சீனத்தின் குரல்/அதுவும் ஒரு நன்மைக்குத்தான்
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் பலவித வேலைகளைச் செய்ய வேண்டி வந்தது. தாய் தந்தையற்றக் குழந்தையை இப்படி வீடு கூட்டச் செய்வதும், சாமான்களைத் துலக்கச் செய்வதும், தண்ணீர் கொண்டுவரச் செய்வதும் சரியல்லவென்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஷேக்கின் சிற்றன்னையைக் கண்டிப்பார்கள். அந்தம்மையார் மாற்றாந்தாயின் மனப்பான்மையால் இதைச் செய்யவில்லை என்பது ஷேக்கின் மூலம் தெரிகிறது. தனக்குக் குழந்தைகள் இல்லாத காரணத்தால் ஷேக்கை வெகு பிரியமாக வளர்த்தார்கள். கடமைக்காகவோ, பெருமைக்காகவோ வளர்க்கவில்லை. மக்களில்லாதவர்கள் மற்ற மக்களை எவ்வளவு அன்பாக நடத்துவார்களோ அதைவிட மேலாக ஏறக்குறைய ஈன்ற தாயைப் போலவே ஷேக்கை வளர்த்தார்கள், என்றாலும் மேற்சொன்ன வேலைகளை வாங்கத் தவறவில்லை. ஏற்கெனவே ஏழைக் குடும்பமாகையால், ஒரு வேளை தானும் ஷேக்கை விட்டுப்பிரிய நேர்ந்தால் அவன் பிழைக்கத் தெரியாமல் பிச்சைக்காரனாக தெருவில் நின்று தவிக்கக் கூடாது. எப்படியாகிலும் எந்த வேலையையாகிலும் கண்ணியமாகச் செய்து அவன் பிழைத்துக்கொள்ள வேண்டும். எந்த விதமான பரம்பரை சொத்தை நாம் அவனுக்குத் தேடி. வைக்காவிட்டாலும் பிழைக்க வழியையாகிலும் நாம் அவனுக்குத் தேடிக் கொடுப்போம் என்பது தான் அந்தம்மையாரின் அந்தரங்க எண்ணம். பற்பலர் பற்பல விதமாகப் பேசித் தீர்த்தனர். எனினும் ஷேக்கின் பிற்கால வாழ்க்கை அண்டை அயலார் ஷேக்கின் சிற்றன்னையின் பேரில் சுமத்திய குற்றம் சாட்டுகள் அவ்வளவும் பொய்யென நிரூபிக்கின்றது.
பிறகு, பெங்-லு, லுங்-சிங் ஆகிய இரண்டு மத்திய தரப் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றார். பள்ளிக்கூடத்தில் நடக்கும் எல்லாவித. விளையாட்டுகளுக்கும் ஷேக்தான் தலைவன். தனக்கு இராணுவத்தில் சேர்ந்துகொள்ள வேண்டுமென்று ஆசை.