உள்ளடக்கத்துக்குச் செல்

சுயம்வரம்/அத்தியாயம் 7

விக்கிமூலம் இலிருந்து

கலியாணத்திற்குப் பிறகு ஒர் ஆணோ, பெண்ணோ
வேறு யாரையும் காதலிக்கக் கூடாதா?
இது என்ன அநியாயம்?…

 7 

ப்கோர்ஸ் ஆனந்த’னின் தலை மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த மதனா, “போர்பந்தரிலோ, வேறு எங்கேயோ காந்திமகானின் மறு பிறவியாகப் பிறந்து, காஷ்மீரிலோ, வியட்நாமிலோ ‘சமாதான யாத்திரை’ செய்து கொண்டிருக்க வேண்டியவர், தவறிப் போய் இங்கே பிறந்து, ‘காதல் யாத்திரை’ செய்துகொண்டிருக்கிறார்!” என்றாள் அருணாவின் பக்கம் திரும்பி.

“யாரைச் சொல்கிறாய்?” என்றாள் அவள் தெரிந்தும் தெரியாதவளைப்போல.

“உண்மைக்கென்றே பிறந்து, உண்மைக்கென்றே உயிர் வாழும் அந்த உத்தமனைத்தான்!”

“எந்த உத்தமனை?”

“அவன்தாண்டி, அந்த ஆனந்தனை”

“ஐயையோ! அவரையா சொல்கிறாய், அப்படி? இன்று சாயந்திரம்கூட, ‘பாலிடால், பாலிடால்’ என்று ஏதோ ஒரு பூச்சி மருந்து இருக்காமே, அது எங்கேயாவது கொஞ்சம் கிடைக்குமா என்று அவர் யார் யாரையோ ‘கெஞ்சு, கெஞ்சு’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தாரே!”

"எதற்கு?"

"உன்னை மறப்பதற்காக அதையாவது காபியில் கலந்து குடித்து உயிரை விடுவதற்கு!"

"அட, கடவுளே! என்னைக் கேட்டிருந்தால் எங்கிருந்தாவது கொஞ்சம் வாங்கிக் கொடுத்திருப்பேனே!"

"பாவம், உன்னைக் காதலிப்பதற்காக நீ அவருக்குத் தர நினைக்கும் 'காதல் பரிசு' அதுதானா?"

"ஆமாம்; அவனால் எனக்கு ஏற்படும் தொல்லை இன்னொருத்திக்காவது ஏற்படாமல் இருக்குமல்லவா?"

"அவர் உன்னைத் தவிர வேறு யாரையும் காதலிப்பதில்லை ; அது எனக்குத் தெரியும்!" என்று அடித்துச் சொன்னாள் அருணா.

"ஏமாந்தால் அவன் உன்னை மட்டுமல்ல, இந்த உலகத்திலுள்ள அத்தனை பெண்களையுமே காதலிப்பான்; அது எனக்குத் தெரியும்!" என்று மதனாவும் பதிலுக்கு அடித்துச் சொன்னாள்.

"யாரை நம்ப வேண்டுமோ, அவரை நம்பமாட்டாய்; எவனை நம்பவேண்டாமோ அவனை நம்புவாய். நீ வாடியம்மா, உள்ளே போவோம்" என்றாள் அருணா, அவளைக் கொஞ்சம் விட்டுப் பிடிப்பதற்காக.

"ஆமாம், அவர் நீலாவுடன் சினிமாவுக்குப் போயிருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றாள் மதனா, அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றுகொண்டே.

"ஆனந்தன்தான் சொன்னார்; முதலில் நான் அதை நம்பவேயில்லை. 'நீ வேண்டுமானால் போய்ப் பார்!' என்றார்; 'எதற்கும் போய்த்தான் பார்ப்போமே?' என்று போனால், அங்கே அவர் சொன்னபடியே அவன் ‘ஜாம், ஜாம்' என்று நீலாவுடன் சினிமாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். என்னைக் கண்டதும் திருடனைத் தேள் கொட்டியதுபோல் ஆகிவிட்டது அவனுக்கு. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, 'போ, போ! உன்னை நம்பித்தானே மதனாவை அங்கே அனுப்பி வைத்தேன்? அங்கே நீ அவளைத் தனியாக விட்டுவிட்டு இங்கே வந்து நிற்கிறாயே! போ, போ! இன்றிரவு மட்டும் நீ அவளுக்குக் கொஞ்சம் துணையாயிரு; நாளைக் காலையில் நான் வந்து அழைத்துக்கொண்டு போய் விடுகிறேன்!" என்றான் அவன், உனக்காக அப்படியே உருகி விடுபவனைப் போல. என்ன இருந்தாலும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்களல்லவா நாம்? அவன் அப்படிக் கெஞ்சும்போது, எப்படி மாட்டேன் என்கிறது? 'சரி' என்று வந்துவிட்டேன்!"

"நல்ல வேளை, நீ வந்திருக்காவிட்டால் அந்த ஆனந்தன் இன்னும்கூட இந்த இடத்தை விட்டுப் போயிருக்க மாட்டான்"

"இங்கே நீ இப்படிச் சொல்கிறாய்; அங்கே ஆனந்தன் என்னிடம் என்ன சொல்லிவிட்டு வந்தார், தெரியுமா? 'பாவி, இன்று சாயந்திரம் நீலாவுடன் தான் சினிமாவுக்குப் போகப் போவது ஏற்கெனவே தெரிந்திருந்தும், 'மாலை ஐந்து மணிக்கு நான் விடுதிக்கு வருகிறேன்' என்று அவன் மதனாவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தானாம். அங்கே அவள் அவனை எதிர்பார்த்து எதிர்பார்த்து எப்படி ஏங்குகிறாளோ, என்னவோ? நானாவது போய் அவளைப் பார்க்கிறேன்' என்று துடியாய்த் துடித்துக்கொண்டு வந்தார்!"

"ஆமாம், அவர் எனக்கு எழுதிய கடிதம் அவனுக்கு எப்படித் தெரிந்தது?"

"எல்லாம் அந்த மாதவன் சொல்லித்தான் தெரிந்திருக்கிறது! உன்னைப்பற்றி அவன் எதைத்தான் இதுவரை அவரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறான்? எல்லாவற்றையும்தான் சொல்லியிருக்கிறான்!" என்று கூறிக் கொண்டே, கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று, உடை மாற்றலானாள் அவள்.

மதனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு பக்கம் பார்த்தால், மாதவன் தன்னை இன்னும் கை விட்டுவிட வில்லை என்று அவளுக்குத் தோன்றிற்று; இன்னொரு பக்கம் பார்த்தால், அவர் தன்னைக் கைவிடாவிட்டாலும் தான் அவரைக் கைவிடுவதற்கு வேண்டிய காரியங்கள் அனைத்தையும் அவர் ஒன்று விடாமல் செய்து கொண்டிருப்பதாகவும் தோன்றிற்று.

இதற்கிடையில் அவரைப் பற்றித் தான் கேள்விப்பட்ட அந்தக் கதை - அதுதான் தன்னைப் பார்த்துத் திரௌபதி எதற்கோ சிரித்தாள் என்பதற்காகத் துரியோதனன் அவளைச் சூதில் வென்று துகிலுரிந்தது போல, மாதவனும் தன்னைப் பழிக்குப் பழி வாங்க நினைக்கிறார் என்று தான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தக் கதை உண்மையாயிருக்குமா? எம்.யு.சி. மைதானத்தில் அவர் ஒரு சமயம் கிரிக்கெட் ஆடியபோது, அவரைப் பார்த்துத் தான் சிரித்தது என்னவோ உண்மை. அதற்காக?... நான் மட்டுமா அன்று அவரைப் பார்த்துச் சிரித்தேன்? என்னுடன் சேர்ந்து எத்தனையோ பெண்கள் சிரித்தார்களே? என்னைப் பழி வாங்குவது போல் அவர்களையும் பழி வாங்க முடியுமா அவரால்? அல்லது, அருணா சொல்வதுபோல, அதற்காகவே அவர் என்னைக் கலியாணம் செய்து கொண்டது உண்மையானால், அதே மாதிரி அவர்கள் அனைவரையும் கலியாணம் செய்துகொண்டு பழி வாங்க முடியுமா; அவரால்?....

நடக்காத காரியம்!

ஆனால், சமயம் பார்த்து மாமாவை வந்து கதவைத் தட்டச் சொன்னது?...

அது நடக்கக் கூடிய காரியம்தானே?

அன்று மாலை சாந்திக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அவர் வெளியே போனாரே, அப்போது மாமாவை வழியில் சந்தித்திருக்கலாமல்லவா? சந்தித்து, வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கலாமல்லவா?

அப்படியே வரச் சொல்லியிருந்தால் என்ன? அவர் வந்தால்தான் என்ன? ஆனானப்பட்ட அம்மாவையும் அப்பாவையும் எனக்காக எதிர்த்து நிற்க முடிந்த அவரால், மாமாவையும் மாமியையுமா எதிர்த்து நிற்க முடியாது?

தன்னைப் பழிக்குப் பழி வாங்குவதற்காகவே அவர்களைக் கண்டு பயப்படுவதுபோல் இவர் பாசாங்கு செய்கிறாரோ?

'இருக்கலாம்' என்று ஏன் நினைக்கக் கூடாது? 'இருக்காது' என்றுதான் ஏன் நினைக்கக் கூடாது?...

மாமாவுக்கு 'நீலா, நீலா' என்று ஓர் அசட்டுப் பெண் இருக்கிறாள் என்பதையும், அந்தப் பெண்ணைத் தன் தலையில் கட்ட அம்மா முயற்சி செய்கிறாள் என்பதையும் அவர் தன்னிடம் மறைக்கவில்லை; ஏற்கெனவே சொல்லி யிருக்கிறார். தனக்குப் பிடிக்காத அந்தப் பெண்ணுடன் அவராகவா சினிமாவுக்குப் போயிருப்பார்? மாமாவும் மாமியும் வற்புறுத்தியிருக்கலாம்; அதை அவரால் தட்ட முடியாமற் போயிருக்கலாம். அவளைப் போய் அவருடைய 'எதிர்கால மனைவி' என்கிறானே, இந்த ஆனந்தன்?

காதலுக்குக் கலியாணம் ஒரு முடிவாகவும் முட்டுக் கட்டையாகவும் இருந்ததெல்லாம் அந்தக் காலத்திலாம்; இந்தக் காலத்தில் இல்லையாம். அதனால் அவன் கலியாணமான பிறகும் என்னைக் காதலிக்கப் போகிறானாம். காதலித்துக் கொண்டே இருக்கப் போகிறானாம். இப்படி யெல்லாம் பேசும் இவனிடமிருந்து தப்ப என்ன வழி?...

இந்த அருணா முன்னெல்லாம் என்னுடன் போட்டி போட்டுக் கொண்டு அவரைக் காதலித்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். இப்போது என்னடா வென்றால், இவள் அவரைப் பிடிக்காதவள்போல் பேசுகிறாள். இதற்குக் காரணம் என்னவாயிருக்கும்?

'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்ற நரியின் கதையாயிருக்குமோ?

இன்று அவரைப் பிடிக்காத இவளுக்கு ஆனந்தனைப் பிடிக்கிறது. அதே சமயத்தில் அவன் கை தன்மேல் பட்டு விட்டால் மட்டும் அந்த இடத்தைத் தன்னுடைய கையால் உடனே தட்டித் துடைத்துக்கொண்டு விடுகிறாள்!

இது என்ன வேடிக்கை! இவளிடம் ஏன் இந்த மாறுபட்ட உணர்ச்சிகள்?...

நடைமுறை நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்த மதனாவால் அருணா சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை; ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை. எது எப்படி யிருந்தாலும் இவளுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு, தான் 'கையில் சிலம்பில்லாத கண்ணகி'யாக எழுந்து நின்றது தவறு என்பதை அவள் இப்போது உணர்ந்தாள். அவர் வராமல், அவருடன் பேசாமல், தான் எந்தவிதமான முடிவுக்கும் வருவது அவ்வளவு சரியல்ல என்பதை அவள் இப்போது அறிந்தாள்.

ஆயினும், அதை அருணாவிடம் சொல்ல அவள் விரும்பவில்லை. அதனால் ஒருவேளை அவள் தன்னை அந்த விடுதியை விட்டே விரட்டிவிட்டால் என்ன செய்வது? வேறு எந்தப் புகலிடத்தைத் தேடுவது?...

ஏமாற்றுபவர்களுக்கு எப்போதும் ஏமாறுகிறவர்களைக் கண்டால்தான் பிடிக்கும்; ஏமாறாதவர்களைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காதே!

தானும் காரியமாகும் வரை இவளிடம் ஏமாந்தவளாக நடிக்க வேண்டியதுதான்; அதை விட்டால் வேறு வழியே இல்லை.

இந்தத் தீர்மானத்துக்கு அவள் வந்துகொண்டிருந்த போது, "ஒருவேளை நாளைக் காலையிலும் அந்த மாதவன் இங்கே வராவிட்டால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டாள் அருணா.

"ஏன், நான் அதற்குமேல் இங்கே இருக்கக் கூடாதா?" என்றாள் மதனா, அவளை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே.

"நான் அதற்குக் கேட்கவில்லையடி, அம்மா அவன் வராவிட்டால் நீ என்ன செய்வாய் என்று கேட்கிறேன்!" என்றாள் அவள் மீண்டும்.

"அதுதான் எனக்குப் புரியவில்லை!" என்றாள் அவள்.

"பேசாமல் நான் சொல்வதைக் கேள்: 'ஒரு பெண்ணை ஒருவன் கைவிட்டால், அத்துடன் இந்த உலகத்தில் அவளுக்கு வாழ்வே இல்லை' என்ற ஐதர் காலத்துச் சட்ட திட்டத்தை நம்மைப்போன்ற புதுமைப் பெண்கள் உடைத்தெறிய வேண்டும். அதற்கு இப்போது அருமையான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்திருக்கிறது உனக்கு. எனக்குத் தெரிந்தவரை நாளைக் காலையிலும் அந்தக் கிராதகன் இங்கே வருவது சந்தேகமே. அவன் வந்தாலும் வராவிட்டாலும் ஆனந்தன் அவசியம் வருவார்; அவர் உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறார்..."

"என்ன வேண்டுமானாலும் என்றால்...?"

"அதுதான் உடல், பொருள், ஆவி என்கிறார்களே..."

"அந்த மூன்றையும் அவர் எனக்காகத் தத்தம் செய்யத் தயாராயிருக்கிறாரா?"

"ஆமாம்."

"அப்படியானால் முதல் இரண்டையும் அவரையே வைத்துக்கொண்டு, கடைசியாக உள்ள ஆவியை மட்டும் எனக்காகத் தத்தம் செய்யச் சொல்லேன்!" என்றாள் மதனா, அவளைக் கெஞ்சாக் குறையாக.

அருணாவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; அப்போதே அவளுடைய பெட்டியைத் தூக்கி வெளியே விட்டெறிந்து, அவளையும் அந்த விடுதியை விட்டே விரட்டிவிடலாமா என்று நினைத்தாள். ஆயினும், 'பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும்' என்று, தான் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுள்ள சபதத்துக்கு அது விரோதமல்லவா? ஆகவே ஒருவாறு தணிந்து, "எதைக் கேட்டாலும் கேட்கா விட்டாலும் இதை மட்டுமாவது கேளடி, அம்மா! நாளைக் காலையிலும் அவன் இங்கே வராவிட்டால் நீ மனம் உடைந்து எதையாவது வாங்கிச் சாப்பிட்டு இங்கே பிராணனை விட்டு வைக்காதே; போலீசாரிடம் அகப்பட்டுக்கொண்டு விழிக்க என்னால் முடியாது!" என்றாள், அவள் வாழ்வதற்கு வழி காட்டுவதுபோல் சாவதற்கு வழி காட்டும் நோக்கத்துடன்!

"அந்தக் கவலை மட்டும் உனக்கு வேண்டவே வேண்டாம்; யார் என்னைக் கைவிட்டாலும் கைவிடா விட்டாலும், என் உயிரை மட்டும் நான் கைவிடுவதாக இல்லை" என்றாள் அவள், 'சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரி'யைப்போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_7&oldid=1673065" இலிருந்து மீள்விக்கப்பட்டது