சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/ஒரு குதிரை
பல்லவ சக்கரவர்த்தியையும் அவருடைய திருக்குமாரரையும் பார்த்தவுடனே, சற்றுத் தூரத்திலேயே சிவிகை தரையில் இறக்கப்பட்டது. ஆயனரும் சிவகாமியும் சிவிகையிலிருந்து இறங்கிப் பயபக்தியுடன் நடந்து வந்தார்கள். "ஆயனரே! வாருங்கள்! சிவகாமியையும் அழைத்து வந்தீர்களா? மிகவும் நல்லது. பிரயாணம் சௌக்கியமாயிருந்ததா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "பல்லவேந்திரா! தங்களுடைய குடை நிழலின் கீழ்ப் பிரயாணம் சௌக்கியமாயிருப்பதற்குக் கேட்பானேன்?" என்று கூறிய வண்ணம் ஆயனார் அருகில் வந்து வணங்கினார்.
அவருக்கு பின்னால் அடக்கத்துடன் வந்த சிவகாமியும் சக்கரவர்த்தியை நமஸ்கரித்தாள். அவளுடைய உள்ளத்தில் சக்கரவர்த்தியிடம் பக்தியும் மரியாதையும் நிறைந்திருந்தன. அதே சமயத்தில் இன்னதென்று தெரியாத ஒருவகைப் பயமும் குடிகொண்டிருந்தது. "சிவகாமி! உனக்கு மங்களம் உண்டாகட்டும்! உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கும் பரத சாஸ்திரக் கலை மேலும் மேலும் வளர்ந்து பூரணம் அடையட்டும்!" என்று மகேந்திர பல்லவர் ஆசி கூறிவிட்டு, ஆயனரைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினார். "ஆயனரே! இன்றைக்கு உங்கள் பிரயாணம் சௌகரியமாயிருந்தது என்று சொன்னீரல்லவா? இனி நெடுகிலும் அப்படியே இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த யுத்தம் முடியும் வரையில் சாலையிலே சைன்யங்களின் நடமாட்டம் அதிகமாயிருக்கும். ஆகையால் இன்னும் கொஞ்சகாலத்துக்கு நீர் இங்கேயே வந்து தங்கியிருப்பது நல்லது.."
ஆயனருக்கு தூக்கிவாரிப் போட்டது அரண்ய வீட்டில் அரை குறையாகச் செய்யப்பட்டுக்கிடந்த நடன சிற்ப உருவங்கள் எல்லாம் அவருடைய கண் முன்னால் நின்றன. "பல்லவேந்திரா!.." என்று ஏதோ சொல்லத் தொடங்கினார். மகேந்திரர் தமது குரலைச் சிறிது கடுமைப் படுத்திக் கொண்டு, "மறுவார்த்தை வேண்டாம் நீரும் உம் புதல்வியும் நாளை முதல் இங்கே வந்துவிட வேண்டியது இது நமது ஆக்ஞை!" என்றார். ஆயனர் நடுங்கியவராய், "பல்லவேந்திரா! தங்கள் ஆக்ஞைக்கு மறு வார்த்தையும் உண்டா? அவ்விதமே செய்கிறேன்" என்றார்.
"ஆயனரே! இந்தக் கோயில்களை எவ்வளவு சீக்கிரமாக வேலை செய்யலாமோ அவ்வளவு சீக்கிரமாக முடிக்க வேண்டும். கோயில்கள் பூர்த்தியாகும் வரையில் நீர் வேறு எந்த வேலையையும் கவனிக்க வேண்டியதில்லை. இந்த வேலைக்காக நீர் எப்போது எவ்வளவு திரவியம் கேட்டாலும் கொடுக்கும்படியாகத் தனாதிகாரிக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். இன்னும் உமக்கு வேண்டிய ஆட்களையும் வேறு வசதிகளையும் உடனுக்குடன் அனுப்பும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். எந்தக் காரணத்தினாலாவது காரியம் குந்தகப்படுவதாயிருந்தால் நீர் குமார சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்பி வேண்டியதைத் தெரியப்படுத்தலாம்" என்று சக்கரவர்த்தி கூறியதும், அருகில் நின்ற மாமல்லரை ஆயனர் நோக்கினார்.
"ஆம், ஆயனரே! இனிச் சிலகாலத்துக்கு உமக்கு வேண்டியதையெல்லாம் மாமல்லரிடந்தான் தெரியப்படுத்த வேண்டும். நாளைய தினம் பல்லவ சைனியத்துடன் நான் போர்க்களத்துக்குப் புறப்பட்டு செல்கிறேன். நான் திரும்பி வரும்வரையில் பல்லவ சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் சகல பொறுப்புக்களையும் மந்திரி மண்டலத்தார் மாமல்லருக்கு அளித்திருக்கிறார்கள். நாளை முதல் மாமல்லர்தான் சக்கரவர்த்தி" என்றார் மகேந்திர பல்லவர்.
சக்கரவர்த்தி ஆயனரிடம் சற்றுக் கடுமையான குரலில் கூறி வந்த மொழிகளைக் கேட்டுக் கவலையும் பயமும் கொண்டிருந்த சிவகாமி அவருடைய கடைசி வார்த்தைகளைக் கேட்டதும் அளவில்லாத குதூகலம் அடைந்தாள். அவளுடைய மனத்தில் பலவித இன்பகரமான எண்ணங்கள் பொங்கித் ததும்பின. அவற்றுள் முக்கியமானது மாமல்லர் இப்போது போர்க்களத்துக்குப் போகவில்லை என்பதுதான். அதனோடு, சக்கரவர்த்தியும் போய் விடுகிறார். மாமல்லர் சக்கரவர்த்திக்குரிய சர்வாதிகாரங்களுடன் இருக்கப் போகிறார். இனி அவரும் தானும் அடிக்கடி சந்திப்பதற்குத் தடையொன்றும் இராது! தாமரைக் குளக்கரையில் மாமல்லரைச் சந்தித்து அளவளாவுவதைப் பற்றிய பகற் கனவுகள் சிவகாமியின் உள்ளத்தில் எழுந்தன, முகத்தில் அவளை அறியாமல் முறுவல் தோன்றியது. ஆசை ததும்பிய கண்களின் ஓரத்தினால் மாமல்லரை அவள் பார்த்தாள். ஆனால், ஐயோ! இதென்ன? அவருடைய கருணை ததும்பும் முகத்தில் இப்போது ஏன் இந்தக் கடுகடுப்பு? தன்னை ஏன் அவர் திரும்பிப் பார்க்கவில்லை? ஒருவேளை தான் அவ்விடம் வந்ததே அவருக்குப் பிடிக்கவில்லையோ?
பின்னரும் இரண்டு மூன்று தடவை சிவகாமி மாமல்லரின் முகத்தை ஆவலுடன் நோக்கினாள். அவர் அவள் பக்கம் பார்க்கவே இல்லை. நேற்றுத் தாமரைக் குளத்தில் அகன்ற கண்களால் விழுங்கி விடுபவர் போல் தன்னைப் பார்த்தவர் பின்னர் வீட்டிலே சக்கரவர்த்தியும் ஆயனரும் பேசிக் கொண்டிருந்தபோது அடிக்கடி கண்களினாலே தன்னுடன் இரகசியம் பேசியவர், இப்போது தன்னைப் பார்க்கவும் விரும்பாதவர்போல் இருப்பதன் காரணம் என்ன? சிவகாமியின் கண்களில் கண்ணீர் ததும்பும் போலிருந்தது. அவள் விரைவாக அங்கிருந்து அப்பால் சென்று ஒரு பாறையின் பின்னால் ஒதுங்கி நின்றாள்.
ஆனால், நரசிம்மருடைய மனநிலை உண்மையில் எவ்வாறு இருந்தது? ஆம்; அவர் கோபம் கொண்டுதானிருந்தார், ஆனால் யார்மீது என்பதை நாம் அறியோம். அது நரசிம்மருக்கே தெரிந்திராதபோது நமக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? மாமல்லருடைய உள்ளத்திலே சிவகாமியிடம் பிரேமை பொங்கிக் கொண்டிருந்தது. சிவிகையிலே அவளுடைய திவ்விய வதனத்தைப் பார்த்ததும் அவருக்கு எல்லையில்லாத குதூகலம் ஏற்பட்டது. உடனே ஓடிச்சென்று அவளை வரவேற்க வேண்டுமென்றும், கையைப் பிடித்துச் சிவிகையிலிருந்து இறக்கி விடவேண்டுமென்றும் ஆவல் பொங்கிற்று. அதெல்லாம் முடியாமற்போகவே அவரது ஆசை கோபமாக மாறியது. அந்தக் கோபமானது எல்லாவற்றையும் எல்லாரையும் தழுவி நின்றது. பெரிய சாம்ராஜ்யத்துக்கு உரிமையுடன் பிறந்த தமது பிறப்பின் மேலேயே கோபங்கொண்டார். "எதற்காகச் சக்கரவர்த்தியின் அரண்மனையிலே நாம் பிறந்திருக்கவேண்டும்? ஏழைச் சிற்பியின் மகனாக ஏன் பிறந்திருக்கக் கூடாது?" என்று எண்ணினார்.
தாம் போர்க்களத்துக்குப் போகப்போவதில்லை என்று தந்தை சொன்னதும் சிவகாமியின் முகத்தில் பூத்த புன்முறுவல் அவருடைய கோபத்துக்குத் தூபம் போட்டது போலாயிற்று. போர்க்களத்துக்குப் போகாமல் அரண்மனையில் உட்கார்ந்திருப்பது அவமானம் என்பதை அவள் உணரவில்லை! போர்க்களத்துக்குப் போகாவிட்டாலும் அவளை அடிக்கடி பார்க்கவாவது முடியப் போகிறதா? அதுவும் இல்லை. காஞ்சிக் கோட்டையை விட்டு வௌிக் கிளம்பக் கூடாது என்று தந்தை வாக்குறுதி வாங்கிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அறியாமல் சிவகாமி புன்னகை பூத்து மகிழ்கிறாள்! இம்மாதிரி எண்ணங்களினால் நரசிம்மருடைய கோபம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டு வந்தது.
மனோலோகத்தில் இந்த நாடகம் நடந்துகொண்டிருக்கையில், சக்கரவர்த்தியும் ஆயனரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேசும்போதே தம்முடைய முகத்தையும் மாமல்லருடைய முகத்தையும் ஆயனர் மாறி மாறி ஏறிட்டுப் பார்ப்பதைக் கவனித்த சக்கரவர்த்தி, "ஆயனரே! ஏதாவது கோரிக்கை உண்டா? என்னிடமோ மாமல்லரிடமோ தெரியப்படுத்த வேண்டியது ஏதாவது இருக்கிறதா?" என்று வினவினார். ஆயனர் தயங்கித் தடுமாறி, "ஆம், பல்லவேந்திரா! எனக்கு ஒரு குதிரை வேண்டும்!" என்றார். "என்ன கேட்டீர்?" "நல்ல குதிரை ஒன்று வேண்டும்!"
"குதிரையா? குதிரை வேண்டும் என்றா கேட்டீர்? ஆயனரே! அதைக்காட்டிலும் என்னுடைய உயிரை நீர் கேட்டிருக்கலாம். இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தையே கேட்டிருக்கலாம்! நன்றாய்க் குதிரை கேட்டீர் ஆயனரே! தென்னாடு என்றும் கண்டிராத மகா பெரிய யுத்தம் வந்திருக்கிறது என்று உமக்குத் தெரியாதா! காஞ்சியிலிருந்து தினந்தோறும் எத்தனை தூதர்கள் நாலா பக்கங்களுக்கும் போக வேண்டியிருக்கும் என்று தெரியாதா? குதிரையைத் தவிர வேறு ஏதாவது கேளும்!" என்று சக்கரவர்த்தி சரமாரியாகப் பொழிந்து நிறுத்தினார்.
மகேந்திர பல்லவர் இவ்வளவு படபடப்புடன் பேசிக் கேட்டு ஆயனர் அறியாதவராதலால் மிரண்டு ஸ்தம்பித்து நின்றார். "ஓஹோ! உமக்கு வேறு ஒன்றும் வேண்டாம்; குதிரை தான் வேண்டும் போலிருக்கிறது. பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பி ஒரு குதிரையை யாசித்தார், அதை மகேந்திர பல்லவன் கொடுக்கவில்லை என்ற பழிச்சொல் எனக்கு வேண்டாம். குதிரை தருகிறேன்; ஆனால், எதற்காக, என்றுமட்டும் சொல்லும். நீரும் சிவகாமியும் பிரயாணம் செய்வதற்கு வேண்டிய சிவிகைகளும் சிவிகை தூக்கும் ஆட்களும் இருக்கிறார்கள் அல்லவா? பின் குதிரை எதற்கு" என்று சக்கரவர்த்தி கேட்டு நிறுத்தினார்.
ஆயனர் சற்றுத் தைரியமடைந்து, "பல்லவேந்திரா! மிகவும் முக்கியமான ஒரு காரியத்தை முன்னிட்டுத்தான் கேட்டேன். ஆனால், அதனாலே யுத்த காரியங்கள் தடைப்படுவதாயிருந்தால்.." என்று நிறுத்தினார். "அந்த முக்கியமான காரியம் என்ன? எனக்குத் தெரியலாமல்லவா? அல்லது ஏதேனும் இரகசியமா, ஆயனரே?" "பிரபு! இரகசியந்தான்! ஆனால், தாங்கள் அறியக்கூடாத இரகசியம் அல்ல. அஜந்தா வர்ணச் சித்திரங்களின் இரகசியத்தை அறிய வேண்டுமென்று எத்தனையோ தடவை நாம் பேசிக் கொண்டதில்லையா? அந்த வர்ண இரகசியத்தை அறிந்தவர் ஒருவர் நாகார்ஜுன பர்வதத்தில் உள்ள புத்த சங்கிராமத்தில் தற்சமயம் இருக்கிறார்..."
"இதை முன்னமே ஏன் சொல்லவில்லை, ஆயனரே? அவ்வளவு முக்கியமான காரியமென்று தெரிந்திருந்தால், ஆட்சேபமே சொல்லியிருக்க மாட்டேனே? அஜந்தாவின் அற்புதச் சித்திரங்களை நேரில் போய்ப் பார்த்து வரவேண்டுமென்ற ஆசையினால் வாதாபி புலிகேசியுடன் சிநேகம் செய்து கொள்ள வேண்டுமென்றுகூட ஒரு காலத்தில் எண்ணியிருந்தேன். அதெல்லாம் பகற்கனவாய்ப் போய்விட்டது. போகட்டும், குதிரை அவசியம் தருகிறேன்; ஆயனரே! குதிரை மட்டும் போதுமா, இன்னும் ஏதாவது வேண்டுமா?"
"பல்லவேந்திரரின் ரிஷப இலச்சினை பதித்த பிரயாணச் சீட்டும் வேண்டும், இது யுத்த காலமல்லவா?" "அதுவும் தருகிறேன் இவ்வளவு முக்கியமான காரியத்துக்கு யாரை அனுப்புவதாக உத்தேசம், ஆயனரே, ஒருவேளை நீரே போவதாக உத்தேசமா?" "எனக்குக் குதிரை ஏறவே தெரியாது, பிரபு! என்னுடைய சீடன் ஒருவனை அனுப்புகிறேன்." "பகைவர் படைகள் வரும் வழியிலே அவன் போக வேண்டியிருக்குமே? கையில் நல்ல ஆயுதம் எடுத்துப் போக வேண்டும். இதோ இந்த வேலை அவனிடம் கொடுத்து அனுப்புங்கள்!" என்று கூறிச் சக்கரவத்தி, நரசிம்மரிடமிருந்து தாம் வாங்கி வைத்திருந்த வேலை நீட்டினார்.
ஆயனர் சற்றுத் தயங்கி நிற்கவே, "ஏன் தயக்கம்? இந்த வேல் நீர் அனுப்பப் போகும் வாலிபனுடைய வேல்தான்! மதயானையின் கோபத்திலிருந்து உம்மையும் சிவகாமியையும் பாதுகாத்த ஆயுதந்தான்; பரஞ்சோதி இதை வாங்கிக்கொள்ள ஆட்சேபிக்க மாட்டான்" என்றார் சக்கரவர்த்தி. "இதைக் கேட்ட ஆயனர் மட்டுமல்ல நரசிம்மரும் சிவகாமியும்கூட ஆச்சரியக்கடலில் மூழ்கினார்கள். ஆயனர் தட்டுத் தடுமாறி, "பல்லவேந்திரா! தங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றார்.
"புத்த பகவான் என் கனவிலே வந்து சொன்னார்! அன்று உம் வீட்டில் தம்முடைய சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவர்களைப் பற்றியும் புத்தர் எனக்குக் கூறினார். ஆயனரே! பல்லவ சக்கரவர்த்தியின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாமல் பல்லவ சாம்ராஜ்யத்தில் எதுவும் நடக்க முடியாது என்று உமக்குத் தெரியாதா?" உடனே ஆயனர், கைகூப்பி வணங்கி, "பல்லவேந்திரா! நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிக்க வேண்டும். சித்திரக் கலையில் உள்ள ஆசையினால் இந்தக் காரியத்தில் இறங்கினேன்" என்று தொண்டையடைக்கக் கூறினார்.
"சிற்பியாரே! அஜந்தா இரகசியத்தை அறிவதில் உமக்கு எவ்வளவு ஆசையோ அவ்வளவு எனக்கும் உண்டு. திவ்வியமாய்ப் பரஞ்சோதியை அனுப்பி வையும். ஆனால், இதெல்லாம் எனக்குத் தெரிந்ததாக அந்தப் புத்த பிக்ஷுவிடம் மட்டும் சொல்ல வேண்டாம். ஏனோ தெரியவில்லை; பௌத்தர்களுக்கு என் பேரில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் தோன்றுகின்றன. புத்த பகவானிடம் எனக்குள்ள பக்தியை அவர்கள் அறியவில்லை. ஆயனரே! குன்றைக் குடைந்து அமைக்கும் இந்த ஐந்து கோயில்களில் ஒன்றில் புத்த பகவானுடைய பிரம்மாண்ட சிலையொன்று செய்து வைக்கப் போகிறேன். அதைப்பற்றித்தான் நீர் வரும் போது மாமல்லரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!" என்றார் சக்கரவர்த்தி.
இவ்விதம் இங்கு ரஸமான சம்பாஷணை நடந்து கொண்டிருந்த போது, பாறை ஓரத்தில் சற்று மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமியின் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் அலையெறிந்து எழுந்தன. "இந்தச் சக்கரவர்த்திதான் எவ்வளவு சதுரராயிருக்கிறார்! புத்த பிக்ஷுவைப்பற்றி மாமல்லரிடம் நாம் எச்சரிக்கை செய்ய வேணடுமென்றிருக்க, இவருக்கு ஏற்கெனவே எல்லாம் தெரிந்திருக்கிறதே! இவரிடம் எதையும் மறைத்து வைக்க முடியாது போலிருக்கிறதே! ஒருவேளை நம்முடைய இரகசியத்தையும் இவர் அறிந்திருப்பாரோ? அதனால் தான் ஒருவேளை குமார சக்கரவர்த்தி நம்மிடம் இவ்வளவு பாராமுகமாக இருக்கிறாரோ? நாம் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ?.."
இவ்விதம் எண்ணாததெல்லாம் எண்ணி அவள் உள்ளம் ஏங்கிற்று. விரைவிலே குமார சக்கரவர்த்தியைத் தனிமையில் பார்த்து அவருடைய கோபத்துக்குக் காரணம் தெரிந்து கொண்டாலன்றி, அவளுக்கு மனச்சாந்தி ஏற்படாதென்று தோன்றியது. தற்செயலாகச் சிவகாமியின் பார்வை கீழே தரையில் கிடந்த ஒரு காவிக் கட்டியின் மேல் விழுந்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று. அந்தக் காவிக் கட்டியைக் குனிந்து எடுத்துக் கொண்டு பாறையில் சித்திரம் வரையலானாள்.
குளத்தின் தண்ணீருக்கு அடையாளமாக அலையைப் போன்ற இரு கோடுகளை இழுத்தாள். அதன்மேல் ஒரு தாமரைப் பூவை வரைந்தாள். பக்கத்தில் இரண்டு தாமரை மொட்டுகளையும் போட்டாள். குளத்தின் கரையிலே ஒரு மான் குட்டியின் சித்திரத்தை எழுதினாள். எழுதும்போதே கடைக்கண்ணால் பார்த்து, நரசிம்மவர்மர் தன்னைக் கவனிப்பதைத் தெரிந்து கொண்டாள். சித்திரம் எழுதி முடித்ததும் சிவகாமியின் மனத்தில் அமைதி ஏற்பட்டது. அந்தச் சித்திரத்திலடங்கிய செய்தியை நரசிம்மவர்மர் கட்டாயம் தெரிந்து கொள்வார். மற்றவர்களுக்கோ அதில் அர்த்தம் ஒன்றும் இராது. ஏதோ கிறுக்கியிருக்கிறது என்றுதான் எண்ணிக்கொள்வார்கள்! குமார சக்கரவர்த்திக்குத் தன்னிடம் அன்பு உண்டென்பது உண்மையானால், இந்தச் சித்திரத்தைப் பார்த்துவிட்டு அவசியம் அவர் தாமரைக் குளத்துக்கு வந்து சேருவார்.
அன்று மாலை சக்கரவர்த்தியும் குமாரரும் குதிரைகளின் மேல் ஏறிக் காஞ்சிக்கு இராஜபாட்டை வழியாகக் கிளம்பினார்கள். அந்தப் பாதை மத்தியானம் அவர்கள் வந்திருந்த ஐந்து குன்றுகளின் ஓரமாகத்தான் சென்றது. அவ்விடத்திற்கு வந்ததும் நரசிம்மர் சற்றுப் பின் தங்கினார். சிவகாமி சித்திரம் எழுதிய பாறைக்கு அருகில் வந்ததும் குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினார். அங்கே எழுதியிருந்த சித்திரத்தைப் பார்த்ததும் அவருடைய முகம் அந்தத் தாமரையைப் போலவே மலர்ச்சி அடைந்தது. தரையில் கிடந்த அதே காவிக் கட்டியை அவரும் எடுத்து மானுக்கும் தாமரைக்கும் நடுவில் ஒரு வேலின் சித்திரத்தை எழுதினார்.