சுயம்வரம்/அத்தியாயம் 17
பக்தர்கள்தான் பகவான்மீது பழியைப் போட்டுக்
கொண்டிருக்கிறார்கள். இவர்களுமா?…
காலை சினிமாவுக்குத் தான் மட்டும் போகாமல் தன் மகளையும் அழைத்துக்கொண்டு போயிருக்கும் தன்னுடைய ‘எதிர்கால மருமக’னை ஆவலோடு எதிர்பார்த்தவாறு வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்துகொண்டிருந்தாள் ‘லட்டு மாமி’.
வந்தவர்கள் மாதவனும் நீலாவும் அல்ல; மகனிடம் கோபித்துக்கொண்டு ஊருக்குப் போயிருந்த அவன் தகப்பனார் சம்பந்தமும், தாயார் சாரதாம்பாளும்தான்!
அவர்களைக் கண்டதும், “என்ன இப்படித் திடீரென்று வந்து நிற்கிறீர்கள்! நாங்களல்லவா உங்களைத் தேடிக்கொண்டு ஊருக்கு வருவதாக இருந்தோம்?” என்றாள் மாமி.
“தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! நீங்கள் எப்போது இங்கே வந்தீர்கள் என்று விசாரிக்கக்கூட இப்போது எங்களுக்கு நேரமில்லை. எங்கே பையன், எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறான்?” என்று அவளைப் பரபரப்போடு விசாரித்தாள் சாரதாம்பாள்.
“எந்தப் பையன்? ஏன் ஆஸ்பத்திரிக்குப் போனான்?” என்று அவள் ஒன்றும் புரியாமல் அவர்களைத் திருப்பிக் கேட்டாள்.
“உங்களுக்குத் தெரியாதா? மாதவன் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் கிடக்கிறானாமே எங்களுக்குத் தந்தியடித்த புண்ணியவான் அவன் இருக்கும் ஆஸ்பத்திரியின் பெயரைத் தெரிவிக்க மறந்துவிட்டிருக்கிறான்; அதனால்தான் நாங்கள் நேரே வீட்டுக்கு வந்தோம்” என்றார் சம்பந்தம்.
இதைக் கேட்டதும் தன்னை யாரோ தூக்கி வாரிப் போடுவதுபோல் இருந்தது மாமிக்கு; "விபத்தா! எப்போது நடந்ததாம்?" என்று திகிலுடன் கேட்டாள்.
"நேற்றிரவு நடந்திருக்கும் போலிருக்கிறது; விடியற்காலையில் தந்தி வந்தது. நாங்கள் உடனே ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வருகிறோம்" என்றாள் சாரதாம்பாள்.
லட்டு மாமிக்கு இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது; "நேற்று இரவுதானே நடந்திருக்கும் என்கிறீர்கள்? இன்று காலையில் நடந்திருக்காதே!" என்றாள்.
அதற்குள் பொறுமை இழந்த சாரதாம்பாள், "ஐயோ! இப்படிப் பேசிக்கொண்டிருக்கவா நாங்கள் இத்தனை அவசரமாக இங்கே ஓடி வந்தோம்? அவன் எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறான்? அதைக் கொஞ்சம் சொல்லேன், முதலில்!" என்று பரபரத்தாள்.
அப்போது மாதவனும் நீலாவும் சேர்ந்தாற்போல் உள்ளே நுழைய, "அதோ பாருங்கள்!" என்றாள் மாமி, பொங்கி வந்த புதுச் சிரிப்புடன்.
அவ்வளவுதான்; சாரதாம்பாள் ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் தாவி அணைத்துக்கொண்டு, "எதற்கு வந்தேனோ, ஏன் வந்தேனோ? நீங்கள் இருவரும் இப்படி சேர்ந்தாற்போல் வரும் காட்சியை ஒரு முறையாவது பார்க்க இந்த ஜன்மத்தில் கொடுத்து வைத்திருந்தேனே, அதுவே போதும் எனக்கு!" என்றாள்.
நீலா, மாதவனை ஓரக் கண்ணால் பார்த்துச் சிரித்தாள்; மாதவனும் அவளை அதே மாதிரி பார்த்துச் சிரித்தான்!
அதற்குள் ஆசை தீர்ந்த சாரதாம்பாள் அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு, "இப்போது தெரிந்து விட்டது எனக்கு, அந்தத் தந்தியை யார் அடித்திருப்பார்கள் என்று!" என்றாள்.
"எனக்கும்தான் அதைக் கொஞ்சம் சொல்லேன்?" என்றார் சம்பந்தம்.
"பகவான்தான் அடித்திருக்கிறார்! இல்லாவிட்டால் இவர்கள் இருவரையும் இப்படிச் சேர்ந்தாற்போல் பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்குமா?" என்றாள் அவள்.
"இப்போதுதான் அது என் ஞாபகத்துக்கு வருகிறது; அந்தத் தந்தியின் அடியில் 'பகவான்' என்றுதான் குறிப்பிட்டிருந்தது!" என்றார் அவர்.
தன் பெற்றோரின் திடீர்ப் பிரவேசத்தைக் கண்டு ஏற்கெனவே திகைப்படைந்திருந்த மாதவன், அவர்கள் 'தந்தி, கிந்தி' என்றதும் மேலும் திகைப்படைந்து, "எந்தத் தந்தியைப் பற்றி சொல்கிறீர்கள், அப்பா?" என்றான் குழப்பத்துடன்.
"விபத்துக்குள்ளானவனே இப்படிக் கேட்டால் நாங்கள் என்னடா சொல்வது?" என்றார் அவர், சிரித்துக்கொண்டே.
"விபத்தா, யாருக்கு?"
"உனக்குத்தான்! அது உனக்கே தெரியாதா? நேற்றிரவு நீ ஏதோ ஒரு ஸ்கூட்டர் விபத்தில் சிக்கிக் கொண்டாயாம்; உன்னைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் போட்டு வைத்திருக்கிறார்களாம்; எங்களை உடனே புறப்பட்டு வரும் படி உன் நண்பன் 'பகவான்' தந்தி அடித்திருந்தானே?"
"பகவானா! என்னுடைய நண்பனா? யார் அப்பா, அவன்?"
"யாருக்குத் தெரியும், பகவானுக்குத்தான் தெரியும்!"
"தெரிந்திருந்தால் அவனுக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும், அப்பா! எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆமாம். நீங்கள் அந்தத் தந்தியைப் பார்த்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறீர்களா?"
"இல்லாவிட்டால் ஏன் வருகிறோம்? நாங்கள்தான் 'சட்டி சுட்டதடா, கை விட்டதடா!' என்று போய் விட்டோமே!"
இந்தச் சமயத்தில் சாரதாம்பாள் குறுக்கிட்டு, "என்ன இருந்தாலும் நீ அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுடா! அதில் எனக்கும் உன் அப்பாவுக்கும் எவ்வளவு வருத்தம் தெரியுமா?" என்றாள்.
"இருக்கலாம் அம்மா, இதுவரை எத்தனை தவறுகள் செய்திருப்பேன் நான்! அதையெல்லாம் மன்னித்த நீங்கள் இதையும் மன்னித்திருக்கக் கூடாதா?"
"இனி மன்னிக்காமல் என்ன செய்வது? நாங்கள் நினைத்தது வேறு, நடந்தது வேறு என்று ஆகிவிட்டது. அதற்கும் அந்த பகவான்தான் காரணமோ, என்னவோ?" என்றார் சம்பந்தம்.
அதுவரை அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த மாமி, "என்ன விஷயம் அது?" என்றாள் ஒன்றும் புரியாமல்.
அவள் அப்படிக் கேட்டதுதான் தாமதம், மாதவன் முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு எழுந்து வெளியே நடந்தான்.
'யார் அடித்திருப்பார்கள் அந்தத் தந்தியை?'
'யார் அடித்திருப்பார்கள் அந்தத் தந்தியை?'...
வீட்டை விட்டு வெளியே வந்த மாதவனின் உள்ளத்தில் இந்தக் கேள்விதான் அடுத்தடுத்து எழுந்து கொண்டிருந்தது. அதற்குரிய பதிலும் அவனுக்குக் கிடைக்காமற் போகவில்லை; கிடைத்தது. ஆனாலும் 'அப்படியும் இருக்குமா?' என்று ஒரு சந்தேகம்; 'ஏன் இருக்காது?' என்று அதைத் தொடர்ந்து ஒரு சமாதானம் - இப்படியாக அவன் தன் கால் போன போக்கில் நடந்துகொண்டிருந்தபோது, "வாழ்த்துக்கள்!" என்று சொல்லிக் கொண்டே வந்து அவன் கையைப் பிடித்துக் 'குலுக்கு, குலுக்கு' என்று குலுக்கினான் 'அப்கோர்ஸ் ஆனந்தன்.'
அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "எதற்கு?" என்றான் மாதவன்.
"இன்றிரவோடு உன்னைப் பிடித்த தலைவலி விடுகிறதாமே!"
"எந்தத் தலைவலி?"
"அதுதான், உன்னுடைய 'மாமா பட்டாள'த்தைச் சொல்கிறேன்! அவர்கள் இன்றிரவு ஊருக்குப் போய் விடுகிறார்களாமே? அதைக் கேட்க உனக்கு எப்படி இருந்ததோ என்னவோ, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பாவம், மதனா! உனக்காகத் தன்னைப் பெற்று வளர்த்தவர்களைக் கூட உதறி எறிந்துவிட்டு வந்து..."
அவன் முடிக்கவில்லை ; "ச்சூச்சூ!" என்று 'சூ' கொட்டிக்கொண்டே தன் கைக்குட்டையை எடுத்து அவன் கண்களைத் துடைத்தான் மாதவன்.
இப்போது ஆனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை; தான் சொல்ல வந்ததை மேலே சொல்லாமல் நிறுத்திக் கொண்டு, "என்னடா, விளையாடுகிறாயா?" என்றான் வழக்கம்போல் அவன் தோளைத் தட்டி.
அவ்வளவுதான்; "ஆமாம், உனக்கு வாழ்க்கையே விளையாட்டாக இருக்கும்போது, உன்னைப் போன்றவர்களை உதைப்பதே எனக்கு ஏன் விளையாட்டாக இருக்கக்கூடாது?"என்று கேட்டுக்கொண்டே மாதவன் தன் முஷ்டியை உயர்த்தி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துக் குத்தி, காலால் அவனை எட்டி ஓர் உதை உதைத்தான். அவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவன் தள்ளாடிக் கீழே விழப்போன சமயம் அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி, "தெருவில் வெறி பிடித்த நாயை அடித்துப் போடுவதுபோல் அடித்துப் போடவேண்டுமடா, உன்னை!" என்று உறுமிய படி, அவனை அடி மேல் அடித்து, ஒரு புரட்டுப் புரட்டி எடுத்தான் மாதவன்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலால் ஒரு கணம் நிலை குலைந்து போன ஆனந்தன், மறுகணம் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஆசை மதனாவை அழைத்துக்கொண்டு போய் நாளை நீ தொடங்கவிருக்கும் புது வாழ்வுக்கு நல்வாழ்த்துக் கூற வந்த எனக்கு நீ செலுத்தும் நன்றியா இது!" என்று அப்போதும் அவனுக்குக் கை கொடுக்கப் பார்த்தான்.
"நல்வாழ்த்துக் கூற வந்த வஞ்சக நரியே யார் அடித்தது அந்தத் தந்தியை? அதைச் சொல், முதலில்!" என்று அவன் கழுத்தைப் பிடித்து அப்படியே ஒரு தூக்குத் தூக்கிப் போட்டு, ஓர் உலுக்கு உலுக்கினான் மாதவன்.
"எந்தத் தந்தியை?" என்றான் அவன், அந்த நிலையிலும் ஏதும் அறியாதவனைப் போல.
"இன்னுமா நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்? எனக்கு ஏதோ ஸ்கூட்டர் விபத்தென்றும், என்னைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் போட்டிருக்கிறார்களென்றும் என் தந்தைக்கு தந்தியடித்த 'பகவான்' நீதானே?"
இதைக் கேட்டவுடன் தன்னையும் அறியாமல் 'திரு திரு'வென்று விழிக்க ஆரம்பித்துவிட்ட தன் கண்களை மறைக்க முடியாமல், "யார் சொன்னது, அருணா சொன்னாளா?" என்றான் அவன் ஆத்திரத்துடன்."ஏன், அவளுக்குத்தான் தெரியுமா அது?" என்றான் மாதவன், சற்றே நகைத்து.
அதற்குமேல் அவனைச் சமாளிக்க முடியவில்லை ஆனந்தனால்; "இல்லை, அந்தத் தந்தியை அவள் சொல்லித் தான்டா நான் அடித்தேன்!" என்று உளறிக் கொட்டினான்.
"இல்லாவிட்டால் அடித்திருக்க மாட்டாய்; அப்படித் தானே? எட்டிப்போடா, நாயே!" என்று அவனை ஒரு தள்ளுத் தள்ளி விட்டுவிட்டு, "போயும் போயும் உன்னைத் திருத்த முடியும் என்று நான் இத்தனை நாளாய் நம்பி யிருந்தேனே, அதைச் சொல்" என்று தன் வழியே நடந்தான் மாதவன்.
அப்படி நடந்தபோது, 'அந்த நாளிலிருந்து இந்த நாள் வரை சட்டங்களாலும் சாஸ்திரங்களாலும்கூடத் திருத்த முடியாத இவனைப் போன்றவர்களை இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' என்ற ஒரு கேள்வி அவன் உள்ளத்தில் எழுந்தது.
'ஒன்றும் செய்ய முடியாது; வேண்டுமானால் இன்னும் சில சட்டங்களையும் சாஸ்திரங்களையும் உருவாக்கலாம்; அவ்வளவோ!'
அந்தக் கேள்வியைத் தொடர்ந்து இப்படி ஒரு பதிலும் அவன் உள்ளத்திலிருந்தே அவனுக்குக் கிடைத்தது; சிரித்துக் கொண்டான்.
அவன் தலை மறைந்ததும் தன்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்தான் ஆனந்தன்; 'நல்ல வேளை, இங்கே தனக்குத் தெரிந்தவர்கள் யாரும் 'இல்லை!' என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான். அவன் கைகள் மாதவனின் பிடியால் கசங்கிப் போன சட்டையை அவசர அவசரமாகச் சரி செய்தன. அதற்குப் பின், 'விடக்கூடாது; இனி அந்த மதனாவை விடவே கூடாது!' என்று கருவிக்கொண்டே அவன் திரும்பி நடந்தான்.
ஆனால் அவனை வெகு தூரம் நடக்க விடவில்லை அருணா; எங்கிருந்தோ ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு வந்திருந்த அவள், அவனுக்கு அருகே அதை 'டக்'கென்று நிறுத்தி, "ஏறிக்கொள்ளுங்கள்!" என்றாள்.
"எதற்கு?" என்றான் அவன், ஒன்றும் புரியாமல்.
அவள் சிரித்தாள்; "ஏன் சிரிக்கிறாய்?" என்றான் அவன்.
"ஒன்றுமில்லை; ஏறிக்கொள்ளுங்கள்!" என்றாள் அவள் மீண்டும்.
அவன் ஏறவில்லை ; "எதற்கு, அதைத்தான் சொல்லேன்" என்றான் மீண்டும்.
"பாவம், என்னால்தானே அந்த மாதவன் உங்களை அப்படி உதைத்தான்?" என்றாள் அவள்.
அவன் திடுக்கிட்டு, "அதை நீ பார்த்தாயா?" என்றான் உடலும் உள்ளமும் ஒருங்கே கூச.
"ஆமாம், பார்த்தேன். பின்தான் அந்த உதைக்குப் பின் உங்களால் நடக்க முடியுமோ, முடியாதோ என்று இந்த டாக்சியைப் பிடித்துக்கொண்டு வந்தேன்!" என்றாள் அவள்.
இதைக் கேட்டதும் அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், "என்மேல் உனக்கு இவ்வளவு அனுதாபம் இருக்குமென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!" என்றான் சற்றே இளித்தபடி."அதற்காக உங்களை நான் காதலிப்பதாக நீங்கள் நினைத்துக்கொண்டு விடாதீர்கள்!" என்றாள் அவள்.
"அதை நானும் எதிர்பார்க்கவில்லை, அருணா! என்னுடைய 'பாலிசி'தான் உனக்குத் தெரியுமே? 'ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்' என்ற 'போர்' அடிக்கும் வாழ்க்கையை எந்த நிலையிலும் விடாமல் கட்டிக்கொண்டு அழ விரும்புபவர்களுக்குத்தானே காதலும் கலியாணமும் வேண்டும்? எனக்கெதற்கு அதெல்லாம்!" என்றான் அவன், அலட்சியமாக.
"அதனால்தான் அந்த மாதவன் உதைத்ததைக் கூட உங்களுடைய 'பாலிசி'க்குக் கிடைத்த பரிசாக நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் போல் இருக்கிறது!"
இதைச் சொல்லிவிட்டு அவள் மறுபடியும் சிரித்தாள், அந்தச் சிரிப்பைத் தாங்க முடியவில்லை அவனால்; "சிரிக்காதே!" என்று அவளை அதட்டிவிட்டு, "அந்தப் பரிசுக்குரிய தண்டனையை அவனுக்கு நான் அளிக்காமல் விடமாட்டேன்!" என்றான் வெஞ்சினத்துடன்.
"அப்படி என்ன தண்டனை அளிக்கப் போகிறீர்கள் அவருக்கு?" என்றாள் அவள்.
"அதைச் சொல்வதற்கு இது ஏற்ற இடமும் அல்ல; நேரமும் அல்ல!" என்றான் அவன்.
"அப்படியானால் ஏறுங்கள் டாச்சியில்; ஏதாவது ஒரு ஓட்டலுக்குப் போவோம்!" என்றாள் அவள்.
அவன் ஏறிக்கொண்டான்; டாக்சி பறந்தது!