உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/கள்வரோ நீர்?

விக்கிமூலம் இலிருந்து
35. கள்வரோ நீர்?


மறுநாள் மாலை நேரத்தில் மண்டபத்துக் கிராமத்துச் சிவன் கோயில் கண்கொள்ளாக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. கோயிலின் முன் கோபுர வாசலைப் பசுமையான வாழை மரங்களும், மகர தோரணங்களும் திரைச் சீலைகளும் அலங்கரித்தன. உள்ளே அர்த்த மண்டபத்தையும் வெளிக் கோபுரத்தையும் சேர்த்துப் பிராகாரத்தில் விஸ்தாரமான பந்தல் போட்டிருந்தார்கள். பந்தல் முனைகளில் வரிசை வரிசையாகத் தந்த வர்ணமுள்ள இளந்தென்னங் குருத்துத் தோரணங்களும் அவற்றின் இடையிடையே செந்தாமரை மொட்டுக்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

அந்த நாளில் தமிழ்நாட்டில் நீர்வளமுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தாமரைக்குளம் உண்டு. குளத்திலே தண்ணீர் இருப்பதே தெரியாதவண்ணம் தாமரை இலைகளும் மலர்களும் மொட்டுக்களும் நிறைந்திருக்கும். எனவே, கோயில் விக்கிரங்களுக்கு வேறு அபூர்வ புஷ்பங்களைச் சாத்திவிட்டுத் தாமரை மொட்டுக்களையும் மலர்களையும் கோயிலின் அலங்காரத்துக்கு உபயோகப்படுத்துவார்கள். இவ்விதம் அமோகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த கோயிலில் அஸ்தமிப்பதற்கு முன்னால் ஊர் ஜனங்கள் எல்லாரும் வந்து கூடி விட்டார்கள். ஸ்தீரிகள், குழந்தைகள் ஒருவரும் மிச்சமில்லாமல் வந்து அவரவர்களும் போட்டியிட்டு முன்னால் இடம் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்கள். சூரியன் அஸ்தமித்ததும் நூற்றுக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஆலயம் ஒளிமயமாக விளங்கிற்று. அதே சமயத்தில் சிவகாமிதேவியின் திவ்ய நடனத்தைப் பார்ப்பதற்காகவே விஜயம் செய்கிறவனைப்போல் பூரண சந்திரனும் உதயமானான்.

ஆயனரும் சிவகாமியும் கோயிலின் கோபுர வாசலுக்குள்ளே பிரவேசித்ததும் கூட்டத்தில் கலகலப்பு உண்டாயிற்று. பந்தலுக்குத் தென்புறத்தில் அமைந்திருந்த அரங்க மேடையிலே வந்து சிவகாமி நின்றதும் கூட்டத்தில் நிசப்தம். ஸ்திரீகளும் பேச்சை நிறுத்தினார்கள் அழுத குழந்தைகளும் வாய் மூடின. அந்த மண்டபப்பட்டுக் கிராமத்து ஜனங்கள் அதுவரையில் அம்மாதிரி கண் கூசும்படியான திவ்ய சௌந்தரியத்தைக் கண்டதில்லை.

சிவகாமியின் நடன அலங்காரமும் அணிகலன்களும் அவளுடைய முகத்தில் அப்போது பிரகாசித்த தெய்வீக களையும் கிளர்ச்சியும் பார்த்தவர்களைத் திகைக்கச் செய்தன. ஆரம்பத் திகைப்பு ஒருவாறு மாறியதும் ஒருவருக்கொருவர் தங்களுடைய வியப்பைத் தெரிவித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். "தேவலோகத்து நடன மாதர்களான அரம்பை, ஊர்வசி முதலியவர்கள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்!" என்றார் ஒருவர். "ஒருநாளும் இல்லை அவர்கள் இவ்வளவு அழகாக ஒரு நாளும் இருந்திருக்க முடியாது!" என்றார் இன்னொருவர். "இந்தப் பெண்ணுடனே அந்தத் தேவலோக கணிகையரை ஒப்பிடுவது பிசகு. தில்லையம்பலத்தில் நடராஜப் பெருமானுக்குப் போட்டியாக நடனமாடிய சிவகாமி தேவியேதான் இப்படி அவதாரம் எடுத்து வந்திருக்கிறாள்!" என்று ஒரு பக்தர் கூறினார். "இல்லாமலா, நாவுக்கரசர் பெருமான் அவ்வளவு பாராட்டினார்!" என்று இன்னொரு பக்தர் பரவசமாகச் சொன்னார்.

பளிச்சென்று சொல்லி வைத்தாற்போல் சபையிலே மறுபடியும் பரிபூரண நிசப்தம் ஏற்பட்டது. சிவகாமி நடனமாட ஆரம்பித்து விட்டாள்! ஆயனரின் கரதாளத்துக்கும் அவர் பாடிய ஸ்வரஜதிகளுக்கும் இணங்கச் சிவகாமி ஆடினாள்! உள்ளூர் மத்தள வித்வான் ஒருவர் வாணாளில் என்றுமறியாத உற்சாகத்துடன் மத்தளம் வாசித்தார். 'கும் கும்' என்னும் மத்தளச் சத்தத்தோடு கலந்து பாதச் சதங்கை ஒலி 'கல் கல்' என்று சப்திக்கச் சிவகாமி நிருத்தம் ஆடினாள்.

அந்த நிருத்தத்தில் மின்னலின் விரைவு காணப்பட்டது; மான் குட்டியின் துள்ளல் தோன்றியது; கான மயிலின் சாயல் விளங்கியது. சில சமயம் சிவகாமி பூமியிலே நின்று ஆடினாள்; சில சமயம் வானமண்டலத்துக்குச் சென்று வெண்மதியின் கிரணங்களில் ஆடினாள். சில சமயம் நட்சத்திர மண்டலத்துக்கே சென்று விண்மீன்களின் மத்தியில் பம்பரம் போலச் சுழன்று ஆடினாள். சிவகாமி அவ்விதம் சுழன்றாடியபோது பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள் சுழன்றன; அரங்க மேடையும் அகல் விளக்குகளும் சுழன்றன. கோயில் சுழன்றது; கோபுரங்கள் சுழன்றன; தூங்கானை மாடத்துத் தங்க ஸ்தூபி சுழன்றது; வானமும் பூமியும் கீழ் மேலாகச் சுழன்றன; சந்திரனும் நட்சத்திர மண்டலங்களும் சுழன்று சுழன்று வந்தன. இவ்விதம் வெவ்வேறு காலப் பிரமாணங்களில், வெவ்வேறு ஜதிகளில் விதவிதமான நிருத்த வகைகளை ஆடிச் சபையோரைக் கிறுகிறுக்க அடித்த பிறகு சிவகாமி சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்து கொள்வதற்காக மேடைக்குப் பின்புறம் சென்றாள். அப்போது சபையில் பிரமாதமான ஆரவாரம் எழுந்தது. ஆயனரின் அரண்ய வீட்டில் எட்டு மாதம் இருந்தும் சிவகாமியின் நடனத்தைப் பார்த்தறியாதவனான குண்டோதரனும் மற்றச் சபையினரைப் போலவே பரவசமடைந்து போயிருந்தான். நடனம் நின்ற பிறகும் அவன் தன்னை மறந்த நிலையிலேயே இருந்தபடியால், பக்கத்திலிருந்த மாமல்லரைப் பார்த்து, "பிரபு..." என்று ஆரம்பித்தான். மாமல்லரும் சிவகாமியின் நடனத்தில் பூரணமாய் ஈடுபட்டிருந்தாராயினும், அவர் தம்மையும் தமது சுற்றுப்புறத்தையும் மறந்துவிடவில்லை. எனவே, குண்டோதரன் 'பிரபு' என்றதும் அவர் அவனை ஒரு குலுக்குக் குலுக்கினார். அதற்குள் பக்கத்திலிருந்த ஐந்தாறு பேரின் கவனமும் குண்டோதரனின் மேல் விழுந்திருந்தது. மாமல்லரின் குலுக்கலினால் தனது நினைவு அடைந்த குண்டோதரன் சுவாமி சந்நிதியை நோக்கி, "பிரபு!... இந்தத் தெய்வீக நடனம் உனக்குத்தான் பிரீதி!" என்று பக்தி பரவசம் ததும்பிய குரலில் கூறி முடித்தான். "சந்தேகம் என்ன? இறைவனுக்குத்தான் பிரீதி!" என்று பக்கத்திலிருந்தவர்களும் ஆமோதித்தார்கள்.

சிவகாமி மீண்டும் அரங்க மேடைக்கு வந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள். திருநாவுக்கரசர் பெருமானின், "வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும்" என்னும் பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடித்தபோது, சபையோர் சாக்ஷாத் சிவபெருமானையே நேருக்கு நேர் தரிசித்தவர்களைப் போல் ஆனந்த வாரிதியில் முழுகினார்கள். பின்னர், "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்னும் திருப்பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பாள் என்று எல்லாரும் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சிவகாமி பின்வரும் பாடலைப் பாடி அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள்: வெள்ளநீர்ச் சடையனார் தாம் வினவுவார் போலவந்தென் உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்குநான் புடைகள் போந்து கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கிநக்கு வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே!

ஓர் அறியாப் பெண்ணின் உள்ளமாகிய இல்லத்தினுள்ளே வெள்ள நீர்ச்சடையனாராகிய சிவபெருமான் ஏதோ விசாரிக்க வருகிறவர்போல வந்து பிரவேசிக்கிறார். தூங்கிக் கொண்டிருந்த பெண் திடுக்கிட்டு எழுந்திருக்கிறாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறாள். யாரோ முன்பின் அறியாதவர் எதிரில் நிற்பதைக் கண்டு, "ஐயோ! இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் என் உள்ளத்திலே புகுந்த நீர் யார்? கள்ளரா?" என்று வினவுகிறாள். அப்போது வந்தவர் கண்ணோடு கண் கலங்கும்படி அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறார். பார்த்துவிட்டு நகை செய்கிறார்; அந்த நகைப்போடு கலந்து, "நானா கள்ளன்? கள்ளத் தனமென்பதே அறியாத வெள்ளை மனத்தவனாயிற்றே அதற்கு அறிகுறியாக என் மேலேயும் வெண்ணீறு பூசியிருக்கிறேன், தெரியவில்லையா?" என்கிறார். வானத்திலே விளங்கிய இளம் பிறையைத் திருடித் தம் சிரசிலே அணிந்து கொண்ட பெருமான்தான் இப்படி ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்! ஆகா! அந்த இளம் பிறையின் அழகைச் சொல்வேனா? அவருடைய கள்ளத்தனத்தைச் சொல்வேனா? அல்லது கள்ள மற்றவர் போல அவர் நடித்த நடிப்பைச் சொல்வேனா?... மேற்கூறிய இவ்வளவு உள்ளப் பாடுகளும் வெளியாகும்படியாகச் சிவகாமி தன் முகபாவங்களினாலும், அங்கங்களின் சைகைகளினாலும் கைவிரல்களின் முத்திரையினாலும் உணர்ச்சியோடு கலந்து அற்புதமாக அபிநயம் பிடித்தாள்.

பாடலும் அபிநயமும் சபையோருக்கு எல்லையற்ற குதூகலத்தை அளித்துப் பல முறை 'ஆஹா'காரத்தை வருவித்தது. ஆனாலும் சபையோர்கள் திருப்தியடைந்தவர்களாகக் காணவில்லை. அவர்களில் ஒருவர் துணிந்து எழுந்து அரங்க மேடைக்குச் சென்று ஆயனர் காதோடு ஏதோ சொன்னார். அது சிவகாமியின் செவியிலும் விழுந்தது. சிவகாமி சிறிது தயக்கத்துடனேயே, "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்!" என்று பாடிக்கொண்டு அபிநயம் பிடிக்க ஆரம்பித்தாள். எவ்வளவோ திறமையுடனே, விதவிதமான உள்ளப்பாடுகள் அற்புதமாக வெளியாகும்படி அபிநயம் பிடித்தாள். பாட்டும் அபிநயமும் முடியும் தருவாயில் சபையிலே பலருக்கு ஆவேசம் வந்துவிட்டது!

ஒரு வயது சென்ற கிழவர் எழுந்து நின்று, "நடராஜா, நடராஜா! நர்த்தன சுந்தர நடராஜா!" என்று பாடிக் கொண்டே ஒரு காலைத் தூக்கிய வண்ணம் சபையிலே நடனமாடத் தொடங்கி விட்டார். "இம்மாதிரி உணர்ச்சி வாய்ந்த அபிநயத்தை இது வரையில் யாரும் பார்த்ததில்லை; இனிமேல் பார்க்கப் போவதும் இல்லை" என்று சபையோர் ஒருவருக்கொருவர் கூறி மகிழ்ந்தார்கள். ஆனால், இன்று அந்தப் பாடலுக்கு அபிநயம் காஞ்சியில் நாவுக்கரசர் பெருமான் சந்நிதியில் அமைந்ததுபோல் அவ்வளவு உணர்ச்சியுடன் அமையவில்லையென்று மூன்று பேருக்கு மட்டும் தெரிந்திருந்தது. அந்த மூவர் ஆயனர், மாமல்லர், சிவகாமி ஆகியவர்கள்தான். சிவகாமி இன்றைக்கு அபிநயத்தின் முடிவில் மூர்ச்சையடைந்து பூமியில் விழுந்துவிடவும் இல்லை!