சீனத்தின் குரல்/உள்ளே நுழைந்த கள்ளன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உள்ளே நுழைந்த கள்ளன்

'உள்ளே நுழைந்த கள்ளன்' என்று சீன நாட்டிற்குள்ளே நுழைந்த அபினியைப்பற்றி உரத்தக் குரலில் சொல்லிவிடலாம். சீனத்தின் சொத்துக்களை மாத்திரம் அது களவாடவில்லை. நாகரிகம் பண்பாடு ஆகியவைகளை மட்டிலும் அது சூறையாடவில்லை, சீனத்தின் சிந்தையையே கலக்கிவிட்டது. இந்த மருந்தின் மயக்கம் தொடங்கிய பிறகு நீண்ட நாட்கள் வரையிலும் வெளி நாட்டாராதிக்கம் நிலை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியால், அண்டையிலிருந்த சகோதர நாடான சீன நாட்டை சீர் குலைய செய்வதற்காக சீமையர்கள் கொண்டுபோன அபினியை உற்பத்தி செய்து கொடுத்தது இந்தியா தான் என்று படிக்கும்போது உள்ளபடியே வெட்கப்பட வேண்டியதாகிறது. அதுவும் சுதந்திர வீரர்கள் தோன்றியதாகச் சொல்லப்படும் வங்காளத்தில்தான் அபினி செய்யப்பட்டது.

அபினியைக் கொண்டு சென்ற கம்பெனிகளைப் பற்றியும். கொள்ளை லாபத்தைப்பற்றியும் லூப்பாக் Lubbock என்பவன் பின்வருமாறு எழுதுகிறான்.

"சீனத்திற்கு அபினியையேற்றிச் சென்றவர்கள் கடலாதிக்கம் பெற்றவர்களாகவும், முரட்டு தைரியமுடையவர்களாகவும் இருந்து இவர்கள் செய்த அபினி வியாபாரம் பெரிய அளவில் லாபத்தைத் தந்தது என்று, சொல்வதைவிட, ஏராளமான பொருள்களை கொள்ளையடிக்க உதவி செய்தது எனலாம்."

இப்படி இந்த கொள்ளையைத் தொடங்கிய கம்பெனிகள், பிரிட்டிஷாருக்குச் சொந்தமான ஜார்டின் Jarden கம்பெனி, மேதிசன் கம்பெனி MatheSon & Co, டெண்ட் & கம்பெனி Dent & Co, அமெரிக்காவுக்குச் சொந்தமான ரஸ்ஸல் கம்பெனி Russel & Co, பாரசீகத்துக்குச் சொந்தமான பான்ஜீ கம்பெனி, Banjee Company.

இந்த கம்பெனிகளும், இவைகளைத் தொடர்ந்து பல சில்லரை கம்பெனிகளும் செய்த கைங்கரியத்தினால் தான் சீன மக்கள் மயங்கி தங்கள் விலையுயர்ந்த பொருள்களையும் விவேகத்தையும் இந்த வீணர்களிடம் விட்டுவிட்டார்கள்.