உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/தேசத்துரோகி

விக்கிமூலம் இலிருந்து
29. தேசத்துரோகி


நதிக்கரைப் பாறையில் புலிகேசிக்கும் புத்த பிக்ஷுவுக்கும் நடந்த சம்பாஷணை மேலும் மேலும் குரோதம் நிறைந்ததாகிக் கொண்டு வந்தது. சிவகாமியின் விஷயத்தில் நாகநந்திக்கு ஏற்பட்டிருந்த மதிமயக்கத்தைப் போக்கப் புலிகேசிச் சக்கரவர்த்தி முயன்றார். ஆனால் இது சம்பந்தமாகச் சக்கரவர்த்தி சொன்னதெல்லாம் நாகநந்தியின் குரோதத்தை இன்னும் அதிகமாக்கி வந்தது. சிவகாமியைப் பற்றிப் புலிகேசி குறைவுபடுத்திப் பேசப் பேசப் புத்த பிக்ஷு ஆவேசத்துடன் அவளை உயர்த்திப் பேசலானார். சகோதரர்களுக்கிடையில் மேற்படி விவாதம் ரொம்பவும் காரமடைந்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளுவதற்கும் ஆயத்தமாகி விட்ட சமயத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்குச் சிறிது தூரத்தில் நடந்த ஒரு கோரமான சம்பவம் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது.

கேட்பவர்களின் இருதயம் நின்று போகும்படியான பயங்கரக் குரலில் "ஐயோ! ஐயோ!" என்று அலறிக் கொண்டு ஒரு மனிதன் ஓடி வந்து வாதோரா நதியின் செங்குத்தான கரையின் மீது ஒருகண நேரம் நின்றான். மறுபடியும் "ஐயோ!" என்று அலறி விட்டு விரைந்தோடிய நதிப் பிரவாகத்தில் குதித்தான். குதித்தவுடனே தண்ணீரில் மூழ்கினான். சில வினாடி நேரத்துக்கெல்லாம் அவன் குதித்த இடத்துக்குச் சற்றுத் தூரம் கிழக்கே அவனுடைய தலை மட்டும் மேலே எழுந்தது. பாறையே பிளந்து போகும்படியான ஒரு பயங்கரக் கூச்சல் கேட்டது. மறுபடியும் தண்ணீரில் முழுகியவன் அடியோடு முழுகியவன்தான். அவன் முழுகியதற்கு அடையாளம் கூட அங்கே காணப்படவில்லை. மலை வீழ் நதியான வாதோரா சலசல சப்தத்துடன் விரைந்து பாய்ந்து கொண்டிருந்தது.

சில வினாடி நேரத்துக்குள் நடந்து முடிந்து விட்ட மேற்படி சம்பவத்தைப் புலிகேசிச் சக்கரவர்த்தி கண்கொட்டாத பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். நதிப் பிரவாகத்தில் விழுந்த மனிதன் மேலே எழும்பி அலறி விட்டு மறுபடியும் நீரில் மூழ்கிய போது புலிகேசியின் இருதயத்தை யாரோ இரும்புக் கிடுக்கியினால் இறுக்கிப் பிடித்தாற்போலிருந்தது. சற்று நேரம் அந்த மனிதன் முழுகிய இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் புலிகேசி திரும்பி நாகநந்தியைப் பார்த்தார். பிக்ஷுவின் முகத்தில் அப்போது தோன்றிய புன்னகை புலிகேசியின் உடம்பைச் சிலிர்க்கச் செய்தது. "அண்ணா! அந்தச் சைத்திரிகனை நீ என்ன செய்து விட்டாய்?" என்று புலிகேசி கேட்டதும், புத்த பிக்ஷு ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்து விட்டுச் சொன்னார்: "அவனையா? நானா? வேறொன்றும் செய்யவில்லை! அப்பேர்ப்பட்ட அற்புதமான சித்திரத்தை வரைந்தவனுக்கு ஆசி கூறினேன். என்னுடைய ஆசியைப் பெறுவதற்காக அவன் தலையைக் குனிந்த போது அவனுடைய பின் கழுத்தில் இந்தச் சுண்டு விரல் நகத்தினால் ஒரு கீறல் கீறினேன். இந்த நகத்திலுள்ள விஷம் அவனுடைய உடம்பின் இரத்தத்தில் கலந்ததும் அவனுக்கு எரிச்சல் எடுத்திருக்கும். சற்று நேரத்துக்கெல்லாம் அவன் உடம்பு முழுவதும் அக்கினியால் தகிக்கப்படுவது போல் இருந்திருக்கும். அவனுடைய மூளையும் கொதிப்பெடுத்திருக்கும். உடம்பையும் மூளையையும் குளிரச் செய்வதற்காகவே அப்படி விரைந்து ஓடி வந்து நதியில் குதித்தான். அவனுடைய உடம்பும் மூளையும் குளிர்ந்ததோடு உயிரும் குளிர்ந்து போய் விட்டது!...." "ஐயோ! அண்ணா! நீ எப்போது இத்தகைய கொடூர ராட்சஸன் ஆனாய்? கருணையே வடிவமான புத்த பகவானுடைய சங்கத்தில் சேர்ந்து காவி வஸ்திரம் அணிந்து கொண்டு இப்படிப்பட்ட கோர கிருத்தியங்களைச் செய்ய எப்படி உன் மனம் துணிகிறது?" என்று புலிகேசி கேட்டார்.

நாகநந்தி புலிகேசியை உற்றுநோக்கிச் சீறலுடன் கூறினார்; "ஓஹோ! நான் கருணையற்ற ராட்சஸன் என்பது இப்போது தான் தெரிகிறதோ? உனக்காகவும் உன் இராஜ்யத்துக்காகவும் இதை விட ஆயிரம் மடங்கு கோர கிருத்தியங்களை நான் செய்யவில்லையா? அப்போதெல்லாம் நீ ஏன் எனக்குத் தர்மோபதேசம் செய்ய முன்வரவில்லை? காஞ்சி நகரத்துக் குடிதண்ணீரில் விஷத்தைக் கலந்து அந்நகர மக்களையெல்லாம் கொன்று விடுவதாக நான் சொன்ன போது நீ சந்தோஷத்துடன் சம்மதித்ததை மறந்து விட்டாயா?..." "ஆம், ஆம்! அதையெல்லாம் நான் மறக்கவில்லை; ஆனால், அது ஒரு காலம்!" என்று கூறிப் புலிகேசிச் சக்கரவர்த்தி பெருமூச்சு விட்டார். சற்று நேரம் நதியின் பிரவாகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நாகநந்தியின் முகத்தை ஏறிட்டு நோக்கினார்.

"அண்ணா! நீ எனக்குச் செய்த உதவிகளையெல்லாம் நான் மறந்து விடவில்லை. இந்த உயிர் உன்னுடையது, ராஜ்யம் உன்னுடையது. நீ எனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கெல்லாம் இத்தனை காலமும் நான் பிரதியொன்றும் செய்யவில்லை. இப்போது செய்ய உத்தேசித்திருக்கிறேன். வாதாபி சிம்மாசனத்தில் வீற்றிருந்து சாம்ராஜ்யம் ஆளும் சுகத்தை முப்பத்தைந்து வருஷ காலம் நான் அனுபவித்து விட்டேன். எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. சாம்ராஜ்யத்தின் பொறுப்பையும் சிம்மாசனத்தின் சுகத்தையும் இனிமேல் நீ ஏற்றுக்கொள். இத்தனை காலமும் நீ அணிந்திருந்த காவி வஸ்திரத்தை நான் அணிந்து கொண்டு இந்த அஜந்தா சங்கிராமத்திலேயே மீதியுள்ள என் வாழ்நாளைக் கழித்து விடுகிறேன். பிரகிருதிதேவியும் கலைத்தேவியும் பூரண சௌந்தரியத்துடன் கொலு வீற்றிருக்கும் இந்த அஜந்தா மலையில் நீ உன்னுடைய இளம்பிராயத்தைக் கழித்தாய். நான் என்னுடைய முதுமைப் பிராயத்தை இவ்விடத்தில் கழிக்கிறேன். சாம்ராஜ்ய பாரத்தை, இனிமேல் நீ ஏற்றுக் கொண்டு நடத்து..."

இவ்விதம் புலிகேசிச் சக்கரவர்த்தி சொல்லி வந்த போது, அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் உண்மையான உள்ளத்திலிருந்து வருவது என்பதைப் புத்த பிக்ஷு தெரிந்து கொண்டார். இத்தனை நேரமும் குரோதம் கொதித்துக் கொண்டிருந்த அவருடைய முகம் இப்போது மலர்ந்தது. புலிகேசி பேச்சை இடையில் நிறுத்தி மௌனமாயிருந்த சிறிது நேரத்தில் பிக்ஷுவின் உள்ளம் வருங்காலத்தைப் பற்றிய எத்தனையோ இன்பக் கனவுகளைக் கண்டது. அந்தக் கனவுகளின் அறிகுறி ஒருவாறு அவருடைய முகத்திலே காணப்பட்டது.

"அண்ணா! என்ன சொல்லுகிறாய்? உனக்குச் சம்மதந்தானே?" என்று புலிகேசி கேட்ட போது, அவருடைய வார்த்தையில் புத்த பிக்ஷுவுக்குப் பூரண நம்பிக்கை ஏற்பட்டிருந்தபோதிலும் இன்னும் நன்றாக உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, "தம்பி! இப்போது நீ சொன்ன வார்த்தையெல்லாம் உண்மையா? அல்லது காவி வஸ்திரம் தரித்த பிக்ஷுதானே என்று என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று கேட்டார். "அண்ணா! நமது பாட்டனார் சத்யாச்ரயப் புலிகேசியின் திருநாமத்தின் மீது ஆணை வைத்துச் சொல்லுகிறேன் நான் கூறியதெல்லாம் உண்மை. இதோ இந்தக் கணமே அதை மெய்ப்பிக்கச் சித்தமாயிருக்கிறேன். இன்றைக்கே நான் பிக்ஷு விரதம் மேற்கொள்கிறேன். ஆசாரிய பிக்ஷுவினிடம் சொல்லி உனக்கும் விரதத்திலிருந்து விடுதலை வாங்கித் தருகிறேன். ஆனால், இதற்கெல்லாம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருக்கிறது. அந்தக் காஞ்சி நகரத்து நாட்டியப் பெண்ணை நீ தியாகம் செய்து விடவேண்டும்."

பெண் புலியின் மீது வேலை எரிந்து கொன்ற வேடனை ஆண் புலி எப்படிப் பார்க்குமோ, அப்படி நாகநந்தி புலிகேசியைப் பார்த்தார்! 'நடனப் பெண்ணின் சரணாகதி' சித்திரத்தை எழுதிய கலைஞனுக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே கதி ஒருவேளை புலிகேசிக்கும் நேர்ந்திருக்கக்கூடும். ஆனால், அச்சமயம் வாதோரா நதியின் மறுகரை வழியாக ஏழெட்டுப் பேர் விரைவாய் வந்து கொண்டிருந்தது தெரிந்தது; அந்த ஏழெட்டுப் பேரும் சாமான்ய மனிதர்கள் அல்ல; மந்திரிகள், தளபதிகள் முதலியோர். ஏதோ முக்கியமான, அவசரமான விஷயத்தைச் சக்கரவர்த்தியிடம் தெரிவிப்பதற்காக அவரைத் தேடி வருவதாகவும் தோன்றியது. இதைக் கவனித்த பிக்ஷு தம் உள்ளத்தில் பொங்கி வந்த குரோதத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு, "ஆ! உன்னுடைய சாம்ராஜ்ய தானத்தில் ஏதோ ஒரு இழிவான சூழ்ச்சி இருக்கிறது என்று சந்தேகித்தேன், அது உண்மையாயிற்று!" என்றார்.

"அண்ணா! நன்றாக யோசித்துச் சொல்லு! சத்யாச்ரயப் புலிகேசி வீற்றிருந்த சளுக்க குலத்துச் சிம்மாசனத்தில் ஒரு சிற்பியின் மகள் ஏறலாமா? அதற்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க முடியாது. உனக்கும் எனக்கும் மன வேற்றுமை உண்டுபண்ணிய அந்த மோகினிப் பிசாசைத் துரத்தி விட்டு, வாதாபி சிம்மாசனத்தில் ஏறி ஆயுள் உள்ள வரையில் இராஜ்யபாரத்தை நடத்து!" என்று புலிகேசி உருக்கமான குரலில் கூறினார். நாகநந்தியோ பழையபடி நாக ஸர்ப்பத்தைப் போல் சீறிக் கொண்டு, "சண்டாளா! பாதகா! நீ நாசமடைவாய்! உன் தலைநகரம் எரிந்து சாம்பலாகும்! உன் சாம்ராஜ்யம் சின்னா பின்னமாகி அழியும்! தேவேந்திரனுடைய பதவி கிடைப்பதாயிருந்தாலும் சிவகாமியை என்னால் தியாகம் செய்ய முடியாது. கேவலம் இந்தச் சளுக்க ராஜ்யத்துக்காகவா அவளைத் தியாகம் செய்யச் சொல்கிறாய்? ஒருநாளும் இல்லை! இப்படி நன்றிகெட்ட வஞ்சகத்துடன் என்னிடம் நடந்து கொண்டதற்குக் கூடிய சீக்கிரம் நீ பலன் அனுபவிக்கப் போகிறாய்! உனக்கும் எனக்கும் இந்த வினாடியோடு எல்லாவித பந்தமும் அற்றுவிட்டது. இனி உன் முகத்திலேயே நான் விழிப்பதில்லை. இதோ நான் போகிறேன், போய்ச் சிவகாமியையும் அழைத்துக் கொண்டு உன் இராஜ்யத்தை விட்டே போய் விடுகிறேன். அதோ வருகிறார்கள் பார்! அவர்கள் உன்னுடைய விநாசச் செய்தியைக் கொண்டு வருகிறார்கள்!" என்று கூறினார்.

இப்படி நெருப்பைக் கக்கும் வார்த்தைகளை நாகநந்தி கூறிக் கொண்டிருக்கும் போது நதியின் மறு கரையோடு விரைந்து வந்தவர்கள் மேற்கே சற்றுத் தூரத்திலிருந்த மூங்கில் மரப்பாலத்தின் வழியாக நதியைக் கடந்து சக்கரவர்த்தியும் பிக்ஷுவும் இருந்த பாறையை அணுகினார்கள். நாகநந்தி தமது சொல்லைக் காரியத்தில் நடத்திவைக்கும் பொருட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவர், புனராலோசனை செய்து தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டவர் போலத் தயங்கி நின்றார். வருகிறவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள் என நிச்சயமாய்த் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர் அவ்விதம் நின்றார் போலும். வந்தவர்கள் எல்லாருடைய முகத்திலும் கவலையும் பீதியும் குடிகொண்டிருப்பதைப் பார்த்த சக்கரவர்த்தி மிக்க வியப்படைந்து "எல்லோரும் கும்பலாக வந்திருக்கிறீர்களே? என்ன விசேஷம்? ஏதாவது முக்கியமான செய்தி உண்டா?" என்று கேட்டார்.

"ஆம், பிரபு! மிகவும் முக்கியமான செய்திதான். ஆனால் நம்பவே முடியாத செய்தி; சொல்லுவதற்கும் தயக்கமாயிருக்கிறது!" என்று சளுக்க சாம்ராஜ்யத்தின் பிரதம மந்திரி கூறினார். "அதென்ன அவ்வளவு முக்கியமான செய்தி? எங்கிருந்து யார் கொண்டு வந்தார்கள்! ஏன் எல்லோரும் இப்படிப் பயந்து சாகிறீர்கள்? யாராவது பகைவர்கள் சளுக்க சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறார்களா? சீக்கிரம் சொல்லுங்கள்!" "மகாப் பிரபு! தாங்களே சொல்லி விட்டீர்கள்!" "இது என்ன பிதற்றல்? நான் என்ன சொன்னேன்!" "பகைவர்கள் சளுக்க ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருவதாகச் சொன்னீர்களே." "அதுவா உண்மை?" "ஆம், சக்கரவர்த்தி!" "அதிசயமான செய்திதான்; யார் அந்தச் சத்துரு? வடக்கே ஹர்ஷராயிருக்க முடியாது; அவரிடமிருந்து சமீபத்திலே சிநேகம் நிறைந்த அழைப்புக் கடிதம் வந்திருக்கிறது. மற்றபடி மேற்கேயும் கிழக்கேயும் சத்துருக்கள் இல்லை. வந்தால் தெற்கேயிருந்துதான் வர வேண்டும் யார், காஞ்சி மாமல்லன் படையெடுத்து வருகிறானா?" "அப்படித்தான் தகவல், பிரபு!"

"ஒருநாளும் நான் நம்பமாட்டேன்; அப்படியேயிருந்தாலும் எதற்காக நீங்கள் இப்படிக் கலக்கமடைந்திருக்கிறீர்கள்? என்ன முழுகிப் போய் விட்டது?" "பெருமானே! நம்முடைய சைனியத்தில் பெரும் பகுதி நர்மதைக் கரையில் இருக்கிறது. இன்னொரு பெரும் பகுதி வேங்கியில் இருக்கிறது..." என்று பிரதம மந்திரி தயக்கத்துடன் கூறினார். "அதனால் என்ன? மாமல்லன் காஞ்சியிலிருந்து வருவதற்குள் நம்முடைய சைனியங்களை வாதாபிக்குக் கொண்டு வர முடியாதா?" "மாமல்லன் காஞ்சியில் இல்லை பிரபு! பல்லவ சைனியம் வடபெண்ணையைக் கடந்து ஒரு வாரம் ஆகிறது. இப்போது துங்கபத்திரையை நெருங்கியிருக்க வேண்டும்!" "இது என்ன விந்தை? செய்தி யார் கொண்டு வந்தது?"

"இதோ இவர்கள் வாதாபியிலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இரவு பகல் எங்கும் தங்காமல் விரைந்து வந்திருக்கிறார்கள்!" என்று பிரதம மந்திரி சொல்லி இரு தூதர்களை முன்னால் நிறுத்தினார். "உங்களை யார் அனுப்பினார்கள்? ஓலை ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று புலிகேசி திகைப்புடன் கேட்டார். "இல்லை, பெருமானே! ஓலை எழுதுவதற்குக் கூட நேரமில்லை. வாதாபிக் கோட்டைத் தலைவர் வாய்மொழியாகச் செய்தி சொல்லி அனுப்பினார். நாங்கள் ஆறு பேர் ஐந்து நாளைக்கு முன்பு கிளம்பினோம். வழியில் நாலு பேர் விழுந்து விட்டார்கள்; இரண்டு பேர்தான் மிஞ்சி வந்து சேர்ந்தோம்."

"மந்திரி! இவர்கள் பேச்சு உண்மையாயிருக்க முடியுமா? மாமல்லன் இலங்கைப் படையெடுப்புக்காகக் கப்பல்கள் கட்டிக் கொண்டிருப்பதாகவல்லவா நாம் கேள்விப்பட்டோ ம்?" "ஆம், பிரபு! நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆயினும் இவர்கள் வாதாபிக் கோட்டைத் தலைவரின் இலச்சினையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பின்னால் விவரமான ஓலையோடு வேறு தூதர்களும் வருகிறார்களாம். இவர்கள் சொல்லுவது உண்மையாயிருந்தால், பல்லவ சைனியம் இப்போது துங்கபத்திரையைக் கடந்திருக்க வேண்டும். துங்கபத்திரைக் கரையிலிருந்த சைனியத்தை அந்தப் பிரதேசத்தில் பஞ்சம் என்று கொஞ்ச நாளைக்கு முன்புதான் வேங்கிக்கு அனுப்பினோம்."

புலிகேசி சற்று நேரம் ஸ்தம்பித்து நின்றார். சட்டென்று அவர் மனத்தில் ஏதோ ஒரு உண்மை உதயமாகியிருக்க வேண்டும். சற்றுத் தூரத்தில் நின்று மேற்படி சம்பாஷணையையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நாகநந்தியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். மறுபடியும் பிரதம மந்திரியை நோக்கி, "மந்திரி! நமது ஒற்றர் படை என்ன செய்து கொண்டிருந்தது? மாமல்லன் படையெடுப்பைக் குறித்த செய்தி நமக்கு ஏன் முன்னாலேயே வரவில்லை? காஞ்சியிலிருந்து பல்லவ சைனியம் புறப்பட்ட செய்தி கூட நமக்கு ஏன் வாதாபியிலிருக்கும்போதே கிடைக்கவில்லை!" என்றார். பிரதம மந்திரி வணக்கத்துடன், "பிரபு! ஒரு வருஷத்துக்கு முன்னால் நம் ஒற்றர் படைத் தலைவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்த பொறுப்பை, நமது பிக்ஷு ஏற்றுக் கொண்டார், அடிகளைத்தான் கேட்க வேண்டும்!" என்றார். சக்கரவர்த்தி உள்பட அங்கிருந்த அனைவருடைய கண்களும் அப்போது பிக்ஷுவை நோக்கின.

புலிகேசி, "அடிகளே! மாமல்லனுடைய படையெடுப்புச் செய்தி தங்களுக்கு முன்னாலே தெரியுமா? வேண்டுமென்றே என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தீர்களா?" என்று கேட்டார். "தம்பி! உன் கேள்விக்கு இவர்கள் எல்லாருடைய முன்னிலையிலும் நான் மறுமொழி சொல்ல வேண்டுமா?" என்றார் பிக்ஷு. "அடிகளே! சற்று முன்னால் சொன்னதை மறந்து விட்டீர்களா! தங்களுக்கும் எனக்கும் இனி யாதொரு உறவும் இல்லையென்று சொல்லவில்லையா? இப்போது என்னத்திற்காக உறவு கொண்டாட வேண்டும்? உண்மையை உடனே சொல்லுங்கள்!" "அப்படியானால் சொல்லுகிறேன், மாமல்லன் படையெடுப்புச் செய்தி எனக்கு முன்னமே தெரியும். நன்றியில்லாத பாதகனாகிய உனக்குத் தண்டனை கிடைக்கும் பொருட்டே உன்னிடம் சொல்லவில்லை!" என்று நாகநந்தி கர்ஜித்தார்.

"இந்தத் தேசத் துரோகியைப் பிடித்துக் கட்டுங்கள்" என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டதும், அங்கு நின்ற எட்டுப் பேரும் பிக்ஷுவைச் சூழ்ந்து கொண்டார்கள். "பிக்ஷு மடியில் செருகியிருந்த வளைந்த சிறு கத்தியைப் பளிச்சென்று எடுத்துக் கொண்டு, "ஜாக்கிரதை! அருகில் நெருங்கியவன் உடனே யமலோகம் போவான்!" என்றார். எட்டுப் பேரும் தம்தம் உடைவாள்களை உறையிலிருந்து விரைவாக எடுத்துக் கொண்டார்கள். "அப்படிச் செய்யுங்கள்! சூர சிகாமணிகள் எட்டுப் பேர் சேர்ந்து ஒரு பிக்ஷுவைக் கத்தியால் வெட்டிக் கொல்லுங்கள். புலிகேசிச் சக்கரவர்த்தியின் பெருமை உலகமெல்லாம் பரவும். மாமல்லன் கூடப் பிரமித்துத் திரும்பிப் போய்விடுவான்!" என்று பிக்ஷு பரிகாசக் குரலில் கூறினார். அதைக் கேட்ட புலிகேசி, "நில்லுங்கள்! அந்த நீசத் துரோகியைக் கொன்று உங்கள் கத்தியை மாசுப்படுத்திக் கொள்ள வேண்டாம், விலகுங்கள்!" என்று கூவினார். அவ்விதமே எட்டுப் பேரும் விலகிக் கொண்டார்கள். எனினும் சக்கரவர்த்தியின் பேரில் பிக்ஷு பாய்ந்து விடக்கூடும் என்று எண்ணி ஜாக்கிரதையாகவே நின்றார்கள்.

பிக்ஷுவைப் பார்த்துப் புலிகேசிச் சக்கரவர்த்தி கூறினார்; "அடிகளே! உம்முடைய உயிரை வாங்குவது தவறு. உம்மை நம்பிய சகோதரனுக்கும் உமது நாட்டுக்கும் நீர் செய்த மகா துரோகத்துக்கு அது தக்க தண்டையாகாது. நீண்ட காலம் நீர் உயிர் வாழ்ந்து உம்முடைய பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்; உம்முடைய துரோகத்தை நினைத்து நினைத்துக் கண்ணீர் விட வேண்டும்; மனித உருக்கொண்ட துஷ்டப் பைசாசே! போ! வாதாபிக்குச் சென்று உன்னுடைய மோகினியையும் அழைத்துக் கொண்டு போ! உன் வாக்கை இந்த விஷயத்திலாவது நிறைவேற்று! இனி என் உயிர் உள்ளவரையில் என் முகத்தில் விழிக்க வேண்டாம்! ஒரு பெண்ணின் மோகத்துக்காக ஒரு ராஜ்யத்தையே விற்கத் துணிந்த நீசனே! போ! நெடுங்காலம் உயிரோடிருந்து உன்னுடைய துரோகத்தை நினைத்து அழுது கொண்டிரு." ஆத்திரம் ததும்பிய குரலில் விம்மலோடு கலந்து புலிகேசி கூறிய மேற்படி கடு மொழிகளைக் கேட்டுக் கொண்டு நாகநந்தி கற்சிலையைப் போல் நின்றார். புலிகேசி நிறுத்தியதும் ஒரு வார்த்தையும் மறுமொழி கூறாமல் நதிக்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பிக்ஷு போகும் திசையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த புலிகேசி, அவர் மறைந்ததும் சட்டென்று திரும்பித் தம் கண்களில் ததும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். பிறகு, அங்கு நின்றவர்களைப் பார்த்து, "மந்திரி! சேனாதிபதி! இந்தத் தூதர்கள் கொண்டு வந்த செய்தி உண்மையாகத்தான் இருக்க வேண்டும்; இதில் சந்தேகம் வேண்டாம். புத்த பிக்ஷுவின் விஷயத்தில் நீங்கள் எல்லோரும் செய்த எச்சரிக்கையை நான் அலட்சியம் செய்து விட்டேன். அதன் பலனை நானும் நீங்களும் அனுபவிக்கப் போகிறோம். என்றாலும், மோசம் ஒன்றும் போய் விடவில்லை. புலியின் வாய்க்குள்ளே வேண்டுமென்று தலையை விடுவது விளையாட்டான காரியம் அல்ல என்பதை மாமல்லனுக்குக் கற்பிப்போம். துங்கபத்திரையைக் கடந்து வந்த பல்லவ வீரன் ஒருவனாவது திரும்பிப் போகாமல் ஹதாஹதம் செய்வோம். என்னுடைய தென்னாட்டுப் படையெடுப்பு பூரண வெற்றியடையவில்லை என்ற குறை என் மனத்தில் இத்தனை நாளும் இருந்து வந்தது. அந்த மனக்குறை இப்போது தீர்ந்து விடப்போகிறது. பல்லவ நாடு சளுக்க சாம்ராஜ்யத்தோடு சேர்ந்து ஒன்றாகி விடப்போகிறது" என்றார்.