விடுகிறாள்.

புறாவின் துயர் போக்கிய சோழன் சிபியும், ஆவின் கண்ணீர் தன் நெஞ்சைச் சுட்டதால் தன் பெறலரு மகனைத் தேர்க் காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் ஆண்ட புகார் எனது ஊர். அவ்வூரின் பெருங்குடி மகனாகிய மாசாத்துவானின் மகனும் நின் மதுரைக்கு வந்து என் கால் சிலம்பை விற்க முயன்றபோது நின்னால் கொல்லப்பட்டவனும் ஆகிய கோவலனின் மனைவி நான்.எனது பெயர் கண்ணகி - என்று சுருக்கமாகத் தன் வரலாற்றைக் கூறிய கண்ணகியைச் சொல்லின் செல்வி என்று குறிப்பிடலாம் அல்லவா?

வஞ்சின மாலைக் காதையில், கண்ணகி, கற்புடைய மங்கையர் எழுவரின் கற்பு வரலாற்றைக் கூறி, அவர்கள் பிறந்த புகாரிலே பிறந்தவள் யான் எனக் கூறியுள்ள பகுதி படித்துச் சுவைத்தற்குரியது.

காட்சிக் காதை

எமனது வியப்பு

சேரன் செங்குட்டுவன் ஆரிய மன்னர்கள் ஐந்நூற்று வரைத் தான் ஒருவனே எதிர்த்துச் செய்த போரை, எமன் வியந்து தன் கடுமையான கண்களை மூடாமல் விழித்த படியே பார்த்துக்கொண்டிருந்தானாம்:

“கண் விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்” (25:64)

இது ஓர் இலக்கியச் சுவை. பாண்டியன் மனைவி கோப் பெருந்தேவி, கணவன் பாண்டியன் உயிர் துறந்ததும், தனது உயிரால் அவனது உயிரைத் தேடுவதற்காக உயிர் விட்டவள் போல் உடனே இறந்து விட்டாளாம்:

“தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடினள்போல்
பெருங் கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தாள்”

(25:85)

இஃதும் ஓர் இலக்கியச் சுவை . தற்குறிப்பேற்ற அணி அமைந்தது.

அரசியல் சூழ்ச்சி

வட நாட்டுக்குப் படையெடுக்கப் போவதாக முன்கூட்டி வடபுல அரசர்கட்குத் தூது விடும்படி வில்லவன் கோதை செங்குட்டுவனுக்குக் கூறினான். ஆனால், அழும்பில்வேள் என்பவன், தூது அனுப்ப வேண்டிய தில்லை - உலக மன்னர்களின் ஒற்றர்கள் யாவரும் நம் ஊரில் இருப்பர்; எனவே, நம் ஊரில் பறையறைந்து தெரிவிப்பின் போதும் - இதைக் கேட்கும் ஒற்றர்கள் அவர்கள் ஊருக்குச் செய்தி அனுப்பி விடுவர் - என்று கூறியது, ஓர் அரசியல் சூழ்ச்சிச் சுவையாகும்.

தோள் துணை இழப்பு

வஞ்சி மாநகரில் அரசன் ஆணையுடன் பின்வருமாறு பறையறைந்து அறிவிக்கப்பட்டது:

வடபுல மன்னர்களே! முன்னரே சேரன் இமயம் கொண்டதால் நீவிர் திறை கட்ட வேண்டியவர் ஆவீர். இப்போது செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கொணர வடபுலம் வருகிறான். வழியில் வரும்போது திறை கட்டி விடுங்கள். இல்லையேல், நீங்கள் தோள் துணையாகிய மனைவியரை இழந்து துறவு கொள்ளுங்கள் - என்பது பறையறிவிப்பு.

“தோள் துணை துறக்கும் துறவொடு வாழுமின்”

(25:190)

என்னும் பகுதி சுவைக்கத்தக்கது.

“இடுதிறை கொடுவந்து எதிரீ ராயின்
கடல் கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழுமின் கேளீ ராயின்
தோள்துணை துறக்கும் துறவொடு வாழுமின்”

(25:186–195)

இது பாடல் பகுதி. சேரர்கள் கடலில் இருந்த கடம்பு எறிந்து வென்றவர்கள் - இமய மலையில் வில் பொறித்து வென்றவர்கள். எனவே, நீங்கள் சேரர்க்கு அஞ்சவில்லை எனில், கடலைக் கடந்து அக்கரையிலுள்ள இடத்திற்குச் சென்றும், இமயத்தைத் தாண்டி அதற்கு வடக்கே உள்ள இடத்தை அடைந்தும் வாழ்வீராக என்ற நயம் இந்த பகுதியில் அமைந்து சுவை பயக்கிறது.

தோள் துணை என்பது மனைவியின் துணையைக் குறிக்கிறது. ஈண்டு, மனைவிக்கு ‘வாழ்க்கைத் துணை’ என்னும் பட்டத்தை வள்ளுவர் நல்கியிருப்பது ஒப்பு நோக்குதற்கு உரியது.

கால் கோள் காதை

மலை முதுகு நெளிதல்

செங்குட்டுவன் பெரும்படையுடன் நீலமலை (நீலகிரி) வழியாகச் சென்றான். படைகளின் மிகுதியால் மலையின் முதுகு நெளிந்ததாம். ‘மலைமுது குநெளிய’ (26.82) என்பது பாடல் பகுதி. இஃதோர் இலக்கியச் சுவை. உயிருள்ள பொருள்களின் - முதுகு உள்ள உயிரிகளின் முதுகுதான் நெளியும். இந்த நெளிவு அஃறிணைப் பொருளாகிய மலைக்கும் கூறப்பட்டுள்ளது.

“உரிய பொருளின்றி ஒப்புடைப் பொருள்மேல்
தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்”
(25)

என்னும் தண்டியலங்கார நூற்பாவின்படி இது சமாதி அணி எனப்படும். சமாதி அணியை, ‘ஒப்புவினை புணர்ப்பணி’ என்று தமிழில் குறிப்பிடலாம்.

பகைவரின் மாறு கோலம்

செங்குட்டுவனின் வடநாட்டுப் போரில் சிறைப்பட்ட கனக விசயர் முதலியோரைத் தவிர, மற்ற பகைவர்கள் பலவித மாறுகோலம் கொண்டு தப்பி ஓடினராம். அதாவது: சடைமுடி தாங்கியும், காவி உடுத்தும், திருநீறு பூசியும், மணையும் மயில் தோகையும் (சமணத் துறவியர்போல்) ஏந்தியும், பாடும் பாணர் போலவும், பல இயங்களைக் கூத்தர் போலத் தோளில் சுமந்தும், வாளை விட்டுத் தத்தமக்குத் தெரிந்த கலைவல்லவர்போல் தாம் விரும்பிய பல்வேறிடங்களுக்கு ஓடி மறைந்து விட்டனராம். அதாவது வெற்றிகரமாகப் பின் வாங்கினர் போலும் பாடல்:

“சடையினர் உடையிடனர் சாம்பல் பூச்சினர்
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்
பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்த ராகி எங்கனும்
ஏந்துவாள் ஒழியத் தாம் துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர”

(26:225–230)

இது சுவையான - நகைச் சுவை பொருந்திய பாடல் பகுதி. இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில், இளங்கோவிற்குக் காலத்தால் கம்பர் இராமாயணத்திலும் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியிலும் அறிவித்துள்ள இத்தகைய சுவையான பகுதிக்ளைக் காண்பாம்.

கம்ப ராமாயணம் - சுந்தர காண்டம் - அக்ககுமாரன் வதைப் படலம்:

அனுமனுக்கு அஞ்சிய அரக்கர் பலர், தாம் உயிர் பிழைக்கப் பல மாறுகோலங்கள் பூண்டு தப்பித்துக் கொண்டதைக் கம்பர் நகைச்சுவையுறப் படைத்துக் காண்பித்துள்ளார்:

சிலர் மீனாகிக் கடலில் புக்கனராம். சிலர் ஆவின் உருக்கொண்டு வழியில் புல்பூண்டுகளை மேயத் தொடங்கினராம். சிலர் ஊன் (மாமிசம்) தின்னும் பறவை வடிவெடுத்து ஆங்குக் கிடந்த உடல்களைக் கொத்தினராம். சிலர் பார்ப்பன உருவெடுத்தனராம். சிலர் பெண் வடிவங் கொண்டு கூந்தலை வகிர்ந்து கொண்டிருந்தனராம். சிலர், ஐயா, அனுமனே! யாங்கள் உம் அடைக்கலம் - எங்களை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினராம். சிலர் அசையாமல் நின்று திருமாலின் திருப்பெயர்களைச் சொல்லிக் கொண்டு திருமாலின் அடியவர்போல் நடித்தனராம்.

தம் மனைவியரும் உறவினரும் வந்து தம்மைக் கட்டிக் கொண்டு அழுதபோது, ஐயையோ - யாங்கள் உம் உறவினர்கள் அல்லர் - போர் காண வந்த தேவர்கள் என்று சொல்லி அவர்களை உதறித் தள்ளி அப்பால் சென்றனராம் சிலர். நாங்கள் அரக்கர் அல்லர் - மனிதர்கள் என்றனராம் சிலர். வண்டு வடிவம் எடுத்துப் பொழில்களில் தங்கினராம் சிலர். மயக்கம் கொண்டவர்போல் படுத்துக் கொண்டனராம் சிலர். தம் அரக்கக் கோரப் பற்களை ஒடித்து மக்கள் பற்கள்போல் ஆக்கிக் கொண்டனராம் சிலர். அரக்கராகிய தம் செம்பட்டை மயிரைக் கருமையாக்கிக் கொண்டு மக்கள் போல் நடித்தனராம் சிலர். பாடல்கள்:

"மீனாய் வேலையை உற்றார்சிலர், சிலர்
பகவாய் வழிதொறும் மேய்வுற்றார்
ஊனார் பறவையின் வடிவானார் சிலர்
சிலர் நான்மறையவர் உருவானார்
மானார் கண்ணிள மடவார் ஆயினர்
முன்னே தம்குழல் வகிர்வுற்றார்
ஆனார்சிலர், சிலர் ஐயா நின்சரண்
என்றார், கின்றவர் அரி என்றார்" (40)

"தம்தாரமும் உறுகிளையும் தமை யெதிர்
தழுவுந்தொறும் நுமதம ரல்லேம்
வந்தேம் வானவர் என்றேகினர் சிலர்
சிலர் மானுடர்என வாய்விட்டார்
மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள்
ஆனார்சிலர், சிலர் மருள்கொண்டார்
இந்தார் எயிறுகள் இறுவித்தார் சிலர்
எரிபோல் குஞ்சியை இருள்வித்தார்" (41)

என்பன கம்பரின் கைவரிசை. இனி, கலிங்கத்துப்பரணி - போர் பாடியது - என்னும் பகுதியில் உள்ளனவற்றைக் காண்பாம்:

சோழன் படைக்கு அஞ்சிக் கலிங்க மறவர்கள் புதர் வழியாக ஓடினர். புதரில் இருந்த முட்கள் அவர்களின் உடைகளையும் தலைமயிரையும் பிய்த்து இழுத்துக் கொண்டன. இதனால் அவர்கள், சமணத் துறவியர்போல் முடியும் உடையும் இல்லாமையால், நாங்கள் படைஞர் அல்லர் - சமணத் துறவிகள் என்று தப்பி ஓடினராம். (63)

சிலர், வில்லின் நாண் கயிற்றைப் பூணுரலாகச் செய்து பூண்டு, நாங்கள் கங்கையாடச் செல்லும் பார்ப்பனர்கள் என்று கூறித் தப்பினராம் (64).

சிலர், குருதியில் நனைந்த கொடிகளைக் காவி உடை போல் உடுத்து, முடியையும் வழித்துக் கொண்டு, நாங்கள் புத்தத் துறவியர் என்று கூறித் தப்பினராம். (65)

சிலர், யானையின் மணிகளைத் தாளமாகத் தட்டிக் கொண்டு, யாங்கள் கலிங்கர் அல்லேம் - தெலுங்குப் பாணர்கள் என்று கூறித் தப்பித்து ஓடினராம். (66)

பாடல்கள்:

“வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி
     வன்துாறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்க ரெல்லாம்
     அமணரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே” (63)

“வேடத்தால் குறையாது முந்நூ லாக
     வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியால் கங்கை
ஆடப்போங் தகப்பட்டேம் கரந்தோம் என்றே
     அரிதனைவிட் டுயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே”

(64)

"குறியாகக் குருதிகொடி ஆண்ட யாகக்
கொண்டுடுத்துப் போர்த்துத்தம் குஞ்சி முண்டித்து
அறியீரோ சாக்கியரை உடைகண்டால் என்.
அப்புறம்என் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே" (65)

"சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்
தெலுங்கரேம் என்று சிலகலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்டு
அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே" (66)

சோழன் பகைவரும் சேரன் பகைவரும் மக்கள் இனத்தவர். ஆதலின் கற்பனை கட்டுக்குள் இருந்தது. அனுமனுடன் பொருதவர்கள் அரக்கர் ஆதலின் பல வகையான மாற்றுருவங்கள் எடுத்ததாகக் கம்பர் கட்டு மீறிய கற்பனை செய்துள்ளார்.

இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற அடிப்படையில் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி ஆகியவற்றில் உள்ள பகுதிகளை எடுத்துக் காட்டியதிலிருந்து ஒரு கருத்தை உறிஞ்சி எடுத்துக்கொள்ள முடியும். அதாவது: காலத்தால் முற்பட்ட சிலப்பதிகாரத்திலுள்ள கற்பனையைப் பின் வந்த கம்பரும், -- பெய்து கொண்டிருக்கலாம் என்பதுதான் அது. அல்லது, அவரவர் நூலில் இயற்கையாகவும் அமைந்திருக்கலாம்; ஆயினும், பின்னவை இரண்டும் சிலம்பின் பிழிவே என்பது ஏற்கத் தக்கதே.

நீர்ப்படைக் காதை:

போர்க்காலம் பதினெட்டு

தேவருக்கும் அசுரருக்கும் பதினெட்டாண்டு போர் நடந்ததாம். இராமனுக்கும் இராவணனுக்கும்பதினெட்டுத் திங்கள் போர் நிகழ்ந்ததாம். பாரதப் போர் பதினெட்டு நாள் தொடர்ந்ததாம். செங்குட்டுவன் கணகவிசயரை வென்ற போர் பதினெட்டு நாழிகையே எடுத்துக் கொண்டதாம்:

"உயிர்த்தொகை யுண்ட ஒன்பதிற் றிரட்டிஎன்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள்" (27:8-10)

ஒன்பது x இரட்டி (9x2=18) பதினெட்டு. தேவ அரக்கர்போர் 18 ஆண்டு - இராமாயணப் போர் 18 மதி - பாரதப்போர் 18 நாள் - சேரன் வென்ற போர் 18 கடிகை (நாழிகை) எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இரண்டரை (2:) நாழிகை ஒரு மணியாகும். இந்தக் கணக்கின்படிப் பார்க்கின், ஒரு (சுமார்) ஏழேகால் (7.12) மணி நேரத்தில் சேரன் பொருது வென்றான் என உய்த்துணரலாம்.

முடி ஏறுதல்

சேரன் செங்குட்டுவனுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறிய மாடலன், இறுதியாக, வடபுல மன்னரின் முடிமேல் கண்ணகி ஏறினாள் - என்று கூறினான்:

"குடவர் கோவே ... ... ... ... ....... ...
வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்" (27:64, 65)

கண்ணகியின் சிலை செய்யும் கல்லை வடபுல மன்னர்களாகிய கனகவிசயர் சுமந்ததை, கண்ணகி அவர்களின் முடியில் ஏறினாள் என நயம்படக் கூறியுள்ளார். சிலை செய்வதற்கு முன்பே, உறுதி கருதிக் கல் கண்ணகியாக ஆக்கப்பட்டதாகச் சிறப்பித்து மொழியப்பட்டுள்ளது.

கல் என்று நினைத்தால் கண்ணகி மறக்கப்படுவாள் - கண்ணகி என்று எண்ணின் கல் மறைந்துவிடும். இப்போது கோயில்களில் உள்ள சிலைகள் எல்லாம், கல் என்பது மறக்கப்பட்டுக் கடவுளாகக் காட்சி தருகின்றன.

இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் திருமூலரின் திருமந்திரப் பாடல் கருத்து ஒன்றை இவண் காண்பாம். மரத்தால் செய்யப்பெற்ற யானைப் பொம்மை ஒன்று உள்ளது என வைத்துக் கொள்வோம். அதை யானை என்று எண்ணினால் மரம் என்ற உணர்வு மறைந்துவிடும்; அதை மரம் என்று கருதினால் யானை என்ற உணர்வு மறைந்துவிடும் - என்பது அந்தக் கருத்து. பாடல்:

"மரத்தை மறைத்தது. மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை" (2290)

என்பது பாடல் பகுதி. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - என்னும் வழக்காறும் இன்னதே. சிலர் வீடுகளில், திருடர்களை ஏமாற்றக் கல்லால் ஆன நாய் உருவை முற்றத்தில் வைத்திருப்பதும் ஈண்டு எண்ணத்தக்கது.

ஒரு சிலம்பும் கையும்

வாயிலோன் பாண்டியனிடம் கண்ணகியின் வரவை அறிவித்தபோது, 'பொன்தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்' என்று கூறினான். இதிலுள்ள நயமாவது: காலில் அணிய வேண்டிய சிலம்பைக் கையில் வைத்திருக்கிறாள் - இரட்டைச் சிலம்புகளுள் ஒன்று மட்டுமே வைத்துள்ளாள் - என எதிர்மாறாக உள்ள நிலைமையைக் கூறியது உள்ளத் தைத் தொடுவது. (20:42)

சிலப்பதிகாரத்தில், அடிக்கு அடி ஆய்ந்து நோக்கின், சிறப்பான - எண்ணற்ற செய்திகளை இவ்வாறு காணலாம்.

கண்ணீர்ப் படை

சிலர் தம் தேவைகளை முடித்துக்கொள்ளக் கண்ணிரைப் படைக்கலமாகப் பயன்படுத்துவர். குழந்தைகட்கு இது இயற்கை அளித்த படைக்கலம். குடும்பப் பெண்கள் சிலரும் சில வேளைகளில் இந்தப் படைக்கலத்தை எய்வதுண்டு. இன்னும், ஏழையர், இரவலர் முதலியோருள்ளும் இத்தகையோர் உளர்.

இவ்வாறு தேவை நிறைவேற்றத்திற்குப் பயன்படுவதல்லாமல், கொடியவரின் கொடுமையை ஒழிக்கும் படையாகவும், இது செயல்படுவதுண்டு. இதனைத் திருவள்ளுவர் கொடுங் கோன்மை என்னும் தலைப்பில் கூறியுள்ள

"அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை" (555)

என்னும் குறட்பா அறிவிக்கும். இஃதன்றி, கொடியவரைக் கொல்லும் படையாகவும் கண்ணிர் மாறுவது உண்டு. கண்ணகியின் கண்ணிர்தான்ே பாண்டியன் நெடுஞ்செழியனைக் கொன்றது. இதனைச் சிலம்பு . வாழ்த்துக் காதையில் உள்ள

"தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ" (13 - 1,2)

என்னும் பாடல் பகுதி பறை சாற்றும். 'உயிர் விட்ட' எனக் கூறாமல் உயிர் கொடுத்த என்று கூறியிருக்கும் தொடர், பாண்டியனைக் கோவேந்தன் ஆக ஆக்கிய நயச் சிறப்பு ஈண்டு மிக்வும் நுகரத்தக்கது. கண்ணிர் கொல்லும், வாள் படையாக உள்ளமையை நறுந்தொகையில் உள்ள.

"மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிகின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளா கும்மே" (75)

என்னும் பாடல் பகுதி வலியுறுத்தும். வழி வழியாக வரும் பின்தோன்றல்கட்கும் பெரும் பழி இதனால் ஏற்படுமாம். கண்ணிருக்கு அவ்வளவு ஆற்றல் உண்டு.

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொடு ஒக்கும்"

இவ்வாறு சுவையான சிறப்புச் செய்திகள் பல சிலம்பில் உள. இன்னும் ஒன்று:

இரு பெருங் குரவைகள்

சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்னும் இரு பெருங் குரவைக் கூத்துப் பகுதிகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவையைத் திருமாலைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும், குன்றக் குரவையை முருகனைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும் கூறும் அளவுக்கு, இரண்டும் சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்னும் முறையில் சிறந்து திகழ்கின்றன. சுவையான இந்தப் பகுதிகளை எழுத ஆசிரியர் இளங்கோ அடிகள் எங்கே யாரிடம் கற்றாரோ என வியக்கத் தோன்றுகிறது. இனி முறையே அவை வருமாறு:

1. ஆய்ச்சியர் குரவை
ஏழுகள்

தாம் வாழும் பகுதியில் தீய நிமித்தங்கள் பல தோன்றியதால், மாதரி, தன் மகள் ஐயையிடம், குரவைக் கூத்து ஆடினால் தீமைகள் வாரா எனக் கூறிக் குரவைக் கூத்தாட ஏற்பாடு செய்தாள். மேலும் சில கூறுவாள்:

கன்னியர் எழுவர் தலைக்கு ஒரு காளையாக 6 ( காளைகளைத் தொழுவத்தில் கட்டி வளர்த்து வந்தனர். இந்த இந்தக் காளையை அடக்குபவனுக்கு இந்த இந்தக் கன்னி உரியவள் என மாதரி கூறலானாள்:

1. தேனார்ந்த மலர் மாலை அணிந்த இந்தக் கன்னி, இதோ இருக்கும் கரிய காளையின் சீற்றத்திற்கு அஞ்சாமல் பாய்ந்து அதை அடக்குபவனை விரும்புகிறாள்.

2. இதோ உள்ள பொன் வளையல் அணிந்த பெண்ணின் தோள்கள், இதோ உள்ள நெற்றிச் சுட்டி பொருந்திய காளையின் மேலேறி அடக்குபவனுக்கு உரியவையாகும்.

3. இதோ உள்ள முல்லை மலர் சூடிய கூந்தலையுடைய கன்னி, வலிமை மிக்க இந்த இளங்காளையை அடக்குபவனுக்கு உரியவள்.

4. கொடியனைய இந்தப் பெண்ணின் தோள்கள், சிறு சிறு நுண்ணிய புள்ளிகளை உடைய இந்த வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கு உரியனவாம்.

5. இந்தப் பொன் புள்ளிகளை உடைய வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கே, இந்தக் கொடி போன்ற நங்கையின் முலைகள் உரியனவாம்.

6. இந்தக் கொன்றைக் கூந்தலாள், இந்த வெற்றி வாய்ந்த இளங்காளை மேல் ஏறி அடக்குபவனுக்கு உரிய வளாவாள். - . . . .

7. இந்தப் பூவைப் புதுமலர் குடியிருப்பவள், இதோ: உள்ள இந்தத் தூய வெள்ளை நிறக் காளையைத் தழுவி அடக்குபவனுக்கு உரியவள் என்றெல்லாம் மாதரி கூறினாள். இவற்றிற்கு உரிய பாடில் பகுதிகள் வருமாறு:

1. காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ்
வேரி மலர்க் கோதையாள் சுட்டு

2. நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய இப்
பொற்றொடி மாதராள் தோள்

3. மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம்
முல்லையம் பூங்குழ லாள்

4. நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே யாகும் இப்

பெண் கொடி மாதர்தன் தோள்

5. பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இந்
நற்கொடி மென் முலைதான்

6. வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இக்
கொன்றையம் பூங்குழ லாள்

7. தூகிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இப்

பூவைப் புதுமல ராள்" .

என்பன பாடல் பகுதிகள். இவ்வாறு மாதரி தன் மகளிடம் கூறிப் பின் கன்னியர் எழுவர்க்கும், பழைய பெயர்கள் இருப்பதல்லாமல், தானாக ஒவ்வொரு புதுப் பெயர்கள் சூட்டினாள். அப் பெயர்கள்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பாடல் பகுதி:

"ஆங்கு,
தொழு விடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர்.இளங் கோதையார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்று படு முறையால் நிறுத்தி
இடை முது மகள் இவர்க்குப்
படைத்துக் கோப் பெயரிடுவாள்
குடமுதல் இடை முறையாக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என

விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே"

இது பாடல் பகுதி. படைத்துக் கோள் பெயரிடுதல் . தானாகப் புதிதாகப் படைத்துக் கொண்டு பெயர் வைத்தல்.

இக்காலத்தில் கூறும் ச, ரி, க, ம, ப, த, நி எனச் சுருக்கமாக வழங்கப்பெறும் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழுக்குப் பதிலாக, அக்காலத்தில் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு பெயர்களும் கூறப்பட்டன என்பது ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்து.

ஆனால், அவற்றிற்கு நேராக இவற்றையோ - இவற்றிற்கு நேராக அவற்றையோ கூற முடியாது என விபுலாநந்த அடிகள் தம் யாழ் நூலில் கூறியுள்ளார். இது ஆராய்ச்சிக்கு உரியது.

கேளாமோ தோழி

அடுத்து, ஆய்ச்சியர் குரவையில் உள்ள மூன்று பாடல் பகுதிகளை விளக்கம் இன்றித் தந்து சுவைத்து மகிழச் செய்ய வேண்டுமென என் அவா உந்துகிறது. இதோ அவை:

1. ‘கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையங் தீங்குழல் கேளாமோ தோழீ’

2. ‘பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்குகம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
ஆம்பலக் தீங்குழல் கேளாமோ தோழீ’

3. ‘கொல்லையஞ் சாரல் குருக்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்

முல்லையங் தீங்குழல் கேளாமோ தோழீ’

என்பன அவை. திரும்பத் திரும்பப் பாடிச் சுவைக்க வேண்டிய பகுதிகள் இவை. இவ்வாறு பாடிக் கொண்டே ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்து ஆடினமை, சர்க்கரைப் பந்தலில் தேன் ம்ாரி பொழிந்தது போன்றதாகும்.

அடுத்து ஒன்று: படர்க்கைப் பரவல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள-

1. ‘சேவகன் சீர் கேளாத செவிஎன்ன செவியே திருமால் சீர் கேளாத செவிஎன்ன செவியே

2. ‘கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே

கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே’

3. ‘பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே

நாராயணா என்னா நா என்ன நாவே’

என்பன குறிப்பிடத்தக்கன. செவி, கண், நாக்கு ஆகியவை, அன்புப் பெருக்கால், திருமாலின் பெருமையைக் கேட்க வேண்டுமாம் - கோலத்தைக் காண வேண்டுமாம் - அவரை ஏத்தவேண்டுமாம்.

திருமாலின் கோலத்தைக் காணாத கண்ணைத் தாக்குவதோடு நிறுத்தவில்லை - அவரது கோலத்தை (கண்களை) இமைத்து இமைத்துக் காணும் கண்களும் தாக்கப்பட்டுள்ளன. அதாவது, கண்களை மூடி மூடித் திறக்காமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம். இது ஒரு நயமான பகுதி.

ஆயர்கள் திருமாலை வழிபடும் வைணவர்களாதலின், ஆய்ச்சியர் குரவையில் இச்செய்திகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. அந்த அந்த இடங்களில் அந்த அந்த நடிகராக இளங்கோ அடிகள் நடித்துள்ள அருமை பெருமை மகிழத் தக்கது.

இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில் திருநாவுக்கரசர் தம் உறுப்புகட்கு விடுத்துள்ள கட்டளைகளைக் காண்பாம்.

‘தலையே நீ வணங்காய்’ (1)
‘கண்காள் காண்மின்களோ ’(2)
‘செவிகாள் கேண்மின்களோ’ (3)
‘மூக்கே நீ முரலாய்’ (4)
‘வாயே வாழ்த்து கண்டாய் (5)
நெஞ்சே நீ கினையாய் (6)
‘கைகாள் கூப்பித் தொழீர்’ (7)
‘ஆக்கையால் பயனென்’ (8)

‘கால்களால் பயனென்’ (9)

அறிவுப் பொறிகள் (ஞானேந்திரியங்கள்), செயல்பொறிகள் (கன்மேந்திரியங்கள்), உள்ளுறுப்பு (அந்தக் கரணம்) ஆகியவற்றுள் ஒன்பது உறுப்புகளின் கடமையைத் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலில் கூறியுள்ளார்.

இளங்கோ அடிகள் செவி, கண், நாக்கு என்னும் மூன்றின் கடமைகளை மட்டும் கூறியுள்ளா ரெனில், இது அவராகக் (ஆசிரியர் கூற்றாகக்) கூறவில்லை. கதை மாந்தராகிய ஆய்ச்சியரின் சூழ்நிலைக்கு ஏற்ப, ஆய்ச்சியர் கூறியிருப்பதாக அளந்து கூறியுள்ளார். நாவுக்கரசர் தம் சொந்த உறுப்புகட்குக் கூறுவதால், கஞ்சத்தனம் இன்றி - தாராளமாகப் பல உறுப்புகட்கும் கட்டளை பிறப்பித்து உள்ளார்

ஆய்ச்சியர் குரவைப்பகுதியைப் பாடிப்பாடிச்சுவைத்து இன்புறல்வேண்டும்.

2. குன்றக் குரவை
சிறுகுடியிரே சிறுகுடியீரே!

தம் குன்றுப் பகுதியில் வேங்கை மரத்தின் கீழ் நின்று பின்பு வானுலகம் சென்ற கண்ணகியைக் கண்ட குன்றவர், இவள் போன்ற தெய்வம் நமக்கு வேறு இல்லையாதலின் இவளைப் பாடுவோம் என்று பாடிய பகுதி சுவையானதாதலின், விளக்கம் வேண்டாது அதனைக் காண்பாம்.

“சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கினர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை கன்னிழல் கீழ்ஓர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்

கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்

குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த கங்கைக்குப்

பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”

குன்றவரின் இயங்களும் பூசனை முறைகளும், இப்பகுதியில், அடிமேல் அடித்தாற்போல் தொடர்ந்து இடம் பெற்றுப் படிப்பவரை மகிழ்விக்கின்றன.

இது நகையாகின்றே

தலைமகன் ஒருவனோடு காதல் கொண்ட தலைமகள் ஒருத்தி, விரைவில் மணம் கூடாமையால் மிகவும் வாடி வதங்கி மெலிந்து காணப்படுகிறாள். இந்தக் காதல் திருவிளையாடலை அறியாத தலைவியின் தாய், தன் பெண்ணை ஏதோ தெய்வம் தீண்டி அச்சுறுத்தி விட்டது என்று எண்ணி, வேலன் வெறியாடல் செய்யத் தொடங்குகிறாள்; அத்தெய்வம் முருகன் என எண்ணுகிறாள். தாய் முருகனுக்குப் பூசனை போடுவாள்; முருகன் ஏறிய வேலன் என்னும் சாமியாடியை அழைத்து, மகளின் நோய்க் காரணத்தை அறிந்து சொல்லச்செய்து அது தீர்க்கும் வழியையும் அறிவிக்கச் செய்வாளாம். வேலன் என்பவன் மேல் முருகன் ஏறி எல்லாம் கூறுவானாம். இதற்குத் தமிழ் அகப்பொருள் துறையில் வேலன் வெறியாட்டு என்பது பெயராகும்.

தலைவி தோழிக்குச் சொல்லுகிறாள். தோழியே என் காதலனால் உண்டான நோயை முருகனால் உண்டான நோயாக அன்னை எண்ணி, வெறியாடும் வேலனை வரச் சொல்லியுள்ளாள். இது நகைப்புக்கு உரியது தோழியே! (இது நகையாகின்றே தோழீ).

ஆய்வளையல் அணிந்த தோழியே! மலைநாடனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வேலன் வருமாயின், உண்மை நோயை அறியாததால் அவனால் தீர்க்க முடியாதாதலின் அவ்வேலன் அறிவிலியாவான். மற்றும், அவ்வேலன் மேல் ஏறியாடச் செய்யும் குருகுபெயர்க் குன்றம் தொலைத்த முருகனும் மடவோனே யாவான். இது நகையாகின்றே!

செறிவளைக் கை நல்லாய்! வெறிகமழ் வெற்பனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வரும் வேலன் மடையன். ஆலமர் செல்வனாகிய சிவனின் மகனாகிய முருகன் அவன்மேல்வரின் அவ்வேலனைவிடப் பெரிய மடையனாவான். இது நகையாகின்றே!

நேரிழை நல்லாய்! மலை நாடனாகிய என் தலைவனது மார்பு தந்த கொடிய நோயைத் தீர்க்க வரும் வேலன் மடவோ னாவான். கடப்ப மாலை யணிந்த முருகன் வேலன்மேல் ஏறிவரின், அவனினும் இவன் கடைந்தெடுத்த மடவோனாவான். இது நகையாகின்றே! என்று தலைவி தோழிக்குக் கூறினாள். இனிப் பாடல் பகுதிகள் வருமாறு:

1. ‘இறைவனை கல்லாய்! இது நகை யாகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள்மற்று அன்னை அலர் கடம்பன் என்றே வெறியாடல்
தான்விரும்பி வேலன் வருகென்றாள்:’

2. ‘ஆய்வளை நல்லாய்! இது நகை யாகின்றே
மாமலை வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்;
வருமாயின் வேலன் மடவன்; அவனின்
குருகுபெயர்க் குன்றம் கொன்றான் மடவன்.’

3. ‘செறிவளைக் கை நல்லாய்! இது நகையாகின்றே
வெறிகமழ் வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்;
வேலன் மடவன்; அவனினும் தான்மடவன்

ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்.’

4. நேரிழை நல்லாய் நகையாம் மலைநாடன்
மார்புதரு வெந்நோய் தீர்க்க வரும்வேலன்;
தீர்க்க வரும்வேலன் தன்னினும் தான் மடவன்

கார்க் கடப்பந்தார். எம் கடவுள் வருமாயின்.’

இவை பாடல் பகுதிகள். தமிழ் அகப்பொருள் இலக்கணத்தை முற்றும் கரைத்துக் குடித்துக் கற்றவராகக் காணப்படுகிறார் ஆசிரியர் இளங்கோ.

மேலும் தலைவி கூறுகிறாள்:

1. நீலமயில் மேல் வள்ளியோடும் முருகன்வரின், மலை நாடராகிய என் காதலரோடு என்னை மணம் முடிக்க அருள்புரிக என்று வேண்டுவோம்.

2. மலைமகள் மகனாகிய முருகன் வரின், அவனையும் அவன் துணைவி குறமகள் வள்ளியையும் தொழுது, அயலாருக்கு என்னை மணமுடிக்கச் செய்யாமல், என் காதலருக்கே என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம்.

3. மலைமகள் உமையின் மகனாகிய முருகன் வரின், அவனையும், அவன் மனைவியாகிய எம். குறக்குலத்து வள்ளியையும் தொழுது, பலரும் அறியும்படியாக என் காதலருடன் என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம்.

4. குறமகளும் எம் குலத்துமகளும் ஆகிய வள்ளியையும் முருகனையும். தொழுது, பிழைபட வேறொருவர்க்கு என்னை மணம் முடிக்காமல், என் காதலருடனேயே, என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம் - என்று தலைவி கூறி னாளாம். பாடல் பகுதிகள் வருமாறு:

1. ‘வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து
லேப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன். புதல்வன் வரும்; வந்தால்

மால்வரை வெற்பன் மனஅணி வேண்டுதுமே.’

2. ‘கயிலைகன் மலையிறை மகனை நின்மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல் மணம் ஒழி; அருள். அவர் மணம் எனவே.’

3. ‘மலைமகள் மகனை நின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்கின் இணையடி தொழுதேம்
பலர்அறி மணம் அவர் படுகுவர் எனவே.’

4.‘ குலமகள் அவள் எம குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவகின் அடியிணை தொழுதேம்
துறைமிசை கினதுஇரு திருவடி தொடுநர்

பெறுக கன் மணம்; விடு பிழை மணம் எனவே.’

என்பன பாடல் பகுதிகள்.

முருகனை ஈர்த்துக் கவர, அவன் மனைவி வள்ளி தங்கள் குறக்குலத்தவள் என்று கூறியிருக்கும் நயமான பகுதி சுவைக்கத்தக்கது. இவ்வாறாகக் குன்றக் குரவையில் பல சுவைகளை நுகர்ந்து மகிழலாம்.

ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, ஆகிய இரண்டிலும், பல பாடல்களில், இரண்டாம் அடி திரும்பவும் மூன்றாம் அடியாக மடங்கி வரும் செய்யுள் அமைப்பைக் காணலாம். ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வோர் எடுத்துக் காட்டு வருமாறு:

ஆய்ச்சியர் குரவை

‘முந்நீ ரினுள்புக்கு மூவாக் கடம் பெறிந்தான்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்

கன்னலில் தோளோச்சிக்கடல் கடைந்தான் என்பரால்.’

குன்றக் குரவை

"என்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக்
கற்றீண்டி வந்த புதுப்புனல்
கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையர்
உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே."

வந்த சொல்லே - சொற்றொடரே மீண்டும் அடுத்து அடுத்து வருதல் நாடகத்தில் சுவை கூட்டும் ஓர் அமைப்பாகும் என்று The Art of Play Writing என்னும் நுாலில் படித்தது இங்கே இப்போது நினைவிற்கு வந்து உவகை ஊட்டுகின்றது.

இவ்வாறாக, சுவையான சிறப்புச் செய்திகள் சிலம்பில் உள.