உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/புத்தர் சந்நிதி

விக்கிமூலம் இலிருந்து
43. புத்தர் சந்நிதி


சேனாதிபதி பரஞ்சோதி தம்முடன் வந்திருந்த வீரர்களுக்கு அதி விரைவாகச் சில கட்டளைகளை இட்டார். அவர்களில் நாலு பேரை மட்டும் தம்மைத் தொடர்ந்து வரும்படி ஆக்ஞாபித்துவிட்டு அந்த வீட்டின் கொல்லை முற்றத்தை நோக்கி விரைந்து சென்றார். முற்றத்தின் மத்தியில் பவளமல்லிகை மரத்தின் அருகில் இருந்த கிணற்றண்டை சென்று உட்புறம் எட்டிப்பார்த்தார். கிணற்றின் சுற்றுச் சுவர் கொஞ்சதூரம் வரையில் செங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே பாறையைப் பெயர்த்துத் தோண்டியிருந்தது; நீர் மிக ஆழத்தில் இருந்தது.

நெஞ்சு திக்கு திக்கு என்று அடித்துக் கொள்ள, பரஞ்சோதி அந்தக் கிணற்றுக்குள்ளே கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு இறங்கினார். அவருடன் மற்ற நால்வரும் இறங்கினார்கள். செங்கல் சுவரைத் தாண்டிப் பாறைச் சுவரை அவர்கள் எட்டிய பிறகு மேடும் பள்ளமும் பொக்கையும் போழையுமாக இருந்தபடியால் இறங்குவது சுலபமாயிருந்தது. கிணற்றின் முக்கால் பங்கு ஆழம் இறங்கியதும் பரஞ்சோதி 'ஆ' என்று ஆச்சரிய சப்தம் இட்டார். அங்கே பாறைச் சுவரில் ஒரு பெரிய போழை இருந்தது. அது உள்ளே ஆழமாகச் சென்றதோடு சிறிது தூரத்துக்கப்பால் ஒரே இருட்டாகவும் காணப்பட்டது. பரஞ்சோதி தம்முடன் வந்த வீரர்களுக்குச் சமிக்ஞை செய்துவிட்டு அந்தப் போழைக்குள் புகுந்தார். ஓர் ஆள் படுத்து ஊர்ந்து செல்லும் அளவில்தான் அந்தத் துவாரம் இருந்தது. ஆனால், சிறிது தூரம் அவ்விதம் ஊர்ந்து சென்றதும் துவாரம் பெரியதாயிற்று. இன்னும் சிறிது தூரம் உட்கார்ந்தபடி நகர்ந்து சென்ற பிறகு காலில் படிக்கட்டுகள் தென்பட்டன. நாலைந்து படிக்கட்டுகளில் இறங்கியதும் சமதளத்துக்கு வந்திருப்பதாகத் தோன்றியது. முதலில் சிறிது நேரம் ஒரே இருட்டாயிருந்தது. கண்கள் இருளுக்குப் பழக்கமானதும் கொஞ்சம் சுற்றுப் புறத்தோற்றத்தைப் பார்க்க முடிந்தது.

பூமிக்கு அடியிலே பாறையைக் குடைந்து அமைத்த விஸ்தாரமான மண்டபத்தின் ஓர் ஓரத்தில் தாம் நிற்பதைப் பரஞ்சோதி அறிந்தார். அவர் நின்ற இடத்துக்கு நேர் எதிரே ஒரு பெரிய புத்தர் சிலை காட்சியளித்தது. புத்தர் சிலையின் மேலே அழகிய வேலைப்பாடுள்ள விமானம் காணப்பட்டது. எதிரே இரண்டு வரிசைகளாகப் பெரிய பெரிய பாறைத் தூண்கள் நன்கு செதுக்கிச் செப்பனிடாத பெருந்தூண்கள் நின்றன. பரஞ்சோதியும் மற்ற இரண்டு வீரர்களும் அந்த மண்டபத்தில் அங்கு மிங்கும் சுற்றி அலைந்து; தூண் மறைவுகளிலும் மூலை முடுக்குகளிலும் தேடினார்கள். அங்கு மனிதர் யாரும் தென்படவில்லை. ஆனாலும் ஒரு தூணின் மறைவில் சில உடைகளும் ஆபரணங்களும் கிடைத்தன. அவை சக்கரவர்த்திக்குரியவை என்று கண்டதும் பரஞ்சோதி அவ்விடத்தில் நாகநந்தி இராஜரீக உடைகளைக் களைந்து, சந்நியாசி உடை தரித்திருக்க வேண்டுமென்று தீர்மானித்தார். ஆனால் நாகநந்தியும் அவருடன் சென்ற சிவகாமியும் எங்கே? அங்கிருந்து அவர்கள் மாயமாய் மறைந்திருப்பார்களா?

பரஞ்சோதியின் பார்வை தற்செயலாகப் புத்த பகவானுடைய சிலை மீது விழுந்தது. சட்டென்று அவருடைய மூளையில் ஓர் எண்ணம் உதித்தது. காஞ்சி இராஜ விகாரத்தில் புத்தர் சிலைக்குப் பின்னால் இருந்த இரகசிய வழி ஞாபகத்துக்கு வந்தது. உடனே பரஞ்சோதி புத்தர் சிலையை நோக்கிப் பாய்ந்து சென்றார். அங்கு, இந்தச் சிலை பாறையின் பின் சுவரோடு ஒட்டியிருந்தது. சிலைக்குப் பின்னால் துவாரமோ இரகசிய வழியோ இருப்பதற்கு இடமே இல்லை.

பரஞ்சோதி பெரும் ஏமாற்றத்திற்குள்ளானார். ஆயினும் தாம் தேடும் வழியின் இரகசியம் இந்தச் சிலையிலேதான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர் மனத்தை விட்டு அகலவில்லை. "பிரபு! புத்த பகவானே! மகாவிஷ்ணுவின் மாயாவதாரம் தாங்கள் என்று கேள்விப்பட்டது உண்மையானால் இச்சமயம் எனக்கு வழி காட்டவேண்டும். தங்களுடைய பாதாரவிந்தமே கதி!' என்று நினைத்த வண்ணம் சேனாதிபதி புத்தர் சிலையின் பாதங்களை தொட்டார். தொட்டதுதான் தாமதம் உடனே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அதாவது, புத்தர் சிலை தன் இடம் விட்டுப் பெயர்ந்து ஒரு பக்கமாகச் சிறிது நகர்ந்தது. பின்புறத்துப் பாறைச் சுவரிலே எதிர்பார்த்தபடி சுரங்க வழியும் காணப்பட்டது. 'ஆகா! புத்தபகவான் வழி விட்டார்!' என்ற குதூகலமான எண்ணத்துடன் மற்ற வீரர்களுக்குச் சமிக்ஞை செய்து விட்டுப் பரஞ்சோதி சுரங்க வழியில் பிரவேசித்து, ஓர் அடி எடுத்து வைத்தார். அப்போது தம் எதிரிலே அந்தச் சுரங்க வழியிலே அவர் சற்றும் எதிர்பாராத ஆச்சரியமான காட்சி ஒன்றைக் கண்டார்.

ஒன்றன்பின் ஒன்றாகப் பல தீவர்த்திகள் அந்தக் குறுகிய சுரங்க வழியில் வந்து கொண்டிருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு வந்த மனிதர்கள் கன்னங்கரிய கொள்ளிவாய்ப் பிசாசுகள் போலத் தோன்றினார்கள். அந்தப் பயங்கர ஊர்வலத்துக்கு முன்னால் சிறிது தூரத்தில் தலை மொட்டை அடித்த பிக்ஷு உருவம் ஒன்று தோளிலே ஒரு பெண்ணைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அதி விரைவாக ஓட்டம் ஓட்டமாக வந்து கொண்டிருந்தது. பரஞ்சோதிக்கு அப்படி வருகிறவர்கள் யார் என்ற விவரம் ஒரு நொடியில் விளங்கிவிட்டது. புத்த பிக்ஷு சுரங்க வழியில் பாதி தூரம் போவதற்குள்ளே சத்ருக்னன் தன் ஆட்களுடன் மற்றொரு பக்கத்தில் புகுந்து வந்திருக்கிறான். அவனிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிக்கப் புத்த பிக்ஷு திரும்பி ஓடி வருகிறார்.

பரஞ்சோதி மறு வினாடியே புத்த பகவான் காண்பித்த வழியிலிருந்து வெளியே வந்தார். அவரும் மற்ற வீரர்களும் பாய்ந்தோடிப் பாறைத் தூண்களின் பின்னால் மறைந்து நின்றார்கள். அவ்விதம் அவர்கள் மறைந்து கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் நாகநந்தி பிக்ஷு புத்த பகவானுடைய சிலைக்குப் பின்புறமிருந்து வெளிப்பட்டார். தோள் மீது சிவகாமியைச் சுமந்து கொண்டு வந்தார். பரஞ்சோதியும் அவருடைய வீரர்களும் மூச்சுக் கூடக் கெட்டியாக விடாமல் அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். நாகநந்தி புத்தர் சிலைக்கு எதிரில் சற்றுத் தூரத்தில் சிவகாமியைத் தரையில் கிடத்திவிட்டு எழுந்தார். புத்தர் சிலையண்டை சென்று நின்றார். ஒரு கண நேரம் அவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததாகத் தோன்றியது. ஒரு தடவை சுற்று முற்றும் பார்த்தார். பிறகு, சிவகாமியின் அருகில் சென்று உட்கார்ந்தார்.

சுரங்க வழியை அடைத்து விடுவது தான் அவருடைய நோக்கம் என்பது பரஞ்சோதிக்குப் புலப்பட்டுவிட்டது. தம் அருகில் நின்ற வீரர்களுக்குச் சமிக்ஞை செய்து விட்டு ஒரே பாய்ச்சலில் பிக்ஷுவின் அருகில் சென்றார். மற்ற வீரர்களும் வந்து சேர்ந்தார்கள். பிக்ஷுவின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். பிக்ஷு திரும்பி அவர்களை ஏறிட்டுப் பார்த்தார். இருட்டில் அவருடைய முகபாவம் ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், உடனே அவர் கூறிய வார்த்தைகள் அவர் மனோ நிலையை வெளிப்படுத்தின.

"அப்பா! பரஞ்சோதி! நீதானா? உன்னை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன். நான் தோற்றால் உன்னிடந்தான் தோற்க வேண்டுமென்பது என் மனோரதம் அது நிறைவேறிவிட்டது!" என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றார். எல்லோரும் மண்டபத்தின் நடு மத்திக்கு வந்தார்கள். நாகநந்தி பரஞ்சோதியை இரக்கம் ததும்பிய கண்களுடனே பார்த்து, "அப்பனே! இன்னும் எதற்காக இவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? இனி எங்கே நான் தப்பி ஓடமுடியும்? அந்தப் பக்கத்திலும் உன் ஆட்கள் வருகிறார்கள், இந்தப் பக்கமும் உன் ஆட்கள் நிற்கிறார்கள். என் ஆட்ட பாட்டமெல்லாம் முடிந்து விட்டது. இனிமேல் நீ சொன்னபடி நான் கேட்க வேண்டியதுதான். உன்னையும் ஆயனரையும் எப்படியாவது அஜந்தாவுக்கு வரச் செய்ய வேண்டும் என்று பார்த்தேன் அது முடியாமற் போயிற்று. அப்பனே! என்னை விட்டுவிடச் சொல்லு! நீ சொல்லுகிறதைக் கேட்டு அப்படியே நடக்கச் சித்தமாயிருக்கிறேன்" என்றார்.

இவ்விதம் நாகநந்தி கெஞ்சியது பரஞ்சோதியின் மனத்தில் சிறிது இரக்கத்தை உண்டாக்கியது. "பிக்ஷுவை விட்டுவிடுங்கள்!" என்று தம் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். வீரர்கள் நாகநந்தியை விட்டுவிட்டு சற்று அப்பால் சென்றார்கள். "பரஞ்சோதி! அந்தப் பழைய காலமெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காஞ்சி நகரத்தில் நீ பிரவேசித்த அன்று உன்னைப் பாம்பு தீண்டாமல் காப்பாற்றினேனே? அன்றிரவே உன்னைச் சிறைச்சாலையிலிருந்து தப்புவித்தேனே? அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" இவ்விதம் பேசிக்கொண்டே கண்மூடித் திறக்கும் நேரத்தில் நாகநந்தி தமது இடுப்பு ஆடையில் செருகியிருந்த கத்தியை எடுத்தார்.

புத்த பிக்ஷு கையில் கத்தி எடுத்ததைப் பார்த்ததும் பரஞ்சோதி விரைவாகப் பின்னால் இரண்டு அடி எடுத்து வைத்து தமது உறையிலிருந்த வாளை உருவினார். அந்த க்ஷண நேரத்தில் அவருடைய மனத்தில், 'ஆ! நமது உயிர் போயிற்றே! எவ்வளவோ முயற்சிகள் செய்து கடைசியில் காரியம் சித்தியாகும் தருணத்தில் இந்தப் பெருந்தவறு செய்துவிட்டோ மே!' என்ற எண்ணம் மின்னல் போலத் தோன்றியது. ஆ! இது என்ன? இந்த வஞ்சக நாகநந்தி ஏன் அந்தப் பக்கம் திரும்புகிறார்? யார் மேல் எறிவதற்காகக் கத்தியை ஓங்குகிறார்? ஆஹா! சிவகாமி தேவியின் மேல் எறிவதற்கல்லவா கத்தியைக் குறி பார்க்கிறார்? படுபாவி பாதகா! யார் செய்த அதிர்ஷ்டத்தினாலோ நாகநந்தி ஓங்கிய கையுடன் அரை வினாடி தயங்கி நின்றார். அந்த அரை வினாடியில் பரஞ்சோதி தமது வாளை ஓங்கிக் கத்தி பிடித்த புத்த பிக்ஷுவின் தோளை வெட்டினார். பிக்ஷுவின் கத்தி குறி தவறி எங்கேயோ தூரப் போய் விழுந்தது. நாகநந்தியும் அடியற்ற மரம் போல் தரையில் விழுந்தார்.