சிலம்போ சிலம்பு/மதுரை - பாண்டியன் சிறப்பு

விக்கிமூலம் இலிருந்து

27. மதுரை - பாண்டியன் சிறப்புகள்

"பாடல் சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை"
(பதிகம் - 19, 20)

என மதுரையும் பாண்டியனும் சிறப்பிக்கப் பெற்றிருப்பதைச் சிலம்பின் பாயிரப் பகுதியில் காணலாம். மதுரையின் சிறப்புகள் பாண்டியனுக்கும் உரியன - பாண்டியன் சிறப்புகள் மதுரைக்கும் உரியன - இரண்டையும் ஒரு சிறிது காணலாம்:

புறஞ்சேரி யிறுத்த காதையில் கோவலன் கவுந்தியிடம் கூறுகிறான்: பகலில் கொடிய வெயிலில் கொதிக்கும் பரல்கல் நிறைந்த பாதையில் கண்ணகியின் கால்கள் நடக்க மாட்டா. ஆதலின், இனி நாம் இரவில் பயணம் செய்யலாம். பாண்டியனது ஆட்சியிலே இரவில் பயணம் செய்ய எந்த விதமான அச்சத்திற்கும் இடமில்லை. கண்டாரைக் கொல்லும் கரடியும் எந்தப் புற்றையும் அகழாது. வரிப் புலியும் மான் கூட்டத்தைக் கொல்ல நினையாது. முதலையும் பாம்பும் பேயும் இடியும் எவ்வுயிர்க்கும் இன்னல் விளைக்கமாட்டா. செங்கோலனாம் பாண்டியன் காக்கும் நாடு இத்தகையது என்ற பெரும் புகழ் எங்கும் பரவியுள்ளது; ஆதலின் நாம் இரா வழி நடிக்கலாம் என்று கோவலன் கூறினான்.

"கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவன் காக்கும் நாடென
எங்கணும் போக்கிய இசையோ பெரிதே"
(13.5 - 10)

என்பது பாடல் பகுதி. அறவோர், தவசியர், முனிவர் முதலிய நல்லோர் இருக்கும் பகுதியில் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் ஒரு துறையில் நீர் அருந்தும், புலியும் மானும் ஓரிடத்தில் உறங்கும் என்பன போன்ற கற்பனைகளைப் புலவர்கள் புகல்வது இலக்கிய மரபு. இந்த மரபைப் பல நூல்களில் காணலாம். இவ்வாறு இங்கே, இளங்கோ கோவலன் வாயிலாகக் குரல் கொடுத்துள்ளார். தக்க குறிக்கோளுடனேயே ஆசிரியர் இங்கே இச்செய்தியைக் கூறியுள்ளார். அது பின்னர் விளக்கப்படும்.

கோவலன் நடைவழியில் வந்த பாணர்களோடு எளிமையாய்ப் பழகித் தானும் பாடினான். மதுரை இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது என அவர்களை வினவினான். அவர்கள் இறுத்த விடையாவது:-

மதுரையில் உள்ள பலவகை நறுமணக் குழம்புகளிலும் நறுமண மலர்களிலும் நறுமணப் புகைகளிலும் தோய்ந்த மதுரைக் காற்று இதோ நம்மேல் வீசுகின்றது. புலவர்களால் போற்றப்பட்டிருப்பினும் நறுமணப் பொருள்களுடன் கலவாமையால் தென்றல் காற்று இந்த மதுரைக் காற்றிற்கு ஒப்பாகாது. மதுரைக் காற்று நம்மேல் வீசத் தொடங்கி விட்டதால், பாண்டியனது மதுரை மிகவும் அண்மையில் உள்ளதென அறியலாம். தனியாகப் பயணம் செய்யினும் யாரும் மறித்துத் தொல்லை தர மாட்டார்கள். அத்தகைய பாதுகாப்பானது வழி. நீங்கள் இரவிலும் செல்லலாம் என்று அவர்கள் கூறினர்.

"புலவர் செங்காப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது ஈங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்
நனிசேய்த் தன்று அவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினும் தகைக்குநர் இல்" (13:130 - 134)

என்பது பாடல் பகுதி. பொதியத்திலிருந்து வரும் தென்றல் காற்றினும் மதுரையிலிருந்து வரும் காற்று சிறந்ததாம். பாண்டியனது நாட்டுப் பகுதியில் தனியாகச் செல்லினும் அச்சம் இல்லையாம். எவ்வளவோ சுவையான செய்தி இது!

நாகரிகம் மிக்க - அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 1992) தனியாகச் செல்ல முடியாதது மட்டுமன்று; கூட்டாகச் செல்லவும் முடியவில்லையே. மக்கள் மந்தை இனித் திருந்துவது எஞ்ஞான்றோ!

மூவரும் மதுரையை நெருங்கினர். அப்போது, கோயில்களின் முரசொலி, அந்தணர் மறை ஒதும் ஒலி, மறவரின் முரசொலி, யானைகளின் பிளிற்றொலி, குதிரைகள் கனைக்கும் ஒலி, மள்ளர் கொட்டும் பறை ஒலி முதலிய ஒலிகள் கடல் ஒலிபோல் ஆர்த்து இம்மூவரையும் எதிர் கொண்டு வரவேற்பதுபோல் கேட்கப்பட்டன.

"கார்க்கடல் ஒலியின் கலிகெழு கூடல்
ஆர்ப்பு ஒலி எதிர் கொள" (13; 149, 180)

என்னும் பாடல் பகுதியில் உள்ள 'எதிர் கொள' என்பது எண்ணத்தக்கது. எதிரே ஒலிக்க என்றும் பொருள் கொள்ளலாம் எனினும், எதிரேற்றதாக வரவேற்றதாகப் பொருள் கொள்ளல் கவையுடைத்து. மதிப்பிற்கு உரிய சிலர் ஊருக்குள் புகும்போது மேளதாள முழக்கத்துடன் வரவேற்பது உண்டு. அது போன்றது. இது என்று கொள்ளலாம். இது உண்மையன்று. இது ஒரு தற்குறிப்பேற்றமே. இதற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொண்டு பார்க்கின் படிப்பவர்கள் ஒத்துக்கொள்வார்களா? அதாவது - இம்மூவரும் மதுரையில் வாழப்போவதில்லை . மூவருமே இறக்கப் போகின்றனர் என்ற குறிப்பில் 'எதிர் மாறாக' ஒலிக்க என்பது தான் அந்தப் பொருள். இது ஒரு வேடிக்கைப் பொருளே.

பின்னர் மூவரும் வையை ஆற்றை அடைந்தனர். ஆற்றில் தண்ணீர் தெரியவில்லை. கண்ணகிக்குப் பின்னால் நிகழவிருக்கும் இறப்பினை முன் கூட்டி அறிந்தவள் போலவும் வருத்தத்துடன் இவர்களைப் பார்க்க விரும்பாதவள் போலவும் வையை என்னும் நல்லாள் தன் உடல் முழுவதையும் போர்வையால் மறைத்துக் கொண்டாள். போர்வை எது? பல்வேறு மண மலர்கள் தண்ணிரில் அடித்துக் கொண்டு மிதந்து வருவதால், அந்தத் தோற்றம் போர்வையால் மறைத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. மேலும், வையை நல்லாள் கண்ணிரை வெளிக்கொணராமல் அடக்கிக் கொண்டாளாம்:

"வையை என்னும் பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி" (13:170-173)

என்பது பாடல் பகுதி. 'கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி' என்பதற்கு இருபொருள் தந்துள்ளார் இளங்கோ. கண் என்பதற்கு இடம் என்னும் பொருள் உண்டு. வையை தன் இடத்தில் நிறைந்துள்ளதும் நெடுந்தொலைவிலிருந்து வந்து கொண்டிருப்பதுமாகிய தண்ணிரை, கரையைக் கடந்து மேலேறி எதையும் அழிக்காமலும் இவர்களையும் அச்சுறுத்தாமலும் அடக்கிக் கொண்டதாம். இந்தத் தொடரில் இரு பொருள் (சிலேடை) அணியும் தற்குறிப்பேற்ற அணியும் உள்ளன. வையை இயற்கையாக மலர்களால் மூடப்பட்டுக் கரை கடக்காமல் செல்வதற்கு, இவர்கட்காக அவ்வாறு செய்வதாக ஆசிரியர் தாமாக ஒரு காரணம் குறித்து ஏற்றியிருப்பதால் இது தற்குறிப்பு ஏற்ற அணி அமைந்துள்ளதாகிறது.

பின்னர் மூவரும் மரப்புணையில் ஏறி வையையைக் கடந்து அதன் தென்கரையை அடைந்து மதுரையை ஒரு சுற்றுச்சுற்றி மதுரையின் புறஞ்சேரியில் ஓரிடத்தில் தங்கினர்.

வழியில் இவர்களைக் கண்ட குவளை, ஆம்பல், தாமரை ஆகிய மலர்கள் இவர்கட்கு வரப்போகும் துன்பத்தை ஐயம் இல்லாமல் அறிந்தனபோல, வருத்தமான இசையுடன் ஏங்கிக் கண்ணிர் கொண்டு காலுற நடுங்கினவாம்.

"கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐயம் இன்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்க" (13:184-188)

என்பது இசையின் தன்மை என்பது பாடல் பகுதி. பண் நீர் என்பது இசையின் தன்மை. பச்சையாக எழுதவேண்டுமெனில், மலர்கட்காக வண்டுகள் கூலிக்கு மார்படித்துக் கொண்டு இரங்கல் இசை (சோககீதம்) பாடின என்று எழுதவேண்டும். மலர்கள் தங்களுக்காக இரங்கல் இசைக்கும் வண்டுகட்குக் கொடுக்கும் கூலி தேனாகும். மற்றும் மலர்கள் கண்ணிர் சிந்தினவாம். கண்ணிர் என்பதற்கு மற்றொரு பொருள் கள் நீர் - தேன் என்பதாம். மலர்கள் கால் உற நடுங்கின என்பது, காற்று (கால்) அடிப்பதால் ஆடி அசைந்தன என்னும் மற்றொரு பொருளைத் தரும் இதுவும் தற்குறிப் பேற்றமே.

மற்றும், மதில்களின் மேல் பறக்கும் நீண்ட துணிக்கொடிகள், இவர்களை நோக்கி நீங்கள் மதுரைக்கு வராதீர்கள் என்று கை நீட்டித் தடுப்பது போல் இவர்கள் பக்கம் நீட்டிக் கொண்டு பறக்கின்றனவாம்.

"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பதுபோல் மறித்துக் கை காட்ட" (13:189-190)

என்பது பாடல் பகுதி. இதுவும் தற்குறிப் பேற்றமே.

காற்றில் பறக்கும் கொடிகளைக் குறிப்பிட்டு, வராதே எனத் தடுப்பது போலவோ வருக என வரவேற்பது போலவோ சில இலக்கியங்களில் தற்குறிப் பேற்றம் செய்யப்பட்டுள்ளது. வில்லி பாரதத்திலிருந்து இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் ஒன்று காண்பாம்:

கிருட்டிணனிடம் துணைவேண்ட வந்த துரியோதனனை நோக்கி, நீ வேண்டினும் கண்ணன் பாண்டவர்க்குத் தவிர, உனக்குப் படைத்துணையாக வரமாட்டான் - நீ திரும்பிப் போகலாம் என்று கைகளால் தடுப்பது போல் மதில்மேல் உள்ள துணிக்கொடிகள் அசைந்தனவாம் பாடல்:

"ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை
எழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லால் படைத் துணை
யாக மாட்டான்
மீண்டு போகென்று அந்த வியன்மதில்
குடுமி தோறும்
காண்டகு பதாகை ஆடை கைகளால்
தடுப்ப போன்ற" (உத்தியோக பருவம் - 2-6) }}

என்பது பாடல். இது வராதே எனத் தடுக்கும் பாடல். அடுத்து, வருக என வரவேற்கும் பாடல் ஒன்றைக் கம்பராமாயணம் - மிதிலைக் காட்சிப் படலத்திலிருந்து காண்பாம்: தாமரை ம ல ரி ன ள ா கி ய திருமகள், நாம் செய்த தவத்தால் சீதையாக நம்மிடம் வந்து தோன்றியுள்ளாள் என்று மிதிலை நகரம் மகிழ்ச்சியுற்று, அவளை மணக்கப் போகும் திருமாலாகிய இராமன் வந்த போது, துணிக் கொடிகளாகிய கைகளை நீட்டி விரைவில் வருக என அழைப்பதுபோல் கொடிகளின் அசைவு இருந்ததாம். பாடல்:

"மையறு மலரின் நீங்கி யான்செய் மாதவத்தின்வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக் கொடிகள்
என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்ற

தம்மா" (1)

என்பது பாடல். ஒல்லை வா என்பதற்கு விரைவில் வருக என்பது பொருள். கொடிகள் மிகவும் படபடப்புடன் காற்றில் அசைந்தாடுவது ஒல்லை வா என அழைப்பது போலத் தெரிகிறதாம்.

கண்ணகியைக் கவுந்தியுடன் தங்க வைத்து மதுரை மூதூரைச் சுற்றிப் பார்க்கச் சென்ற கோவலன் மதுரையில் கண்டவை: நறுமணப் பொருள்கள் விற்கும் தெரு, பொது மகளிர் தெரு, பல்பொருள் அங்காடித் தெரு, ஒன்பான் மணிகள்விற்கும் தெரு, துணிக்கடைத் தெரு, கூலக் கடைத்தெரு, பல்வேறு குலத்தினர்களின் தெருக்கள், முச்சந்தி, நாற்சந்தி, கோயில், அங்காடி, பலிமன்றம், கவர்க்கும்வழிகள், கொடியாலும் பதாகையாலும் வெயில் தெரியாமல் பந்தல் போட்டது போன்ற தெருக்கள் முதலியவற்றைக் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டான்.

மதுரையில் சிவன், திருமால், பலதேவன், முருகன் ஆகியோர் கோயில்கள், அறவோர் இருப்பிடங்கள், மன்னவன் கோயில் ஆகிய இடங்களில் காலையில் முழவு, சங்கு, கொம்பு முதலியவை முழங்கும்.

அங்காடித் தெருவில், வண்டி வகைகள், அங்குசம், சாமரம், தோற்கடகம், கவசம், குத்துக்கோல், செம்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பொருட்கள், படைக்கல வகை, மாலை வகை, ஆனைக் கொம்பு, தொழில் கருவிகள், சாந்து வகைகள் முதலியவை மயங்கிக் கிடக்கும்.

பொன் கடைகளில் சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் ஆகிய நால்வகைப் பொன்கள் விற்கும்.

அறுவைக் கடைகளில் பருத்தி, பட்டு, எலிமயிர் முதலியவற்றாலான ஆடைகள் ஒவ்வொரு வகையிலும் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

கூலக் கடைத் தெருவில் துலாக்கோலுடனும் மரக்காலுடனும் தரகர் திரிவர். மிளகு, பாக்கு முதலியவற்றின் பொதிகள் நிறைந்திருக்கும். பதினாறு வகைக் கூலங்கள் விற்கும்.

கோட்டை மதில்களின்மேல் தாமே இயங்கும் எந்திரப் பொறிப்படைக்கலங்கள் இருக்கும். அவை: வில் பொறி, குரங்குப் பொறி, கவண்கல் பொறி, காய்ச்சிய நெய்யும் செம்பு உருக்கும் உள்ள பொறிகள், கல் கூடை, தூண்டில் பொறி, கழுத்தை முருக்கும் பொறி, மூளையைக் கடிக்கும் பொறி, மதில்மேல் ஏறுவோரைக் கீழே தள்ளும் பொறி, கழுக்கோல், அம்புக்கட்டுப் பொறி, ஊசிப்பொறி, கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறி, பன்றிப் பொறி, அடிக்கும் மூங்கில் பொறி, களிற்றுப் பொறி, பாம்புப் பொறி, கழுகுப் பொறி, புலிப் பொறி, சகடப் பொறி, தகர்ப் பொறி, முதலியவை உள்ளன. இவை எதிரிகளைத் தாமே தாக்கும்.

திங்கள் குலம்

அந்திவானத்தில் பிறைநிலா என்பவன் தோன்றி மாலையாகிய குறும்பர்களை வென்று வெண்கதிர் பரப்பி மீனரசு ஆள்கின்றானாம். எதனால் இதைச் செய்ய முடிகின்றதென்றால், இளையவராயினும் பகைவர்களை வெல்லும் பாண்டியர் குலத்திற்கு முதல்வனாயிருத்தலினாலாம். பாண்டியர்கள் மதி குலத்தவர் எனப்படுவர்.

"இளைய ராயினும் பகையரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுத லாகலின்
அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்பெறிந்து ஓட்டிப்
பான்மையின் திரியாது பால்கதிர் பரப்பி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து" (4:21-26)

என்பது பாடல் பகுதி. பாண்டியர்கள் இளம்பருவத்திலே பகைவர்கள் எதிர்த்துவரினும் அவர்களை வெல்பவராம். இந்தக் கருத்து புறநானூற்றுப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது. பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியுள்ளார். இடி சிறிய அளவினதாயினும் பெரிய பாம்புக்குலத்தைப் பூண்டோடு அழித்தல்போல், பகைவரை அழிக்கக் கூடிய பஞ்சவர் (பாண்டியர்) ஏறு எனப் பாடியுள்ளார்.

"இளைய தாயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே நீயே" (58:6-8)

அளவில் சிறிய இடி என்னும் உவமையால் பாண்டியர் சிறு பருவத்திலேகூடப் பகை வெல்வர் என்னும் பொருள் அறியவரும். மற்றும் ஒன்று:- பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றுார் கிழார் பாடியுள்ளார். நெடுஞ்செழியன் சிறுவனாம்; காலில் குழந்தைகட்குரிய கிண்கிணி அ ணி ந் தி ரு ந் தா னா ம். குழந்தைக்குக் காப்பளிக்கும் ஐம்படைத் தாலி கழுத்தில் பூண்டிருந்தானாம். இந்த நிலையில், பகைவர்கள் வந்து விட்டார்கள். உடனே சிறுவன் பாண்டியன் காலில் கிண் கிணியைக் களைந்து மறக்கழல் கட்டிக் கொண்டானாம்;

ஐம்படைத் தாலியைக் கழற்றி எறிந்தானாம்; பால் அருந்துவதை விட்டுச் சோறு உண்டு போருக்குப் புறப்பட்டுப் போய் வெற்றி பெற்றானாம்:

"கிண் கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு...
பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே...
உடன்று மேல்வந்த வம்ப மன்னரை...
கவிழ்ந்து நிலஞ் சேர அட்டதை

மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே" (77)

என்பது பாடல் பகுதி. இந்த வரலாறுகளைப் பின்னணியாகக் கொண்டு "இளைய ராயினும் பகையரசு கடிவர் தென்னர்" என்று இளங்கோ பாடியுள்ளார். திங்களுக்கு 'உடு பதி' என்னும் பெயர் உண்மையைக் கம்பராமாயணம் முதலிய நூல்களில் காணலாம். உடுபதி என்றால் விண்மீன்களின் தலைவன் என்பதாம். இந்தக் கால அறிவியல் நிலையில் பார்க்காமல் அந்தக் காலச் சூழ்நிலையில் நின்று இதை நோக்க வேண்டும். இரவில் விண்மீன்களினும் திங்கள் பெரியதாய்த் தெரிதலின் உடுபதி என்றனர். (உடு - விண் மீன்; பதி = தலைவன்). அசுவனி முதல் இரேவதி வரையிலான இருபத்தேழு விண்மீன்களையும் பெண்கள் என்பதும், அவற்றின் கணவன் திங்கள் என்பதும் புராணச் செய்தி, இந்த வகையில் நோக்கின், விண்மீன்களின் கணவன் என்று பொருள் கொள்வர். இந்த உடுபதி என்பதைத்தான் 'மீன் அரசு' என்று இளங்கோ கூறியுள்ளார்.

நெடியோன்

நாடுகளைக் கொண்டு நன் முறையில் செங்கோல் செலுத்தி, கொடுந்தொழில்களை அறவே களைந்து வெற்றியும் புகழும் நிலையாகக் கொண்டு உலகு புரக்கும் சிறப்பினை உடையவன் பாண்டியன் என அழற்படு காதையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக்
கொடுந்தொழில் கடிந்து கொற்றம் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன்" (22:57.60)

என்பது பாடல் பகுதி. நெடியோன் என்பது பாண்டியனைக் குறிக்கும். வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு இது சிறப்பாக உரியது. புறநானூற்றில், 'முந் நீர் விழவின் நெடியோன்' (9:10) எனப்பட்டுள்ளான். மதுரைக் காஞ்சியில்

"நிலம்தந்த பேருதவிப்
பொலந்தார் மார்பின் நெடியோன்" (60, 61)

"புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல" (62, 63)

என நெடியோன் என்னும் ஆட்சி உள்ளது. நெடுஞ்செழியன் என்னும் பெயரிலுள்ள நெடுமை என்னும் பண்பு, நெடியோன் என்னும் பெயரிலிருந்து பெறப் பட்டதாயிருக்கலாம். மேலே எடுத்துக் காட்டியுள்ள சிலம்புப் பகுதியின் நான்கு அடிகளில், திரும்பத் திரும்பப் பல கோணங்களில் பாண்டியனைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் இளங்கோ.

மதுராபதி புகழ்ந்தமை

மதுரை நகர்த் தெய்வமாகிய மதுராபதி என்பவள், நகரை எரித்த கண்ணகியிடம் பாண்டியனது புகழைக் கூறுகிறாள்: பாண்டியனது ஆட்சியிலே மறை ஒசையல்லது ஆராய்ச்சி மணியின் ஒசை இதுவரை கேட்டதில்லை. பாண்டியனின் அடிகளைத் தொழாத பகைவரைத் தவிர, குடிகள் பழிக்கும் கொடுங்கோலன் பாண்டியன் என்ற இகழை அவன் எய்திய தில்லை - என்பது மதுராபதியின் கூற்று:

"மறைநா ஓசை பல்லது யாவதும்
மணிகா ஓசை கேட்டதும் இலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்" (23:31-34)

என்பது பாடல் பகுதி. மேலும் கூறுகிறாள்: பாண்டியர் குடி பெண் பழி இல்லாதது. கீரந்தை என்னும் பார்ப்பனனின் மனைவி தொடர்பான பழி வரக் கூடாது எனத் தன் கையைக் குறைத்துக் கொண்ட பொற்கைப் பாண்டியனது மரபில் வந்தது பாண்டியர் குடி. தன் ஏவலர் தவறாகச் சிறையில் அடைத்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறை விடுத்ததுமன்றி, சிறையிலுள்ள அனைவருக்கும் விடுதலை தந்த பாண்டியர் வழி வந்த குடி இது.

எனவே, நின்னால் குற்றம் சுமத்தப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் "ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடிப் பிறந்தோன்" (23:40) என்றெல்லாம் பாண்டியனைப் பாராட்டிப் புகழ்ந்தாள் மதுராபதி.

பாண்டியர், வடக்கே உள்ள பொன்மலையை (மேரு மலையைத்) தம் வட எல்லை யாக்கியவர்களாம். இதை, "பொற் கோட்டு வரம்பன்" (23:12) என்னும் தொடரால் இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

"தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
நல்விருந் தாயினான்" (29:10)

என்று, தெய்வமாகி விட்ட கண்ணகி கூறியதாக இளங்கோ இயம்பியுள்ளார்.

வளைந்த கொடுங்கோலைத் தன் உடலினின்றும் பிரிந்த உயிரினால் நிமிர்த்திய பெருமை பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு என்றும் உண்டு.

பாண்டியன் பழி

தெருக் கூத்திலோ அல்லது மேடை நாடகத்திலோ, பாண்டியனோடு வாதிடும் கண்ணகி, "பழிக்குப் பழி கொடடா பழிகாரப் பாண்டியனே" என்று பர்டியதை இளம் பருவத்தில் கேட்டதாக ஒரு நினைவு இருக்கிறது.

ஆனால், மேலே இந்தத் தலைப்பில் பாண்டியனது சிறப்புகள் பரக்க விளக்கப்பட்டுள்ளன. 'பழியொடு படராப் பஞ்சவ வாழி' எனப் பாண்டியனது வாயில் காவலன் பாண்டியனை வாழ்த்தும்படி இளங்கோவின் எழுத்தாணி செய்திருக்கிறது.

ஆராய்ச்சியாளர் சிலர் இளங்கோவடிகளுடன் சேர்ந்து கொண்டு, பாண்டியனைப் பழியினின்றும் மீட்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளனர். இதற்கு ஆதரவாக,

"வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் கிமிர்த்துச் செங்கோ லாக்கியது"
(25,98, 99)

என்று மாற்று வேந்தனாகிய சேரன் செங்குட்டுவனே இரங்கிக் கூறியுள்ளதை முன் வைக்கினர். செங்கோல் வளைவது ஏன்? - பின் நிமிர்த்துவது ஏன்? வளைத்ததனால் தானே பின் நிமிர்த்த வேண்டியதாயிற்று. பாண்டியனைப் பழியினின்றும் காப்பாற்றுவதற்காக, 'வல்வினை வளைத்தது' என ஊழ் வினையின் மேல் பழி போடுகின்றனர். அங்ஙனமெனில் கொலைகாரனும் ஊழ் வினையால்தான் கொலை செய்தான் - அவனுக்கு இறப்பு ஒறுப்பு கொடுப்பது ஏன்?

மனைவி தன்மேல் ஊடல் கொண்டு கூடாதேகினாள். அவளது ஊடலைத் தீர்ப்பதற்காகப் பாண்டிய மன்னன் விரைவாக அவள் இருந்த மாளிகைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது, வழியில் பொற்கொல்லன் குறுக்கிட்டு, சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டுக் கொண்டான் எனக் கூற, அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக என்று கட்டளையிட்டான் - ஆராயாமல், அவை கூடிப் பேசித் தீர்ப்பு அளிக்காமல் பாண்டியன் இவ்வாறு செய்தான் - என்பதை, அன்றைக்கும் சரி - இன்றைக்கும் சரி - ஊழ்வினைமேல் பழிபோட்டு உலக அரங்கம் ஒத்துக் கொள்ளுமா - ஏற்றுக் கொள்ளுமா? தமிழகத்தில் இவ்வளவு தாழ்ந்த மன்னன் ஒருவன் இருந்தானா என உலகம் எள்ளி நகையாடாதா? ஊடல் - கூடாமை காரணமாகத்தான் இது நிகழ்ந்ததனால்தான், 'காமத்திற்குக் கண் இல்லை' என்னும் பட்டறிவு மொழி எழுந்தது போலும்!

LITTI-ur அளவு மீறிய பழிக்கு உரியவன் என்பதற்கு அவன் உயிர் துறந்தமையே போதிய சான்றாகும். கோப்பெருந்தேவி கூடாது ஏகியதால், காமம் தொடர்பான ஊடலை நாம் தீர்க்கப் போன வழியில் பொற்கொல்லன் சொன்னதை நம்பி இப்பெரும் பழியைச் செய்து விட்டோமே எனப் பாண்டியன் ஆழமாக எண்ணி வருந்தியதால்தான் அவனது இதயத்துடிப்பு நின்றிருக்கிறது. இதை இந்தக் காலத்தில் 'ஃ ஆர்ட் அட்டாக்' (Heart Attack) என்பர்.

மன்பதை (உலகச் சமுதாயம்) பாண்டியனது பழியை எவ்வாறு பொறுத்துக் கொள்ளலாம் (மன்னிக்கலாம்) எனில், அதற்கும் இடம் உண்டு. அவன் கொடுங்கோலனாயின், ஏதோ தவறு நடந்து விட்டது எனத் தனக்குத் தானே ஆறுதல் செய்து கொண்டு, பொற்கொல்லனுக்கு இறப்பு இறுப்பு (மரண தண்டனை) கொடுத்து, பின்னர்க் கண்ணகியிடம் பொறுத்தருளக் கேட்டு, அவளுக்குத் தக்க உதவி செய்து வழக்கையே முடித்துவிட்டிருப்பான். அங்ஙனம் செய்யாமல், மற்ற மன்னர்கள் - மன்பதை அறியும்படிச் செய்தி பரவுதற்கு முன்பே உயிர்விட்டிருக்கிறான். இந்தக் குறிப்பைச் செங்குட்டுவனே கூறியுள்ளதாக இளங்கோவின் எழுத்தாணி எழுதியுள்ளது:

"மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோ ரன்ன வேந்தர்க்கு, உற்ற
செம்மையின் இகந்த சொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென" (25:94-97)

என்பது பாடல் பகுதி. பாண்டியன் செங்கோல் தவறிவிட்டான் என்ற செய்தி மற்றவர் செவிகட்கு எட்டாத முன்பு, பாண்டியன் இறந்து விட்டான் என்ற செய்தி முதலில் எட்டும்படிச் செய்தானாம். எனவே, பாண்டியனது பழிச் செயலைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

கோப்பெருங்தேவியின் குறைபாடு

பாண்டியன் இறந்ததும் கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறந்து கண்ணகி போலவே மறக்கற்பு உடையவள் என்பதை மெய்ப்பித்தாள். ஒருவரின் தாய் இறந்துபடின் மற்றவர் அவரை நோக்கி, நான் உங்கள் தாய்போல் இருந்து உதவுவேன் என்று ஆறுதல் கூறலாம். ஆனால், ஒருத்தியின் கணவன் இறந்துவிடின், நான் உன் கணவனாய் இருந்து உதவுவேன்-வருந்தாதே என்று கூறமுடியாது - என்பது நம் பண்பு. இதைத்தான்,

"கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" (20:80)

என்னும் பாடல் பகுதி அறிவிக்கிறது.

அரசனைப் போலவே அரசியும் உயிர் துறந்தமைக்குக் காரணம், கணவன் இறந்து போனது மட்டுமன்று - அவனது பழியில் அரசிக்கும் பங்கு உண்டு. இதைப் பெரும்பாலார் கருதுவதில்லை. ஏதோ, கூடல் மகளிரின் ஆடல் பாடல்களைக் கணவன் கண்டு களித்தான் என அதனை எளிதாகக் கொள்ளாமல், அதற்கு ஒரு மறை பொருள் கற்பித்துக் கொண்டு, அவன் மேல் ஊடல் கொண்டு அவையில் அவனுடன் இல்லாமல் அந்தப்புரத்திற்குப் போய் விட்டதனால்தான் அவன் ஊடல் தணிக்கும் விரைவு நோக்கத்துடன் அந்தப்புரம் நோக்கிச் சென்றான். வழியில் பொற்கொல்லன் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டான். இதை அரசியும் ஆழ உணர்ந்திருப்பாள் அல்லவா? அதன் விளைவு உயிர் இழப்பு.

பொற்கொல்லன் கூறியதும், அரசன் தேவியின் ஊடலைப் பின்பு தீர்த்துக் கொள்ளலாம்; முதலில் களவுக் குற்றத்தைக் கவனிப்போம் என்று எண்ணி அமைச்சருடன் சூழ்வு (ஆலோசனை) செய்து நீதி வழங்கியிருக்கலாம். அரசன் அவ்வாறு செய்யாமல் தேவியின் ஊடல் தீர்ப்புக்கு முதன்மை கொடுத்ததற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம். இதை இளங்கோ அடிகள் இயம்ப மறந்துவிட்டார் போலும்! அதாவது:- காணாது போன சிலம்பை அரசன் இன்னும் கண்டுபிடித்துத் தரவில்லையே என்ற குறையும் அரசியின் ஊடல் காரணங்களுள் ஒன்றாயிருக்கலாம். எனவே, களவுபோன சிலம்பை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என அரசன் அதற்கு முதன்மை கொடுத்திருக்கக் கூடும். காகம் அமரவும் பனம் பழம் விழவும் சரியாயிருந்தது (காகதாலி நியாயம்) என்பதுபோல, அந்த நேரத்தில் பொற்கொல்லன் வந்து கள்வன் கிடைத்துவிட்டான் என்று கூற, அங்ஙன மாயின், அரச முறைப்படிக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வரும்படி அரசன் ஆட்களை ஏவியிருக்கலாம் அல்லவா?

கொலைக் குற்றத்திற்கு இறப்பு ஒறுப்பு தரப்படும். கோவலனைக் கொன்றவர்களாகிய - அதாவது கொல்லக் காரணமா யிருந்தவர்களாகிய அரசனும் அரசியும் தங்களுக்குத் தாங்களே இறப்பு ஒறுப்பு கொடுத்துக் கொண்டு பாண்டியர்களின் புகழுக்குப் புத்தொளி அளித்து உள்ளனர்.