உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/மந்திராலோசனை

விக்கிமூலம் இலிருந்து
50. மந்திராலோசனை

அன்றிரவு ஒன்றரை ஜாமம் ஆனபோது, மந்திராலோசனை சபை கூடியிருப்பதாகவும், குமார சக்கரவர்த்தியின் வரவை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது. மாமல்லரும் அன்னையிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். புள்ளலூரிலிருந்து சக்கரவர்த்தி செய்தி அனுப்பியதன் காரணமாகத்தான் இன்றிரவும் இந்த மந்திராலோசனை சபை கூடியது. (பல்லவ சாம்ராஜ்யத்தில் மந்திரி மண்டலம் என்றும் அமைச்சர் குழு என்றும் இரண்டு சபைகள் சக்கரவர்த்திக்கு இராஜ்ய நிர்வாகக் காரியங்களில் துணை செய்தன. மந்திரிகள் ஆலோசனை சொல்வதற்கு உரியவர்கள். அமைச்சர் அல்லது அமாத்தியர் காரிய நிர்வாகத் தலைவர்கள். சாம்ராஜ்யம் பற்பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு தலைவன் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கோட்டத்தலைவர்களும் மந்திராலோசனைக்கு அழைக்கப்படுவார்கள்.) மந்திரிகளும், அமைச்சர்களும், கோட்டத்தலைவர்களும் மந்திராலோசனைக்கு அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள்.

தளபதி பரஞ்சோதி பின்தொடர, மாமல்லர் மண்டபத்திற்குள் பிரவேசித்ததும் அங்கே கூடியிருந்தவர் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள்! பிறகு பீடங்களில் அமர்ந்தார்கள். சக்கரவர்த்தியின் சிம்மாசனம் வெறுமையாயிருந்தது. அதனருகில் போட்டிருந்த மற்றொரு சிம்மாசனத்தில் மாமல்லர் அமர்ந்தார். அவருக்குப் பின்னால் பரஞ்சோதி நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏனோ உட்கார மனம் வரவேயில்லை. ஏதோ எதிர்பாராத சம்பவங்கள் நடக்கப் போவதாக அவருடைய உள்ளுணர்ச்சி சொல்லிக் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அவருடைய முகத்தில் பிரதிபலித்தது.

முதன் மந்திரி சாரங்கதேவ பட்டர் சபையை ஆரம்பித்து வைத்தார். அவர் சபையைப் பார்த்துக் கூறியதாவது: "இன்றைக்கு இந்த நேரத்தில் மந்திராலோசனை சபை கூட்டும்படியாகச் சக்கரவர்த்தி ஆக்ஞை இட்டதன் பேரில் இங்கே கூடியிருக்கிறோம். ஆனால், சக்கரவர்த்தி இன்னும் வந்து சேரவில்லை. விசித்திர சித்தரான நம் சக்கரவர்த்தி வேறு முக்கிய அலுவல்களில் ஈடுபட்டிருப்பதனால் இன்னும் வந்து சேரவில்லையா? அல்லது எதிர்பாராத இடையூறுகளினால் தடுத்து நிறுத்தப்பட்டாரா என்பதும் தெரியவில்லை. இந்த நிலைமையில் மந்திராலோசனையைத் தள்ளிப் போடுவதா அல்லது குமார பல்லவரின் தலைமையில் சபையை நடத்துவதா என்று முதலில் தீர்மானிக்க வேண்டும். சக்கரவர்த்தி ஒன்பது மாதத்துக்கு முன்பு வடக்குப் போர்க்களத்துக்குச் சென்றபோது மாமல்லருக்குச் சர்வ இராஜ்ய அதிகாரங்களையும் கொடுத்துவிட்டுச் சென்றார். எனவே, மாமல்லரின் தலைமையில் மந்திராலோசனை நடத்தலாம் என்றே நான் நினைக்கிறேன். உங்கள் எல்லோருடைய அபிப்பிராயமும் அவ்விதமே இருக்கும் என்று கருதுகிறேன்."

முதன் மந்திரியின் மேற்படி பிரேரணையை, "ஆம், ஆம்" என்று கூறி சபையோர் அனைவரும் ஆமோதித்தார்கள்.

பின்னர், முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர் சொன்னதாவது: "இந்தச் சபையைத் தள்ளிப்போட்டு, சக்கரவர்த்தி வருகிற வரையில் காத்திருப்பதற்கு முடியாத நிலைமையில் நாம் இருக்கிறோம். வாதாபியின் முன்னணிப் படைகள் கோட்டைக்கு இரண்டு காத தூரத்தில் வந்து விட்டன. இந்த நிலைமையில் நாம் செய்யவேண்டியது என்னவென்பது பற்றிக் குமார சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தையும், ஆக்ஞையையும் அறிய விரும்புகிறோம். வடக்குப் போர்க்களத்திலிருந்து நம் வீர பல்லவ சைனியத்தைச் சேதமடையாமல் கோட்டைக்குள்ளே கொண்டு வந்து சேர்த்த சேனாதிபதி கலிப்பகையாரும் நமது கடமையைப் பற்றி தமது அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துவாரென்று எதிர்பார்க்கிறோம்."

செஞ்சிக்கோட்டைத் தலைவன் சடையப்பசிங்கன் சொன்னான்: "சக்கரவர்த்தியைப் பற்றிய செய்தியை முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். வடக்குப் போர்க்களத்தில் தமது சேனாதிபதியுடன் பல்லவேந்திரர் இருப்பதாகவே இத்தனை காலமும் எண்ணிக்கொண்டிருந்தோம். சைனியத்தை விட்டுப் பிரிந்து சக்கரவர்த்தி எங்கே போனார் என்பதைச் சேனாதிபதி தெரிவிக்கக் கூடுமா?"

சேனாதிபதி கலிப்பகையார் கூறினார்: "பத்து தினங்களுக்கு முன்னால் சக்கரவர்த்தி இரண்டாயிரம் வீரர்களுடன் வடக்குப் போர்க்களத்திலிருந்து புறப்பட்டார். காஞ்சிக் கோட்டைக்குச் சைனியங்களுடன் வந்து சேரும்படி எனக்குக் கட்டளையிட்டு விட்டுச் சென்றார். அப்புறம் எனக்குத் தகவல் ஒன்றும் தெரியாது. புள்ளலூர்ப் போர்க்களத்துக்குச் செல்வதாக நான் ஊகித்தேன். சக்கரவர்த்தி அழைத்துச் சென்ற வீரர்களில் திரும்பி வந்திருப்பவர்கள் அவ்விதமே சொல்கிறார்கள்."

"புள்ளலூர்ப் போர்க்களம்" என்றதும் அங்கிருந்தோர் அனைவருடைய கண்களும் மாமல்லரை நோக்கின. சபையின் நோக்கத்தை அறிந்து கொண்டு மாமல்லர் பேசினார்.

"சேனாதிபதி ஊகித்தது உண்மை. தந்தை புள்ளலூர்ப் போர்க்களத்துக்குத்தான் வந்தார். ஆனால், இன்னும் இங்கு வந்து சேரவில்லையென்பது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. உங்களையெல்லாம் கோட்டை வாசலில் சந்தித்தபோது, என் தந்தை அரண்மனையில் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணினேன். அரண்மனைக்கு வந்ததும் பெரும் ஏமாற்றமடைந்தேன். என் அருமைத் தோழர் பரஞ்சோதிக்குச் சக்கரவர்த்தி அனுப்பியிருந்த ஓலையிலிருந்து அவ்விதம் நாங்கள் நினைக்க நேர்ந்தது. தளபதி! எல்லா விவரங்களையும் இவர்களுக்குச் சொல்லுங்கள்!"

அவ்விதமே தளபதி பரஞ்சோதி புள்ளலூர்ப் போரின் விவரம், துர்விநீதன் தோற்று ஓடியது, அவனைத் துரத்திக் கொண்டு தாங்கள் சென்றது, சக்கரவர்த்தியும் வேறு மார்க்கமாகத் தெற்கு நோக்கி வந்தது, மாமல்லர் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு மண்டபப்பட்டுக் கிராமத்தில் ஒதுங்கியது, தாம் அவரைத் தேடியது, துர்விநீதனைச் சக்கரவர்த்தி சிறைப்படுத்தி விட்டு தமக்கு ஓலை அனுப்பினது ஆகிய விவரங்களைச் சபையோருக்கு எடுத்துக் கூறினார். ஆயனர் சிவகாமி விஷயத்தை மட்டும் அவர் பிரஸ்தாபிக்கவில்லை.

அதன் மேல் முதன் மந்திரி சாரங்கதேவபட்டர் கூறியதாவது: "சக்கரவர்த்தி இல்லாத சமயத்தில் நம்முடைய பொறுப்பு பன்மடங்கு அதிகமாயிருக்கிறது. தென் தமிழ்நாடு இது வரையில் கண்டிராத பெரிய பகைவர் படை நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அந்த நிலைமையில் நாம் செய்ய வேண்டியதைப் பற்றிக் குமார சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். கோட்டத் தலைவர்களும் மாமல்லரின் ஆக்ஞையை எதிர்பார்க்கிறார்கள். காஞ்சிக் கோட்டை முற்றுகைக்கு உட்படுவதற்குள் அவர்கள் தங்கள் தங்கள் கோட்டத்துக்குத் திரும்பிப் போய்விட வேண்டுமல்லவா?"

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மாமல்லர் உடனே மறுமொழி எதுவும் சொல்லவில்லை. ஏதோ தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தவராகக் காணப்பட்டார்.

அதைக் கவனித்த முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர், "முதலில் வடக்குப் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் சேனாதிபதி கலிப்பகையார் தமது அபிப்பிராயத்தைச் சொல்லுவது நல்லது. சக்கரவர்த்தி இந்தச் சபை கூட்டச் சொன்ன தன் நோக்கம் என்ன என்பது அவருக்குத் தெரிந்திருக்கக்கூடும்!" என்றார்.

சேனாதிபதி கலிப்பகையார் தம் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று சொல்லத் தொடங்கினார்: "சக்கரவர்த்தி இந்த மந்திராலோசனை சபையைக் கூட்டியதன் காரணம், காஞ்சி முற்றுகை சம்பந்தமானதுதான். முற்றுகை ஒருவேளை ஓராண்டு காலம் நீடித்தாலும் நீடிக்கலாம் என்று சக்கரவர்த்தி எதிர்பார்க்கிறார். இந்த ஒரு வருஷமும் கோட்டைக்குள்ளே இருப்பவர்களுக்கும் வெளியில் இருப்பவர்களுக்கும் சம்பந்தம் எதுவும் இராது. ஓலைப் போக்குவரவுக்கும் இடமிராது. காஞ்சிக் கோட்டை முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் காலத்தில் நமது கோட்டத் தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை அவர்களுக்குச் சக்கரவர்த்தி சொல்ல விரும்பினார். அவர் சொல்ல விரும்பியது என்ன என்பதை நான் அறியேன்."

"சேனாதிபதியை ஒன்று கேட்க விரும்புகிறேன். வாதாபிப் படைகள் கோட்டை வாசலுக்கு எப்போது வந்து சேரும் என்று நினைகிறீர்கள்?" என்று கோட்டத் தலைவரில் ஒருவர் கேட்டார்.

"நாளைச் சூரியோதயத்துக்கு வந்து சேரலாம். அஸ்தமனத்துக்குள் கோட்டையை நாலாபுறமும் சூழ்ந்து கொள்ளக் கூடும்."

"அப்படியானால், கோட்டைக்கு வெளியே போகிறவர்கள் நாளைச் சூரியோதயத்துக்குள் போய்விட வேண்டுமல்லவா?"

"சக்கரவர்த்தி இன்று இரவுக்குள்ளே வந்து சேராவிட்டால், கோட்டத் தலைவர்கள் அவர்களுடைய ஊர்களுக்குத் திரும்பிச் சென்று விடுவதுதான் நல்லது. சக்கரவர்த்தியின் ஆக்ஞை அவர்களைத் தேடிக்கொண்டு வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம்."

சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. எல்லாரும் மாமல்லருடைய முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

"குமார சக்கரவர்த்தியின் ஆக்ஞையை எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று முதல் மந்திரி கூறினார்.

மாமல்லர் தமது ஆசனத்திலிருந்து கம்பீரமாக எழுந்தார். சபையோர் அனைவரையும் ஒரு தடவை பார்த்தார். பிறகு கூறினார்: "பத்து மாதங்களுக்கு முன்பு சக்கரவர்த்தி காஞ்சியை விட்டுப் புறப்பட்டபோது, தாம் திரும்பி வரும்வரை தம்முடைய ஸ்தானத்தில் சகல இராஜ்யாதிகாரங்களையும் வகிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார். அது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறதல்லவா?"

"நினைவிருக்கிறது!" என்று சிலர் சொன்னார்கள். இன்னும் சிலர் ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார்கள்.

ஏதோ விபரீதமான யோசனை வரப்போகிறதென்று எண்ணியவர்களைப்போல் மற்றவர்கள் மௌனமாயிருந்தார்கள். "சக்கரவர்த்தி இன்னும் திரும்பி வரவில்லை. ஆகவே, அவர் எனக்கு அளித்த இராஜ்யாதிகாரத்தை இன்னும் நான் வகிக்கலாமல்லவா? அது உங்களுக்கெல்லாம் சம்மதந்தானே?"

"சம்மதம்! சம்மதம்" என்பதாகச் சபையில் பல குரல்கள் ஏக காலத்தில் கோஷித்தன.

முதன் மந்திரி எழுந்து, நின்று, "பல்லவ குமாரா! சக்கரவர்த்தி எங்களை ஆலோசனை கேட்கும்போது நாங்கள் எங்கள் கருத்தைச் சொல்வோம். அதுபோலவே தாங்கள் கேட்டாலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்கிறோம். தீர ஆலோசித்தபின் தாங்கள் எப்படிக் கட்டளையிடுகிறீர்களோ, அப்படியே நடத்திவைப்போம். யோசனை சொல்வதற்குத் தான் எங்களுக்கு உரிமை. ஆக்ஞையிடும் உரிமை தங்களது" என்றார்.

"சந்தோஷம், நீங்கள் சொல்லவேண்டிய யோசனையெல்லாம் சொல்லுங்கள்; கேட்டுக் கொள்கிறேன். ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி நான் முன்னமே முடிவு செய்துவிட்டேன். மந்திரிகளே! அமைச்சர்களே! கோட்டத் தலைவர்களே! அனைவரும் கேளுங்கள். படையெடுத்து வந்த பகைவர்களுக்குப் பயந்து கோட்டைக்குள் ஒளிந்து கொள்வது என்பது பல்லவ குலத்துக்கு என்றும் அழியாத அவமானத்தை உண்டுபண்ணக் கூடியது. தொண்டைமான் இளந்திரையன் வழி வந்த வீர பல்லவ வம்சத்துக்கு இந்த மகத்தான களங்கம் என்னுடைய காலத்தில் ஏற்படுவதை நான் ஒருநாளும் சகிக்க முடியாது. இந்தக் கோட்டைக்குள் இன்று சுமார் ஒரு லட்சம் பல்லவ வீரர்கள் போருக்குத் துடிதுடித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு நாளைக்கே வெளியேறி நமது கோட்டை வாசலில் வாதாபி சைனியத்தைத் தாக்குவது என்று முடிவு செய்துவிட்டேன். அதற்கு உங்களுடைய சம்மதத்தை எதிர்பார்க்கிறேன். தளபதி பரஞ்சோதி என்னுடன் போர்க்களத்துக்கு வருவார். பரஞ்சோதிக்குப் பதிலாகச் சேனாதிபதி கலிப்பகையாரைக் கோட்டை காவலுக்கு நியமிக்கிறேன். இதற்கு உங்களுடைய சம்மதம் தெரிந்துகொண்ட பிறகு, வெளியூர்க் கோட்டத் தலைவர்களுக்கு நான் சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன்."

மாமல்லர் பேச்சை நிறுத்தியபோது இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது. மந்திரிகளும் அமைச்சர்களும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தார்கள்; யாருக்கும் பேச நா எழவில்லை.