சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/குண்டோதரன் கதை

விக்கிமூலம் இலிருந்து
20. குண்டோதரன் கதை


குண்டோதரன் குதிரையிலிருந்து குதித்து இறங்கி வந்து, சாலையில் நின்ற ஆயனரின் பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். பின்னர், எழுந்து நின்று, "ஐயா! என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள். தங்களுடைய திருவருளினால்தான் நான் உங்களை தேடிக் கண்டுபிடித்தேன்" என்று சொன்னான்.

"ரொம்பவும் சந்தோஷம், குண்டோதரா! நீ தேடிக் கொண்டு வந்து சேர்ந்ததில் எனக்கு வெகு சந்தோஷம். ஆனால் உன்னைக் கைவிட்டு விட்டு நாங்கள் வந்துவிட வில்லையே? நீ அல்லவா திடீரென்று எங்களைக் கைவிட்டு விட்டு மாயமாய் மறைந்து விட்டாய்?.. எங்கே அப்பா போயிருந்தாய்?" என்று ஆயனர் கேட்க, குண்டோதரன், "குருவே! நான் என்ன செய்வேன்! காஞ்சியிலிருந்து அன்றைக்கு ரதம் ஓட்டிக்கொண்டு கண்ணபிரான் வந்தானல்லவா? அவன் ஒரு சமாசாரம் சொன்னான். என் பாட்டி எனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதற்காகப் பெண் பார்த்து வைத்திருக்கிறாள் என்றும், உடனே வரச் சொன்னாள் என்றும் தெரிவித்தான். அப்புறம் காரியம் மிஞ்சிவிடப் போகிறது என்று உடனே போய் பாட்டியிடம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வருவதற்காகக் காஞ்சிக்கு ஓடினேன். உங்களிடம் சொல்லிக் கொண்டு போகலாமென்று பார்த்தால், வீட்டில் உங்கள் இரண்டு பேரையும் காணவில்லை. ஒருவேளை தாமரைக் குளக்கரையில் இருப்பீர்களோ என்று ஓடிப்போய்ப் பார்த்தால், அங்கேயும் உங்களைக் காணவில்லை. இந்தப் புத்த பிக்ஷு தான் தாமரைக் குளக்கரையில் நின்று கொண்டிருந்தார்..' என்று சொல்லிக் குண்டோதரன் நாகநந்தியடிகளை ஏறிட்டுப் பார்த்தான்.

"என்னைச் சொல்கிறாயா, தம்பி? இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தில் உள்ள புத்த பிக்ஷு நான் ஒருவன்தானா? வேறு யாரையாவது பார்த்திருப்பாய்!" என்றார் நாகநந்தி அடிகள்.

"இல்லை, சுவாமி, இல்லை! தங்களைத்தான் பார்த்தேன். கையிலே ஏழெட்டு ஓலைச் சுருள்களை வைத்துக்கொண்டு, ஒரு ஓலையைப் படித்துக் கொண்டிருந்தீர்கள். நாகப்பாம்பு சீறுவதைப்போல் சீறிக் கொண்டிருந்தீர்கள்.."

சிவகாமியின் மனத்தில் அப்போது சுறுக்கென்றது. மரப் பொந்திலே அவள் வைத்திருந்த மாமல்லரின் ஓலைகள் காணாமற்போனது அவளுக்கு நினைவு வந்தது. அப்போது நாகநந்தி, "என்ன அப்பா உளறுகிறாய்? நானாவது தாமரைக் குளக்கரையில் நின்று ஓலை படிக்கவாவது?" என்றார். ஆயனரும், "வேறு யாராவது இருக்கும் குண்டோதரா! அப்புறம் உன் கதையைச் சொல்!" என்றார்.

"இல்லை, குருவே! இவரையேதான் பார்த்தேன். இவருடைய முகத்தையும் இவர் சீறுவதையும் பார்த்ததும் எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? ஆ! அதைச் சொல்லக்கூடாது சொன்னால், பிக்ஷுவுக்குக் கோபம் வரும். கோபம் வந்து என்னைக் கடித்தாலும் கடித்து விடுவார்!" என்றான்.

நாகநந்தியின் கண்களில் தீப்பொறி பறந்தது. ஆயனரோ நிலைமை விரஸமாய்ப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, "பாருங்கள் சுவாமி! இப்பேர்ப்பட்ட புத்திசாலி சிஷ்யனை வைத்துக் கொண்டு என்ன சிற்ப வேலையைச் செய்வது? அதனால்தான் எட்டு மாதமாக நான் ஒன்றும் செய்யவில்லை.... போகட்டும் குண்டோதரா! அப்புறம் உன் கதையைச் சொல்லு! உன் பாட்டி பேசிவைத்த பெண்ணின் கதி என்ன?" என்றார்.

"குருவே! பாட்டியிடம் கண்டிப்பாய்ச் சொல்லி விட்டேன். 'பாட்டி, பாட்டி! நம்முடைய மகேந்திர சக்கரவர்த்தியின் குமாரர் மாமல்லர் எத்தனை எத்தனையோ ராஜாக்கள் பெண் கொடுப்பதாக வந்தும் இன்னும் கலியாணம் பண்ணிக் கொள்ளாமல் பிரம்மச்சாரியாயிருக்கிறார். என் குருநாதருடைய செல்வப் புதல்வி சிவகாமிக்கு இன்னும் கலியாணமாகவில்லை. அவர்கள் எல்லாம் அப்படி இருக்கும்போது எனக்கு மட்டும் கலியாணம் என்னத்திற்கு, பாட்டி? நீ வேணுமானால் கலியாணம் பண்ணிக்கொள் நான் கிட்ட இருந்து நடத்துகிறேன்' என்று சொன்னேன்...."

குண்டோதரன் இவ்வாறு கூறியதும், எல்லாரும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள். சிவகாமியின் அத்தையும் கூடச் சிரித்துவிட்டு, "என்னத்திற்காகச் சிரிக்கிறீர்கள்?" என்று சிவகாமியைக் கேட்டாள்.

"குண்டோதரனுக்குக் கலியாணமாம்!" என்றாள் சிவகாமி.

ஆயனர், "சரி தம்பி! நாங்கள் இங்கே கிளம்பி வந்தது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார்.

குண்டோதரன் சொல்கிறான்; "குருவே! பாட்டியிடம் அவசரமாகச் சொல்லிவிட்டு ஓட்டம் ஓட்டமாய் நமது வீட்டுக்கு வந்து பார்த்தால், வீடு பூட்டிக் கிடந்தது! நம்முடைய குருநாதரே நம்மைக் கைவிட்டு விட்டார். இனிமேல் கடவுள்தான் நமக்குத் துணை என்று தீர்மானித்து அப்படியே மரத்தடியில் படுத்துத் தூங்கிப் போய்விட்டேன்.

"அப்போது பாருங்கள்! கடவுளே பார்த்து அனுப்பியதுபோல் நமது குமார சக்கரவர்த்தியும் புதிய தளபதி பரஞ்சோதியாரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்!"

"யார் வந்தது!" என்று ஆயனர், சிவகாமி இரண்டு பேரும் ஏக காலத்தில் கேட்டார்கள்.

"மாமல்லரும் தளபதி பரஞ்சோதியாரும் வந்தார்கள். குதிரை மேல் வந்தார்கள்! ஆகா! குதிரை என்றால், அதுவல்லவா குதிரை..."

"அப்புறம்!" என்றார் ஆயனர்.

"அவர்களுக்குப் பின்னால் இன்னும் பல குதிரை வீரர்கள் வந்தார்கள். கண்ணபிரான் ரதம் ஓட்டிக் கொண்டு வந்தான்.

"சரி, அப்புறம் என்ன நடந்தது?" என்றார் ஆயனர்.

மாமல்லர் வந்தார் என்று கேட்டதும் சிவகாமிக்குத் தலை சுற்றியது, தேகமெல்லாம் நடுங்கியது. என்னவெல்லாமோ கேட்க வேண்டுமென்று உள்ளம் துடித்தது, உதடுகளும் துடித்தன. எனினும், "யார் வந்தது?" என்று கேட்டதற்குப் பிறகு அவளுடைய வாயிலிருந்து வார்த்தை எதுவும் வரவில்லை. ஆனால், விஷயத்தைச் சொல்லாமல் குண்டோதரன் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்ததில் அவளுக்குக் கோபமாய் வந்தது.

குண்டோதரன் சொல்கிறான்; "குருவே! வீடு பூட்டிக் கிடந்ததைக் கண்டதும் எனக்கு எவ்வளவு கோபம் வந்ததோ அதைவிட மூன்று மடங்கு கோபம் நமது குமார சக்கரவர்த்திக்கு வந்துவிட்டது. மாமல்லர் குதிரையைத் திருப்பிவிட்டுக் கொண்டு போன வேகத்தைப் பார்க்க வேண்டுமே? அடே அப்பா! நமது குமார சக்கரவர்த்திக்கு இவ்வளவு மூக்குக்கு மேல் கோபம் வரும் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. குமார சக்கரவர்த்தியின் குதிரை திரும்பியதும், மற்றக் குதிரைகள் சட சடவென்று திரும்புவதற்குப் பட்டபாட்டைப் பார்க்க வேண்டுமே... என்ன அவசரம்? என்ன தடபுடல்?.. நான் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து மரத்தின் பின்னாலிருந்து வெளியே வருவதற்குள்ளே அவ்வளவு குதிரைகளும் காற்றாய்ப் பறந்து மறைந்து போய் விட்டன..."

சிவகாமியின் உள்ளத்தில் அப்போது மகிழ்ச்சி, பயம், கோபம், கவலை முதலிய உணர்ச்சிகள் ததும்பி, புயற்காற்று அடிக்கும்போது சமுத்திரம் கலங்குவது போல் கலங்கச் செய்து கொண்டிருந்தன. மாமல்லர் தன்னைத் தேடி வந்தார் என்பதில் மகிழ்ச்சி; அவருக்கு வந்த கோபத்தைக் கேட்டதில் பயம்; அவர் வருவதற்கு முன்னால் கிளம்பும்படி செய்த நாகநந்தியின் மேல் கோபம்; செய்த தவறை எப்படித் திருத்துவது என்பது பற்றிக் கவலை இப்படிப்பட்ட பலவகை உணர்ச்சிகளுக்கிடையே ஒரே ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல் துடிதுடித்தது. ஒருவாறு நெஞ்சை உறுதிப்படுத்திக்கொண்டு, "அப்பா! குண்டோதரன் சொல்வது எனக்கு நிஜமாகத் தோன்றவில்லை. குமார சக்கரவர்த்தியாவது, நம் வீட்டுக்கு வரவாவது? அவர்தான் யுத்தத்துக்குப் பயந்துகொண்டு கோட்டையில் ஒளிந்து கொண்டிருந்தாரே!" என்றாள்.

ஆயனர் அதற்கு மறுமொழி சொல்லத் தெரியாதவராய் குண்டோதரனைப் பார்க்க, அவன், "குருவே! இப்படிப்பட்ட நாராசமான வார்த்தைகள் சிவகாமி அம்மையின் வாயிலிருந்துதானா உண்மையில் வெளிவந்தன? வீராதி வீரரான மகாமல்லவராவது, யுத்தத்துக்குப் பயந்து கோட்டையில் ஒளிந்து கொண்டிருக்கவாவது? இப்பேர்ப்பட்ட கொடிய அவதூறை எந்தப் பாவி சிவகாமி அம்மையின் காதில் போட்டது? சக்கரவர்த்தியின் கட்டளைக்காக அல்லவா மாமல்லர் இத்தனை நாளும் கோட்டைக்குள்ளே இருந்தார். சக்கரவர்த்தியின் ஆக்ஞை வந்தவுடனே மாமல்லர் நேரே போர்க்களத்துக்கல்லவா புறப்பட்டுப் போகிறார்!"

"போர்க்களத்துக்கா? எந்தப் போர்க்களத்துக்கு?" என்று ஆயனர் கேட்க, "தெரியாதா, குருவே? நாடு நகரமெல்லாம் அறிந்த விஷயமாயிற்றே? மகேந்திர சக்கரவர்த்தி வடபெண்ணைக் கரையில் முடக்கப்பட்டிருக்கும் தைரியத்தினால், கங்க நாட்டுத் துர்விநீதன் காஞ்சியின் மேல் படையெடுத்து வரும் செய்தி தங்களுக்குத் தெரியாதா? அவனையும் அவனுடைய படையையும் எதிர்த்துத் துவம்ஸம் செய்வதற்குத்தான் மாமல்லர் திருக்கழுக்குன்றத்திலிருந்து நமது தற்காப்புப் படையுடன் போயிருக்கிறார். சற்று முன்னால், இந்தச் சாலையில் ஒரு படை போயிற்றே, நீங்கள் பார்க்கவில்லையா? அந்தப் படை தென் பெண்ணைக் கரையிலேயே காவலுக்கு இருந்த படை; போர்க்களத்திற்குப் போகும் மாமல்லருடனே சேர்ந்து கொள்ளத்தான் போகிறது. இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா?" என்றான் குண்டோதரன்.

வெகு சாதுவாகவும், பேசவே தெரியாத மந்தனாகவும் இத்தனை நாளும் தோன்றிய குண்டோதரன் இப்போது இவ்வளவு வாசாலகனாய் மாறியிருந்தது ஆயனருக்கு ஒரே ஆச்சரியத்தை அளித்தது. அவனிடம் இன்னும் ஏதோ அவர் கேட்கப் போனார். அந்தச் சமயம், நாகநந்தி கலக்கமடைந்த குரலில், "ஆயனரே! நன்றாய் இருட்டி விட்டதே? மிச்ச வழியையும் கடந்து இரவு தங்குவதற்கு அசோகபுரிக்குப் போய்விட வேண்டாமா! குண்டோதரன் நம்முடன் வருகிறானே, எல்லா விவரங்களும் சாவகாசமாய் அவனிடம் கேட்டுக் கொண்டால் போகிறது!" என்றார்.

உண்மையிலேயே அப்போது நன்றாய் இருட்டிவிட்டிருந்தபடியால், நாகநந்தியின் முகத்தை யாரும் நன்றாய்ப் பார்க்க முடியவில்லை. பார்க்க முடிந்திருந்தால், அந்தக் கோரமான முகம் அப்போது இன்னும் எவ்வளவு சர்வ கோரமாயிருக்கிறதென்று அறிந்து பயந்து போயிருப்பார்கள். ஆயனர் சிவகாமியைப் பார்த்து "குழந்தாய்! அடிகள் கூறுவது உண்மைதான்; வண்டியில் ஏறிக்கொள்! குண்டோதரனிடம் எல்லாம் பிறகு விவரமாய்க் கேட்கலாம்" என்றார்.

சிவகாமியின் உள்ளத்தில் குண்டோதரனைக் கேட்பதற்கு எத்தனையோ கேள்விகள் தோன்றிக் கொண்டிருந்தன. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவள் ஒரு கேள்வி கேட்க விரும்பினாள். அதாவது, குண்டோதரனுக்குக் குதிரை எப்படிக் கிடைத்தது? ஒருவேளை குமார சக்கரவர்த்தியின் கோபம் தணிந்து தங்களைப் போய்த் திருப்பி அழைத்து வருவதற்காக அவர்தான் குண்டோதரனுக்குக் குதிரை கொடுத்து அனுப்பியிருக்கிறாரோ என்று அவள் மனத்திற்குள்ளே ஒரு சபல நினைவு தோன்றியது. எனவே "அப்பா! அத்தை வண்டியில் ஏறிக் கொள்ளட்டும் நான் சற்று நேரம் உங்களுடன் நடந்து வருகிறேன்" என்றாள்.