சுயம்வரம்/அத்தியாயம் 6
காதல் என்பதும் தொடர்கதைதான்,
கணக்கே இல்லாதது!...
மாலை மணி ஐந்தும் ஆயிற்று, ஆறும் ஆயிற்று; மாதவனைக் காணோம். அவனுக்காக மதனா நாலரை மணிக்கே விடுதியை விட்டு வெளியே வந்து காத்திருந்ததுதான் மிச்சம்; வந்தது அவன் அல்ல; கொட்டாவி
ஆஆஆவ்வ்வ்!...
அவள் தன் இருபத்தோராவது கொட்டாவியை இத்தனை அட்டகாசமாக விட்டுக்கொண்டிருந்தபோது, அவளுடைய வாய்க்கு அருகே யாரோ ஒர் ஆண் பிள்ளையின் கை நீண்டது. நீண்ட கை சும்மா இருக்கவும் இல்லை; விரலைச் சொடுக்கி ‘டிக், டிக், டிக்’ என்று மும்முறை சிட்டிகையும் போட்டு வைத்தது.
மிரண்டு போய்த் திரும்பினாள் மதனா, அசடு வழிய அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ‘அப்கோர்ஸ் ஆனந்தன்’, “ஒன்றுமில்லை; கொட்டாவிக்கு ‘சென்ட் ஆப்’ கொடுத்தேன், அவ்வளவுதான்!” என்றான்.
“நீங்களா!” என்றாள் அவள், ஏமாற்றத்துடன்.
“ஏன், மாதவன் என்று நினைத்தாயா? அவன் தன் எதிர்கால மனைவி நீலாவுடன் சினிமாவுக்கல்லவா போயிருக்கிறான்?”
“என்ன இங்கே நான் ஒரு மனைவி இருக்க, அங்கே இன்னொரு மனைவியா”?
“ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதெல்லாம் பழமை, பத்தாம்பசலித்தனம். டபிள், ட்ரிபிள் என்று இருப்பதுதான் இப்போது புதுமை, புரட்சி”
'“அட, பாவி”'
'“அப்கோர்ஸ், இருக்கலாம்; அவன் உனக்குப் பாவியாக இருக்கலாம். ஆனாலும் அவனை நான் புண்ணியவான் என்றே சொல்ல வேண்டும்”...'
'“ஏனாம்”?"
'“மீண்டும் ஒரு முறை என் இதயத்தை உன்னிடம் திறந்து காட்ட அவன் எனக்கொரு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறானல்லவா”?
'கலியானத்திற்குப் பிறகுமா?"
'“அதில் என்ன சந்தேகம்? இப்போதெல்லாம் காதலுக்குக்கலியாணம் ஒரு முடிவும் அல்ல; முட்டுக்கட்டையும் அல்ல. உன்னை நான் தொடர்ந்து காதலிப்பேன் கண்ணே, தொடர்ந்து காதலித்துக்கொண்டே இருப்பேன்”
“அட, என் ராஜா அதிசயக் காதலாயிருக்கிறதே, இது?”
'“அபூர்வமான காதல் என்றும் சொல்லு”'
'“அதற்குத்தான் இப்போது வந்திருக்கிறீர்களா, நீங்கள்”?
'“இல்லை, அதற்கு மட்டும் இல்லை; அதர்மம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் தர்மத்தைக் காக்க அடியேன் வருவேன்”!
சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவோ?’’ “அவனுக்கு அடித்த அதிர்ஷ்டம் எனக்கு எங்கே அடிக்கிறது? அவன் எதையாவது கடித்துத் தின்றுவிட்டு மீதியைக் கொடுத்தால்கூட கோபியர் அதை வாங்கித் தேவாமிர்தமாக எண்ணிச் சாப்பிட்டார்களாம். நான் கொடுத்தால் யார் சாப்பிடுகிறேன் என்கிறார்கள்?”
“ஐயோ, பாவம்! நான் வேண்டுமானால் சாப்பிட்டுத் தொலைக்கட்டுமா?”
அவள் இப்படிச் சொன்னதுதான் தாமதம், “நிஜமாகவா மதனா, நிஜமாகவா?” என்று ஆனந்தன் வாயெல்லாம் பல்லாகக் கேட்டான்.
“சந்தேகப்படக் கூடாது; எதிலும் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையே எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படை” என்றாள் அவள்.
“ஆகா! எவ்வளவு பெரிய தத்துவத்தை எடுத்து இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிட்டாய்! அழகில் நீ ரதி மட்டுமல்ல; அறிவிலும்... அறிவிலும்...”
“யாரைச் சொல்வதென்று தெரியவில்லையா? ‘ஒளவை’ என்று சொல்லுங்களேன்?”
“சே, அவள் கிழவி”
“உண்மையான காதல் கிழவியென்றும் குமரியென்றும் பிரித்துப் பார்ப்பதில்லை; அது தெரியுமா, உங்களுக்கு?”
“அப்கோர்ஸ், இருக்கலாம்; இருட்டில் வேண்டுமானால் சிலருக்குக் கிழவியென்றும், குமரியென்றும் வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நான் கிழவியைக் கலியாணம் செய்துகொண்டு என்ன செய்வது? வெற்றிலை பாக்கா இடித்துக் கொடுத்துக்கொண்டிருப்பது?” "யாருக்கு யார் எதைச் செய்தால் என்ன? அதில் ஊடுருவி நிற்கும் அன்புதான் முக்கியம்."
"அன்பு, பாட்டிக்குப் பேரன்மேல் இருக்கட்டும்; பேரனுக்குப் பாட்டியின் மேல் இருக்கட்டும்; எனக்கு அது வேண்டாம்!" என்று சொல்லிக்கொண்டே, கால் சட்டைப் பைக்குள் கையை விட்டு, ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்தான் ஆனந்தன். அதை ஒரு பக்கம் கடித்துத் தின்றுவிட்டு, மீதியை அவளிடம் கொடுத்தான்.
"அடி, சக்கை! காதல் பரீட்சைக்குத் தயாராக வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?"
"ஆமாம், ஒரு காதல் மறைந்த பிறகு இன்னொரு காதல் தோன்ற வேண்டியதுதானே?"
"மறைவது எப்படிக் காதலாகும்?"
"அதெல்லாம் ராமாயணக் காலத்துக்காதல் 'ராமா, ராமா' என்று இருந்தாளாம் சீதை; 'சீதா, சீதா' என்று இருந்தானாம் ராமன். 'இந்தக் காலத்துக் காதல் அப்படியா இருக்கிறது? மறைகிறது, தோன்றுகிறது; மறைகிறது, தோன்றுகிறது!"
"அதற்குப் பெயர் காதல் அல்ல, கவர்ச்சி; இனக் கவர்ச்சி!"
"கழுதையை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்"
"காதலுக்குக் 'கழுதை' என்று கூட ஒரு பெயர் உண்டா?"
"உண்டு; முன்னால் அது முட்டாவிட்டாலும் பின்னால் உதைக்குமே!"
"அப்படிப்பட்ட காதலை நீங்கள் ஏன் இன்னும் கட்டிக் கொண்டு அழவேண்டுமாம்?""தூங்கத்தான்"
"என்ன, காதல் தூங்குவதற்கா?"
"ஆமாம், இல்லாவிட்டால் மனம், 'மதனா, மதனா!' என்று சபித்துக்கொண்டிருக்க, கண்கள் 'எங்கே, எங்கே?' என்று தேடிக்கொண்டே... இருக்குமே!"
"அதற்காக...?"
"வேறொன்றும் செய்ய வேண்டாம்; இந்த ஆப்பிளைச் சாப்பிட்டுவிடு, போதும். நான் நேரே சொர்க்கத்துக்குப் போய் விடுவேன்"
"திரும்பி வர மாட்டீர்களே?"
"நான் அந்த சொர்க்கத்தைச் சொல்லவில்லை; 'ஒதெல்லோ' நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொல்கிறானே, அந்த சொர்க்கத்தைச் சொல்கிறேன்!"
"அது என்ன சொர்க்கம்?"
"அதை வாயால் சொல்லக்கூடாது, மனத்தால் மட்டுமே எண்ணி மகிழவேண்டிய சொர்க்கம் அது!"
"ஓ, அப்படியானால் இதை நான் சாப்பிட்டு என்ன பிரயோசனம்? போனால் திரும்பி வர முடியாத சொர்க்கம் எதற்காவது நீங்கள் போவதாயிருந்தால் சொல்லுங்கள், அவசியம் சாப்பிடுகிறேன்; இல்லாவிட்டால் வேண்டாம்!" என்று அவன் கொடுத்த பழத்தை அவன் மேலேயே வீசி எறிந்தாள் அவள்.
அப்போது, "என்ன, மீண்டும் தோல்வியா?" என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் அருணா.
"ஆமாம்" என்றான் ஆனந்தன்.
"கவலைப்படாதீர்கள்; தோல்வியே வெற்றிக்கு அடிப்படை" என்றாள் அவள்."எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு சமாதானம் உண்டு, இந்தப் பாழாய்ப்போன உலகத்தில்!" என்றான் அவன் வெறுப்புடன்.
"இல்லாவிட்டால் மனிதன் ஒரு நாளாவது இந்த உலகத்தில் வாழ முடியுமா, என்ன?" என்றாள் மதனா, எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டே..
அவளைப் பார்த்துப் பல்லை 'நறநற'வென்று கடித்துக் கொண்டே, "ஆமாம், நீ சினிமாவுக்குப் போகவில்லையா?" என்றான் ஆனந்தன், அருணாவை மெல்லச் சீண்டி.
அவள் முகத்தைச் சுளித்தவண்ணம் அவன் சீண்டிய இடத்தைத் தன் கையால் தட்டித் துடைத்துவிட்டு, "போனேன், அவர்தான் என்னைத் திருப்பி அனுப்பிவிட்டார்!" என்றாள், ஏமாற்றத்துக்குள்ளான குழந்தை விம்முவது போல் ஒரு விம்மல் விம்மி.
"ஏன்?"
"மதனாவுக்கு நான் இங்கே துணையாக இருக்க வேண்டுமாம்; நீலாவுக்கு அவர் அங்கே துணையாக இருக்கப் போகிறாராம்!" என்றாள் அவள்.
இதைக் கேட்டதும், "அவரா சொன்னார் அப்படி?" என்று வியப்புடன் குறுக்கிட்டுக் கேட்டாள் மதனா.
"எல்லாம் அவர்ர்ர்தான் சொன்னார்ர்ர்" என்றாள் அருணா, முதல் நாள் இரவு 'அவர்' என்பதற்கு மதனா கொடுத்த அழுத்தத்தைத் தானும் கொடுத்து.
"அப்படியானால் அவர் இன்னும் என்னை அடியோடு கைவிட்டு விடவில்லைபோல் இருக்கிறதே" என்றாள் மதனா, இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற்று.
"போடி, பைத்தியமே! அவன் உன்னை அடியோடு கொல்லவா நினைக்கிறான், அணுவணுவாக அல்லவா கொல்ல நினைக்கிறான்!” என்றாள் அருணா, அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்டு.
“ம், பாழும் உண்மை எங்கே, எப்பொழுது சீக்கிரம் வென்றது, இங்கே வெல்ல? நான் வருகிறேன்!” என்று காந்திஜியின் அடிச் சுவட்டை அப்படியே பின்பற்றி நடப்பது போல் நடந்தான் ஆனந்தன்.