சீர்மிகு சிவகங்கைச் சீமை/சேது மன்னர் வழியில் செந்தமிழ்ப் பணி
11. சேது மன்னர் வழியில் செந்தமிழ்ப் பணி
சேதுபதி மரபினரான சிவகங்கை மன்னர்களும், தமிழுக்கு தளராது உதவி உள்ளனர். தமிழ்ப்புலவர்களைப் பெருமைப்படுத்திப் பொன்னும் பொருளும் வழங்கியதுடன் அவர்களது வாழ்க்கை, வறுமையில் முடிந்து விடக்கூடாது என்ற கருத்தில் தமிழ்ப் புலவர்களுக்கு பேரும் ஊரும் அளித்து பெருமைப்படுத்தினர். சிவகங்கை தேவஸ்தான ஆவணங்களில் இருந்து, சிவகங்கைத் தன்னரசின் முதல் மன்னரான சசிவர்ணத் தேவர், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் வழியினரான சிற்றம்பலக் கவிராயருக்கு கி.பி.1732-ல் ஜீவித மான்யமாக, காடன் குளம் என்ற கிராமத்தை தானமளித்தார் எனத் தெரிகிறது. இந்தக் கவிராயரது மைந்தரான மங்கைபாகக் கவிராயருக்கு கி.பி. 1733-ல் மேலக் கொன்னக்குளம் என்ற கிராமத்தை முற்றுட்டாக வழங்கிய செய்தியும் உள்ளது.[1] இவர்களது வழியினர் பின்னர் பிரான்மலையில் வாழ்ந்தனர் என்பதும் அவர்களில் ஒருவரான குழந்தைக் கவிராயரும் இந்த மன்னரால் ஆதரிக்கப்பட்டார் என்ற செய்திகளும் கிடைத்துள்ளன. இந்த மன்னர் மீது வண்டோச்சி மருங்கணைதல் என்ற துறையில் சசிவர்ணர் ஒருதுறைக் கோவை நூல் என்றும் படைக்கப்பட்டுள்ளது.
இந்த மன்னரது மாமனாரான முத்து விசைய ரகுநாத சேதுபதி மன்னர்மீது பண விடுதூது என்ற சிற்றிலக்கியத்தைப்பாடி பரிசிலும் பாராட்டும் பெற்ற மதுரை சொக்கநாதப் புலவரையும் இந்த மன்னர் ஆதரித்துள்ளார். அந்தப் புலவருக்கு ஜிவித மான்யமாக செங்குளம் என்ற ஊரை இந்த புலவருக்கு தானமாக வழங்கி செந்தமிழ் காத்த சேது மரபினர் என்ற புகழுக்குரியவராக விளங்கினார்.
ஆனால் இந்தப் புலவர் பெருமக்கள், இந்த மன்னர் மீது பாடிய தனிப்பாடல்களும், இலக்கியங்களும் இன்று நமக்கு கிடைக்கவில்லை, என்பதுதான் மிகவும் வருத்தப்பட வேண்டியதொன்று. இதற்காக யாரை நொந்து கொள்வது. இந்தப் புலவர் பெருமக்களுக்கு முன்னரும் பொன்னங்கால் அமுத கவிராயர் அழகிய சிற்றம்பலக் கவிராயர், ஆகியோர் திருமலை ரகுநாத சேதுபதி, ரகுநாத கிழவன் சேதுபதி, ஆகிய பெரு மன்னர்களின் அவைக் களத்தை அலங்கரித்து வந்தனர். அன்பளிப்பாக சர்வமான்ய ஊர்களையும் பெற்றனர்.[2]
பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் தமிழின் நிலை தமிழ்நாடு முழுவதும் தளர்வடைந்தது. தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்த நாயக்க மன்னர்கள் (செஞ்சியிலும், தஞ்சையிலும், மதுரையிலும்) அவர்களது தாய் மொழியான தெலுங்கிற்கும், அதன் சார்பு மொழியான சமஸ்கிருதத்திற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் போற்றினர். அரசு நிலையில் மட்டுமல்லாமல், ஆலயங்களிலும் தெலுங்கு இசையும், கூத்தும் இடம் பெற்றன. தமிழ்ப்புலவர்களும் சான்றோர்களும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு நலிந்து வாழ்ந்தனர். 'சனியான தமிழை விட்டுச் சதிராடக் கற்றோமில்லை' எனச் சலித்தனர். 'கல்லைத் தான் மண்ணைத்தான் காய்ச்சித் தான் குடிக்கத்தான், இல்லைத்தான் பசியாமல் இருக்கத்தான் பதுமத்தான் எழுதினார்” என்று பிறவியளித்த பிரம்மனையே வசையாகப் பேசும் நிலையெழுந்தது. செஞ்சி, தஞ்சை, மதுரை, மைசூர் மாறு பாஷை செந்தமிழின் சுவையறிந்து செய்ய மாட்டார் என்று முடிவு செய்த முத்தமிழ்ப் புலவர்கள் மனமொடிந்து வாழ்ந்தனர்.
இவர்களது வாட்டம் தீர்க்கும் நிலையில் ஆங்காங்கு சில வள்ளல்கள் மட்டும் உதவினர். குமரேந்திர காங்கேயன், ஆனூர் சர்க்கரை, மாவைக் கறுப்பன், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை, இரசை மலையப்பிள்ளை, சேத்துர் தலைவர், சீதக்காதி மரைக்காயர் போர் அவர்களில் சிறப்பானவர்கள். ஆனால் இவர்களையெல்லாம் விட தங்களது வரையாத வள்ளற்தன்மையால் தமிழ்ப்புலவர்களை ஈர்த்துக் காத்த தமிழ் வள்ளல்கள் சேதுபதி மன்னர்கள்
"மூவேந்தருமற்று சங்கமும் போய், பதின்மூன்றோடு எட்டுக்,
கோவேந்தருமற்று, மற்றுமொரு கொடையு மற்று
பாவேந்தர் காற்றில் இலவம் பஞ்சாய் பறக்கையிலே
தேவேந்திர தாருவொத்தாய் ரகுநாத செயதுங்கனே"
- என்று பாவேந்தர்கள் அந்த பூவேந்தர்களைப் போற்றத் தொடங்கினர். அந்த மன்னர்கள் மீது இயற்றிய ஒருதுறைக் கோவையும் தளசிங்க மாலையும் தமிழ் செய்த தவப் பயனாக கிடைத்திருக்கின்றன. காலத்தால் பிந்திய இந்தக் கவிராயர்களது படைப்புகள், சேனைதழையாக்கி செங்குருதி நீராக்கி ஆனை மிதித்த அரும்பெரும் வீரம் மணக்கும் செம்மண்ணில், செந்தமிழ் மனத்தின் வாசம் பரப்புவதற்கு இன்று நமக்கு கிடைக்காதது, மிகப்பெரிய இழப்பு என்பதில் ஐயமில்லை.
இந்த மன்னரையடுத்து சிவகங்கையின் அரியணையேறிய இளம் மன்னர் முத்து வடுகநாதர், தந்தைக்கேற்ற தனயனாகத் தமிழ் வளர்த்ததில் வியப்பில்லைதான். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழ்ப் புலவர்களின் கூட்டம் அருகிவிட்டாலும், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயரது வழியினர் தமிழ்ப் பணி தொடர்ந்தது. இந்தக் கவிராயது பேரனான குழந்தைக் கவிராயர் பிரான்மலையில் வாழ்ந்து வந்தார். “தைக்கோடிப் பிறைப்போலத் தமிழ்க்கோடிப் புலவர் வந்தால், திக்கோடியலையாமல் தினங்கோடி பொன்னும் பொருளும் கொடை கொடுக்கும்” இந்த மன்னரை நாடி வந்து பாடி பொன்னும் பொருளும் சுமந்து சென்றார்.
இன்னும் அந்தப் புலவர் நூலில் பொருந்தியுள்ள பொன்னான வரிகள்,
“சந்தமும் கோட்டிச் சவுமிய நாராயணனை
வந்தனை செய் தொப்பமிடும் வண்கையான் - நல்நதுலவு
தென்குளந்தை மேவும் செயசிங்க கோகனக மின்குழந்தை
போலும் விசித்திரவான் - முன்குழந்தை
ஆயப்பருவத்தே ஆம்பொற் சுடிகாக தந்த
கோமனுக்கு நேராம் துரைராயன் - பூமன்
முரசுநிலையிட்டு முடிதரித்தே சேதுக்
கரசு நிலையிட்ட அபயன் - வரசதுரன்
தண்டளவ மாலைச் சசிவர்ண பூபனருள்
கொண்ட உபய குலதீபன் - மண்டலிகன்
ராசபுலி வடுகநாத பெரி யுடையான்
ராசன் இவன் ஆண்மை நாகரிகன்...”
மற்றும், இந்த மன்னரால் போற்றப்பட்டவர் பனசை நகர் என்று போற்றப்படும் நாட்டரசன்கோட்டை. தமிழ்ச் சக்கரவர்த்தி முத்துக் குட்டிப் புலவர். இவரது பூர்விக ஊர் காளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள உருளிக் கோட்டை. இவர் இயல்பாகவே செந்தமிழில் சீர்மிகு பாடல்களை சிரமமின்றிப் பாடும் வரகவியாக இருந்தார். நாட்டரசன்கோட்டையில் திருக்கோயில் கொண்டுள்ள கொற்றவை கண்ணுடையம்மனைப் பற்றிய பள்ளும், அந்த ஊரின் காவல் தெய்வம் கறுப்பனர் பற்றிய பதிகத்துடன் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். இவரது கண்ணுடைய அம்மன் பள்ளு நமது தமிழில் உள்ள மக்கா பள்ளு, முக்கூடற்பள்ளு, திருமலை முருகன் பள்ளு ஆகிய
சிற்றிலக்கியங்களுடன் ஒப்பிடக் கூடிய சிறந்த படைப்பாகும். இந்த நூலின் தொடக்கப் பகுதியில் மன்னர் முத்து வடுகநாதரை அவர் வாழ்த்திப் பாடிய பகுதி:
"வயனிருவர் பரவுமுத்துவடுக நாதேந்த துரை
மார்க்கண்டன் போலிருக்க கூவாய் குயிலே
உயர்குழந்தைத் துரையரசு அரசுகள் குமார வர்க்கம்
உகந்து பெற வசந்தரவே கூவாய்குயிலே
தயவுள்ள மெஞ்ஞான துரை தர்ம சமஸ்தானாபதி
தழைத்தோங்கி வளரவே கூவாய் குயிலே
நயமிகு கண்ணுடையவட்கு இலுப்பைக்குடியூர் கொடுத்த
ராஜசிங்க மிவனென்று கூவாய்குயிலே!"
இந்தப் புலவரது இன்னொரு படைப்பு வசன சம்பிரதாயக் கதை என்ற வசனக்காவியம். தமிழ் மொழியில் உரைநடையில் இயற்றப்பட்ட முதல் நூல் என்ற பெருமை பெற்றது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, தமிழில் உரைநடை நூல், என்ற வகையே இல்லாமல் இருந்தது. எல்லாம் செய்யுளில்தான் அமைந்து இருந்தன. இயற்றப்பட்டன. புலவர்கள் தங்களது விருப்பத்தை வள்ளல்களுக்கு அறிவிக்கும் மடல்கள் கூட, செய்யுளில் இருந்தன. அந்த வகைச் செய்யுள் சீட்டுக் கவி எனப்பட்டது. ஒருவர். மற்றொருவர்க்குச் சொல்லும் செய்திகள் கூட செய்யுள் அமைப்பில்தான். வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம் இந்தக் கடிதங்கள் மடல் அல்லது நிருபச் செய்யுட்கள் எனப்பட்டன. நமது சிவகங்கைச் சீமைப் புலவர்தான் இவைகளுக்கு மாற்றமான புதுமையைப் படைத்தார். வசன நடை அல்லது உரைநடை என்ற இன்றைய இயற்றமிழைக் கண்டுபிடித்தார். இந்த உரைநடையில் வந்த முதல் நூல் வீரமாமுனிவரது "பரமார்த்த குருக்கள் கதை” என்ற படைப்பு என்று எண்ணப்படுகிறது. ஆனால் அதற்கும் முந்தைய முதல் படைப்பு "வசன சம்பிரதாயக் கதை"யாகும். இந்த நூல் முதன் முதலில் பர்மா நாட்டு ரங்கூனில் வெளியிடப்பட்டதால் தமிழ் நாட்டில் அதனைப் பற்றி அறிந்தவர்கள் மிகச் சிலர்.
ஒரு நாள் மகா சிவராத்திரி இரவு. சிவகங்கை மன்னரும் மக்களும் இரவு முழுவதும் விழித்து இருந்து ஒரு கதையினைக் கேட்கின்றனர். அந்தக் கதையை நமது புலவர் சொல்லுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்ப் பெயர், மக்கள் பெயர்களை இணைத்து தல புராணங்களின் கதைக் கருக்களை பெயர்களை ஆங்காங்கே புகுத்தி ஆர்வத்துடன் கேட்கும் முறையில் அவைகளைத் தொகுத்துச் சொல்கிறார். அந்தக் கதையின் இறுதிப் பகுதி:
".... இந்த மட்டும் ராஜ ரீ கர்த்தாக்கள் கிருபையினாலே மேகனன் சேர்வைக்காரன் வகை, இவ்விடத்துக்கு வந்து சம்பூரணமாய் வருஷக் கட்டளை கொடுத்து விசாரித்த முகூர்த்தமாய் நெல்லையப்ப முதலியார், பிரபலமாகி பொன்னம்பல முதலியார்புரம் அபிமான படியினாலே, நாவலோகம் பெருந்தீவிலுண்டான பறகைக்குடயார், தொட்டியபட்டியார், தொழுவூராரர், கொல்லங்குடியார், சுரசனேந்தலார், கட்டார் குடியார், கன்னாரிருப்பு ஜனங்கள், ஈழம்புசையார், துலுக்கானியார், லாடபுரத்தார், பள்ளிமடத்தார், பறைக்குளத்தார், சக்கிலி வயலார், இப்படி அநேகம் வகுப்பு சொல்லப்பட்ட வர்க்கத்து ஜனங்கள் எல்லாம், அவரவர் குடிக்கும் கோத்திரத்துக்கும், கற்பித்திருக்கிற ஜாதித்தொழிலை முயற்சி பண்ணிக்கொண்டு, மேல் வரம்பு கீழ்வரம்பு அறிந்து நடந்து கொண்டு, சகல பாக்கியத்துடன் இருக்கிறார்கள். ஆகையிலே அகண்ட பரிவுகாரான சச்சிதானந்த பரப்பிரும்மாகிய ஆதிபரா பரவஸ்துவான சுவாமி அவர்களுடைய கிருபையினாலே மகாவிஷ்ணு பிம்பமாகப் பூலோகத்திலே வந்து அவதரித்து மனு நீதியோருங்கூட மண்டலாதிபதியும் அடியேங்களை ரகழிக்கின்ற இராஜ வர்க்கங்களும், சுகிர்த பரிபாலன காத்தவலியரான படியினாலேயும் பூலோகத்திலே தேவாலயம், சிவலிங்கப் பிரதிஷ்டை, பிரம்மப் பிரதிஷ்டை, உபநயனங்கள், கன்னிகாதானம், அன்ன சத்திரம், ஆத்திபூஜை, திருப்பணி, தேவதாபிரார்த்தனை, தர்மத்தியானமான தண்ணீர்ப்பந்தல், பிராமண போசனங்கள், துவாதசி கட்டளை இது முதலான நித்தியதானம் நடத்திக் கொண்டு வருகிற படியினாலே...' என நீண்டு முடிகிறது அந்தக் கதை.
இந்தக் கதையினை கேட்டு மகிழ்ந்த மன்னர் முத்து வடுக நாதர், புலவருக்கு சாத்தசேரி என்ற ஊரினை சர்வமான்யமாக வழங்கி உதவினார். அந்த ஊரினை நேரில் சென்று பார்வையிட்டு வந்த புலவர் மன்னரிடம் இந்தப் பாட்டினை பாடினார்.
"கொம்பிரண்டும் இல்லாத மோளைக் கண்மாய்
குளக்காலும் இல்லாத சாத்தசேரி
வம்புபண்ணிப் பெருங்கரையான் வெட்டும்
வாழ்க்கைக்கு உதவாத உவட்டுப் பொட்டல்..."
அதற்கு மேல் புலவரது பாடலைக் கேட்க விரும்பாத மன்னர், உடனே தமது பிரதானியை அழைத்து வளம் மிக்க ஊர் ஒன்றினைப் புலவருக்குப்பட்டயமிட்டு கொடுக்குமாறு செய்தார். திருப்பூவண நாதர் உலா பாடிய கந்தசாமிக் கவிராயரையும் இந்த மன்னர் ஆதரித்துப் போற்றினார்.
இந்த மன்னரை அடுத்து சிவகங்கை அந்நிய ஆக்கிரமிப்புக்கு ஆளாகியது. அடுத்து கி.பி.1780-1801 வரை ராணி வேலு நாச்சியாரும், விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவரும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தனர். பிற துறைகளில் அவர்கள் ஒரளவு சிறந்த பணிகளைச் செய்த போதிலும், அவர்களது ஆட்சிக் காலத்தில் சிவகங்கைச் சீமையில் நிலவிய அரசியல் குழப்பங்களுக்கிடையில் அந்த ஆட்சியாளர்கள் எந்த அளவிற்கு தமிழுக்குத் துணையாக இருந்தனர் என்பதை தெரிவிக்கக் கூடிய ஆவணங்கள் கிடைக்கவில்லை.
அடுத்து கி.பி.1801 இறுதியில் சிவகங்கைச் சீமை தன்னாட்சி நிலையை இழந்து ஜமீன்தாரியாக மாற்றப்பட்டது. இந்த புதிய அரசியல் அமைப்பின் முதல் ஜமீன்தாராகப் பதவி ஏற்றவர் படைமாத்துார் கெளரிவல்லபத் உடையாத் தேவர் கி.பி. 1829-ல் வரை இவரது ஆட்சி நீடித்தது. இவரைப் பற்றிய சில தனிப்பாடல்கள் வழக்கில் உள்ளன. ஆனால் அவைகளைப் பாடிய புலவர்களது பெயர்கள் அறியத் தக்கதாக இல்லை.
தனக்குப் பிறகு பிரளயம் ஏற்படும் என்று பிரஞ்சு நாட்டு மன்னர் பதினான்காவது லூயி தெரிவித்ததாக ஐரோப்பிய வரலாற்றில் ஒரு செய்திக் குறிப்பு உண்டு. அதைப் போல இந்த மன்னர்களது ஏழு மனைவிகளில் மூன்று மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லை. எஞ்சிய நான்கு மனைவிகள் மூலம் ஆறு பெண்கள் வாரிசாக இருந்தனர். என்றாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இறந்த கெளரி வல்லபத் தேவரது உடன்பிறந்த ஒய்யாத் தேவரது மகனான முத்துவடுகனாத தேவர் ஜமீன்தாராக நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக மதுரை, சென்னை லண்டன், ஆகிய நகர்களில் உள்ள நீதிமன்றங்களில் கி.பி.1832 முதல் தாக்கல் செய்யப்பட்ட ஏராளமான உரிமையியல் வழக்குகள், முறையிடு மேல்முறையீடு, இறுதிமுறையிட்டு தீர்ப்புரை என்ற வகையில் கி.பி. 1898 வரை நீடித்த காரணத்தினால் சீமையின் பொருளாதாரமும், சீமையின் உரிமை கொண்டாடியவர்களது வசதியும் மிகவும் பாதிக்கப்பட்டது. எது எப்படி இருந்தாலும் ஆண்டு தோறும் கும்பெனி அரசுக்கு பேஷ்குஷ் தொகையாக ரூ. 2.58,640,14,00 செலுத்தியாக வேண்டும். ஜமீன்தார் உரிமை யாருக்கு என்ற வினாவிற்கு உறுதி சொல்லக் கூடிய நீதிமன்றத் தீர்ப்புகள் மாறி மாறி வெளி வந்துகொண்டிருந்ததால் குடிகளிடமிருந்து பெற வேண்டிய தீர்வை வசூல் சரிவர நடைபெறவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிவகங்கை ஜமீன்தாரியைத் தனியார்களிடம் குத்தகைக்கு விடும் நிலை ஏற்பட்டது. கி.பி.1864 முதல் 1877 வரை ஜமீன்தாரியாக இருந்த ராணி காத்தமநாச்சியார், கும்பெனியாருக்குத்தவணை தொகையை (பேஷ்குஷ் தொகையைச் செலுத்தும் பிரச்சனையைச் சமாளிக்க திரு கிருஷ்ண சாமி செட்டிக்கு ஜமீன்தாரியை குத்தகைக்கு 1.6.1877-ல் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.[3]
இரண்டாவது முறையாக சிவகங்கை ஜமீன்தாரி 23.5.1887-ல் ஐரோப்பிய பிரமுகர்களான ராபர்ட் கோர்டன், ஜெ.ரெயான், இ.எப்.ஸ்ரானாக் என்ற மூவருக்கும் ஜமீன்தாரி, பெரிய சாமித் தேவர் எனற உடையனத் தேவரால் இருபத்து இரண்டு ஆண்டுகள் தவனை குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.[4] மேலே கண்ட இரு ஜமீன்தார்களுக்கும் முன்னர். கி.பி.1859-ல் ஜமீன்தாரான போதகுரு சாமித் தேவர் கலைகள், இலக்கியங்களில் சிறந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். பழுத்த மரம் நோக்கித்தானே பறவைகள் வரும். இவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து உதவினார் எனத் தெரிய வருகிறது. நீல வானிலே நெகிழ்ந்த நிற மாற்றம் போல அமைந்த இந்த இளம் ஜமீன்தாரது தமிழ்ப்பணிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்து இருப்பது இவர் மீது பாடப்பட்டு உள்ள காதல் இலக்கியம். "மன்னர் போதகுரு பார்த்திபன் காதல்" என்ற இனிய சிற்றிலக்கியம். காதல் சுவையை விட தமிழ்ச் சுவை ததும்பி வழியும் தமிழ் படைப்பு. சிவகங்கை அரண்மனையில் அரங்கேறிய கடைசித் தமிழ் இலக்கியம் அதுவே.
இதனைப் போன்றே சிவகங்கைச் ஜமீன்தார்களது ஆட்சியின் பொழுது, "சிவகங்கை வேங்கைக் கும்மி" என்று சிற்றிலக்கியம் ஒன்றும் இயற்றப்பட்டதாக தெரிகிறது.