உள்ளடக்கத்துக்குச் செல்

சுப்பிரமணியப் புலவர் பாடல்

விக்கிமூலம் இலிருந்து
விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:
சுப்பிரமணியப் புலவர் பாடல்
பாடல் 1
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 117 & 118
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

பாடல்

[தொகு]

வாரிட்டு விம்மிப் புடைத்திறுகி யிளகி மணிமார்பிடம் எலாம் கவர்ந்து
வட்டமிட்டு அடியிட்டு நாளுக்கு நாண்மேல் வளர்ந்து பூரித்து முத்து
மாலையிட்டு அறுமாந்து பட்டவர்த்தன யானை மத்தகத்தோடு எதிர்த்து
வாதிட்டு மல்லிகைப் பூச்செண்டினைத் தினம் வாட்டப் படுத்தி வரையைப்
போரிட்டு மைந்தர் கண்மனஞ் சூறையிட்டு மேற்புளகித்து வச்சிராத் தப்
புதுச்செப்பினைத் தோழமைக் கொண்டு பொன்னினைப் பொடியா வராவி மீதிற்
பொட்டிட்ட தென்னவே தேமல் படர்ந்து செம்பொன் சரிகை வேலையிட்டுப்
புனைதரு ரவிக்கையை யிறுக்கிக் கிழித்துப் புறப்பட்டு வாசனைப்பூந்
தாரிட்டு வரவரப் பளபளப்பாகி உயர் தங்கக் கிணத்தை யொத்துச்
சந்தனம் புநுகு கஸ்தூரி கர்ப்பூரம் சவாது குங்குமம் அணிந்து
சந்த்ரகாவிச் சேலைவல்ல வாட்டுக் குட்டதும்பி யண்ணாந் திடையினிற்
தாங்காதெனக் கனத்தோங்கி மன்மதனும் சலாமிட்டு நிற்கவுந்தான்
சீரிட்டு நின்று தந்தலை வணங்காமல் திரண்ட பூண்முலைகள் உன்றன்
திருமார்பில் அணைய வோரூசி மேலே தவம் செய்கின்றது ஒக்கும் என்னுஞ்
சிறுரோம ரேகையாள் வந்தாள் பராக்கென்று சேவித்து நிற்கிறாள் பார்
திகழ்வடுக நாததுரை மெச்சுப்ரதானி சிவசுப்பிர மண்ணிய ராசனே. (1)

குறிப்புரை

[தொகு]
வடுகதுரை எனப் போற்றப்பட்டவன் ஒரு வெள்ளைக்காரத் துரை. அவனால் போற்றப்பட்டவன் சிவசுப்பிரமணியராசன் என்னும் ஆட்சியாளன்.
இவனை முன்னிலைப் படுத்திக்கொண்டு இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது.
பெண் ஒருத்தியின் கட்டழகுக் கவர்ச்சி முலை வருணிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் நலம்புனைந்துரைத்தல் என்னும் அகப்பொருள் பாடல்.
அடிக்கு 28 சீர்கள் என்று மொத்தம் 72 சீர்களால் அமைந்துள்ள இந்தப் பாடல் ஒரு கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆகும்.

இவளது முலை வார் என்னும் கச்சத்தால் கட்டப்பட்டுள்ளது.
அதனால் அது விம்மிதம் பெற்று பக்கவாட்டில் புடைத்து, இறுகலாகவும், இளக்கமாகவும் உள்ளது.
அது மார்பிடம் அனைத்தையும் கவர்ந்துகொண்டுள்ளது.
வட்ட வடிவில் நாளுக்கு நாள் அடிப்பகுதி பருத்து, வளர்ந்து பூரித்து எழுகிறது.
அதன்மீது முத்துமாலை அறுவது போல அளவளாவிக்கொண்டு தொங்குகிறது.
(சிவசுப்பிரமணியனியராசனின்) பட்டவர்த்தன யானையின் மத்தகத்தோடு எதிர்த்துப் போரிடுவது போல உள்ளது.
இதன் சூட்டில் மல்லிகைச் செண்டு மாலை நாள்தோறும் வதங்குகிறது.
மலை போல் உள்ளது.
மைந்தரின் கண்ணையும் மனத்தையும் சூறையாடுகிறது.
நடுவில் பள்ளமும் இரு பக்கமும் மேடும் கொண்டுள்ள அது சிவபெருமானின் சூலம் போல உள்ளது.
புதிய சொம்பு போல் உள்ளது.
அராவிய தங்கப்பொடி அதன் மேல் தூவப்பட்டுள்ளது போல அதன்மேல் தேமல் படர்ந்துள்ளது.
பொற்சரிகை வேலைப்பாட்டுடன் கூடிய ரவிக்கையை இறுக்கிக் கிழித்துக்கொண்டு புறப்பட்டு நிற்கிறது.
வாசனைப்பூ-மாலை உரசி உரசிப் பளபளப்பாக உயர்ந்த தங்கக் கிண்ணம் போல உள்ளது.
சந்தனம், புநுகு, கத்தூரி, கர்ப்பூரம், சவ்வாது, குங்குமம் ஆகியவற்றை அணிந்துகொண்டுள்ளது. சந்திரனைப் போன்ற காவி நிற சேலையின் குட்ட மடிப்பு தும்பி என்னும் பட்டாம்பூச்சி போல் அதன் மேலே பறக்கிறது.
இது ஓங்கி நிற்கும் கனத்தை இவள் இடுப்பு தாங்காது என்று காமக் கடவுள் மன்மதன் இவள் முன்'சலாம்' போட்டுக்கொண்டு நிற்கிறான்.
அந்த முலைக்குக் கீழே ஒரு உரோம-ரேகை.
அவன் முலையைத் தழுவ ஒருவன் ஊசி மேல் நின்று தவம் செய்வது போல அந்த உரோம-ரேகை எழுந்து நிற்கிறது.
இத்தகைய ரேகை உடையவள் வந்தாள்.
சிவசுப்பிரமணியராசனே!
உன்னைப் பார்த்துப் 'பராக்', 'பராக்' என்று சொல்லிக்கொண்டு உன்னை வணங்கி நிற்கிறாள். பார்.