சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/துர்ச்சகுனம்
வீதி ஓரத்திலிருந்த சுமைதாங்கியின் மீது பரஞ்சோதி சாய்ந்து கண்ணை மூடிக் கால்நாழிகைகூட இராது. ஏதோ பேச்சுக் குரலைக் கேட்டுத் தூக்கி வாரிப்போட்டுக்கொண்டு கண் விழித்தான். தெருவில் யாரோ இவ்விதம் பேசிக்கொண்டு போனார்கள். "கோயில் யானைக்கு மதம் பிடித்தால் துர்ச்சகுனம் என்று சொல்லுகிறார்களே!" "ஆமாம்; நாட்டுக்கு ஏதோ பெரிய விபரீதம் வரப்போகிறது!" "யானைக்கு எப்படி மதம் பிடித்ததாம்?" "யாருக்குத் தெரியும்? யாரோ அசலூரான் ஒருவன் யானையின் மேல் வேலை வீசி எறிந்தானாம். அதனால் யானைக்கு வெறிபிடித்து விட்டது என்று சொல்லுகிறார்கள். "ஆயனச் சிற்பியும் அவருடைய மகளும் பிழைத்தது புனர் ஜன்மம் என்கிறார்களே?" "அப்படித்தான்; அரங்கேற்றம் நடுவில் நின்றது போதாதென்று இந்த ஆபத்து வேறே அவர்களுக்கு நேர்ந்தது."
அதற்குமேல் பரஞ்சோதிக்கு அவர்கள் பேசியது கேட்கவில்லை. "வேலை எறிந்ததனால் யானைக்கு வெறிபிடித்து விட்டதாம்!" என்னும் பேச்சுக் காதில் விழுந்ததும், பரஞ்சோதியின் உள்ளம் திடுக்கிட்டது. அப்போது அவனுக்கு இன்னொரு விஷயமும் ஞாபகம் வந்தது. அவன் கொண்டு வந்திருந்த மூட்டையை நடுத் தெருவிலேயே போட்டுவிட்டு அவன் ஓடி வந்துவிட்டான். நாவுக்கரசருக்கும் ஆயனச் சிற்பிக்கும் அவன் கொண்டு வந்திருந்த ஓலைகள் அந்த மூட்டையில் இருந்தன. இன்னும் அவனுடைய துணி மணிகளும், அவன் கொண்டு வந்திருந்த சொற்பப் பணமும் மூட்டைக்குள்ளேதான் இருந்தன. அதை அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும். போட்ட இடத்திலேயே மூட்டை கிடைக்குமா? திக்குத் திசை புரியாத இந்தப் பெரிய நகரத்தில் அந்த இடத்தை மறுபடியும் கண்டுபிடிப்பது எப்படி?
பரஞ்சோதி சுமைதாங்கியிலிருந்து இறங்கி, தான் ஓடி வந்த வழி எதுவாயிருக்குமென்று ஒருவாறு ஊகித்துக்கொண்டு அந்தத் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். இதற்குள் வீதிகளில் ஜன நடமாட்டம் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. வீட்டுக் கதவுகளையெல்லாம் சாத்தியாகி விட்டது. வீதி விளக்குகளை அணைத்துவிட்டார்கள். நல்ல வேளையாகப் பூரண சந்திரன் பால் போன்ற வெண்ணிலாவைப் பொழிந்துகொண்டிருந்தான். நிலா வௌிச்சத்தில் நாற்புறமும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு பரஞ்சோதி வெகுநேரம் நடந்தான். எவ்வளவு நடந்தும், யானையைச் சந்தித்த இடத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மூட்டையையும் அவன் எங்கும் காணவில்லை.
நேரமாக ஆக, வீதிகளில் நிசப்தம் குடிகொண்டது. உச்சி வானத்தில் சந்திரனைப் பார்த்து அர்த்தராத்திரியாகிவிட்டது என்பதைப் பரஞ்சோதி தெரிந்துகொண்டான். கால்கள் இனி நடக்க முடியாதபடி சோர்ந்துபோயின. உடம்பை எங்கேயாவது கீழே போட்டால் போதும் என்று அவனுக்கு ஆகிவிட்டது. இனிமேல் மூட்டையைத் தேடுவதில் பயனில்லை. நாவுக்கரசர் மடத்துக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்தால் போதும்.
ஆனால், எப்படிப் போவது? வழி கேட்பதற்குக்கூட வீதிகளில் யாரையும் காணோம். லட்சக்கணக்கான ஜனங்கள் வாழ்ந்த அந்தப் பெரிய நகரத்தில் தான் மட்டும் தன்னந்தனியாக அலைவதை நினைத்தபோது பரஞ்சோதிக்கு எப்படியோ இருந்தது. ராத்திரியெல்லாம் இப்படியே அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதானா? ஆயிரக்கணக்கான மாளிகைகளும், மண்டபங்களும், வீடுகளும் நிறைந்துள்ள இந்த நகரில் தனக்கு இரவில் தங்குவதற்கு இடம் கிடையாதா? நல்ல வேளையாக இதோ யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது. பேச்சுக் குரல் கேட்கிறது அவர்களை விசாரித்துப் பார்க்கலாம்.
ஒரு வீதியின் முடுக்கில் இரண்டுபேர் பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்களைப் பார்த்தால் நகர்க் காவலர்கள் என்று தோன்றியது. பரஞ்சோதியைப் பார்த்ததும் அவர்களே நின்றார்கள். "யாரப்பா நீ? நடு ராத்திரியில் எங்கே கிளம்பினாய்?" என்று அவர்களில் ஒருவன் கேட்டான். "நான் அயலூர், ஐயா!..." என்று பரஞ்சோதி சொல்ல ஆரம்பிப்பதற்குள், முதலில் பேசியவன், "அயலூர் என்றால், எந்த ஊர்?" என்றான். "சோழ தேசம்.." "ஓகோ உறையூரா?" "இல்லை, ஐயா! கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி கிராமம். இன்று மாலைதான் காஞ்சிக்கு வந்து சேர்ந்தேன். "அப்படியா? இங்கு எதற்கு வந்தாய்?" "நாவுக்கரசர் மடத்தில் தமிழ்ப் பயில்வதற்காக வந்தேன்." "அப்படியானால், நள்ளிரவில் தெருவீதியில் ஏன் அலைகிறாய்?" "மடம் இருக்குமிடம் தெரியவில்லை சாயங்காலத்திலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன்.
அந்தக் காவலர்கள் இருவரும் இலேசாகச் சிரித்த சிரிப்பில் பரிகாசம் தொனித்தது. அவர்களில் ஒருவன், "நாவுக்கரசர் மடத்துக்கு நீ கட்டாயம் போகவேண்டுமா?" என்று கேட்டான். "ஆம், ஐயா!" "நாங்கள் அந்தப் பக்கந்தான் போகிறோம் நீ வந்தால் அழைத்துக்கொண்டு போய்விடுகிறோம்." பரஞ்சோதி காவலர்களுக்கு வந்தனம் சொல்லிவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள் உயரமான மதில் சுவர்களையுடைய ஒரு கட்டிடத்தின் வாசலில் வந்து நின்றார்கள். "இதுதான் மடமா?" என்று கேட்டான் பரஞ்சோதி. "ஆமாம், பார்த்தால் இது மடமாகத் தோன்றவில்லையா?"
உண்மையில் பரஞ்சோதிக்கு அது மடமாகத் தோன்றவில்லை. அருகில் கோயில் எதையும் காணவில்லை. கட்டிடத்தின் உயரமான சுவர்களும், வாசற் கதவில் பூட்டியிருந்த பெரிய பூட்டும் அவனுக்கு இன்னதென்று தெரியாத சந்தேகத்தை உண்டாக்கின. அவனை அழைத்துப் போனவர்களில் ஒருவன் வாசற் கதவண்டை சென்று அங்கேயிருந்த காவலாளியிடம் ஏதோ சொன்னான். உடனே பூட்டுத் திறக்கப்பட்டது: கதவும் திறந்தது. "வா, தம்பி!" நெஞ்சு திக்திக் என்று அடித்துக்கொள்ள, பரஞ்சோதி வாசற்படியைத் தாண்டி உள்ளே சென்றான். இரு புறமும் உயரமான சுவர் எழுப்பிய குறுகிய சந்தின் வழியாக அவனை அழைத்துப் போனார்கள். ஓரிடத்தில் நின்றார்கள் அங்கிருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. "இங்கே படுத்திரு, மடத்தில் எல்லோரும் தூங்குகிறார்கள் பொழுது விடிந்து பார்த்துக் கொள்ளலாம்" என்றான் ஒருவன்.
பரஞ்சோதி அந்த இருட்டறைக்குள் எட்டிப் பார்த்தான். கொஞ்சம் வைக்கோலும் ஒரு கோரைப் பாயும் கிடந்தன. ஒரு மூலையில் சட்டியில் தண்ணீர் வைத்திருந்தது. திரும்பித் தன்னுடன் வந்த காவலர்களைப் பார்த்து, "இது மடந்தானா?" என்று கேட்டான். "ஆமாம், தம்பி! உனக்கு என்ன சந்தேகம்?" என்றான் காவலர்களில் ஒருவன். "இங்கிருக்க விருப்பம் இல்லாவிட்டால் வெளியே போய்விடு!" என்றான் இன்னொருவன். பரஞ்சோதிக்கு இருந்த களைப்பில் எப்படியாவது இராத்திரி படுத்துத் தூங்க இடம் கிடைத்தால் போதும் என்று இருந்தது. "இல்லை இங்கேயே நான் படுத்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தான். அப்போது அவனை அழைத்து வந்தவர்களில் ஒருவன், "தம்பி! இது மடந்தான் ஆனால், நாவுக்கரசர் மடமல்ல. மன்னர் மன்னரான மகேந்திர சக்கரவர்த்தியின் மடம்!" என்று சொல்லிக் கொண்டே கதவைச் சாத்தினான். அடுத்த கணம் அறைக் கதவைப் பூட்டும் சத்தம் கேட்டது!