உள்ளடக்கத்துக்குச் செல்

சுயம்வரம்/அத்தியாயம் 12

விக்கிமூலம் இலிருந்து

அழகான பெண்களும், ‘அவுட்
ஆல் ஏஜ்’களும்…ஆகா, ஆகா!…

12

னந்தன் சொன்னது சொன்னபடி, கண்ணீரும் கம்பலையுமாகத்தான் அந்தப் பெண்கள் விடுதியின் வாசலிலே நின்றுகொண்டிருந்தாள் மதனா.

மாதவனைக் காதலிக்கும்போதும், அவனுக்காகத் தன் தந்தை, தாயார், உற்றார், உறவினர் ஆகியோரையெல்லாம் ஒரு நொடியில் உதறி எறிந்துவிட்டு, ‘நீயே கதி’ என்று அவனைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டபோதும் அவள் எவ்வளவுக்கெவ்வளவு பெருமையுற்றிருந்தாளோ, அவ்வளவுக்கவ்வளவு இப்போது சிறுமையுற்றிருந்தாள்.

காரணம், முதல் நாள் இரவு அவள் அருணாவின்மேல் வைத்த நம்பிக்கையை மறுநாள் காலை வந்த ஆனந்தன் அடியோடு தகர்த்தெறிந்துவிட்டுச் சென்றிருந்ததுதான்.

‘இதோ, நான் போய் அந்த மாதவனின் காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போன அருணா, நெடு நேரமாகியும் வராமற் போகவே, அவளை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த மதனா, உள்ளேயே அடைந்து கிடக்க முடியாமல் சற்றுக் காற்றாட வெளியே வந்தாள். வந்த பிறகுதான் ‘ஏன் வந்தோம்?’ என்று ஆகிவிட்டது அவளுக்கு. வராமல் இருந்திருந்தால் அவளும் ஆனந்தனைப் பார்த்திருக்க முடியாது; ஆனந்தனும் அவளைப் பார்த்திருக்க முடியாது.

அதிலும், அந்த ஆனந்தன் என்றும் வருவது போலவா அன்று வந்தான்? வரும்போதே ஏதோ ஒரு 'மரணச் செய்தி'யைக் கொண்டுவருபவன்போல் அல்லவா வந்தான்?

அவனைப் பார்த்ததும் மதனா என்னவோ வழக்கம்போல் தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளத்தான் செய்தாள். ஆனால் எடுக்கும் போதே, "எல்லாம் முடிந்துவிட்டது மதனா, எல்லாம் முடிந்துவிட்டது!" என்று அவன் சொல்லும்போது, அவளால் அவனை எப்படித் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியும்? "என்ன முடிந்துவிட்டது?" என்று அவனை எப்படிப் பதட்டத்தோடு கேட்காமல் இருக்க முடியும்? கேட்டாள்.

அது போதாதா, அவனுக்கு? "இதெல்லாம் உலகத்தில் சகஜம்; மனத்தைக் கொஞ்சம் திடப்படுத்திக் கொள்" என்று அவன் அவளை மேலும் கொஞ்சம் குழப்பினான்.

"போதும், விஷயத்துக்கு வாருங்கள்!" என்றாள் அவள், பொறுமையிழந்து.

"அதுதான் வந்துகொண்டே இருக்கிறேனே, மாதவன்... மாதவன்..."

"என்ன அவருக்கு?"

"அவருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை ; எல்லா ஆபத்தும் உனக்குத்தான்!"

"இவ்வளவுதானே? அதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை; அப்புறம்?"

"ஆபத்து உன் உயிருக்கு வருவதாயிருந்தால் அதைப் பற்றி நீ என்ன, நான்கூடக் கவலைப்பட மாட்டேன்.

ஏனெனில், அத்துடன் எல்லாம் முடிந்துவிடுகிறதல்லவா? ஆனால் உனக்கு வரப்போகும் ஆபத்து அப்படிப்பட்டதல்ல; அது உன் வாழ்வைப் பற்றியது மதனா, வாழ்வைப் பற்றியது!"

"அதாவது, அவர் நீலாவைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்; அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் நடந்து முடிந்துவிட்டது என்று சொல்லப் போகிறீர்கள்; அவ்வளவுதானே?" என்றாள் அவள்.

ஆனந்தனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை - தான் சொல்லப்போவது உண்மையாயிருந்து, அது அவளுக்குத் தெரிந்திருந்தால்கூட அவனுக்கு ஆச்சரியமாயிருந்திருக்காது; பொய்யும் அவளுக்குத் தெரியுமென்றால் அது அவனுக்கு ஆச்சரியமாயிருக்காதா? - அந்த ஆச்சரியத்துடனேயே அவன் அவளைக் கேட்டான்:

"ஆமாம், அது எப்படித் தெரிந்தது உனக்கு?"

"தெரியட்டும், தெரியாமற் போகட்டும். அதில் அவருக்கு மகிழ்ச்சியென்றால் எனக்கும் மகிழ்ச்சிதான். அப்புறம்?"

இந்த 'அப்புறம்?' என்பதற்கெல்லாம் ஆனந்தனா அசைந்து கொடுப்பான்? அவன் 'ஹஹ்ஹஹ்ஹா' என்று ஒரு 'சினிமாச் சிரிப்பு'ச் சிரித்துவிட்டு, "இது நளாயினி காலம் இல்லை மதனா, 1973" என்றான்.

அதற்கும் விட்டுக் கொடுக்கவில்லை அவள்; "அதுவும் தெரியும் எனக்கு; அப்புறம்?" என்றாள் அதே தோரணையில்.

"அவனை நம்பி நீ உன் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய் என்கிறேன் நான்!" என்றான் அவன், அவள் மேல் குற்றம் சாட்டுவதுபோல் 'வில்லன் போ'ஸில் நின்று.

"அதற்காக நான் அழப்போவதில்லை ; நீங்கள் அழப் போகிறீர்களா? அழுங்கள்" என்று அவள் திரும்பினாள்.

அப்போதும் அவன் அவளை விடவில்லை ; இப்படியும் அப்படியுமாக ஆடி அசைந்து நடந்து கொண்டே, "உண்மையிலேயே அதை நினைத்தால் எனக்கு அழுகை வரத்தான் செய்கிறது, மதனா! எல்லாப் பெண்களையும்போல நீயும் ஒரு இருபது இருபத்தைந்து வருஷ காலம் அந்த உதவாக்கரைப் பயலுக்கு மனைவியாக வாழ்ந்து, அதற்குப் பின் இருக்க இடத்துக்கும், தின்னச் சோற்றுக்கும், கட்டத் துணிக்கும் பெற்ற பிள்ளைகளிடமும், கொண்ட மருமக்களிடமும் அல்லல்படும் மாமியாகவும், பாட்டியாகவும் வாழப் போகிறாயா? யோசித்துப் பார்! ஆண்களுக்கு வேண்டுமானால் அதை விட்டால் வேறு வழியில்லாமல் இருக்கலாம். பெண்களுக்கு, அதிலும் உன்னைப் போன்ற அழகான பெண்களுக்கு வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்காக நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதாவது 'கற்பு, கற்பு' என்று ஒரு 'கதை' விட்டுக் கொண்டிருக்கிறார்களே, நம் நாட்டில் - அந்தக் கற்பை 'உண்மையாகவே கதைதான்' என்று துணிந்து நீ தூக்கி எறிய வேண்டும்.

அந்தக் கவைக்குதவாத கற்பைப் பற்றி நீயும் மாதவனும் கூட ஒரு சமயம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தீர்களே, நினைவிருக்கிறதா உனக்கு? 'மேல்நாட்டில் இருப்பதுபோல இங்கும் ஒருத்தி ஒருவனுடன் இருக்கும்போது மட்டும் கற்புடன் இருந்தால் போதும்; அந்த ஒருவன் மறைந்த பிறகு அவள் இன்னொருவனைத் தேடிக்கொள்ள அந்தக் கற்பு அவளுக்குக் குறுக்கே நிற்க வேண்டாம். அதனால் என்ன நடக்கிறது? ஒழுக்கக் குறைவும், பிறருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து கொள்ளும் கருச்சிதைவும்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன!' என்று நீங்கள் அன்று பேசிக் கொண்டிருக்கவில்லையா? அந்தப் படிக்கு மேலே இன்னும் ஒரே ஒரு படிதான் போகச் சொல்கிறேன் நான். அதாவது, 'ஒருத்தி ஒருவனுடன் கட்டுப்பட்டுத்தான் வாழ வேண்டும் என்பது என்ன நீதி?' என்று கேட்கிறேன் நான். கேவலம், ஆடு மாடுகள் போன்ற நாலு கால் ஜீவன்களுக்குக் கூட இல்லாத அந்தக் கட்டுப்பாடு, இரண்டு கால் ஜீவன்களுக்கு மட்டும் ஏன், எதற்காக? வளமான வாழ்வைப் பறிக்கும் அந்த வறட்டுப் பெருமை உனக்கு வேண்டவே வேண்டாம். அதனால் பரம்பரை, குல முறை வேண்டுமானால் உருவாகலாம்; சர்வ வல்லமையுள்ள பணம் உருவாகுமா, பணம்? ஒரு பெண் அந்தக் கட்டுப்பாட்டை மட்டும் காலத்தோடு உதறி எறிந்து விட்டு என்னுடன் வரட்டும்; அவள் காலடியில் அவளுடைய எடைக்கு எடை தங்கத்தைக் குவிக்கிறேனா, இல்லையா என்று பார்!

ஆனால் பெண்ணைப் பொன்னாக்கும் வித்தை எல்லாருக்கும் தெரிந்துவிடாது மதனா, எல்லாருக்கும் தெரிந்து விடாது. அது என்னைப் போன்ற ஒரு சிலருக்கே கைவந்த கலை. ஆம், 'அபத்தம்' எதுவாயிருந்தாலும் அதைக் 'கலை' என்று அழகுத் தமிழில் சொல்லிவிடு; எல்லாம் மறைந்து போகும். அதற்குப் பின் பார்! வழுக்கை விழுந்த எத்தனையோ பெரிய தலைகள் வந்து உனக்கு 'வைராபிஷேகம்' செய்யும்; உன் காலடித் தூசை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொள் வதற்காகக் கையேந்தி நிற்கும். அத்தகைய வாழ்க்கைக்கு வழி காட்டத் துடிக்கும் என்னை நீ எங்கே நம்புகிறாய்? அருணாவை நம்பும் அளவுக்குக்கூட நம்பவில்லையே! அவளையும் நான் இப்போது வழியில் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். அவள் உன்னிடம் சொல்லிவிட்டுச் சென்றது போல அந்த மாதவனை இங்கே அழைத்துக்கொண்டா வரப் போகிறாள்? ஒரு நாளும் இல்லை; அவனாகவே இங்கு வருவதாயிருந்தால்கூட அவள் அதற்கு ஏதாவது ஒரு முட்டுக்கட்டை போட்டுவிட்டு வருவாள். எனக்குத் தெரியாதா, அவளை? அவளுக்கும் அவனிடம் ஏதோ ஒரு மயக்கம்; எல்லாம் விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுந்து மடியத் துடிக்கும் கதைதான். அந்த விட்டில் பூச்சிகளில் ஒன்றாக நீயும் ஆகிவிடாதே! அதை என்னால் தாங்கவே முடியாது. வா, என்னுடன்; இப்போதே வா!" என்று அவன் துணிந்து அவள் கரத்தைப் பற்றப் போக, அவனுடைய கைக்குக் கிடைத்தது ஒரு போலீஸ்காரரின் இரும்புக் கையாயிருக்கவே, அவன் திடுக்கிட்டு, "யார் நீங்கள்?" என்றான் ஒன்றும் புரியாமல்.

"அதே கேள்வியைத்தான் நானும் உங்களைக் கேட்க வேண்டுமென்று இங்கே வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு, "உங்கள் பெயர்?" என்று கேட்டார் போலீஸ்காரர்.

"ஆனந்தன்."

"ஆனந்தனா!" என்று சொல்லிக்கொண்டே, அவர் தம் சட்டைப்பையிலிருந்த ஏதோ ஒரு குறிப்பை எடுத்துப் பார்த்து விட்டு, "இல்லையே, அவர் பெயர் ஆபிரகாம் லிங்கன் என்று அல்லவா இருக்கிறது?" என்று தலையைச் சொறிந்தார்.

"பாவம், அவரைத்தான் எப்போதோ அமெரிக்காவில் சுட்டுக் கொன்றுவிட்டார்களே, சார்" என்றான் ஆனந்தன்.

"அது எனக்குத் தெரியாதா? இந்த ஆபிரகாம் லிங்கனுக்கு புத்தி சுவாதீனமில்லையாம்; கண்ட இடத்தில் நின்று தனக்குத் தானே ஏதாவது உளறிக்கொண்டே இருப்பாராம். இரண்டு நாட்களுக்கு முன்னால் ராயப்பேட்டையிலிருந்து இவர் காணாமற் போய்விட்டாராம். சம்பந்தப்பட்டவர்கள் செய்து கொண்ட விண்ணப்பத்தின் பேரில் இப்போது நாங்கள் அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். நீங்களும் அவரைப் போலவே தன்னந் தனியாக நின்று இங்கே ஏதோ பேசிக்கொண்டிருக்கவே..."

"தன்னந்தனியாகவா!" என்று தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்துக்கொண்ட அவன், "நாசமாய்ப் போச்சு! நான் ஒரு அமெச்சூர் நாடக நடிகன் ஐயா, நாடக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன்; ஆளை விடும்!" என்று சமாளித்து அவரை அனுப்பிவிட்டு, மீண்டும் ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தான். காணவில்லை; மதனாவைக் காணவேயில்லை!

பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் உள்ளே போய் விட்டாளோ? என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு!

அதற்காக அவளை நான் விட்டுவிடுவேனா? அதுதான் நடக்காது என்னிடம். காறி முகத்தில் துப்பினாலும், 'என்ன சார், இப்படி விளையாடுகிறீர்களே!' என்று சமாளிக்கும் 'முற்போக்காளர்க'ளைச் சேர்ந்தவனல்லவா நான்? மீண்டும் முயல்வேன், மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருப்பேன்!....

இந்த 'விரத'த்தை மேற்கொண்ட பின், 'எதற்கும் அந்த மாதவனைப் போய்ப் பார்ப்போம்' என்று ஆனந்தன் அங்கே போனபோதுதான், அருணா அவனிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தாள். அவள் போன பின் அவனைப் பார்த்துப் பேசி விட்டுத் திரும்பிய ஆனந்தன், மறுபடியும் மதனாவிடம் வரவில்லை; நேரே அலுவலகத்துக்குப் போய்விட்டான்.

'ஆனந்தன் இன்று எப்படியும் மதனாவைச்சந்தித்திருக்கக் கூடும்' என்பதை ஒருவாறு ஊகித்தறிந்து கொண்ட அருணா, விடுதிக்கு வந்ததும் வராததுமாக இருக்கும்போதே, "இங்கே ஆனந்தன் வந்திருந்தானா?" என்று மதனாவைக் கேட்டாள்.

"ஆமாம்" என்றாள் அவள், அசிரத்தையாக.

"என்னடியம்மா, உனக்கு? 'அகத்துக்காரரைக் கையோடு அழைத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் இவள் மட்டும் வந்திருக்கிறாளே!' என்று நினைக்கிறாயா? அங்கே போய்ப் பார்த்தால் நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. யாரோ லட்டு மாமியாம்; அவள் கழுகுக் கண்களுக்கு யாரும் தப்ப முடியாது போல் இருந்தது. அப்படியும் துணிந்து நான் ஒரு பொய் சொன்னேன். 'அது என்ன பொய்?' என்று தெரியுமா, உனக்கு?"

"என்ன பொய்யாம்?"

"என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நீ எங்கேயோ ஓடிப் போய்விட்டதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்டி அம்மா! அதைக் கேட்டாவது அந்த லட்டு மாமியையும், காராபூந்தி நீலாவையும் விட்டுவிட்டு இங்கே அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வரமாட்டானா என்றுதான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன் அவனிடம். நீ அதைத் தப்பாக எடுத்துக்கொண்டு விடாதே!"

இதைக் கேட்டதும் தன்னை யாரோ தூக்கி வாரிப் போட்டது போல இருந்தது மதனாவுக்கு. என்னதான் இருந்தாலும் இப்படி ஒரு பொய்யா!...

அதற்குமேல் அவளை யோசிக்கவிடாமல், அப்போது வெளியேயிருந்து ஒரு குரல் வந்தது:

"மதன்! ஓ, மதன்!"

சந்தேகமேயில்லை ; அது அவருடைய குரல்தான்!

இப்படி நினைத்தாளோ இல்லையோ, குதிரையைத் தட்டி விட்டதும் துப்பாக்கியிலிருந்து கிளம்பும் ரவையைப் போலப் பாய்ந்து வந்து, வாசலில் நின்று கொண்டிருந்த மாதவனை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டு விட்டாள் அவள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_12&oldid=1673085" இலிருந்து மீள்விக்கப்பட்டது