சீனத்தின் குரல்/இதிலும் ஒரு தவறு

விக்கிமூலம் இலிருந்து

இதிலும் ஒரு தவறு

இப்படி, ஆண்கள் கையில் வந்த பொருளாதாரத்தாலும், சமூக பலகையில் சம அந்தஸ்தில் வீற்றிருந்த பெண்கள் ஒரே அடியாக கீழே தள்ளப்பட்டதாலும் வைப்பாட்டி முறை வளர ஆரம்பித்தது இந்த கேடான முறைக்கு தூபம் போடுவதைப் போல் பிறகு வந்த Wei - வெய், Ching - சிங் அரசியல்கள் அமைந்தன. இதனால் வைப்பாட்டி முறை வளர்ந்தது மாத்திரமல்ல, கன்னிப் பெண்களுடைய நிலையும் தற்கொலைக் கொப்பானதாக முடிந்தது.

இரண்டாயிரம் ஆண்டு சீன சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் காலையில் கிழக்கு நோக்கிப் போகின்றவனுடைய பிரயாணம் போல் முடிவடைகிறது ஏனெனில், காலையில் கிழக்கு நோக்கிப் புறப்படுகின்றவனுடைய நிழல் அவனுக்குப் பின்னால் தொடர்ந்து வந்து நடுப்பகலுக்கு மேல் முன்னால் வந்துவிடும். இதேபோல் சீன வரலாறு முற்பகுதி பின்னாலேயும், பிற்பகுதி முன்னாலேயும் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த பொருளாதார முறையினால் ஏழைக் குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு ஆடம்பரமான திருமணங்கள் செய்ய முடியாமல் பல குடும்பங்கள் திகைத்தனர். ஆண்களின் ஆடம்பரங்கள் தலை தெறித்துப்போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சிக் காணப்படுகிறது.

ஒரு அரசன் தன் மாளிகையில் கம்பளத்தை விரித்து அதன்மேல் மாவைத் தூவி, அதன் மேல் பல பெண்களை நடக்கவிடுவானாம். அப்படி நடந்த பெண்களில் யாருடைய அடிச்சுவடுகள் மாவின் மேல் மெதுவாக படிந்திருக்கின்றதோ அவளைப் பஞ்சணைக்கழைத்துக்கொண்டு பகலிரவில்லாமல் பரவசமாகயிருப்பானாம். அதோடு அவளுக்கு பொன்னும் மணியும் தாராளமாக வழங்குவானாம். இந்த, கொடியவன் கையாண்ட மூட முறையால், இவனுடைய அபிமானத்தைப் பெறவேண்டும்மெனக் கருதிய பல பெண்கள் தங்களுக்கு இயற்கையாக இருந்த உடற்கட்டை செயற்கை முறைகளால் குறைத்துக்கொண்டு வெறும் எலும்பும் கூடுமாய் போய்விட்டார்கள்.

கன்பூஷியஸத்தைவிட, இந்த அரசன் அளித்த வெகுமதியால் பழைய ரோம் நகரத்து நாரீமணிகளைக் காட்டிலும், நவீன நியூயார்க் மங்கையர்களைக் காட்டிலும் கேவலமாய்விட்டார்கள். முதல் மனைவி உயிரோடிருக்கும்போதே அந்த முதல் மனைவியே பார்த்து வேறொருவளைத் தேடி தன் கணவனுக்கு இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்துவைத்து விடுவாள். ஆனால் புதியதாகக் கொண்டுவரப்பட்டவள் தனக்குதான் அடங்கி நடக்கவேண்டுமேயன்றி தன் கணவனுக்கல்ல என்று அதிகாரம் செய்து கொண்டிருப்பாள்; ஏனெனில் தன் விருப்பப்படி கொண்டு வரப்பட்டவள் அல்லவா அதனால்.