சிலம்போ சிலம்பு/மாதரியின் மாண்பு
24. மாதரியின் மாண்பு
கதையின் இடையில் - அடைக்கலக் காதையில் இளங்கோவால் மாதரி அறிமுகப்படுத்தப்பட் டுள்ளாள். அவள் ஆயர் குல மடந்தை. திருமாலைப் (கண்ணனைப்) போற்றுபவள். சிறு தெய்வ வழிபாடும் செய்பவள். அரண்மனைக்கு ஆப்பயன் அளிக்கும் உரிமையள். அவளுக்கு ஐயை என்னும் மகள் உண்டு.
கவுந்தியும் கோவலனும் கண்ணகியும் மதுரையின் புறஞ்சேரிப் பகுதியில் தங்கியிருந்தபோது, மாதரி அப்பக்கம் உள்ள இயக்கி என்னும் சிறு தெய்வத்திற்குப் பால் படையல் செய்துவிட்டுத் திரும்பிய வழியில், கவுந்தி அவளைக் கண்டு எண்ணுகிறாள். இவள் ஆயர் குலத்தினளாகத் தெரிகிறாள்; ஆ காத்து ஆப்பயனைப் பிறர்க்கு அளிக்கும் ஆயரின் வாழ்க்கையில் எந்தக் குற்றச் செயலும் இல்லை; எனவே, இவளும் ஒரு தீமையும் செய்யாள்; அகவை முதிர்ந்த பட்டறிவாளி (அனுபவசாலி ; இவளைப் பார்க்குங்கால், நேர்மையும் இரக்கமும் உடையவள்ாகத் தோன்றுகிறாள். எனவே, கண்ணகியை இவளிடம் அடைக்கலமாக விடுவது தகும் - என்றெல்லாம் கவுந்தி எண்ணலானார். பாடல்:
"புறஞ்சிறை முதுார்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பா டில்லை
தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்
மாதரி தன்னுடன் மடங்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணினள்" (116-124)
மாதரியின் செல்வப் பெருக்கு
ஆயர்குலத்து முதுமகள் (பெரிய மனுஷி) என்பதிலிருந்தே மாதரி மிகுந்த செல்வமும் செல்வாக்கும் உடையவள் என்பது புலனாகும். மற்றும், கோவலன் மாதரி வீட்டிலிருந்து மதுரைக் கடைத்தெருவிற்குப் புறப்பட்ட செய்தியை, கொலைக்களக் காதை - 98 'பல்லான் கோவலர் இல்லம் நீங்கி' என்னும் தொடரால் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். பல் + ஆன் = பல் ஆன். பல ஆனிரைகளை (மாடுகளை) உடையவர் மாதரி குடும்பத்தினர் என்பது இதன் கருத்து. பண்டைக் காலத்தில் பல மாடுகள் வைத்திருந்தவரே பெரிய செல்வராக மதிக்கப்பட்டார்கள். மாடு என்னும் சொல்லுக்குச் செல்வம் என்னும் ஒரு பொருள் உண்டு. இதற்குப் பல இலக்கியச் சான்றுகள் காண்பிக்கலாம்.
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை" (400)
என்னும் குறள் ஒன்று போதுமே. இங்கே மாடு என்பதற்குச் செல்வம் என்பது பொருள். கன்னட மொழியிலும், 'தன' என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்ற பொருள்கள் உண்டு. இலத்தீன் மொழியிலும், Pecunia என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்னும் பொருள்கள் உள. இதனால், மாடுகள் மிகுதியாக உடைமையே செல்வமாகக் கருதப்பட்டது என்பது தெளிவு. எனவேதான், 'பல் ஆன் கோவலர்' என்பதில் உள்ள 'பல் ஆன்' என்பது, அக்குடும்பத்தின் (மாதரியின்) செல்வ மிகுதியை அறிவித்து நிற்கிறது. மற்றும், மாதரி கண்ணகியை அழைத்துக் கொண்டு, ஆயர்களும் ஆய்ச்சியர்களும் புடைசூழ்ந்துவரத் தன் இல்லம் ஏகினாளாம். இதைக் கொண்டும் மாதரியின் செல்வாக்கை அறிய இயலும்,
கவுந்தியடிகள் கண்ணகியைத்தான் அடைக்கலமாகத் தந்தார் - கோவலனை அடைக்கலமாக்கவில்லையே எனின், ஆணுக்கு அடைக்கலம் என்று சொல்லத் தேவையில்லை - கண்ணகிக்கு அடைக்கலம் என்பதிலேயே கோவலனும் அடங்குவான்.
மாதரி விருந்தோம்பல்
கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி, தம் இனத்தவர் இருக்கும் தன் வீட்டில் தங்க வைக்காமல், மரப்பந்தல் செறிந்ததும் செம்மண் பூசிப் புதுமைப்படுத்தப்பட்டிருப்பதும் காவல் மிக்கதுமாகிய ஒரு சிறிய வீட்டில் இருக்கச் செய்தாள்; புதிய நீரால் குளிக்க வைத்தாள்; என் மகள் ஐயை உனக்குத் தோழியாக இருந்து துணை புரிவாள்; கவுந்தி உங்களை நல்ல இடத்தில் சேர்த்ததால் உன் கணவர்க்கும் கவலை இல்லை - என்று கூறினாள்.
பின், கோவலன் சாவக நோன்பி ஆதலின், நாத்துாண் நங்கையோடு மற்ற பெண்களும் சேர்ந்து பகலிலேயே உணவு ஆக்குதற்கு வேண்டிய நல்ல கலங்களைக் (பாத்திரங்களைக்) காலம் தாழ்த்தாது விரைவில் கொடுங்கள் என்றாள் மாதரி. பாடல்:
"சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்துாண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்தநற் கலங்கள்
நெடியாது அளிமின் நீர் எனக் கூற" (18-21)
என்பது பாடல் பகுதி. நாத்துரண் நங்கை = நாத்தனாள் - கணவனுடன் பிறந்தவள் - இங்கே ஐயை. தம் வீட்டிற்கு வந்த புதிய ஆடவரைத் தம் வீட்டுப் பெண்ணுக்கு அண்ணனாகக் கூறுவது ஒருவகை உலகியல் மரபு. இங்கே ஐயைக்குக் கோவலன் அண்ணனாகிறான். கண்ணகி அண்ணியாகிறாள். கண்ணகிக்கோ ஐயை நாத்துாண் நங்கையாகிறாள். இவ்விதம் உறவுமுறை கொள்ளுதல் நாகரிகமான முறையாகும், அடிகள் என்றது கோவலனை, 314 சுந்தர சண்முகனார்
சாவக நோன்பிகள் = இல்லறத்தில் இருந்தபடியே நோன்பு கொள்பவர்கள். கோவலனை நோன்பிகள் எனப் பன்மையில் குறிப்பிட்டது, 'கோவலன் அவர்கள்' என்று கூறுவது போன்ற சிறப்பு வழக்காறாகும். கண்ணகியையும் சேர்த்துக் கூறாமல் கோவலனை மட்டும் குறித்திருப்பது, உணவு ஆக்கப் போகிறவள் கண்ணகி ஆதலின் என்க.
நாள் வழிப் படுஉம் உணவு = (நாள் = பகல்) பகலில் ஆக்கும் உணவு. சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் நாள்வழிப் படுஉம் அடிசில் ஆக்குதல் எனப்பட்டுள்ளது. சாவக நோன்பிக்கும் பகலிலே உணவு ஆக்குதலுக்கும் இடையே உள்ள பொருத்தம் என்ன? கோவலன் சமணன். சமண சமயத்தினர் இரவில் விளக்கு ஏற்ற மாட்டார்கள். விளக்கில் விட்டில் பூச்சி விழுந்து இறந்துவிடும் ஆதலின், கொல்லா நோன்பு காக்க இவ்வாறு செய்வர். பொழுது சாய்ந்து இருட்டு வருவதற்குள் உண்டுவிடுவர். புதுச்சேரிக்கு மேற்கே பத்துக்கல் தொலைவில் நல்லாற்றுார் என்னும் ஒரு சிற்றுார் உள்ளது. அவ்வூரார் விளக்கு வைப்பதற்கு முன் பொழுதோடு உண்டுவிடுவர் . அவ்வூருக்கு இருட்டினபின் விருந்தினர் சென்றால் உண்பது அரிது - எனக் கடலூரார் நல்லாற்றுாரினரைக் கிண்டல் செய்வது உண்டு. இது இந்தக் காலத்தில் நடக்கவில்லை. முன்பு எப்போதோ நடந்திருக்க வேண்டும். கடலூர்ப் பகுதியில்தானே நாவுக்கரசர் சமண மதத்தில் சேர்ந்திருந்தார். கடலூர்த் தேர்தல் தொகுதியில் தான் நல்லாற்றுார் உள்ளது. எனவே, நல்லாற்றுாரில் சமண சமயம் பரவியிருந்த காலத்தில் இது நடந்திருக்கலாம். பன்னூல்கள் இயற்றிய கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச அடிகளாரின் அடக்கம் (சமாதி) அமைந்துள்ள சிறப்பு இவ்வூருக்கு உண்டு.
கோவலன் சமண சமயத்தவன் - அதனால்தான் நாள் (பகல்) உணவு ஆக்கப்பட்டது என்னும் எனது கருத்து ஓர் உய்த்துணர்வேயாகும். ஏலாதார் விட்டு விடலாம். நாள் agslstiq (Day Bazaar), -96) offilstiq (Night Bazaar) என்னும் வழக்காற்றில் நாள் என்பது பகலைக் குறிப்பது காண்க.
மற்றும் 'நற் கலங்கள் அளிமின்' என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்கட்கு எவ்வளவு பாத்திரங்கள் வீட்டிலிருப்பினும் மனம் நிறைவு கொள்ளாது. அலுமினியம், பித்தளை, செம்பு, எவர்சில்வர், வெள்ளி முதலிய இனங்களில் பலவகைப் பாத்திரங்கள் இருப்பினும், குயவர் அடுக்கி வைத்திருக்கும் மண் சட்டி - குடம் முதலியவற்றைக் கண்டுவிட்டால், 'ஆ! எவ்வளவு அழகு சாமான்கள்' என்று வாய் பிளப்பர். இங்கே மாதரி வீட்டிலும் பலவகைக் கலங்கள் இருக்கலாம். அவற்றுள் தாங்கள் பயன்படுத்தாத புதிய உயர்வகைக் கலங்களைத் தரவேண்டும் என்பதற்காக 'நற் கலங்கள்' எனப்பட்டது.
'நெடியாது அளிமின்' என்றது, அவர்கள் மிக்க பசியோடு வந்துள்ளார்கள் என்பது ஒரு புறம் இருக்க, இரவு வருவதற்குமுன் ஆக்கி உண்ணவேண்டும் என்பதற்காகவும் காலம் தாழ்த்தாது விரைந்து கொடுங்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது. பின்னர், உணவு ஆக்குதற்கு வேண்டிய அரிசி - காய்கறிகள் - பால், நெய், தயிர் முதலியன கொடுக்கப்பட்டனவாம். பாடல்:
"மடைக்கலம் தன்னொடு மாண்புடை மரபின்
கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி அரிசி தம்பால் பயனொடு
(23 - 28)
என்பது பாடல் பகுதி. ஆக்கும் கலங்கள், உயர்வகைச்சாலி அரிசி, பால், பாலிலிருந்து கிடைக்கும் நெய், தயிர் ஆகியவற்றுடன் கொழுமையாய்த் திரண்டிருக்கும் முதிர்ந்த பலாக்காய், வெள்ளரிக்காய், மாதுளங்காய், மாம்பழம், வாழைப்பழம் என்பனவும் கொடுக்கப்பட்டன. பலா, வாழை, மா என்னும் மூன்றும் இடும் உணவை 'முப்பழமும் சோறும்' என்று கூறுவர். இந்த மூன்றும் கண்ணகிக்குக் கொடுக்கப்பட்டன. கோளிப்பாகல் என்பது பலாக்காய். கொழுங்கனித் திரள்காய்’ என்பதிலுள்ள கனி என்பது காய் முதிர்ந்துள்ள நிலையைக் குறிக்கிறது. சுளையாகப் பழுப்பதற்கு முன், பலாக்காயைக் கொடுவாள் கத்தியால் கொத்திக் கொத்திக் தூளாக்கிக் கறி பண்ணுவார்கள். இந்த நிலையிலுள்ள காயைக் கொத்துக்காய் என்பர்.
இங்கே, 'மாண்புடை மரபின் கோளிப் பாகல்' என்பதில் ஒரு சிறந்த கருத்து மறைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள உரைப்பகுதி அதிலுள்ளாங்கு வருக;
"மாண்புடை மரபிற் கோளிப் பாகல் கொழுங் கணித்திரள் காய் = மாட்சிமையுடையோர் கொடுக்கும் தன்மை போலப் பூவாது காய்க்கும் பலாவினுடைய கொழுவிய திரண்ட முதிர்ந்த காய் பெரியோர் சொல்லாமலே செய்தல் போலத் தான் பூவாதே காய்த்தலின், மாண்புடை மரபிற் கோளிப் பாகல் எனப்பட்டது. கோளி = பூவாது காய்க்கும் மரம். பாகல் = பலா, கோளிப் பாகல்" - என்பது உரைப் பகுதி. இக்கருத்தோடு ஒத்த பாடல் ஒன்று சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் உள்ளது;
"பூவாது காய்க்கும் மரமுமுள கன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார்" (22)
என்பது பாடல் பகுதி. பூவாமலேயே காய்க்கும் மரம் போல, நல்லதறிவாரும் நூல் வல்லவரும், அகவை முதிராத இளைஞராயிருப்பினும் அகவை முதிர்ந்த பெரியோராக மதிக்கப் பெறுவர் - என்பது கருத்து பூவாது காய்க்கும் மரம் கோளி எனப்படும் என்பதை,
"கோளி பூவாது காய்க்கும் குளிர்மரம்" (4 - 80)
என்னும் திவாகர நிகண்டு நூற்பாவாலும் அறியலாம்.
அத்தி, அரசு, ஆல், அன்னாசி, பலா ஆகியவை பூவாது காய்க்கும் மரங்கள் ஆகும். பூவாது காய்ப்பது என்றால் என்ன? எப்போதே ஒரு முறை வருபவரைப் பார்த்து உங்கள் வருகை 'அத்தி பூத்தாற் போல்' உள்ளது என்பது உலகியல். அத்தி முதலியவை பூக்காமலேயே காய்க்கும் என மக்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். அத்தி, அரசு, அன்னாசி, ஆல், பலா ஆகியவற்றிற்கும் பூக்கள் உண்டு. இவற்றில், பல பூக்கள் ஒன்றாய்ச் சேர்ந்து புற இதழால் மூடப்பட்டு உருண்டை வடிவம் பெறுகின்றன. உள்ளேயே மகரந்தச் சேர்க்கை பெற்றுக் காய்த்துக் கனியாகின்றன. ஒவ்வொரு காயும் பல பூக்களின் திரட்சி என்று கொள்ளல் வேண்டும். இந்தக் கோளி இனங்களுள் அளவாலும் சுவையாலும் தலைமை தாங்குவது பலாதான். இதைப் பெரும்பாணாற்றுப் படை என்னும் நூலில் உள்ள
"கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல்" (407, 408)
என்னும் பாடல் பகுதியாலும் அறியலாம். இது பட்டறிவு (அனுபவம்) வாயிலாகவும் மக்கள் அறிந்ததேயாகும். இதனால்தான் இளங்கோவடிகள், "மாண்புடை மரபின் கோளிப் பாகல்" என்றார்.
கண் கொள்ளாக் காட்சி
கண்ணகி உணவு அளிக்கக் கோவலன் உண்ண இவ்விதம் அவ்விருவரும் அளவளாவியது, மாதரிக்கும் மகள் ஐயைக்கும் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. "இந்தக் கோவலன், வடக்கே ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த பூவைப்பூ நிறமுடைய கண்ணனாக இருப்பானோ இந்தக் கண்ணகி, தொழுனையாற்றின் பக்கம் கண்ணனது துயர் நீங்கச் செய்து அவனை மணந்து கொண்ட நம் குலத்தைச் சேர்ந்தவளாகிய நப்பின்னையாக இருப்பாளோ! இவர்களின் கண்கொள்ளாக் காட்சியை என்னென்று வியந்து மகிழ்வது! என்று மாதவியும் ஐயையும் தம்முள் பேசிக் கொண்டு மகிழ்ந்தனர்.
"ஆயர் பாடியில் அசோதை பெற்றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
கல்லமு துண்ணும் கம்பி, ஈங்குப்
பல்வளைத் தோளியும் பண்டுகம் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை
விழுமம் தீர்த்த விளக்குக் கொல்லென
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்திக்
கண்கொளா நமக்குஇவர் காட்சி ஈங்கென"
(46-53)
என்பது பாடல் பகுதி. ஒவ்வொருவருக்கும் சில நேரங்களில் அவரவர் குலத்திற்கு ஏற்ற சூழ்நிலை - அவரவர் வணங்கும் தெய்வத்திற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும் போலும். இலம்பு - வேட்டுவ வரி என்னும் பகுதியில், கண்ணகி வேட்டுவர்க்கு ஏற்றவாறு புகழ்ச்சியாக உருவகிக்கப் பட்டாள். இங்கே, ஆயர்குல மாதரியும் ஐயையும் தம் ஆயர் குலத்தைச் சேர்ந்த கண்ணன் உருவிலும் நப்பின்னை உருவிலும் கோவலனையும் கண்ணகியையும் கண்டுள்ளார்கள்.
ஈண்டு, கருத்து ஒப்புமை காண்டல் என்னும் முறையில், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு காட்சியைக் காணலாம். திருவாரூரில் முதல் முதலாகச் சுந்தரரைக் கண்ட பரவை நாச்சியார், இவர் யாராக இருக்கலாம் என்று வியக்கிறார்:"முன்னே வந்து எதிர்தோன்றும்
முருகனோ பெருகொளியில்
தன்னேரில் மாரனோ
தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர் செஞ்சடை அண்ணல்
மெய்யருள்பெற் றுடையவனோ
என்னே என்மனம் திரித்த
இவன்யாரோ என நினைத்தார் (290)
என்பது பாடல். இவர் முருகனாக இருப்பாரோ அல்லது, மன்மதனாகவாவது - விஞ்சையனாகவாவது இருப்பாரோ! அல்லது, சிவனடியாராக இருப்பாரோ! என்று பரவையார் வியக்கிறார். இந்தப் பாடல் சைவ சமயச் சூழ்நிலையை அறிவிக்கிறது. இவ்வாறே, மாதரியும் ஐயையும் தம் குலத்திற்கும் சமயத்திற்கும் ஏற்றவாறு கற்பனை செய்து பார்த்துள்ளனர். நம்பி = கோவலன். பல்வளைத் தோளி . கண்ணகி, புதுமலர் வண்ணன், தூமணி வண்ணன் = கண்ணன். விளக்கு = நப்பின்னை. வேடிக்கை பார்ப்பது பெண்களின் வழக்கம் போலும்!
நப்பின்னை வரலாறு
மிதிலைப் பக்கத்தில் கும்பகன் என்னும் ஆயர் அரசன் இருந்தான். அவன் மகள் நப்பின்னை. அரக்கர்கள் ஏழு எருமைக் கடாக்களாக வந்து தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தனர். இந்தக் காளைகளை அடக்கிக் கொல்பவருக்குத் தன் மகளை மண முடித்துத் தருவதாகக் கும்பகன் அறிவித்தான். அவ்வாறே கண்ணன் (கிருஷ்ணன்) காளைகளை அடக்கிக் கொன்று நப்பின்னையை மணந்தான். இது தொழுனையாற்றங் கரையில் நடந்தது. இந்த நப்பின்னை போலும் கண்ணகி என ஐயையும் மாதரியும் பூரித்துப் போயினர்.குல வேற்றுமை
மாதரி அடைக்கலமாகப் பெற்றுக் கொண்டு வந்த கண்ணகி மிகவும் ஒய்ந்து சோர்ந்து இருந்திருப்பாள். இந்த நிலையில் உணவு ஆக்கும் வேலையை அவளிடம் விடலாமா? மாதரியும் ஐயையுமல்லவா உணவு ஆக்கி விருந்து படைத்திருக்க வேண்டும்? உணவு ஆக்குதலைக் கண்ணகியிடமே விட்டிருக்கும் காரணம் என்ன?
ஆயர்குலம் தாழ்ந்த குலம் - வணிகர் குலம் உயர்ந்தது; எனவே, தாழ்ந்த குலத்தினர் ஆக்கியதை உயர் குலத்தினர் உண்ண மாட்டார்கள் - என்பதைத் தவிர வேறு என்ன காரணம் கூறமுடியும்? ஆயர் குலத்தினர் அரிய பெரிய அடைவுகள் (சாதனைகள்) புரியினும் அவற்றை அவர்கள் செய்ததாகக் கொள்ளாமல் வேறு யாரோ செய்ததாக அந்தக் காலத்தில் கூறி வந்தனர். ஓர் இடையன் செய்ததாக நாம் ஒத்துக் கொள்வதா என்னும் தருக்கு உயர் குலத்தினர் எனப்படுபவர்க்கு இருந்தது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காணலாம்:
ஆயர் குலத்தவராகிய திருமூலர் அரிய மூவாயிரம் பாடல் கொண்ட திருமந்திரம் என்னும் நூலை இயற்றினார். ஆனால் உண்மை மறைக்கப்பட்டது. மூலன் என்னும் இடையன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். திடீரென வழியில் விழுந்து இறந்துவிட்டான். மாடுகள் கதறின. கைலாயத்திலிருந்து அவ்வழியே வந்த தவயோகி ஒருவர் இதைக் கண்டு இரக்கமுற்று, கூடுவிட்டுக் கூடுபாயும் ஆற்றலின்படி, தன் உயிரை மூலன் உடம்பில் புகுத்தி எழுந்து, தன் உடலை ஒரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மாடுகளை உரிய இடத்தில் கொண்டு சேர்த்தார். பின்னர் தன் உடலைத் தேடினார். இவர் இங்கேயே தங்கித் தொண்டு செய்ய வேண்டும் என்று சிவன் இவர் உடலை அழித்துவிட்டார். எனவே யோகி இடையனாகிய மூலன் உடலோடு இருந்தபடியே மூவாயிரம் பாடல்கள் பாடினார் - என்பது கதை. இது உண்மையா? இல்லை - கற்பனை. இடையனுக்கு இவ்வளவு ஆற்றல் உண்டு என்னும் பெருமை வெளிவராதவாறு இவ்வாறு வரலாறு மாற்றப்பட்டது. மற்றொன்று காணலாம்:
மாடு மேய்த்த இடைச் சிறுவன் ஒருவன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? - என்று கேட்டு ஒளவையாரை மடக்கி விட்டான். இந்தப் பெருமையையும் இடைக் குலத்திற்குக் கொடுக்க மனமின்றி, முருகன்தான் இடைச் சிறுவனாக வந்தான் எனக் கதையை மாற்றி விட்டனர் உயர் குலத்தினர். மற்றும் ஒன்று வருக;
வடமொழிப் புலவனாகிய காளிதாசன் உலக மா கவிகளுள் ஒருவன். இவன் இடைக் குலத்தினன் . ஆடு, மாடு மேய்த்தது உண்டு. இந்த இடையனின் நாக்கில் காளி ஏதோ எழுதினாள்; அதனால்தான் இவன் பெரிய கவிஞனானான் - என்று கதை கட்டி விட்டனர். காளிதாசன் பார்ப்பனன் - ஆனால் ஆடுமாடு மேய்த்தான் என்று இமாலயப் புளுகு புளுகி வைத்துள்ளனர் உயர் குலத்தினர். பார்ப்பனன் ஆடு மேய்ப்பதில்லை. ஒருவேளை, ஆரியர்கள் ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்று சிலர் கூறும் வரலாற்றுச் செய்தியின் நினைவில் இவ்வாறு உயர்குலத் தினர் உளறி வைத்துள்ளார்களோ?
இங்கே ஓர் அணுகுண்டு விழப்போகிறது. அதாவது, வடக்கே ஆயர்பாடியில் வளர்ந்ததாகக் கூறப்படும் கண்ணனும் (கிருஷ்ணனும்) ஆயர் குலத்தில் பிறந்தவனே. வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த குழந்தை, ஆயர்பாடியில் நந்தகோபன் - அசோதை ஆகியவரின் வீட்டில் கொண்டு போய்ப் போடப்பட்டது. அந்தக் குழந்தைதான் கண்ணன் என்பது கதை. இது கற்பனையாக இருக்கலாம். வசுதேவர் கண்ணனாகிய ஆண் குழந்தையைப் போட்டுவிட்டு, மாற்றாக, அசோதை பக்கத்தில் கிடந்த பெண் குழந்தையை எடுத்துப் போனாராம். பெண் குழந்தை எங்கே என்று அசோதையோ - மகப்பேறு (பிரசவம்) பார்த்த மகளிரோ தேட மாட்டார்களா? பிறந்தது பெண் குழந்தையாயிற்றே - ஆண் குழந்தை எப்படி வந்தது என்று ஐயுற மாட்டார்களா? இதைச் சரி செய்ய (அட்ஜஸ்ட்மெண்ட்) மாயை பெண் குழந்தையாக வந்தது என்று கதை கட்டப்பட்டுள்ளது. எனவே இது கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். கண்ணன் ஆயர்குலச் சூழ்நிலையிலேயே இருந்தான். ஆயர்குல நப்பின்னையை மணந்து கொண்டான். கண்ணனும் பலராமனும் யாதவ (ஆயர்) குல மன்னர்கள் என வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். இதற்கு நேரான சான்றாக, சிலம்பில் இளங்கோவடிகளால் குறிப்பிடப்பட்டுள்ள "ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த" என்னும் பகுதி ஒன்றே போதுமே! இதை ஏலாதார் தள்ளி விடலாம். அறிஞர்களின் ஆய்வுக்காக இந்தக் கருத்து விடப்படுகிறது. இதுவே முற்ற முடிந்த முடியன்று.
ஆய்ச்சியர் குரவை
கோவலன் கடைத்தெரு நோக்கிச் சென்றதும், ஆயர்பாடியில் பலவகைத் தீய நிமித்தங்கள் தோன்றியதை மாதரி ஐயைக்குக் கூறுகின்றாள். பின்னர் ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்து ஆடச்செய்தாள். இந்தக் காதையில் திருமால் போற்றப்பட்டுள்ளார்.
மாதரியின் வைணவம்
மாதரி வைணவ சமயக் கோட்பாடுடையவள். குரவைக் கூத்து முடிந்ததும், பூவும் நறுமணப் புகைப்பொருளும் சந்தனமும் மாலையும் எடுத்துக் கொண்டு வையை ஆற்றின் கரையிலுள்ள திருமால் கோயிலுக்கு வழிபடச் சென்றாள். பாடல்:
"ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
(துன்ப மாலை : 1-5)
என்பது பாடல் பகுதி. மாதரி இயக்கி என்னும் சிறுதெய்வத்தை வணங்கினும், பெரிய அளவில் வைணவ சமயக் கோட்பாடு உடையவள் என்பது விளங்கும். முல்லை நில ஆயர்களின் கடவுள் திருமாலே அல்லவா? "மாயோன் மேய காடுறை உலகமும்" என்பது, தொல்காப்பிய - அகத்திணையியல் (5) நூற்பா அல்லவா?
அடுத்த பிறவியிலும் மாதரி வைணவர்க்கு மகளாகப் பிறந்ததாக இளங்கோ அடிகள் கூறியிருப்பது வியப்புச் சுவை தருகிறது.
கோவலனும் கண்ணகியும் இறந்த செய்தியறிந்ததும் கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் உயிர்துறந்தனராம். அடைக்கலப் பொருளையிழந்த மாதரி தீக்குளித்து உயிர் நீத்தாளாம். இம்மூவருள் கோவலன் தாயும் கண்ணகியின் தாயும், வஞ்சி நகரில் அரட்டன் செட்டி என்பவனின் மனைவி வயிற்றில் இரட்டைப் பிறவிப் பெண்களாகப் பிறந்தனராம். மாதரியோ, திருவனந்தபுரத்தில் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் திருமாலுக்குத் தொண்டு புரியும் குடும்பத்தில் பிறந்தாளாம்.
முன்னவர் இருவரும் செட்டி குலத்தைச் சேர்ந்தவ ராதலின் மறு பிறவியிலும் (அரட்டன் என்னும் செட்டியின் மக்களாகச்) செட்டி குலத்தில் பிறந்ததும் வியப்புச் செய்தி. மாதரி, முன்பிறவியில் திருமாலைப் பணியும் ஆயர் குலத்தில் பிறந்து திருமாலை வழிபட்டு வந்ததாலும், குரவைக் கூத்து (ஆய்ச்சியர் குரவை) ஆடியதாலும் மறுபிறவியில் வைணவக் குடும்பத்தில் பிறந்தாளாம்.
இவ்வாறாக, மாதரி சிலப்பதிகாரத்தில் ஒரு சிறந்த உறுப்பாக ஒளி விசுகிறாள்.