உள்ளடக்கத்துக்குச் செல்

சுயம்வரம்/அத்தியாயம் 14

விக்கிமூலம் இலிருந்து

உலகம் பல விதம்;
காதல் எத்தனை விதம்?…

14

ட அசடே! நீ எங்கே வந்தாய், எப்படி வந்தாய்? என்ன தெரிஞ்சு போச்சு, உனக்கு? என்ன கடிதம் அது? என்னைச் சுற்றிச் சுற்றி வராதே நில்; நின்று சொல்' என்று மாதவனும் வேறு வழியின்றி நீலாவை ஒரு முறை சுற்றி வந்து கேட்டான். 'நான் ஒன்றும் அசடு இல்லை, சமர்த்துத்தான்!”" என்றாள் அவள், அவன் எதிர்பாராத விதமாக நிமிர்ந்து நின்று.

அவளை ஒரு கணம் வியப்புடன் பார்த்துவிட்டு, “சரி, நீ சமர்த்துத்தான். எங்கே வந்தாய்? எப்படி வந்தாய்? அதைச் சொல், முதலில்!” என்றான் அவன் மீண்டும்.

"எப்படி வந்தேனா காலை சினிமாவுக்கு நீங்கள் போவதாகவும், 'நீ மட்டும் வருவதாயிருந்தால் உன்னையும் அழைத்துக் கொண்டு போகிறேன்!” என்று நீங்கள் என்னிடம் ரகசியமாகச் சொன்னதாகவும் அம்மாவிடம் ஒரு பொய் சொன்னேன். அவள் அதை அப்படியே நம்பி என்னை அவசர அவசரமாக அலங்காரம் செய்துவிட்டு, 'என் கண்ணில்லே, சமர்த்தாப் போய் வா என்றாள்; நானும் சமர்த்தா உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பின்னாலேயே வந்துவிட்டேன்'

'அடி என் சமர்த்தே, ஏன் வந்தாய்?" 

'“ஏன் வந்தேனா? இந்தக் 'கலியான அழைப்பிதழ் இருக்கிறதே, இதுதான் உங்களுக்குப் பின்னால் என்னை வரச் சொல்லிற்று!”" என்று தன்னிடம் இருந்த அழைப்பிதழைக் காட்டினாள் அவள். அதில் பின்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது:

அன்புடையீர் வணக்கம்.

5 - 1 - 73 அன்று காலை 10 மணி அளவில் சென்னையை அடுத்துள்ள திருநீர்மலையில் உள்ள பச்சை வண்ணப் பெருமாள் கோயிலில் செல்வி மதனாவை நான் மணக்க விருப்பதால், தாங்கள் அருள் கூர்ந்து வந்து எங்களை வாழ்த்தி அருள வேண்டுகிறேன்.

தங்கள்,


மாதவன்.


இதைத்தவிர அந்த அழைப்பிதழில் பெண்ணைப் பெற்றவரின் பெயரோ, பிள்ளையைப் பெற்றவரின் பெயரோ காணப்படவில்லை. இடையே பெரியோர் நிச்சயித்த வண்ணம் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு வந்து நிற்பார்களே சில பெரியவர்கள், அவர்களையும் காணவில்லை.

இதெல்லாம் ஒன்றுமில்லாமல், இன்ன தேதியில், இன்ன இடத்தில் நான் மதனாவை கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன்; உங்களுக்கு விருப்பமிருந்தால் வாருங்கள், இல்லாவிட்டால் போங்கள் என்பதுபோல் இருந்த அந்த அழைப்பிதழை முதல் நாள் இரவு தன் அத்தையின் வீட்டில் எதேச்சையாகக் கண்டெடுத்த நீலாவுக்கு, ஆச்சரியமாவது ஆச்சரியம், ஒரே ஆச்சரியம்!

“'இப்படியும் ஒரு கலியாணம் நடந்திருக்குமா?”’ என்று அவள் முதலில் நினைத்தாள்; பிறகு, 'ஏன் நடக்காது, இந்தப் பட்டணத்தில் எல்லாம் நடக்கும்' என்றும் அவள் நினைத்தாள்.

இருந்தாலும், கொஞ்சம் சந்தேகம் அவளுக்கு; 'அம்மாவைக் கேட்டுப் பார்ப்போமா?' என்று முதலில் எண்ணினாள்; பிறகு 'ஊஹூம்' என்று தன் தலையைத் தானே ஆட்டிவிட்டு, அப்பாவைக் கேட்டுப் பார்ப்போமா? என்று எண்ணினாள். அதற்கும் என்ன நினைத்தோ என்னவோ 'ஊஹூம்" என்று தலையை ஆட்டிவிட்டு, அத்தானைத்தான் கேட்கவேண்டும்; அதுதான் சரி என்று தனக்குத் தானே தீர்மானித்துக் கொடு, அன்றிரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்தாள்.

பொழுது விடிந்ததும் கேட்கலாமென்றால், அவனை எங்கே தனியாக இருக்க விட்டாள் அந்த அருணா? அவள் தான் விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே வந்து அவனைப் பிடித்துக்கொண்டு விட்டாளே!

அவளைப் பார்த்ததும் 'ஒரு வேளை இவள்தான் மதனாவாயிருப்பாளோ? என்று நீலா நினைத்தாள்; பிறகு, 'அப்படியிருந்தால் அவளை ஏன் இவர் வெளியே நிறுத்தி வைத்துப் பேசப் போகிறார்? உள்ளே அழைத்து வந்து பேச மாட்டாரா?' என்றும் நினைத்தாள். அதற்குப் பின், அது எப்படி முடியும்? அந்த விஷயம் தன் மாமாவுக்கும் மாமிக்கும் தெரியவேண்டாம் என்று இவர் நினைத்திருக்கலாம். அப்படி நினைத்துத்தான் இவர் தன் திருமண அழைப்பிதழைக்கூடத் தன்னுடைய மாமாவுக்கு அனுப்பவில்லையோ, என்னவோ?’ என்று நினைத்த அவள், அவர் எப்போது வெளியே புறப்படுவார்?' என்று காத்திருந்தாள். அந்தச் சந்தர்ப்பம் வாய்த்ததும் அம்மாவிடம் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அவள் அவனுடன் புறப்பட்டு விட்டாள்

போகும்போதே தன்னைக் காட்டிக்கொண்டால் அவர் ஒருவேளை தடுக்கலாம்; அதற்குப் பின் அவரைத் தான் 

தொடர்ந்து செல்வது தடைப்பட்டுப் போனாலும் போகலாம். அதைவிட தக்க சமயத்தில் அவரைத் தடுத்து நிறுத்தி, அவரிடம் தன் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதே நல்லது!...

இந்த முடிவுக்கு வந்த அவளுக்கு, இன்னொரு வாய்ப்பும் வாய்த்தது. அதாவது, திருமண அழைப்பிதழில் கண்ட மதனாவை அவள் நேருக்கு நேராகப் பார்த்தும் விட்டாள்

இனி என்ன?...

இந்தக் கேள்வி அவள் உள்ளத்தில் எழவில்லை. எழுந்து இருந்திருந்தால் அத்தானின் திருமண அழைப்பிதழைப் பார்த்த பிறகும், அவன் தனக்கு மனைவியாக வரித்துக் கொண்டு விட்ட மதனாவை நேருக்கு நேராகப் பார்த்த பிறகும், தெரிஞ்சு போச்சு, எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு!" என்று அவள் அவனைப் பச்சைக் குழந்தை போல் சுற்றிச் சுற்றி வந்து வட்டமடித்திருப்பாளா?...

பாவம், தன் வசீகரத்தால் வாழ்க்கையையே உயிரற்ற தாக்கிவிடும் நாகரிகம் அவ்வளவு தூரம் எட்டாத ஏதோ ஒரு பட்டிக்காட்டில் அவள் பிறந்தவள்; எதற்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்' என்பதற்காக எட்டாம் வகுப்பு வரை படித்தவள்; அதற்குள் வயதுக்கு வந்துவிட்ட காரணத்தால் பள்ளிப் படிப்புக்குத் தன் பெற்றோரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டவள். அதற்கு மேல் அவள் படித்ததைவிட கேட்டதுதான் அதிகம். அதிலும் என்ன கேட்டாள்? 'பழைய குப்பைகள் என்று பட்டனத்து மனிதர்களால் அநேகமாக ஒதுக்கித் தள்ளப்பட்டு விட்ட பெரிய புராணக் கதைகள், ராம காதை, மகாபாரதம், இத்தியாதி, இத்தியாதி...

இவற்றிலிருந்து தான் பெற்ற அறிவைக் கொண்டு, அவள் தன்னையும் 'திலகவதியின் பரம்பரையைச் சேர்ந்தவளாக 

நினைத்துக்கொண்டு தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டது இது:

அதாவது, அவளுக்கு உலகம் தெரிந்த நாளிலேயே அவள் கணவன் அவளுடைய அத்தான் தான் என்று அவள் பெற்றோர் அவளுக்குச் சொல்லிவிட்டார்களாம்; அன்றிலிருந்தே அவன் தான் தன் மணாளன் என்று அவளும் தன் மனத்தில் அவனை வரித்துக்கொண்டு விட்டாளாம். ஆக, மதனா அவனை மணப்பதற்கு முன்னாலேயே அவள் அவனை மானசீகமாக மணந்துகொண்டு விட்டாளாம்!...

அதற்குமேல் இனி என்ன?’ என்று யோசிக்க அவளுக்கு என்ன இருக்கிறது?

“ஒன்றும் இல்லை என்று நினைத்த அவள், உண்மையிலேயே அதைப் பற்றி ஒன்றும் யோசிக்காமலே இருந்து விட்டாள் ”

ஆனால் அவனுக்கோ, 'இனி என்ன?’ என்ற பிரச்னை இப்போதுதான் ஆரம்பாகியிருந்தது. அதிலிருந்து தப்ப வழி என்ன என்று தெரியாமல் அவன் விழித்தான்; தவித்தான்.

அவனுடைய போதாத காலம், அவன் பெற்றோர் குட்டை உடைப்பதற்கு முன்னால், அந்தச் சனியன் பிடித்த அழைப்பிதழ் அவளுக்குக் கிடைப்பானேன்? அதை எடுத்துக் கொண்டு வந்து அவள் தன்னை இப்படி மடக்குவானேன்?

ஒன்றும் புரியவில்லை அவனுக்கு, "இந்த அழைப்பிதழை நீ உன் அப்பாவிடம் காட்டினாயா?" என்றான் மெல்ல.

'இல்லை' என்று சொல்லவில்லை அவள்; "உங்களைக் கேட்காமல் காட்டுவேனா?” என்றாள், அந்தப் பழைய காலப் "பதிவிரதா தருமத்தை அப்படியே அனுசரித்து.

அதுதான் அவன் உள்ளத்தை எப்படிச் சுட்டது! 

ஆனாலும் அவன் அதைச் சமாளித்துக் கொண்டு, “'அம்மாவிடம்?" என்றான் அடுத்தாற்போல்.

“ஊஹூம்.”'

அப்பாடா இப்போதைக்குப் பிழைத்தேன்' என்று எண்ணிப் பெருமூச்சு விட்ட அவன், 'சரி, வா போவோம்!” என்றான்.

'எங்கே?' என்ற அவள், “'இதைக்கூட நான் கேட்டிருக்கக்கூடாது'” என்றாள் தன் உதட்டைச் சட்டென்று கடித்துக்கொண்டு.

'கேட்டால் என்னவாம்?' என்றான் அவன்.

'அது அதிகப்பிரசங்கித்தனம் இல்லையா?" என்றாள் அவள்.

நீ அதிகப்பிரசங்கியாகவே இரு; அதுதான் இப்போதைக்கு எனக்கு நல்லது' என்ற அவன், 'இப்போது நாம் எங்கே போகப் போகிறோம், தெரியுமா? நீ உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்த பொய்யை மெய்யாக்க' என்றான்.

"அப்படியென்றால்... '

'அசடு, அசடு! அதாவது, நிஜமாகவே நாம் சினிமாவுக்குப் போகப் போகிறோம் என்று அர்த்தம்; இப்போதாவது புரிந்ததா?’ என்றான் அவன், அதற்குள்ளாவது ‘இனி என்ன?’ என்ற பிரச்னையிலிருந்து தப்ப ஏதாவது ஒரு வழி பிறக்காதா?’ என்ற எண்ணத்தில்.

அதை அவள் கண்டாளா? 'புரிகிறது. அத்தான், புரிகிறது! ஆனால் இப்போது சினிமாவுக்குப் போவதாயிருந்தால் நீங்கள் மதனாவையல்லவா அழைத்துச் செல்ல வேண்டும்? என்னை 

அழைத்துச் செல்லலாமா? அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை?" என்றாள்.

அதுவும் எனக்குப் புரியத்தான் செய்கிறது. ஆனால் இப்போதைக்கு உன் அம்மாவிடமிருந்து நீயும் நானும் தப்ப வேண்டுமானால் நாம் இருவரும் சினிமாவுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை' என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_14&oldid=1673090" இலிருந்து மீள்விக்கப்பட்டது