சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்கள்
***
இத் தொகுப்பில் உள்ளவை மொத்தம் 16 பாடல்கள்
அவற்றில் ஒன்று இவரது அண்ணன் வேலைய சிவாமிகள் பாடியது
மற்றொன்று சிவப்பிரகாச சுவாமிகளின் தந்தை பாடியது
நூலில் பக்கம் 75 முதல் 78
குறிப்புரை - செங்கைப் பொதுவன்

1-3[தொகு]

ஐயநின் சென்னிமிசை யுறைகின்ற மடமங்கை யாரென்ன வமைவினவவும்
அன்னதொரு மடமங்கை யன்றுவெண் டிரைகொழித் தழகொழுகு தண்புனலெனத்
துய்யவொளி யான்னங் கரியவிழி காதுவாய் தோயத்தில் உண்டோவெனச்
சொல்லருங் கமலமலர் காவிமலர் கொடிவள்ளை தூயசெங் குமுதமென்னப்
பொய்யென நினைத்து நற்கொங்கையும் கூந்தலும் புனலிடை யுண்டோவெனப்
புற்புதஞ் சைவலம தெனவே மறுத்துப் புகன்றிடுதி நங்காயெனத்
தையலவளே னென்ன நாணொடு வணங்கியென் றன்பிழை பொறுத்திடென்றே
சங்கரன் உரைத்திடத் திருவுள மகிழ்ந்த சிவசங்கரி உமைக்காக்கவே. (1)
அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான் ஐயவென் செவியைமிகவும்
அறுமுகன் கிள்ளினா னென்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே யண்ணனென் சென்னியில் வளங்குகண் எண்ணினனென
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ யப்படிவிகடம் ஏன்செய்தாயென
மருவுமென் கைந்நீள முழமளந்தா னென்ன மயிலவன கைத்துநிறக
மலையரையனு தவவரும் உமையவளை நோக்கிநின் மைந்தரைப் பாராயெனக்
கருதரிய கடலாடை யுலகுபல வண்டங் கருப்பமாய்ப் பெற்றகன்னி
கணபதியை யருகழைத்து அகமகிழ்வு கொண்டனள் களிப்புடனுமைக் காக்கவே.(2)
அம்பிகை யரன்தன்னை நோக்கியுன் னாபரண மரவமென உமையைநோக்கி
அரியரவ சயனத்தை யரவுருவ மானத்தை அறியாய்கொல் சிறிதுமென்ன
நம்பிமனை தொறுமிரந் துணுமாண்டி நீயென்ன நான்றாத னறிவேனென
நவையுறும் பொய்புகன்றீ ரெனப்பாரத நடந்ததே கரியாமென
வெம்பியொருவன் பிரம்பால் அடித்தானென விளங்கிழை யொருத்தி தாம்பால்
வீசினதுசொல் லென்ன வெண்ணாயிரம் பெண்கள் மிகுகற்பை நீக்கினையெனப்
பம்புகற்பினிலோ ரிரட்டிப்பு நீக்கினது பதறாமல் நீகேளெனப்
பரமருடன் இவ்வாறு விளையாடு பச்சைப் பசுங்கொடி உமைக்காக்கவே. (3)

4-6[தொகு]

அச்சுதனளிப்ப னிலமுமது நேயன்வித்தை யருளுவன் பலபத்திரன்
அலமுதவு வன்சமன் பகடீவனந் தமக்காள தோரெருது முண்டே
முச்சிரவயிற் படையினைக் கொழுவதாக்குவோ மொய்ம்புடன் இழுத்திறுக்க
முந்திய வடக்கயிற்றுடன் மற்றுநம தன்பர்முன் போயிரந்து கொள்வோம்
இச்சையுடை நமதிளைய தனயனாகிய கந்தன் இனிமையொடு மாடுமேய்ப்பன்
இனியுழுது பயிரிடுத னன்றுநன றிதைவிட் டிரந்துண்ப தீனமெனவே
கச்சுமுலை மாதுமை யுரைத்திடும் புத்தியைக் கைக்கொண் டுளத்திலிதுநற்
காரியமெனக் கருதி மெத்தக் களித்திடுங் கண்ணுதல் உமைக்காகவே. (4)
கவுரிகமலா யரனிரந்த சோறிதுவெனக் கமலைமண் கண்டேனெனக்
காளையொன்றே யாற்கென மாடுமேய்த்ததைக் கட்டிடைய னாரோவெனச்
சிவனொருவர் தூதென்ன அத்தூது சென்றகதை செப்பிலொரு பாரதமெனச்
சேரோடுதிருடினா னரனெனக் கட்டுண்ட செய்தி நாமறிவோமென
அவையில் நடமாடினான் அரனென்ன அவ்வாடலரவம் அறியாதோவென
ஆலமதை யுண்டனன் அரனென்ன மண்ணுண்ட வதனை அறியோமோவென
விவரமொடு மலைகளு மலர்மகளு மிவ்வாறு விளையாடு மிவர்கடுணையா
மேவிவரு புத்ரமித்திர களத்திரருடன் மென்மேலு மிகவாழியே. (5)

நிறைய வுளதோ வெளிதோ கொளுவோம்

பிறையை முடிக்கணிந்த பெம்மான்-உறையும்
திருக்காட்டுப் பள்ளி திரிபாவாய் நீயிங்
கிருக்காகாட்டுப் பள்ளி யெமக்கு. (6)

7-9[தொகு]

அடுத்துவரும் தொண்டனுக் காவந்தகனைத் தாளால்
அடர்ந்த்துவும் சத்தியமே யானால்- எடுத்ததொரு
மாங்கனிக்கா என்னை மடிபிடித்த மாபாவி
சாங்கனிக் காதித்தன் வரத்தான். (7)
குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழன்
முடக்கோடு முன்னம் அணிவார்க்கு- வடக்கோடு
தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு. (8)

விருத்தம்

சேய் கொண்டாருங் கமலச் செம்மலுடனே யரவப்
பாய் கொண்டானும் பணியும் பட்டீச் சுரத்தானே
நோய் கொண்டாலுங் கொளலாம் நூறுவயதா மளவும்
பேய் கொண்டாலுங் கொளலாம் பெண்கொள்ள லாகாதே. (9)

10-12[தொகு]

நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த பெரியோர் கணிமலன் றாளைக்
கிட்டையிலே கொடுத்து முத்தி பெறுமளவும் பெரியசுகம் கிடைக்குங்காம
வெட்டையிலே மதிமயங்கிச் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித்தாலி
கட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே கிடத்துமட்டும் கவலைதானே. (10)
திருந்து தமிழிலக்கண வைந்திணைக் கோவை விருத்தகிரி செலவர்க்கோதும்
பெருந்தகைமை உடையம்யாம் விடுமோலை வெங்கணூர்ப் பிடாரிகாண்க
இரும்புவியில் ஒருமுறுங்கைக் கொம்பொடியாமற் காத்திங் கிருக்குநீநம்
முருங்கை தனை வேறோடும் களைந்தனை யென்றாலுனக்கு மறைநன்றாமோ. (11)
முன்னமொரு தமிழ்ப்புலவன் தனையுண்டு கண்டசுவை முதிர்ச்சியாலே
தன்னியலை முழுதுமுரைத் தமையா முன்னினைக் கவர்ந்து தடங்காளத்தி
மன்னவன் உண்டானெனது மாதவத்தின் வலிதீர மண்ணின்மீதே
என்னுடன் வந்தவதரித்த விளங்கருணைப் பிரகாசனென்னுங் கோவே. (12)

13-14[தொகு]

நாணியென்பதை நாரியென் றுரைத்திடு நசையால்
வேணுவானது வளைந்து போய்புகுந்தது வென்றாற்
காணலாவ தோருருவ மெய்ந்நாரியைக் கண்டால்
பூணுவார் மயல் காளைய ரென்பதும் புதிதோ. (13)
அல்லிமலர்ப் பண்ணவனு மாராய்ந் தறிகவிதை
சொல்லும் இருவரிடைத் தோன்றிய்யான்- முல்லை
அரும்பிற் பொலியுமணி முறுவ னல்லாய்
கரும்பிற் கணுநிகர்த் தேன்காண். (14)

வேலைய சுவாமிகள் பாடல்[தொகு]

ஆண்டதனால் எனையொவ்வாய் வித்தையினிற் றமையனினு மதிகமென்றே
பூண்டவுலக தனிலுள்ளோர் புகல்வது கேட்டிருந்துமென்ன புதுமைதானோ
காண்டகு கண்மணியே நல்லிளங் கருணைப் பிரகாசக் காளாய்நீதான்
மாண்டனை யென்றறிந் திருந்தும் உயிர்தரித்தேன் யானுமிகு வன்நெஞ்சேனே. (15)

சிவப்பிரகாச சுவாமிகளின் பிதா[தொகு]

கயல்வாய்த்த கண்ணியுல கீன்றவல்லி பங்காவுனது
செயல்வாய்த்த அன்பருக்கும் அல்லாதார்க்கும் சிரிப்பல்லவோ
இயல்வாய்த்த எந்தைக்கி யான் வாய்த்ததுவும் இங்கென் றெனக்கு
வயல்வாய்த்தது மனைவாய்த்தது மைந்தர்கள் வாய்த்ததுவே. (16)