சீர்மிகு சிவகங்கைச் சீமை/சிவகங்கைச் சீமை - அறிமுகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

1. சிவகங்கைச் சீமை
அறிமுகம்


டவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்பது தமிழகத்தின் வடக்கு, தெற்கு எல்லைகளைச் சுட்டும் பழம்பாடல் ஆகும். கடந்த ஈராயிரம் ஆண்டு வரலாற்றில் பெரும்பகுதி, இந்த பரந்த நிலப்பரப்பை ஆண்டு வந்த முடியுடை மன்னர்கள் சேரன் அல்லது பொறையன், சோழன் அல்லது வளவன், செழியன் அல்லது பாண்டியன் என்று குறிக்கப்பட்டுள்ளனர். இந்த முத்தமிழ் மன்னர்களில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனது நாடு, தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமைந்து இருந்தது. சோழ நாட்டின் தென் எல்லையை வட வரம்பாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையான மேற்குத் தொடர் மலையை மேற்கு எல்லையாகவும், வங்கக் கடலின் விரிந்த கரையை கிழக்கு எல்லையாகவும் கொண்டிருந்தது.

காலச் சுழற்சியில், பாண்டியரது வாளின் வலிமையைப் பொறுத்து இந்த எல்லைகளில் பெருக்கமும், சுருக்கமும் ஏற்பட்டதை வரலாற்றால் அறிகின்றோம். மாறவர்மன் சுந்தர பாண்டியன் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி சிதம்பரத்தில் வீராபிஷேகம் செய்து கொண்டான். இன்னொரு பாண்டியன் வடக்கே, நெல்லூர் வரை சென்று வாளால் வழி திறந்தான், எனப்புகழப்பட்டான்.[1] கோச்சடையான் குலசேகர பாண்டியன் குடநாட்டை வென்று கொல்லங்கொண்டான் என்ற விருதைப் பெற்றான்.[2] இவர்களது பழமையான கோநகரான கபாட புரத்தையும் தமிழ் மணக்கும் பொதிகை மலையையும், வங்கம் தரும் முத்துக்களையும், வால்மீகி இராமாயணம் சிறப்புடன் பேசுகின்றது. பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன், பாண்டியனது மகளை மணந்தான் என மகாபாரதம் குறித்துள்ளது. அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்களும் மெகஸ்தனிஸ், கெளடில்யர் ஆகியோரது நூல்களும், மகா வம்சம் என்ற இலங்கை வரலாறும் இவர்களது தொன்மையைத் துலக்கும் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன.

பதினொன்றாம் நூற்றாண்டில் மலர்ந்த சோழப் பேரரசு, வடக்கே, வடுக, கலிங்க நாடுகளை கைப்பற்றியதுடன், கங்கைச் சமவெளியில் தங்களது புலிக்கொடியை பறக்க விட்டது. தெற்கேயுள்ள பாண்டியரையும் வென்று பாண்டிய நாட்டை சோழ நாட்டின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டது. அப்பொழுது பாண்டிய நாடு, சோழ பாண்டிய மண்டலம் எனப் பெயர் பெற்று இருந்தது. மூன்றாவது குலோத்துங்க சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசு சிதைந்தது.[3] வடக்கே சாளுக்கியர், நுளம்பர், சம்பு வரையர் ஆகிய குறுநில மன்னர்கள் எழுச்சிப் பெற்று, சோழப் பேரரசை சிறுகச்சிறுக சிதைத்து அழிவு பெறச் செய்தனர். இந்தச் சூழ்நிலையில் பாண்டியர்களும் தங்களது பழமையை எய்துவதற்கு முயன்றனர். என்றாலும் அப்பொழுது இருந்த குலசேகர பாண்டியனுக்கும், சுந்தரபாண்டியனுக்கும் ஏற்பட்ட பூசல்களினால் வடக்கே இருந்த டில்லி பேரரசின் வலியகரங்கள் பாண்டிய நாட்டில் குறுக்கிட்டன. மதுரையில் டில்லி சுல்த்தானின் படையணியும் கி.பி.1323-முதல் நிரந்தரமாக நிலைகொண்டது.[4] இதன் தொடர்பாக அமைந்த மதுரை சுல்தான்கள் என்ற தென்னரசு உருவாகி பாண்டிய நாட்டிலும் சோழ, தொண்டை மண்டல நாட்டுப் பகுதிகளிலும் அமைந்து கி.பி. 1378-ல் முடிந்தது.[5] இந்த சுல்தான்களது கல்வெட்டுக்கள் திருக்கோலக்குடி, கண்டதேவி ஆகிய ஊர்களில் உள்ளன.

வடக்கே ஆந்திர நாட்டில் தோன்றிய விஜயநகரப் பேரரசின் வலிமை வாய்ந்த கரங்கள் தெற்கு நோக்கி நீண்டன. பாண்டிய நாட்டில் மதுரை சுல்தான்களை வென்று வடுகர்களது ஆட்சியை கி.பி. 1378 ல் நிறுவின.[6] இவர்களது ஆட்சி கி.பி.1736 வரை நீடித்த பொழுது இவர்களது அரசப் பிரதிநிதிகளாக ஒரு காலகட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் மாவலிவாணாதிராயர்கள். இவர்கள் கி.பி. பத்து, பதினோராவது நூற்றாண்டுகளில் சோழநாட்டில் இருந்து பாண்டிய நாட்டில் குடி புகுந்தவர்கள். போர் மறவர்களான இவர்கள் தங்களைப் பாண்டிய மறவர்கள் என்று கூட சொல்லிக் கொண்டனர். பாண்டிய மன்னர்களது சிறந்த அலுவலர்களாகவும் சாமந்தர்களாகவும் பணிபுரிந்து சாதனை படைத்தனர். பாண்டியநாடு, சோழ பாண்டிய மண்டலமாக, சோழர்களது ஆட்சிப் பரப்பாக அமைந்து இருந்த பொழுதும், அவர்களது மேலாண்மையை ஏற்ற குறுநில மன்னர்களாகவும் விளங்கினர்.

ஆதலால் கி.பி. பதினைந்து, பதினாறாவது நூற்றாண்டுகளில் சிவகங்கைச் சீமை உள்ளிட்ட சேது நாட்டுப் பகுதிகளிலும் அவர்களது ஆளுமை பரவி இருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களது கல்வெட்டு, திருப்பத்தூர், காளையார் கோவில், மானாமதுரை, இளையான்குடி, ஆகிய ஊர்களில் உள்ளன. மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268–1311) ஆட்சியில் கங்கை கொண்ட சூரிய தேவனாதிராயன் என்பவர் இளையான்குடி, திருக்கோட்டியூர், திருக்கானப்பேர், துகவூர் ஆகிய ஊர்களில் திருக்கோயில் பணிகள் செய்துள்ளார்.[7] திருப்புத்தூர் வட்டார இரணியமுட்டத்து ஆற்காட்டு ஊரினரான திருவேங்கடத்து உடையான் வாணாதிராயன் என்பவர், அழகர் கோவிலிலும், பொன்னமராவதியிலும் பல திருப்பணிகளை மேற்கொண்டிருந்தார்.[8] கோனாட்டைச் சேர்ந்த மதுரைப் பெருமாள் வாணாதிராயர் திருப்புத்துரையடுத்த சதுர்வேதி மங்கலத்தில் பாண்டிய மன்னன் பெயரால் திருமடம் ஒன்றை நிறுவினார்.[9] கிழக்குக் கரையை அடுத்த முத்தார்க் கூற்றத்து கப்பலூர் மாவலி வாணாதிராயனையும், வடவல்லத் திருக்கை நாட்டு இந்திராவதநல்லூரில் காலிங்கராய வாணாதிராயன் பற்றியும் கி.பி.1254-ம் வருட ஶ்ரீ வைகுண்டம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.[10] திருமாலிருஞ்சோலை நின்றான் வாணாதிராயன் பற்றியும், கந்தரத்தோள் மாவலி வாணாதிராயனது காளையார் கோவில் திருப்பணி பற்றியும் முறையே திருப்பெருந்துறை, இளையான்குடி கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. இவர்கள் "மதுராபுரி நாயகர்", "பாண்டியகுலாந்தகர்" என்ற விருதுகளையும் பெற்று இருந்தனர்.

இவர்களைப் போன்று பாண்டிய நாட்டில் அரசியல் சூழ்நிலைகளினால் தன்னாட்சி பெற்ற மறக்குடிகளின் தலைவராக சேதுபதிகள் தங்களது ஆட்சியை கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் தோற்றுவித்தனர். இவர்களது ஆட்சியின் பரப்பு மறவர் சீமை அல்லது சேது நாடு என வழங்கப்பட்டது. கள்ளர் நாட்டை வட எல்லையாகவும், வேம்பாற்றை தெற்கு எல்லையாகவும், மதுரை மாநகரை அடுத்த புறநகர்ப் பகுதியை மேற்கு எல்லையாகவும், விரிந்த வங்கக் கடற்கரையை கிழக்கு எல்லையாகவும், இந்த நாடு கொண்டிருந்தது. நெய்தலும், பாலையும், குறிஞ்சியும், முல்லையும், மருதமும் மயங்கிய ஐந்திணைகளுடன் அமைந்த இந்த நாட்டில் வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் விழைந்து வாழ்ந்த பகுதியாக விளங்கியதால், நூலாசிரியர்கள் சிலர் இதனை மறவர் சீமை என்று வர்ணித்துள்ளனர்.

நாட்டுப்பற்று மிக்க நாடோடி இலக்கியம் ஒன்றில் இந்த நாட்டை,

"முப்போகம் விளையும் இந்த சீமை
முசியாத வைகை நதி சேர்ந்த இந்த சீமை
பனங்காடு பெருத்தது இந்த சீமை
பத்துநிலை ஏரிகளும் மெத்த உண்டு
கல்லுப்படாததொரு சோறும் அதிலே
முள்ளுப்படாத மீன் மறவர் சீமை
காசி முதலாக திரிந்தாலும் மறவர்
சீமைபோல ஒரு தேசம் கிடையாது."

இங்ஙனம் சிறப்பாக வர்ணித்துள்ளது.[11]

தொன்மையான காலம் தொட்டு கன்னித் தமிழகத்தில் காவிரிக்கும், வைகை ஆற்றுக்கும் இடைப்பட் குறிஞ்சியும், முல்லையும். நெய்தலும், பாலையும், மருதமும் மயங்கிய ஐந்திணை பகுதிகளில் இவர்கள் மிகுதியாக வாழ்ந்து காலப்போக்கில் பாண்டிய நாட்டின் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் கிழக்கு நோக்கி கடலையும் கடந்து ஈழத்தின் வடபகுதியில் நிலை கொண்டனர்.[12] இன்னொரு பகுதியினர் தெற்கே சென்று, பொருணை ஆற்றையும், பொதிகை மலையையும் அடுத்த வளமான பகுதிகளில் குடியேறினர். இந்த குடியேற்றங்கள் 10 அல்லது 11-ம் நூற்றாண்டுகளில் நடைபெற்றதாக தெரிய வருகிறது.

சேதுபதிகளான செம்பியர்

அங்கெல்லாம் இவர்கள் கோட்டைகள் அமைத்தபாங்கே பின்னர் இவர்களது குடி வழிப்பிரிவுப் பெயர்களாக ஏற்பட்டது. ஆப்பனூர் நாடு, கொண்டையன்கோட்டை, உப்புக்கோட்டை, ஓரிக்கோட்டை, குறிச்சிக்கோட்டை, அகத்தா நாடு, செம்பிநாடு என்பன அந்த முதல் ஏழு பிரிவினர்களது கொடி வழியாகும்.[13] பின்னர் மரம், கிளை, கொத்து என்ற உட்பிரிவுகளும் தோன்றின. அவை (1) மரிக்காகிளை, (2) பிச்சர் கிளை, (3) தொண்டைமான் கிளை (4) சித்திரமா கிளை, (5) தனிச்சா கிளை, (6) கார்புத்திர கிளை, (7) காத்திர கிளை என்பன. இந்தக் குடிமக்களது முதல் குடிமகன்தான் மறவர் சீமையின் மகிபதி - சேதுபதி மன்னர்கள். இவர்கள் செம்பி நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[14] சோழநாடு அல்லது செம்பி நாட்டில் இருந்து வந்தவர்களாதலின் இவர்களுக்கு செம்பிநாடன் என்ற விருதும் உண்டு. இவர்களது குடிமக்களில் பெரும்பான்மையினர் கொண்டையன் கோட்டை மறவர் என்பதும், அவர்களில் உட்பிரிவு காரண மறவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மறம் என்ற மாண்பான தமிழ்ச் சொல்லின் இலக்கண, இலக்கிய வடிவாக வாழ்ந்தவர்கள் மறவர்கள். வஞ்சம் இல்லாத நெஞ்சும், விஞ்சுகின்ற மான உணர்வும், தஞ்சமாகக் கொண்டவர்கள் இவர்கள். மன்னன் உயிர்த்தே மலர்த் தலை உலகம் என்ற மரபிற்கு ஏற்ப, தமிழ் மன்னர்களது நால்வகைப் படையாய் அமைந்து அட்டமங்கலங்களுக்கும் உரியவர்களாக வாழ்ந்தவர்கள். வாளும் தோளும் துணை எனக் கொண்டும், நாளும் நாடு காத்து, வீடு பேறு அடைவதே அவர்களது வாழ்க்கையாக இருந்தது. அவர்கள் கொட்டிய குருதி ஆற்றில் தமிழ் மன்னர்களது கொடி, தமிழகத்திற்கு வெகு தொலைவில் உள்ள முன்னீர்ப் பழனத்தின் பன்னிராயிரம் தீவுகளில் எல்லாம் பட்டொளி வீசிப் பறந்தது. தமிழரது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் உலகம் அறியப் பறை சாற்றியது. சோழர், பாண்டியரது பேரரசுகள் எழுந்து பரந்து நின்று, பல நூற்றாண்டு, வரலாற்றைப் பற்றி நுகர்வதற்கு இந்த வீர மறவர்கள்தான் காரணம் என்பது சொல்லாமலே விளங்கும்.

பாண்டிய, சோழ ஆட்சியின் நாட்டுப் பிரிவுகளான நாடுகள், வள நாடுகள் கூற்றங்கள், மறவர் சீமை என்ற இந்தப் பொதுப் பெயரின் அடக்கமாக அமைந்திருந்தன. அவை ஒல்லையூர் நாடு, கோனாடு (இன்றைய திருமெய்ய வட்டம்) கானாடு, சுரபி நாடு, அதளையூர் நாடு, சூரக்குடி நாடு, (காரைக்குடி வட்டம்) திருமலை நாடு, புறமலை நாடு, கல்வாசல் நாடு, இரணிய முட்ட நாடு (திருப்பத்தார் வட்டம்), இடைவள நாடு, தென்னாலை நாடு, தேர் போகி நாடு, (தேவ கோட்டை வட்டம்) கானப்பேர் நாடு, மங்கல நாடு, கல்லக நாடு (சிவகங்கை வட்டம்) புனல் பரளை நாடு, பொலியூர் நாடு (மானாமதுரை வட்டம்) உருவாட்டி நாடு (இளையாங்குடி வட்டம்) இராஜசிங்க மங்கல நாடு, அஞ்சு கோட்டை நாடு, தாழையூர் நாடு, கள வழி நாடு (திருவாடானை வட்டம்) செவ்விருக்கை நாடு, கீழ் செம்பி நாடு, கோடி நாடு (இராமநாதபுரம் வட்டம்) வடதலை செம்பி நாடு, கிடாத் திருக்கை நாடு, ஆப்பனூர் நாடு (முதுகுளத்தூர் வட்டம்) வேம்பு நாடு, அளற்று நாடு, (கமுதி வட்டம்) பருத்திக்குடி நாடு, கருநிலக்குடி நாடு (திருச்சுழியல் வட்டம்).

இவற்றின் உட்பிரிவுகளாக இராஜேந்திர மங்கல வளநாடு, வரகுண வளநாடு, கேரள சிங்க வள நாடுகளும், ஒல்லையர் கூற்றம், பாகனூர் கூற்றம், கானப்பேர் கூற்றம், முத்தூர் கூற்றம், மிழலை கூற்றம், துகவூர் கூற்றம் என்ற துணைப் பிரிவுகளும் இருந்து வந்துள்ளன. சேதுபதிகளின் ஆட்சியில் இவற்றில் ஒரு சில மறைந்தும், வேறு சில புதிதாக அமைந்தும் இருந்தன. இத்தகைய மாற்றங்களுக்கும், தோற்றங்களுக்கும் காரணமாக இருந்தவர் முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆவார். (கி.பி. 1710-28) இவரது ஆட்சிக் காலத்தில் சேதுபதி சீமை பாண்டிய நாட்டைத் தொட்டு அமைந்திருந்ததுடன், சோழவள நாட்டின் வடகடற்கரைப் பகுதியிலும் நீண்டு விரிந்து திருவாரூர் வரை இருந்ததால், நாட்டின் நிர்வாக அமைப்பைச் செம்மைப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்த சேது மன்னருக்கு ஏற்பட்டது.[15]

சேது நாட்டை எட்டு வருவாய்ப் பகுதிகளாகவும், எழுபத்து இரண்டு இராணுவப் பிரிவுகளாகவும், பிரித்து அவற்றுக்கு ஏற்ற நாட்டுத் தலைவர்களையும், பாளையக்காரர்களையும், ஊரகப் பணியாளர்களையும் இந்த மன்னர் நியமனம் செய்தார். இதற்காக மதுரைச் சீமையில் இருந்து பட்டோலை பிடித்து எழுதும் வேளாளக் குடிகளையும், சேது நாட்டில் குடியேறச் செய்தார். நாட்டுக் கணக்குகளை எழுதிப் பராமரித்து வர இவர்கள் பயன்படுத்தப் பட்டனர். இத்தகைய செயல் மாற்றங்களின் பொழுது கடமை உணர்வுடனும் இராஜ விசுவாசத்துடனும் மன்னருக்கு உறுதுணையாக இருந்த செயல் மறவர்களில் குறிப்பிடத் தக்கவர் நாலு கோட்டைப் பாளையக்காரரான பெரிய உடையாத் தேவர் ஆவார். தமிழக வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பின்னர் பெற உள்ளவர் இவர் என்பதை, அன்றைய சூழ்நிலையில் யாரும் எதிர் பார்த்து இருக்க முடியாது.

நாலு கோட்டைப் பாளையம்

திருமலை இரகுநாத சேதுபதி மன்னர் ஆட்சியின் பொழுது (கி.பி. 1645-78) சேது நாட்டின் வடமேற்குப் பகுதியில், அரசு இறை தண்டல் செய்வது மிகுந்த மந்தமாக இருந்தது. இதனைத் தவிர்த்து, மற்ற பகுதிகளைப் போல தண்டல் பணிகளை மேற் கொள்ளத் தகுதியான ஒருவரை நாலுகோட்டைப் பகுதிக்கு நியமனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. அங்குள்ள மக்கள் பெரும்பாலும் கள்ளர் இனத்தவராக இருந்ததாலும் அவர்களில் மன்னர் விரும்பிய தகுதியுடையவர் யாரும் இல்லாத காரணத்தினாலும் புகலூர் வட்டகையில் உள்ள உத்தமனூரைச் சேர்ந்த மன்னரது உறவினர் ஒருவரை அந்தப் பணிக்கு நியமனம் செய்தார். வரலாற்று சிறப்புடைய சோழபுரத்திற்கு அண்மையில் கோட்டை ஒன்றினை அமைத்து அந்த பாளையக்காரர் அங்கிருந்து செயல்பட்டார். அந்த, கோட்டை தான், பின்னர் நாலு கோட்டை என வழங்கப் பெற்றது என நம்பப்படுகிறது.[16]

இன்றும் இந்த ஊரில் சேதுபதி மன்னரது செம்பிநாட்டுக் கிளையைச் சேர்ந்த இருபது குடும்பங்கள் மட்டும் இருந்து வருகின்றன. அண்மைக்காலம் வரை சிவகங்கை அரண்மனையில் நடைபெற்ற அனைத்துக் காரியங்களிலும் இவர்கள் கலந்து கொண்டு தங்களது பாரம்பரிய உறவினைச் சுட்டும் வகையில் உலுப்பை போன்ற மரியாதைகள் செலுத்தி வந்தனர் என்பதும் கள ஆய்வின் பொழுது தெரிய வந்தது.[17]

அந்த பாளையக்காரரின் வழியினரான பெரிய உடையாத் தேவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். முதல் மனைவியைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.

இரண்டாமவர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த சங்கர குமாரத் தேவர் என்ற போர் மறவரது மகள் சிந்தாமணி நாச்சியார் என்பவர். ஒருமுறை சேதுபதி மன்னரைச் சந்திக்க இராமநாதபுரம் சென்றபொழுது, தமது தந்தையைப் போன்று, வாள் சண்டையிலும், சிலம்பு விளையாட்டுகளிலும் இளைஞர்களைப் பொருதி, தோல்வியுறச் செய்த இந்தக் கன்னியின் பேராற்றலில் மனதைப் பறி கொடுத்த இவர், சிந்தையை நிறைத்த சிந்தாமணியைக் கவர்ந்து வந்து நாலுகோட்டையில் திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது மனைவி கோவனூர் நாச்சியார். கோவனூர் சென்று இருந்தபொழுது, அந்த யுவதியின் அற்புத அழகின் கவர்ச்சியில் மயங்கி அந்தக் கன்னிகையை மணந்தார் என்பது செவி வழிச் செய்தி. வேறு சில ஆவணங்களும் இதனை உறுதிப்படுத்துகிறது.[18] முதல் மனைவியின் மூலம் பிறந்தவர், சசிவர்ணத் தேவர். ஏனைய இரு மனைவிகளில் - சிந்தாமணி நாச்சியார் மூலம் பிறந்த செல்வ ரகுநாததேவர், கோவனூர் நாச்சியார் மூலம் பிறந்த பூவுலகுத் தேவர், லவலோசனத் தேவர், திரியம்பகத் தேவர் ஆகிய நான்கு மக்களையும் விட அழகிலும், ஆற்றலிலும் சசிவர்ணத் தேவர் சிறந்து காணப்பட்டார். ஆதலால் இவரைச் சேதுபதி மன்னர் தமது மருமகனாக வரித்துக் கொள்வதற்கு முடிவு செய்தார். மன்னரது முடிவு பெரிய உடையாத் தேவருக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. சேதுபதியின் மகள் அகிலாண்டேஸ்வரி. நாச்சியாருக்கும் சசிவர்ணத் தேவருக்கும் இராமநாதபுரம் அரண்மனையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.[19]

சேதுபதி மன்னரது திருமணத் தொடர்புக்கு இன்னொரு காரணமும் இருந்தது, தளவாய் என்ற இரண்டாவது சடைக்கத்தேவர் சேதுபதியான பொழுது, அவருக்குப் போட்டியாக கூத்தன் சேதுபதியின் மகன் பெத்தன்னா என்ற தம்பித் தேவர், கலகக்கொடி உயர்த்தியதைப் போன்று இப்பொழுது கிழவன் சேதுபதியின் வைப்பு மகன் பவானிசங்கரத்தேவர். முத்து விஜயரகுநாத சேதுபதி பட்டம் சூடியதை எதிர்த்து சேது நாட்டு மக்களின் ஆதரவைத் திரட்டினான். தொண்டமானும் பவானி சங்கரத் தேவருக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மேலும் சேதுநாட்டில் வடக்கே காளையார் கோவிலை அடுத்த செருவத்தி பாளையக்காரரைப் போன்ற வடக்கு வட்டகைப் பாளையக்காரர்களை கண்காணித்து கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு அரசியல் நெருக்கத்தை விட குடும்ப உறவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் சேதுபதி மன்னர் நாலுகோட்டை உடையாத் தேவரின் மகனை, தனது மருமகனாக்கிக் கொண்டார். இந்த உறவின் காரணமாக, தனது சம்பந்தியான பெரிய உடையாத் தேவரது அரசியல் தகுதியை முன்னூறு போர் வீரர் தளபதி' பதவியில் இருந்து ஆயிரம் போர் வீரர்களது தளபதியாக பதவி உயர்வு அளித்தார். தனது மருமகன் சசிவர்ணத் தேவரையும் வெள்ளிக் குறிச்சிக்கு ஆளுநராக நியமனம் செய்தார்.[20]

வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தது என்பது ஒரு வழக்கு. இணக்கமான சூழ்நிலை உருவாகும்போது எதிர் மறையான நிகழ்வுகள் ஏற்படுவதை குறித்து இவ்விதம் சொல்வது உண்டு. தனது மூத்த மகனுக்கு சேதுபதி மன்னரது மகளை மணம் செய்வித்து மனம் மகிழ்ந்த பெரிய உடையாத் தேவரது மனநிறைவு நீடிக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டார். அந்த நோயிலேயே அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. நாலுகோட்டை மக்கள் மட்டுமல்லாமல், இராமநாதபுரம் சேதுபதி மன்னரும் இந்த இழப்பினால் மிகுந்த வேதனைக்குள்ளானார். குறிப்பாக பெரிய உடையத் தேவர் மரணம் சேது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்ட பலவீனமாக அப்பொழுது கருதப்பட்டது. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சேது நாட்டின் வடக்கு காவல் அரணான திருமயம் கோட்டை சேதுபதி சீமையின் பாதுகாப்பு நிலையில் இருந்து விடுபட்ட பிறகு, நாலுகோட்டை பாளையம் அந்த பாதுகாப்புச் சங்கிலியில் வலுவான இணைப்பாக இருந்து வந்தது. அதுவும் பெரிய உடையாத்தேவரது செம்மையான கண்காணிப்பால்.

பெரிய உடையாத் தேவர் மரணத்தினால் துடி துடித்து துவண்டு வருந்தியவர் சிந்தாமணி நாச்சியார் ஆவர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பலவந்தமாக இராமநாதபுரத்தில் இருந்து கவர்ந்து வந்து பெரிய உடையாத் தேவர் அவரைக் கட்டாய திருமணம் செய்த பொழுது அடைந்த வேதனையைவிட பன்மடங்கு துக்கத்தில் ஆழ்ந்து வருந்தினார். இத்தனை காலமாக பெரிய உடையாத் தேவர் அவர் மீது கொண்டிருந்த பாசம், பற்று, அன்பு, காதல் எல்லாமே நொடி நேரக் கனவாகக் கரைந்து விட்டதை நினைக்கும் பொழுது இந்த உலகத்தில் வாழ்வதற்கு எந்த நியாயமும் இல்லையென அவருக்குப் பட்டது. தேவருடன் வாழ்ந்த பத்தாண்டு வாழ்க்கையின் முத்திரையாகப் பெற்றெடுத்த ஏழு வயதுப் பாலகன் செல்வரகுநாதன் இருப்பது உண்மைதான். தந்தையைச் சரியாக அறியாத பாலகனுடன் பயின்று விளையாட உடன் பிறவாத சகோதரன் சசிவர்ணம் இருக்கிறானே! பிள்ளைப் பாசத்துடன் அவனை வளர்ப்பதற்கு சிற்றன்னை கோவனூர் நாச்சியார் இருக்கின்றாளே! ஆனால் அவளுக்கு... தனக்கு ஒரே பிடிபாடாக இருந்த கணவன் போன பிறகு. சிந்தாமணி நாச்சியாரது சிந்தனை இவ்விதம் சிறகடித்து பறந்தது.

அந்த பெரிய வீட்டின் முகப்பில், அகலமான நாற்காலி ஒன்றில் படுத்து அயர்ந்து உறங்கி கொண்டு இருப்பவர் போல காட்சியளித்த பெரிய உடையாத் தேவரது அலங்காரம் செய்யப்பட்ட உடலில் அவரது கண்கள் பதிந்து நின்றன.

சிறிது நேரத்தில் தாரை தப்பட்டை முழங்கின. வாங்காவாத்தியம் நீண்டு ஒலித்தது. சங்கு முழங்கியது. பெண்களது குலவை சத்தம். நடைமாத்து சேலைகள் தொடர்ச்சியாக விரிக்கப்பட்டன. துக்கம் விசாரிக்க வந்த கூட்டம், மெதுவாக நகர்ந்தது. நாலுகோட்டைப் பாளையக்காரரின் இறுதிப்பயணம் தொடங்கியது. நாலுகோட்டை ஊருக்கு கிழக்கே உள்ள கந்தமாதனப் பொய்கைக் கரையில் அந்திம கிரியைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. சந்தனக் கட்டைகளால் அடுக்கி அமைத்த சிதையில் தேவரது சடலம் வைக்கப்பட்டது. ஏற்கனவே, தெளிக்கப்பட்ட நெய்யில் குளித்த தீயின் நாக்குகள், பயங்கரமாகக் கொழுந்து விட்டு எரியத் துவங்கின. சிறிய துரும்பு கூட தனது கணவரது உடலுக்கு தீங்கிழைக்க கூடாது என எண்ணும் சிந்தாமணி நாச்சியார், தனது கணவர் உடலைச் சுற்றி தீக்கொழுந்துகள் தொடர்வதை எப்படி சகித்துக் கொள்வார்? தனது அன்பு மகன் செல்வ ரெகுநாதனை ஒருமுறை பற்றி அனைத்து மிகுந்த வாஞ்சையுடன் முத்தங்கள் சொரிந்தார். அவர் அணிந்து இருந்த நகைகளை அவனது கைகளில் திணித்து விட்டு கணவரது சிதையினுள் புகுந்து செந்தழலில் மறைந்து விட்டார்.[21]

பெற்ற தந்தையையும், வளர்த்த தாயையும் இழந்து தனிமை ஆகிவிட்ட சசிவர்ணத் தேவரது கண்களில் வழிந்த கண்ணீர், "ஆத்தா... ஆத்தா" என்ற செல்வரெகுநாதனது அவலக்குரலுடன் அடங்கி விட்டது.

இராமநாதபுரத்தில்

இந்த நிகழ்ச்சிகளால் பாதிக்கப்படாது புழுங்கிய மனத்துடன் அலைந்துகொண்டு இருந்த பவானி சங்கரத் தேவர். இப்பொழுது தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தினார். ஆனால் சேதுபதி பட்டத்தில் இருந்து மன்னரை அகற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே! பவானி சங்கரத் தேவருக்கு உறுதுணையாக இருந்த புதுக்கோட்டை தொண்டைமானிடம் சேது நாட்டின் மீது போர் தொடுப்பதற்கான ஆள் பலமும், பொருள் வசதியும் இல்லை. ஆதலால், அப்பொழுது சேதுபதி மன்னருக்கு நிகராக ஆற்றல் பெற்றிருந்த அண்டை அரசுகளான மதுரை நாயக்கரிடம், முயற்சித்தும் பலன் இல்லாததால், தஞ்சை மன்னர் துல்ஜாஜியிடம் உதவி கோரினர். அவரும் சில நிபந்தனை அடிப்படையில் சேது நாட்டுப் போருக்கு படை உதவி அளிக்க முன் வந்தார்.[22] அதாவது பவானி சங்கரத் தேவர் போரில் வெற்றி பெற்று சேதுபதியானவுடன் சேதுநாட்டின் வடபகுதியினை - தெற்கே பாம்பாற்றில் இருந்து வடக்கே திருவாரூர் வரையான வளமிக்க நிலபரப்பை தஞ்சை அரசிடம் ஒப்படைத்து விடுதல் வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை.

படை உதவி பெற்று பவானி சங்கரத் தேவர் சேது நாட்டில் அறந்தாங்கிக் கோட்டையை திடீரெனத் தாக்கி கைப்பற்றியதுடன் சேது நாட்டின் வடபகுதியை சேதுபதி மன்னரிடமிருந்து துண்டித்து விட்டார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக பெரும் படையுடன் சேதுபதி மன்னர் அறந்தாங்கி நோக்கிப் புறப்பட்டார். அங்கு போரில் ஈடுபட்டு இருக்கும்பொழுது அவரை அம்மை நோய் தாக்கியதால் அவர் இராமநாதபுரம் கோட்டைக்கு திரும்ப வேண்டியதாயிற்று. சில நாட்களில் அந்த நோய்க்கு சேதுபதி மன்னர் பலியானார்.[23] அடுத்து, பவானி சங்கரத் தேவர் எளிதாக இராமநாதபுரத்தைக் கைப்பற்றியதுடன் புதிதாகப் பட்டம் சூடிய சுந்தரரேசத் தேவர் என்ற சேதுபதியைக் கொன்றுவிட்டு அவரே சேதுபதியானார்.[24] அவரது பதினெட்டு ஆண்டு கால பகல் கனவு இப்பொழுது நிஜமாகிவிட்டது. பவானி சங்கரத் தேவரது தந்தை கிழவன் சேதுபதி முப்பத்திரண்டு ஆண்டுகள் அமர்ந்து ஆட்சி செய்த சிறப்பான அதே அரியணையில் அமர்ந்தார்.

அப்பொழுது வெள்ளிக் குறிச்சியின் ஆளுநராக இருந்த சேதுபதியின் மருமகனான சசிவர்ணத் தேவர் பதவியை இழந்தார். தனது அவல நிலையைத் தெரிவிப்பதற்காக அவர் தஞ்சாவூர் மன்னரிடம் சென்றார். அப்பொழுது, இராமநாதபுரம் சேதுபதி பட்டத்திற்கு அருகதையுள்ள கட்டத்தேவரும் (இறந்துபோன சுந்தரேச தண்டத் தேவரது சகோதரர்) அங்கு வந்து இருந்தார். இருவரும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையைத் தஞ்சை மன்னரிடம் விளக்கியதுடன் பவானி சங்கரத் தேவரது கொடுங்கோல் ஆட்சியை அகற்ற படை உதவி கோரினர்.[25]

பவானி சங்கரத் தேவர் முன்னர் இவ்விதம் உதவி கோரி வந்ததும் அவருக்கு உதவி புரிந்து ஏமாந்ததும் மராட்டிய மன்னரது மனதில் பளிச்சிட்டது. எச்சரிக்கை உணர்வையும் தோற்றுவித்தது, என்றாலும், இழந்த நாட்டுப் பகுதியை சேதுபதியிடமிருந்து மீட்க வேண்டுமென்ற எண்ணம் அவரது உள்ளத்தில் ஓங்கி நின்றது. ஆதலால், தஞ்சாவூர் மன்னர் சேது நாட்டு இளவல்களது கோரிக்கையினை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதே பழைய நிபந்தனையை ஒரு சிறு மாற்றத்துடன்.

தஞ்சையிலிருந்து பெரும்படை சேது நாட்டை நோக்கி புறப்படும். பாம்பாற்றின் வடகரையை அந்த படையினர் வந்து அடையும் பொழுது அதன் ஒரு அணி மட்டும் நிலை கொள்ளும். மற்றவர்கள் தொடர்ந்து முன்னேறி இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்து, சசிவர்ணத் தேவரும், கட்டத் தேவரும் கோட்டைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் தஞ்சை படைகள் திரும்பி பாம்பாற்றில் வட கரைக்கு வந்துவிடும். அங்கு நிலை கொண்டுள்ள அணியுடன் சேர்ந்து அந்தப் பகுதியின் பாதுகாப்பில் ஈடுபடும். அதாவது ஒரு புறம் உதவி; மறுபுறம் சேதுநாட்டின் பாம்பாற்றுப் பகுதி தஞ்சைமன்னரது ஆளுகைக்குள்தானே அமைந்துவிடும்.

இதுதான் அந்த நிபந்தனை. பவானி சங்கர சேதுபதியிடமிருந்து சேது நாட்டை மீட்க வேறு வழியில்லை. சசிவர்ணத் தேவரும், கட்டத் தேவரும் அந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்தனர். தஞ்சைப்படை தெற்கு நோக்கி புறப்பட்ட செய்தி இராமநாதபுரம் கோட்டைக்கு எட்டியது. பவானி சங்கரத் தேவர் அவசரமாக ஒரளவு படைகளை திரட்டியவாறு விரைந்து சென்றார். இரண்டு படைகளும் ஓரியூர் அருகே பொருதின. வெற்றி தஞ்சை படைகளுக்கு. பவானி சங்கர சேதுபதி கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[26]

இராமநாதபுரம் கோட்டை மீட்கப்பட்டது. சேது நாட்டில் பதட்டமும், பயமும் நீங்கி மீண்டும் அமைதி நிலவியது. ஆனால் சேதுபதி பட்டத்தை யார் சூட்டிக் கொள்வது? விஜய ரகுநாத சேதுபதியின் மகளை மணந்தவர் சசிவர்ணத் தேவர். பவானி சங்கரத் தேவரால் கொல்லப்பட்ட சுந்தரேச சேதுபதியின் இளவல் கட்டத்தேவர். இந்த இருவரது கூட்டு முயற்சியினால் சேது நாட்டில் அமைதி திரும்பியது. இருவருமே சேது பட்டத்திற்கு உரியவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்படியானால் சேதுபதியாவது யார்? இந்த வினாவிற்கு விடை காண முயன்றனர். இருவரும் ஆட்சியாளர்களாக மாறுவதைத் தவிர வேறு வழியே இல்லை. வரலாற்றின் போக்கை தடுத்து நிறுத்தும் வலிமை யாருக்கு உண்டு!

இத்தகைய இக்கட்டான நிலை சேது நாட்டில் முன்பு ஒரு முறை ஏற்பட்டது. கூத்தன் சேதுபதி இறந்தபொழுது அவரது இரண்டாவது மனைவியின் மகன் தம்பித் தேவருக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு இரண்டாவது சடைக்கத் தேவர் தளவாய் சேதுபதி என்ற பெயரில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். தம்பித் தேவரது கிளர்ச்சி பயனளிக்காததால் அப்பொழுது மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரிடம் தம்பித் தேவர் முறையீடு செய்தார். திருமலை நாயக்கர் மிகவும் முயன்றும் சமரசம் செய்ய இயலாததால், கடைசியில் சேதுநாட்டு பிரிவினைத் திட்டத்தை அளித்தார்.

காளையார் கோவில் பகுதி தம்பி தேவருக்கும், திருவாடானை பகுதி தனுக்காத்த தேவருக்கும், இராமநாதபுரம் பகுதி திருமலை தேவருக்கும் என பிரித்து கொடுக்கப்பட்டது.[27] இது நிகழ்ந்தது கி.பி. 1745-ல். ஆனால் தம்பித்தேவர் சில மாதங்களில் காளையார் கோவிலில் காலமானார். அதனை அடுத்து, சில மாதங்களில் தனுக்காத்த தேவரும் திருவாடானையில் மரணமுற்றார். சேதுநாடு மீண்டும் திருமலை சேதுபதியின் தலைமையில் ஒன்றுபட்டது. பல சாதனைகள் எய்துவதற்கு காரணமாக அமைந்தது. இப்பொழுதும் அது போலவே சேது நாடு இரண்டாவது முறையாக இரண்டு பிரிவுகளாக, இரண்டு அரசுகளாக பிரிவு பெற்று இயக்கம் பெற்றன. பிரிவினை என்றாலே பலவீனம்தான். ஆனால், அப்பொழுது பிரிவினையைத் தவிர வேறு வழி இல்லை. மதுரையைக் கடந்தவுடன் கிழக்கு நோக்கி சேதுநாட்டை ஊடறுத்துச் செல்லும் வைகையின் தென்கரை வட கரையை ஒட்டி கிழக்கே எமனேஸ்வரம் வரையிலான பகுதி புதிய நாட்டின் தெற்கு எல்லையாகக் கொண்டு, பின்னர் வடக்கு நோக்கி சென்று பிரான்மலையில் கிழக்குச் சரிவு வடக்கு எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் அடங்கிய பகுதி சேதுநாட்டின் பரப்பில் சரிபாதி பகுதியாக இல்லாவிட்டாலும் ஐந்தில் இரண்டு பங்கிற்கும் அதிகமான நிலப்பரப்பாக அமைந்து இருந்தது. நில அளவை முறையும் அதற்கான வசதியும் இல்லாத காலம் அது. ஆதலால் இந்த புதிய சீமையினை, பழைய சேதுபதி சீமையின் ஐந்தில் இரண்டு பங்கு என்றும், பழைய இராமநாதபுரம் சீமை ஐந்தில் மூன்று பங்கு என்றும் பொதுவாக சொல்லப்பட்டது. இது நிகழ்ந்தது கி.பி.1728-ல்.


 1. Pudukottai Inscriptions Nos. 439, 440
 2. ARE 120/1926-27/Page 90
 3. Hussaini. Dr - SAQ History of Pandya Country
 4. Ibid - 113
 5. Srinivasa Ayyangar.S. Dr. South India and her Mohamaden Invaders (1921) Page; 223-29
 6. வேதாச்சலம்.வெ. - பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் (1987) பக். 56
 7. வேதாசலம்.வெ. பாண்டிய நாட்டில் வானாதிராயர்கள் (1987) பக்: 29-30
 8. Inscriptions No.584/A, 585, 587/1902.
 9. வேதாச்சலம்.வெ - பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் (1987) பக் 15-16
 10. மேலது - பக்: 91
 11. கான்சாயபு சண்டை - சரசுவதி விலாசம் பதிப்பு. கொழும்பு
 12. Prof. Velu Pillai - Maravar Community in Northern Ilankai. Paper presented at Madras Seminar.
 13. Thurston - Castes and Tribes of South India (1909) Vol. V - P: 52
 14. கமால் Dr. எஸ்.எம். சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1993) செப்பேடு 43. பக்: 389
 15. Raja Rama Rao - Manual of Rammad Samasthanam (1891) P: 236
 16. சிவகங்கை சமஸ்தான ஆவணங்கள்.
 17. கள ஆய்வின்போது நாலு கோட்டை கிராமத்து முதியவர் திரு. சங்குத் தேவர் (வயது 81) வழங்கிய செய்தி.
 18. செல்வரகுநாதன் கோட்டை (தற்பொழுதைய சிவரக்கோட்டை) ஆவணங்கள்.
 19. Raja Rama Rao - Manual of Ramnad Samasthanam (1891) P: 237
 20. Ibid. P: 239.
 21. செல்வரகுநாதன் கோட்டை ஆவணங்கள்
 22. Raja Rama Rao - Manual of Ramnad Sainnsthanam (1891) P: 239
 23. Ibid. P:240
 24. Ibid.
 25. Raja Rama Rao - Manual of Rammad Samasthananam (1891). P: 240
 26. Raja Ram Rao - Manual of Rammad Samasthanam (1891), P: 240
 27. Ibid. P: 239