உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்போ சிலம்பு/மாதவியின் மன உறுதி

விக்கிமூலம் இலிருந்து

22. மாதவியின் மன உறுதி

சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி ஆகியோருக்கு அடுத்த இடம் மாதவிக்கு உரியது. நாடகங்களில் முதன்மை உறுப்பினர்கட்குத் (பாத்திரங்கட்குத்) துணை உறுப்பினர்கள் இருப்பர். அதன்படி, சிலம்புக் காப்பியத்தில் மாதவி துணை உறுப்பாக உள்ளாள். ஆனால், கதைப் போக்கின்படிப் பார்த்தால், கோவலன் கண்ணகியோடு இருந்த கால அளவினும், மாதவியுடன் இருந்த கால அளவே மிகுதியாகத் தெரிகிறது. காப்பியத்தின் முற்பகுதியில், கண்ணகி தனது இடத்தை மாதவி பற்றிக் கொள்ளத் தான் துணை உறுப்பினர் போல் ஆகிவிடுகிறாள். நாடகங்களில் கதைத் தலைவர்கட்கு எதிராளிகள் (Villains) இருப்பர். இங்கே, கோவலனுக்குப் பொற்கொல்லன் எதிராளியாயிருந்தா னென்றால், கண்ணகிக்கு மாதவி எதிராளியா யிருந்தாள். மனம்விட்டுச் சொல்லலாம் என்றால், கோவலனின் நல்வாழ்வையும் கெடுத்த எதிராளியாக மாதவி இருந்தாள் என்றும் சொல்லலாம்.

தன் ஆடல் பாடல் அழகு ஆகியவற்றால் கோவலனைக் கவர்ந்து ஈர்த்துக் கொண்டவள் மாதவி. காப்பியத்தில் கலையரசியாக நடைபோடும் அவள், மன்னன் எதிரில் ஆடல் பாடல் நிகழ்த்தித் ‘தலைக்கோல்’ விருதுடன் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் விலைப் பெறுமானம் உடைய பசும்பொன் மாலையும் தட்டிக் கொண்டவள்.

சேற்றில் முளைக்கும் செந்தாமரையைப் போல், இழிதொழில் புரிந்த சித்திராபதி என்னும் பரத்தையின் மகளாகப் பிறந்த மாதவி கோவலன் ஒருவனையே இறுதி வரையும் கணவனாக வரித்துக் கொண்டவள். கோவலன் இறந்தபிறகு, தன் தாய் சித்திராபதியின் விருப்பப்படி பரத்தமைத் தொழிலில் ஈடுபட மறுத்துவிட்டாள்.

ஐந்தாம் அகவையில் தண்டியம் பிடிக்கச் செய்து ஏழாண்டு ஆடல் பாடல் கலைகளிலே பயிற்சி கொடுத்துப் பன்னிரண்டாம் அகவையில் அரசன் முன் ஆடல் செய்வித்த தாய் சித்திராபதியின் கனவுக்குக் கல்லறை கட்டி, இந்த இழிதொழிலே இனிக் கூடாது என்னும் உயர்ந்த கோட்பாட்டைச் சமுதாயத்தில் நிலைநாட்டப் பாடுபட்டவள் மாதவி.

ஒப்புயர்வு அற்ற தன் ஆடலாலும் பாடலாலும் மேனி மினுமினுப்பாலும் கோவலனுக்கு ஊடலும் கூடலும் தந்து உள்ளம் உவக்கச் செய்து வந்த மாதவி, இந்திர விழாவில் ஆடலாலும் பாடலாலும் பொது மக்களை மெய்ம்மறக்கச் செய்ததைப் பொறுக்க முடியாத கோவலனால் முதல் முதலாக நீறு பூத்த நெருப்புப்போல் உள்ளத்துள் வெறுப்பு தோன்றச் செய்தாள்.

ஒரு நாள் கடற்கரைச் சோலையிலே கோவலன் யாழ் மீட்டி, மற்றொருத்தி மீது நாட்டம் உடையவன் போன்ற குறிப்புப் பொருளமைத்து வரிப்பாட்டு இசைத்தான். அவன் அவ்வாறு பாடியது விளையாட்டாகத்தான். அதே போல் மாதவியும் மற்றொருவன்மேல் மனம் கொண்டவள் போன்ற குறிப்புப் பொருளமைத்து விளையாட்டாய் வரிப் பாட்டு இசைத்தாள். இதை உண்மை என எண்ணிய கோவலன், இவள் பரத்தை - பரத்தைதானே என்று இழிவாய்த் தப்புக் கணக்கு செய்து மாதவியைப் பிரிந்து விட்டான்.

அன்றே மாதவி வயந்த மாலை என்னும் தோழி வாயிலாகக் கோவலனை வருமாறு வேண்டி மடல் கொடுத் தனுப்பினாள். கோவலன் மடலை வாங்க மறுத்து மாதவிப் படலத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து, மீண்டும் திறக்க முடியாதபடி மூடு விழா செய்து விட்டான்.

அன்றிரவு கோவலனது பிரிவைப் பொறுக்க முடியாமல் நிலா முற்றத்தில் மாதவி சொல்லொணாத் துயருழந்தாள். அவள் மீட்டிய யாழும் பாடிய இசையும், மாதவிக்கு மறுப்பு தெரிவிப்பனபோல் திரிந்து மயங்கின.

கோவலனைக் காட்டு வழியில் கண்டு தந்து அழைத்து வரும்படிச் செய்யுமாறு கோசிகன் என்னும் அந்தணனிடம் மடல் எழுதிக் கொடுத்தனுப்பினாள். கோவலன் மாதவிக்கு எட்டாக் கனியாகி விட்டான்.

கோவலனிடம் குன்றாத அன்புடைய குலமகள் போலவே ஒழுகி வந்த மாதவி, கோவலனுக்குத் தன்னிடம் பிறந்த செதுக்காத சிற்பமாகிய மணிமேகலை என்னும் மகளையும் பிஞ்சிலே பழுத்த பழமாகத் துறவு பூணச்செய்து தானும் துறவு பூண்டு உண்மைத் துறவுக்குப் பெருமை அளித்தாள்.

மாதவியின் குறைபாடுகள்

மாதவி கோவலனின் அழகிலோ உயரிய பண்புகளிலோ மயங்கி அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. வாணிகம் செய்தே அவனை அடைந்தாள். அதாவது, அரசன் அளித்த ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னின் பெறுமானமுள்ள பசுமணி மாலையை அத்தொகையினை அளித்துப் பெறுபவரே தன்னை அடையலாம் என நடுக்கடைத் தெருவில் விலை பேசச் செய்ய, ஐயோ - பாவம் - அப்பாவி - காமுகனாகிய கோவலன் அத்தொகையளித்து மாலையை வாங்கிய பின்னரே மாதவியை அடைய முடிந்தது.

விலை தந்து பெற்ற மாலையுடனேயே கோவலன் மாதவியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். அதிலிருந்து மாதவியின் மனையிலேயே தங்கிவிட்டான் என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள்; கோவலன் இடையிடையே பொருள் கொண்டுவரத் தங்கள் வணிக நிலையத்திற்கும் கண்ணகியிருக்கும் தங்கள் வீட்டிற்கும் செல்லாமல் மாதவியின் வீட்டிலேயே ஆணியடித்துக் கொண்டு - வேர் பாய்ந்து தங்கி விட்டான் - என்பது இதன் பொருள் இல்லை. இடையிடையே கடைக்கும் வீட்டிற்கும் சென்று, அங்குள்ளார் சொன்ன அறிவுரையை மதிக்காமல் பொருள் கொண்டு வந்தேயிருப்பான். இறுதியாக மாதவியை வெறுத்துக் கண்ணகியை அடைந்தபோது, பொருள் தீர்ந்து விட்டதால் கணவன் வந்திருப்பதாக எண்ணிச் “சிலம்பு உள கொண் மின்” என்று கண்ணகி கூறினாள்.

இதிலிருந்து தெரிவதாவது:- கண்ணகி இதற்கு முன்பே ஒவ்வொரு நகையாகக் கணவனிடம் தந்து இழந்திருக்கிறாள் என்பது விளங்கும். கோவலன் கண்ணகியிடம் வந்ததும், அவளது வாடிய மேனியைக் கண்டு வருந்திக் கூறுவான்; வஞ்சனையுடைய மாய்மாலக்காரியுடன் சேர்ந்து ஆட்ட பாட்டம் செய்து, முன்னோர் தேடி வைத்த மிகப் பெரிய மலையத்தனைச் செல்வத்தையிழந்து, வறுமையால் நாணம் அடைந்துள்ளேன் என்று கூறினான். இதனாலும் கண்ணகியின் நகைகளும் வீட்டுச் செல்வமும் தொலைந்தன என்பது புலனாகும்; (கனாத்திறம் உரைத்த காதை)

“வாடிய மேனி வருத்தம்கண் டியாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்
குலம்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த

இலம்பாடு நாணுத்தரும் எனக்கு என்ன” (68-71)

என்பது பாடல் பகுதி. இந்தச் செல்வம் தொலைந்ததெனில், ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் கொடுத்து பெற்ற பசுமணி மாலையும் தொலைந்திருக்கு மல்லவா?

இவ்வளவு செல்வம் எவ்வாறு தொலைந்தன. பிறர்க்குத் தானம் கொடுத்ததனால் மட்டுமா தொலைந்திருக்கும்? மாதவியோடு ஆரவார வாழ்க்கை நடத்தியதினால்தான் தொலைந்திருக்கக் கூடும். மகள் மணிமேகலைக்குப் பெயர் சூட்டு விழா நடத்தியபோது மாதவியும் கோவலனும் தானமாகப் பொன்மழை பொழிந்தார்களாம். “மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையின் பொழிய” என்பது பாடல் பகுதி. மாதவி மழையாகப் பொழிவதற்கு யார் வீட்டுப் பொன்னாயிருக்க முடியும்? “சலம் புணர் கொள்கைச் சலதியோடு ஆடி” என்பதில் உள்ள சலதி என்பது மாதவியைக் குறிக்காது எனச் சிலர் கூறுகின்றனர். ‘சலதி’ என ஒருமையில் கூறியிருப்பது மாதவியைத் தவிர வேறு யாரைக் குறிக்க முடியும்?

கோவலனின் மனைவி கண்ணகியை விட்டுத் தன்பால் வந்து தங்கியிருப்பது தகாது - கண்ணகி வருந்துவாள் என்பதும், கோவலனின் பெற்றோரும் மற்றோரும் கோவலனது செய்கையால் வருந்துவர் என்பதும் மாதவிக்குத் தெரியாமலா இருக்கும்? மனைவியை விட்டுத் தன்னிடம் வந்து தங்கியிருப்பது தகாது என்று மாதவி எண்ணியிருந்தால், அவன் அவளை விட்டுப் பிரிந்ததும், வயந்த மாலை என்னும் தோழியின் வாயிலாக, கோவலன் தன்னிடம் வரும்படி வேண்டி மடல் எழுதித் தந்து அனுப்பியிருப்பாளா? கோவலன் மடலை மறுத்து, வயந்த மாலையை விரட்டினதும், “மாலை வாரா ராயினும் காலை காண்குவம்” என்று கூறியிருப்பாளா? பின்னரும் கோசிகன் வாயிலாக மடல் அனுப்பியிருப்பாளா?

இதுகாறும் கூறியவற்றால், கோவலன் வணிகத்தைக் கவனித்துப் பொருள் ஈட்டாமைக்கும் கண்ணகியைப் பிரிந்தமைக்கும் ஆரவாரச் செயல்கட்கும் மாதவி காரணமாயிருந்தாள் என்ற குறைபாடு - குற்றச்சாட்டு மாதவிக்கு உரியது என்பது புலப்படும்.

ஆனால், இதை நடுநிலைமையோடு வேறொரு கோணத்திலும் நோக்கவேண்டும். அதாவது:- ஒருவன் மது அருந்திக் கெடுவானானால் அது மதுவின் குற்றமா? ஒருத்தி நஞ்சு உண்டு இறப்பாளானால் அது நஞ்சின் குற்றமா? இல்லை - இல்லவே யில்லை. கெட்டது மது அருந்தியவனின் குற்றம் - மது என்ன செய்யும் இறந்தது நஞ்சு உண்டவளின் குற்றம் - நஞ்சு என்ன செய்யும். இவ்வாறே, மாதவியோடு சேர்ந்து கோவலன் கெட்டு விட்டான் எனில், அது மாதவியின் குற்றமா? இல்லை - கோவலனின் குற்றமே அது. ஆனால், மதுவும் நஞ்சும் தீயனபோல், மாதவியையும் தகாதவள் என்று கூறவேண்டி வரும். கண்ணகியைப் பொறுத்தவரையும் - குடும்பத்தாரைப் பொறுத்தவரையும் - ஏன், கோவலனைப் பொறுத்தவரையுங்கூட மாதவி தகாதவளே.

மாதவியின் நிறை

ஆனால், நாம் மாதவியை இப்படியே தகாதவளாக்கி விட்டுவிட்டு அப்பால் சென்று விடமுடியாது. மாதவியிடம் இருந்த நல்ல இயற்கூறுகளையும் சொல்லித்தான் தீர வேண்டும். அவள் பின்னால் பெற்ற நிறையினால் முன்னால் இழைத்த குறை மறைந்தது.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே
     அவன் கையை எடுத்து
அப்புறம் தன்னில் அசையாமல்
     முன்வைத்து அயல் வளவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப்
     பின்வந்து உறங்கு பவளை
எப்படி நான் நம்புவேன்

     இறைவா கச்சி ஏகம்பனே”

என்னும் பட்டினத்தாரின் பாடலின் படி, பரத்தையர் குலத்தில் பிறவாமல் நல்ல குடியிலேயே பிறந்தும், கைக்குக் கை மாறும் சில கடை மகளிர் இருப்பதுண்டு. இது எங்கோ சிலவேயாகும். நல்ல குடியில் பிறந்த பெண்களுள், ஒருவனை அவன் மனைவியினின்றும் பிரித்துத் தன்பால் ஈர்த்துக்கொண்டு, அவனுடன் இறுதிவரையும் கற்புடைய மனைவியாக ஒழுங்காக இல்லறம் நடத்தும் மகளிரும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்டு.

மாதவியின் நிலை இதனினும் வேறு. காசு பெற்று, உடலை விற்பவர் அல்லர் - உடலைச் சிறிது நேரம் இரவலாகத் தருகின்ற - சிறிது நேரம் வாடகைக்கு விடுகின்ற பரத்தையர் குலத்தினைச் சேர்ந்த சித்திராபதியின் மகளாகிய மாதவி, எப்படியோ தன்னிடம் வந்து அகப்பட்டுக்கொண்ட கோவலனை, அவன் மனைவியிடம் அனுப்பாவிடினும், பிள்ளை பெறும் அளவுக்குக் குடும்பம் நடத்திக் கற்புடைய மங்கையாகவே வாழ்ந்து வந்திருக்கிறாள். விளையாட்டு வினையாதலைப் போல விளையாட்டாகப் பாடிய கானல் வரிப் பாட்டினால் கோவலன் பிரிந்ததும், குலத்தொழிலின் படி வேறு எவரையும் நாடாமல், மீண்டும் அவனுடனேயே இருந்து குடும்பம் நடத்த எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் கை கூடவில்லை. வருந்தினாள் - வருந்தினாள் - வருந்திக் கொண்டேயிருந்தாள். கோவலன் இறந்த செய்தி கேட்டதும் கடுந் துறவியாகி விட்டாள். மழலை மகள் மணிமேகலையையும் அவ்வாறே ஆக்கிவிட்டாள். இதுதான் மாதவிக்கு உரிய பெருஞ்சிறப்பாகும்.

மாதவியின் குலம்

மாதவி பரத்தையர் குலத்தைச் சார்ந்தவள் அல்லள் எனச் சிலரும், அவள் பரத்தையர் குலத்தினளே என வேறு சிலரும் கூறுகின்றனர்.

இந்த இருவகைக் கொள்கையினருள் முதல் கொள்கையினர் தம் கொள்கைக்கு அரணாக முன்னிறுத்தும் சான்றுகள் சில:

“மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடங்தை” (3:4-6)

இந்தப் பாடல் பகுதியில், “பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை” என மாதவி குறிப்பிடப்பட்டுள்ளாள். அதனால், இழி தொழில் செய்யும் பரத்தையர் குலத்தினள் என்று அவளைக் கூறமுடியாது.

மாதவி கோவலனைப் பொருள் கொண்டு வரச் சொல்லவில்லை. கோவலன் வேறுவழியில் பொருளை விரயம் பண்ணியிருப்பான்.

கோவலனை அடைந்த மாதவி இறுதிவரையும் அவனை விட்டுப் பிரியவில்லை.

கோவலனுக்குப் பிள்ளை பெற்று நற்குடி மகளாகவே மாதவி வாழ்ந்திருக்கிறாள்.

அரசனால் சிறப்பிக்கப்பெற்றுத் தலைக்கோல் விருதும் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மதிப்புடைய பசுமணி மாலையும் பெற்றிருக்கிறாள். இழி தொழில் புரிபவளாயிருப்பின் அரசன் மதிப்பானா?

கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்தபின், அவனைத் திரும்ப வருமாறு வேண்டி இருமுறை மடல் அனுப்பியுள்ளாள்.

கோவலன் இறந்த செய்தியைக் கேட்டதும், தலையை மழித்து மொட்டையடித்துக் கொண்டு துறவு பூண்டாள்.

அரசவையிலும் விழாக் காலங்களிலும் ஆடல் பாடல் செய்யும் மாதவி குலம் வேறு - பரத்தையர் குலம் வேறு.

இவ்வாறாகச் சில காரணங்கள் கூறி மாதவியை நல்ல குலத்தவளாக உயர்த்துகின்றனர்.

மாதவி பரத்தையர் குலத்தவள் என்னும் கொள்கையினர் தம் கொள்கைக்கு அரணாக வலியுறுத்து அவை:

‘பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என்பது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்திரன் அவையில் அகத்தியர் முன்னிலையில் உருப்பசி (ஊர்வசி) நடனம் ஆடுகையில், அவளும் இந்திரன் மகனாகிய சயந்தனும் ஒருவர்க்கொருவர் காமக் குறிப்போடு நோக்கிக் கொண்டனராம். அதனால், ஆடல் - பாடல் - இயங்கள் எல்லாம் நெறிதவறித் திரிந்தனவாம். இதனையறிந்த அகத்தியர் முனிவு கொண்டு மண்ணுலகில் சென்று பிறக்கும் படி உருப்பசிக்குக் கெடுமொழி (சாபம்) இட்டாராம். உருப்பசி மாதவி என்னும் பெயருடன் மண்ணுலகில் வந்து பிறந்தாளாம். அந்த மாதவியின் மரபில் இந்த மாதவி வந்தவளாம். அதனால் தான், ‘பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என்று இளங்கோ மாதவியைக் குறிப்பிட்டுள்ளாராம். இந்தப் புராணக் கதையை நம்ப முடியுமா? தெருக் கூத்துக் கதையின் படி நோக்கின் மாதவியின் நிலை நன்கு புரியும்.

மாதவியாக வந்து பிறந்த உருப்பசியின் தராதரம் யோக்கியதை என்ன? இந்திரன் அவையில் நடனம் ஆடியபோது, தன்னைப் பார்த்துக் கண்ணடித்த சயந்தனை நோக்கிப் பதிலுக்குக் கண்ணடித்தவள் தானே? விசுவாமித்திரர் போன்றோரின் தவத்தைக் கலைத்துக் காம வலையில் சிக்க வைக்க உருப்பசி, மேனகை போன்றோர் இந்திரனால் அனுப்பப்பட்டவர்கள்தாமே? இதனால், உருப்பசியும் மேனகையும் பொதுச் சொத்து என்பது புரிய வரும். உருப்பசி மாதவியாகப் பிறந்த காலத்தில் அந்தக் குடும்பம் நன்றாயிருந்திருக்கலாம். பின்னர்ச் சித்திராபதி காலத்தில் இழிதொழிலில் இறங்கியிருக்கலாம். இதற்குரிய அகச்சான்று, இளங்கோவுக்குக் கண்ணகி வரலாறு கூறிய சாத்தனார் இயற்றிய மணிமேகலை என்னும் காப்பியத்தில் உள்ளது. அப்படியிருந்தும், இளங்கோவடிகள் ‘பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என்று கூறியிருப்பது வியப்பாயுள்ளது. இனி மணிமேகலையில் சென்று பார்க்கலாம்:

சித்திராபதி ஆடல் பாடலுக்காக மாதவியையும் மணிமேகலையையும் அழைத்து வரும்படி மாதவியின் தோழியாகிய வயந்த மாலையை அனுப்பினாள். வயந்தமாலை மாதவியிடம் சென்று வந்த காரணத்தைக் கூறியதும் மாதவி சொல்கிறாள்: என் மகள் மணிமேகலை மாபெரும் பத்தினி. அவள் தவம் மேற்கொள்வதன்றிக் குலத்தொழிலாகிய பொருந்தாத தீய காமத்தீநெறியில் ஈடுபடமாட்டாள் என்றாள். பாடல்:

“மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்” (2:55-57)

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் என்பது, சித்திராபதி குலத்தினர் பின்பற்றி வந்த பரத்தமைத் தொழிலாகும்.

மற்றும் ஓரிடம் வருமாறு:- சோழன் மனைவி இராசமாதேவி தன் மகன் உதயகுமரன் இறந்ததும் மணிமேகலையைச் சிறையில் அடைத்து விட்டாள். சிறை வீடு செய்யும்படி வேண்டுவதற்காக மணிமேகலையின் பாட்டி சித்திராபதி இராசமாதேவியை நோக்கிக் கெஞ்சுகிறாள். அரசியாரே! கோவலன் இறந்ததும் என் மகள் மாதவி பரத்தமைத் தொழில் புரியாமல் துறவு பூண்டுவிட்டாள், இது மிகவும் வருத்தமாயிருக்கிறது. என் பேர்த்தி மணிமேகலையை விடுதலை செய்து என்னோடு என் வீட்டிற்கு அனுப்புங்கள் என்று வேண்டினாள்.

“பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்”
(24:19, 20)
...........................................................
“நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை

என்மனைத் தருக என...” (24:75, 76)

மேலுள்ள முதல் இரண்டு அடிகட்கும் உ.வே. சாமிநாத ஐயர் தரும் பொருளாவது:- மாதவி தனது பரத்தமைத் தொழிலை நீத்துத் தவச் சாலையை அடைந்தததும் என்ப தாகும். பூவிலை ஈத்தவன் கோவலன். பூவிலை என்றால் அற்றைப் பரிசம் (அன்றாடம் தரும் பொருள்). இந்த வழக்காறு சிலப்பதிகாரத்திலும் ‘பூவிலை மடந்தையர்’ (5:51) என வந்துள்ளது. புணர்ச்சிக்கு அன்றாடம் பொருள் வாங்குவர் பொது மகளிர் என்பது இதன் பொருள்.

சிலம்பிலும் இப்படி ஒரு செய்தி உள்ளது: சேரன் செங்குட்டுவனிடம் மறையவன் மாடலன், கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகியோரின் நிலை பற்றிக் கூறுகிறான். மாதவி தன் தாய் சித்திராபதியிடம், மணிமேகலையைக் கணிகையர் கோலம் பூணச்செய்து மிக்க துன்பம் தரும் இழி தொழிலான பரத்தமைத் தொழிலில் விடாதே - யான் இழி தொழிலில் ஈடுபடாமல் நல்ல நெறியைப் பின்பற்றுவேன் என்று கூறினாளாம் - என்று மாடலன் கூறினான்.

“மற்றது கேட்டு மாதவி மடங்தை
நற்றாய் தனக்கு, கல்திறம் படர்கேன்
மணிமே கலையை வான்துயர் உறுக்கும்

கணிகையர் கோலம் காணாது ஒழிக” (27:103-106)

என்பது பாடல் பகுதி. மாதவி தான் ‘நல்திறம் படர்கேன்’ எனக் கூறியிருப்பது எண்ணத்தக்கது. அதாவது - குலத் தொழில் செய்யேன் என்றாள். மணிமேகலையையும் அத் தொழிலுக்கு விடக்கூடாதென அறிவுறுத்தியுள்ளாள்.

மணிமேகலையிலிருந்து இன்னும் ஒரு சான்று பார்க்கலாமா? கோவலனின் மறு பதிப்புபோல் மணிமேகலையில் சாதுவன் என்பவன் குறிப்பிடப்பட்டுள்ளான். அவன் வரலாறாவது:- சாதுவன் என்னும் வணிகன் பெருந்தன்மையின்றி, தன் மனைவியாகிய ஆதிரையை விட்டுப் பிரிந்து, கணிகை ஒருத்தியைச் சார்ந்து அவள் தந்த உணவை உண்டு அவளுக்கு நிரம்பப் பொருள் ஈந்ததாலும் வட்டும் சூதும் ஆடியதாலும், தன் செல்வம் முழுவதையும் இழந்துவிடவே, அந்தக் கணிகை, இவன் பொருள் இல்லாதவனாகி விட்டான் என இவனை விரட்டிவிட்டு, பொருளியும் வேறொருவனை மடக்கிக் கொண்டாள் - என்பது அவன் வரலாறு.

“ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்
சாதுவன் என்போன் தகவில னாகி
அணியிழை தன்னை அகன்றனன் போகிக்
கணிகை ஒருத்தி கைத்துஊண் நல்க
வட்டினும் குதினும் வான்பொருள் வழங்கிக்
கெட்ட பொருளின் கிளைகேடு உறுதலின்
பேணிய கணிகையும் பிறர்நலம் காட்டிக்

காணம் இலியெனக் கையுதிர்க் கோடலும்” (16:3-10)

என்பது மணிமேகலைப் பாடல் பகுதி. இதைக் கொண்டு கணிகையர் இயல்பு புரிய வரும். மற்றும், சிலப்பதிகாரத்தில் உள்ள

“சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த

இலம்பாடு நானுத் தரும்” (9:69-71)

“குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன்” (5:200, 201)

“நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
அறியாத் தேயத்து ஆரிடை யுழந்து
சிறுமை யுற்றேன்”

(இது கோவலன் கூற்று - 14:17-20)



“வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழி கோட்டி நெடுங்கை புக்குப்
பொச்சாப் புண்டு பொருள் உரையாளர்
நச்சுக் கொன்றேற்கும் நன்னெறி உண்டோ”

(16:63-66)

என்னும் பகுதிகள் மீண்டும் எண்ணத் தக்கன.

உலகியலில், நல்ல குடும்பத்தில் பிறந்த கணவனும் மனைவியும் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது, கணவன் மனைவியை நோக்கி, நான் ஓர் அழகான பெண்ணைப் பார்த்தேன் அவளோடு காதல் தொடர்பு வைத்துக்கொள்ளப்போகிறேன் என விளையாட்டாகச் சொன்னாலுங்கூட, நானும் ஓர் அழகான ஆண்மகனைப் பார்த்தேன் - அவனோடு காதல் தொடர்பு வைத்துக்கொள்ளப் போகிறேன் என்று மனைவி விளையாட்டாகக் கூடச் சொல்வதில்லை. இன்னும் இந்த ஒருதலை நாகரிகம் நம் நாட்டில் உள்ளது. ஆனால், கானல் வரிப் பாடல்களில் நடந்திருப்பது என்ன? வேறொரு பெண்மேல் காதல் உடையவன் போன்ற குறிப்பமைத்துக் கோவலன் விளையாட்டாகப் பாடினான். மாதவியும் வேறோர் ஆடவன்மேல் காதல் உடையவள் போன்ற குறிப்பமைத்துப் பதிலுக்குப் பாடினாள். ஆனால், நற்குடிப் பெண்ணாயின் இவ்வாறு பாடியிருக்கமாட்டாள். கணிகையர் குலத்தில் பிறந்தவளுக்கு எந்தக் கணக்கும் கிடையாது; எப்படி வேண்டுமானாலும் பாடுவாள். இந்தக் குறிப்பும் ஈண்டு கருதத்தக்கது.

மேலும் ஒரு குறிப்பு சிலப்பதிகாரத்திலேயே உள்ளது. அதாவது - கோவலன் காட்டு வழியில் ஒரு நாள் காலைக் கடன் கழிப்பதற்காக ஒரு நீர் நிலையை அடைந்தான். அங்கே, மாதவி தந்த மடலை எடுத்துக்கொண்டு கோசிகன் என்பவன் கோவலனிடம் கொடுத்தான். மடலைக் கோவலன் படித்துப் பார்த்து மாதவி ‘தன் தீது இலள்’ (13, 94) என்று எண்ணித் தளர்ச்சி நீங்கினானாம். தன் தீது இலள் என்பதற்கு, மாதவி மனமும் உடம்பும் துன்பம் இன்றி நலமாயிருக்கிறாள் என்று பொருள் செய்தல் பொருந்தாது; ஏனெனில், இப்போது துன்பத்துடனேயே மடல் அனுப்பியுள்ளாள். மற்றும் இதற்கு, மாதவிமீது ஒரு குற்றமும் இல்லை என்று பொருள் செய்தலும் பொருந்தாது; ஏனெனில், மாதவியோடு இருந்த காலத்தில் செல்வம் தொலைந்து விட்டது - அவளும் மற்றொருவன் மீது காதல் உடையவளாகப் பாடினாள் - என்ற காரணத்தினால்தானே பிரிந்தான் - எனவே, அவள் குற்றம் உடையவள் என்பதே கோவலன் கருத்தாக இருக்க முடியும். அங்ஙனம் எனில், ‘தன் தீது இலள்’ என்பதற்கு உரிய உண்மைப் பொருள் யாது?

கைக்குக் கை மாறும் கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி, நான் பிரிந்த பிறகும், கானல் வரியில் பாடியபடி வேறொருவனை விரும்பாமல் - நம்மை மறவாது - நம்மை விடாமல் நமக்கு மடல் அனுப்பியதிலிருந்து, அவள் திய செயல் இல்லாது - கற்புடையவளாகவே உள்ளாள் எனத் கோவலன் எண்ணியதாகப் பொருள் கொள்ளல் வேண்டும். இதனாலும், மாதவி கணிகையர் வகுப்பைச் சேர்ந்தவள் என்ற குறிப்பு கிடைக்கலாம்.

மாதவி தன் தீதிலள் என்று கூறிய கோவலன் தொடர்ந்து இது ‘என்தீது’ (13:95) என்று கூறினானாம். அதாவது, மாதவி மற்றொருவன்மேல் காதல் கொண்டிருப்பதாக எண்ணி அவளைப் பிரிந்தது என்னுடைய தவறு என்று கூறினானாம். இவனது மனை வாழ்க்கையை மண் தோண்டிப் புதைத்த மாதவியின்மேல் குற்றம் இல்லை - இது என்னுடைய குற்றமே எனக் கோவலன் எண்ணியது, அவனுடைய பழைய மட்ட அறிவை (பெண் ருசிப் புத்தியைக்) குறிப்பாகக் காட்டுகிறது.

மாதவி கற்புடையவளானாலும், அவள் பிறந்த தாய்க்குலம் - அதாவது - தாய் சித்திராபதியின் குலம் பரத்தையர் குலம் என்பதற்கு மற்றும் ஒரு சான்று மணிமேகலையில் உள்ளது. மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு சித்திராபதி சோழன் மனைவி இராசமாதேவியிடம் வேண்டிய பொழுது, அரச மாதேவி பின்வருமாறு கூறினாள்:

“கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தமை
தலைமையாக் கொண்டகின் தலைமையில் வாழ்க்கை
புலைமையென்று அஞ்சிப் போந்த பூங்கொடி

நின்னொடு போந்து மின்மனைப் புகுதாள்” (24:77-81)

என்பது பாடல் பகுதி. சித்திராபதியே! பெரியோர்கள் துறந்த கள், பொய், காமம் முதலியவற்றைத் தலைமையாகக் கொண்டுள்ள - தலைமையிலலாத - உன் இழிதொழில் வாழ்க்கைக்கு அஞ்சி மணிமேகலை இங்கு வரநேர்ந்தது. இனி உன்னுடன் வாராள் - என்பது கருத்து.

‘தலைமையில் வாழ்க்கை’ என்பதற்கு, கடையான பரத்தமைத் தொழில் என உ. வே. சா. பொருள் எழுதியுள்ளார். இதற்கு ஒப்பச் சிலம்பிலும் ஒரு சான்று உள்ளது. கோவலன் வழியில் ஒருநாள் நீர் அருந்த ஒரு பொய்கையை அடைந்தபோது, மயக்கும் கானுறை தெய்வம் ஒன்று வயந்தமாலை வடிவுடன் வந்து கோவலனிடம் பின்வருமாறு கூறிற்று:

ஐயனே! நீங்கள் என் தலைவி மாதவியைப் பிரிந்ததும், கடிதம் கொண்டு வந்த நான் உங்களைத் திறமையாக அழைத்து வரவில்லை என்று என்மேல் சினந்து வெறுப்படைந்து, மேலோராயினும் நூலோராயினும் தீயது என்று ஒதுக்கும் கணிகையர் வாழ்க்கை இழிந்தது - கடைப்பட்டது - அதனால்தான் கோவலன் நம்மை ஒதுக்கி விட்டான் என்று கூறி என்னையும் துரத்தி விட்டாள். அதனால் உன்னிடம் வந்துள்ளேன் - என்று தெய்வம் கூறி மயக்க முயன்றது. கோவலன் கொற்றவை மந்திரத்தை உருவேற்றி அந்தப் போலி வயந்தமாலை வடிவில் வந்த தெய்வத்தை விரட்டி விட்டான். இங்கே, சிலம்பில், மாதவி கூறியதாகச் சொல்லப்பட்டனவற்றுள் உள்ள

“மேலோ ராயினும் நூலோ ராயினும்
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்”

(11: 180-183)

என்னும் நமக்கு வேண்டிய பாடல் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வோம் ‘கணிகையர் வாழ்க்கை கடையே’ (கடையான பரத்தமைத் தொழில்) என மாதவி சொன்னதாகக் கானுறை தெய்வம் கூறிற்று. கானுறை தெய்வம் கூறியதாகத் தெரிவித்திருப்பவர்யார்? - அவர் இளங்கோவடிகளே. இதனாலும் மாதவியின் குலம் அறிய வரும்.

தேவடியார் என்பது தெய்வத்திற்கு அடியவர் - தெய்வ பூசனைக்கு உரியவர் என்னும் பொருளைக் குறிக்கும். இப்பெயர் நாளடைவில் பரத்தமைத் தொழில் செய்பவரைக் குறிக்கலாயிற்று. எனக்குத் தெரிந்த ஓர் ஊர்க்கோயிலில் பூசனை நடைபெறும்போது நாள் தோறும் தேவடியார் பெண் ஒருவர் வந்து பாடுவார். விழாக் காலங்களில் தேவடியார் பெண் ஒருவர், ஒப்பனை செய்யப் பெற்ற கடவுள் திருமேனி முன் ஒருவகை இசைக் கருவியுடன் நடனம் ஆடுவார். இது இப்போது நடை பெறவில்லை. (ஊர்ப்பெயர் தேவையில்லை.)

அந்த ஊரில் கோயிலில் பாடுபவரும் ஆடுபவரும் இருக்கும் தெருவிற்குத் தேவடியார் தெரு என்பது பெயர். அங்கே நடந்தது இந்தத் தொழிலே. இப்போது இல்லை. பரத்தமைத் தொழில் செய்து வந்த குடும்பங்களுள் பெரும்பாலான குடும்பத்தினர், இப்போது திருந்தி நல்ல கற்புடைய குடும்பத்தினராக மாறியுள்ளனர். மாதவியின் மாற்றமும் இது போன்றதே.

யான் (சு.ச.) ‘தேடக் கிடைக்காத செல்வம்’ என்னும் பெயரில் ஒரு கதை எழுதினேன். அது அச்சிட்டு வெளி வந்துள்ளது. கதைச் சுருக்கம்:- சித்திராதேவி என்னும் பரத்தை தன் மகள் கோதையைப் பரத்தமைத் தொழிலில் ஈடுபட வற்புறுத்தினாள். கோதை உடன்படவில்லை. தாயின் தொல்லை தாங்க முடியாமையால், முதலில் உடலுறவு கொள்பவரையே கணவராக வரித்துக் கொள்வது என்ற முடிவுடன் ஈடுபட்டாள். கோதையை முதலில் சுவைத்தவர் சேதுநாதன் என்னும் செல்வர். கோதை கருவுற்றாள். கோதையை மணந்து கொள்வதாகச் சொல்லியிருந்த சேதுநாதன் அவளை மணக்காமல் ஏமாற்றி விட்டார். கோதைக்குக் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் கலா. மீண்டும் பரத்தமைத் தொழில் செய்யுமாறு கோதையைத் தாய் வற்புறுத்தினாள். அதற்கு உடன்படாத கோதை, குழந்தை கலாவை விட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். சித்திராதேவி கலாவை அருமை பெருமையுடன் வளர்த்து வந்தாள். கலா பெரியவள் ஆனதும், பரத்தமைத் தொழிலில் ஈடுபடுத்தப் பாட்டி எவ்வளவோ முயன்றாள் - இறுதியாகக் கலா ஈடுபடாமல் ஒருவரை மணஞ்செய்து கொண்டு கற்புடைய பெண்ணாக மனையறம் நடத்தினாள்.

இது யான் எழுதிய கதையின் சுருக்கம். எனது கதையில் வரும் கோதையாகவும் கலாவாகவும் மாதவி நடந்து கொண்டாள். எனவே, மாதவிமேல் குற்றம் இல்லையெனினும், அவள் குலம் பரத்தமைக் குலமே.

மாதவி கடுமையாகத் துறவு பூண்டதற்கு முதன்மையான காரணமாகக் கோவலனும் கண்ணகியும் வேறு சிலரும் முடிவுற்றமை இருக்கலாம். நம்மால்தானே அவர்களின் குடும்ப வாழ்க்கை கெட்டது - வழி நடந்து கடந்து இடர்ப்பட்டு மதுரை அடைந்தனர் - அங்கே நிகழ்ந்த செயலால், கோவலன், பாண்டியன், பாண்டியன்தேவி, கண்ணகி, பொற்கொல்லர் பலர், கோவலன் தாய், கண்ணகியின் தாய் ஆகியோர் இறந்தனர் - மதுரை எரியுண்டது. இவற்றிற்கெல்லாம் நாம்தானே காரணம் என்று மாதவி ஆழ உணர்ந்து எண்ணியதால் கடுமையாகத் துறவு பூண்டாள் - தன் மகளையும் இழிதொழிலில் ஈடுபடுத்தாமல் இளமையிலேயே துறவு பூணச் செய்தாள்.

மற்றும், கோவலன் இறந்த பின்னர், கணிகையர் குலத்தவளாகிய மாதவி, தரக்குறைவான ஆடவர் சிலரின் கழுகுக் கண்களிலிருந்து தப்புவதற்கு உதவும் படைக்கலமுமாகும் அவள் கொண்ட துறவு. அவளது மன உறுதி மெச்சத்தக்கது.

மாதவியின் மதம்

இந்தக் காலத்தில் உறவினர்கட்குள்ளேயே, ஒரு குடும்பத்தினர் சைவராகவும் மற்றொரு குடும்பத்தினர் வைணவராகவும் இருக்கக் காண்கிறோம். உறவினர்கட்குள்ளேயே இப்படியெனில், ஒரு குலத்தாருக்குள்ளேயே இப்படி இருப்பது வியப்பில்லை. வேளாளராகிய நம்மாழ்வார் வைணவர்; வேளாளராகிய நாவுக்கரசர் சைவர். இங்ஙனமெனில், வேறு வேறு குலத்தாரிடையே சமய வேறுபாடு இருப்பதும் வியப்பில்லை, சமணமும் புத்தமும் பேரரசு செலுத்திய அந்தக்காலத்தில், உறவினர்கட்குள்ளேயோ - ஒரு குலத்தாருக்குள்ளேயோ - வெவ்வேறு குலத்தாருக்குள்ளேயே சமணமும் புத்தமும் தனித்தனியாகப் பின்பற்றப்பட்டன. கோவலனும் கண்ணகியும் சமணத் துறவி கவுந்தியுடன் சென்று, சமணச் சாரணர்களையெல்லாம் வழிபட்டிருக்கின்றனர் . சிலம்பில் இது. மணிமேகலையிலோ, மாதவியும் மணிமேகலையும் புத்தத்தைச் சார்ந்த துறவிகளாகி, புத்தமத ஆசானாகிய அறவணரிடம் அறவுரை கேட்டதாகப் பரக்க வெளிப்படையாய்ப் பேசப்பட்டுள்ளது. எனவே, மாதவி பின்பற்றிய மதம் புத்தம் என்பது போதரும்.