உள்ளடக்கத்துக்குச் செல்

சீனத்தின் குரல்/முந்திய காலமும் பிந்திய காலமும்

விக்கிமூலம் இலிருந்து

முந்திய காலமும் பிந்திய காலமும்

கன்பூஷியஸ் காலத்துக்கு முந்திய சீனத்தையும், பிந்திய சீனத்தையும் எடுத்துக் கொண்டால் மலை போன்ற வித்தியாசங்கள் காணப்படுகின்றன. முந்திய சீனத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. தாய்தான் குடும்பத்தின் தலைவி என்ற உரிமைக்குரியவளாயிருந்தாள். அப்படியிருந்ததின் காரணமாகவே, வெளிநாடுகளோடு தொடர்புகொள்வது, வாணிபஞ் செய்வது, போர் தொடுப்பது முதலானவைகளைச் செய்யச் சக்தியற்றவர்களாயிருந்தார்கள். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்த நிலையடையக் காரணமென்ன என ஆராய்ந்தான் கன்பூஷியஸ். தாய்மை! தாய்மை!, சாந்தம், சமாதானம், அமைதி என்ற தளர்ந்த சொற்களுக்கே சீனர்கள் அடிமைகளாய் விட்டனர். வீரம், போர்க்குணம், படையெடுப்பு, இரத்தஞ் சிந்தல் முதலான தீர செயல்களைத் தீண்டத்தகாதவையென விலக்கி விட்டார்கள். இந்த அடிமைத் தனத்தை ஒழிக்கவேண்டு மானால் பேத புத்தியை ஒழித்துக்கட்ட வேண்டும். சீன சமுதாயத்திலே பெண்களுக்கிருக்கும் உரிமையை, அதிகாரத்தை அடியோடு தொலைத்தாலன்றி சீன மக்கள் வீரர்களாவது இயலாதெனக் கண்டான். கன்பூஷியஸ், ஆகவே, மக்களை ஐந்து பிரிவினராகப் பிரித்தான் 1. அரசன், 2 குடிகள், 3. கணவன், 4. மனைவி, 5. மக்கள். அவரவர்களுக்குள்ளாக் கடமையைப் போதித்தான். என்றாலும் அவன் காலத்து சீனத் தாய்க் குலம் அவனை சபித்தது. ஆண் குலம் வரவேற்றது, அறிஞர் குலம் "சீன நாகரிகத்தின் தலைமேல் ஒரு தீராப் பழிச் சுமையை ஏற்றி வைத்துவிட்டான் கன்பூஷியஸ், என்று முணுமுணுத்தது. சமுதாயத்துறையில் வேண்டுமானால் இது புறம்பாயிருக்கலாம் அரசியல் துறையிலே அவன் கையாண்ட முறைதான் சரியானதென மற்ற அரசுகள் பேசின.

எனினும் சீன மக்களை கன்பூஷியஸ் ரணகளம் அழைத்துச் செல்லவில்லை. தாய்மைக்கு அவர்கள் அளித்த அளவு கடந்த அபிமானத்தின் மூலம், மானாபிமானத்தை விட்டுவிட்டார்கள். அதனால் அயலார் தாராளமாக உள்ளே வர முடிந்தது என்பதை ஜாடையாகக் காட்டினான் கன்பூஷியஸ்.

அரசியல் வானில் போர் மேகங்கள் சூழ்ந்து பகை மின்னல்களும், ஆயுதச் சாலையின் இடி முழக்கமும் கேட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் சீனம் அமைதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. நீரில் மூழ்கிச் சாகப்போகின்றவனிடம், நடந்த தைச் சொல்லிவிடுகின்றேன், கொஞ்சம் நியாயத்தைச் சொல்லிவிட்டு செத்துப்போ," என்று சொல்வதைப் போல, சீனம் சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும்போது வாணவேடிக்கை விட்டு வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியைக் காண சகிக்காத கன்பூஷியஸ் தான் சொன்ன கருத்தில் எவ்வளவு முரன்பாடுகள் இருந்தாலும் இந்தக் கொள்கைகள்தாம் தேவை, தேவை, தேவை என்று வலியுறுத்தினான். இவன் காலத்துக்கு முன்பு தோன்றிய டாய்ஸ் மதமும் இதையேதான் சொல்லிற்று. இவ்விரண்டும் ஒன்றே போலிருக்கவே மக்கள் இரண்டையும் பின்பற்றினார்கள்.

கன்பூஷியஸ், மிகப் பழைய காலத்தைப் பார்த்து அழைத்தவர்களைப் பார்த்துச் சீறினான். அதன் விளைவாகவே பெண் வர்க்கத்திடம் கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் நடந்து கொண்டான் என்று சொல்லப்படுகிறது.