சீனத்தின் குரல்/மிகப் பழைய காலம்
அந்த காலத்தில் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அருமையான படுக்கையைப் போட்டு ஒரு அழகான பொம்மையை அதன் கையில் கொடுப்பார்கள். பெண் குழந்தை பிறந்தால் தரையில் கிடத்தி ஒரு மரத்துண்டை அதன் கையில் கொடுப்பார்கள். பெண்களுக்கு எல்லா வகையாலும் உயர்விருந்த காலத்திலா பெண் குழந்தையை இப்படிச் செய்தார்கள் என்றால், அது. ஆண்களே அன்றிருந்த பெண் உயர்வைப்பார்த்து பொறாமைப்பட்டு கள்ள நெஞ்சத்தோடு வஞ்சம் தீர்க்கும் முறையில் இப்படிச் செய்தார்களோ என்று நாம் சந்தேகப்படவில்லை, சீனத்தின் பெரிய எழுத்தாளன், லின் - யு - டாங் என்ற அறிஞனே இப்படி சந்தேகப்படுகின்றான். பெண்கள் தாம் குடும்பத்தின் தலைமைப் பதவியை வகித்து வந்தார்கள். அது மட்டிலுமல்ல, ஆண்கள் பெயர்களுக்கு முன்னால் பெண்களின் பெயர்களைச் சேர்த்து அழைத்துக்கொண்டு வந்தார்கள். பெண்கள் கலந்து கொள்ளாத நிகழ்ச்சிகளே இல்லை. பெண்கள். அவர்களுக்கு இஷ்டமான யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். திருமணம், சமுதாயத்தில் ஒரு முக்கியமான சடங்காகக் கருதப்படவில்லை. அரசனிடம் பக்தியும், விசுவாசமும் கொண்ட குடியானவன் தன் மனைவியை அரசனுக்கே சகல சுதந்திரத்தோடு ஒப்படைத்து விடுவான். மருமகள் விதவையாய்விட்டால் மாமனாரே திருமணம் செய்துகொள்வான். மனைவியின் தங்கையையும் திருமணம் செய்துகொள்வார்கள். அரசியாருக்கும் அமைச்சனுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.