சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/அஜந்தாவின் இரகசியம்
சற்று நாம் பின்னால் சென்று சிவகாமி மனச் சோர்வுடன் மான்குட்டியை அழைத்துக்கொண்டு தாமரைக் குளத்தை நோக்கிப் போனபிறகு, ஆயனர் வீட்டில் என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும். தம் அருமை மகளைப்பற்றி, புத்த பிக்ஷு சிறிது விரஸமாகப் பேசியது ஆயனருக்குப் பிடிக்கவில்லை. எனவே, பிக்ஷுவிடம் அவர் பேசுவதை நிறுத்திவிட்டு, பரஞ்சோதியைப் பார்த்து, "தம்பி! உனக்கு என்னால் ஆகவேண்டிய உதவி ஏதாவது இருந்தால் சொல்லு!" என்றார். "நாவுக்கரசர் மடத்தில் சேர்ந்து கல்வி பயிலும் நோக்கத்துடன் காஞ்சிக்கு வந்தேன், ஐயா! சிற்பக்கலைக் கற்றுக் கொள்ளும் விருப்பமும் இருக்கிறது. தங்களைக் கண்டு தங்கள் கட்டளைப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று மாமா எனக்குச் சொல்லி அனுப்பினார். ஓலையில் எல்லாம் விவரமாக எழுதியிருந்தார்" என்றான் பரஞ்சோதி.
"ஓலை என்னத்துக்கு, தம்பி? என் அருமைச் சிநேகிதருக்காக நான் எதுவும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். நாவுக்கரசர் பெருமான் தற்சமயம் காஞ்சியில் இல்லை; ஸ்தல யாத்திரை சென்றிருக்கிறார். அதனால் என்ன! நானே நேரில் உன்னை அழைத்துப்போய் அந்தச் சிவநேசரின் மடத்தில் சேர்த்துவிட்டு வருகிறேன். உன்னைச் சக்கரவர்த்தியிடமும் அழைத்துப்போக வேண்டும், வீரச் செயல் புரிந்து எங்களைக் காத்த உன்னைப் பார்த்தால், சக்கரவர்த்தி பெரிதும் சந்தோஷப்படுவார்..." "அதுமட்டும் வேண்டாம், ஆயனரே இந்த இளைஞனிடம் உமக்கு அபிமானம் இருந்தால்..." என்று புத்த பிக்ஷு குறுக்கிட்டார்.
"ஏன் அடிகளே?" என்று ஆயனர் வியப்புடன் கேட்டார். "காஞ்சி சக்கரவர்த்தியின் காராகிருகத்திலிருந்து தப்பி வந்தவர்களுக்கு என்ன தண்டனை என்று உங்களுக்குத் தெரியாதா?" "ஏன் தெரியாது? மரண தண்டனைதான்! இந்தக் கேள்வி எதற்காகக் கேட்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை." "இவன் சக்கரவர்த்தியிடம் சென்றால் அந்தத் தண்டனைக்கு உள்ளாகும்படி நேரிடும்!" "சிவ சிவா! இதென்ன சொல்கிறீர்கள்? இவன் காராகிருகத்தில் இருந்தானா? எப்போது? எதற்காக?" "உங்களை இவன் தப்புவித்த அன்று இரவு நகரில் திக்குத் திசை தெரியாமல் அலைந்து கொண்டிருந்தான். இவனை ஒற்றன் என்பதாகச் சந்தேகித்து நகர்க் காவலர்கள் சிறையில் அடைத்து விட்டார்கள்...." "அடடா! அப்புறம்?" "அன்றிரவு இவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான்!" "என்ன? என்ன? எப்படித் தப்பினான்?" "கூரை வழியாக வெளியே வந்துவிட்டான்..."
ஆயனர் அதிசயத்துடன் பரஞ்சோதியைப் பார்த்த வண்ணம், "ஆகா! என் சிநேகிதருடைய மருமகன் இலேசுப்பட்டவன் இல்லை போலிருக்கிறது! பெரிய கைக்காரனாயிருக்கிறானே! அதனால் பாதகமில்லை, அடிகளே! இவனை நானே சக்கரவர்த்தியிடம் அழைத்துச் சென்று இவனை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவன் எங்களைப் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றியவன் என்று அறிந்தால் சக்கரவர்த்தி கட்டாயம் மன்னிப்பார்!" என்றார். "உங்களுக்காக மன்னித்துவிடுவார்; உண்மைதான்! ஆனால் இவன் உடனே போர்க்களம் போகும்படி நேரிடும். பல்லவ ராஜ்யத்தில் எங்கே பார்த்தாலும் படை திரட்டுகிறார்கள் என்று தெரியுமோ, இல்லையோ?"
இதைக் கேட்ட ஆயனர் மௌனமாக யோசிக்கலானார் அதைப் பார்த்த பிக்ஷு மேலும் கூறினார். "ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையான இவனுக்குப் போர்க்களத்தில் ஏதாவது நேர்ந்துவிட்டால், பாவம், இவன் தாயார் உம்மைச் சபிப்பாள். அதுமட்டுமல்ல; தர்மசேனரின் தமக்கையைப்போல் இன்னொரு பெண் கன்னிகையாகக் காலம் கழிக்க நேரிடும்!"
ஆயனருக்குச் சுருக்கென்றது புத்த பிக்ஷு, தம் மகளைத் தான் அவ்விதம் குறிப்பிடுகிறார் என்று அவர் எண்ணினார். ஒருவேளை அவருடைய கூற்றில் ஏதேனும் உண்மை இருக்குமோ? சிவகாமி மூன்று நாளாய் ஒருவிதமாக இருப்பதற்குக் காரணம் இந்த வாலிபன்மேல் அவளுடைய மனம் சென்றதாக இருக்கலாமோ? அப்படியிருந்தால் ஒரு விதத்தில் நல்லதுதானே! சிவகாமியை எப்படியும் மணம் செய்து கொடுக்கத்தான் வேண்டுமென்றால், தம் அருமைச் சிநேகிதரின் மருமகனுக்குக் கொடுத்து, அவனைத் தம் சீடனாக்கிக்கொள்ளுதல் நல்லதல்லவா? இவ்வாறெல்லாம் சில வினாடி நேரத்துக்குள் எண்ணியவராய் ஆயனர் பரஞ்சோதியைச் சற்றுக் கவனமாக உற்றுப் பார்த்தார்.
அவருடைய எண்ணப்போக்கை அப்படியே தெரிந்து கொண்ட புத்தபிக்ஷு, "இல்லை, ஆயனரே! நீங்கள் நினைப்பதுபோல் நடப்பதற்கில்லை. அவனுடைய மாமன் மகள் இவனுக்கென்று பிறந்து வளர்ந்து திருவெண்காட்டில் காத்துக்கொண்டிருக்கிறாள்!" என்றார். இதைக்கேட்ட ஆயனர் புத்த பிக்ஷுவை, "உமக்கு என் எண்ணம் எப்படித் தெரிந்தது?" என்று மீண்டும் கேட்கும் பாவனையில் ஒரு தடவை பார்த்துவிட்டு, மீண்டும் பரஞ்சோதியை நோக்கி, "அப்படியா, தம்பி! என் சிநேகிதரின் பெண்ணைக் கட்டிக் கொள்ளப் போகிறாயா?" என்று கேட்டார். பரஞ்சோதி சிறிது நாணத்துடன், "ஆம், ஐயா" என்றான்.
புத்த சந்நியாசி மேலும் சொன்னார்; "நாவுக்கரசர் மடத்தில் தற்போது இவனைச் சேர்ப்பதும் நல்லதில்லை. காஞ்சிக் கோட்டையை முற்றுகைக்கு ஆயத்தம் செய்து வருகிறார்கள். நாவுக்கரசர் இப்போதைக்கு மடத்துக்குத் திரும்பி வரமாட்டார். அவரைச் சோழநாட்டுக்கு ஸ்தல யாத்திரை போகும்படியாகச் சக்கரவர்த்தியே சொல்லி அனுப்பிவிட்டாராம். "அடிகளே! தங்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தெரிந்திருக்கின்றன; எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே!" என்று ஆயனர் அடங்காத ஆச்சரியத்துடன் கூறினார். "நீங்கள் இந்தக் காட்டுக்குள்ளே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்; அதனால் தெரியவில்லை. நான் நாடெல்லாம் சுற்றுகிறேன் அதனால் தெரிகிறது" என்றார் பிக்ஷு.
ஆயனர் சிறிது யோசனை செய்து, "தம்பி, இங்கேதான் இப்படியெல்லாம் குழப்பமாயிருக்கிறதே? உன் விருப்பம் என்ன?" என்று கேட்டார். "ஐயா! கல்வி கற்றுக்கொண்டு திரும்பி வருகிறேன் என்று என் ஊரில் சொல்லிவிட்டு வந்தேன். ஏதாவது ஒரு கலை பயிலாமல் திரும்பிப் போக எனக்கு விருப்பமில்லை. தங்களிடம் கல்வியும் சிற்பமும் பயில விரும்புகிறேன். கருணை கூர்ந்து என்னைத் தங்களுடைய சீடனாக அங்கீகரிக்க வேண்டும்" என்றான்.
பரஞ்சோதியின் பணிவான பேச்சைக்கேட்டு ஆயனர் பூரித்தவராய், "அப்படியே ஆகட்டும்! நீ இங்கேயே இருந்து என்னிடம் சிற்பக்கலை கற்றுக்கொள்!" என்றார். "ஆசாரிய தட்சிணை விஷயம் என்ன? அதை முன்னாலேயே வாங்கிக்கொள்ள வேண்டும், ஆயனரே!" என்று பிக்ஷு கூறியதும் அவர் பரிகாசமாகச் சொல்வதாய் எண்ணி ஆயனர் நகைத்தார். "நான் வேடிக்கை பேசவில்லை உண்மையாகத்தான் சொல்லுகிறேன். பரஞ்சோதி உங்களுக்கு அளிக்கவேண்டிய குரு தட்சிணை அஜந்தா சித்திர இரகசியந்தான்!" என்று பிக்ஷு கூறினாரோ இல்லையோ, ஆயனரின் முகத்தில் ஏற்பட்ட ஆவலையும் பரபரப்பையும் பார்க்க வேண்டுமே! அந்த க்ஷணத்தில் அவர் புதிய மனிதராக மாறிவிட்டதாகத் தோன்றியது.
"அடிகளே! முன்னமே அதைப்பற்றிக் கேட்டேன்; தாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்தப் பிள்ளைக்கும் அஜந்தா சித்திர இரகசியத்துக்கும் என்ன சம்பந்தம்? இவனால் என்ன செய்ய முடியும்?" என்று ஆயனர் கேட்டார். "நாகார்ஜுன மலையிலுள்ள புத்த ஸங்கிராமத்துக்கு அந்த இரகசியம் வந்திருக்கிறது. அவ்விடத்துக்கு யாரையாவது அனுப்பி வாங்கி வரச்சொல்ல வேண்டும். உம்முடைய புதிய சீடனைப் போல் அந்தக் காரியத்துக்குத் தகுதியான ஆளைக் காண முடியாது."
"நாகார்ஜுன மலையா? கிருஷ்ணா நதிக்கரையில் அல்லவா இருக்கிறது? வழியில் எவ்வளவோ அபாயங்கள் ஏற்படுமே?" "அபாயங்களையெல்லாம் கடந்து போய் வரக்கூடிய வீரனாகையால்தான் பரஞ்சோதியைச் சொன்னேன். இந்தப் பிள்ளை யானை மேல் வேலை எறிந்த விதத்தைத்தான் கண்ணால் பார்த்தீரே?" "ஆனாலும், வெகுதூரம் இருக்கிறதே? இவனால் கால்நடையாகப் போய்விட்டு வர முடியுமா?" "முடியாது நல்ல குதிரை ஒன்று இவனுக்கு வாங்கித் தர வேண்டும். குதிரை மட்டும் இருந்தால் ஒரு மாத காலத்தில் காரியத்தைச் சாதித்துக்கொண்டு திரும்பிவிடலாம்." ஆயனர் மிக்க ஆவலுடன் பரஞ்சோதியைப் பார்த்து, "தம்பி! உன்னால் முடியுமா? போய் வருகிறாயா?" என்று கேட்டார். பரஞ்சோதி பரக்க விழித்த வண்ணமாய், "ஆகட்டும் ஐயா தங்கள் கட்டளை எதுவானாலும் நிறைவேற்றக் காத்திருக்கிறேன். ஆனால் எங்கே போகவேண்டும் எதற்காக என்பது ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே!" என்றான். "உண்மைதான்! இவனுக்கு விவரம் தெரியாதல்லவா? தாங்களே சொல்லுங்கள், சுவாமி!"
இவ்விதம் ஆயனர் கூற, சந்நியாசி பரஞ்சோதியைப் பார்த்துச் சொன்னார்: "கேள், அப்பனே! வடக்கே வெகு தூரத்தில், கோதாவரி நதிக்கும் அப்பால் அஜந்தா என்ற மலை இருக்கிறது. வெகு காலத்துக்கு முன்னால் அந்த மலையைக் குடைந்து புத்த சைத்தியங்களை அமைத்திருக்கிறார்கள். அந்தச் சைத்தியங்களில் புத்த பகவானுடைய வாழ்க்கையையும், அவருடைய பூர்வ அவதாரங்களின் மகிமையையும் விளக்கும் அற்புதமான சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஐந்நூறு வருஷத்துக்கு முன்னால் வரைந்த அந்த ஓவியங்கள் இன்றைக்கும் வர்ணம் அழியாமல் புதிதாய் எழுதினதை போலவே இருக்கின்றன. அந்த அற்புதச் சித்திரங்களை எழுதிய சித்திரக் கலை மேதாவிகளின் சந்ததிகள் இன்னமும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் அஜந்தா குகையில் பழைய சித்திரங்களுக்குப் பக்கத்தில் புதிய சித்திரங்களை வரைந்து வருகிறார்கள். ஆயிரம் வருஷம் ஆனாலும் அழியாமலிருக்கக் கூடிய வர்ணச் சேர்க்கையின் இரகசியம் அவர்களுக்குத் தெரியும். அந்த இரகசியத்தை அறிந்து தமக்குச் சொல்லவேண்டுமென்று ஆயனர் என்னை வெகு நாளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நானும் முயற்சி செய்து வந்தேன். அந்த இரகசிய முறையை அறிந்த அஜந்தா சித்திரக்காரர் ஒருவரை எனக்குத் தெரியும். நாகார்ஜுன மலையிலுள்ள புத்த ஸங்கிராமத்தில் இப்போது அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. நீ போனாயானால் அந்த இரகசியத்தை அவரிடம் அறிந்துகொண்டு வரலாம்." பிக்ஷு இவ்விதம் சொல்லி நிறுத்தியதும், ஆயனர், "தம்பி! நீ போய் வருகிறாயா? போய் அந்த இரகசியத்தைக் கொண்டு வந்தாயானால் என் வாழ்க்கை மனோரதங்களில் ஒன்றை நிறை வேற்றியவனாவாய். ஆனால், உன்னை நான் வற்புறுத்தவில்லை!" என்றார்.
பிக்ஷுவும் ஆயனரும் பேசி வந்தபோது பரஞ்சோதியின் உள்ளத்தில் விதவிதமான கிளர்ச்சிகள் உண்டாகி மறைந்து வந்தன. அவை பெரும்பாலும் குதூகலக் கிளர்ச்சிகளாகத்தான் இருந்திருக்குமென்று நாம் சொல்லவேண்டியதில்லை; நல்ல ஜாதிக் குதிரைமேல் ஏறி நெடுந்தூரம் பிரயாணம் செய்வது என்ற எண்ணமே அவனுக்கு உற்சாகத்தை உண்டாக்கிற்று; அதோடு இவ்வளவு முக்கியமான ஒரு காரியத்துக்காக ஆயன மகாசிற்பியினால் ஏவப்பட்டு யாத்திரை போகிறதென்பது அவனுக்கு மிக்க பெருமை உணர்ச்சியையும் அளித்தது. எழுத்தாணியால் ஏட்டில் எழுதிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் காட்டிலும் இம்மாதிரி காரியந்தான் அவனுடைய இயல்புக்கு ஒத்தது என்பதை நாம் அறிவோமல்லவா?
"ஐயா! தங்களுடைய விருப்பம் எதுவோ, அதன்படி நடந்து கொள்ளுமாறு என் மாமா சொல்லியிருக்கிறார். தாங்கள் போகச் சொல்லிக் கட்டளையிட்டால் அப்படியே போய் வருகிறேன்" என்றான். அப்போது நாகநந்தி அடிகள், "தாமதிக்க நேரமில்லை, ஆயனரே! வாதாபி படைகள் காஞ்சிக்கு வருவதற்குள் இவன் போய் வந்தால் நல்லது குதிரைக்கு என்ன ஏற்பாடு?" என்று கேட்டார். "அது ஒன்றும் கஷ்டமில்லை சக்கரவர்த்தியிடம் விண்ணப்பித்துக் குதிரை வாங்குகிறேன். அஜந்தா வர்ணச் சேர்க்கை இரகசியத்தை அறிந்துகொள்வதில் எனக்கு எவ்வளவு ஆசையோ அவ்வளவு ஆசை மகேந்திர சக்கரவர்த்திக்கும் உண்டு."
"அப்படியானால், சக்கரவர்த்தியிடம் பிரயாண அனுமதி இலச்சினையும் வாங்கிவிடுங்கள். யுத்த சமயமானதால், பரஞ்சோதி போகும் வழியில் ஏதாவது இடையூறு ஏற்படலாம்." "உண்மைதான், இலச்சினையும் வாங்கிவிடுகிறேன்." "இதில் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவே வேண்டாம். பௌத்த சமயிகள் விஷயத்தில் சக்கரவர்த்தியின் மனோபாவம் தான் உங்களுக்குத் தெரியுமே!" புத்த பிக்ஷு இவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கும்போது தூரத்தில் பேரிகை முழக்கமும் சங்கநாதமும் கேட்டன. "அடிகளே! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வருகிறது! இதோ மகேந்திர சக்கரவர்த்தியே வருகிறார்!" என்று குதூகலத்துடன் கூறினார் ஆயனர்.
நாகநந்தி அடிகளின் கடுகடுப்பான முகத்தில் புன்னகை தோன்றியது. அவர் சிறிது யோசித்த வண்ணமாய் அங்குமிங்கும் பார்த்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவரைப்போல், "ஆயனரே, நல்ல சகுனந்தான் இந்தச் சமயத்தில் இவ்விடம் சக்கரவர்த்தியே விஜயம் செய்வதானது நமது காரியம் ஜயமாகப் போகிறதென்பதற்கு அறிகுறி. ஆனால், நானும் பரஞ்சோதியுந்தான் இச்சமயம் பூஜை வேளையில் கரடிகளாக இருக்கிறோம். எங்களைச் சக்கரவர்த்தி பார்த்துவிட்டால் எல்லாக் காரியமும் கெட்டுவிடும். சக்கரவர்த்தி வந்துவிட்டுப் போகும் வரையில் நாங்கள் புத்த பகவானைச் சரணடைகிறோம். புத்த பகவானுடைய சிலையை எப்போதும் பெரிதாகச் செய்யவேண்டுமென்று ஏற்படுத்திய மகா புருஷர் நாகார்ஜுன பிக்ஷுவின் தீர்க்க திருஷ்டியை என்னவென்று புகழ்வது?" என்றார்.
ஆயனர் தயங்கி, "ஒருவேளை தெரிந்துவிட்டால்...?" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது பிக்ஷு பரஞ்சோதியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று புத்தர் சிலையின் பின்னால் மறைந்து கொண்டார். இதற்குள் குதிரைகளின் காலடிச் சத்தம் நெருங்கிவிடவே, ஆயனருக்கு யோசிப்பதற்கே நேரமில்லாமல் போயிற்று. "ஜாக்கிரதை அடிகளே!" என்று சொல்லிவிட்டுச் சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக விரைந்து வாசற்பக்கம் சென்றார்.
சக்கரவர்த்தியும் குமாரரும் விடைபெற்றுச் சென்ற பிறகு வீட்டுக்குள் நுழைந்த சிவகாமிக்கு, புத்தர் சிலைக்குப் பின்னாலிருந்து நாகநந்தியும் பரஞ்சோதியும் கிளம்பியது மிக்க வியப்பை அளித்தது என்று சொன்னோம் அல்லவா? ஆனால் அதே காட்சியானது ஆயனருக்கு சிறிதும் வியப்பையளித்திராது என்பதை மேலே கூறிய விவரங்களிலிருந்து வாசகர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். எனினும், சிவகாமியைக் காட்டிலும் ஆயனரிடத்திலே தான் பரபரப்பு அதிகமாகக் காணப்பட்டது. "அடிகளே! நல்ல வேளையாய்ப் போயிற்று; எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து தப்பினோம்?" என்றார் ஆயனர்.
"புத்த பகவானைச் சரணமாக அடைந்தவர்களுக்கு அபாயமே கிடையாது. இருக்கட்டும் அசுவமேத யாகத்தில் குதிரையை மறந்துபோன கதையாக, நீரும் சக்கரவர்த்தியிடம் குதிரை கேட்க மறந்துவிட்டீரல்லவா?" என்றார் புத்த பிக்ஷு. "மறக்கவில்லை, அடிகளே! இந்த இடத்துக்கு வந்ததும் சக்கரவர்த்தி கூறிய வார்த்தை என்னைக் கதிகலங்கச் செய்து விட்டது. அப்புறம் குதிரையைப் பற்றிக் கேட்க எனக்கு நா எழவில்லை!" "ஆமாம்; சக்கரவர்த்தி இராஜாங்கத் துரோகத்துக்காக உம்மைத் தண்டிக்கப் போவதாகச் சொன்னபோது என்னைக் கூட ஒருகண நேரம் தூக்கிவாரிப் போட்டுவிட்டது!" பிக்ஷுவும் பரஞ்சோதியும் புத்தர் சிலைக்குப் பின்னாலிருந்து வெளியே வந்தவுடன், மூன்று பேரும் ஏற்கெனவே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். அப்போது சிவகாமியும் அந்த இடத்துக்கு வந்து சேரவே, புத்த பிக்ஷு அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "சிவகாமியிடம் நீங்கள் எல்லா விவரங்களையும் சொல்ல வேண்டும். எங்களை ஏதோ பேயோ பிசாசோ என்று அவள் சந்தேகிக்கிறாள் போலிருக்கிறது!" என்றார்.