சீனத்தின் குரல்/புரட்சி அரசாங்கம்

விக்கிமூலம் இலிருந்து

புரட்சி அரசாங்கம்

இந்த புரட்சியின் பயனாக 1923 ஜனவரி திங்கள் 23-ம் நாள் காண்டன் நகரத்தில் புரட்சி அரசாங்கசம் அமைக்கப்படுகிறது. கொமிங்டாங் -கம்யூனிஸ்டு ஆகியோரின் கூட்டு சர்க்கார் அமைகிறது. மஞ்சு சர்க்கார் மரண கீதம் பாடிவிட்டது. இனி மக்கள் இதயப் பூங்காவில் பொது உடமைப் பூக்கள் பூத்துக் குலுங்கி அதன் வாசம் நாடு முழுதும் பரவும் என நம்பினர். இந்த எண்ணத்தோடுதான். ஷேக் ரஷ்யாவுக்குச் சென்று அங்கிருக்கும் அரசியல், முறைகளையும் - புரட்சியினால் ஏற்படுகிற பலாபலன்களையும், புரட்சிக்குத் தொடக்கத்தில் என்னென்ன தேவை என்பதை நேரில் கண்டு எந்த நாட்டிலும் புரட்சி ஏற்படுவதானால் முதன் முதலில் இராணுவம்தான் தேவை என்ற முடிவுக்கு வந்தார். அவர் கொண்ட முடிவின் சின்னமாக 1924-ம் ஆண்டு ஜனவரி 16-ல் பம்போவா என்ற இடத்தில் ஒரு இராணுவக் கல்லூரியைக் கட்டி முடித்து அதை டாக்டர் சன்-யாட்-சன் அவர்களைக் கொண்டு திறந்து வைக்கின்றார்.

டாக்டர் சன்-யாட்-சன் கம்யூனிஸ்டுகளோடு ஒத்துழைத்தது மாத்திரமல்லாமல், சைனாவின் முதல் சோவியத் தூதுவரான காரகான் என்பவபரிடத்திலிருந்தும், சைனைவைத் திருத்துவதற்கென்றே ரஷ்யாவில் இருந்து அழைத்து வரப்பட்ட Borodin போரோடின் என்பவரிடத்திலிருந்தும் பல யோசனைகளைத் தெரிந்துகொண்டு, இவர்கள் மூலமாகவே ரஷ்யாவிடமிருந்து பல உதவிகளைப்பெற்று கொமிங்டாங் அரசரங்கத்தை வலுப்படுத்திக் கொண்டார்கள். அந்த பொன் னானக் காட்சியைக் கண்ணால் காணும் வரையிலும் சன்-யாட்-சன் உயிரோடிருந்தார்.