சிலம்போ சிலம்பு/வஞ்சி - சேரர் சிறப்பு

விக்கிமூலம் இலிருந்து

28. வஞ்சி - சேரர் சிறப்புகள்

வஞ்சியில் இருந்து ஆண்ட சேரர்களின் சிறப்புகள் மிகுதி. கோதமன் என்னும் தமிழ் மறையவனுக்கு மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரன் வேள்வியின் வாயிலாக மேலுலக வாழ்வளித்தான்.

சோழநாட்டிலிருந்து வந்த பராசரன் என்னும் அந்தணனுக்குச் சேரன் நிறைந்த செல்வம் அளித்தான். அவன் பின் வருமாறு சேரனை வாழ்த்தினான்:

"விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்க" (23:80-84)

என்பது வாழ்த்து.

பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோல் தவறியதன் காரணமாக இறந்து விட்டான் என்பதை யறிந்த சேரன் செங்குட்டுவன், அ ர சா ளு ம் தொழில் கடினமானது என்றான். அதாவது மழை பெய்யாவிடினும், தகாத முறையில் குடிமக்களின் உயிர் போயினும், அரசன் செங்கோல் தவறானது என்று உலகம் உரைக்கும் என்பதை எண்ணும் போது பெரிதும் அச்சம் தோன்றுகிறது. எனவே, கொடுங்கோலுக்கு அஞ்சிக் குடிமக்களை நன்முறையில் காக்கக் கடமைப்பட்டுள்ள அரசக்குடியில் பிறத்தல் துன்பம் தருவதல்லது போற்றத்தக்கதன்று என்று கூறினான்.

"மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்" (25:100-104)

என்பது பாடல் பகுதி. ஈண்டு, புற நானுற்றில் உள்ள

"மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகல் ஞாலம்" (35)

என்னும் பாடல் பகுதியும், பெரிய புராணத்தில் உள்ள

"ஒரு மைந்தன் தன்குலத்துக்கு உள்ளான் என்பதும்

உணரான்

தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் தேராழி உறவூர்ந்தான் மனு வேந்தன்

அருமந்த அரசாட்சி அரிதோமற்று எளிதோதான்"
(திருவாரூர் - 44)

என்னும் பாடலும், திருக்குறளில் உள்ள -

"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு" (545)

"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்" (559)

என்னும் பாக்களும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.

சேரன் செங்குட்டுவன் எண்ணியதை முடிக்கும் மாமல்லன். வடபுல மன்னர்கள் தென்புல வேந்தர்களை இழித்துரைத்ததைப் பொறானாய்ச் சூள் உரைத்தான்: யான் வட புலம் சென்று வென்று கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயத்திலிருந்து கல் கொணரவில்லையெனில், போர்க்களத்தில் பகைவரை நடுங்கச் செய்யும் ஆற்றல் இல்லாதவனாகவும், கு டி க ளை நடுங்கச் செய்யும் கொடுங்கோலன் என்னும் பெயர் எடுத்தவனாகவும் ஆவேனாக என்று கடுமையான சூள் உரைத்தான்:

"வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கற்கொண் டல்லது
வறிது மீளும் என் வாய்வா ளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பின்
குடிநடுக் குறுாஉம் கோலேன் ஆக" (26. 13-18)

வடபுல மன்னரின் முடிமேலே கல்லை ஏற்றி வருவேன் எனக் கடுமையாகச் சூள் உரைத்தான். கடவுள் சிலையைச் செய்தலைக் 'கடவுள் எழுத' என்னும் தொடரால் குறிப்பிட்டிருப்பது சுவையாயுள்ளது. நான் வறிதே மீளுவே னாகில் என்பதற்குப் பதிலாக, என் வாள் மீளுமாகில் என்று கூறியிருப்பது முன்னதினும் மிக்க சுவை பயக்கிறது.

நீர்ப்படைக் காதையில் மாடலன் பின்வருமாறு செங்குட்டுவன் புகழை எடுத்தியம்பினான்: நின் மைத்துனச் சோழனாகிய கிள்ளியோடு போர் புரிய வந்த பங்காளிச் சோழர்கள் ஒன்பதின்மரையும் நேரி வாயிலில் ஒரே பகலில் ஒழித்து வென்றவன் நீ - என்பது புகழுரை. சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை என்பவள் செங்குட்டுவன் தாய். எனவே, மணக்கிள்ளியின் மகனாகிய கிள்ளி செங்குட்டுவனுக்கு மைத்துனன் (அம்மான் மகன்) ஆகிறான். இந்த வென்றி சிலம்பில் வேறு இடத்திலும் குறிப்பிடப்பட் டுள்ளது:

"ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரி வாயில் நிலைச்செரு வென்று" (28:16-17)

என்பது பாடல் பகுதி. மற்றும் பதிற்றுப்பத்துப் பதிகத்திலும் இது குறிப்பிடப்பட் டுள்ளது.

"ஆராச் செருவில் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து

நிலைச் செருவினால் தலையறுத்து"
(பதிகம்-5; 18, 20)

என்பது பாடல் பகுதி. அடுத்து - மோகூரில் பழையன் என்னும் குறுநில மன்னனின் காவல் மரமாகிய வேம்பை வெட்டி அவனை வென்றானாம் சேரன்.

"பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு

வேம்பு முதல் தடிந்த ஏந்துவாள் வலத்து"
(27: 124, 125)

என்பது பாடல் பகுதி. இத் பதிற்றுப்பத்திலும் கூறப்பட்டுள்ளது:

"பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி" (பதிகம்-5:13, 14)

இது பாடல் பகுதி. மற்றும், இடும்பில் வெற்றி, கடல் பிறக்கோட்டியது முதலியனவும் உரியன.

இன்னும் சில பெருமைகள் செங்குட்டுவனுக்கு உரியவை. அவை: தாய் விரும்பியபடி அவளைக் கங்கை நீராடச் செய்தது. பாண்டியனது நேர்மையான சாவைப் பாராட்டினமை.

வென்று சிறைபிடித்து வந்த கனக விசயர்க்கு மதிப்பளித்து, தனி மாளிகையில் தங்கச் செய்து வேண்டிய வசதிகளை அளித்தமை.

கனக விசயரைச் சிறைவீடு செய்தபோது, மற்ற குற்றவாளிகட்கும் விடுதலை தந்தமை. வரி நீக்கம் செய்தமை.

வடபுல மன்னர்கள் தென்புல மன்னர்களை இகழ்ந்ததைப் பொறுக்க முடியாத மானம் உடைமை.

கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைத்துப் பரவியமை - இன்ன பிற சேரன் சிறப்புகளாம்.

புகாரிலும் மதுரையிலும் நடந்தது போன்ற நிகழ்ச்சி எதுவும் வஞ்சியில் நிகழாமையால் வஞ்சியின் சிறப்பு போதிய அளவில் இடம் பெறவில்லை.

செங்குட்டுவன் பிறப்பு

செங்குட்டுவன் பிறப்பு பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது. நெடுஞ்சேரலாதனுக்குச் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை வயிற்றில் பிறந்தவன் என்பதற்கு, வாழ்த்துக் காதை - உரைப்பாட்டு மடை என்னும் தலைப்பில் உள்ள

"குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலாதற்குத் திக ழொளி
ஞாயிற்றுச் சோழன் மகள்
ஈன்ற மைந்தன் கொங்கர்
செங்களம் வேட்டுக் கங்கைப்
பேரியாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன்"


என்னும் பகுதி சான்று பகரும். சோழன் = மணக்கிள்ளி. சோழன் மகள்=நற்சோணை. இது அவர்களின் இரண்டாம் மகனாகிய இளங்கோவே எழுதியது.

ஆனால், கழக இலக்கியமாகிய பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்துப் பதிகத்தில்,

"குடவர் கோமான் நெடுஞ்
சேரலாதற்குச் சோழன் மணக்
கிள்ளி ஈன்றமகன் கடவுள்
பத்தினிக் கற்கோள் வேண்டிக்
... கடல் பிறக்கோட்டிய
செங்குட்டுவன்"

என்றிருப்பது தவறு. இதில் கூறப்பட்டுள்ள உறவு முறை சரியில்லை. ஆணுக்கு ஆண் வயிற்றில் பிறந்த மகன் என்று பொருள் செய்யும்படி இப்பகுதி உள்ளது. 'சோழன் மணக் கிள்ளி ஈன்ற மகன்' என்று இல்லாமல், சோழன் மணக் கிள்ளி ஈன்ற மகள் வயிற்று மகன்... செங்குட்டுவன் என்று எழுதி இருக்க வேண்டும். ஏடு பெயர்த்து எழுதியவர்கள், 'ஈன்ற-மகன்' என்னும் இரு சொற்கட்கு இடையே இருந்த 'மகள் வயிற்று' என்னும் இரு சொற்களையும் கை தவறி விட்டுவிட்டிருக்கக் கூடும்.

செங்குட்டுவன் சமயம்

சிலப்பதிகாரத்தில் உள்ள சில அகச்சான்றுகளால் செங்குட்டுவன் சைவ சமயத்தவன் என்பது பெறப்படலாம். சில அகச் சான்றுகள் வருமாறு:

"நிலவுக் கதிர்முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு"
(26: 54, 57)


"செஞ்சடை வானவன் அருளினில் விளங்க

வஞ்சித் தோன்றிய வானவ சேளாய்"
(26; 98-99)


"ஆணேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி

மாநிலம் விளக்கிய மன்னவன்"
(30: 141, 142)


"ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்கின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்

தாங்கின னாகி.."
(26, 62-67)
என்னும் பகுதிகளால் செங்குட்டுவன் சைவ சமயத்தவன் என்பது அறியப்பெறும். நிலவு முடித்த சென்னி உயர்ந்தோன் - செஞ்சடை வானவன் - ஆணேறு ஊர்ந்தோன் - செஞ்சடைக் கடவுள் - என்பன சிவனைக் குறிக்கும். செங்குட்டுவன் சைவன் எனினும், பிற சமயங்களின் எதிரியல்லன். முதன்மை சைவத்திற்கேயாம்.

மொழிப்பற்று

செங்குட்டுவன் தாய்மொழியாகிய தமிழில் மிக்க பற்றுடையவனாக இருந்தான். தமிழர்களின் மறத்தை - ஆற்றலைச் செங்குட்டுவன் தமிழ் மொழிமேல் ஏற்றி

“காவா நாவின் கனகனும் விசயனும் ...
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்”
(26. 159, 161)

என்று கூறியதாக இளங்கோ எழுதியுள்ளார். மேலும் இளங்கோ ‘தென்தமிழ் ஆற்றல் காண்குதும்’ (26. 185), செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் (27:5) எனப் பாடியுள்ளார். தமையனுக்கு இருந்த தாய்மொழிப் பற்று தம்பிக்கும் இருந்திருக்கின்றது. அந்தோ தமிழே!