சுயம்வரம்/அத்தியாயம் 16
பெண்களாம், பெண்கள்! தங்கள் அழகால்,
அலங்காரத்தால் ஆண்களை வெறி பிடித்து
அலைய விடாத பெண்கள் என்ன பெண்கள்!…
‘நீ என்னை நினைத்துக்கொண்டிருந்த அளவுக்கு உன்னை நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை!’
‘நீ என்னை நினைத்துக்கொண்டிருந்த அளவுக்கு உன்னை நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை!’...
அவன் சொன்ன இந்த வார்த்தைகளை அவள் இதயம் மட்டும் இப்படித் திரும்பத் திரும்ப எதிரொலிக்கவில்லை; சாலையில் அப்போது ஓடிக்கொண்டிருந்த கார், பஸ் ஹாரன் சத்தங்களும், ஆட்டோ, ஸ்கூட்டர் ஆகியவற்றின் அலறல்களும், சைக்கிள் மணிகளின் ‘கிண்கிணி’ ஒலிகளும் கூட அப்படியே எதிரொலிப்பதுபோல் இருந்தன அவளுக்கு!
உபசாரத்துக்காகச் சொல்வதாயிருந்தால், அவர் அதைக் கொஞ்சம் மாற்றி, ‘நானும் உன்னை நினைத்துக்கொண்டு தான் இருந்தேன்!’ என்று இழுத்தாற்போலவாவது சொல்லியிருக்கலாம்; அதற்கும் மேலே போய்ச் சொல்வதாயிருந்தால், ‘என்று உன்னைப் பார்த்தேனோ, அன்றிலிருந்து எனக்குச் சாப்பாடு இறங்குவதில்லை; தூக்கம் பிடிப்பதில்லை’ என்று கூட அளந்திருக்கலாம். நல்ல வேளை, அவர் அப்படிப் பட்டவராயில்லாமல் இருப்பது தன் பாக்கியம்! இப்போதெல்லாம் ‘உதடு வேறு, உள்ளம் வேறு’ என்று இருப்பவர்களைத்தானே உலகமெங்கும் பார்க்க முடிகிறது? இரண்டும் ஒன்றாயிருப்பவர்களை எங்கே பார்க்க முடிகிறது?...
இப்படி நினைத்த அவள் உள்ளத்தில் உடனே எழுந்த கேள்வி இது:
'அவர் என்னை நினைக்காதபோது நான் மட்டும் அவரை ஏன் நினைத்துக்கொண்டிருந்தேன்?'
'அவர் என்னை நினைக்காதபோது நான் மட்டும் அவரை ஏன் நினைத்துக்கொண்டிருந்தேன்?'...
தன் உள்ளத்தில் அடுத்தடுத்து எழுந்த இந்தக் கேள்விக்கு அவள் கண்ட விடை இது:
'அவர் என்னை நினைக்காத போது நான் மட்டும் அவரை நினைத்துக்கொண்டிருந்தது என் தவறுதான்!'
இதையும் அவள் தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் அவனிடம் தெரிவித்தபோது, அவன் சொன்னான்:
"நீ என்னை நினைத்தது உன் தவறு என்றால், உன்னை நான் நினைக்காமல் இருந்தது என் தவறாக அல்லவா ஆகி விடும்?"
அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுக் கேட்டாள்:
"ஆமாம், நீங்கள் ஏன் என்னை நினைக்கவில்லை?"
"உன்னுடைய அசட்டுத்தனம்தான் அதற்குப் பெரும்பாலும் காரணமாயிருந்திருக்க வேண்டும்!"
"அடக்கத்துக்குப் பெயர் அசட்டுத்தனமா?"
இப்போது அவன் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:
"இவ்வளவு தூரம் நீ பேசுவாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!"
"அது உங்கள் குற்றமல்ல; இதுவரை நான் உங்களுடன் இவ்வளவு தூரம் பேசாமல் இருந்தது என் குற்றம்!""பேசியிருந்தால் ஒரு வேளை நான் 'மதனாவைக் காதலிக்காமல் இருந்திருக்கக் கூடும்."
"இங்கெல்லாம் காதலுக்கு அடிப்படை வெறும் பேச்சுத்தானா?"
"இல்லை. என்னைப் பொறுத்தவரை முதலில் உருவம்; அப்புறம் உள்ளம்."
"அந்த இரண்டும் என்னிடமும் இருப்பதாக இப்போதாவது தெரிகிறதா உங்களுக்கு?"
"தெரிகிறது."
"நல்ல வேளை, பிழைத்தேன்!"
"ஏன், எதற்காக?"
"உங்களுக்காக நானும் அதோ நிற்கிறாளே, அந்தப் பெண்ணைப்போல 'பிளவு'ஸைக் கொஞ்சம் மேலே தூக்கி, 'ஸாரி'யைக் கொஞ்சம் கீழே இறக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கு இப்போது அவசியமில்லை என்று தோன்றுகிறது!" என்றாள் அவள், சற்றுத் தூரத்தில் அடி வயிற்றையும் முதுகையும் காட்டியபடி நின்றுகொண்டிருந்த ஒரு 'மினி முன்றானை'யைச் சுட்டிக்காட்டி.
"ஐயோ, வேண்டாம்! பெண்கள் தங்களுடைய ஆடை அணிகளால் ஆண்களுக்குச் சாந்தியைத்தான் அளிக்க வேண்டுமே தவிர, வெறியை ஊட்டக் கூடாது. அது அவர்களுக்கும் நல்லதல்ல; சமூகத்துக்கும் நல்லதல்ல."
"அப்படியானால் உங்கள் கண் மட்டும் அல்ல, எண்ணமும் இன்னும் அழகாய்த்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால்..."
"என்ன ஆனால்...""அவசரப்பட்டு விட்டீர்களே!"
"அது இப்போதுதானே தெரிகிறது எனக்கு!"
"ஆமாம், நீங்கள் மதனாவைக் கலியாணம் செய்து கொண்ட விஷயம் உங்கள் பெற்றோருக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"அப்படியானால் அவர்களுடைய சம்மதத்துடன்தான் நீங்கள் மதனாவைக் கலியாணம் செய்து கொண்டீர்களா?"
"இல்லை; அப்படி நடந்திருந்தால் அவர்கள் ஏன் என்னைத் தனியாக விட்டுவிட்டு ஊருக்குப் போயிருக்கப் போகிறார்கள்?"
"அட, கடவுளே! அது தெரியாத என் பெற்றோர், இப்போது அவர்கள் இருக்கும் ஊருக்கல்லவா போகப் போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!"
"போகட்டும்; அங்கே போய் அவர்களாக விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் வரையிலாவது நீ என்னைக் கொஞ்சம் இங்கே நிம்மதியாக இருக்கவிடேன்!"
"கவலைப்படாதீர்கள்; அந்த நிம்மதி என்னால் இன்று மட்டுமல்ல; என்றும் கெடாது."
"இப்போதைக்கு அது போதும். வா, போவோம்."
"எங்கே?"
"இதோ, நாம் போகவேண்டிய பஸ் வந்துவிட்டது!"
"சரி, வாருங்கள்."
இருவரும் மற்றவர்களைப் போலவே தாங்களும் முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள்!