சீர்மிகு சிவகங்கைச் சீமை/வேண்டும் விடுதலை எங்கும்

விக்கிமூலம் இலிருந்து

12. வேண்டும் விடுதலை எங்கும்



இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் ஆங்காங்கு பிரிடிஷ் அரசினருக்கு எதிரான பல கிளர்ச்சிகள் துளிர்விட்டன. அவைகளில் சில தனி நபர்களது பயங்கரச் செயல்களாக பரிமளித்தன. தமிழ்நாட்டில் தென்காசி ரயில் நிலையத்தில் கலைக்டர் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியினை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆனால் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி இந்திய தேசிய இயக்கத்தின் தலைமையை ஏற்றதும், இத்தகைய வன்முறையில் இருந்து விலகி மக்கள் கட்டுப்பாட்டுடனும், ஒற்றுமையுடனும் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளும் பண்பாடு ஏற்பட்டது.

இதற்குச் சிறந்த சான்றாக கி.பி.1920-ல் நடந்த கிலாபத் இயக்கம். இந்த இயக்கம் நாட்டின் சிறுபான்மையரில் பெரும்பான்மையரான இஸ்லாமியர்களையும், அணைத்தவாறு நாடுதழுவிய பேரியக்கமாக அந்தக் கிளர்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி வடக்கே இருந்து முகம்மது அலி சகோதரர்கள் தமிழ்நாட்டில் சுற்றுபயணம் செய்துஆதரவு திரட்டினர். அப்பொழுது அவர்கள் சிவகங்கைச் சீமையில், இளையான்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஊர்களில் பொதுக் கூட்டங்களில் உரையாற்றினர். பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளுக்கு எதிராக வந்தேமாதரம், அல்லாஹூ அக்பர் என்ற கோஷங்கள் எங்கும் எதிரொலித்தன. என்றாலும் அதே ஆண்டு, தர்மபுரியில் இருந்து வந்த சுப்பிரமணிய சிவா, காரைக்குடி மேல ஊரணிக் கரையில் பாரத மாதா ஆசிரமத்தை அமைத்து செயல்பட்ட பொழுதுதான் சிவகங்கைச் சீமை எங்கும் இந்திய தேசிய காங்கிரஸ் பற்றியும், காந்தியடிகள் பற்றியும் மக்கள் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர். பத்திரிகைகள், வானொலி போன்ற விளம்பர சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில், தியாகி சுப்பிரமணிய சிவாவும் அவரது நண்பர்களும் கால்நடையாக பல ஊர்களுக்கும் சென்று காங்கிரஸ் இயக்கம் பற்றிய பிரசாரத்தை மேற்கொண்டனர்.

பிராம்மணர், நகரத்தார், நாட்டார், அம்பலக்காரர், தேவர், உடையார், ஆதி திராவிடர், இஸ்லாமியர், கிறித்தவர் என்ற அனைத்து சமூகத்தினரும், விவசாயிகள் நெசவாளர்கள், வணிகர், பொற்கொல்லர் என்ற பல்வேறு தொழில்துறையினரும் நாட்டுப் பற்றுடன் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு தொண்டாற்றினர். வெள்ளையரது ஆதிக்கத்தினின்றும் நாட்டை விடுதலை பெறச் செய்வதற்கு பாடுபட உறுதிபூண்டனர். கி.பி. 1923-ல் சுப்பிரமணிய சிவா, ராஜாஜி ஆகியோர் இளையான்குடி, மானாமதுரை போன்ற ஊர்களில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அமராவதி புதுர் ராய.சொக்கலிங்கன் காரைக்குடி சொ.முருகப்பா, சா.கணேசன் ஆகிய நகரத்தர் இளைஞர்கள் கி.பி.1925-ல் இந்திய தேசிய காங்கிரசின் தொண்டர்களாக மாறினர்.

அடுத்து தமிழக சுற்றுப் பயணத்தின் பொழுது காந்தியடிகள் சிவகங்கைச் சீமைக்கும் வருகை தந்தார். திருப்புத்துார் காரைக்குடி தேவகோட்டை ஆகிய ஊர்களில் மக்கள் பெருந்திரளாகக் கூடி வரவேற்றனர் வழியில் சிராவயல் கிராமத்தில் திரு. ப.ஜீவானந்தம், திரு. பொ.திரிகூட சுந்தரம் பிள்ளையும் நடத்தி வந்த ஏழை மாணவர் பள்ளிக்கும் வருகை தந்து திரு. ஜீவானந்தம் அவர்களது தொண்டைப் பாராட்டினார். காந்தியடிகளது பயணம் சுருக்கமாக இருந்தது. மக்களது மனத்தில் இந்தியக் காங்கிரசின் இயக்கம் பற்றிய அழுத்தமான தாக்கத்தையும் ஏற்படுத்தியது. கதர்துணி நூற்பு, கதராடை அணிதல், மதுவிலக்கு போன்ற கிராம நிர்மாணத்திட்டங்களில் மிகவும் ஒன்றியவர்களாக சிவகங்கைச் சீமை மக்கள் மாறினர்.

தொடர்ந்து சீமையெங்கும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒத்துழையாமை இயக்கம், அதனை அஹிம்சை வழியில் நடத்திக் காண்பிப்பது பற்றிய பிரச்சாரம் செய்தார். காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்று சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டு ஏறவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடக்கமாக கொண்டு நாடு முழுவதும் மக்கள் சினந்து எழுந்தனர். பக்கத்தில் உள்ள வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடக்க இருந்த உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சிவகங்கையில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் திருச்சியருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் 1931-ல் இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்த அந்நிய துணி எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல், தனிநபர் சத்தியாக்கிரகம் ஆகிய திட்டங்களில் கணிசமான தொகையினர் கலந்து கொண்டு சிறைகளை நிரப்பினர். தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றமுதல் நகரத்தார் என்ற பெருமை அமராவதி புதுரர் ராய.சொக்கலிங்கன்அவர்களுக்கு 9.9.1932-ம் தேதி கிடைத்தது. இதனைப் போன்றே, அந்நியத் துணிமறுப்பு, இயக்கத்தில் சிறப்பான பங்கு கொண்ட பெருமை, திருப்புத்துார் முஸ்லிம் பெருமக்களைச்சாரும். திருப்புத்துர் மற்றும் காரைக்குடி ஆகிய ஊர்களில் அந்நிய நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் துணிக்கடைகள் இல்லாததால், திருப்புத்தூர் முஸ்லிம்கள், ஒருகுழுவாக மதுரைக்கு சென்று அங்குள்ள பெரிய ஜவுளி நிறுவனமான ஹாஜி. மூஸா.சேட் ஜவுளி கடை முன்னர் மறியல் நடத்தினர். சிவகங்கை நீதிமன்றத்தில் பணிபுரிந்த நான்கு அலுவலர்கள் தங்களது பணிகளை துறந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.

சிவகங்கை, காரைக்குடி, இளையான்குடி, புதுவயல் ஆகிய ஊர்களில் உள்ள கள்ளுக்கடை, சாராயக்கடை வாயில்களில் நின்று தேசியத் தொண்டர்கள் மறியல் செய்தனர். மதுவினை வாங்கி அருந்த வேண்டாம் என குடிகாரர்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் காவல்துறையினர் தொண்டர்களை நையப்புடைத்ததுடன் சிறைகளில் தள்ளி அடைத்தனர். இந்த அகிம்சா போராட்டம் பொதுமக்களிடத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தக் கள்ளுக்கடை மறியல் போரில் கே.வி.சேதுராமச்சந்திரன், கே.சுந்தரராஜன், கே.இராமசாமி, பி.சுப்பிரமணி, அ.சதாசிவம், மு.மாணிக்கம், இ.இபுராகிம், எஸ்.இபுராகிம் கனி, முகைதீன் பாய், பாவலர் மூக்கையா, தொண்டர் நடராஜன், சே.சுப்பராமன், வக்கீல் இராமனுஜம் ஐயங்கார், எம்.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் பில்லுர் சித்தாண்டி உடையநாதபுரம் மருதப்பக் கோனார், கணபதி சேர்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் காந்தியடிகள் கி.பி.1934-ல் சிவகங்கைப் பகுதிக்குச் சுற்றுப் பயணமாக வந்தார். பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன் அவர்களது விருந்தாளியாக பாகனேரியில் தங்கினார். சிவகங்கையில் கோகலே மன்றம், அருகில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்பொழுது அவர் மீது வீசப்பட்ட சிறிய கல் ஒன்றினை ரூ.225/-க்கு மாணிக்கம் சேர்வை என்ற ஒரு தேசபக்தர் ஏலத்திற்கு எடுத்தார். அடுத்து, ஏழை மாணவர் இலவச விடுதியினை சிவகங்கையில் நடத்தி வருவதுடன் அதில் அரிசன மாணவர்களையும் சேர்த்து உதவி வருகின்ற சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்க ராஜா அவர்களையும், அரிசனங்களுக்கு தொண்டு செய்து வரும் நாகு ஆசாரி என்பவரையும் காந்தியடிகள் பாராட்டினார். இளையான்குடி பகுதி மக்கள் காந்தியடிகளது கிராம நிர்மானத் திட்டங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டனர். கருசா. காதர்பாட்சா ராவுத்தர் என்பவர் 233 கிராமங்களில் கிராமக் காங்கிரஸ் கிளைகளை ஏற்படுத்தியதுடன், பெண்கள் கதர் நூற்புத் திட்டத்தை பெருமளவில் கைக் கொள்ளுமாறு செய்தார். அத்துடன் இளையான்குடியில் கிராம விவசாயிகள் மாநாடு ஒன்றினையும் கூட்டினார். இந்த மாநாட்டிற்கு ஆச்சார்யா.என்.ஜி. ரெங்கா தலைமை தாங்கினார்.

இதனை தொடர்ந்து கி.பி.1938-ல் இளையான்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது முயற்சியில் அரசியல் மாநாடு ஒன்றும் கூட்டப் பெற்றது. கதர் நூற்பில் விரைவாகவும் கூடுதலாகவும் நூற்கும் முறையில் புதிய அம்பர்சர்க்காகண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து, இளையான்குடி பாட்சா ராவுத்தர் என்பவர் தமது சொந்த செலவில் கோவைக்கு நெசவாளி ஒருவரை அனுப்பிவைத்து அம்பர்சர்க்காவில் பயிற்சி பெறச்செய்யுமாறு உதவி, அவர் மூலம் அந்த வட்டார மக்களுக்கு அம்பர் சர்க்கா பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்தார். தேவகோட்டையில் காங்கிரஸ் தொண்டர்களது மாநாடும் இந்த ஆண்டில் நடத்தப்பெற்றது.

1939-ம் வருடம் ஜெர்மன் நாட்டு பாசிஸ்ட் சர்வாதிகாரி ஹிட்லர் பக்கத்து நாடான போலந்து நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டதுடன் விரைவில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளையும் பிடித்தது, இங்கிலாந்து ஜெர்மனி நாட்டின் மீது போர்ப் பிரகடனம் செய்தது. தனது அணியில் அமெரிக்க ஆஸ்திரேலிய அரசுகளையும் இணைத்துக் கொண்டது. இங்கிலாந்து நாட்டின் இந்திய அரசுப் பிரதிநிதியான வைஸ்ராய், இந்தியாவும், இங்கிலாந்தின் அங்கம் என்ற முறையில் அந்த இரண்டாவது உலகப் போரில் இணைந்து விட்டதாக அறிவிக்கும் சில போர்க் கால நடவடிக்கைகளை 24.9.1939-ல் அறிவித்தார். போர்க்கால நடவடிக்கைகளைச் செம்மையாக செயல்படுத்த இந்திய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தினார். இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் அப்பொழுது இயங்கி வந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை செயலிழக்கச் செய்தார்.

இதனைக் கண்டித்து இந்திய தேசியக் காங்கிரஸின் அமைச்சரவைகள் அனைத்தும் பதவி விலகின. ஆத்திரமடைந்த மக்களையும் ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் செய்த பாட்டாளிகளையும் அரசாங்கம் சிறைகளில் அடைத்தனர். காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார். சிவகங்கைச் சீமையெங்கும் 1940-41-ல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் டி.புதுார் பொ.சுப்பிரமணியன், சிவகங்கை கே.இராமசாமி, பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன், மிளகனூர் சாமியார் என்ற இராமசாமி, மானாமதுரை காசி, திருப்புவனம் அயோத்தி வில்லாயுதம், ஒரியூர் சொக்கலிங்கம் அம்பலம், காரைக்குடி அபிசினியா நாச்சியப்பன், தேவகோட்டை டி.ஆர்.அருணாசலம் ஆகியோர். "வங்கியில் பணம் போடாதே, பட்டாளத்தில் சேராதே, யுத்த நிதிக்கு பணம் கொடுக்காதே" என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. இதனால் பீதியடைந்த ஆங்கில அரசு மக்களது தலைவர்களான இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவர்களது ஒத்துழைப்பை பெறுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் நாட்டு மக்கள் தன்னாட்சி பெறுவதற்கான அடிப்படை எதுவும் அவைகளில் இல்லை. ஆதலால் 8.8.1942-ல் பம்பாயில் மெளலான அபுல் கலாம் ஆசாத் தலைமையில் கூடிய தேசியக் காங்கிரஸ் 'வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானத்தை பகிரங்கமாக அறிவித்தது. ஆத்திரமடைந்த அரசாங்கம் காந்தியடிகள், அபுல் கலாம் ஆஸாத், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத் ஆகிய மக்கள் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் நாடு முழுவதம் கொந்தளித்தது.

சிவகங்கைச் சீமையில் இதன் எதிரொலி மிகவும் தீவிரமாக இருந்தது. சிவகங்கை நகரில் 9.8.1942-ம் தேதியன்று முழு கடையடைப்பு நடந்தது. அடுத்து செய்ய வேண்டிய அரசு எதிர்ப்பு, நடவடிக்கைகள் பற்றிய திட்டம் தீட்டிய ஊழியர் திரு. கே.வி.சேதுராமச்சந்திரனும் மற்றும் தொண்டர்களும் அன்று இரவு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பல ஊழியர்கள் கைது. என்றாலும் ஆங்காங்கு வெள்ளை அரசுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழுமாறும் இந்திய அரசுக்கு எதிராக வெளியீடுகளும், சுற்றறிக்கைகளும் மக்களிடையே பரப்பப்பட்டு மக்களை அந்நிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்பொழுது சிவகங்கை ஜமீன்தார் கோர்ட் ஆப் வார்டு பொறுப்பில் இயங்கியது. இளைஞர்களாக இருந்த ஜமீன்தாரரது மக்கள் சண்முக ராஜாவும் சுப்பிரமணியராஜாவும் தேசியத் தொண்டர்களுக்கு மறைமுகமாக பல உதவிகளை அளித்து வந்தனர். ஜமீன்தாரது அலுவலக சைக்லோஸ்டைல் அச்சுயந்திரமும், அரண்மனை ரிவால்வார் ஒன்றும் தேசியத் தொண்டர்கள் பயன்பாட்டில் இருந்தன என்றால், மேலும் விரிவாக அவர்களது உதவிகள் பற்றி வரைய வேண்டியது இல்லையல்லவா!

இவ்விதம் சிவகங்கையில் உருவெடுத்த புரட்சி இயக்கம் காரைக்குடி, தேவகோட்டை, திருவேகம்பத்து ஆகிய ஊர்களில் தீவிர நிலைகளை அடைந்தன. 17.8.1942-ல் தொண்டர்கள் மக்களைத் திரட்டி அரசாங்க எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தினர். இவர்கள் மீது போலீசார் சுட்டனர். காரைக்குடியில் ஒருவர் உயிர்துறந்தார். தேவகோட்டையில் கிருஷ்ணன் தர்மராஜன் என்ற இரு இளைஞர்களும், வள்ளியம்மை என்ற மூதாட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேவகோட்டை நீதிமன்றம், திருவேகம்பத்து தாலுகா கச்சேரி, ஜமீன் களஞ்சியம் ஆகியவைகளுக்கு திவைக்கப்பட்டன. தொண்டர்கள் 24.8.1942-ம் தேதி பனங்குடி நடராஜபுரம் ரயில் நிலையத்திற்கு தீ வைத்து தகர்த்தனர். இந்த நிகழ்வுகளை அடுத்து தேவகோட்டை வக்கீல்கள் முகுந்தராஜ ஐயங்கார், முத்துச் சாமி, வல்லத்தரசு ஆகியோரும், வளமாவூர் இராமகிருஷ்ணத் தேவர், திருநாவுக்கரசு செட்டியார், ஆர்.வி.சுவாமிநாதன், இரவிசேரி நடராஜன், சின்ன அண்ணாமலை, தியாகி கண்ணுச்சாமி அம்பலம் ஆகியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அக்கிரம நடவடிக்கைகளால் ஆறுதல் அடையாத அன்றைய அரசாங்கம், தேசியத் தொண்டர்களான சிவகங்கை கே.இராமசாமி, சிவகங்கை பி.சுப்ரமணியன் ஆகியவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுமாறு உத்திரவிட்டது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பெண்மணிகளிடம் மிருகத்தனமாக நடந்து பெண்மைக்கு பழியும் பாதகமும் சேர்க்கும் பணியில் போலீஸ் ஈடுபட்டது. ஊர்கள் தோறும் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, ஊர்மக்களிடம் மொத்தமாக கூட்டு அபராதத் தொகை என்ற தண்டத் தீர்வையை வசூலித்தது. இப்படி வசூலிக்கப்பட்டது ரூ.2,93.000/- எனக் குறிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் வேறு எங்குமே நடந்திராத வகையில் இராமநாதபுரம் சீமை, திருவாடனைக்கு அடுத்து சிவகங்கைச் சீமையில்தான் இந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகவும் தீவிரமான பொது மக்களது ஆவேசம் மிக்க இயக்கமாக பரிமளித்துள்ளது. இந்த சீமை மக்கள் நாட்டுப்பற்றுடனும், வீரமறவரது வழியில் நின்று தேசத் தொண்டிற்கு தங்களைப் பரிபூரணமாக அர்ப்பணித்து இருப்பதை வரலாற்றில் காண முடிகிறது.

இதந்தரு மனையினிங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திருவிரண்டுமாறி பழி மிகுத்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விழைந்தெமை அழித்திட்டாலும், சுதந்திர தேவி நின்னைத் தொழுவதை மறக்கிலேன் என்று பாடி மறைந்த பாரதியின் வாக்கினுக்குரிய வீரவடிவங்களாக வரலாறு படைத்து வாழ்ந்து மறைந்தவர்கள் இந்தச் சீமை மக்கள். நமது நாட்டு விடுதலைக்குப் போராடிய இந்த தியாகிகளில் சிலர் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு நமது நன்றி நிறைந்த வணக்கங்கள் என்றும் உரியது.