சுயம்வரம்/அத்தியாயம் 15
என்ன மலிவு, இந்த யுகத்தில்
பிறரை ஏய்க்கும் பொய்களடா!…
இனி என்ன, இனி என்ன? என்று நினைத்துக் கொண்டே வந்த மாதவன், சினிமா தியேட்டரை நெருங்கியதும் அந்த நினைப்பிலிருந்து சற்றே நழுவிக் கவுண்ட்டரில் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் இரண்டை வாங்கிக் கொண்டு, 'இதற்கு முன்னால் நீ ஏதாவது இங்கிலீஷ் படம் பார்த்திருக்கிறாயா?" என்றான் நீலாவை நோக்கி,
“'இல்லை'” என்றாள் அவள்.
“அப்படியானால் அதைப் பார்ப்பதற்கு முன்னால் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமே நீ'” என்றான் அவன்.
“"அது என்ன விஷயம்?'” என்றாள் அவள்.
"படம் பார்க்கும்போது நீ படத்தைக் கவனிக்கிறாயோ இல்லையோ, பக்கத்தில் உள்ளவர்களைக் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவர்கள் 'ஆஹா என்றால், நீயும் 'ஆஹா' என்று சொல்லவேண்டும். அவர்கள் ஒஹோ என்றால், நீயும் ஒஹோ என்று சொல்லவேண்டும்; அவர்கள் 'வொன்டர்புல்' என்றால், நீயும் வொன்டர்புல்' என்று வியக்க
வேண்டும்; அவர்கள் 'மார்வலஸ்' என்றால், நீயும் மார்வலஸ்' என்று மலைக்க வேண்டும்...'
"அது எப்படி முடியும்? படத்தில் இங்கிலீஷ்காரர்கள் பேசும் இங்கிலீஷ், அதை விழுந்து விழுந்து படித்தவர்களுக்கே அவ்வளவு சரியாகப் புரியாது என்பார்களே!'
“மற்றவர்களுக்கு மட்டும் அப்படியே புரிந்துவிடுகிறதா, என்ன?”
“புரியாமலா அப்படியெல்லாம் சொல்லி அவர்கள் அனுபவிக்கிறார்கள்?”
“ஆமாம் அசடே, ஆமாம்; அதுதான் இன்றைய நாகரிகம். இல்லாவிட்டால் உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று அவர்கள் உன்னைப் பற்றி நினைத்துவிடுவார்கள்'”
“நினைக்கட்டுமே, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நான் நினைத்துவிட்டுப் போகிறேன்!”
“அப்படி நினைத்தால் உன்னையும் 'நாலும் தெரிந்தவள் என்று இன்றைய நாகரிக உலகம் ஏற்றுக்கொள்ளாதே ”
“ஏற்றுக் கொள்ளாவிட்டால் போகட்டும்; அந்த போலி நாகரிகமும் எனக்கு வேண்டாம்; போலிக் கெளரவமும் எனக்கு வேண்டாம்!'”
'“பின்னே, புதுமை இப்போது எதில் இருக்கிறது என்கிறாய்? அதில்தான் இருக்கிறது. உண்ணும் உணவில் போலி; உடுத்தும் உடையில் போலி, அணியும் நகையில் போலி, பேசும் பேச்சில் போலி; சிரிக்கும் சிரிப்பில் போலி; ஆனானப்பட்ட இதயத்தைக்கூட இப்போது போலி இதயமாக்கச் சில டாக்டர்கள் முயன்றுகொண்டிருக்கிறார்களே, அது தெரியாதா உனக்கு '”
“என்னவோ போங்கள், இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே யில்லை!"
'“பிடிக்காவிட்டால் இன்றைய சமூகத்தில் நீ வாழ முடியாது”'
"ஏன் முடியாது? நமக்காக, நம்மைப்போல் நாம் வாழ வேண்டும் என்று நினைத்தால் நன்றாக வாழலாம்; அந்த வாழ்க்கையில் நிச்சயம் அசலுக்கு இடம் இருக்கும். 'பிறருக்காக, பிறரைப் போல் வாழவேண்டும் என்று நாம் நினைக்கும்போதுதான் அசல் நம்மை விட்டு நழுவி விடுகிறது; போலி வந்து அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விடுகிறது!"
“அடி, சக்கை அசடாயிருந்தாலும் ஆழமான ஒரு கருத்தை அழகாக எடுத்துச் சொல்லி, உனக்கு நான் கட்டிய அசட்டுப் பட்டத்தை எனக்கு நீ கட்டிவிட்டாயே? பலே! என்று தன்னை மறந்து அவள் முதுகில் ஒரு ஷொட்டுக் கொடுத்தான் அவன். ” “நாலு பேருக்கு நடுவே இதெல்லாம் என்ன, அத்தான்? எனக்கு வெட்கமாயிருக்கிறது' என்றாள் அவள். ”
“வெட்கமாவது இதற்கெல்லாம் வெட்கப்பட்டால் நாளைக்கு நீ அந்த 'டிஷ்யூ சாரியைக் கட்டிக்கொண்டு நாலு பேருக்கு முன்னால் உலா வருவது எப்படி?”
'எந்த டிஷ்யூ சாரியை?’’ "அதோ பார், அந்த நார்மணி கட்டிக்கொண்டு வருகிறாளே, அந்த 'டிஷ்யூ சாரியைத்தான் சொல்கிறேன். அது அவள் உடம்பின்மேல் இருப்பது போலவே தெரிய வில்லையல்லவா?" என்று சற்றுத் துரத்தில் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை அவளுக்குச் சுட்டிக் காட்டினான் அவன்.
“ஐயே கண்ணராவிக் காட்சியாகவல்லவா இருக்கிறது அது?" என்று முகத்தைச் சுளித்தாள் அவள். ”
“கண்ணராவிக் காட்சியாவது அதுதான் இந்தக் காலத்து வாலிபர்களுக்குக் கண் கொள்ளாக் காட்சி'”
“'ஊரில் இருக்கும் வாலிபர்களுக்கெல்லாம் இவர்கள் ஏன் கண்கொள்ளாக் காட்சியாக இருக்க வேண்டுமாம்? வீட்டில் இருக்கும் தங்கள் கணவன்மாருக்கு மட்டும் இவர்கள்கண்கொள்ளாக் காட்சியாக இருந்தால் போதாதா?”
"அது எப்படிப் போதும்? இந்த உலகத்து வாலிபர்களை யெல்லாம் தங்கள் காலடியில் வந்து விழச் செய்யவேண்டும் என்பதல்லவா இந்தக் காலத்துக் கிளியோபாத்ராக்க"ளின் லட்சியம்)"
“எதற்கு?"
"யாருக்குத் தெரியும்?" '
“அவர்களுக்காவது தெரியுமா அது?” '
“தெரியாதென்றுதான் நினைக்கிறேன்"”
"வேடிக்கையாயிருக்கிறதே, நீங்கள் சொல்வது அதற்காக அவர்கள் கணவன்மார் அவர்களைக் கண்டிப்பதில்லையா?” '
“இல்லை; தங்கள் மனைவிமாரைத் தாங்கள் பார்த்து மகிழ்வதை விட, பிறர் பார்த்து மகிழ்வதைத்தான் அவர்களும் இப்போது பெறற்கரிய பெருமையாக நினைக்கிறார்கள்! ” '“கடவுளே, கடவுளே! இதெல்லாம் அவர்களை எங்கே கொண்டு போய் விடுமோ?”' என்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் அவள்.
“வேறு எங்கே கொண்டு போய் விடப் போகிறது? விட்டால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொண்டு போய்த் தான் விடும்!” என்றான் அவன்.
அவள் சிரித்தாள்; அவனும் சிரித்தான். இருவரும் சிரித்துக்கொண்டே தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.
"ஆமாம், நீங்கள் தமிழ்ப் படத்துக்கே போவதில்லையா?" என்றாள் அவள்.
'போவதுண்டு; ஆனால் வெளியே சொல்வதில்லை!" என்றான் அவன்.
"ஏனாம்?"
'சொன்னால் இந்தக் காலத்து நண்பர்கள் என்னை மதிக்க மாட்டார்கள்!'
'ஏன், அவர்கள் போவதில்லையா?" 'போவார்கள்; ஆனால் அவர்களும் அதை வெளியே சொல்லிக்கொள்ள மாட்டார்கள்!”
'நன்றாயிருக்கிறது! இது ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதுபோல் இல்லையா?"
'தெரிந்துதானே ஏமாற்றிக்கொள்கிறோம்? தெரியாமல் ஏமாற்றிக்கொள்ளவில்லையே!” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.
'ஏன், தமிழ்ப் படங்கள் அத்தனை மோசமாகவா இருக்கின்றன?”
"ஆமாம். அந்தப் படங்களின் முதல் மோசம், முத்தக் காட்சிகள் இல்லாமல் இருப்பது; இரண்டாவது மோசம்...'
"என்ன, என்ன காட்சிகள் என்று சொன்னீர்கள்?" 'முத்தக் காட்சிகள்!” 'ஐயையே அதைச் சொல்லவே வெட்கமாயில்லை, உங்களுக்கு?"
'கொடுப்பவர்களுக்கே வெட்கமில்லாதபோது சொல்பவர்களுக்கு ஏன் இருக்க வேண்டுமாம்?"
'அப்படியானால் இப்போது நாம் பார்க்கப்போகும் படத்தில்கூட அந்தக் காட்சிகளெல்லாம் உண்டா?
'“உண்டு; நிறைய உண்டு. படத்தின் பெயரே 'மறக்க முடியாத முத்த'மாச்சே' ” “நாசமாய்ப் போச்சு எதற்கோ வந்த என்னை, எதற்கோ இங்கே அழைத்துக்கொண்டு வந்து... ” '“கவலைப்படாதே! அதெல்லாம் நிஜ முத்தங்கள் இல்லை, நடிப்புக்காகக் கொடுக்கப்படும் முத்தங்கள்' ” “என்னதான் நடிப்பு என்றாலும் அதற்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டாமா?"
‘'வேண்டாம். நடிகர்கள், நடிகர்கள் அல்லாதவர்கள் என்று இன்றைய உலகத்தில் யாரும் இல்லை. ஏனெனில், இப்போது எல்லாருமே நடிகர்களாகத்தான் இருக்கிறார்கள். படத்தில் என்ன, வீட்டில் கணவன் மனைவியைத் தழுவி முத்தமிடுகிறான்; அவன் வெளியே போனபின் பார்த்தால் மனைவியின் கை வளையல்கள் காணாமற் போய்விடுகின்றன. மனைவி கணவனைத் தழுவி முத்தமிடுகிறாள்; அவள் வெளியே போன பின் பார்த்தால் கணவனின் 'மணிபர்ஸ் காணாமற் போய் விடுகிறது. இதெல்லாம் இன்றைய நாகரிக உலகத்தில் சகஜம்!”
"ஆமாம், இவர்களே இப்படிச் செய்துவிட்டுப் பழியை யார் தலையில் போடுவார்கள்?"
'“வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் தலையிலோ, வேண்டாத விருந்தினர்கள் தலையிலோ போடுவார்கள். அதற்காக அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றவும்” செய்வார்கள்!"
'போலீஸாரிடம் புகார் செய்யமாட்டார்களா?”
'“கணவன் என்று சொல்லிக்கொள்பவரும், மனைவி என்று சொல்லிக்கொள்பவரும் ஒருவருக்கொருவர் திருடிக் கொள்ளாமல் இருந்தால் செய்வார்கள்; இல்லாவிட்டால், ஸில்லி, இதற்கெல்லாம் போய்ப் போலீஸிலாவது, புகார் செய்வதாவது நம்மைப் பற்றி, நம்முடைய அந்தஸ்தைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்கள்?' என்று சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வார்கள்!”
'“இதுவா நாகரிகம்?”
"ஆமாம்; இந்த நாகரிகத்துக்குப் பலியாகி, இவர்களைப் போல் தாங்களும் பெரிய மனிதர்கள் வேடம் போட வேண்டும், இவர்களைப் போல் தாங்களும் ஓரிரு நாட்களாவது ஆடம்பரமாக வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவே சில சமயம் இவர்கள் வீட்டு வேலைக்காரர்களும், வேண்டாத விருந்தினர்களும் உண்மையாகவே இவர்களுடைய வீட்டில் திருடிவிட்டு அரசாங்க விருந்தாளிகளாகிவிடுகிறார்கள்!"
“'பாவம், பாழும் நாகரிகத்துக்கு இவர்கள் பலியாவது போதாதென்று வேலைக்காரர்களையும், வீட்டுக்கு வரும் விருந்தாளிகளையுமல்லவா பலியாக்கி விடுகிறார்கள்? வாழ்க்கையில் இதெல்லாம் மறைந்து என்றுதான் உண்மைக்கு இடம் கிடைக்கப் போகிறதோ, தெரியவில்லை! என்றாள் அவள். ” “எங்கே கிடைக்கப் போகிறது? அதை இந்த உலகத்துக்கு உணர்த்த வந்த ஒரே ஒரு அரிச்சந்திரனுக்குக்கூட அன்றிருந்து இன்று வரை நாடகத்திலும் சினிமாவிலும் தானே இடம் கிடைக்கிறது? வாழ்க்கையில் கிடைக்கவில்லையே' என்றான் அவன். ” அப்போது ஏதோ ஒரு 'கட் - பாடி தனியாக வந்து அவர்களுக்கு முன்னாலிருந்த 'சீட்டில் உட்கார, அவளுக்குப் பக்கத்தில் யார் உட்காருவது?’ என்ற சர்ச்சையில் இறங்கிய இரண்டு டைட் - பாண்ட்'டுகள் திடீரென்று “ஜேம்ஸ்பாண்ட்” பாணியில் 'கும், கும்’ என்று குத்திக் கொள்ள, 'கட் - பாடி’ கண்கள் மட்டுமே சிரிக்க எழுந்து வாசலை நோக்கி, 'கமான் மை டியர், ஐ ஆம் ஹியர் என்று தன் மியாவ், மியாவ்' குரலில் அழைக்க, அவளுக்கென்று அவளுடன் வந்திருந்த யாரோ ஒரு தடியன் வந்து அவளுக்குப் பக்கத்தில் ஜம்மென்று உட்கார, "ஐ ஆம் வெரி சாரி, ஐ ஆம் வெரி வெரி சாரி என்று இரண்டு டைட் பாண்ட்'டுகளும் ஒன்றையொன்று பார்த்து அசடு வழியச் சிரித்துக்கொண்டே உட்கார, "அடேயப்பா என்ன அவசரம் இவர்களுக்கு?' என்றாள் நீலா.
'“இப்போது எதிலும், எல்லாவற்றிலும் அவசரம்தான்; ராக்கெட் யுகமல்லவா?' என்ற மாதவன் கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "படம் ஆரம்பமாக இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறது; ஆளுக்கு ஒரு ஐஸ் கிரீம் சாப்பிடுவோமா?”" என்றான்.
'“இங்கேயா?”
“வேறு எங்கே சாப்பிடுவது, இங்கேயேதான்'”
“'இத்தனை பேருக்கு மத்தியிலா?”
“ஆமாம். அதோ பார், அங்கே எத்தனை பேர் அப்படிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று'”
“ஐயே அவர்கள் ஐஸ் கிரீம் சாப்பிடுவது போலவா இருக்கிறது? ஐஸ் கிரீம் சாப்பிடாதவர்களைப் பார்த்து அழகு" காட்டுவதுபோல் அல்லவா இருக்கிறது' என்றாள் அவள், மீண்டும் சிரித்துக்கொண்டே.”
“'ஸ், சிரிக்காதே! அவர்கள் உன்னைப் பட்டிக்காடு' என்று சொல்லிவிடுவார்கள்! ” “சொல்லட்டுமே கண்ட இடத்தில், கண்ட நேரத்தில், கண்டதை வாங்கிச் சாப்பிடும் பட்டணமாயிருப்பதைவிட நான் பட்டிக்காடாகவே இருந்துவிட்டுப் போகிறேன்! ” '“சரி, இரு என்னைத் தெரிந்தவர்கள் யாராவது இங்கே வந்து, உன்னை யார் என்று கேட்டால் அவர்களுக்கு நான் என்ன சொல்லட்டும்?'” என்று ஒரு சிக்கலான கேள்வியை அவளிடம் போட்டுவிட்டு, அவள் முகத்தை ஊடுருவிப் பார்த்தான் அவன்.
“'உங்களுக்கு எது இஷ்டமோ அதைச் சொல்லுங்கள்'” என்றாள் அவள்.
'“அதில்தானே கஷ்டமெல்லாம் இருக்கிறது! ” '“என்னால் உங்களுக்கு எந்தக் கஷ்டம் வருவதாயிருந்தாலும் அதை நான் விரும்பமாட்டேன்”'
“அவள் இப்படிச் சொன்னாளோ இல்லையோ, 'அதற்காக என்னை மறந்து வேறொருவனைக் கலியாணம் செய்து கொள்ளக்கூட நீ தயாராயிருப்பாயல்லவா?”" என்றான் மாதவன் சட்டென்று பேச்சை மாற்றி.
'“நீங்கள் என்னை மறந்து மதனாவைக் கலியாணம் செய்துகொண்டது போலவா?” என்றாள் நீலா.
அதற்குள் கணகணவென்று மணி ஒலிக்க, அவர்களுக்கு எதிர்த்தாற்போலிருந்த திரை விலகிற்று.
ஆனால் அவன் எதிர்பார்த்த அவள் மனத் திரை?...
“அது விலகவில்லை”!
ஒரே ஆடலும் பாடலுமாயிருந்த அந்த ஆங்கிலப் படம் மற்றவர்களைக் கவர்ந்த அளவுக்கு நீலாவைக் கவரவில்லை. அடிக்கடி குடிப்பதும் ஆடுவதுமாயிருந்த அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் ஏதோ வெறி பிடித்து ஆடுவதாகவே' அவளுக்குத் தோன்றிற்று. 'இதுவா மேல் நாட்டுக் கலை, இதுவா மேல் நாட்டு நாகரிகம்?' என்பது போல் அவள் மூக்கின் மேல் விரலை வைத்தாள். அந்த விரலை மாதவன் மென்னகையுடன் எடுத்து அவளுடைய மடியின்மேல் விட்ட போது, அவள் மெல்லச் சிரித்தாள்; அவனும் மெல்லச் சிரித்தான்.
இடையில் வந்த 'ஆடை களைந்து ஆடும் நடனம்' ஒன்று அங்கே வந்திருந்தவர்களின் கவனத்தை மட்டுமல்ல, கண்ணையும் வெகுவாகக் கவர்ந்தது. படத்தின் கதாநாயகி ஆடிக்கொண்டே ஒவ்வொரு ஆடையாகக் களைந்து எறிந்த போது, எல்லாரும் அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். நீலாவுக்கோ, கடைசியாக எஞ்சியிருந்த அந்த ஒரே ஒரு 'அண்டர் வே'ரையும் அவள் எங்கே அவிழ்த்துப் போட்டுவிடுவாளோ என்ற அச்சம்; தன்னையும் அறியாமல் மாதவனைச் சீண்டி, வீட்டுக்குப் போய் விடுவோமா?" என்றாள் அவள்.
"இதற்குள் வீட்டுக்குள் போனால் உன் அம்மாவிடம் நீ ' சினிமாவுக்குப் போகிறோம்' என்று சொல்லிவிட்டு வந்த பொய் என்ன ஆவது?" என்றான் அவன்.
"அது வேறே இருக்கிறதா? கண்ணை வேண்டுமானால் மூடிக்கொள்ளட்டுமா?"
"வேண்டாம்; நீ எதிர்பார்க்கும் கட்டத்துக்கு அவள் போக இந்தியாவில் அவளை விட்டிருக்க மாட்டார்கள்!" என்றான் அவன்.
"அப்படியென்றால்..."
"அந்தப் பகுதி ஏற்கெனவே வெட்டப்பட்டிருக்கும்!"
அதற்குள் அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர், "ஸ், சைலன்ஸ்!" என்று இரைய, அவருக்கு அடுத்தாற்போல் இருந்த இன்னொருவர், "சீச்சீ! ஆபாசம், மகா ஆபாசம்!" என்றார் தம் மூக்குக் கண்ணாடியை எடுத்து ஒரு முறைக்கு இரு முறையாகத் துடைத்துப் போட்டுக்கொண்டே.
"ஓய், சும்மா அளக்காதீர்! உண்மையைச் சொல்லும், நீர் எத்தனையாவது தடவையாக இந்தப் படத்தைப் பார்க்க வந்திருக்கிறீர்?" என்றார் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் நண்பர்.
"உம்மைப் போல் நாலாவது தடவையாகப் பார்க்கவில்லை சுவாமி, இரண்டாவது தடவையாகத்தான் பார்க்க வந்திருக்கிறேனாக்கும்!" என்றார் இவர் ரோசத்துடன்.
"எல்லாம் எனக்குத் தெரியும், ஓய்! இந்தப் படத்தை நீர் ஆறாவது தடவையாகப் பார்க்கிறீர்! அதிலும் சும்மா பார்க்கவில்லை; 'ஆபாசம், மகா ஆபாசம்' என்று சொல்லிக்கொண்டே பார்க்கிறீர்!" என்று அவர் மானத்தை வாங்கினார் அவர்.
அதற்குள் அவர்களுக்குப் பின்னாலிருந்தும், "ஸ், சைலன்ஸ்" என்ற சத்தம் கிளம்பவே, தியேட்டரில் அமைதி நிலவியது.
"ஆஹா! இந்த அமைதி நம் கோயில்களில் நிலவினால் எவ்வளவு அழகாயிருக்கும்!" என்றாள் நீலா.
"அங்கெல்லாம் இப்படி யார் ஆடுகிறார்கள்?" என்றான் மாதவன்.
அதற்குமேல் அவர்களைப் பேசவிடாமல், "சைலன்ஸ் ப்ளீஸ், சைலன்ஸ் ப்ளீஸ்!" என்ற ரசிக மகாஜனங்களின் கூக்குரல்கள் நாலா பக்கங்களிலிருந்தும் கிளம்பவே, "பக்தி பூர்வமாக இந்தப் பாடாவதி படத்தைப் பார்ப்பவர்கள் பார்க்கட்டும்; நாம் வேறு எங்கேயாவது போய்த் தொலைவோம்; வாருங்கள்!" என்று நீலா சட்டென்று எழுந்து வெளியே நடந்தாள்; மாதவனும் வேறு வழியின்றி அவளைத் தொடர்ந்தான்.
தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், 'இனி என்ன?' என்ற பிரச்னை மீண்டும் வந்து அவனைப் பற்றிக் கொண்டது. அவளுடன் நடந்துகொண்டே அவன் அதைப் பற்றி யோசித்தான், யோசித்தான், அப்படி யோசித்தான்.
பார்க்கப்போனால் மனச்சாட்சியை மதிக்காமல் வாழக் கூடியவனுக்கு அது ஒரு பிரச்னையே அல்ல; 'எனக்குப் பிடித்தவளை நான் கலியாணம் செய்து கொண்டு விட்டேன். அதற்கு மேலும் என் வாழ்க்கையில் குறுக்கிட நீ யார்? போ!' என்று அவன் அவளை எப்பொழுதோ விரட்டிவிட்டுத் தன் வழியே போயிருப்பான். பின்னால் அவள் மனம் மாறி வேறு யாரையாவது கலியாணம் செய்து கொண்டால், 'விட்டது சனியன்!' என்று தலை முழுகி யிருப்பான்; தற்கொலை செய்து கொண்டால், 'ஐயோ பாவம்! த்சொ, த்சொ!' என்று 'த்சொ' கொட்டிக்கொண்டே, தன்னையும் மீறி எரியும் தன் மனத்தை 'ஐஸ் கிரீம்' சாப்பிட்டுக் குளிர வைத்துக்கொண்டிருப்பான்!
மாதவனாலோ தன் மனச்சாட்சியை எப்போதுமே மதிக்காமல் இருக்க முடிவதில்லை . அதிலும், "நான் சின்னஞ் சிறுமியாயிருந்தபோதே, 'நீங்கள் எனக்கே எனக்கு; நான் உங்களுக்கே உங்களுக்கும்!' என்று என் பெற்றோர் மட்டுமல்ல; உங்கள் பெற்றோரும் என்னிடம் சொல்லி வந்தார்கள். அன்றிருந்தே உண்ணும் உணவில் நான் உங்களைக் கண்டேன்; உடுக்கும் உடையில் நான் உங்களைக் கண்டேன்; பேசும் பேச்சில் நான் உங்களைக் கண்டேன்; சிரிக்கும் சிரிப்பில் நான் உங்களைக் கண்டேன். சூடும் மலரிலும், விளையாடும் பொம்மையிலும்கூட நான் உங்களைக் கண்டேன், கண்டேன், கண்டுகொண்டே இருந்தேன். அப்படியெல்லாம் கண்டு, கண்டபின் என்னுடைய நெஞ்சிலேயே உங்களைக் கொண்டு, நினைவிலும் கனவிலும் இதுவரை உங்களோடு வாழ்ந்துவிட்ட என்னால் இனி இன்னொருவருடன் எப்படி வாழமுடியும்?" என்று அவள் பேச்சுவாக்கில் கேட்டபோது, அவனால் ஏனோ அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை.
ஆனால், அடிக்கடி நினைத்துக்கொள்ளும் அந்த ஒன்றை மட்டும் அவன் அப்போதும் நினைத்துக்கொண்டான். அதுதான் இது:
"இந்த உலகத்தில் 'நல்லவ'னாக வாழ்வதுதான் எவ்வளவு கடினமானது!"
அதற்காகவே சிலர் 'வல்லவ'னாக வாழ வேண்டுமென்று சொல்கிறார்கள்; அப்படியே வாழ்ந்தும் காட்டுகிறார்கள்.
ஆனால், அவர்களை நெருங்கிப் பார்த்தால்?....
கையிலிருக்கும் ஜபமாலை மட்டுமா கண்ணுக்குத் தெரிகிறது? கக்கத்தில் மறைத்து வைத்திருக்கும் கன்னக் கோலும் தெரிந்து தொலைகிறதே!
அத்தகைய வல்லவனாக வாழமுடியுமா, தன்னால்?...
முடியாத காரியம்; முடியவே முடியாத காரியம்!
இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டே நீலாவுடன் வந்துகொண்டிருந்த மாதவன் பஸ் ஸ்டாண்டை அடைந்த போது பகல் மணி பன்னிரண்டுக்கு மேல் இருக்கும். அப்போதும் ஸ்டாண்டில் கூட்டம் இல்லாமல் இல்லை; இருக்கத்தான் இருந்தது. ஆனால் அவர்களை வரிசைப்படுத்தி, 'க்யூ'வில் நிற்க வைக்கத்தான் அந்த நேரத்தில் ஆள் இல்லை; அதாவது, கண்டக்டர் இல்லை.
அதன் காரணமாக அங்கு வந்து நின்ற பஸ்களில் அடித்துப் பிடித்து ஏறிக் கொண்டிருந்தவர்களைக் கண்ட ஒருவர், "கண்டக்டர் இல்லாவிட்டால் என்ன? பஸ் வந்து நின்றதும் நமக்கு நாமே முட்டி மோதிக்கொண்டுதான் ஏற வேண்டுமா? ஒழுங்காக நின்று ஒருவர் பின் ஒருவராக ஏறினால் என்னவாம்?" என்றார்.
"அப்படித்தான் ஏறுகிறார்களே, வயதானவர்களுக்கும் தாய்மார்களுக்கும் முதலில் இடம் விட்டுவிட்டாவது ஏறுகிறார்களா என்றால், அதுவும் இல்லை!" என்றார் இன்னொருவர்.
இந்தச் சமயத்தில் அங்கே ஒரு பஸ் வந்து நின்றதோ இல்லையோ, அதுவரை அங்கே நின்று பேசிக்கொண்டிருந்த அத்தனை பேரும் தாய்மார் என்றும் பார்க்காமல், வயதானவர் என்றும் பார்க்காமல் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள்!
இந்தக் காட்சியைச் சற்றுத் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மாதவன், "இதிலிருந்து உனக்கு ஏதாவது தெரிகிறதா?" என்று நீலாவைக் கேட்டான்.
"ஓ, தெரிகிறதே! பஸ் பிரயாணிகள் பேச்சு, பஸ் வந்தால் போச்சு!" என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.
"அது மட்டும் அல்ல; உபதேசம் எதுவாயிருந்தாலும், அதை உபதேசிப்பவர் யாராயிருந்தாலும், தனக்கென்று வரும்போது அதைப் பொருட்படுத்துவதில்லை என்றும் தெரிகிறதல்லவா?" என்றான் அவன்.
அவள் சிரித்தாள்; "ஏன் சிரிக்கிறாய்?" என்றான் அவன்.
"ஒன்றுமில்லை; அதே மாதிரிதான் நீங்களும் என்னைப் பொருட்படுத்தாமல் இருந்து விட்டீர்கள், இல்லையா?" என்றாள் அவள்.
"உண்மைதான்; நீ என்னை நினைத்துக்கொண்டிருந்த அளவுக்கு உன்னை நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லைதான்!" என்றான் அவன்.