சீவகசிந்தாமணி- பதிகம்

விக்கிமூலம் இலிருந்து
(கடவுள் வாழ்த்து-சித்தசரணம்)


மூவாமுதலா[தொகு]

மூவா முதலா வுலகம்மொரு மூன்று மேத்தத்
தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதி்ச் செல்வ னென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே. (01)


(அருகசரணம்)

செம்பொன்வரை[தொகு]

செம்பொன் வரைமேற் பசும்பொன்னெழுத் திட்ட தேபோல்
அம்பொன் பிதிர்வின் மறுவாயிரத் தெட்ட ணிந்து
வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு மூர்த்தி விண்ணோர்
அம்பொன் முடிமே லடித்தாமரை சென்னி வைப்பாம். (02)


(தம்மசரணம், சாதுசரணம்)

பன்மாண்[தொகு]

பன்மாண் குணங்கட் கிடனாய்ப்பகை நண்பொடில்லான்
தொன்மாண் பமைந்த புனைநல்லறந் துன்னி நின்ற
சொன்மாண் பமைந்த குழுவின்சரண் சென்று தொக்க
நன்மாண்பு பெற்றே னிதுநாட்டுதன் மாண்பு பெற்றேன். (03)


(அவையடக்கம்)

கற்பாலுமிழ்ந்த[தொகு]

கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாது விட்டால்
நற்பா லழியு நகைவெண்மதி போனி றைந்த
சொற்பா லுமிழ்ந்த மறுவும்மதி யாற்க ழூஉவிப்
பொற்பா விழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார். (04)
(இதுவும்அது)

முந்நீ்ர்ப்[தொகு]

முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கு முத்தும்
அந்நீ ருவர்க்கு மெனின்யாரவை நீக்கு கிற்பார்
இந்நீர வென்சொற் பழுதாயினுங் கொள்ப வன்றே
பொய்ந்நீர வல்லாப் பொருளால்விண் புகுது மென்பார். (05)


பதிகம்

(சீவகன்)

மீனேறுயர்த்த[தொகு]

மீனேறுயர்த்த கொடிவேந்தனை வென்ற பொற்பிற்
றானே றனையா னுளன்சீவக சாமி யென்பான்
வானேற நீண்ட புகழான்சரி தம்மி தன்னைத்
தேனூற நின்று தெருண்டாரவை செப்ப லுற்றேன். (06)


(சச்சந்தன்,விசயை)

கோடாத[தொகு]

கோடாத செங்கோற் குளிர்வெண்குடைக் கோதை வெள்வேல்
ஓடாத தானை யுருமுக்குர லோடை யானை
வாடாத வென்றி மிகுசச்சந்த னென்ப மன்னன்
வீடாத கற்பி னவன்றேவி விசயை யென்பாள். (07)


சேந்தொத்தலர்ந்த[தொகு]

சேந்தொத் தலர்ந்த செழுந்தாமரை யன்ன வாட்கட்
பூந்தொத் தலர்ந்த பசும்பொற்கொடி யன்ன பொற்பின்
ஏந்தொத் தலர்ந்த முலையின்னமிர் தன்ன சாயல்
வேந்தற் கமுதாய் விளையாடுதற் கேது வாமே. (08)


கல்லார்மணி[தொகு]

கல்லார் மணிப்பூ ணவன்காமங் கனைந்து கன்றிச்
சொல்லாறு கேளா னனிசூ்ழ்ச்சியிற் றோற்ற வாறும்
புல்லார் புகலப் பொறிமஞ்ஞையிற் றேவி போகிச்
செல்லா றிழுக்கிச் சுடுகாடவள் சேர்ந்த வாறும் (10)


நாளுற்று[தொகு]

நாளுற்று நம்பி பிறந்தான்றிசை பத்து நந்தத்
தோளுற்றொர் தெய்வந் துணையாய்த்துயர் தீர்த்த வாறும்
கோளுற்ற கோன்போ லவன்கொண்டு வளர்த்த வாறும்
வாளுற்ற கண்ணான் மகன்வாழ்கென நோற்ற வாறும் (11)


நெஞ்சம்புணை[தொகு]

நெஞ்சம் புணையாக் கலைமாக்கட னீந்தி யாங்கே
வஞ்சம் மறவர் நிரைவள்ளல் விடுத்த வாறும்
விஞ்சைக் கிறைவன் மகள்வீணையிற் றோற்ற வாறும்
நஞ்சுற்ற காம நனிநாகரிற் றுய்த்த வாறும் (12)


முந்நீர்ப்படு[தொகு]

முந்நீர்ப் படுசங் கலறம்முர சார்ப்ப மூதூர்ச்
செந்நீர்க் கடியின் விழவாட்டினுட் டேங்கொள் சுண்ணம்
மைந்நீர் நெடுங்க ணிருமங்கையர் தம்முண் மாறாய்
இந்நீர்ப் படியே மிவைதோற்றன மென்ற வாறும் (13)


சுண்ணம்முடை[தொகு]

சுண்ணம் முடைந்து சுரமஞசரி சோர்ந்து தோழி
வண்ணந் நெடுங்கட் குணமாலையை வைது மாறிப்
புண்மேற் புடையி்ற் புகைந்தாணுரு வியாது நோக்கான்
கண்ணோக் குடைந்து கடிமாட மடைந்த வாறும் (14)


பொன்றுஞ்சு[தொகு]

பொன்றுஞ்சு மார்பன் புனலாட்டிடைப் புன்க ணெய்தி
நின்றெஞ்சு கின்ற ஞமலிக்கமிர் தீந்த வாறும்
அன்றைப் பகலே குணமாலையை யச்சு றுத்த
வென்றிக் களிற்றை விரிதாரவன் வென்ற வாறும் (15)


தேனூறு[தொகு]

தேனூறு தீஞ்சொற் குணமாலையைச் சேர்ந்த வாறும்
கோனூறு செய்வான் கருதிச்சிறை கொண்ட வாறும்
வானா றிழிந்து மழைமின்னென வந்தொர் தேவன்
ஊனா றொளிவே லுரவோற்கொண் டெழுந்த வாறும் (16)


தேங்காத[தொகு]

தேங்காத மள்ளர் திரடோளிணை சிக்க யாத்த
பூங்கச்சு நீக்கிப் பொறிமாண்கல நல்ல சேர்த்தி
நீங்காத காத லுடையாய்நினைக் கென்று பின்னும்
பாங்காய விஞ்சை பணித்தாங்கு விடுத்த வாறும் ()


பைந்நாகப் பள்ளி[தொகு]

பைந்தாகப் பள்ளி மணிவணணனிற் பாயல் கொண்டு
கைந்நாகந் துஞ்சுங் கமழ்காந்தளஞ் சாரல் போகி
மைந்நாக வேலி மலிபல்லவ தேய நண்ணிக்
கொய்ந்நாகச் சோலைக் கொடியந்நகர் புக்க வாறும் ()

அத்தம்மனைய[தொகு]

அத்தம் மனைய களிற்றந்நகர் மன்னன் மஙகை
முத்தம் முரிஞ்சு முகிழ்மென்முலை மின்ன னாளைப்
பைத்தங்கொர் நாகம் பனிமாமதி யென்று தீண்டச்
சித்தங குழையற் கெனத்தீர்த்தவட் சேர்ந்த வாறும். ()


பொற்பூண்சுமந்த[தொகு]

பொற்பூண் சுமந்த புணர்மென்முலைக் கோடு போழ
நற்பூங் கழலா னிருதிங்க ணயந்த வாறும்
கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான்
வெற்பூ டறுத்து விரைவின்னெறிக் கொண்ட வாறும் ()


தள்ளாதசும்மை[தொகு]

தள்ளாத சும்மை மிகுதக்கநன் னாடு நண்ணி
விள்ளா விழுச்சீர் வணிகன்மகள் வேற்க ணோக்கம்
உள்ளாவி விட்ட வுயிரொன்றொத் துறைந்த வாறும்
கள்ளாவி நாறுங் கமழ்கோதையிற் போய வாறும். ()


இன்னீரமிர்தன்[தொகு]

இன்னீ ரமிர்தன் னவள்கண்ணிணை மாரி கற்பப்
பொன்னூர் கழலான் பொழிமாமழைக் காடு போகி
மின்னீர வெள்வே லவன்மத்திம தேய மன்னன்
கொன்னூர் கொடுவெஞ் சிலைகண்டெதிர் கொண்ட வாறும். ()


திண்டேரரசர்[தொகு]

திண்டே ரரசர் திறற்சிங்கங்கள் வில்லும் வாளும்
கண்டாங் குவந்து கடிபெய்திவட் காத்து மென்று
கொண்டார் குடங்கை யளவேயுள கண்ணினாளைப்
புண்டாங் கெரிவே லிளையோற்குப் புணர்த்த வாறும் ()


மதியங்கெடுத்த[தொகு]

மதியங் கெடுத்த வயமீனெனத் தம்பி மாழாந்
துதிதற் குரியாள் பணியா லுடனாய வாறும்
நிதியின் னெறியி னவன்றோழர் நிரந்த வாறும்
பதியின் னகன்று பயந்தாளைப் பணிந்த வாறும் ()


கண்வாளறுக்குங்[தொகு]

கண்வா ளறுக்குங் கமழ்தாரவன் றாயொ டெண்ணி
விண்வா ளறு்க்கு நகர்வீதி புகுந்த வாறும்
மண்மேல் விளக்காய் வரத்திற்பிறந் தாளொர் கன்னிப்
பெண்ணா ரமிர்தின் பெருவாரியுட் பட்ட வாறும். ()


துஞ்சாமணிப்[தொகு]

துஞ்சாமணிப்பூட் சுரமஞ்சரி யென்னு நாமத்
தஞ்சாயல் பூத்த வகிலார்துகி லாய்பொ னல்குல்
எஞ்சாத வின்பக் கொடிதாழ்த்ததும் பன்றி யெய்து
நஞ்சூறு வேலான் பகைநாமறக் கொன்ற வாறும். ()


புண்டோய்த்[தொகு]

புண்டோய்த் தெடுத்த பொருவேலெனச் சேந்து நீண்ட
கண்போன்ற மாமன் மகள்கண்மணிப் பாவை யன்ன
பெண்பா லமிர்தி னலம்பெற்றதும் பொற்பச் செங்கோல்
தண்பான் மதிதோய் குடைதண்ணிழற் பாய வாறும். ()


திறைமன்ன[தொகு]

திறைமன்ன ருய்ப்பத் திருநிற்பச்செங் கோன டப்பக்
குறைவின்றிக் கொற்ற முயரத்தெவ் வர்தேர் பணிய
உறைகின்ற காலத் தறங்கேட்டுரு முற்ற பாம்பின்
அறிவன் னடிக்கீ ழரசஞ்சித் துறந்த வாறும். ()


கோணைக்களிற்[தொகு]

கோணைக் களிற்றுக் கொடித்தேரிவு ளிக்க டல்சூழ்
வாண்மொய்த்த தானை யவன்றம்பியுந் தோழன் மாரும்
பூண்மொய்த்த பொம்மன் முலையாரும் புலந்து றப்ப
வீணைக் கிழவன் விருந்தார்கதிச் சென்ற வாறும். ()


தேன்வாயுமிழ்ந்த[தொகு]

தேன்வா யுமிழ்ந்த வமிர்துண்டவன் போன்று செல்வன்
வான்வாய் வணக்கு நலத்தார்முலைப் போகம் வேண்டான்
ஏனோரு மேத்த வவனெய்திய வின்ப வெள்ளம்
ஈனோர்க் குரைப்பாம் பதிகத்து ளியன்ற வாறே. ()


சீவகசிந்தாமணிக் காப்பியப் பதிகம் முற்றும்[தொகு]

பார்க்க:[தொகு]

சீவகசிந்தாமணி
1. நாமகள் இலம்பகம்
2. கோவிந்தையார் இலம்பகம்
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
4. குணமாலையார் இலம்பகம்
5. பதுமையார் இலம்பகம்
6. கேமசரியார் இலம்பகம்
7. கனகமாலையார் இலம்பகம்
8. விமலையார் இலம்பகம்
9. சுரமஞ்சரியார் இலம்பகம்
10. மண்மகள் இலம்பகம்
11. பூமகள் இலம்பகம்
12. இலக்கணையார் இலம்பகம்
13. முத்தியிலம்பகம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=சீவகசிந்தாமணி-_பதிகம்&oldid=22613" இலிருந்து மீள்விக்கப்பட்டது