சீனத்தின் குரல்/அதிசயச் சம்பவம்
இந்த சம்பவம் வரலாற்றிலேயே மிக அதிசயமானது. ஏனெனில் காட்டிய பக்கம் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லவேண்டிய இராணுவத்தினர் கட்டளை யிட்ட தலைவனையே! கைது செய்வதென்பது உலக வரலாற்றில் காணமுடியாத நிகழ்ச்சியாகும். மேலும், எந்த நாட்டு இராணுவமும் அரசியல் விவகாரங்களில் தலையிட்டுக் கொள்வதில்லை. தான் எந்த அரசாங் கத்துக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொள்வதாக ராஜவிசுவாசப் பிரமாணம் செய்து கொண்டார்களோ, அதே அரசாங்கத்தின் தலைவனைக் கைது செய்வதென்பது அதிசயத்திலும் அதிசயந்தான். எனினும், இது சினத்தில் நடந்தது, இதன் எதிரொலி போல் பல நாட்களுக்குப் பிறகு எகிப்து செய்திருக்கிறது. தோல்விமேல் தோல்வி கண்டு உடலில் பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்குக்கூட நேரமில்லாமல் மேலும் மேலும் தலைவனுடைய கட்டளை சரியாகவோ அல்லது தவறாகவோ எப்படியிருக்காலும் நிறைவேற்றித் தரவேண்டிய வேதனையில் அகப்பட்டுக்கொண்ட இராணுவத் தலைவர்கள் சியாங்-கே-ஷேக்கை டிசம்பர் பனிரெண்டாந் தேதி காலை 6 மணிக்கு சியான் என்ற ஊரில் அவர் தங்கியிருந்த ஓட்டலிலேயே கைது செய்து உயிருக்கு ஒருவித ஆபத்தில்லாமல் பாதுகாவலில் வைக்கவேண்டுமென்றும், இந்த வேலைகளைச் செய்வதற்காக, தளபதிகளில் ஒருவரான சாங்-சியூ-லியாங் என்பவரின் மெய்க்காப்பாளனான, சன் - மிங்-சு என்பவரை நியமித்துவிட்டனர்.