சீனத்தின் குரல்/கட்டுக்கடங்காத காதலி
Wei - வெய் என்ற ராணி தன் கணவனிடம் ஒரு அழகனைத் தனக்குத் தேடித் தரும்படி கேட்டாள். அவனும் அப்படியே செய்வதாக சம்மதித்து தண்டோரா போட்டு ஒரு அழகனைத் தேடித் தன் ராணிக்கு அளித்தான். அன்றிருந்த பெண்களின் போக்கு 'நானிருக்க அவனேன்' என்று தைரியமாக ஆண்கள் கேட்கமுடியவில்லை. அந்த அளவுக்கு பெண்களிடம் ஆண்கள் அடங்கியிருந்தார்கள், அல்லது அடக்கப்பட்டிருந்தார்கள். அந்த அளவுக்கு பெண்களின் கற்புக்கு விடுதலையும். ஆண்களின் நாவுக்குத் தளையும், நெஞ்சத்துக்குச் சிறை வாசமும் விதித்திருந்தார்கள் பெண்கள். ஆகவே அந்த ராணி பின் விருப்பப்படி ஒரு அழகனைத் தேடி ராணியாரின் படுக்கை அறையில் சேர்த்துவிட்டு தான் ஒரு காவலாளிபோல் வெளியே கைக்கட்டி நின்றுகொண்டிருந்தான், திருமணவிலக்கும், விதவைத் திருமணமும் வினாடிக்கு, வினாடி நடந்த வண்ணமிருந்தன.
வேண்டாத திருமண விலக்கும், விதவைத் திருமணமும் மறுமணமும் சமூக முன்னேற்றத்துக்கு மிகுந்த தேவைதான் என்றாலும் ஒரே நாளில் ஒருவன் மூன்று திருமண விலக்குகளும் நான்கு மறுமணமும் செய்துகொண்டிருந்தால் - முற்றிய காதல், தோன்றா விட்டாலும், குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படவேண்டிய குறைந்த பட்ச அன்பும் இல்லாமல் போய்விடுமே. சாதாரண அன்பே பரிதியைக்கண்ட பனித்துளி யாகுமானால், கற்பு எந்தக் கடையில் விற்கிறது என்று கேட்கும் அளவுக்குத்தானே இருந்திருப்பார்கள் சீனப் பெண்கள். இதன் காரணமாக மக்களுக்கு இருக்க வேண்டிய ஒற்றுமை, அன்பு, குடும்ப பாசம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இன்றைய சீன மக்களை எடுத்துக்கொண்டு அவர்கள் வம்சாவளியைப் பார்த்தாலும் சுமார் நாற்பது குடும்பங்களில் அடங்கிவிடுகின்றர்கள். எனினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், கண்ட கண்ட இடங்களில் வீசி எறிந்த களிமண் உருண்டைகள் போலிருந்தார்கள்.