சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/அசோக புரத்தில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
22. அசோக புரத்தில்


காஞ்சி மாநகரத்திலிருந்து ஏழு காததூரத்தில், தில்லைப்பதிக்குப் போகும் மார்க்கத்தில், அசோகபுரம் என்னும் ஊர் இருந்தது. இந்த ஊரின் மத்தியில் பரத கண்டத்தை ஒரு குடை நிழலில் ஆண்ட சக்கரவர்த்திகளுக்குள்ளே ஒப்புயர்வற்ற தர்ம சக்கரவர்த்தியான அசோகவர்த்தனர் தேசமெங்கும் நிலை நாட்டிய ஸ்தம்பங்களில் ஒன்று கம்பீரமாய் நின்றது. ஒரு காலத்தில் இந்த அசோக ஸ்தம்பத்தைச் சுற்றியிருந்த புத்த விஹாரங்களில் ஓராயிரம் புத்த பிக்ஷுக்கள் வாசம் செய்தார்கள். புத்த மதத்தைச் சேர்ந்த கிரகஸ்தர்கள் வாழ்ந்த ஆயிரக்கணக்கான வீடுகளும் இருந்தன. மாலை நேரத்தில் புத்த சைத்தியங்களில் பகவான் புத்தருக்கு ஆராதனை நடக்கும்போது தூபங்களிலிருந்து எழும் நறுமணப் புகையானது ஊரெல்லாம் கவிந்திருக்கும். நூற்றுக்கணக்கான பூஜை மணிகள் கணகணவென்று ஒலித்துக்கொண்டிருக்கும். புத்தரின் சந்நிதியில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும். பிக்ஷுக்களும், கிரகஸ்தர்களும் கையில் புஷ்பம் நிறைந்த தட்டுக்களை ஏந்திக்கொண்டு பத்தி பத்தியாகச் சைத்தியங்களுக்குப் போய்க்கொண்டிருப்பார்கள்.

அத்தகைய அசோகபுரமானது இப்போது பாழடைந்து நிர்மானுஷ்யமாய்க் கிடந்தது. சைத்தியமும் விஹாரமும் சேர்ந்தமைந்த ஒரே ஒரு கட்டிடத்திலே மட்டும் ஒரு சிறு தீபத்தின் ஒளி காணப்பட்டது. மற்றக் கட்டிடங்கள் இடிந்து தகர்ந்து பாழாய்க் கிடந்தன. இடியாத கட்டிடங்களில் இருள் சூழ்ந்திருந்தது. தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அசோக சக்கரவர்த்தியால் நிலைநாட்டப்பட்ட தர்மபோதனை ஸ்தம்பம் மாத்திரம் தாவள்யமான சந்திரிகையில், "தர்மத்துக்கு என்றும் அழிவில்லை" என்பதை ஸ்தாபித்துக் கொண்டு தலைதூக்கி நின்றது. இத்தகைய அசோக புரத்துக்கு இருட்டி இரண்டு நாழிகைக்குப் பிறகு ஆயனரும் சிவகாமியும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் அசோகருடைய ஸ்தம்பத்தின் அருகில் வந்த போது ஆயனர் வானை நோக்கி நெடிதோங்கி நின்ற அந்த ஸ்தம்பத்தை அண்ணாந்து நிலா வெளிச்சத்தில் பார்த்தார். அதுவரை அவர்களுக்குள் நிலவிய மௌனத்தைக் கலைத்துக் கொண்டு, "ஆஹா! அசோக சக்கரவர்த்தி எத்தகைய சர்வோத்தமர்! உலகத்திலே தோன்றும் அரசர்கள், சக்கரவர்த்திகள் எல்லாம் அசோகரைப் போன்றவர்களாயிருந்தால், இந்தப் பூவுலகம் எவ்வளவு ஆனந்தமயமாயிருக்கும்? யுத்தம் என்னத்திற்கு? பகைமை என்னத்திற்கு? ஒருவருடைய இரத்தத்தை ஒருவர் சிந்துவது என்னத்திற்கு? பூவுலக மாந்தர்கள் எல்லாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்து கொண்டு அஹிம்சையை மேற்கொண்டு ஆனந்தமாய் வாழலாகாதா?" என்றார்.

அப்போது சிவகாமி குறுக்கிட்டு, "அப்பா! இதென்ன! சற்று முன்னாலேதான் உங்களுக்கும் கத்தி எடுத்துக்கொண்டு யுத்தம் செய்ய ஆசை உண்டாவதாய்ச் சொன்னீர்கள். இப்போது அன்பு, அஹிம்சை, ஆனந்தம் என்கிறீர்களே. உங்களுடைய மனது இப்படிச் சஞ்சலம் அடைந்து நான் பார்த்ததேயில்லை!" என்றாள்.

"உண்மைதான், சிவகாமி! என் மனது இப்போதெல்லாம் ஒரு நிலையில் இல்லை. புத்த பகவான் இந்த உலகத்தில் அன்பின் ஆட்சியை நிலைநாட்டப் பார்த்தாரே? அவருடைய பிரயத்தனம் ஏன் வீணாகப் போயிற்று என்பதை நினைத்து என் மனம் சஞ்சலப்படுகிறது" என்றார் ஆயனர். பிக்ஷு அப்போது வாய் திறந்து, ஆயனரே! புத்த பகவானுடைய போதனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனித குலத்துக்கு இன்னும் ஏற்படவில்லை! அதற்கு என்ன செய்வது?" என்றார்.

யாரும் எதிர்பாராதபடி குண்டோதரன் சம்பாஷணையில் கலந்து கொண்டு, "மனித குலம் என்று பொதுப்படையாகச் சொன்னால் என்ன பிரயோசனம், அடிகளே? பிராணிகளிலே புலியும் இருக்கிறது; பசுவும் இருக்கிறது. ஜந்துக்களிலே பாம்பும் இருக்கிறது; அணிலும் இருக்கிறது. அது போலவே மனிதர்களுக்குள்ளும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது. மௌரிய வம்சத்து அசோகவர்த்தனரைப் போலவேதான் நமது மகேந்திர பல்லவரும் தம் ராஜ்யத்தில் அன்பு மதத்தை ஸ்தாபிக்க முயன்றார். யுத்தம் என்பதே வேண்டாம் என்று நினைத்தார். அதைக் கெடுப்பதற்கு ஒரு புலிகேசியும், ஒரு துர்விநீதனும், ஒரு பாண்டியனும் புறப்பட்டு வந்தால் மகேந்திர பல்லவர் என்ன செய்வார்? பூலோகத்தில் பாம்பு இருக்கும் வரையில் கீரிப்பிள்ளையும் இருக்க வேண்டியதுதான். கீரிப்பிள்ளை இல்லாவிட்டால், மனிதனாவது தடியை எடுத்துப் பாம்பை அடித்துத்தானே தீர வேண்டும்?" என்றான்.

"அடே அப்பா நமது குண்டோதரன் இவ்வளவு வாசாலகன் என்று எனக்குத் தெரியவே தெரியாதே!" என்றார் ஆயனர். புத்த பிக்ஷுவோ அருவருப்புடனும் ஆத்திரத்துடனும் அவனை நோக்கினார். சிவகாமி, "குண்டோதரன் சொல்வது நியாயம், அப்பா! உலகத்தில் பொல்லாதவர்கள் இருக்கும் வரையில் அவர்களை அடக்கக்கூடிய புருஷர்களும் வேண்டும் அல்லவா?" என்றாள்.

"ஆம் சிவகாமி, ஆமாம்! அது மட்டுமல்ல; உலகத்தில் எல்லாம் அன்புமயமாய்ப் போய்விட்டால், வீரம் என்பதே இல்லாமற் போய்விடும். வீரம் இல்லாத உலகம் என்ன உலகம்? அப்புறம் கதை ஏது, காவியம் ஏது, கலைதான் ஏது?" என்றார் ஆயனர்.

குண்டோதரன், "குருவே! நான் ஒன்று சொல்லட்டுமா? இந்த அசோகர் ஸ்தம்பம் இங்கே வெறும் ஸ்தம்பமாக நின்று கொண்டிருப்பதில் யாருக்கு என்ன பிரயோசனம்? இதிலுள்ள உபதேசத்தைப் படித்து அதைப் பின்பற்றி நடப்பார் யார்? இந்த ஸ்தம்பத்தை என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்லட்டுமா?.." என்று கூறிக்கொண்டே குண்டோதரன் ஸ்தம்பத்தைக் கையினால் தட்ட அது 'டாண்! டாண்!' என்று ஒலி செய்தது. பின்னர், "நல்ல எஃகினால் செய்திருக்கிறது; இதைக் கொல்லன் உலையில் போட்டு உருக்கி, வாள்களாகவும் வேல்களாகவும் செய்யவேண்டும். இந்த ஸ்தம்பத்தை உருக்கினால், குறைந்தபட்சம் பத்தாயிரம் வாள்களும் வேல்களும் செய்யலாம்!" என்றான் குண்டோதரன்.

அசோக ஸ்தம்பத்தினருகில் மேற்கண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருக்கையில் நாகநந்தி சற்று முன்னாலேயே நடந்து சென்று அருகிலே இருந்த புத்த விஹாரத்தை அடைந்தார். அதேசமயம் விஹாரத்துக்குள்ளேயிருந்து வயோதிக பிக்ஷு ஒருவர் கையில் தீபத்துடன் வாசலில் வந்தார். அந்தத் தீபத்தின் வெளிச்சத்தில் விஹாரத்தின் வாசலிலே நின்றுகொண்டு, பிக்ஷு குண்டோதரன் கொண்டு வந்த ஓலையைப் படித்தார். அப்போது அவருடைய முகத்தில் உண்டான மாறுதல்களைத் தீபச் சுடரின் சிவந்த ஒளியில் பார்த்துக் கொண்டிருந்த வயோதிக பிக்ஷுவே பயந்து போனார் என்றால், மற்றவர்கள் பாராததே நல்லதாய்ப் போயிற்று என்று சொல்லவேண்டும்.

நாகநந்தி ஓலையைப் படித்து முடித்ததற்கும் ஆயனர் முதலியோர் விஹாரத்தின் வாசலில் வந்ததற்கும் சரியாயிருந்தது. உடனே அவர் தமது முகத்திலும் குரலிலும் அமைதி வருவித்துக் கொண்டு, மற்றொரு பிக்ஷுவைப் பார்த்து, "சுவாமி! இவர்கள் எல்லாம் ஐந்தாறு தினங்கள் தங்கியிருக்கும்படி நேரிடலாம். அதற்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்துகொடுக்க வேண்டும்" என்று கூறினார். பின்னர் ஆயனரைப் பார்த்துச் சொன்னார்; "ஆயனரே! உம்முடைய சீடனுக்கு உண்மையில் நான் நன்றி செலுத்தவேண்டும். இந்த ஓலையில் மிகவும் முக்கியமான விஷயந்தான் அடங்கியிருக்கிறது. இதைக் கொண்டு வந்தவனை ஏரியிலே தள்ளிவிட்ட போதிலும் ஓலையைக் கொண்டு வந்தானல்லவா? இந்த ஓலையில் அடங்கிய விஷயத்தைக் கவனிப்பதற்காக நான் அவசரமாய்ப் போகவேண்டியிருக்கிறது. திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று நாள் ஆனாலும் ஆகலாம். அதுவரையில் நீங்கள் இங்கேயே சுகமாகத் தங்கி இருங்கள். இந்தப் பிக்ஷு உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார். மேலும் உங்களுக்கு ஒத்தாசையாகக் குண்டோதரனும் வந்து சேர்ந்து விட்டானல்லவா?"

இந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்லும்போது குண்டோதரனுடைய மார்பையே கீறி உள்ளே பார்ப்பது போல் பார்த்த நாகநந்தி மறுகணம் சிவகாமியை நோக்கி, கனிவு ததும்பிய குரலில், "சிவகாமி! உங்களை அழைத்துக் கொண்டு வந்து இப்படி நடுவழியில் விட்டுவிட்டுப் போகிறேனே என்று நினைக்காதே! மிகவும் அவசர காரியமானபடியாலேதான் போகிறேன். சீக்கிரத்தில் திரும்பி வந்து உங்களுடன் சேர்ந்துகொள்வேன்" என்றார்.

அநேகமாக எல்லாப் புத்த விஹாரங்களிலும் உள்ளதுபோல் இந்தப் பாழடைந்த விஹாரத்திலும் நடுவில் புத்தர் சந்நிதி இருந்தது. இரண்டு பக்கத்திலும் பிக்ஷுக்கள் வசிப்பதற்குரிய அறைகள் இருந்தன. ஒரு பக்கத்து அறைகள் ஆயனருடைய குடும்பத்துக்காக ஒழித்துக் கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்களுடைய அறைகளுக்குச் சென்ற பிறகு, இன்னொரு பக்கத்திலிருந்த இருண்ட அறைகளுக்கு நாகநந்தி சென்றார்.