சுழலில் மிதக்கும் தீபங்கள்/10
வீட்டை விட்டு வெளியேறும்போது, ஒரு அடங்காத முட்டல், உந்தல் அவளைத் தள்ளி வந்தது. கங்கை ஒட்டம், மனதுக்குப்பிடித்த சூழல் என்று தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு வந்தாள். இப்போது அந்த விடுதலையின் பரபரப்பு ஒயாமலே, எதிர்காலம் என்ன என்ற பிரச்னையாக அவளுள் விசுவருபமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவள் வீட்டை விட்டு ஒடி வந்துவிட்டாள் என்று, ரோஜாமாமி அவள் தற்பெயராகிய பளிங்குப் பாண்டத்தைப் போட்டு உடைத்து விடுவாளோ என்ற அச்சம் இழையாக அலைக்கிறது. போயும் போயும், எந்த ஆடம்பரச் சூழலை வெறுத்தாளோ அங்கேயே வந்து சேருவாளோ?
ஹரிகி பைரியில் இப்போதும் கூட்டம், நீராடும் கலகலப்பு, குழுமிக் கொண்டிருக்கிறது. தூய மஸ்லின் உடையணிந்த ஒரு வங்க மூதாட்டி, வரிசையாக வறியவர்களுக்கு அன்னதானம் செய்கிறாள். அடுக்கான ரொட்டி; அகலமான பித்தளைப் பாத்திரத்தில் மஞ்சளாக ‘தால்’ (பருப்பு) ஒவ்வொருவருக்கும் நான்கு ரொட்டிகளும் இரண்டு கரண்டி பருப்புமாக ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள். வேலையற்று, இந்த கங்கைக் கரையிலும் அழுக்கைச் சுமந்து கொண்டு வேடம் போட்டுப் பிச்சை பெறும் கும்பல்...பிச்சை பெறுவதற்குச் சுத்தமாக இருக்கலாகாது..?
அருவருப்பாக இருக்கிறது. நான் பெரியவள், நான் கொடுப்பவள் என்ற அகங்காரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் வருக்கம் கங்கையின் தூய்மையையும் மாசுபடுத்து கிறதென்று நினைத்துக் கொள்கிறாள். இந்த மக்களே இல்லாத கங்கைக்கரை, ஆதிநாட்களில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முயலுகிறாள்.
‘ருஷிகேச்... ருஷிகேச்...என்று பஸ்காரன் ஒருவன் கூவியழைக்கிறான்.
இங்கு நிற்பதற்குப் பதில் பொழுதைக் கழிக்கச் செல்லலாமே என்று தோன்றுகிறது. நிறுத்தி ஏறிக்கொள்கிறாள்.
சாலையில் செல்கையில் எந்தப்பக்கம் நோக்கினாலும் பசுமை கொள்ளை கொள்கிறது. கங்கை கண்பார்வையை விட்டு மறைந்து போகிறது. ஆனால் அவள் வண்மையில் வஞ்சகமில்லாத பசுமை, சரத்காலமல்லவா? அருவிகள் ஆங்காங்கே சுரந்து வருகின்றன. புல்வெட்டுபவர்கள், கூவி வேலை செய்யும் எளிய பெண்கள், வறுமையை இந்த வண்மையிலும் அகற்ற முடியவில்லையே என ஏக்கத்துடன் ஆங்காங்கு தென்படும் குழந்தைகள். குழந்தைகளால்தான் வறுமை, குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லும் சிவப்பு முக்கோண அழுக்குச் சுவர், என்று காட்சிகள் ஒடுகின்றன.
அவளுள் ஒர் ஆசை உயிர்க்கிறது. இந்த எளிய குழந்தைகள். வறுமைக்கு நீங்களே காரணம் என்று குற்றம் சாட்டப்படும் குழந்தைகளைத் தீண்டி, நலம் செய்து, படிப்பித்து... இப்படி ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக...ஒ.அவள் யாருக்கும் கட்டுப்படாமல் இங்கு வாழ வரமாட்டாளா?.
இந்தச் சூழலில் ஒரு சிறிய பள்ளிக் கூடம். இந்த மக்கள் ஆத்மார்த்தமாக வழங்கக் கூடிய அன்பு.
மனசை இனிய கனவுகளில் இலயிக்க விடுகிறாள். ஊர்தி கங்கைக் கரையைக் காட்டுகிறது. மீண்டும் மறைந்து போகிறது. வெளியில் மிக உக்கிரமாக விழும் பொட்டலில் தகர அடுக்குகளாய் நெருங்கியுள்ள வாகனங்களிடையே குலுக்கிக் கொண்டு நிற்கிறது.
கிரிஜா குலுங்கினாற்போல் பார்க்கிறாள்.
ஒ...இந்த ஊர் இவ்வளவு நாகரீகமடைந்து விட்டதா? இருமருங்கும் கங்கை தெரியாதபடி அடைத்துக்கட்டிய கட்டிடங்கள், சாக்கடைகள், இரைச்சல்கள், மனித மந்தைகளாகச் சந்தைக் கூட்டங்கள்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இவள் ஆசிரியர்களுடன் பயணம் வந்தாளே, அப்போது எவ்வளவு அழகாக இங்கே அமைதி ஆசிரமங்கள் திகழ்ந்தன? ஒ, அந்த ஆசிரமங்கள் இந்நாள் எங்கே மறைந்தன? பெரிய சாலை. நீள நெடுகச் செல்கிறது. உயர உயர விடுதிகள், குளிர்சாதன அறைகள், வசதி மிகுந்த படுக்கைகள், உணவு. வாருங்கள் என்றழைக்கும் ஆடம்பர விடுதிகள்...
கங்கைத்தாயே! நீ எங்கு மறைந்தாய்? பிரச்னைக்கு முடிவென்று அவள் எங்கே வந்து நிற்கிறாள்? வெயிலின் உக்கிரம் தாளவில்லை. காலையிலிருந்து நல்ல உணவு உண்டிராததால் பசி வயிற்றைக் கிண்டுகிறது. இந்தச் சாலையில் இவள் ஏறி உணவு கொள்ளும்படியான விடுதிகள் தெரியவில்லை. துணிக்கடை, பாத்திரக்கடை, எலக்ட்ரானிக் சாமான்கள் விற்கும் கடைகள்...பழக்கடை ஒன்றில் நான்கு பழம் வாங்கிக் கொள்கிறாள்.
‘கங்காஜி காகினாரா...கஹா... ங் ஹை’
ஸீதா ஜாயியே! ஸீதா... நேராக... நேராகப் போ...
அவள் நடக்கிறாள், நடை வேகத்தில் எண்ணங்கள் விரட்டியடிக்கப் பெறுகின்றன. -
கங்கைக்கரை எங்கே? இவள் பிரச்னை எப்படி முடியும்? திரும்பிப் போக வேண்டுமா வேண்டாமா? அவளுடைய வாழ்வின் இன்றையப் பிரச்னையின் முடிவு... கங்கைக்கரைகள்...கரும்புகைகக்கும் டெம்போக்கள், லாரிகள், நடக்க இட மில்லாதபடி நெருக்கிக் கொண்டிருக்கின்றன. மக்கள் இங்கே அமைதியைக் குலைத்துக் கொண்டு வந்து வந்து போகிறார்கள். இங்கு இருக்க அமைதி நாடி வரவில்லை. ஓ, ஒரே நாளில் கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தரகாசி, எல்லாம் பார்க்கலாம் என்று பறந்து கொண்டு வந்து, தங்கள் வசதிப் பெருமைகளைக் காட்டி விட்டுப் போகிறார்கள்...
இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்... கங்கா... ஆமாம்... இவளைவிட இரண்டு வயது பெரியவள். அவள் பாட்டு டீச்சராக வந்திருந்தாள். தெற்குச் சீமைக்காரி. தாமிரபரணியில் விழுந்து நீந்திய பழக்கம். ஹரித்துவாரத்தில் அவளைப் பெரியவர்கள் யாரும் நீந்தவிடவில்லை.
‘அடி, இங்கே நீஞ்சிக் காட்டுறேன்’ என்று குதித்தாள்.
‘உன் சுண்டைக்காய் தாமிரபருனி இல்லைடி கங்கை வாயை மூடு! பத்திரமாய் எல்லாரும் ஊர்போய்ச் சேரனும்!’ என்று தலைமை ஆசிரியரின் மனைவியான பர்வதம்மா அதட்டினாள். எல்லோரும் இக்கரையில் வண்டியை விட்டிறங்கி, பார்த்துக்கொண்டே லட்சுமணன் ஜுலா தொங்குபாலத்தில் நடந்து அக்கரை சென்றார்கள்... அந்தக் கரை, எவ்வளவு அமைதியாக இருந்தது!
ஆசிரமம்போல் ஒரு விடுதி. ஒரு பண்டிட் நடத்தினான். அவனிடம் இருபது பேருக்கும் உணவு தயாரிக்கச் சொல்லி விட்டு, இவர்கள் கங்கையில் நீராடினார்கள். அப்போது, இந்த கங்கா, சேலையை வரிந்து கட்டிக் கொண்டு, ஆழ்ந்து நீலமாகத் தெரியும் கங்கைமடுவில் குதித்துவிட்டாள்.
அடிபாவி...! கங்கா!...வாடி...!...
எல்லாரும் அடிவயிற்றில் திகிலுடன் எப்படிக் கத்தினார்கள்! அவள் உண்மையிலேயே எவ்வளவு துணிச்சல்காரி! அவர்கள் குழுவில் அந்தத் துணிச்சல் எவருக்கும் இருந்திருக்க வில்லை.
ஏன்? இப்போது நினைத்தால் கூட அற்புதமாக இருக்கிறது. அவள் அந்த மடுவில் நீந்திவிட்டு, அலர்ந்த தாமரை போல் முகத்தைக் காட்டிக்கொண்டு வந்தாள். பெரிய இலைப் படகில் ஒளித்திரியாய் காட்சியளித்தாள்.
‘நீ கெட்டிக்காரி. துணிச்சல்காரி ஒப்புக்கறோம். இனி இந்தப் பரீட்சை வேண்டாமடி பாவி!’ என்றாள் முதிய பாகீரதி டீச்சர். பிறகு...பிறகு...
நெஞ்சு முட்டுகிறது. கல்யாணமென்று போனாள். வேலையை விட்டுவிட்டாள். நாலைந்தாண்டுகளுக்குப் பிறகு, சென்னைக் கைத்தறிச் சந்தையில் அவள் புருஷனையும் மூன்று பெண்களையும் அறிமுகம் செய்வித்தாள்.
‘மூணும் பொண்ணுடி...’ என்று ஒர் அழுகைச் சிரிப்பாகச் சிரித்தாள்.
‘நீதான் அற்புதமான நீச்சல்காரியாச்சே, கங்கா? பொண்ணானால் என்ன?’
‘தண்ணில நீஞ்சலாண்டி...’ என்று அரைகுறையாக நிறுத்திவிட்டு அந்த இயலாமைச் சிரிப்பையே நெளிய விட்டாள்.
‘நீ இன்னும் தனியாத்தான் இருக்கியாடி?...’ இவள் அப்போது தனியாகத்தான் இருந்தாள்.
‘ஜாலி...டி’ என்று சொன்னாள் பிறகு ஆறுமாசங்களில் இவள் கேள்விப்பட்ட செய்தி...
‘கிரி, நம்ம கங்கா இல்ல? செத்துட்டாளாம்டி, பாவி, நாலாவது உண்டாயிட்டாளாம். போயி ஏதோ மருந்துச் சாப்பிட்டு ஏடாகூடமாயி. ஹேமரேஜ்ல...’
அம்மம்மா...
கங்கையே அழுவது போல் நெஞ்சு முட்டிப் போகிறது. ‘நான்காவது பிள்ளையாக இருக்கவேண்டும் என்று கணவன் சொல்லிச் சொல்லி ஆணை போட்டிருப்பானோ? ஏன் சிதைத்துக் கொள்ளப் போனாள்? பெண்ணாயிருந்துவிடுமோ என்று சிதைத்துக் கொண்டிருப்பாளோ?
கங்கைமடுவில் அவள் முகம் காட்டிக் கொண்டு செல்வது போலிருக்கிறது. அப்படியே அன்று போயிருந்தால்கூட, இலைப்படகின் ஒளித்திரிபோல் நினைவில் நின்று கொண்டிருப்பாள். இப்போதோ, வாழ்க்கையாகிய ஓட்டத்தில், சுழிலில் நலிந்து மோதி, பேதையாக, கோழையாக...
கங்கைப் பெருக்கில் சுடரணைந்தது மட்டுமில்லை. படகே கவிழ்ந்து போன இடம் தெரியாமல் மூழ்கிவிட்டது போல்... அழிந்துபோனாள்.
நெஞ்சு முட்டுகிறது. அபு கொடுத்த வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது.
‘திருமணமானபின், வாழ்வின் மொத்தமான பிரதான ஒட்டத்தில் இருந்து விலகி, ஒரு தனிக் கூட்டில் உங்கள் ஆளுமையைக் குறுக்கிக் கொள்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?’..
ஆம். திருமணமும் பிள்ளைப் பேறும் பெண்ணின் வாழ்வை மலரச் செய்யும் மங்கலங்கள்தாம். ஆனால் அந்த மங்கலங்களே இவள் சக்தியை, சாரத்தை உரிமையுடன் சூறையாடுகின்றன. பெண் பிறப்பதும் பிள்ளை பிறப்பதும் இவள் ஒருத்தியைச் சார்ந்த நிகழ்வுகளா?...இவளே, மூன்றாவதாக ‘பரத்’தைப் பெற்றிராமல், பெண்ணைப் பெற்றிருந்தால்...!
அவனைச் சுமந்த நாட்களில் அந்த அச்சம் இவளுக்கும் இருந்ததே? கணவன், அவனைச் சார்ந்த வெகுஜன மதிப்பீடுகள், எல்லாம் பெண்ணுக்கு விரோதமாகவே செயல் படுகின்றன.
கீழெல்லாம் சதக் சதக்கென்று ஈரம். கரையோர்ப்பாதை ஒற்றயடிப்பாதையாக, ஏற்றமும் இறக்கமுமாகக் குறுகிப் போகிறது... கும்பல் கும்பலாக மக்கள். டிரக் ஒன்று மேலே மலைச் சாலையோரம் எழுப்பப் பெறும் கட்டிடத்துக்கான சாதனங்களைக் கொண்டு ஏறுகிறது...
கிரிஜா, நடு ஒட்டமான மக்கள் பாதையிலிருந்து விலகி உயரமான மேடொன்றில் ஏறுகிறாள். ஏதோ ஒரு பழைய ஆசிரமத்தின் சிதைந்த கட்டிடங்கள் தெரிகின்றன.
ஒம்..ஔஷதாலயா, கோசாலா, என்ற மங்கலான சுவர் எழுத்துக்களும் வளைவு வாயில்களும், ஆசிரமம் ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கின்றன. அங்கிருந்து பார்க்கையில் கங்கையின் எதிர்க்கரை நன்றாகத் தெரிகிறது.
பழைய சிமிட்டி ஆசனமொன்றில் கிரிஜா அமருகிறாள், பையிலிருந்த பழங்களை எடுத்து உண்ணத் தொடங்குகிறாள்.