சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/வேலின் மேல் ஆணை
நரசிம்மர் தமது அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் சிவகாமியின் கண்ணீரைத் துடைத்த வண்ணம், "நினைக்க நினைக்க ஒரு விஷயம் எனக்கு வியப்பையளிக்கிறது!" என்று கூறினார். சற்றுமுன் சிவகாமியின் முகத்தை ரதி ஏறிட்டுப் பார்த்தது போல் இப்போது சிவகாமி நரசிம்மரை ஏறிட்டுப் பார்த்தாள். "அது என்ன வியப்பான விஷயம்?" என்னும் கேள்வியை அவளுடைய கண்களின் நோக்கும், புருவங்களின் நெறிப்பும் கேட்பன போலத் தோன்றின.
நரசிம்மர் சிவகாமியின் முகத்தைக் கண்களால் விழுங்கி விடுபவர்போல் பார்த்துக்கொண்டு கூறினார்: "மூன்று வருஷ காலத்திற்குள் உன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதலைத்தான் சொல்லுகிறேன். உனக்கு ஞாபகம் இருக்கிறதா, சிவகாமி? சக்கரவர்த்தியும் நானும் அந்த நாளில் உங்கள் வீட்டுக்கு வருவோம். என்னைக் கண்டதும் நீ கொஞ்சமும் கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் ஓடி வருவாய். என் கைகளைப் பிடித்துக் 'கரகர'வென்று இழுத்துக் கொண்டு போவாய். நம் இருவருடைய தந்தையரும் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் இன்னொரு பக்கத்தில் கொட்டம் அடிப்போம்! சில சமயம் நான் உன்னை எனக்குப் பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும்படி கேட்பேன். நீ சொல்லிக் கொடுக்க முயல்வாய்; எனக்கு நன்றாய் வராது. அதைக்கண்டு நீ கலகலவென்று சிரிப்பாய். உன்னுடைய முல்லைப்பல் வரிசையைப் பார்த்து நான் மதிமயங்கி நிற்பேன். இன்னும் சிலசமயம் நாம் இருவரும் ஓடிப்பிடித்து விளையாடுவோம். சில சமயம் ஆயனர் அமைத்த கற்சிலைகளுக்கு மத்தியில் நீயும் ஒரு சிலையைப்போல் அசையாமல் நிற்பாய். நானும் வேண்டுமென்றே உன்னைச் சிலையாகப் பாவித்துக்கொண்டு மேலே போவேன். உன்னுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டபிறகு திரும்பிப் பார்த்து உன்னைப் பிடித்துக் கொள்வேன். 'அகப்பட்டுக் கொண்டாயா, சிவகாமி தேவி?' என்று பாடுவேன். இப்படியெல்லாம் நாம் விளையாடுவதைப் பார்த்து நம்முடைய தந்தைமார்களும் சந்தோஷப்படுவார்கள். அதெல்லாம் ஒரு குதூகலமான கனவு மாதிரி இப்போது தோன்றுகிறது."
"பிரபு! நான் ஏதோ மாறிப்போனதாகச் சொன்னீர்கள். எந்தவிதத்தில் மாறியிருக்கிறேன்?" என்று சிவகாமி கேட்டாள். "நல்லவேளை, ஞாபகப்படுத்தினாய் எனக்குப் பதினாறு பிராயம் பூர்த்தியானபோது, சக்கரவர்த்தி என்னைத் தேச யாத்திரைக்கு அழைத்துச் சென்றார். தெற்கே சித்தர் மலையிலிருந்து வடக்கே நாகார்ஜுன மலை வரையில் நாங்கள் யாத்திரை செய்தோம். மேற்கே, காவிரி நதியின் ஜனன ஸ்தானம் வரையில் போயிருந்தோம். யாத்திரையை முடித்துக் கொண்டு நாங்கள் திரும்பி வருவதற்கு மூன்று வருஷம் ஆயிற்று..." "அந்த மூன்று வருஷமும் எனக்கு மூன்று யுகமாக இருந்தது" என்றாள் சிவகாமி.
"மூன்று வருஷம் கழித்து நான் திரும்பி வந்து மறுபடியும் உன்னைப் பார்த்தபோது, நீ பழைய சிவகாமியாகவே இல்லை. தேவ சபையிலிருந்து அரம்பையோ, ஊர்வசியோ வந்து ஆயனர் வீட்டில் வளர்வதாகவே தோன்றியது. உருவ மாறுதலைக் காட்டிலும் உன்னுடைய குணத்திலும் நடவடிக்கையிலும் காணப்பட்ட மாறுதல்தான் எனக்கு அதிக வியப்பை அளித்தது. என்னைக் கண்டதும் நீ முன்போல் ஆர்வத்துடன் ஓடிவந்து வரவேற்கவில்லை; கலகலப்பாகப் பேசவில்லை; தூண் மறைவில் மறைந்து கொண்டு நின்றாய்; நான் உன்னைப் பார்க்கும்போது நீ வேறு பக்கம் திரும்பிக் கொண்டாய்; நான் உன்னைப் பார்க்காத சமயங்களில் கடைக்கண்ணால் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாய். தப்பித் தவறி நம் கண்கள் சந்திக்கும் சமயம் உடனே தலையைக் குனிந்துகொண்டாய்; உன்னுடைய கலீரென்ற சிரிப்பு மறைந்துவிட்டது! சில சமயம் உன் கண்களில் நீர் ததும்பி நிற்பதைக் கண்டேன். ஒரு காரணமுமில்லாமல் நீ பெருமூச்சு விடுவதைக் கேட்டேன். எல்லாவற்றையும் விட அதிக வியப்பை எனக்கு அளித்தது என்னவென்றால், என்னை அறியாமல் நானே சில சமயம் பெருமூச்சு விடத் தொடங்கினேன்!.." என்று நரசிம்மர் சொன்னபோது, சிவகாமி கலீர் என்று சிரித்து விட்டாள்.
நரசிம்மர் மீண்டும் தொடர்ந்து கூறினார்: "என் உள்ளத்திலும் ஒரு மாறுதலைக் கண்டேன். இரவும் பகலும் சதா சர்வ காலமும் உன்னுடைய நினைவு என் இருதயத்தில் குடிகொண்டது. அந்த நினைவு, இன்பத்தையும் வேதனையையும் ஏககாலத்தில் அளித்தது. எப்பேர்ப்பட்ட முக்கியமான காரியத்தில் ஈடுபட்டபோதிலும் உன்னை என்னால் மறக்க முடியவில்லை. இந்த நிலைமையில் இந்தத் தாமரைக் குளக்கரையில் ஒருநாள் நாம் தனியாகச் சந்தித்தோம். மூன்று வருஷம் உன்னை வந்து பார்க்காமல் இருந்ததற்காக நீ என்னைச் சண்டை பிடித்தாய். கடைசியில் உன்னை மறப்பதில்லை என்று கையடித்துச் சத்தியம் செய்து கொடுக்கச் சொன்னாய். எனக்குச் சிரிப்பு வந்தது உன்னை ஒருகணமும் மறக்க முடியாமல் நான் திண்டாடிய திண்டாட்டம் எனக்கல்லவா தெரியும்? ஆனாலும், உன்னுடைய மனத்திருப்திக்காகச் சத்தியம் செய்து கொடுத்தேன். அதன் பிறகு, இன்றுதான் நாம் இந்தக் குளக்கரையில் சந்திக்கிறோம். ஒருவேளை நீ இங்கு இருக்கமாட்டாயா என்ற ஆசையினால் வந்தேன். வந்து பார்த்தால், நீ இங்கே இருக்கிறாய்! நம்முடைய உள்ளங்கள்தாம் எப்படி ஒத்திருக்கின்றன!" என்று சொல்லி நரசிம்மர் நிறுத்தினர்.
இவ்வளவெல்லாம் சொன்னீர்கள் நான் முதலில் கேட்ட கேள்விக்கு மட்டும் மறுமொழி சொல்லவில்லை!" என்றாள் சிவகாமி. "என்ன கேள்வி அது? தயவு செய்து ஞாபகப்படுத்தினால் நல்லது" என்றார் மாமல்லர். "மதுரைக்கும் வஞ்சிக்கும் திருமணத் தூதர்களை அனுப்புவதாக இருந்த விஷயந்தான்!" நரசிம்மர் இலேசாகச் சிரித்துவிட்டு, "அது உண்மைதான் மகனுக்குக் கல்யாணம் செய்யவேண்டுமென்று எந்தத் தாயாருக்குத்தான் எண்ணமில்லாமலிருக்கும்? என் தாயாருடைய ஏற்பாடு அது! ஆனால், நான் சக்கரவர்த்தியிடம் என் மனநிலையைத் தெரியப்படுத்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள் இந்த யுத்தம் வந்து அதற்கு அவசியமே இல்லாமல் செய்து விட்டது" என்று கூறினார்.
"பிரபு எனக்கு என்னவோ நிம்மதி இல்லை. மூன்றரை வருஷத்துக்கு முன்பு இருந்ததுபோல் நாம் இருவரும் குழந்தைகளாகிவிடக் கூடாதா என்று தோன்றுகிறது." "இல்லை, சிவகாமி! மறுபடியும் குழந்தைகள் ஆவதற்கு ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, தேவி சிவகாமியைப் பார்த்தபிறகு குழந்தை சிவகாமியை நான் விரும்ப முடியாது. இரண்டாவது காரணம், சக்கரவர்த்தி இப்போதே நான் போர்க்களம் போவதற்கு ஆட்சேபிக்கிறார்; நான் குழந்தையாயிருந்தால் சம்மதிப்பாரா?"
"பிரபு! தாங்கள்கூட உண்மையாகவே போர்க்களம் போவீர்களா?" என்று சிவகாமி கவலையுடன் கேட்டாள். "அவசியம் போவேன் என் தந்தையுடன் அதைப்பற்றித் தான் மூன்று நாளாக வாதம் செய்துகொண்டிருக்கிறேன். நூறு வருஷ காலமாக அந்நியர்கள் காலடி வைக்காத பல்லவ சாம்ராஜ்யத்தில் இன்று சளுக்கர்கள் படையெடுத்திருக்கிறார்கள். அவர்களைத் துவம்ஸம் செய்து புத்தி புகட்ட வேண்டாமா?" "பிரபு! அதற்குப் பல்லவ சைனியங்கள் இல்லையா? படைத் தலைவர்கள் இல்லையா? தாங்கள் ஏன் போக வேண்டும்?"
"பல்லவ சைனியங்கள் அன்னியர்களை எதிர்த்து வீரப் போர் புரியும்போது, நான் என்ன செய்வதாம்? அரண்மனையில் உட்கார்ந்து அறுசுவை உண்டி அருந்தி அந்தப்புர மாதர்களுடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கட்டுமா? அப்படி நான் இருந்தால், ஆயனர் மகளின் காதலுக்குப் பாத்திரம் ஆவேனா?" சிவகாமி கூறினாள்; "பிரபு! தாங்கள் போர்க்களம் போவதைத் தடுப்பவள் நானல்ல. தாராளமாய்ச் சென்று பகைவர்களை வென்று வாகைமாலை சூடி வாருங்கள், ஆனால்.." "ஆனால், என்ன?" "என்னுடைய கோரிக்கையைப் பரிகாசம் செய்யக் கூடாது." "இல்லை, சிவகாமி, சொல்லு!" "வள்ளியம்மைக்கு சுப்பிரமணியர் சத்தியம் செய்து கொடுத்ததுபோல், உங்கள் கையிலுள்ள வேலின் மேல் ஆணை வைத்துச் சொல்லுங்கள், போர்க்களத்திலும் என்னை மறப்பதில்லையென்று!"
நரசிம்மர் புன்முறுவல் செய்து, "இவ்வளவுதானே? 'என்னை மறந்துவிடுங்கள்' என்று நீ ஆணையிடச் சொன்னால்தான் என்னால் முடியாது! மறக்காமலிருப்பதற்கு எத்தனை தடவை வேணுமானாலும் செய்கிறேன். இதோ...!" என்று வேலைத் தூக்கிப் பிடித்தவர், சட்டென்று தயங்கி நின்றார். "பிரபு! ஏன் தயங்குகிறீர்கள்? அதற்குள்ளே மனம் மாறி விட்டதா?" என்றாள் சிவகாமி. "இல்லை, சிவகாமி இல்லை! இந்த வேல் என்னுடையதில்லையே! இன்னொருவருடைய வேலின்மேல் ஆணையிடலாமா என்றுதான் நான் யோசிக்கிறேன்." "உங்களுடைய வேல் இல்லையா? பின் யாருடையது?"
"அரங்கேற்றத்தன்று மதயானையின்மேல் வேல் எறிந்து ஆயனரையும் உன்னையும் தப்புவித்தானே, அந்த வீர வாலிபனுடையது. அந்த மகாவீரனை நேரில் கண்டு அவனிடம் கொடுக்க வேண்டுமென்று வைத்திருக்கிறேன்." "அப்புறம் அந்த வாலிபனை நீங்கள் பார்க்கவே இல்லையா?" என்று சிவகாமி கேட்டாள். "மூன்று நாளாக நாடு நகரமெல்லாம் தேடுகிறோம்; அவன் மட்டும் அகப்படவில்லை." "பிரபு! அவன் இருக்குமிடம் சொன்னால், எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டாள் சிவகாமி. "அவன் இருக்குமிடம் உனக்குத் தெரியுமா? சீக்கிரம் சொல், சிவகாமி! உனக்கு என்னையேதான் கொடுத்திருக்கிறேனே! வேறு என்ன தரப்போகிறேன்?"
"அந்த வாலிபன் இப்போது எங்கள் வீட்டில் இருக்கிறான்." நரசிம்மர் துள்ளி எழுந்து, "என்ன சொல்லுகிறாய் சிவகாமி! உங்கள் வீட்டுக்கு அவன் எப்படி வந்தான்?" என்று கேட்டார். "முன்னே உங்களிடம் சொன்னேனல்லவா, ஒரு புத்த பிக்ஷு அடிக்கடி வந்து அப்பாவையும் என்னையும் வடநாட்டுக்கு வரும்படி அழைத்துக்கொண்டிருக்கிறார் என்று; அந்த நாகநந்தி அடிகள் தான் அழைத்துக்கொண்டு வந்தார்." "ஆகா! சக்கரவர்த்தி கூறியது உண்மையாயிற்று..சிவகாமி! அதோ கேள்!" என்றார் நரசிம்மர்.
தூரத்தில் பேரிகை முழக்கம், சங்கநாதம், குதிரைகளின் காலடிச் சத்தம் கலந்து கேட்டன. "யார், சக்கரவர்த்தியா?" என்றாள் சிவகாமி. "ஆம்; சக்கரவர்த்திதான் வருகிறார் இதோ! நான் போய்ச் சக்கரவர்த்தியுடன் சேர்ந்துகொள்கிறேன். நீயும் சீக்கிரம் வீடு வந்து விடுவாயல்லவா?" "குறுக்கு வழியாக வந்துவிடுவேன்; பிரபு! தாங்கள் போர்க்களம் போவதற்கு முன்னால் இங்கே மறுபடியும் வருவீர்களா?" "அவசியம் வருகிறேன்! உன் கருவிழிகளில் மின்னும் வேல்களின் மீது ஆணை!" என்று சொல்லிவிட்டு நரசிம்மர் திரும்பிப் பார்த்துக்கொண்டே விரைந்து சென்று குதிரை மீதேறினார். அவர் போவதை மலர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற சிவகாமி, குதிரை காட்டுக்குள் மறைந்ததும் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள். வீட்டிலிருந்து வந்தபோது அவளுடைய நடையில் காணப்படாத மிடுக்கும் குதூகலமும் இப்போது காணப்பட்டன. ரதியை அவள் மறந்து சென்றாலும், அவள் போவதைப் பார்த்துவிட்டு ரதி பின் தொடர்ந்து துள்ளி ஓடிற்று.