சிலம்போ சிலம்பு/பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு

விக்கிமூலம் இலிருந்து

23. பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு

பார்ப்பனர்

சிலம்பில், தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் ஒருத்தியும், மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன் என்னும் பார்ப்பன ஆடவர் மூவரும் ஆகப் பார்ப்பன உறுப்பினர்கள் நால்வர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பைக் கண்ணுற்ற ஒருவர் தம் சொற்பொழிவில், இளங்கோ ஆரியத்திற்கு (பார்ப்பனர்கட்கு) நிரம்பத் தம் நூலில் இடம் கொடுத்துள்ளார் என்று சாடினார், இவருக்குப் பதில் தரவேண்டும்.

பிராமணர் என்ற குலத்தினர், தங்களை யாராயினும் பார்ப்பான் - பார்ப்பனர் என்று குறிப்பிட்டால், வருத்தமும் சினமும் கொள்கின்றனர். பார்ப்பனியத்தைப் பிடிக்காதவர்கள் பார்ப்பான் என்கின்றனர். ஆரிய அடிமைகள் பிராமணர் என்கின்றனர். நடுநிலைமையாளர் பார்ப்பான் - பிராமணர் என்ற இரண்டையுமே இடத்திற்கு ஏற்றவாறு மாற்றி மாற்றிப் பயன்படுத்துகின்றனர் - இரண்டுங் கெட்டான் நிலையுடைய இவர்கள் காரியவாதிகள் - பிழைக்கத் தெரிந்தவர்கள்.

தொல்காப்பியம் உட்பட்ட கழக (சங்க) நூல்களில் எழுபத்தைந்து இடங்கட்குமேல், பார்ப்பனர், பார்ப்பார், பார்ப்பான், பார்ப்பணி என்னும் சொற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலந்து ஆளப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருமே ஆரியப் பார்ப்பனர் அல்லர்; தமிழகத்தில் பண்டைக் காலத்திலேயே தமிழ்ப் பார்ப்பனர்கள் - தமிழ் அந்தணர்கள் உண்டு. இதற்கு ஆணித் தரமான சான்று பார்க்கலாமா?

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியலில் “உயிரும் புள்ளியும்” என்று தொடங்கும் (77-ஆம்) நூற்பாவின் இடையில் உள்ள

“உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்

ஐம்பா லறியும் பண்புதொகு மொழியும்” (77:4,5)

என்னும் பகுதிக்குப் பார்ப்பனராகிய நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரைப்பகுதி வருமாறு:

“இனிக் கரும்பார்ப்பான், கரும் பார்ப்பனி, கரும் பார்ப்பாா், கருங் குதிரை, கருங் குதிரைகள் எனவரும் இவற்றுள் கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியனவாகிய குதிரைகள் என ஐம்பாலினையும் உணர்த்தும் பண்புகொள் பெயர் தொக்கவாறு காண்க” - என்பது உரைப்பகுதி. இங்கே கருமை என்னும் அடைமொழி கொடுத்துக் குறிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு அந்தணராகிய பார்ப்பனர். சைவத் திருக்கோயில்களிலே குருக்கள் என்னும் பெயருடன் பூசனை புரிபவர்கள், ஆதி சைவப் பிராமணர்கள் என்று அழைக்கப்படுவர்.

தமிழ்ப் பார்ப்பனர்கள் உண்டு என்பதற்குச் சிலப்பதிகாரத்திலேயே கட்டுரை காதையில் அகச்சான்று உள்ளது:

“வண்தமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த

திண்திறல் நெடுவேல் சேரலன் காண்க.” (23:63,64)
என்பது பாடல் பகுதி. ‘தமிழ் மறையோன்’ என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

சைவ சமயக் குரவர் நால்வருள், சுந்தரர் கோயில் பூசனை புரியும் ஆதிசைவப் பார்ப்பனர் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையான முடிபாகும். நாவுக்கரசர் வேளாளர். மற்ற சம்பந்தரும் மாணிக்க வாசகரும் தமிழ் அந்தணர் ஆவர். பெரிய புராணத்தில் சம்பந்தரைப் பற்றிக் கூறுமிடத்தில் என்னதான் வேத வேள்விகள் இணைக்கப்பட்டிருப்பினும் சம்பந்தர் தமிழ் அந்தணரே; மாணிக்கவாசகரும் அத்தகையோரே. ஆரியர் வழிவந்த பார்ப்பனர்களுள் யாராவது, சம்பந்தர் - ஞான சம்பந்தர் - மாணிக்கவாசகர் - திருவாதவூரர் என்னும் பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனரா? எனக்குத் தெரிந்தவரைக்கும் இல்லை. ஒருவேளை எங்கேயாவது குறைந்த அளவில் - ஒரு சிலர் மட்டுமே இருக்கலாம். குருக்கள் என்னும் ஆதி சைவத் தமிழ் அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சம்பந்தன் என்னும் பெயரை வைத்துக் கொள்வதுண்டு. பார்ப்பனர்கள் திருநாவுக்கரசர் என்னும் பெயரின் பக்கம் திரும்பியே பார்க்க மாட்டார்கள். குருக்கள் மரபினராகிய அப்பூதி அடிகளே, தம் வீட்டுப் பொருள்கள் பிள்ளைகள், தண்ணிர்ப் பந்தல் முதலிய உயர்திணை - அஃறிணையாம் அனைத்துப் பொருள்கட்கும் திருநாவுக்கரசர் என்னும் பெயர் சூட்டினார்.

மற்றும், பண்டு, பார்ப்பனர்கள் தமிழர்க்குத் தோழர்களாயிருந்து செயலாற்றியுள்ளனர் என்றும் தெரிகிறது. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - கற்பியலில், பார்ப்பனத் தோழர்க்கு உரிய கிளவிகள் கூறப்பட்டுள்ளன.

“காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்

அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய” (36)

என்பது நூற்பா. இதே கற்பியலில், தலைவனிடமிருந்து தலைவியின் ஊடல் தீர்க்கத் தூதாகப்போகும் வாயில்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” (52)

என்பது நூற்பா. பரவை நாச்சியாரின் ஊடலை நீக்கச் சுந்தரரிடமிருந்து ஒர் அந்தணர் (சிவன் என்கின்றனர்) ஒரு முறைக்கு இருமுறை தூது போனதாகச் செல்லப்படும் வரலாறு ஈண்டு எண்ணத்தக்கது. (பெரியபுராணம்)

மற்றும் ‘நம்பி அகப்பொருள்’ என்னும் நூலின் அகத்திணையியல் என்னும் பகுதியில் உள்ள ஒரு நூற்பாவும் அதன் பழைய உரையும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. அதாவது:-

“இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும்
நிலையாத் தன்மை நிலையெடுத் துரைத்தலும்
செலவழுங்கு வித்தலும் செலவுடன் படுத்தலும்

பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய ” (100)

இதன் பொருள்: இருவகைப் பாங்கரில் பார்ப்பனப் பாங்கர்க்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இளமை முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் பார்ப்பனப் பாங்கர்க்கு உரியனவாம் என்றவாறு. பிறவும் என்றதனால் வாயில் வேண்டல் முதலாயினவும் கொள்க. என்பன நூற்பாவும் உரையுமாகும்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குத் தேவந்தி என்னும் பார்ப்பனி தோழியாயிருந்தாள். கோசிகன் என்னும் அந்தணன் மாதவிக்கு அறிமுகமாயிருந்ததால், கோவலனைப் பிரிந்து வருந்திக்கொண்டிருந்த மாதவியைக் காணச்சென்றான். அவன் வாயிலாக மாதவி கோவலனுக்கு மடல் கொடுத்தனுப்பினாள். எனவே, சிலம்பில் இடம்பெற்றுள்ள பார்ப்பனர்கள் அனைவருமே ஆரியப் பார்ப்பனர் எனச் சாடலாகாது.

ஆரியப் பார்ப்பனரும் தமிழ்ப் பார்ப்பனரும் பின்பற்றும் முறைகளுள் சில ஒத்திருக்கலாம். அவர்களைப் பார்த்து இவர்களோ - அல்லது - இவர்களைப் பார்த்து அவர்களோ சிலமுறைகளைப் பின்பற்றியிருக்கலாம். இரு சாராரும் மறையவர் என்னும் உயரிய பெயருக்கு உரியராவர். சிலம்பில் இடம் பெற்றிருப்பவருள் ஒவ்வொருவராக இனிக் காணலாம்.

1. தேவந்தி

தேவந்தியைப் பற்றி வேறு தலைப்புகளில் சில சிறு குறிப்புகள் இருப்பினும், இங்கே ஒரு சிறிது விரிவாகக் காண்பாம். தேவந்தி கண்ணகியின் பார்ப்பனத்தோழி.

மாலதி என்னும் பார்ப்பனி தன் மாற்றாள் குழந்தைக்குப் பால் புகட்டுகையில் பால் விக்கிக் குழந்தை இறந்துவிட்டது. குழந்தையை உயிர்ப்பித்துக் தரும்படி மாலதி பாசண்டச் சாத்தன் கோயிலில் பாடு கிடந்தாள். இந்த நேரத்தில் இடாகினி என்னும் பேய் குழந்தைப் பிணத்தை விழுங்கி விட்டது. மாலதியின் துயர் நீக்கப் பாசண்டச்சாத்தன் அக் குழந்தை வடிவாக வந்து கிடந்தான். மாலதி குழந்தையை மாற்றாளிடம் ஒப்படைத்தாள். குழந்தை பெரியவனானான்; தேவந்தியை மணந்து கொண்டான். எட்டு ஆண்டுகள் அவளோடு வாழ்ந்து மறைந்து விட்டான். கைம்பெண்ணான தேவந்தி பாசண்டச் சாத்தன் கோயிலைச் சுற்றிக்கொண்டு கிடந்தாள். இது தேவந்தியின் வரலாறு.

பாசண்டச் சாத்தனாகிய கணவனும் தேவந்தியும் உடல் உறவு கொள்ளவில்லை என்பதாக ஆராய்ச்சியாளர் சிலர் ‘சோதிடம்’ கூறுகின்றனர். தெய்வம் மக்கள் உருவில் வந்து தேவந்தியை மணந்து கொண்டது என்பதை நம்ப முடிந்தால்தான், இருவரும் உடல் உறவு கொள்ளவில்லை என்பதையும் நம்ப முடியும். ஒருவகைக் காப்பியக் கற்பனையே இது.

தேவந்தி ஒருநாள் மாலை வந்து, நீ கணவனை அடைவாயாக என்று வாழ்த்தினாள். கண்ணகி பின்னால் நடக்க இருப்பதைக் குறிப்பாக அறிவிப்பது போலத் தான் கண்ட தீய கனவைத் தேவந்தியிடம் கூறினாள். தேவந்தி கண்ணகியை நோக்கி, இது பழைய ஊழ்வினைப்பயன் - சோம குண்டம், சூரியகுண்டம் என்னும் இரு குளங்களிலும் குளித்துக் காமவேளின் கோயில் சென்று வணங்கினால் கணவனை மீண்டும் பெறலாம் என்று சூழ்வுரை (ஆலோசனை) கூறினாள். கேட்ட கண்ணகி, குளங்களில் முழுகிக் கடவுளைத் தொழுதல் எனக்குத் தகாது என மறுத்துரைத்து விட்டாள்.

பின்னாளில் கோவலன் கொலையுண்ட செய்தியறிந்து மதுரைக்குச் சென்றாள் தேவந்தி. பின் அங்கிருந்து, ஐயையுடன் சேரநாட்டில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று அரற்றினாள். தன்மேல் கடவுள் (சாமி) ஏறிப் பல கூறினாள். கண்ணகியின் தாயும் கோவலன் தாயும் பிள்ளைகளின் இறப்பைப் பொறாது தாங்கள் இறந்து போனதையும், இருவரின் தந்தைமார்களும் மாதவியும் துறவு பூண்டதையும் தெய்வமாக உள்ள கண்ணகிக்குக் கூறினாள். மணிமேகலையின் துறவு பற்றிச் சேரனிடம் விவரித்தாள் - கண்ணகி முன், காவல் பெண்டு, அடித்தோழி என்னும் இருவருடன் சேர்ந்து தேவந்தி மாறி மாறிப் பாடினாள். தன்மேல் தெய்வம் ஏறியபின், அங்கிருந்த சிறுமியர் மூவர்மீது தண்ணிர் தெளிக்கச் செய்து அவர்களின் முன் பிறப்பை அறியச் செய்தாள். சிறுமியர் மூவருள் ஒருத்தி கண்ணகியின் தாய் - மற்றொருத்தி கோவலனின் தாய் - மூன்றாமவள் மாதரி. இம் மூவரும் இறந்ததும் இச்சிறுமியராக மறு பிறவி எடுத்து ஆங்கு வந்திருந்தனர். பின்னர்க் கண்ணகி தேவந்தியின் மீது ஏறி, இளங்கோவின் துறவு பற்றிக் கூறச்செய்தாள்.

பூசாரினி

இத்தகைய தேவந்தி இறுதியில் கண்ணகி கோயிலின் பூசாரினியாக அமர்த்தப் பட்டாளாம்:

“பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து
நித்தல் விழாவணி நிகழ்க என்று ஏவிப்
பூவும் புகையும் மேவிய விரையும்

தேவந்திகையைச் செய்க என்றருளி” (30:151-154)

என்பது பாடல் பகுதி. செங்குட்டுவன், கோயில் செலவிற்கு வேண்டிய நிலம் கொடுத்து, நாள்தோறும் நடைபெற வேண்டிய விழா அணிப் பூசனைக்கு ஏற்பாடு செய்தான்; பின்னர், நறுமணச் சாந்திடுதல், மலர் வழிபாடு (அர்ச்சனை செய்தல்), நறும்புகை எடுத்தல் (தூபம்) முதலிய அன்றாடப் பூசனையைச் செய்யும் பூசாரினியாகத் தேவந்தியை அமர்த்தினானாம்.

கண்ணகிக் கோட்டம் பெண்தெய்வக் கோயில் ஆதலாலும், தேவந்தி கண்ணகிக்குத் தோழியாய் இருந்ததனாலும், பாசண்டச் சாத்தன் கோயிலில் இருந்து பழக்கப்பட்டவள் ஆதலாலும், குடும்பப் பொறுப்போ வேறுவேலையோ இல்லாத கைம்பெண் ஆதலாலும், பார்ப்பணி யாதலாலும், பலமுறை தன்மேல் கடவுள் ஏறிச் சாமியாடியவள் ஆதலாலும், இவளைக் கண்ணகியின் கோயிலுக்குப் பூசாரினியாகச் சேரன் செங்குட்டுவன் அமர்த்தியது பொருத்தமான பேரறிவுச் செயலேயாகும், பெண் தெய்வக் கோயிலுக்கும் ஆடவரே பூசனை செய்யும் இந்நாட்டில், தேவந்தியைப் பூசாரினியாக்கியது புதுமைப் புரட்சியாகும்.

2. மாங்காட்டு மறையவன்

மாங்காட்டு மறையவனுக்குச் சிலம்பில் பெயர் தெரிவிக்கவில்லை. ஏதாவது ஒரு பெயர் இல்லாமலா போகும்? பெயர் வேண்டா மறையவன் போலும் இவன். சேரநாட்டுக் குடகுமலைப் பகுதியில் உள்ள மாங்காடு என்னும் ஊரினனாகிய இவன், கோவூர் கிழார், ஆலத்துளர் கிழார் முதலிய பெயர்களைப் போல ஊர்ப்பெயராலேயே குறிப்பிடப்பட்டுள்ளான். உறையூர் இளம்பொன் வணிகனார் என்பது போல் குலப்பெயராலும் குறிப்பிடப்பட்டுள்ளான். இதனால், அந்தக் காலத்தில், ஊர்ப் பெயராலும் குலப்பெயராலும், இரண்டன் பெயராலும் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டதும் உண்டென அறியலாம். இவன் வைணவ அந்தணன், ஊர் சுற்றிப் பார்க்கும் ஆர்வம் உடையவன்.

கவுந்தி, கோவலன், கண்ணகி ஆகிய மூவரும் உறையூரைக் கடந்து செல்லும் வழியில் ஒர் இளமரக்காவில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது, பாண்டியனையும் அவன் நாட்டையும் புகழ்ந்து வாழ்த்திக் கொண்டு மாங்காட்டு மறையவன் அங்கு வந்தான். அவனைக் கண்டு, கோவலன், நின் ஊர்.பேர் விவரம் சொல்லுக என்று வினவினான். அதற்கு மறையவன், நான் குடகுமலைப் பகுதியில் உள்ள மாங்காடு என்னும் ஊரினன். திருவரங்கத்தில் அறிதுயில் கொள்ளும் அரங்கனையும், திருவேங்கடத்து எழுந்தருளியுள்ள வேங்கடத்தானையும் காட்டுக என்று என் கண்கள் வற்புறுத்தியதால் புறப்பட்டு ஊர் சுற்றி வருகிறேன் என்றான். மதுரைக்குச் செல்லும் வழி அறிவிக்கும்படிக் கோவலன் வினவப் பின்வருமாறு மறையவன் அறிவிக்கலானான்:

நீங்கள், முதுவேனில் காலத்தில் பயணம் தொடங்கியமை மிகவும் இரங்கத் தக்கது. நீங்கள் இவ்வழியே காடு மலை கடந்து செல்லின், சிவனது சூலம் போல் மூன்று வழிகள் பிரிந்து காணப்படும். மூன்றனுள் வலப்பக்க வழியில் செல்லின் எதிர்ப்படும் பாண்டியன் சிறுமலையைக் கடக்க வேண்டும். மூன்றனுள் இடைப்பட்ட (நடுவில் உள்ள) வழியாகச் செல்லின் எளிதாய்ச் செல்லலாம்; ஆயினும், வழியில் மயக்கும் தெய்வம் ஒன்று உண்டு; அதனிடமிருந்து தப்பித்துச் செல்லல் வேண்டும்.

இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால் இருஞ்சோலை மலை அகப்படும். ஆங்கு ஒரு பிலம் உண்டு. பிலத்தில் புக வேண்டுமாயின் திருமால் திருவடியை நினைத்துக் கொண்டு மலையை மும்முறை வலம்வர வேண்டும். வரின் ஒரு பெண் தெய்வம் தோன்றிச் சில வினவுவாள். பதில் இறுப்பின் வாயில் திறப்பாள். உள்ளே சென்று சில வாயில்களைக் கடப்பின், இரட்டைக் கதவு உள்ள ஒரு வாயில் தெரியும். ஆங்கு உள்ள ஒரு பெண் தெய்வம் சில வினவுவாள். தக்க விடையிறுப்பின், மூன்று பொய்கைகளைக் காண்பிப்பாள். அவற்றின் பெயர்கள் புண்ணிய சரவணம், பவ காரணி, இட்ட சித்தி என்பன. புண்ணிய சரவனத்தில் மூழ்கின் ஐந்திற வியாகரண நூல் அறியலாம். பவ காரணியில் மூழ்கின் பழம் பிறப்பு உணரலாம். இட்ட சித்தியில் மூழ்கின் நினைத்தன எய்தலாம் - என இன்னும் பல தொடர்ந்து கூறினான்.

மறையவன் கூறியனவற்றைக் கேட்டதும், சமண சமயச் சார்புடைய கவுந்தி, திருமால் சார்பாகச் சொல்லிய மறையவன் கூற்றை மறுத்துரைத்தாள். அதாவது, நீ சொல்கிறபடியெல்லாம் செய்ய வேண்டுவது இல்லை. நீ கூறும் ஐந்திர வியாகரணத்தை எங்கள் அருகன் நூலைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். பழம், பிறப்பை இப்பிறவி கொண்டே உய்த்துணர்ந்து அறியலாம். வாய்மையுடன் ஒழுகின், இட்டசித்தியில் மூழ்காமலேயே எதிர்பார்ப்பதை அடையலாம் என மறையவனுக்கு விடையளித்து அவன் போக விடையளித்தார்.

இளங்கோவடிகள், மாங்காட்டு மறையவனை வைணவ விளம்பரம் செய்ய வைத்து, பின்பு, கவுந்தியடிகளைக் கொண்டு அதைத் தட்டிக் கழிக்கச் செய்து சமணம் பரப்ப இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.

3. கோசிகன்

கோசிகன் என்பவன் ஓர் அந்தணன். கோசிக குலத்தில் பிறந்ததால் இவன் கெளசிகன் என்றும் பெயர் வழங்கப்படுகிறான். சிலப்பதிகாரத்தில் கெளசிகனின் பங்கு (Role) சிறியதே. அஞ்சல்காரர் (Post man) வேலையே இவன் செய்திருக்கின்றான். மாதவி கோவலனிடம் சேர்க்குமாறு தந்த மடலை இவன் எடுத்துக்கொண்டு காட்டு வழியில் சென்று கோவலனைத் தேடிக் காண முயன்று கொண்டிருந்தான்.

கோவலன் வழியில் ஒருநாள் காலைக் கடனைக் கழிக்க ஒரு நீர்நிலையின் பாங்கர் சென்றிருந்தான். கெளசிகன் வழிநடந்த களைப்பால் கோவலன் அந்தப் பக்கம் அருகில் இருப்பதை அறியாமல், வாடிய ஒரு மாதவிக் கொடியைக் கண்டு இரங்கி ஏதோ சொன்னான். மாதவி என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டதும் கோவலன் அவனை அணுகி விவரம் கேட்டான். கெளசிகன் பின்வருமாறு நிகழ்ந்தது கூறலானான்:

கோவலனே! நீ ஊரைவிட்டுப் பிரிந்ததும், உன் தாய் தந்தையர் சொல்லொணத் துயர் உழந்தனர். உன்னைத் தேடிக் கண்டுபிடிக்கப் பல இடங்கட்கும் ஆட்களை அனுப்பினர். பயன் யாதும் இல்லை. இந்தச் செய்தியை வயந்தமாலை வாயிலாகக் கேள்விப்பட்ட மாதவி மிகவும் வருந்திப் பாயும் படுக்கையுமாய்க் கிடந்தாள். அவளைப் பார்க்கச் சென்ற என்னிடம் இந்த மடலை எழுதித் தந்து, நின்னைத் தேடிக் கண்டு நின்னிடம் சேர்க்கச் சொன்னாள் - என்று கூறி மடலைக் கோவலன் கையில் கொடுத்தான். இதுதான் கெளசிகனின் பங்கு. இவன் மாதவிக் குடும்பத்தின் உதவியாளனாகக் காணப்படுகிறான்.

இந்தப் பகுதியில் உள்ள காப்பியச் சுவையாவது: குருக்கத்தி என்னும் (தாவரக்) கொடிக்கு மாதவி என்ற பெயரும் உண்டு. அந்தப் பெயர்தான் மாதவிக்கு வைக்கப் பெற்றிருந்தது. சில பெண்கட்குச் செந்தாமரை, தில்லை, துளசி, அல்லி, குமுதம், செங்கழுநீர் (செங்கேணி), மருக்கொழுந்து, (வடமொழிப் பெயராகிய) அம்புஜம், பங்கஜம், சரோஜா, வனஜா, கமலம், மல்லிகா (மல்லிகை) முதலிய மலர்ப் பெயர்கள் இடப்பட்டிருப்பதை அறியலாம். மற்றும் சில பெண்கட்கு மாலதி, சண்பகம், காஞ்சனா என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இம்மூன்று பெயர்களும் ஒரே மலருக்கு உரியன. சிலருக்குப் புஷ்பா எனப் பூவின் வடமொழிப் பெயர் வைக்கப்பட்டிருப்பதை அறியலாம். இந்தக் காலத்தில் சில பெண்கட்கு 'மலர்' என்னும் தனித் தமிழ்ப் பெயர் இடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே, குருக்கத்தியின் மற்றொரு பெயராகிய மாதவி என்னும் பெயர் மாதவிக்கு அக்காலத்தில் வைக்கப்பட்டிருந்தது.

கெளசிகன் மாதவிக் கொடியின் வாடிய நிலையைக் கண்டு, 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடிய' வடலூர் இராமலிங்க வள்ளலாரைப் போல் மனம் வாடி உரைத்துள்ளான். அம்மாதவி என்ற பெயரைக் கேட்டதும் கோவலன் கெளசிகனோடு தொடர்பு கொள்ளலானான்.

கெளசிகன் குருக்கத்தியின் வாட்டத்தைக் கண்டு மாதவி என்னும் சொல்லால் அதைக் குறிப்பிட்டான் என்பது உண்மையா யிருக்குமா? இது ஐயத்திற்கு உரியது. காப்பியத்திற்கு மெருகு ஊட்டிச் சுவையுண்டாக்குவதற்காக, இளங்கோவடிகள்தான், இருபொருள் அமையச்செய்து விளையாடியுள்ளார் என்று சொல்லக் கூடாதா?

4. மாடலன்

சிலப்பதிகாரத்தின் இடையிலே, அதாவது - முதல் காண்டமாகிய புகார்க்காண்டம் கடந்ததும் இரண்டாம் காண்டமாகிய மதுரைக் காண்டத்தின் இடையிலே இடம்பெற்று, மூன்றாவது காண்டமாகிய வஞ்சிக் காண்டத்தின் இறுதிவரை நடைபோடுபவன் மாடலன் என்பவன்.

இவன் மறை வல்ல அந்தணர்க்கு முதல்வன்; புகாரின் அருகில் உள்ள தலைச்செங்காடு என்னும் ஊரினன்; தெற்கே சென்று குமரி ஆற்றிலே நீராடி, பொதிய மலையை வலம் வந்து, மதுரை கண்டு, கோவலன் - கண்ணகியுடன் கவுந்தியிருக்கும் சோலைப் பள்ளியில் இளைப்பாற வந்து அமர்ந்தான். கோவலன் மாடலனை வணங்கி அவனது வருகை குறித்து வினவியறிந்தான்.

இந்த இடத்திலே, மாடலன் கோவலனை, கருணை மறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என்றெல்லாம் அவனுடைய பெருமைக்கு உரிய வரலாறுகளை எடுத்துக் கூறிப் புகழ்ந்து பாராட்டினான். கோவலனைச் சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவனாக (Hero) ஆக்கிய பெருமை மாடலனுக்கே உரியது.

கோவலா! நீ இப்பிறவியில் யான் அறிந்த வரைக்கும் நன்மையே செய்துள்ளாய் - ஆனால் நீ கண்ணகியுடன் இவ்வாறு வந்து துயர் உறுவது பழைய தி ஊழ்ப் பயனே என்று கூறிக் கோவலனுக்கு ஆறுதல் கூறிய உயர்ந்த உள்ளத்தன் மாடலன். இந்த மாடலன் புகாரின் அருகில் உள்ள தலைச்செங்காடு என்னும் ஊரினன் ஆதலின், கோவலன் செய்த நல்வினைகளை நன்கு அறிந்திருந்தான். கோவலன் பெற்றோரையும் கண்ணகியையும் பிரிந்து மாதவி வயப்பட்டுச் செல்வத்தை இழந்தவன் என்பதும் மாடலனுக்குத் தெரிந்துதான் இருக்கும். ஆனால், அதை இப்போது நினைவுபடுத்திக் கோவலனது உள்ளத்தை உடைக்க விரும்பாமையால், நீ நல்வினையே செய்தாய் எனக் கூறி ஆறுதல் செய்தான். அத்தகைய அறிவாளி மாடலன்; அதாவது - சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படுபவன்: பேசத் தெரிந்தவன். இவன் தனது கூற்றுக்கு உறுதுணையாக இடையிடையே ஊழ்வினையைப் பயன்படுத்திக் கொள்பவன். ஊழ்வினை நம்பிக்கையால் ஒரு சிறந்த பயன் இருக்கிறதெனில், அது, ஆறுதல் உஆரக்குகிற அமைதி செய்கின்ற இதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்?

மாடலனும் கவுந்தியும் கோவலனை நோக்கி, மதுரையின் புறஞ்சேரியில் இனியும் இருத்தல் தகாது; மதுரை நகருக்குள் சென்று உங்கள் இனத்தவர் இருக்கும் இடம் சேரின், மாசாத்துவான் மகன் எனப் பெரிதும் வரவேற்பர் என அறிவுரை கூறினர். இவ்வாறு உய்வழி கூறும் உயரியோ னாகவும் மாடலன் விளங்கினான்.

மாடலன் ஆறுதல் உரையும் அறிவுரையும் கூறுவது அல்லாமல், பழிக்கு அஞ்சுபவனாகவும் பொறுப்புணர்ச்சி உடையவனாகவும் திகழ்ந்துள்ளான். கோவலனும் கண்ணகியும் இறந்த செய்தியை மாடலன் அவ்விருவரின் தாயர்கட்கு அறிவித்தான். அஃதறிந்த தாயர் இருவரும் உள்ளம் உடைந்து உயிர் துறந்தனரல்லவா? தாயர் இருவரும் நாம் அறிவித்ததனால்தானே உயிர் துறந்தனர் என்று மாடலன் மாழ்கிப் பழிக்கு அஞ்சி, அவர்களின் இறப்புக்குத் தான் பொறுப்பேற்று, அப்பழியைத் துடைப்பதற்காக வடபுலம் போந்து கங்கையில் நீராடி அமைதி பெற்றான்.

மாடலன் கங்கையில் நீராடியபின், அங்கே, வடவரை வென்று, கங்கையின் தென்கரையில் பாசறையில் தங்கியிருந்த சேரன் செங்குட்டுவனைக் கண்டு வாழ்த்திப் பின் மதுரையில் நிகழ்ந்தனவற்றையும் மற்றும் சில செய்திகளையும் கூறலானான்:

மாதவியின் கானல்வரிப் பாட்டு கன கவிசயரின் முடித்தலையை நெரித்தது. கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியுடன் மதுரை போந்து கொலைக் குற்றம் சாற்றப்பட்டு உயிர் துறந்தான். கண்ணகி உமது சேரநாட்டு எல்லையில் வந்து உயிர் நீத்தாள். இச்செய்தியறிந்ததும் கண்ணகிக்கு அடைக்கலம் ஈந்த மாதரி தீக்குளித்து இறந்தாள். இச்செய்தியை யான் புகார் அடைந்து சொன்னேன். கேட்ட மாசாத்துவான் புத்தத் துறவியானான்: மாநாய்கன் ஆசீவகர் பள்ளியடைந்து துறவு மேற்கொண்டான். கோவலன் - கண்ணகி ஆகியோரின் தாய்மார்கள் உள்ளம் உடைந்து உயிர் துறந்தனர். மாதவியும் மணிமேகலையும் துறவு பூண்டனர். பாண்டிய நாட்டில் நெடுஞ்செழியனும் கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தனர். நெடுஞ்செழியனின் இளவல் வெற்றிவேல் செழியன் பொற்கொல்லர் ஆயிரவரைப் பலி கொடுத்து மதுரையை ஆள்கிறான். புகார் நகரில் சோழ மன்னன் நலமாயுள்ளான் - என்றெல்லாம் மாடலன் தெரிவித்தான்.

மாடலன் கூறியவற்றைக் கேட்டதும், செங்குட்டுவன் தன் உடம்பின் நிறையாகிய ஐம்பது தூலாம் பொன்னை மாடலனுக்குத் தானமாக அளித்தான்.

தனது வடபுல வெற்றியைப் பாண்டியனும் சோழனும் தாழ்த்திப் பேசியதாக அறிந்த செங்குட்டுவன் வெகுண்டு எழுந்தபோது மாடலன் அவனை அமைதியுறச் செய்தான். செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை முதலியவற்றைச் சேரனுக்கு அறிவித்து இனிப் போர் புரியாமல், நன்னெறி செலுத்தும் வேள்வி புரியத் தூண்டினான்.

தெய்வம் ஏறிய தேவந்தி தந்த நீரை மாடலன் சிறுமியர் மூவரின் மீது தெளித்தான். அவர்களின் பழம் பிறப்பு அறியப்பட்டது. இருவர் கோவலனின் தாயும் கண்ணகியின் தாயுமாவர்; மூன்றாமவள் மாதரியாவாள். இம்மூவரின் விவரங்களை மாடலன் சேரனுக்கு அறிவித்தான். பின்னர்ச் சேரன் மாடலனுடன் வேள்விச் சாலையை அடைந்தான்.

மாடலன் ஆற்றிய பல்வேறு பணிகளை எண்ணுங்கால், சேக்சுபியர் As you like it ('நீ விரும்பிய வண்ணமே') என்னும் நாடகத்தில் அறிவித்துள்ள ஒரு கருத்து நினைவைத் தூண்டுகிறது. அது:

"All the World’s a stage
And All men and women are merely players
They have their exits and their entrances
One man in his time plays many parts"

இந்த உலகம் முழுவதும் ஒரு நாடக மேடை அனைத்து ஆண்களும், பெண்களும் வெற்று (வெறும்) நடிகர்கள். அவர்கள் மேடையினின்றும் போதலும்(சாதலும்) மேடைக்கு வருதலும் (பிறத்தலும்) உடையவர்கள். ஒருவன் அவனது வாழ்நாளில் பல பாகங்களில் நடிக்கிறான் - என்பது இதன் கருத்து.

ஒருவன் பல பாகங்களில் நடிக்கிறான் என்பதற்கு ஏற்ப, மாடலன் சிலம்பில் பல்வேறு பணிகள் புரிந்துள்ளான்.

கதைச் செயல்களின் இணைப்பிற்கும் கட்டுக்கோப்பிற்கும் இளங்கோவுக்கு இப்படி ஒருவன் தேவைப்பட்டான். அதற்கு இளங்கோ மாடலனைத் தக்க முறையில் படைத்துப் பயன்படுத்திக் கொண்டார்.

ஒருவர் தம் சொற்பொழிவில், இளங்கோ ஆரியத்திற்கு (பார்ப்பனர்கட்கு) நிரம்பத் தம் நூலில் இடம் கொடுத்துள்ளார் என்று சாடினார் - என்பது இந்தத் தலைப்பின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பார்ப்பன உறுப்பினர்கள் உண்மையிலேயே கண்ணகி வரலாற்றில் இடம் பெற்றவர்கள் என்று கொள்ளினும் - அல்லது - இவர்கள் இளங்கோவால் இந்த முறையில் படைக்கப்பட்டவர்கள் என்று கொள்ளினும், சிலம்பில் வரும் இந்த விதமான கதைச் செயல்கட்குப் பொருத்தமானவர்கள் பார்ப்பனர்களே என்பதை நினைவில் கொள்ளின் எல்லாம் சரியாகிவிடும்.

மற்றும், சிலம்புக் கதையோடு தொடர்பில்லாத பராசரன், வார்த்திகன், தக்கிணாமூர்த்தி, கார்த்திகை என்பவரின் வரலாறு நூலிலே இழையோடுகிறது. பராசரன் என்னும் சோழநாட்டுப் பார்ப்பான் சேரனையடைந்து வேண்டிப் பெரும் பொருள் பரிசாகப் பெற்றான். தான் பெற்ற செல்வத்தைப் பாண்டிய நாட்டில் இருந்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனின் மகனாகிய சிறுவன் தக்கிணாமூர்த்திக்குத் தந்தான். அச்சிறுவனின் ஆரவாரச் செயலைக் கண்டவர்கள், அவனுடைய தந்தை வார்த்திகன் களவாடி வந்து மகனுக்குக் கொடுத்துள்ளான் எனப் பழி கூற, வார்த்திகன் சிறை செய்யப் பட்டான். வார்த்திகன் மனைவி கார்த்திகை மிகவும் வருந்தி வேண்டினாள். பின்னர் உண்மையறிந்த பாண்டியன் அவனைச் சிறைவீடு செய்ததோடு, சிறையிலிருந்த மற்றவரையும் விடுவித்தான். இப்படியொரு கதை பார்ப்பனர் தொடர்பாகச் சிலம்பில் கட்டுரை காதையில் இடம் பெற்றுள்ளது.

இது, பாண்டியரது பெருமையை விளக்குவதற்காக மதுராபதி என்னும் தெய்வத்தால் கண்ணகிக்கு அறிவிக்கப்பட்ட கதையாகும்.