சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/சத்ருக்னன்
ஆயனர் வீட்டிலிருந்து புறப்பட்ட மகேந்திர பல்லவர் குதிரையை விரைவாகச் செலுத்திக்கொண்டு சென்று சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த தம் பரிவாரங்களை அடைந்தார். அங்கே குதிரையைச் சற்று நிறுத்தி, கூட்டத்தில் ஒருவன் மீது பார்வையைச் செலுத்தினார். அந்த மனிதன் சக்கரவர்த்தியின் பார்வையில் இருந்த சமிக்ஞையைத் தெரிந்து கொண்டவனாய், அவரை நெருங்கி வந்து பணிவாக நின்றான். "சத்ருக்னா! உனக்குச் சிற்பக்கலையில் பயிற்சி உண்டா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். சத்ருக்னன் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல், "இல்லை பிரபு!" என்றான். "இவ்வளவுதானா? சிற்பக்கலையில் கொஞ்சமாவது உனக்குப் பயிற்சி இருக்கவேண்டும். அதற்கு இந்த இடத்தைக் காட்டிலும் நல்ல இடம் கிடையாது. ஆயனருடைய சீடப் பிள்ளைகள் செய்யும் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாலே போதும்." "ஆக்ஞை, பிரபு! இப்போதே தொடங்குகிறேன்."
"சிற்பம் கற்றுக்கொள்ளப் புதிதாக வேறு யாராவது இங்கே வந்தால் அவர்களையும் நீ கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் உன்னைக் கவனிக்க வேண்டியதில்லை." "அப்படியே" என்று சத்ருக்னன் கூறியபோது அவனுடைய புருவங்கள் சிறிது மேலே சென்றன. "நல்லது; சிற்பக்கலையைப்பற்றிப் புதிதாக ஏதேனும் தெரிந்துகொண்டால் உடனே வந்து எனக்குத் தெரிவிக்க வேண்டும்." இவ்விதம் கூறிவிட்டுச் சக்கரவர்த்தி மீண்டும் குதிரையை வேகமாக விட்டார். அவரைத் தொடர்ந்து குமார சக்கரவர்த்தியும் குதிரையை வேகமாகச் செலுத்த, மற்ற பரிவாரங்கள் அவர்களைப் பின்தொடர முடியாமல் பின் தங்கும்படி நேர்ந்தது.
சக்கரவர்த்திக்கும் சத்ருக்னனுக்கும் நடந்த சம்பாஷணை அரைகுறையாக நரசிம்மரின் செவியில் விழுந்தது. அது அவருடைய மனத்தில் பெருங்குழப்பத்தை உண்டாக்கிற்று. சிவகாமி கூறியபடி ஆயனரின் வீட்டில் வேலெறிந்த வாலிபனைக் காணாதது மாமல்லருக்கு ஏற்கனவே வியப்பை உண்டாக்கியிருந்தது. இப்போது சக்கரவர்த்தி, ஆயனர் வீட்டைக் காவல் புரியும்படி பல்லவ ராஜ்யத்தின் மகா சமர்த்தனான ஒற்றனை ஏவியது மாமல்லரின் வியப்பைப் பன் மடங்கு அதிகமாக்கியதுடன், அவருடைய மனத்தில் என்னவெல்லாமோ சந்தேகங்களைக் கிளம்புவதற்கு ஏதுவாயிற்று. அதைப்பற்றித் தந்தையைக் கேட்க வேண்டுமென்று அவர் எண்ணினார். ஆனால், மகேந்திரரோ அந்தக் காட்டு வழியில் குதிரையைப் பாய்ச்சலில் விட்டுக்கொண்டு போனார். சக்கரவர்த்தி குதிரையை விரைவாகச் செலுத்தினால் அவர் ஏதோ முக்கியமான விஷயத்தைப்பற்றிச் சிந்தனை செய்வதற்கு அறிகுறி என்பதை மாமல்லர் அறிந்தவரானபடியால், விஷயத்தைத் தெரிந்துகொள்ள அவருடைய ஆவல் இன்னும் அதிகமாயிற்று. அவருடைய குதிரையும் நாலுகால் பாய்ச்சலில் சென்றது.
காட்டைத் தாண்டியதும் காஞ்சியிலிருந்து மாமல்லபுரத்துக்குப் போகும் இராஜபாட்டை தென்பட்டது. அந்தச் சாலை ஓரமாக ஒரு பெரிய கால்வாய் ஓடிற்று. அந்தக் கால்வாயில் ஒன்றன்பின் ஒன்றாகப் படகுகள் காஞ்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. படகுகளில் பெரும்பாலும் நெல் மூட்டைகள் ஏற்றியிருந்தன. ஒவ்வொரு படகையும் இரண்டு ஆட்கள் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.
இருபுறத்திலும் மரமடர்ந்த விசாலமான சாலையும், தௌிந்த நீரையுடைய கால்வாயும், கால்வாயில் மிதந்துவந்த படகுகளும், கால்வாய்க்கு அப்பால் மரங்களின் வழியாக வெகு தூரத்துக்குத் தெரிந்த பசுமையான சமவௌியும் மனோகரமாய்க் காட்சியளித்தன. கால்வாய் நீரில் ஆங்காங்கு மரங்களின் கருநிழல் படிந்திருந்த இடங்கள் கண்களைக் குளிரச் செய்தன. சற்றுத் தூரத்திலே சென்ற படகுகளில் ஒன்றிலிருந்து படகோட்டி ஒருவன், "செங்கனி வாயில் ஒரு வேய்ங்குழல் கொண்டிசைத்து தேனிசைதான் பொழிவோன் யார் யார் யார்? கிளியே! செந்தாமரை முகத்தில் மந்தகாசம் புரிந்து சிந்தை திரையாய்க் கொள்வோன் யார் யார் யார்? கிளியே!" என்று இனிய குரலில் உணர்ச்சி ததும்பப் பாடிய இன்னிசைக் கீதம் இளங்காற்றிலே மிதந்து வந்தது. இத்தகைய சாந்தமும் இன்பமும் அமைதியும் அழகும் குடி கொண்ட காட்சியைக் குலைத்துக்கொண்டும், "இது பொய்யான அமைதி; சீக்கிரத்திலே இடியும் மழையும் புயலும் பூகம்பமும் வரப்போகின்றன!" என்று மௌனப் பறையறைந்து தெரிவித்துக் கொண்டும் அக்கால்வாயில் நெல்லேற்றிய படகுகளுக்கு நடுவிலே ஆயுதங்கள் ஏற்றிய படகு ஒன்றும் வந்துகொண்டிருந்தது. அதில் வேல், வாள், ஈட்டி, கத்தி, கேடயம் முதலிய விதவிதமான போர்க் கருவிகள் நிறைந்திருந்தன.
அதுவரையில் மௌனமாக நின்று அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சக்கரவர்த்தி ஆயுதப் படகைக் கண்டதும், "ஆக, பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்த ஆயுதங்கள் பலமாகத்தான் நடக்கின்றன!" என்று பரிகாசமும் மனக்கசப்பும் தொனித்த குரலில் கூறிவிட்டு, பக்கத்திலே குதிரை மேலிருந்த தம் குமாரரைப் பார்த்தார். அவருடைய முகத்தோற்றத்தைக் கவனித்ததும், "நரசிம்மா! ஏதோ கேட்க விரும்புகிறாய் போலிருக்கிறதே!" என்றார். "எப்படித் தெரிந்தது, அப்பா!" என்றார் குமார சக்கரவர்த்தி. "உன் முகம் தெரிவிக்கிறது அபிநயக்கலை முகபாவம் ஆகியவைகளைப்பற்றி இப்போதுதானே பேசிவிட்டு வந்தோம்? கேட்க விரும்பியதைக் கேள்!" என்றார் தந்தை. "சத்ருக்னனை எங்கே அனுப்பினீர்கள்!" "ஆயனர் வீட்டுக்கு" "எதற்காக?" "ஒற்றனை வேறு எதற்காக அனுப்புவார்கள்? வேவு பார்ப்பதற்குத்தான்!" "என்ன சொல்கிறீர்கள், அப்பா! ஆயனச் சிற்பியின் வீட்டை வேவு பார்க்கும்படியான அவசியம் என்ன ஏற்பட்டது?"
"யுத்த காலத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மாமல்லா! இம்மாதிரி சமயங்களில் சந்நியாசியின் காவித் துணிக்குள்ளே எதிரியின் ஒற்றன் ஒளிந்திருக்கலாம். சிற்பக் கலைக்குள்ளே சதியாலோசனை இருக்கலாம்..." நரசிம்மர் தம்மை மீறிய பதைபதைப்புடன், "ஆகா! இது என்ன? ஆயனச் சிற்பியா தமக்கு எதிராகச் சதி செய்கிறார்? என்னால் நம்ப முடியவில்லையே!" என்றார். "ஆயனச் சிற்பி சதி செய்வதாக நான் சொல்லவில்லையே? அந்தப் பரமசாது நமக்காக உயிரையே விடக் கூடியவராயிற்றே!"
மாமல்லர் சிறிது சாந்தம் அடைந்து, "அப்படியானால் ஆயனர் வீட்டுக்கு ஒற்றனுடைய காவல் எதற்காக?" என்று கேட்டார். "கள்ளங்கபடமற்ற அந்தச் சாது சிற்பிக்குத் தெரியாமல் அவர் வீட்டில் பகைவர்களின் ஒற்றர்கள் இருக்கலாம் அல்லவா?" "ஆயனர் வீட்டில் ஒற்றர்களா? தங்களுக்கு எப்படித் தெரிந்தது? நான் ஒருவரையும் பார்க்கவில்லையே?" "மாமல்லவா! இராஜ்ய நிர்வாகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எப்போதும் கண்ணும் காதும் திறந்திருக்க வேண்டும். யுத்த காலத்தில் இது மிகவும் அவசியம். ஆயனர் வீட்டில் நாம் இருந்த போது உன் கண்கள் என்ன செய்துகொண்டிருந்தன?" என்று கேட்ட வண்ணம் சக்கரவர்த்தி நரசிம்மரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
அங்கே தம் கண்கள் சிவகாமியின் கண்களுடன் அந்தரங்கம் பேசுவதிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தன என்பது ஞாபகம் வரவே நரசிம்மருடைய பால் வடியும் இளம் வதனம் வெட்கத்தினால் சிவந்தது. அதே சமயத்தில் முன்னைவிட அதிக தூரத்திலிருந்து படகோட்டியின் இனிய கீதம் மெல்லிய குரலில் பின்வருமாறு கேட்டது. கண்ணன் என்றங்கேயொரு கள்வன் உளன் என்று கன்னியர் சொன்னதெல்லாம் மெய்தானோ? கிளியே! வெண்ணெய் திருடும்பிள்ளை என்னுள்ளம் கவர்ந்ததென்ன? கண்ணால் மொழிந்ததென்ன? சொல்வாய்! பைங்கிளியே!