சுயம்வரம்/அத்தியாயம் 13
எத்தனை இன்பம், எத்தனை துன்பம்,
இந்தக் காதலிலே?…
“அப்பாடா இப்போதுதான் என் மனசு குளிர்ந்தது”'
மாதவனின் மார்பில் மதனா தன் முகத்தைப் புதைத்துக் கொண்டதும் இப்படிச் சொன்னவள் வேறு யாருமல்ல; அருணாதான்
காரியம் மிஞ்சிப் போன பிறகு, இப்படிச் சொல்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி?...
ஆனால் உண்மையிலேயே அவள் மனசு குளிர்ந்ததா என்றால், அதுதான் இல்லை. கலியாணத்துக்கு முன்னால் மட்டுமல்ல; பின்னாலும் யாரைநிமிஷத்துக்கு நிமிஷம் நெருங்க விடக் கூடாது என்று அவள் பகீரதப் பிரயத்தனம் செய்து வந்தாளோ, அதற்காகத் தனக்கு உள்ளுறப் பிடிக்காத அந்த ஆனந்தனுடன்கூட அவள் உறவு கொண்டாடி வந்தாளோ, அவர்கள் தனக்கு எதிர்த்தாற்போலேயே இப்போது நெருங்கி நிற்பதென்றால்?...
சகிக்கவில்லை அவளுக்கு; ஆனாலும் அதை அப்போது வெளியே காட்டிக்கொள்ள முடியுமா? வராத புன்னகையை வரவழைத்துக்கொண்டு மெல்ல அவர்களை நெருங்கினாள். சிரித்துக்கொண்டே ஒருவர் பிடியிலிருந்து ஒருவரைத் தன் கையாலேயே வருவது வரட்டும் என்று பிரித்து நிறுத்திவிட்டு, “பட்டப் பகல், நட்ட நடுத் தெரு, என்னதான் இருந்தாலும் இதுகூடவா தெரியவில்லை?” என்று 'அம்மாமி பாணி'யில் அவர்களைச் செல்லமாகக் கடிந்துகொண்டாள்.
அதை உண்மையென்று நம்பி வெட்கத்தால் முகம் சிவந்துபோன மதனா, “அதென்னவோ தெரியவில்லை; இன்று இவரைக் கண்டதும் என்னை நானே மறந்து விட்டேன்'” என்றாள், தரையைத் தன் கால் கட்டை விரலால் கீறிக் கொண்டே.
“உன்னை மறந்தாலும் உலகத்தை மறந்துவிடாதேடி யம்மா, அது பார்த்ததும் பார்க்காததுமாக ஆயிரம் சொல்லும்!” என்றாள் அருணா, செயற்கரிய காரியத்தைச் செய்துவிட்ட பெருமிதத்தைத் தனக்குள் அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு.
"நாங்கள் மறந்தாலும் நீயாவது மறக்காமல் இருந்தாயே, அதைச் சொல்லு!" என்றான் மாதவன், அவள் முதுகில் ஒரு '‘ கொடுக்காத குறையாக’.
“உங்களுக்கென்ன, சொல்லாமல் என்ன இருந்தாலும் நீங்கள் ஆண் பிள்ளை, எதை எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்; ஏதும் அறியாத பூனை போலும் இருக்கலாம்!” என்றாள் மதனாவை அப்போதும் மறக்காமல் தனக்குப் பின்னால் தள்ளி நிறுத்திக்கொண்டே.
'“அதெல்லாம் அந்தக் காலம்; இந்தக் காலத்தில்தான் பெண்களிலும் பலர் அப்படி இருக்கிறார்களே!”'என்றான் மாதவன், அவளைச் சுட்டாமல் சுட்டி.
அருணாவுக்குச் சுருக்கென்றது; அவள் உடனே அந்தப் பேச்சை மாற்ற விரும்பி, '“என்ன இருந்தாலும் உங்களைப் போல யாரும் இருக்க மாட்டார்கள்!'” என்றாள் அவனைப் பார்க்காமல் பார்த்து.
“எதற்காக அப்படிச் சொல்கிறாய்?"
'“உங்களைப் பிரிந்து துடிக்கும் ஒரு பெண்ணுக்காக உங்களை நான் இங்கே வரவழைக்க எவ்வளவு பெரிய பொய் சொல்ல வேண்டியிருந்தது!’” என்றாள் அவள், அதுதான் சமயமென்று.
“'ஒ, அதைச் சொல்கிறாயா அதற்காக நீ கவலைப்படாதே; பிறருக்கு நன்மை விளையுமென்றால் ஒரு பொய் என்ன, ஒராயிரம் பொய்கள் வேண்டுமானாலும் சொல்லலாமாம்!”
“எப்படியோ உங்களைக் கொண்டு வந்து இங்கே சேர்த்துவிட்டேன் நான். இனி அவள் பாடு, உங்கள் பாடு. நான் வரட்டுமா?" என்று அவள் திரும்பினாள்.
'அதற்குள் உன்னை விட்டு விடுவேனா, நான்' என்றான் அவன்.
அவள் திரும்பி, '“விடாமல் என்ன செய்யப் போகிறீர்கள்?”' என்றாள்.
'“இன்னும் ஒரே ஒரு நாள் மதனாவை நீ இங்கே வைத்திருக்க வேண்டும்.”'
மாதவன் இப்படிச் சொன்னதுதான் தாமதம், அருணாவுக்குப் பின்னாலிருந்த மதனா சட்டென்று அவனுக்கு முன்னால் வந்து நின்று, “அதெல்லாம் முடியாது. இன்னும் ஒரே ஒரு நாள் என்ன, ஒரே ஒரு மணி நேரம்கூட நான் இங்கே இருக்க மாட்டேன்; இருந்தால் எனக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்'” என்றாள் தீர்மானமாக.
'“ரொம்ப நல்லதாச்சே, அது அந்த நிலைக்கு நீ வந்து விட்டால் எந்தக் கவலையும் உன்னைப் பாதிக்காது. இஷ்டத்துக்கு எதையாவது பேசிக்கொண்டு, இஷ்டத்துக்கு யார் தலையிலாவது கல்லைத் தூக்கிப் போட்டுக்கொண்டு...”'
அவன் முடிக்கவில்லை; '“யார் தலையிலாவது என்ன, உங்கள் தலையிலேயே கல்லைத் தூக்கிப் போட்டாலும் போட்டுவிடுவேன்; அந்த அளவுக்கு என் மூளை இப்போது குழம்பிப் போயிருக்கிறது”' என்றாள் அவள்.
'“செய்; கலியாணத்துக்குப் பிறகு ஒரு மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமையல்லவா அது”'
“எது?”
கணவன் தலையிலே மனைவி கல்லைத் தூக்கிப் போடுவதுதான்!”
'“விளையாடாதீர்கள்; எனக்குக் கெட்ட கோபம் வரும்.”
'“வந்தால் என்ன? 'ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டே இரு; கோபம் வந்த சுவடு தெரியாமல் போய்விடுமாம்”!
'“இப்படித்தான் நீங்கள் பேசிக்கொண்டே இருக்கப் போகிறீர்களா”?
'“இல்லை; இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கிருந்து போகப் போகிறேன், மாமாவை ஊருக்கு அனுப்ப ” '“போனால் என்ன நடக்கும், தெரியுமா”?
“'தெரியுமே, அருணாவை அலுவலகத்துக்கு அனுப்பி விட்டு, நீ உள்ளே போய்ப் படுத்துக்கொண்டு விடுவாய்! ” '“அதுதான் இல்லை; நானும் உங்கள் மாமாவிடம் வந்து, 'நான்தான் உங்கள் மனைவி; நீங்கள்தான் என் கணவர் என்று சொல்லப் போகிறேன்!”
'“அந்தக் காரியத்தை மட்டும் இப்போது செய்துவிடாதே, அதனால் ஒரு பெண்ணின் எண்ணத்தில் மண்ணைப் போட்ட பாவம் உன்னை வந்து சேரும்.'”
'“எந்தப் பெண் அவள்?”
“என் மாமாவின் பெண் நீலாவைத்தான் சொல்கிறேன்!”
"அந்த அசட்டுப் பெண்மீது வேறு இப்போது ஆசை வந்துவிட்டதா, உங்களுக்கு?"
'“ஆசை வரவில்லை; அவளிடம் எனக்கு எப்போதுமே ஒரு அனுதாபம் உண்டு.”
'“அதுதானே காதலுக்கு முதல் படி?”
'“அது காதலுக்கு முதல் படியோ, கடைசிப் படியோ, இப்போது நீ அங்கே வந்து அந்தக் குட்டை உடைக்க வேண்டாம்; அதை உடைப்பவர்கள் உடைத்துவிடுவார்கள் ” “யார் அவர்கள்?”
'“வேறு யார்? என்னைப் பெற்று வளர்த்த பாவத்தை ஏற்கெனவே செய்திருக்கும் என் பெற்றோர்தான் அந்தப் பாவத்தையும் செய்வார்கள்”!
'“அவர்களை மட்டும் அந்தப் பாவத்தைச் செய்ய விடலாமா நீங்கள்”?"
“இதற்கெல்லாம் உனக்குப் புரியும்படியாகப் பதில் சொல்வது மிகவும் கடினம், மதன் இயற்கையிலேயே மனிதனுக்கு எத்தனையோ பலவீனங்கள் உண்டு; அவற்றில் அதுவும் ஒன்று என்று வைத்துக்கொள்ளேன்!'”
'“அந்த மாதிரி பலவீனத்தால்தான் என்னை நீங்கள் கலியாணம் செய்துகொண்டீர்களா?”
'“இருக்கலாம்; உன்னைக் கலியாணம் செய்து கொண்டதும் என்னுடைய பலவீனமாயிருக்கலாம்; நீலாவிடம் நான் அனுதாபம் காட்டுவதும் என்னுடைய பலவீனமாயிருக்கலாம். இதையெல்லாம் அன்பு, கின்பு என்று சொல்லிக் கொண்டு, ஆத்மாவைக் கொன்று வாழ முடியாத ஜீவன்கள் சில இன்னும் இந்த உலகத்தில் இருந்து கொண்டிருக்கின்றனவே, அவற்றினிடம் சகஜம் மதன், சகஜம்!”
'“அப்படியானால் இன்னும் உங்களை நான் நம்பத்தான் வேண்டும் என்கிறீர்களா, நீங்கள்?”"
“'ஏன், 'நம்ப வேண்டாம் என்று அந்த ஆனந்தன் சொன்னானா?”
"அது எப்படித் தெரிந்தது, உங்களுக்கு?"
'அவனைப் பற்றித் தெரிந்தவர்களுக்கெல்லாம் அது தெரியுமே ஆடம்பர வாழ்வின்மேல் கொண்ட மோகத்துக்காகத் தன் ஆன்மாவையே கொல்லாமல் கொன்றுகொண்டுவிட்ட அவனிடம் பணம் உண்டு; செல்வாக்கு உண்டு; அதற்கேற்ற செருக்கும் உண்டு. ஆனால் ஒன்றே ஒன்றுதான் அவனிடம் இல்லை!"
'அது என்ன?”
"வேறென்ன, உதட்டோடு நிற்காமல் உள்ளத்திலும் தனக்கு இடம் கொடுத்தோரையெல்லாம் சதா துன்பத்துக் குள்ளாக்கிக் கொண்டிருக்கிறதே அன்பு என்ற ஒன்று, அதுதான் அது!”
'அப்படிப்பட்ட மனிதரை நீங்கள் ஏன் இன்னும் உங்கள் நண்பராகக் கொண்டிருக்க வேண்டுமாம்?"
'அதற்கும் அன்புதான் காரணம், மதன் இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் அவன் திருந்துவான் என்று நான் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறேன்; அந்த நம்பிக்கையினாலேயே இன்னும் நான் அவனுக்கு நண்பனா யிருக்கிறேன்!” என்றான் அவன், எங்கேயோ எட்டாத தூரத்தில் தன் பார்வையைச் செலுத்தி.
மதனா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்; பார்த்து விட்டுப் பெருமூச்சுடன் சொன்னாள்:
“என்ன இருந்தாலும் நீங்கள் அவ்வளவு நல்லவரா யிருக்கக் கூடாது; உங்களுக்கே அது நல்லதும் அல்ல."
இதைச் சொன்னபோது அவள் கண்களில் ஏனோ நீர் துளிர்த்தது; அதை அவனுக்குத் தெரியாமல் அவள் துடைத்துக் கொண்டாள்.
அதே சமயத்தில் அவளுக்கு அருகே இருந்த அருணாவும் திரும்பித் தன் கண்களைத் துடைக்கவே, ‘என்ன அருணா, என்ன?’ என்றான் மாதவன், சற்றே பதட்டத்துடன்.
அவன் இப்படிக் கேட்டானோ இல்லையோ, “ஒன்றுமில்லை. இனிமேல் நீங்கள் இங்கே வரவேண்டாம்; வந்தாலும் எனக்கு எதிர்த்தாற்போல் நிற்க வேண்டாம்; நின்றாலும் இப்பொழுது பேசியதுபோல் எப்பொழுதும் எனக்கு முன்னால் நின்று தயவு செய்து பேச வேண்டாம்!" என்று அவள் அழுகையும் ஆத்திரமுமாகப் பொரிந்து தள்ளிக் கொண்டே தன் அலுவலகத்தை நோக்கி விறுவிறு'வென்று நடந்தாள்.
அவள் தலை மறைந்ததும், 'என்ன அவளுக்குத் திடீரென்று?’ என்றாள் மதனா, ஒன்றும் புரியாமல்.
“தெரியவில்லையா, அவளும் என்னைக்காதலிக்கிறாள்' என்றான் மாதவன்.
அவள் சிரித்தாள்; 'ஏன் சிரிக்கிறாய்?" என்றான் அவன்.
“என்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லையா, நீங்கள்?' என்றாள் அவள்.
'மனைவியிடம் கணவன் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை' என்றான் அவன்.
'சரி, போய் வாருங்கள்!' என்றாள் அவள்.
'அருணாவைக் கோபித்துக் கொள்ளாதே அவளையும் நான் வெறுக்கவில்லை என்று நீயே அவளிடம் சொல். அந்த அளவுக்கு வேண்டிய மனப் பக்குவத்தை ஆண்டவன் உனக்கு அருளட்டும். நாளைக் காலை நான் உன்னை அழைத்துக் கொண்டு போக இங்கே வருகிறேன்; தயாராயிரு' என்று அவன் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தான்.
வழியில்...
அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனைக் கண்டதும் எங்கிருந்தோ வந்த நீலா, "எனக்குத் தெரிந்து போச்சு, எல்லாம் தெரிஞ்சு போச்சு' என்று சொல்லிக்கொண்டே, கையில் ஒரு கடிதத்துடன் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து வட்டமடித்தாள்.