சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/வாக்குவாதம்
நள்ளிரவைப் பட்டப்பகலாகச் செய்த பால் நிலவில், படகுகள் வராக நதியைத் தாண்டி அக்கரையை அடைந்தன.
கரை சேரும் வரையில் மாமல்லர் பேசவில்லை. பூர்த்தியடைந்த காதலினால் கனிந்திருந்த அவருடைய உள்ளம் கனவு லோகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தது.
யுத்தம் முடிந்த பிறகு, வாதாபியின் அரக்கர் படையை ஹதம் செய்து அழித்து வெற்றிமாலை சூடிய பிறகு, காஞ்சியில் தாமும் சிவகாமியும் ஆனந்தமாகக் கழிக்கப் போகும் நாட்களைக் குறித்து மனோராஜ்யத்தில் அவர் ஆழ்ந்திருந்தார். பாலாற்றில் இது மாதிரியே வெண்மதி தண்ணிலவைப் பொழியும் இரவுகளில் தாமும் சிவகாமியுமாகப் படகிலே ஆனந்தமாய் மிதந்து செல்லப் போகும் நாட்களைப் பற்றி அவர் எண்ணமிட்டார்.
படகு தடார் என்று கரையில் மோதி நின்றதும், மாமல்லரும் கனவு லோகத்திலிருந்து பூவுலகத்துக்கு வந்தார். கரையில் சற்று தூரத்தில் பறந்து கொண்டிருந்த ரிஷபக் கொடியையும், அதைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த பல்லவர் படையையும் பார்த்தார். தம்முடன் வந்த வீரர்களில் மிகப் பெரும்பான்மையோர் அங்கிருப்பதைக் கண்டு அவருக்குக் குதூகலம் உண்டாயிற்று.
சட்டென்று மாமல்லருக்குக் கண்ணபிரான் ஞாபகம் வந்தது. படகிலிருந்து கீழே இறங்கும்போதே, "தளபதி! கண்ணபிரான், எங்கே? அவன் உங்களுடன் 'வருகிறேன்' என்று சொல்லவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே இறங்கினார்.
"சொல்லாமலிருப்பானா? தானும் வருவதாகத் தான் பிடிவாதம் பிடித்தான். நான்தான் இங்கேயே இருந்து குதிரைகளுக்குத் தீனி போட்டுக் கவனிக்கும்படி கட்டளையிட்டேன். ஆறு காத தூரம் ஒரே மூச்சில் நாம் போகவேண்டும் அல்லவா?" என்றார் தளபதி பரஞ்சோதி.
இருவரும் பல்லவர் படையருகே சென்றபோது, "பல்லவ குமாரர் வாழ்க!" "வீர மாமல்லர் வாழ்க! வாழ்க!" என்ற கோஷம் ஆயிரம் கண்டங்களிலிருந்து கிளம்பி எதிரொலி செய்தது.
அணிவகுத்த படையிலிருந்து ஒரு வீரன் முன்னால் வந்து நின்றான்.
"வரதுங்கா! என்ன சேதி?" என்று பரஞ்சோதி கேட்டார்.
"தாங்கள் இங்கிருந்து சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் இரண்டு வீரர்கள் குதிரை மீது வந்தார்கள். அவர்கள் ரதத்துடன் கண்ணபிரானையும் பத்துப் போர் வீரர்களையும் அழைத்துச் சென்றார்கள்..."
"என்ன? கண்ணபிரானை அழைத்துச் சென்றார்களா?" என்று பரஞ்சோதி பரபரப்புடன் கேட்டார்.
"ஆம், தளபதி! அவசர காரியமாகக் காஞ்சிக்குப் போக வேண்டும் என்று சொன்னார்கள்..."
"அந்த வீரர்கள் யார்? தெரியாதா?..."
வரதுங்கன் சற்று தயங்கிவிட்டு, "தூதுவர்களில் ஒருவர், தமது பெயர் வஜ்ரபாகு என்று சொன்னார். இன்னொருவர் ஒற்றர் படைத் தலைவர் சத்ருக்னன். சிங்க இலச்சினைக் காட்டியபடியால் கண்ணபிரானையும், வீரர்களையும் அனுப்பினேன். இதோ தளபதிக்கு அவர்கள் கொடுத்த விடேல் விடுகு!"(விடை+வேல்+விடுக: அதாவது ரிஷபமும் வேலும் அடையாளமிட்ட பல்லவ சக்கரவர்த்தியின் ஓலை) என்று கூறி ஓலையை நீட்டினான்.
வஜ்ரபாஹு என்று சொன்னவுடனேயே பரஞ்சோதியும் மாமல்லரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். வந்தவர் சக்கரவர்த்திதான் என்று இருவருக்கும் தெரிந்து போய் விட்டது.
பரஞ்சோதி அவசரமாக ஓலையை வாங்கி நிலா வெளிச்சத்தில் பார்த்தார். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது. "தளபதி பரஞ்சோதிக்கு மகேந்திர போத்தரையர் எழுதுவது. நான் சௌக்கியம். துர்விநீதன் மழவராய கோட்டையில் சிறையில் இருக்கிறான். வாதாபிப் படை திருப்பதியைத் தாண்டிவிட்டதாம். மாமல்லனை அழைத்துக் கொண்டு ஒரு கணம் கூட வழியில் தாமதியாமல் காஞ்சி வந்து சேரவும். மாமல்லன் வருவதற்கு மறுத்தால் இந்தக் கட்டளையைக் காட்டி அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வரவும்."
இதற்கு கீழே விடை வேல் முத்திரையிட்டிருந்தது; முத்திரைக்குக் கீழே மறுபடியும் எழுதியிருந்தது.
"ஒருவேளை நீங்கள் வருவதற்குள் கோட்டைக் கதவு சாத்தியாகிவிட்டால், புத்த பகவானைத் தியானம் செய்யவும்."
பரஞ்சோதி படித்துவிட்டு ஓலையை மாமல்லரிடம் கொடுத்தார். மாமல்லர் ஓலையை வாங்கிப் படித்தார். படித்து விட்டுப் பரஞ்சோதியை நோக்கினார்.
"பல்லவ குமாரா! தொந்தரவு கொடுக்காமல் உடனே கிளம்புகிறீர்களா? உங்களைச் சிறைப்படுத்தக் கட்டளையிடட்டுமா?" என்று தளபதி பரஞ்சோதி வேடிக்கை கலந்த குரலில் கேட்டார்.
"ஆம், தளபதி! என்னைச் சிறைப்படுத்தியே கொண்டு போங்கள். படையெடுத்து வரும் பகைவர்களுக்குப் பயந்து கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளும் நாட்டிலே சிறையாளியாயிருப்பதேமேல்" என்று மாமல்லர் கூறி, மார்பில் அணிந்திருந்த ஆபரணங்களையும், இடுப்பில் செருகியிருந்த உடைவாளையும் கழற்றிக் கீழே எறிந்தார். அப்போது பரஞ்சோதியும் தமது உடைவாளையும் தலைப்பாகையையும் எடுத்துத் தரையில் எறிந்து விட்டுச் சொன்னார். "எனக்கும் இந்தத் தளபதி உத்தியோகம் வேண்டியதில்லை. தம்மை நம்பி வந்த படை வீரர்களை நட்டாற்றிலே விட்டுவிட்டு, ஒரு நாட்டியக்காரப் பெண்ணின் காதலைத் தேடி ஓடும் குமார சக்கரவர்த்தியின் கீழ்த் தளபதியாயிருப்பதைக் காட்டிலும் 'நமப் பார்வதி பதயே! ஹர ஹர மகாதேவா!' என்று பஜனை செய்து கொண்டு ஊர் ஊராய்ப் போகலாம். இதோ நான் கிளம்புகிறேன். நீங்களும் உங்கள் வீரர்களும் எப்படியாவது போங்கள்!"
மாமல்லர் சற்று நேரம் பூமியையும் சற்று நேரம் வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, "தளபதி! கிளம்புங்கள், போகலாம். நமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதற்கு இது தருணமல்ல. காஞ்சி மாநகரை நெருங்கிப் பகைவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாமற் போனால் நீங்களும் நானும் கையிலே வாள் பிடித்து என்ன பயன்? என் தந்தையிடம் கோட்டைக் கதவைச் சாத்தக் கூடாதென்றும், காஞ்சிக்கு வெளியே பகைவர்களுடன் போர் நடத்தியே தீர வேண்டும் என்றும் கோரப் போகிறேன் நீர் என்னை ஆமோதிப்பீர் அல்லவா?"
பரஞ்சோதி ஒரு கணம் யோசித்துவிட்டு, "ஐயா! மகேந்திர பல்லவர் தங்களைப் பெற்றெடுத்த தந்தை. அவரிடம் உரிமையுடன் சண்டை பிடித்து எதையும் தாங்கள் கேட்கலாம். ஆனால் பல்லவேந்திரர் என்னுடைய தந்தையும், சக்கரவர்த்தியும், சேனாதிபதியும் மட்டும் அல்ல. அவரே என்னுடைய கடவுள். அவருடைய சித்தம் எதுவோ, அதுதான் என்னுடைய விருப்பம். அதற்கு மாறாக என்னால் ஒன்றும் சொல்லவும் முடியாது; செய்யவும் முடியாது. ஆனால், தங்களுடைய தந்தையின் கட்டளை பெற்றுத் தாங்கள் பகைவர்களுடன் போரிடச் செல்லும் பட்சத்தில் தங்களுக்கு ஒரு அடி முன்னாலே நான் இருப்பேன். என் உடம்பில் உயிர் உள்ள வரையில் இந்த வாக்கை மீறமாட்டேன்!" என்றார்.
நண்பர்கள் இருவரும் ஆயத்தமாக நின்ற குதிரைகள் மீதேறிக் 'கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகரை' நோக்கி விரைந்தார்கள்.