சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/தலை நகரம்
கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது. சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக் கொண்டு போனார்கள்.
அகழியின் மேல் ஒரு குறுகலான மரப்பாலம் காணப்பட்டது. அது கோட்டை வாசல்வரை சென்றது. புத்த பிக்ஷு பரஞ்சோதிக்குச் சைகை காட்டிவிட்டு அந்தப் பாலத்தின்மேல் நடந்து சென்றார். பரஞ்சோதியும் அவரைப் பின் தொடர்ந்தான். "இதென்ன, இவ்வளவு சின்னப் பாலமாயிருக்கிறதே? கோட்டைக்குள் வண்டிகளும் வாகனங்களும் எப்படிப் போகும்?" என்று கேட்டான் பரஞ்சோதி. "இந்த வாசல் வழியாகப் போக முடியாது. வடக்கு வாசலிலும் கிழக்கு வாசலிலும் பெரிய பாலங்கள் இருக்கின்றன. அவற்றில் யானைகள் கூடப் போகலாம்!" என்றார் சந்நியாசி.
பாலத்தைத் தாண்டிக் கோட்டை வாசலருகில் அவர்கள் வந்தார்கள். அங்கே ஒரு சேமக்கலம் கட்டித் தொங்கிற்று. பக்கத்தில் ஒரு கட்டையும் கிடந்தது. கட்டையை எடுத்துச் சேமக்கலத்தில் ஒரு தட்டுத் தட்டினார் சந்நியாசி. மேலேயிருந்து, "யார் அங்கே?" என்று குரல் கேட்டது. கோட்டை வாசலின் மேல் மாடத்திலிருந்து ஒருவன் எட்டிப் பார்த்தான். இருட்டிவிட்டபடியால் அவன் முகம் தெரியவில்லை. "மருதப்பா! நான்தான்!" என்று சாமியார் சொல்லவும், மேலேயிருந்து எட்டிப் பார்த்தவன், "தாங்களா! இதோ வந்து விட்டேன்; அடிகளே" என்று கூறிவிட்டு மறைந்தான்.
சற்று நேரத்துக்கெல்லாம் கோட்டைக் கதவின் தாள் திறக்கும் சத்தம் கேட்டது. கதவில் ஒரு மனிதர் உள்ளே புகக் கூடிய அளவு துவாரம் தோன்றியது. புத்த சந்நியாசி அந்தத் துவாரத்திற்குள் புகுந்து சென்று பரஞ்சோதியையும் கையைப்பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டார். மறுபடி கதவின் துவாரம் அடைக்கப்பட்டது. பரஞ்சோதி உள்ளே போனதும் நகரின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். எங்கே பார்த்தாலும் பிரகாசமான தீபங்களால் நகரம் ஒளி மயமாகக் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் பேசுவதிலிருந்து உண்டாகும் 'கல்' என்ற ஓசை எழுந்தது. பரஞ்சோதி இதுவரையில் அவ்வளவு பெரிய நகரத்தைப் பார்த்ததே கிடையாது. எனவே, பார்த்தது பார்த்தபடி பிரமித்து நின்றான்.
புத்த சந்நியாசி கதவைத் திறந்த காவலனைப் பார்த்து, "மருதப்பா! நகரில் ஏன் கலகலப்புக் குறைவாயிருக்கிறது? கோட்டைக் கதவு இதற்குள் ஏன் சாத்தப்பட்டது? ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார். "நன்றாகத் தெரியவில்லை சுவாமி! இன்று காலையிலிருந்து நகரம் ஒரே கோலாகலமாய்த்தானிருந்தது..." என்பதற்குள் பிக்ஷு குறுக்கிட்டார். "கோலாகலத்துக்குக் காரணம்?" என்று கேட்டார். "தங்களுக்குத் தெரியாதா? சிவகாமி அம்மையின் நடனம் இன்றைக்குச் சக்கரவர்த்தியின் சபையில் அரங்கேறுவதாக இருந்தது. அதனால்தான் ஜனங்களுக்கு அவ்வளவு கொண்டாட்டம்!" "எந்த சிவகாமி அம்மை?" என்று சந்நியாசி கேட்டார். "வேறு யார்? ஆயனரின் மகள் சிவகாமிதான்..!"
இதுவரை பேச்சைக் கவனியாதிருந்த பரஞ்சோதி சட்டென்று திரும்பி, "யார், ஆயனச் சிற்பியாரா?" என்று கேட்டான். "ஆமாம்!" என்று காவலன் கூறிப் பரஞ்சோதியை உற்று நோக்கிவிட்டு, "அடிகளே! இந்தப் பிள்ளை யார்?" என்று பிக்ஷுவைப் பார்த்துக் கேட்டான். "இவன் என் சிஷ்யன் நீ மேலே சொல்லு. சிவகாமி அம்மையின் நடனம் அரங்கேறுவதாக இருந்தது, பிறகு?"
"சபை கூடி அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்ததாம். பாதி நடந்து கொண்டிருந்தபோது, யாரோ தூதுவர்கள், வெகு அவசரச் செய்தியுடன் வந்திருப்பதாகத் தெரிந்ததாம். சக்கரவர்த்தி சபையிலிருந்து சட்டென்று எழுந்து போனாராம். அப்புறம் திரும்பிச் சபைக்கு வரவேயில்லையாம், குமார சக்கரவர்த்தியும், மந்திரி மண்டலத்தாருங்கூட எழுந்து போய்விட்டார்களாம். நாட்டியம் நடுவில் நின்று போய்விட்டதாம். அஸ்தமித்ததும் கோட்டைக் கதவுகளை அடைக்கும்படி எனக்குக் கட்டளை வந்தது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்னவாயிருக்கலாம் சுவாமி? யுத்தம் ஏதாவது வரக்கூடுமா? ஆனால் காஞ்சி சக்கரவர்த்தியுடன் யுத்தம் செய்யக்கூடிய அரசன் இந்தப் பூமண்டலத்திலேயே இப்போது கிடையாதே?" என்றான் மருதப்பன். "அப்படிச் சொல்லக் கூடாது, மருதப்பா! இன்றைக்கு மணி மகுடம் தரித்து மன்னாதி மன்னர்களாயிருப்பவர்கள் நாளைக்கு... ஆனால் அதைப் பற்றியெல்லாம் நாம் ஏன் பேச வேண்டும்? உன் மகன் சௌக்கியமா?" என்று சந்நியாசி கேட்டார். "தங்கள் கிருபை சுவாமி, சௌக்கியமா இருக்கிறான்!" என்றான் மருதப்பன்.
மருதப்பனுடைய மகனை ஒரு சமயம் பாம்பு தீண்டி அவன் உயிர் பிழைப்பதே துர்லபம் என்று தோன்றியது. அச்சமயம் இந்த புத்த பிக்ஷு மணிமந்திர ஔஷதங்களினால் அந்தப் பிள்ளையைக் குணப்படுத்தினார். அவரிடம் மருதப்பன் பக்தி கொண்டதற்கு இதுதான் காரணம். "என்னால் ஒன்றுமில்லை, மருதப்பா! எல்லாம் புத்த பகவானின் கருணை நான் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு மேலே பிக்ஷு நடந்தார். பரஞ்சோதியும் அவருடன் சென்றான்.
"அடிகளே! கோட்டைக் கதவைச் சாத்தும்படி கட்டளை பிறந்திருக்கும்போது உங்களை மட்டும் காவலன் எப்படி விட்டான்?" என்று பரஞ்சோதி கேட்டான். "எல்லாம் இந்தக் காவித் துணியின் மகிமைதான்!" என்றார் புத்த பிக்ஷு. "ஓஹோ! பல்லவ சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் காவித் துணிக்கு அவ்வளவு கௌரவமா? ஆனால் சமணர்கள் மட்டும் ஏன்...?" "சமணர்கள் ராஜரீக விஷயங்களில் தலையிட்டார்கள். நாங்கள் அந்த வழிக்கே போவதில்லை. இராஜ வம்சத்தினரின் முகத்தைக் கூடப் பார்ப்பதில்லையென்று வைத்துக் கொண்டிருக்கிறோம்...போகட்டும்! உன்னுடைய உத்தேசம் என்ன? என்னுடன் பௌத்த விஹாரத்துக்கு வரப்போகிறாயா?"
"இல்லை, சுவாமி! நாவுக்கரசர் மடத்துக்கே போய்விடுகிறேன். வேறு எங்கேயும் தங்க வேண்டாமென்று என் தாயாரின் கட்டளை." "அப்படியானால் இந்த இடத்தில் நாம் பிரிய வேண்டியதுதான் போய் வருகிறாயா, தம்பி?" "சுவாமி, நாவுக்கரசர் மடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போகவேண்டும்?" என்று பரஞ்சோதி கேட்டான். "ஏகாம்பரேசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது அதோ பார் கோயில்விமானத்தை!" பரஞ்சோதி பார்த்தான் வெகு தூரத்துக்கு வெகுதூரம் பரவியிருந்த அந்த விசாலமான நகரில் எங்கே பார்த்தாலும் விமானங்கள் தெரிந்தன.
இந்த வரலாறு நிகழ்ந்த காலத்தில் அதாவது ஏறக்குறைய (சிவகாமியின் சபதம் எழுதப்பட்ட ஆண்டு 1946) ஆயிரத்து முந்நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்னர் - தமிழகத்துக் கோயில்களின் முன்வாசல் கோபுரங்கள் இப்போது இருப்பது போல் உயரமாக அமைந்திருக்கவில்லை. கோயில் கர்ப்பக் கிருஹத்துக்கு மேலேதான் விமானங்கள் அமைப்பது வழக்கம். இவையும் அவ்வளவு உயரமாக இருப்பதில்லை. மேலும் சிவன் கோயில் விமானங்கள், சமணப் பள்ளிகளின் விமானங்கள், அரண்மனை விமானங்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரே மாதிரியாயிருக்கும். "எங்கே பார்த்தாலும் விமான மயமாகக் காணப்படுகிறதே! நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?" என்று பரஞ்சோதி கேட்டான். "இங்கிருந்து அடையாளம் சொல்லுவது கஷ்டம். இந்த வீதியோடு நேரே போ! ஏகம்பர் கோயிலுக்கு வழி அங்கங்கே விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். கோயில் சந்நிதியில் வாகீசர் மடம் இருக்கிறது. ஜாக்கிரதை, தம்பி! காலம் விபரீதமாகிக் கொண்டு வருகிறது!' என்று சொல்லிக்கொண்டே புத்த பிக்ஷு அங்கிருந்து பிரிந்த வேறொரு வீதி வழியாகச் சென்றார்.
வாலிபப் பிரயாணி நேரே பிக்ஷு காட்டிய திக்கை நோக்கிச் சென்றான். அக்காலத்தில் தென் தேசத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது காஞ்சி மாநகரம். அந்நகரின் வீதி ஒவ்வொன்றுமே தேரோடும் வீதியைப்போல் விசாலமாக அமைந்திருந்தது. வீடுகள் எல்லாம் மாளிகைகளாகவே இருந்தன. ஆங்காங்கே கல்லாலான தூண்களின் மேல் விசாலமான அகல்களில் தூங்காவிளக்குகள் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. வீதிகளில் 'ஜே ஜே' என்று போவோரும் வருவோருமாய் ஏகக் கூட்டமாயிருந்தது. கடைத் தெருக்களின் காட்சியையோ சொல்லவேண்டாம். காசி முதல் கன்னியாகுமரி வரையில் பரதகண்டத்தில் விளையும் பொருள்களெல்லாம் அந்தக் கடை வீதிகளில் கிடைக்கும். புஷ்பக் கடைகளாக ஒரு பக்கம், பழக் கடைகளாக ஒரு பக்கம்; பட்சணக் கடைகளாக ஒரு பக்கம்; தானியக் கடைகள் ஒரு பக்கம். முத்து இரத்தின வியாபாரிகளின் கடைகள் இன்னொரு பக்கம்.... இப்படிக் கடை வீதியானது எல்லையில்லாமல் வளர்ந்து கொண்டே போயிற்று.
பரஞ்சோதி அளவில்லா வியப்புடன் மேற்கூறிய வீதிக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு போனான். ஆங்காங்கே ஜனங்கள் கூட்டமாய் நின்ற இடங்களில் எல்லாம் சிவகாமி அம்மையின் நடன அரங்கேற்றம் நடுவில் நின்று போனதைப் பற்றியும், கோட்டைக் கதவுகளைச் சாத்தும்படி கட்டளை பிறந்திருப்பதைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்ததை அவன் கேட்டுக்கொண்டு நடந்தான். சற்று நேரத்துக்கொரு தடவை அவன் எதிரே வந்தவர்களிடம், "ஏகாம்பரேசுவரர் கோயில் எது?" என்று கேட்டான். "அதோ!" என்று அவர்களும் சுட்டிக் காட்டிவிட்டுப் போனார்கள், ஆனாலும் ஏகாம்பரேசுவரர் கோயிலை அவன் அடைந்தபாடில்லை. புதிது புதிதாக ஒரு பெரிய நகரத்தைப் பார்க்கும் அதிசயத்தில் மூழ்கியிருந்தபடியால் பரஞ்சோதியும் கோயிலைச் சீக்கிரமாகக் கண்டுபிடிப்பதில் அவ்வளவு கவலையுள்ளவனாயில்லை.
இப்படி அவன் வீதி வலம் வந்துகொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் ஏகக் கூச்சலும் குழப்பமும் உண்டாவதைப் பார்த்தான். ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். "கோயில் யானைக்கு மதம் பிடித்து விட்டது! ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்ற கூக்குரலோடு சேர்ந்து, குழந்தைகள் வீறிடும் சத்தம், ஸ்திரீகள் அலறும் சத்தம், குதிரைகள் கனைக்கும் சத்தம், வீட்டுக் கதவுகளைத் 'தடால்' தடால்' என்று சாத்தும் சத்தம், மாடுகள் 'அம்மா' என்று கத்தும் சத்தம், கட்டை வண்டிகள் 'கட கட' என்று உருண்டோடும் சத்தம் இவ்வளவும் சேர்ந்து சொல்ல முடியாத அல்லோலகல்லோலமாகி விட்டது.
பரஞ்சோதி ஒரு கணம் திகைத்து நின்றான். தானும் ஓட வேண்டுமா, எந்தப் பக்கம் ஓடுவது என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, அவனுக்கெதிரே நடந்த சம்பவங்களை அவனுடைய கண்கள் கவனித்தன. தெருவில் அவனுக்கு முன்னால் சற்றுத் தூரத்தில் ஒரு பல்லக்கு சென்று கொண்டிருந்தது. அதில் சௌந்தர்ய தேவதை என்று சொல்லக் கூடிய ஓர் இளம் பெண்ணும் அவளுடைய தந்தையெனத் தோன்றிய பெரியவர் ஒருவரும் இருந்தார்கள். பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்கள் அவர்களுக்குப் பின்னால் எழுந்த கூச்சலையும் கோலாகலத்தையும் கேட்டுவிட்டு பல்லக்கைக் கீழே வைத்துவிட்டு நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். அதே சமயத்தில் அவனுக்குப் பின்னால் வெகு சமீபத்தில் மதங்கொண்ட யானை ஒன்று பூமி அதிர ஓடி வந்தது.
இதையெல்லாம் கவனித்த பரஞ்சோதி ஒரு கணம் தயங்கி நின்றான். அடுத்த கணத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாய்ச் சட்டென்று கையிலிருந்த மூட்டையைக் கீழே வைத்து அவசரமாக அவிழ்த்தான். அதற்குள்ளிருந்த வேல் முனையை எடுத்துத் தன் கையில் வைத்திருந்த தடியின் முனையில் செருகிப் பொருத்தினான். பொருந்திய வேலை அவன் வலது கையில் தூக்கிப் பிடித்ததற்கும் மதம்கொண்ட யானை அவன் நின்ற இடத்திற்கு அருகே வருவதற்கும் சரியாயிருந்தது. அவ்வளவுதான்! பரஞ்சோதி தன் முழுபலத்தையும் கொண்டு வேலை வீசினான். அது யானையின் இடது கண்ணுக்கருகில் பாய்ந்தது. யானையின் தடித்த தோலைப் பொத்துக்கொண்டு உள்ளேயை சென்று விட்டது. யானை பயங்கரமாக ஒரு முறை பிளிறிற்று. துதிக்கையால் வேலைப் பிடுங்கிக் காலின் கீழை போட்டு மிதித்தது. பிறகு வேலை எறிந்த வாலிபன் நின்ற பக்கம் திரும்பிற்று.
மதங்கொண்ட யானையின் மீது வேலை எறிந்தால் அதனுடைய விளைவு என்னவாகும் என்பதை அந்த இளம் பிரயாணி நன்கு உணர்ந்திருந்தான். எனவே, யானை தன் பக்கம் திரும்பக் கண்டதும், பல்லக்கு இருந்த திசைக்கு எதிர்த் திசையில் வேகமாக ஓடத் தொடங்கினான். யானை தன்னுடைய பிரம்மாண்டமான தேகத்தை முழுவதும் திருப்புவதற்குள்ளே அவன் வெகுதூரம் ஓடிவிட்டான். ஓடிய வண்ணமே திரும்பிப் பார்த்தபோது, யானை வீறிட்டுக் கொண்டு தன்னை நோக்கி விரைந்து வருவதைக் கண்டான். உடனே அங்கே காணப்பட்ட ஒரு சந்தில் திரும்பி ஓடத் தொடங்கினான். சற்று நேரம் திரும்பிப் பார்க்காமல் ஓடிய பிறகு மறுபடியும் ஒரு விசாலமான பெரிய வீதியில் தான் வந்திருப்பதைக் கண்டான். தனக்கு எதிரே ஐந்தாறு யானைகள் மாவுத்தர்களால் ஏவப்பட்டு விரைவாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்துத் தெருவின் ஓரத்தில் ஒதுங்கினான். மதயானையைக் கட்டுக்கு உட்படுத்தி அழைத்துச் செல்வதற்காகவே இந்த யானைகள் போகின்றன என்பதை ஊகித்துணர்ந்ததும் ஓடுவதை நிறுத்தி மெதுவாக நடக்கலானான்.
பரஞ்சோதிக்கு அப்போதுதான் தன் தேகநிலை பற்றிய நினைவு வந்தது. அவனுடைய நெஞ்சு 'படபட' என்று அடித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் வியர்வையினால் சொட்ட நனைந்து போயிருந்தது. ஏற்கனவே, நாளெல்லாம் வழி நடந்ததனால் பரஞ்சோதி களைத்துப் போயிருந்தான். இப்போது அதி வேகமாக ஓடி வந்ததனால் அவனுடைய களைப்பு மிகுதியாகியிருந்தது. கால்கள் தளர்ந்து தடுமாறின. உள்ளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினாலும் பரபரப்பினாலும், தேகம் நடுங்கிற்று. சற்று உட்கார்ந்து இளைப்பாறாமல் மேலே நடக்க முடியாது என்று தோன்றியது. வீதி ஓரத்தில் காணப்பட்ட சுமைதாங்கி அருகில் சென்று அதன் மேல் உட்கார்ந்தான்.
வானத்தில் பூரண சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இளந்தென்றல் மெல்ல மெல்ல வந்து களைத்துப் போயிருந்த அவனுடைய தேகத்தின்மீது வீசி இளைப்பாற்றியது. உடம்பின் களைப்பு நீங்க நீங்க உள்ளம் சிந்தனை செய்யத் தொடங்கியது. "நாம் வந்த காரியம் என்ன? செய்த காரியம் என்ன?" என்று எண்ணியபோது, பரஞ்சோதிக்கே வியப்பாயிருந்தது. அந்த மதயானையின் மேல் வேலை எறியும்படியாக அந்தச் சமயம் தனக்குத் தோன்றிய காரணம் என்ன? அதனிடம் சிக்கிக் கொண்டிருந்தால், தன்னுடைய கதி என்னவாகியிருக்கும்? தன்னிடம் உயிரையே வைத்திருக்கும் தன் அருமை அன்னையை மறுபடியும் பார்க்க முடியாமலே போயிருக்கும் அல்லவா?
சிவிகையில் வீற்றிருந்த இளம்பெண்ணின் முகமும் பெரியவரின் முகமும் பரஞ்சோதியின் மனக்கண் முன்பு தோன்றின. ஆம்; மதயானையினால் அவர்களுக்கு ஆபத்து வராமலிருக்கும் பொருட்டே அந்தச் சமயம் அவன் வேலை எடுத்து வீசினான். அவர் யாராயிருக்கலாம்? ஒருவேளை அரங்கேற்றம் தடைப்பட்டது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்களே, அந்தச் சிவகாமி அம்மைதானோ அந்த இளம்பெண்! பெரியவர் அவளுடைய தந்தை ஆயனராயிருக்குமோ? இவ்விதம் சிந்தித்த வண்ணமாய்ப் பரஞ்சோதி சுமைதாங்கியின் மேடைமீது சாய்ந்தான். அவனை அறியாமல் அவனுடைய கண்ணிமைகள் மூடிக்கொண்டன. நித்திராதேவி தன் மிருதுவான மந்திரக் கரங்களினால் அவனைத் தழுவலானாள்.