சீனத்தின் குரல்/விடாப்பிடி

விக்கிமூலம் இலிருந்து

விடாப்பிடி

அவரைக் கைது செய்ய வேண்டுமென்று கட்டளையிட்ட தளபதி அவரை சிறையில் சந்தித்து எவ்வளவோ கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த நிலையில் தன்னுடைய செய்கை குற்றமற்றது என்று சியாங்கை தலைவராக் கொண்ட நான்கிங் சர்க்காருக்குச் சொல்லித் தீரவேண்டிய நிலை தளபதி சாங்-சியு-லியாங் என்பவருக்கு வந்துவிட்டது. அதனால் ஒரு நீண்ட அறிக்கைத் தயார் செய்தார். அதில்,

"சியாங்-கே-ஷேக் பலமுறைகளில் பழிவாங்கும் உணர்ச்சியோடு நடந்து கொண்டிருக்கின்றார். தனக்கு பல வழிகளில் போராற்றலிருந்தும் பக்கத் தில் சூழ்ந்திருப்பவர்களுடைய சதியோசனைகளுக்கு அடிபோய் விட்டார். மக்களை சுட்டுத் தள்ள வேண்டிய அளவுக்கு உத்திரவிட அவர் உள்ளம் கெட்டது. அவருடைய அந்த கொடிய உத்தரவில் பல மாணவர்கள் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கின்றார்கள். கொலைகளை யடக்கவேண்டிய பொறுருப்பிலிருப்பவரே கொலைகளைத் தூண்டுமளவுக்கு கொடியவராய் மாறிவிட்டார். அவரை இன்று கைது செய்து வைத்திருப்பதின் மூலம் சந்தோஷப்படுகின்றவர்கள் அதிகமாக இருப்பார்களேயன்றி துக்கப்படுகின்றவர்கள் அதிகமாக இருக்கமாட்டார்கள். ஒரு பொறுப்புள்ள இராணுவமா இப்படிச் செய்தது என்று சர்க்கார் ஆச்சரியப்படலாம். இது தவிர வேறு வழியோ, சிறந்த முறையோ காணப்படவில்லை. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. சியாங் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டால் அவரை உடனே விடுதலை செய்து அவருடைய பழைய கெளரவங்களையளிக்கத் தயாரயிருக்கிறோம். சியாங் இப்படிச் செய்தது நாட்டின் முன்னேற்றத்தைக் கருதி யென்று அவர் சொல்ல முன் வந்தால், அவரை நாங்கள் கைது செய்ததும் மக்கள் முன்னேற்றத்தைக் கருதித்தான் என்ற உண்மையை எங்களாலும் நிலைநாட்ட முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டில் எது சரி என்பதை விவாதம் ஒன்றினாலேயே தீர்மானிக்க முடியும், என்று எழுதி இந்த அறிக்கையை நான்கிங் சர்க்காருக்கு அனுப்பிவிட்டார் சாங்-சியு-லியாங் என்ற தளபதி. மேலும் சியாங்கை விடுதலை செய்யவேண்டுமானால் கீழ்க்கண்ட திட்டங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறித்திருந்தார். அவை :

1. சைனாவில் கூட்டாட்சி ஏற்படுத்தவேண்டும்.

2. உள் நாட்டுப் போரை உடனே நிறுத்த வேண்டும்.

3. ஷாங்கையில் சிறையில் வைத்திருக்கும் அரசியல் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும். 4. நாடு முழுதிலும் இருக்கிற எல்லா அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்யவேண்டும்.

5. மக்களுடைய தேசிய இயக்கத்தை எவ்விதத்திலும் தடை செய்யக்கூடாது.

6. பொதுக் கூட்டங்கள் கூட்டி அந்தந்த கட்சிக்காரர்கள் தங்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது.

7. காலஞ் சென்ற சன் -யாட்-சன் அவர்களுடைய மரண சாசனத்தை நிறைவேற்ற வேண்டும்.

8. உடனே நாடு முழுதிலும் உள்ள எல்லா அரசியல் கட்சிகளையும் கொண்ட மாநாடு ஒன்று கூட்ட வேண்டும்.

இந்த எட்டுத் திட்டங்களடங்கியது தான் அந்த அறிக்கை.