சீர்மிகு சிவகங்கைச் சீமை/சீமையாளும் உரிமை சசிவர்ணருக்கே

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. சீமையாளும் உரிமை
சசிவர்ணருக்கே

ற்கனவே வழக்கிலிருந்த சேதுபதி சீமை, பெரிய மறவர் சீமை என்றும் புதிய சீமை, சின்ன மறவர் சீமை என்றும் வரலாற்று ஆசிரியர்களால் குறிக்கப்பெற்றது. மேலும் இந்த புதிய சீமையின் அங்கங்களாக மான வீர மதுரை, திருப்புவனம், படைமாத்தூர், பாகனேரி சக்கந்தி, நாலுகோட்டை மல்லாக்கோட்டை, பட்டமங்கலம், அரளிக்கோட்டை, சத்துரு சங்கார கோட்டை, திருப்பத்துர், பாலையூர், எழுவன்கோட்டை, இரவிசேரி, தென்னாலைக் கோட்டை, காளையார் கோவில், ஆகிய பாளையங்கள் இருந்தன. இந்த பாளையங்களுக்கு தலைமை இடமாக ஒரு புதிய ஊரும் நிர்மாணிக்கப்பெற்றது. அதுதான் இன்றைய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கை ஆகும்.

ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் காடாக இருந்த இந்த பகுதியில் சிவகங்கை நகர் அமைந்ததற்கான கதை ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. நாலுகோட்டையிலிருந்து சசிவர்ணத் தேவர் ஒருநாள் இந்த காட்டுப்பகுதிக்குள் வந்தபொழுது ஒரு தவசீலர் தியானத்தில் இருப்பதைக் கண்டு அவரை தரிசிக்க அருகில் சென்றார். அப்பொழுது அங்கு தவசிக்கு பதில் ஒரு பெரிய வேங்கை காணப்பட்டதாகவும், அதனை கண்டு அஞ்சாமல் அந்த தவச்செல்வரைத் தேடிய பொழுது வேங்கை மறைந்து முனிவர் தென்பட்டதாகவும் அவர் சசிவர்ணத் தேவருக்கு ஆசிகள் வழங்கியதாகவும் அவரது வேண்டுகோளின்படி அங்கு ஒரு ஊரணி தோற்றுவிக்கப்பட்டது என்பது அந்தக் கதை. இதே கதை இன்னும் மாறுதல்களுடன் சில பகுதிகளில் வழக்கில் உள்ளன. இந்தக் கதையின் உண்மையான பின்னணி என்ன என்பதை சம்பந்தப்பட்ட மன்னர் சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் அவர்களது சக ஆண்டு ஆயிரத்து அறுநூற்று ஐம்பதில் பிரமாதீச வருடம் சித்திரை இருபத்து ஒன்றாம் தேதி (கி.பி. 1733) வழங்கிய செப்பேட்டு வாசகம் தெரிவிக்கின்றது. இந்தச் செப்பேட்டில்,

... சாத்தப்ப ஞானிகள் வெள்ளை நாவலடி ஊத்தில் தவசு இருக்கையில், நாம் கண்டு தெரிசித்ததில் உங்களுக்கு நல்ல யோகமும் புதிய பட்டமும் வந்து, நீ யானை கட்டி சீமையாளுவாய் என்று விபூதி கொடுத்து, தஞ்சாவூர் போகும்படிக்குத்திரவு கொடுத்தபடிக்கு. நான் போய் புலி குத்தி.... அவர்கள் ஒத்தாசையால் இராமநாதபுரம் பவானி சங்கு தேவனை ஜெயம் செய்து, வீரத்தின் பேரில் கோவானூரில் இருந்த சாத்தப்ப ஞானியவர்களைக் கூட்டி வந்து பூசை பண்ணின ஊத்தில் திருக்குளம் வெட்டி, சிவகெங்கை என்ற பேரும் வரும்படியாகச் செய்த திருக்குளத்துக்கும் வடக்கு காஞ்சிரங்கால், தென் வடலோடிய புத்தடிப் பாதைக்கு கிளக்கு, பண்ணிமுடக்கு பள்ளத்துக்கு தெற்கு பாலமேடு தென்வடலோடிய பாதைக்கு மேற்கு, இந் நான்கெல்லைக்குள்பட்ட காட்டுக்குள் இந்த சாத்தப்ப ஞானியாருக்கு தவிசுக்கு மடம் கட்டிக் குடுத்து இந்த மடத்தில் குருபூசை செய்தும், நவராத்திரி, சிவராத்திரி, பூசைக்கு நாலு கோட்டை சோளபுரம் ஆறாம் குளம் கண்மாய்க்களுக்கு கிழக்கு. அந்தக் கண்மாய் பெரிய மடை கிழமேலோடிய வாய்க்காலுக்குத் தெற்கு கருங்காலக்குடி தர்மத்துக்கல்லான சரகணை தென்வடலோடிய பாதைக்கு மேற்கு மருதவயல் கண்மாய் நீர்ப்பிடிக்கு வடக்கு இந்த பெருநாங்கெல்லைக்குள்பட்ட மருத வயல்... சகலமும் தான சாதனமாக..."

என்று[1] சாத்தப்ப ஞானியாரது ஆசி பெற்றதும், பின்னர் அவருக்காக திருக்குளம் வெட்டி திருமடம் கட்டியதான சாதனம் செய்து கொடுத்ததும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அது முதலில் சிவனது கங்கை போல புனிதமான நீர்த் துறையாக கருதப்பட்டு சிவகங்கைக் குளமென வழங்கப்பட்டது. அந்தக் குளத்தின் மேற்கு மூலையில் புதிய அரசின் தலைமை இடமான கோட்டை அமைக்கப்பட்டதும், பின்னர் சிவகங்கைக் கோட்டை எனவும் பெயர் பெற்றது. அதனைச் சுற்றி நாளடைவில் எழுந்த மக்கள் குடியிருப்பு சிவகங்கை நகராயிற்று.

மதுரை மாநகரை தொண்டித் துறைமுகத்துடன் இணைக்கும் பெரு வழியும், திருநெல்வேலிச் சீமையிலிருந்து, ஸ்ரீவில்லிபுத்துார்,

அருப்புக்கோட்டை, மானவீர மதுரை, தொண்டி வழியாக சோழ நாட்டை இணைக்கும் பழைய வாணிகச் சாத்து வழியும் இணையும் இடத்தில் புதிய சிவகங்கைக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டது. ஏறத்தாழ இராமநாதபுரம் கோட்டை அமைப்பை போன்றே செவ்வக வடிவில், ஆனால் அகழி இல்லாமல் இருபது அடி உயரமும் இரண்டு அடி அகலமும் கொண்ட சுற்றுச் சுவரினால் அந்தக் கோட்டை அமைக்கப்பட்டது. ஒரே முகப்பு வழியை உடைய இந்த கோட்டையில் மன்னரது மாளிகை நடுப்பகுதியிலும். மாளிகையை ஒட்டி ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயமும், தெற்கில் அரச மகளிரது குடியிருப்பும் வடக்குப் பகுதியில் நீராழிக்குளம், உல்லாச மண்டபங்கள் ஆகியவைகளும் நிர்மாணிக்கப்பட்டன. சசிவர்ணத் தேவரது துணைவியார், அகிலாண்ட ஈசுவரி நாச்சியார் திருமணமாகி கணவருடன் நாலுகோட்டை வந்தபொழுது அவரது வழிபடு தெய்வமாகிய இராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து பிடிமண் எடுத்துவந்து நாலுகோட்டை மாளிகையில் வைத்து வணங்கி வந்ததாகவும், அங்கிருந்து சிவகங்கை அரண்மனை அமைத்தபொழுது, அதே புனித பிடிமண்ணை பீடத்தின் அடியில் வைத்து அதன் மீது இந்த ராஜராஜேஸ்வரி பீடம் முதலிலும், பின்னர் தெய்வத் திருமேனி ஸ்தாபிதமும் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த புதிய சீமையின் முதலாவது மன்னர் சசிவர்ண பெரிய உடையாத் தேவர். இவருக்கு இரு மனைவியர் இருந்தனர். ஒருவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரது மகள் அகிலாண்ட ஈஸ்வரி நாச்சியார் மற்றவர் பூதக்காள் நாச்சியார். முதலாமவருக்கு மூன்று பெண்களும், பட்டாபி ராமசுவாமி, சுவர்ணகிளைத் தேவர் என்ற இரு ஆண் மக்களும் இருந்தனர். இவர்கள் இருவரும் இளமையில் காலமாகிவிட்டனர் என்று ஊகிக்க முடிகிறது. இதன் காரணமாக இரண்டாவது மனைவியை மணந்து அவர் மூலம் முத்து வடுகநாதர் மூன்றாவது மகனாகப் பிறந்தார் என்றும் தெரிய வருகிறது. நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது முதல் மனைவியாரது மைந்தர் என்ற பொருளில் பெரிய உடையாத்தேவர் என்ற விகுதியும் அரசு நிலையிட்ட என்ற விருதும், தொன்மையான சேதுபதி மன்னரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை குறிக்கும் 'விஜய ரகுநாத' என்ற தொடரும் இணைந்து இந்த மன்னரது அரசு ஆவணங்களில் 'அரசு நிலையிட்ட விஜய ரகுநாத சசிவர்ண பெரிய உடையாத்தேவர் என குறிக்கப்பட்டு வரலாயிற்று. இவரது ஆட்சிக் காலத்தை அறுதியிட்டு சொல்லும் ஆவணம் எதுவும் கிடைக்காத காரணத்தினால், இந்த மன்னர் கி.பி. 1749 வரை ஆட்சி செலுத்தியிருக்க வேண்டும் என வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக இவரது ஆட்சி அமைதியும், வளமையும், மிகுந்த காலமாக அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக அண்மையில் உள்ள மதுரைச் சீமையின் அரசியலில் குழப்பங்கள் கலந்து

சசிவர்ணத் தேவர் அரண்மனை.jpg
மக்கள் அல்லோலப்பட்ட சூழ்நிலையில், இந்த புதிய சின்ன மறவர்சீமை எவ்வித பிரச்சனையுமின்றி மக்களது ஆன்மீக, சமுதாய நற்பணிகளில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வந்து இருப்பது ஒரு அரிய சாதனையாகும். இதற்கு ஏதுவாக அமைந்த அன்றைய தமிழக அரசியல் வரலாற்றையும் ஓரளவு அறிந்து கொள்வது இங்கு அவசியமாகிறது.

சிவகங்கைச் சீமை என்றதொரு புதியதொரு அரசு உதயமான பொழுது தமிழகம் முழுமைக்கும் கடந்த முன்னுற்று ஐம்பது ஆண்டுகளாக ஒரே தன்னரசாக மதுரையையும், திருச்சியையும் கோநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த மதுரை நாயக்கர் அரசு அப்பொழுது அஸ்தமனத்தை எட்டிக் கொண்டிருந்தது. அந்த அரசின் கடைசி ராணியாக விளங்கிய ராணி மீனாட்சியின் தற்கொலையுடன் அந்த அரசு கி.பி. 1736-ல் முற்றுப் பெற்றது. அந்த ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு ஆசைப்பட்ட ராணியின் உறவினரான பங்காரு திருமலையின் முயற்சிகள் ஒரு புறம் இருக்க, தமிழகம் முழுவதற்குமான மேலாண்மை உரிமையை ஐதராபாத் நிஜாமிடமிருந்து பெற்றிருப்பதாக கூறிக்கொண்டு ஆற்காடு நவாப் பதவிக்கு சாந்தா சாகிபு ஒரு புறமும், வாலாஜா முகமது அலி மற்றொரு புறமுமாக போட்டியிட்டு திருச்சி, மதுரைச் சீமை மக்களை ஆட்டிப் படைத்ததுடன், தாராபுரத்தில் இருந்து, களக்காடு வரையிலான பாளையக்காரர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த நவாபுகள் பலவாறு எத்தனித்தனர்.

தமிழகத்தில் அரசின் சலுகைகளுடன் வியாபாரம் செய்து லாபம் ஈட்டுவதில் முனைந்திருந்த பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியும் முறையே இந்த 'போட்டி நவாப்புகளை' ஆதரித்து அவர்களுக்கு தங்களது தற்காப்பு படைகளை கொடுத்து உதவி, அரசியல் ஆதாயம் பெற முயன்றதுடன் தமிழக அரசியலின் தலை விதியை நிர்ணயிக்கும் காரணிகளாகவும் விளங்கினர். இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் சிவகங்கைச் சீமையின் சின்ன மறவர் அரசு இயக்கம் தடையேதுமில்லாத நிலையில் அடுத்துள்ள சேதுபதியின் ஆட்சிக் கூறுகளை அடியொற்றிப் பின்பற்றியவாறு நடைபெற்று வந்தது.

சீமையின் நிர்வாகத்தில் சசிவர்ணத் தேவர் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். ஏற்கனவே தமது மாமனார் முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரால் வெள்ளிக்குறிச்சி மாகாணத்தின் ஆளுநராகப் பணியாற்றிய முன் அனுபவம் அவருக்கு இப்பொழுது கை கொடுத்தது. பாதுகாப்பாக பல புதிய பாளையங்களைத் தோற்றுவித்து, புதிய பாளையக்காரர்களும், காவலர்களும் நியமனம் செய்யப்பட்டனர். தேச காவல், தலங்காவல், திசை காவல், தெற்கத்தியான் காவல் என்ற அமைப்புகள் சிறப்பாக இயங்கின. பண்டைய ஆட்சிக்காலம் தொட்டு இருந்து வந்த நாட்டு பிரிவுகள் மாற்றமில்லாமல் தொடர்ச்சி பெற்றன. இந்த புதிய சீமையில் ஒல்லையூர் நாடு, கானாடு, புறமலை நாடு, திருப்பத்தார் நாடு, தாழையூர் நாடு, தென்னாலை நாடு, இராஜகம்பீரநாடு, சுரபி நாடு, கானப்பேர்நாடு, பாலையூர், மங்கல நாடு, புனல்பரளை நாடு, கல்லக நாடு என்ற நாடுகள் அமைந்து அணி செய்தன.

இவைகளுக்கு அடுத்து சிறு பரப்பு, வள நாடாகும். கேரள சிங்க வளநாடு, ராஜேந்திர மங்கல வளநாடு என்பன போன்று. இவைகளுக்கு இணையான இன்னொரு தொகுப்பு கூற்றம் எனப்பட்டது. இந்த புதிய சீமையில் கானப்பேர் கூற்றம், முத்துார் கூற்றம், பாகனூர் கூற்றம், துகலுர் கூற்றம் என்பன அன்றயை வழக்கில் இருந்த கூற்றங்கள் ஆகும். இந்த பழமையான நிலப்பரப்புகளைத் தவிர மாகாணங்கள் என்ற புதிய தொகுப்பும், பின்னர் இருந்து வந்தது தெரிய வருகிறது. சிவகங்கைச் சீமையின் ஆவணங்களிலிருந்து இந்த மாகாணம் என்ற ஊர்த் தொகுப்பு மிக பிற்பட்ட கால அமைப்புகள் என்பது தெரிய வருகின்றன. அவை திருப்புவனம், முத்து நாடு, எழுவன் கோட்டை, அழகாபுரி, மேல மாகாணம், நாலு கோட்டை, எமனேஸ்வரம், பொன்னொளிக் கோட்டை, பாளையூர் என்பனவாகும்.

இந்த மன்னரது ஆட்சியில் திருக்கோயில் தர்மமாக பல ஊர்கள் இறையிலியாக வழங்கப்பட்டன. அன்றாட பூஜை, நைவேத்தியம் போன்ற கைங்கர்யங்களுக்கும் வேறு பல திருப்பணிகளுக்கும் இந்த ஊர்களின் வருவாய் பயன்படுத்தப்பட்டது. மேலும் திருமடங்களும், அன்ன சத்திரங்களும் இந்த மன்னரது தண்ணளியில் தங்களது திருப்பணிகளைச் சிறப்பாக தொடர்ந்து வந்தன. இவரது இந்த நற்பணிகளுக்கு ஊக்குவிப்பும், உரிய ஆலோசனையையும் வழங்கி உதவும் பிரதானியாக முத்துகுமார பிள்ளை என்பவர் பணியாற்றி வந்தார்.[2] தனது இறுதி காலத்தை இவ்விதம் சிறந்த ஆன்மிகப் பணிகளில் செலவழித்து வந்த இந்த மன்னர், ஒரு நாள் பிரான்மலை சென்றார். மங்கை பாகர் சுவாமியையும் தேங்குழல் அம்பிகையையும் தரிசனம் செய்து விட்டு பல்லக்கில் சிவகங்கை திரும்பிக் கொண்டிருந்தார். மறைந்திருந்து குறிபார்த்து எறிந்த எதிரி ஒருவனது கட்டாரி தாக்குதலினால் உயிர்துறந்தார்.

சிவகங்கைத் தன்னரசைத் தோற்றுவித்த சசிவர்ண பெரிய உடையாத்தேவரது செம்மையான ஆட்சி கி.பி. 1749 வரை (இருபது ஆண்டுகள்) நீடித்தன. புதிய சிவகங்கைச் சீமை பல துறைகளிலும் முன்னேறுவதற்கு வழிவகுத்தது. ஒரு நாட்டின் வரலாற்றில் இருபது ஆண்டுகள் என்பது ஒரு சிறு கால வரம்புதான். என்றாலும், மன்னர் சசிவர்ணத் தேவர், தமது முந்தைய சேதுபதி சீமையின் தொண்டித் துறைமுகம், வெள்ளிக்குறிச்சி ஆளுநர் பணிகளில் பெற்று இருந்த நிர்வாக அனுபவத்தைப் பயன்படுத்தியும், சேதுபதி மன்னரது சேது நாட்டு ஆட்சி முறைகளை நடைமுறைப்படுத்தியும் வந்தார். அன்றைய நிலையில், சிவகங்கைச் சீமை மக்களது ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் சாதனைகளைச் செயல்படுத்துவதாக இருந்தது. இந்த மன்னர், மக்களது வழிபாட்டுத் தலங்கள், திருமடங்கள், அன்னகத்திரங்கள் ஆகியவை சிறப்பாக பராமரிக்கப்படுவதற்காக, தக்க தொகையினை வருவாயாக, பெறத்தக்க ஊர்களையும், ஏந்தல்களையும் இறையிலியாக - சர்வ மான்யங்களாக அந்த அமைப்புக்களுக்கு வழங்கினார்.[3]

கி.பி.1729 முதல் கி.பி. 1749 வரையிலான கால கட்டத்தில், ஏராளமான அறக்கொடைகள் இந்த மன்னரால் வழங்கப்பட்டதற்கான குறிப்புகள் மட்டும் சிவகங்கை தேவஸ்தான பதிவேடுகளில் காணப்படுகின்றன. கல்லிலும், செம்பிலும், ஒலைப் பட்டயங்களிலும் கைச்சாத்திட்டு வழங்கப்பட்ட இந்த ஆவணங்களில் பல, சரியான பராமரிப்பும், கவனமும் இல்லாமல், கால நீட்சியில் அழிந்து கெட்டுப்போயின. மிகவும் அரும்பெரும் முயற்சியில் சேகரிக்கப்பட்ட இந்த சர்வமான்ய, தான சாதன பட்டயங்கள் சில இந்த நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.

கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி, இந்த மன்னர், இளையான்குடி இராஜேந்திர சோழீஸ்வர ஆலயம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம், காளையார் கோவில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் ஆலயம், அலட்சிய ஐயனார் ஆலயம், அழகச்சி அம்மன் ஆலயம் ஆகிய திருக்கோயில்களின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது தெரிய வருகிறது. எமனேஸ்வரம் சத்தியவாசக சுவாமி மடம், திருவாவடுதுறை மடம், மானாமதுரை பிருந்தாவன மடம், தமிழ்ப்புலவர்கள், வடமொழி வியாகரண பண்டிதர்கள் மற்றும் பல தனியார்களும் இந்த மன்னரது தண்ணளியில் அறக்கொடைகள் பெற்று வாழ்ந்து வந்தனர் என்பது வெள்ளிடை.

இதோ அந்த அறக்கொடைகளின் பட்டியல். (கிடைத்துள்ள குறிப்புகளின்படி)

அறக்கொடை பெற்றவர்கள்

1. திருக்கோயில்கள்
கி.பி.1732
இராஜேந்திர சோளிஸ்வரர் ஆலயம் இளையான்குடி.
சித்து ஊரணி(எமனேஸ்வரம் வட்டம்)
1733 அந்தனேந்தல் (காளையார் கோவில் வட்டம்) வாள்மேல் நடந்த அம்மன் கோவில்
காளையார் கோவில்
1738 முடவேலி (எமனேஸ்வரம் வட்டம்) கறுத்தப் பால அழகச்சி அம்மன் திருக்கோயில்
1734 திருவுடையாபுரம் இளையாங்குடி ராஜேந்திர நாயனார் திருக்கோயில்
1740 தெ.புதுக்கோட்டை திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் ஆலயம்
1747 பட்டம் தவிர்த்தான் (பார்த்திபனூர் வட்டம்) மங்கை ஏந்தல், புலவன் ஏந்தல் அலட்சிய ஐயனார் கோவில்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்
2. திருமடங்கள்
1733 எமனேஸ்வரம் சிதம்பரம் சத்திய வாசக சுவாமியார் மடம்
1745 வஞ்சிக்குளம் திருவண்ணாமலை பிருந்தாவன மடம்
மானாமதுரை பிருந்தாவன மடம் (இனாம்)
வடக்குசந்தனூர் பிருந்தாவனம் மடம் அக்கிரஹாரம்,
1751 நாதன்வயல், பாணன் வயல் திருவாரூர் பண்டார சந்நதிக்கு
3. தமிழ்ப்புலவர்கள் மற்றும் சான்றோர்கள்
1728 எலிக்குளம் சங்கர ஐயர், தர்மாசனம்
1730 குன்னக்குடி ஏந்தல் (மங்கலம் வட்டம்) தர்மாசனம்
1732 செக்ககுடி சிரமம், சத்தியாதபிள்ளை, ஜீவிதம்
வடமலையான் நயினார் முகமது, ஜீவிதம்
பாப்பாகுடி சோழகிரி வடமலை ஐயங்கார், தர்மாசனம்
கூடன்குளம் காமனிதேரி அருணாசலம் செட்டி, இனாம் சிற்றம்பலக் கவிராயர், ஜீவிதம் தேவராஜ ஐயங்கார், தர்மாசனம்.
கி.பி. 1733 குணப்பன் ஏந்தல் திருவேங்கடம் ஐயங்கார்
செல்ல சமுத்திரம், நாகன் ஏந்தல், (எமனேஸ்வரம் வட்டம்) ஊழியமான்யம்
தர்மாசனம்
எமனேஸ்வரம் சிதம்பரம் சத்திய வாசக சுவாமிகள் மடம், தர்மம்
கிழனுர் (எமனேஸ்வரம் வட்டம்) அனந்த கிருஷ்ண சாஸ்திரி
சவரப்பள்ளம் ஊழியமான்யம்
வேம்பங்குளம் (பார்த்திபனூர் வட்டம்) தர்மாசனம்
மேலக் கொன்னங்குளம் மங்கைநாத கவிராயர்
ஏனாதி (எமனேஸ்வரம் வட்டம்) தர்மாசனம்
கொன்னன்குளம் திருவாவடுதுறை, சுப்பிரமணிய பண்டாரம்
வாணியரேந்தல் (மாறநாடு வட்டம்) சங்கர சாஸ்திரி
குருவி ஏந்தல் (மாறநாடு வட்டம்) தர்மாசனம்
கட்டான் ஏந்தல் (பார்த்திபனூர் வட்டம்) அழகர் ஐயங்கார்
1734 அகர ஏந்தல் (எமனேஸ்வரம் வட்டம்) தர்மாசனம்
1737 சுந்தர நடப்பு (காளையார் கோவில் வட்டம்) வாலக்காடு ஏந்தல், சக்கையன் ஏந்தல், சுண்டக்குறிச்சி சேஷாச்சலம் ஐயங்கார் தர்மாசனம் கரியமாணிக்க பட்டர், இனாம் கருப்பன் செட்டி வகை, இனாம் அழகன் ஐயன்
1738 செங்குளம் படைக்கு வீங்கி, ஆவன்குளம், பிலார் பீச்சப் படக்கி, பன்னீர்குளம் குரவந்தி சுப்பிரமணிய ஐயர், இனாம் சுப்பு ஐயர், இனாம் நாராயண ஐயர், இனாம்
குரவந்தி அனந்த நாராயணன்
1739 மேலக்குறிச்சி அருணாசலம் செட்டியார்
கள்ளர்குண்டு இனாம் அனந்தகிருஷ்ண ஐயங்கார், தர்மாசனம்
பாணன் ஏந்தல் அழகாத்திரி ஐயங்கார், தர்மாசனம்,
மாணிக்கனேந்தல் (சாக்கை வட்டம்) கோபாலதீட்சிதர், தர்மாசனம்
கி.பி 1740 மருதாணி வயல் (சாக்கை வட்டம்) இராமா சாஸ்திரி, தர்மாசனம்
குட்டி வயல், செட்டி வயல் குப்பு ஆசாரியார், தர்மாசனம்
வாணியேந்தல் (அமராவதி வட்டம்) சுப்பு ஐயன், தர்மாசனம்
உம்மாங்கல் லட்சுமண ஐயங்கார், தர்மாசனம்
தெ.புதுக்கோட்டை சுப்பு ஐயர், லெட்சுமி அம்மாள், தர்மாசனம்
1741 கருவேலகுறிச்சி செங்கமடை அனுமந்தராயன் சேரி அழகிரி சாஸ்திரி
ஆச்சனக்குடி ஊழியமான்யம்
பாரூர் ஒடை முத்துகுமரா பிள்ளை, இனாம்
1742 பெருஞ்சானி சாமா பாப்பன் ஏந்தல் (மங்கலம் வட்டம்) குப்பன் செட்டியார், ஜீவிதம் ஊழியர் மான்யம்
1743 உதாரப்புளி (மங்கலம் வட்டம்) தர்மாசனம்
1745 அலவன்குளம் செங்குளம் சொக்கநாதப்புலவர், ஜீவிதம் சீனிவாச சாரியார், அழகிரி ஐயங்கார், (மானாமதுரை)
பள்ளிச்சேரி (மங்கலம் வட்டம்) பெருமாள் ஐயர், ஜீவிதம்
நத்தை பொறுக்கி சீனிவாச ஐயங்கார், தர்மாசனம்
1746 காடன் ஏந்தல் பன்னீர்க்குளம் பரமசாஸ்திரி, தர்மாசனம் தர்மாசனம்
1747 செந்தட்டி ஏந்தல் (மாறநாடு) ஊழியமான்யம்
கமுதக்குடி சோலையார் இராமலிங்க சுவாமிகள்
ஏந்தல் (பார்த்திபனுர் வட்டம்) வரிசை ஏந்தல் (மாறநாடு வட்டம்) திருவேங்கடத்தய்யர், தர்மாசனம் தர்மாசனம்.
சாமடை இருப்பன் ஏந்தல் (மங்கலம் வட்டம்) விசுவநாத ஐயர், தர்மாசனம்
1748 வாகைக்குளம் கங்கை கொண்ட ஏந்தல், பாவயன் ஏந்தல், சிறுவாணி வயிரமுடி ஏந்தல், சின்ன கொண்டுமுடி கருப்பஞ்செட்டி வகை, இனாம் அழகர் ஐயங்கார், இனாம் அண்ணாசாமி ஐயங்கார், இனாம் வேங்கட முத்து ஐயர், ஊழியம்.


இந்த அறக்கொடைகளை வழங்குவதில் அக்கறை கொண்டிருந்த மன்னர் சசிவர்ணத் தேவரைப் போல் அவரது அரசமாதேவியான அகிலாண்ட ஈசுவரி நாச்சியாரும் மிக்க ஆர்வத்துடன் இருந்து வந்தார். இராமநாதபுரம் சேதுபதி மன்னரது புதல்வியார் என்ற வகையில் சேதுபதி மன்னர்களது அரச பிராட்டிகளுக்குரிய ஆன்மிகப் பிடிப்பு, இவருக்கும் இருந்தது என்பதை அவரது பெயரால் வழங்கப்பட்ட கீழ்க்கண்ட அறக்கொடைகளில் இருந்து அறிய முடிகிறது. இராணி அகிலாண்ட ஈஸ்வரியின் அறக்கொடைகள்:

திருக்கோயில்கள்
கி.பி. 1732 சித்து ஊரணி (எமனேஸ்வரம் வட்டம்) இராஜேந்திர சோளிவரர் ஆலயம் இளையான்குடி
தனியார்கள்
கி.பி. 1733 இளமனூர் (எமனேஸ்வரம் வட்டம்) ஊழியமான்யம்
1742 பாப்பான் ஏந்தல் (மங்கலம் வட்டம்) ஊழியமான்யம்
அறுவாணி (மங்கலம் வட்டம்) ஊழியமான்யம்
1743 புலிஅடி (மங்கலம் வட்டம்) அனந்த ஐயர், இனாம்.


இந்த ராணியார், மன்னர் சசிவர்ணத் தேவரது இறப்பிற்கு முன்னரே கி.பி. 1744-ல் இறந்து இருக்கலாம் என்பதையும் இங்கே ஊகிக்க முடிகிறது. மன்னரது நிலக்கொடைகள் பற்றி கிடைத்துள்ள சில செப்பேடுகளின் உண்மை நகல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

1. சிவகங்கைச் செப்பேடு

இந்த மன்னர் வழங்கியுள்ள செப்பேடுகள் பல. ஆனால் நமக்கு கிடைத்துள்ள இந்த மன்னரது நான்கு செப்பேடுகளில் முதலாவது இது. 18.4.1733 தேதியன்று, சிவகங்கை திருக்குளத்தின் கரையில் சாத்தப்ப ஞானியாரது மடத்தில் குருபூஜை, பரதேசி நித்தியபூஜை, நவராத்திரி பூஜை, சிவராத்திரி பூஜை ஆகிய நடத்தி வைப்பதற்கு ஏதுவாக மருதவயல் ஏந்தல் சர்வ மான்யமாக வழங்கப்பட்டதற்கான தானசாசனம் இது. மதுரை நீதிமன்றத்தில் உள்ளது.

 1. ஸ்ரீ சுபமஸ்து சாலிவாகன சகாப்தம் 1655 கலியுக சகாப்தம்
 2. 4834 இதின் மேல் செல்லா நின்ற பிரமாதீச ஸ்ரீ சித்திரை மீஉ
 3. 21ந்தேதி புதன் கிழமையும் பவுர்ணமியும் சுவாதி நட்சித்திரமும் விருச.
 4. பலக்கினமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீமன் மகா மன்
 5. டலேசுரன் தளவிபாடன் பாசக்கி தப்புவராய கண்டன்
 6. மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு குடாதான்
 7. பாண்டி மண்டல தாபநாச்சாரியான் சோளமண்டல சண்டப் பிரச
 8. ண்டன் ஈளமண்டலமும் கொண்டு யாழ்ப்பாண பட்டணமும் கெச
 9. வேட்டை கண்டருளிய ராசாதி ராசன் ராச பரமேசுவரன் ராச
 10. மார்த்தாண்டன் ராசாக்கள் தம்பிரான் ரவிகுலசேகரன் தொட்டிய
 11. தளவிபாடன் ஒட்டியர் மோகம் தவிள்த்தான் துலுக்க தளவிபாட 12. ன் சம்மட்டிறாயன் இவளி பாவடி மிதித் தேருவார் கண்டன்

13. அசுபதி கெசபதி நரபதி பிரிதிவி ராச்சியம் அருளா நின்ற சேது
14. காவலன் சேது மூல துரந்தரன் ராமானாத சாமி காரிய துரந்தரன்
15. இளம் சிங்கம் தளம் சிங்கம் சொரிமுத்து வன்னியன் தொண்டி
16. யன் துறைகாவலன் வைகை வழநாடன் தாலிக்கி வேலி...
17. கொட்டமடக்கி அரசராவணராமன் யெதுத்தார்கள் மார்பில் ஆணி
18. சிவபூசைதுரந்தரன் செம்பி வளநாடன் காத்துாரான குலோத்து
19. துங்கன் சோள நல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிருக்கும்
20.. இரண்ணிய கர்ப்ப அரசுபதி ரெகுநாத சேதுபதி புத்திரன்
21 விஜய ரெகுநாத சேதுபதி அவர்கள் மருமகன் குளந்தை நகராதிபதி
22. யன் பெரிய உடையாத் தேவரவர்கள் புத்திரன் பூரீமது
23. அரசு நிலையிட்ட முத்து விஜய ரெகுநாதச் சசிவர்ண பெரிய
24. உடையாத் தேவரவர்கள் நாலு கோட்டையிலிருந்து வேட்டைக்
25. கு வந்த இடத்தில் கோவானூர் ராசபாச அகம்படிய தாரரான வீர
26. ப்பன் சேருவை மகன் சாத்தப்ப ஞானி வெள்ளை நாவலடி ஊத்தில்
27. தவசிருக்கையில் நாம் கண்டு தெரிசத்ததில் உங்களுக்கு நல்ல யோகமும்
28. புதிய பட்டமும் வந்து நீ யானைகட்டி சீமை ஆளுவாய் யென்று விபூதி கொ
29. டுத்து தஞ்சாவூர் போகும்படி உத்திரவு கொடுத்தபடிக்கு நான் போய் புலிகு
30. த்தி அவர்கள் கொடுத்த ஒத்தாசையால் றாமனாதபுரம் பவானு சிங்கு
31. தேவனை செயம் செய்து வீரத்தின் பேரில் கோவானூரில் இருந்த சாத்தப்ப
32. ஞானியைக் கூட்டி வந்து பூசைபண்ணின ஊத்தில் திருக்குளம்
33. வெட்டி சிவகங்கை என்ற பேர் வரும்படியாக செய்த திருக்குளத்துக்கும்
34. வடக்கு காஞ்சிரங்கால் தென்வடலோடிய புத்தடிப் பாதைக்கு கிளக்கு பன்னி
35. முடக்கு பள்ளத்துக்குத் தெற்கு பாலமேடு தென்வடலோடிய பாதைக்கு மேற்கு
36.. இந்நாங் கெல்லைக்குட்பட்ட காட்டுக்குள் இந்த சாத்தப்பஞானி
37, யாருக்கு தவசுக்கு மடங்கட்டிக் குடுத்து இந்த மடத்தில் குரு பூசை செய்
38. தும் பரதேசி நித்திய பூசை நவராத்திரி சிவராத்திரி பூசைக்கு நாலு
39. கோட்டை சோளபுரம் உள்கடையில் ஆறாங்குளம் கண்மாய்
40. கரைக்கு கிழக்கு அந்தக் கண்மாய் பெரிய மடை கிழமேலோடிய போபதி
41. காலுக்கு தெற்கு கருங்காலக்குடி தர்மத்துக் கல்லான சரகணை தென்
42. வடலோடிய பாதைக்கு மேற்கு மருதவயல் கண்மாய் நீர்பிடிக்கு
43. வடக்கு பெருநாங்கெல்லைக்குள்பட்ட மருதவயல்யேந்தலும்
44. நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டுத்திடல் கீழ்நோக்கிய
45. கிணர் மேல்நோக்கிய மரம் சகலமும் தான சாதனமாக வரியிறை
46. ஊதியமும் சகலமும் சர்வ மானியமாக
47. (ஆறுமுகம் சகாயம்) கட்டளையிட்டபடியினாலே கல்லும் காவேரியும்
48. புல்லும் பூமியும் ஆதிசந்திருர்க்கம் வரைக்கும் புத்திர பவுத்திர பரம்பரையார்
49. ஆண்டு அனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் ராசகுரு சாத்தப்பையா
50. என்று பேர் கொடுத்து சிங்கமுகத்தரணயல் திருசங்கு...
51. சங்கு சேகண்டி காவிக்குடை செண்டா அன்னக்கொடி விரு
52. தும் குடுத்திருப்பதால் இந்த தர்மத்தைப் பரிபாலனம் பண்ணி
53. ன பேர்கள் காசியிலும் ராமேசுவரத்திலும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டை, கோடி பிரம்ம பிரதிஷ்டையும் பண்ணி
54. ன சுகத்தை யடைவார்கள் யிந்த தர்மத்துக்கு அகிதம் பண்ணி
55. னவன் கெங்கைக் கரையில் காராம் பசுவையும் பிராமண ஸ்ரீயையும்
56. சிசுவையும் வதைபண்ணின தோசத்தில் போகக் கடவாராகவும்
57. யிந்த தர்மசாதனம் யெளுதினேன் ராயசம் வேலாயுதம் உத்திரவுப்படிக்கு இந்த பட்டயம் வெட்டித் தந்தது.
58. தாயுமான ஆசாரி மகன் தையல் பாகம்.

2. இளையான்குடி செப்பேடு

இளையான்குடியில் உள்ள ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயத்துக்கு கி.பி.1733 திருவுடையாபுரம் என்ற ஊரினை சர்வமானியமாக வழங்கியதை இந்த செப்பேடு குறிப்பிடுகிறது. இதனை வழங்கியவர் மன்னர் சசிவர்ண பெரிய உடையாத் தேவர்.

1. ஸ்ரீமன் மகாமண்டலேசுபரன் அரியபுரத்
2. ளவிபாடன் பாசைக்கி தப்புவறாயிர கண்டன் மூள
3. றாயர் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குட
4. தான் பாண்டி மண்டல தாபனா சாரியன் சோழ
5. மண்டல பிறதிக்ஷனாபானாசாரியான் தொண்ட மண்
6. டல பிரசண்டப் பிறசண்டன் ஈளமுங் கொங்கும் யா
7. ள்ப்பான பட்டணமும் கேயு மண்டலமு மளித்து கெ
8. சவேட்டை கொண்டருளிய நாசாதிறாசன் றாசபரமேசுபர
9. ன் றாசமாத்தாண்டன் றாசகெம்பீரன் றாசகுலசேகரன் இ
10. வுடி பாவடி மிதித்தேறுபார் கண்டன் சாவக்காற கண்
11. டன் சாமித்தொராகிய மிண்டன் பஞ்சவற்ணறாய
12. றாவுத்தன் பனுகுவார் கண்டன் சொரிமுத்து வண்
13 ணியன் திலதனுதல் மடல் மாதர் மடலெழுதும் வரு
14. சுமுகன் காமிகா கந்தப்பன் சங்கீத சாயுத்தி
15. ய வித்தியா வினோதன் வீரதண்டை சேமத்தலை
16. விளங்கு மிறுதாளினான் வில்லுக்கு விமர்பரிக்
17. சூநகுலன் பரதநாடகப் பிறவிணன் வலியச்சருவி
18. வளியிடக்கால் நீட்டி தாலிக்கு வேலி தத்துறாதிய
19. ள் மிண்டன் இளஞ்சிங்கம் தளசிங்கம் ஆத்துபாச்சி
20. கடல்ப்பாச்சி மதப்புலி அடைக்கலங் காத்தான் து
21. லுக்கர் மோகந் தவிள்த்தான் துலுக்கர் தளவா
22. டன் ஒட்டியர் மோகந் தவிள்த்தான் ஒட்டியர் தள
23. விபாடன் வீரலெட்சுமி விசைய லெட்சுமி காந்
24. தன் அனுமக்கொடி கெருடக் கொடி விளக்கும் வி
25. ருதாளினான் செங்காவிக் கொடையோன் கயனா
26. த சுவாமி காரியர் துரந்தரன் காளை நாயகர் துர
27. ந்தரீகான் சேது மூல தராதரீகாரன் சேது இ
28. லட்சதுரந்தரீகறான் தொண்டித்துறைக் காவ
29. லன் சிவபூசாதுரந்தரீகாரன் துஷ்ட்ட நிக்
30. க சிஷ்ட்ட பரிபாலகன் அறி
31. வுக்கு அகஸ்த்தியர் பொறுமைக்கித் தன்மர் ப
32. கை மன்னர் கேசரி இரணியகப்ப யாசியான
33. சேது வம்மிசதுரந்தரீகறன் பிறிதிறாச்சிய
34. பரிபாலனம் பண்ணியருளின ஸ்வத்ஸ்ரீ வத்ஸ்ரீ
35.. சாலிய வாகன சகார்த்தம் 1655 ற்மே
36. ல் செல்லா நின்ற பிறமாதீசா ஸ்ரீ மாசிமீ.
37. ய உ புனல்ப் பிரளைய நாட்டில் அறுங்குல
38. தி பாறாள்ள பெரிய உடையாத் தேவரவர்
39. கள் புத்திரன் அரசு நிலையிட்ட விசைய ரெகு
40. னாத பெரிய உடையாத் தேவரவர்கள் துகலு,
41. ர் கூத்தத்தில் கடாதிருக்கை நாட்டில் இ
42. ந்திறாவதான நல்லூறான இளையான்குடி
43. யில் சுவாமி றாசேந்திர சோளிசுபர நா
44. யனாருக்கு மன மகிள்ந்த வேணுகோபலர்
45. ரெண்டு சன்னதிக்கிம் பூசை நெய்வேதினத்து
46. க்கும் திருவுடையாபுரம் கிறாமம் தாராபூரு
47. வமாக சறுவமானியமாக ஆதிசய்வமாகி
48. யகாசியபர் கோத்திரமும் போதாயின சூத்திர
49. முமான கயிலா நம்பியார் புத்திரன் சுப்பி
50. றமணிய நம்பியார் கைய்யில் பூறுவபட்சம் பூ
51. றண(அ)ம்மாவாசியும் சோமவாரமும் சுக நட்
52. செத்திர சுபயோகமும் கூடிய சந்திர கெரென
53. புண்ணிய காலத்தில் தானம் பண்ணிக் கொடுத்த கிரா
54. மம் திருவுடையாபுரத்துக் கெல்கை அதிக
55. ரைக்கி கிளக்கு சித்தாத்துக்கு வடக்கு அரியா
56. ண்டிபுரம் குளக்காலுக்கு மேற்கு நெடு ஊரணி
57. த் தென் கடக் கொம்புக்கு தெற்கு இன்னாங்
58. கெல்ன்ககி யுள்ப்பட்ட திட்டு
59. திடல் நஞ்சை புஞ்சை மேல் னோக்கிய மரம்
60. கீள் னோக்கிய கிணறு வருதீபனாட செபம்மசிலது
61. வடாசானம் சகல சமுதாய பிராத்தியும் அதி
62. சந்திறாக்கமும் புத்திர பவுத்திர பவுத்திர பாரம்பரி
63. யமாக சாமி சன்னதியழுக்கு பூசை நெய்வேதி
64. ணம் பண்ணிக்கொண்டு சுகத்திலே இருப்பா
65. றாகவும் இந்த தற்மத்தை பரிபாலணம் பண்
66. ரிைக் கொண்டு வந்த பேர்கள் காசியிலேயும்
67. ராமேசுபரத்திலேயும் கோடி சிவலிங்க பிறதிஷ்
68. ட்டையும் கோடி விறும்ம பிறதிஷ்ட்டையும் பண்
69. ணரின பலனை யடைவார்றாகவும் இதுக்கு யா
70. தாமொருதன் அகிதம் பண்ணினவன் கா
71. சியிலே காறாம் பசுவையும், குருவையும் வ
72. தை பண்ணின்ன தோசத்தில் போகக் கடவ
73. ரறாகவும் இந்த தற்மசாதனம் எழுதினே
74. ன் விசுவனாசாரி குமாரன் வீரபத்திர ஆ.
75. சாரியென் உ. தாநபாலநயோர் மத்யே
76. தாநாத் சிரேயோதுபாலநம் தாநாத் ஸ்வர்க்க
77 ம் அவாப்நோதி பாலநாத் அச்சுதம் பத
78 ம் ஸ்வதத்தாத் த்விகுணம் புண்யம் பரதத்தா
79. நபாலநலம் பரதத்தாபஹாரேன
80. ஸ்வத நிஷ்பலம் பவேத்

3. இமயனீசுரம் செப்பேடு

சிதம்பரத்தில் இருந்து இயமனிசுவரத்துக்கு வருகை தந்த சத்தியவாசக சுவாமியார் அவர்களை, அங்கு மடம் உண்டு பண்ணிவித்து, அந்த மடத்தைப் பராமரிக்க மன்னர் சசிவர்ண பெரிய உடையாத் தேவர் அவர்கள், 26.11.1734 தேதியன்று அந்த வட்டாரத்தில் உள்ள நஞ்சை நிலங்களை தான சாதனமாக வழங்கியுள்ளதை அறிவிக்கும் பட்டயம் இது.

தடாதகை நாடு என்ற உட்பிரிவும், இளையான்குடி பெரியகண்மாய் தாமரைமடை, பகையறவென்றான் ஏந்தல், செட்டி ஊரணி, அருணையூர் குளக்கால், சாக்காரையில் நீர்த்தாவு, கல்லூரணி ஏந்தல் ஆகிய நீர் ஆதாரங்களும் அவைகளின் எல்லைகளும் இந்த செப்பேட்டில் குறிப்பிட்டு இருப்பது ஆய்வாளர்களுக்கு அரிய செய்தியாகும். இந்தச் செப்பேடு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. 1. சுவஸ்திமன் மகா மண்டேலேசுரன் அரியாயிர தளவிசைய பாசைக்குத் தப்பு வாகண்டன்.
2. மூவாயிர கண்டன் கண்டநாடு கொண்ட கொண்ட நாடு குடாதான் பாண்டி மண்டலத்
3. தாபநாச்சாரியான் சோள மண்டல பிரதிட்டாப நாச்சாரியன் தொண்டமண்
4. டல சண்டப்பிறசண்டன் யீளமும் கொங்கும் யாள்ப்பா னமும் எட்டித்திசை வேட்டை கண்
5. டருளிய ராச ராசன் ராச பரமேசுரன் ராச மாத்தாண்டன் ராச கெம்பீரன் எம்மண்டல
6. முங் கொண்டருளிய ஒட்டியர் தளவிபாடன் யொட்டியர் மோகந்தவிள்த்தான்
7. மலைகலங்கினும் மனங்கலங்காதான் மறைப்புத்திரர் காவலன் குறும்பர் கொட்டமட
8. க்கிய ராச குலதிலகன் ராசாக்கள் தம்பிரான் அரசராவண ராமன் அதம பிரகண்டன்
9. தாலிக்குவேலி தரியலர்கள் சிங்கம் வடகரைப்புலி வைகை வளநாடன் தேவை
10. நகராதிபன் சேதுகாவலன் சேது ராச்சிய துரந்தரன் தொண்டியந்துறை சத்திர பிரதாபன்.
11. திரை கொள்ளுங் காவலன் ராமனாத சுவாமி காரிய துரந்தரன் சேமத் தலை விளங்குந்தாளினான்.
12. செங்காவிக்கொடி செங்காவிக்குடை செங்காவிச் சிவிகை யாளி அன்னக்கொடி
13. கெருடக்கொடி சிங்கக் கொடியை யுடையான் யிவுளி பாவடி மிதித்தேறு
14. வார்க் கண்டன் முல்லை மாலிகையான் யிரவிகுலசேகரன் பஞ்சகால பயங்கரன்
15. பரதேசி காவலன் தடாதகை நாட்டில் செம்பிவள கரதல நகராதிபன் சிவ
16. பூஜை குருபூஜை மகேசுவர பூஜை மறவாத வாசாதிபன் அசுபதி கெசபதி நரபதி யிரண்ணிய
17 கெற்பாரன் விசைய ரகுநாத சேதுபதி யவர்களுக்கியல்பான அரசு நிலையிட்ட
18. விசைய ரகுநாத குழந்தைச் சசிவர்ண பெரிய உடையாத் தேவரவர்கள் பிறுதி ரா
19. சச்சிய பரிபாலனம் பண்ணி யருளா நின்ற சாலிய வாகன சகாத்தம் “1655 கலியப்த”
20. 4834 யிதன் மேல் செல்லா நின்ற ஆனந்த ரீகார்த்திகை 26. தீ பூர்வ.
21. பச்சம் சுக்கிர வாரம் தசமியும் புனர்பூச நட்செத்திரமும் பால வாகரணமும்
22. சுக்ர நாட யோகமும் கூடிய சுபதினத்தில் ராச ஸ்ரீ சசிவர்ணப் பெரிய உடையார்.
23. தேவர் மகாராசாவர்கள் பூலோக கயிலாயமாகிய சிதம்பரத் திலிருந்
24. தெழுந்தருளியா நின்ற சத்திய வாசக சுவாமி யாரவர்களுத் தடாதகை நாடடி
25. லியமனீச்சுரம் தலத்தில் தான சாதனப் பட்டயமெழுதிக் குடுத்தது தான சாதனப்
26. பட்டயமாவது வைகை நதி வடகரையில் சுலுத்தாமியார் பள்ளிக்கும் வடக்கு
27. யிதன் மேற்கு வடகிழகோடிய உண்டு பாதைக்கும் மொட்டைப்புளிப் பண்டாரம்.
28. மனைக்குக் கிழக்கு யிதர்கடுத்த அழகப்ப மணியக்காரன் வீட்டு உண்டு பாதைக்குத் தெற்கு.
29. யீசுவரன்கோவிலுக்குத் தெற்கோடிய பெரும்பாதைக்கு மத்த மயிலை நம்பி.
30. யாரக்கிரகாரத்துக்கு மேற்கு யின்னான் கெல்கை குள்ளாகிய நிலத்தில் மட தர்மம்
31. உண்டு பண்ணி வித்து அந்த மடத்துக்குச் செல தருபாஷண மும்சர்வ மானிய
32. உம்பள நிலமை சுவாத்திய நிலைமை யாவது உய்ய வந்தா ளம்மன் கோவில்
33. மடைப் பாசானத்தில் தெற்கோடிய செக்கடிக் கவலில் நஞ்சைத் தரம்பெரும்
34. படி மூவிரையபடி 50 1/2 யும் யிதற்கு தென்கிழக்கோடிய வண்டல் கொடி
35. க்காக்கவலில் பெரும் பச்சேரியில் விரையடி பதிங்கலமும் மடதர்மத்துக்கு வான்
36. பயிர்த் தோட்டம் அக்கானரத்துக்கு கிழக்கு வான்பயிர்த் தோட்டத்தில் ரெண்டு
37. தோட்டமும் மடதர்ம ஊழிய அளமாகாணம் சிவியார் தோட்டக்காரர்
38. பத்துக்குடியும் அளமாகாணச் சிலவிற்குச் சிறுதேட்டு பணவகைக்கும்
39. யிளையான்குடி பெரிய கண்மாய்த் தாமரை மடை பாஷாணம்
40. உட்கடை பகையர வென்றான் ஏந்தல் குளங்களுக்கு...
41. ட்சி ஏந்தல் யெல்கை... செட்டி ஊரணிப் பாதைக்கும் கிளக்கு அருணையூர்
42. குளக்காலுக்கும் சோதுகுடி எல்லைக்கு தெற்கு கருஞ்சுத்தி கண்வாய் அரணையூர்.
43. சுக்கானூர் நீர்த்தாவுக்கும் மேற்கு கல்லூரணி ஏந்தல் எல்லைக்கு வடக்கு இன்னாங்.
44. கெல்கைக்குள்பட்ட நஞ்சை 2
45. 38 குறுக்கம் 361ம் இதுக்குள்ளாகப்பட்ட மாவடை மரவடையும் அனுபவ
46. வித்துக் கொள்கிறது பைங்குனி குருபூசைக் கட்டளைக்கு ராமலிங்க காலால்...
47. ...சங்கராந்திப் பொங்கலுக்கு கட்டளை உள்ளிட்ட பச்சை யமுதுபடிஅமு
48. தும்படியும் கிரைய வகையும்... தீபாவளி பண்டிகைக் கட்டளைக்குவஸ்திரம்
49. எண்ண கிரைய வகைக்கு... நவராத்திரி கட்டளைக்கு கிரைய...
50. ம் சிவராத்திரி கட்டளைக்கு வஸ்திரமும்.... அவல் களம் தயிர்களமும்
51. மடதர்மத்துக்கு ஊறுகாய்க்கி, மாங்காய சூழும் நெல்லிக்காய் யகனமும் இந்தப்படிக்கி.
52. கட்டளையாக நடந்து வரும்படிக்கிப் பத்திக்கொண்டு ஆதிசந்திர பூர்வமாக
53. கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் உள்ள வரைக்கும் மீனாட்சி சுந்தரேசுவரர் ராமனாதசு
54. வாமி பர்வத வர்த்தினி சன்னிதான விளக்கம் போல யிந்த தர்மம் பரிபாலனம் பண்ணிக் கொ
55. ள்ளுவாராகவும் யிந்தபடிக்கு சத்திய வாசக குரு சுவாமியாருக்கு சசிவர்ண மகாராசா.
56. அவர்கள் கட்டளையிட்ட பட்டயத்துக்கு.

4. பெருவயல் செப்பேடு

இராமநாதபுரம் சேதுபதி சீமையில் பெருவயல் கிராமத்தில் சேதுதளவாய் வயிரவன் சேர்வைக்காரர் உண்டுபண்ணி வைத்த ரெணபலி முருகையா ஆலயத்தில் பூசை, நிவேதனம், திருமாலை, திருவிளக்கு தர்மத்துக்கு மன்னர் சசிவர்ணத்தேவர் 4.8.1738 தேதியன்று தொண்டியை அடுத்த திருவெத்தியூர் ஊரினைச் சர்வமான்யமாக வழங்கியதைத் தெரிவிக்கும் தான சாதனப்பட்டயம் இது. இந்த தானம் அப்பொழுது ஆட்சியிலிருந்த முத்துக்குமார விசைய ரகுநாத சேதுபதிக்குப் புண்ணியமாக வழங்கப்பட்டிருப்பது சேதுபதி மன்னருக்கும் சிவகங்கை மன்னருக்குமிடையில் இருந்த உறவின் நெருக்கத்தைக் குறிப்பதாக உள்ளது.

(இந்தப் பட்டயம் தளவாய் வயிரவன் சேர்வைக்காரரது வழியினரும் பாரத ஸ்டேட் வங்கியின் அருப்புக்கோட்டை கிளை மேலாளருமான திரு. எம்.மீனாட்சி சுந்தரம் அவர்களிடம் உள்ளது.)

1. ஸ்வஸ்திஸ்ரீமன் மகாமண்டலேஸ்வரன் அறியராயிரதள விபாடன் பாசைக்கு தப்புவா
2. ர் கண்டன் கண்டணாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டல
3. த்தாப னாசாரியன் சோளமண்டலப் பிரதிஷ்டா பனாசாரியன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பா
4. ணமும் கெஜவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசகம்பீரன் ராசபரமே
5. சுவரன் ராஜமார்த்தாண்டன் ராசகுலசேகரன் ராஜகுலதிலகன் சொரிமுத்து வன்னியன் 6. கொடைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விசையன் இவுளி பாவடி மிதித்து ஏறுவா
7. ர் கண்டன் கொட்டமடக்கி வையாளி நாராயணன் உருகோல் சுரதான்
8, மன்னர் சிங்கம் பகைமன்னர் கேசரி துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனன் வீரகஞ்
9. சுகன் வீரவளநாடன் சிவபூசா துறந்தரன் மன்னரில் மன்னன் மறுமன்னர் காவலன் வே
10. தியர் காவலன் அரசராவண ராமன் அடியார் வேலைக்காரன் பாதள விபாடன் சாடிக்கா
11. ரர்கண்டன் சாமித்துரோகியர் மிண்டன் பஞ்சவர்ண ராய ராவுத்தன் வீரவெண்பா மா
12. லை இளஞ்சிங்கம் தளம்சிங்கம் பகைமன்னர் சிங்கம் மதப்புலி அடைக்கலங் காத்த
13. என் தாலிக்கு வேலி சத்திராதியள் மிண்டன் வன்னியர் ஆட்டம் தவிழ்த்தான் மேவலர்
14. கள் கோளரி மேவலர்கள் வணங்கும் இரு தாளினான் துரக ரேபந்தன் அனும கேதனன்
15. கெருட கேதனன் பரதநாடக பிரவீனன் கருணாகடாட்சன் குன்றினுயர் மேரு
16. வில் குன்றார் வளைமேளித்தவன் திலத நுதல் மடமாதர் மடல் எழுத வரு சுமுகன்
17. விசயலெட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன் காமினி கந்தப்பன்.
18. சத்திய பாசா அரிச்சந்திரன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் வீர
19. தண்டை சேமத்தலை விளங்கும் இரு தாளினான் சகல சாம்புராஜ்ய லெட்சு
20. மினிவாசன் இராமநாத சுவாமி காரிய துறந்தரன். ஸ்வஸ்ஸ்ரீ சாலிவாகன சகா
21. ப்தம் 1661 இதன்மேல் செல்லா, நின்ற காலயுக்தி நாம சம்வச்சுரத்து உத்தி
22. ராயணத்தில் வருஷ ரிதுவில் ஆவணி மாசத்தில் கிருஷ்ணபட்சத்தில் சுக்கிர வாரமும்
23. அமாவாசையும் கூடின சூரியோத ராக புண்ணிய காலத்தில் சேதுகாவலன் 24. வங்கி சாதிபனான புனல்பிரளய நாட்டில் இருக்கும் குளந்தை நகராதிபனா
25. ன பெரிய உடையாத் தேவரவர்கள் புத்திரன் ஸ்ரீ விசைய ரகுநாதப்பெரி.
26. ய உடையாத் தேவரவர்கள் பெருவயலிலிருக்கும் சாத்தப்பன் சேருவைகா
27. காரன் புத்திரன் சேது தளவாய் வயிரவநாதன் சேருவைகாரன் உண்டு பண்ணி
28. விக்ச சுப்பிரமணிய ஸ்வாமியான பெருவயல் ரணபெலி முருகய்யாவுக்கு பூசை
29. நிவேதன திருமாலை திருவிளக்குக்கு முத்துக்குமாரு விசைய ரகுநாத சேதுபதி.
30. காத்த தேவரவர்களுக்குப் புண்யமாக பெருவயல் தானத்தார் தலத்தாரிடம் சேது.
31. வில் ரெண்ணியோதக தாரபூர்வமாக கொடுத்த கிராமத்துக்கு யெல்கையாவது கானாட்டா.
32. ங்குடி குளத்துக்கும் ஆற்றங்கரைக்கும் சின்ன வட்டானத்து அளத்துக்கும் மேற்கு
33. கடுக்களுர்க் கண்மாய்க்கும் ஷை வயலுக்கும் வடக்கு புதுப்பையூர் வயலு
33. லுக்கும் தெற்கோடிய ஆற்றுக்கும் கிழக்கு அக்கிரகாரம் குளத்தூர் வயலுக்கும்
34. கீழை கரும்பூர் வயலுக்கும் சீவநதியேந்தல் கண்மாய்க்கும் தெற்கு இன்னா
35. ங்கெல்கைக்குள்ளிட்ட திருவெத்தியூர் ஊரது புரவு நஞ்சை புஞ்சை 36. மாவட்ட மரவடை திட்டுதிடல் ஊரணி உடைப்பு வுள்கிடையேந்தல்
37. நிதி நிகேஷப ஜெலதருபாஷாண அக்கிர பிராம்மிய சித்தி சாத்தியமென்று சொ
38. ல்லப்பட்ட அஷ்டதேஜாம்மியங்களும் ரணபலி முருகய்யாவுக்கு
39. சருவமான்யமாக பூசை நெய்வேத்தியத்துக்கு கொடுத்த படினாலே ஆசந்திரா 40. ரக சாமியாய் சந்திராதிசந்திர பிரவேஷம் உள்ளவரைக்கும் அந்த கிராமத்தை
41. க் கொண்டு பூசனை வேளை 5/6 திருமாலை திருவிளக்குக் காட்சி வராத
42. படிக்கு நடப்பிச்சுக் கொண்டு வரக்கூட வாராகவும் அந்த சுப்பிரமணிய
43. ப் பிரதிஷ்டையும் அந்தக் கிராமத்தையும் பரிபாலனம் பண்ணின பேர்க
44. ள் காசியிலே கோடி சிவலிங்க பிரதிட்டையும் தனுக் கோடியிலே
45. கோடி பிரம்மப் பிரதிஷ்டையும் கோடி கன்னியாதானம் பண்ணின 46. சுகுதத்தை அடைவாராகவும் இந்த ரணபலி முருகையாவுக்கு நடக்கிற திரு
47. வெத்தியூருக்கு அகிதம் பண்ணினவன் கெங்கையிலேயும் தனுக்கோடி
48. யிலே கோடி பிராம்மணரை வதை பண்ணின தோஷத்தை அடைவாராகவும்.
49. ஸ்ரீ வஸ்தி.
50. ------------------------
51. ------------------------
52. யிந்த தர்மசாசனம் எழுதினேன் ராயசம் தேவ ராய பிள்ளை புத்திரன்
53. சொக்கனாதன் இந்தவிதம் இந்தப்படிக்கு தாம்புரசாசனம் எழுதினேன்.
54. சென்ன வீரபண்டாரம் புத்திரன் சென்ன வீரப்பன் எழுத்து பெருவயலில் திருப்ப.
55. ணி காணியாட்சி மங்களேஸ்வர குருக்கள் கையில் தானஞ் செய்து குடுத்தது.

5. அரளிக் கோட்டை செப்பேடு

மன்னர் சசிவர்ணத்தேவர், தமது பிரதானியாக கிருஷ்ணபிள்ளை தாண்டவராய பிள்ளையை நியமனம் செய்து முத்திரை மோதிரம் வழங்கிய ஆணையைக் கொண்ட பட்டயமிது. கி.பி.1747ல் வழங்கப்பட்டுள்ளது. தாண்டவராய பிள்ளையின் தந்தை காத்தவராய பிள்ளையும் நாலு கோட்டைப் பாளையம் பெரிய உடையாத் தேவரது அட்டவணைக் கணக்கராக இருந்தார் என்ற விவரமும் இந்தச் செப்பேட்டில் இருந்து தெரிய வருகிறது.

(இந்தச் செப்பேடு சிவகங்கை வட்டம் அரளிக்கோட்டை கிராமம் எஸ்.இராமகிருஷ்ணன் என்பவரிடம் உள்ளது.)

1. பிரபவ வருடம் சித்திரை மாதம் 16 தேதி
2. மகாராஜ மானிய அரசு
3. நிலையிட்ட சசிவர்ண பெரிய உ
4. டைய தேவர்களது கிஷ்ணபிள்ளை
5. தாண்டவராய பிள்ளைக்கி
6. பட்டயம் கொடுத்தபடி பட்டய
7. மாவது பாளையப்பட்டு முதல்
8. தன் தகப்பன் காத்தவராய பிள்
9. ளை நம்மிட தகப்பனார் மேற்படி உடை
10. யா தேவர் நாள் முதல்அ
11. ட்டவணை கணக்கும் எழுதி காரு
12. வாரும் பார்த்து வந்தபடியானாலே
13.தானம் பாளையப்பட்டு முதல் சம
14. ஸ்தாநம் உண்டாகிய வரைக்கும்ந
15. ம்மிட மனசுக்கு இருக்க அறமனை கா
16. ரியம் கூடிவரும் படியாய் திவ்குசா
17. ஆகம செளஸ காரிய முமொடு
18. உத்திரவாகமங்கள் செய்த படியினா
19. லே சிவகங்கை சமஸ்தான சீமை
20. அதிகாரம் பிறக்க சொல்லி முத்திரை 21. மோதிரம் கட்டளையிட்ட படியினாலே 22. சிவகங்கை சமஸ்தானம் உள்
23. ள வரைக்கும் புத்திராபுத்திரன் வழி
24. வழி வம்சமாக அதிகாரம் செ
25. ய்து அரண்மனை காரியமும் பிறதாவுமும் தானும்
26. நடந்து கொள்ளச் சொலி மேற்படி தாம்புர
27. பட்டயம் கட்டளையிட்டோம் அந்தப்படி
28. நடப்பிச்சு கொள்ளவும்.


 1. சிவகங்கைச் செப்பேடு.
 2. செல்வரகுநாதன் கோட்டை ஆவணங்கள்.
 3. சிவகங்கைச் சீமை செப்பேடுகள்