உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு

விக்கிமூலம் இலிருந்து
4
பேய் ஓடிப் போச்சு

"அண்ணே! பூசாரி பொன்னனை நான் என்னமோன்னு எண்ணிகிட்டுக் கிடந்தேன். இப்பத் தெரியுது அவன் இலேசுப் பட்டவனில்லைங்கற விஷயம்"

"என்னத்தெடாப்பா, கண்டுட்டே இப்ப?"

"என் மவளுக்கு, கொஞ்ச நாளா, மயக்கமா இருந்தது பார் அண்ணே! மாமரத்துப் பிசாசு, பிடிச்சுகிட்டு ஆட்டி வைச்சிதேண்ணே..."

"ஆமா! உம்மவ, சொல்லாயியைத்தானே..."

"ஆமாண்ணே! பூசாரி போட்ட மந்திரத்திலே, பேய் ஓடிப் போச்சண்ணே! இப்ப என் மவ, சௌக்யமா, சிரிச்சிப் பேசிகிட்டுச் சிங்காரிச்சி பூ முடிச்சிகிட்டு இருக்கிறா. என்னமோண்ணே! மாயம் மந்தரம் இதெல்லாம் தப்புன்னு, என் மவன்,பட்டணத்து ஆசாமிக பேச்சைக்கேட்டுகிட்டு, சொல்லி வந்தான். நானும், அவன் நம்மப்போல பட்டிக்காட்டிலே இல்லையே, டிராம் வண்டி ஓடற பட்டணத்திலே இருக்கானே!ரொம்பப் படிச்சவங்க பேச்சைக்கேட்டு இதைச்சொல்றான்னு, நம்பிக்கிட்டு இருந்தேன். பைத்யக்காரப் புள்ளே! இப்பல்லவா தெரியுது, மந்தரம்னா பொய்னு சொல்றதுக்கில்லைங்கிற சூச்சமம். நல்லாயிடுத்து செல்லா. முந்தி சுருண்டு சுருண்டு படுத்துக்குமா? பேசாது சரியா—முகத்தைக் கழுவாது—ஒருவேலையும் செய்யாது—சிடுசிடுன்னு பேசிகிட்டு ..

"பேய் பிடிச்சா அப்பிடித்தான்." "ஆமாம்! அந்தப் பய, பேயாவது பூதமாவது -அதெல்லாம் தப்புன்னு சொன்னான். மாமரத்துப் பிசாசு இலேசுப்பட்டதா?"

"ஆமா! அந்தப் பய, தூக்குப் போட்டுகிட்டவன்; உசிரோட இருக்கச்சயே ரொம்பப் பொல்லாத பயலாச்சே! பிசாசு ஆனா கேட்கோணுமா சேஷ்டையை! சரி, சுகமாயிடுத்தேல்லோ, போவுது. சொக்கியம்மாவுக்கு அடுத்த வெள்ளிக்கு ஒரு சேவலை அறுத்துப் படையலைப்போட்டுப்போடு. நான் வர்ரேன். அது சரி! உம் மகளுக்குத்தான் இப்ப, பேய் இல்லையே! இனிக் கண்ணால விஷயத்தை முடிச்சிட வேணுமோல்வோ?

"ஆமாண்ணெ! முடிச்சிடத்தான் வேணும். என் மவன் அதுக்காகத்தானே, இங்கே தங்கி இருக்கான்."

"இடம் எங்கே பார்த்தே?"

"நம்ம வேலந்தான்."

"மறந்து போனேன். போன வருஷமே, அவனைத்தானே உன் மவளுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தே."

" ஆமாமாம்.பய, கண்ணெ காட்டிப் பல்லைக் காட்டி என் மவளுக்கு ஆசை ஊட்டிட்டான்."

"பரவாயில்லெ. பையன் நல்லவன்."

"ஆமாம் நம்ம கொல்லைக்கு அடுத்த கொல்லையை அவன் குத்தகைக்கு எடுக்கறப்பவே எனக்குச் சந்தேகம்— பையன் பக்கத்திலே வர்ரது பயிர் பண்ண இல்லென்னு...."

"குத்தவ பணங்கூட அதிகமால்லா கொடுத்தானாம்."

"ஆமாண்ணெ! இந்த வருஷத்தோடே, தீந்ததன்னு வையி. குத்தவைதான் எடுத்தானே! மடப்பய மவன். ஒரு கத்திரி, முள்ளங்கி ஏதாச்சும் போட்டா நாலு காசு வருமா? அதே உட்டுப் போட்டு, ரோஜா வெச்சிட்டான்."

"சரித்தான். செல்லாயிக்குத்தான் பூன்னா உசிரு." "இந்தக்காலத்துப் பசங்கசாமர்த்தியத்தப்பாரண்ணெ! போவுது, பசங்க சந்தோஷமா இருக்கட்டும். நான் பயந்து போயிருந்தேன். பேய் பிடிச்சுட்டுதே, அது கதி என்னாவுதோ ஏதாவதோன்னு."

"ஒனக்கு ஒரு கொறையும் வராது. போய்வாப்பா."

ரூர் கிராமத்திலே, உழவன் செங்கோடனுக்கும், ஊர்ப் பெரியவர் கரியானுக்கும் நடந்தது இந்த உரையாடல். செங்கோடன், தன் மகள் செல்லாயிக்கு, பேயால் என்ன நேருமோ என்று பயந்து, பதைத்து, செய்யாத பூஜை இல்லை. கடைசியில் பூஜாரி பொன்னனின் தயவால்தான் அவள் பிழைத்தாள். ஊர்ப் பெரியவர், கரியப்பாவிடம், இந்தச் சந்தோஷச் செய்தியைக் கூறிவிட்டு, செங்கோடன், வேறு யார் அகப்படுவார்கள் பேச என்று புறப்பட்டான். அன்று காலையிலிருந்து, இந்தச் சேதியைப் பலரிடம் கூறிக் கொண்டிருப்பதே வேலையாக இருந்தது செங்கோடனுக்கு. ஓரூர் (அதுவே அந்தக் கிராமத்தின் பெயர்) வாசிகளிலே முக்கால்வாசிப் பேரிடம் கூறியாகிவிட்டது. ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கும் எல்லனைத் தேடிக் கொண்டு போகிறான் செங்கோடன். பேய் பிடித்துக் கொண்ட பெண்ணை, எவன் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான் என்று பயந்தான், பதைத்தான். உயிருக்கே ஆபத்து நேரிட்டு விடுமோ என்றும் பயம். ஒரே பெண், ஒரே பிள்ளை. பிள்ளை "இரண்டெழுத்து" படித்தவன். அதனாலே பட்டணத்திலே வேலை. அதிலேயும், பத்திரிகாலயத்திலே! பார்சல் கட்டுகிற வேலைதான். என்றாலும் பத்திரிகை ஆபீஸ் வேலை என்றுதான் செங்கோடன், பெருமையாகப் பேசிக் கொள்வான். அதிலே தவறுமில்லை. இரண்டு தலைமுறையாக ஏர் தவிர வேறு தெரியாத குடும்பத்திலே பிறந்த சுப்பு, வெள்ளைச் சொக்காயும், காக்கி நிஜாரும் போட்டுக் கொண்டு, ஆபீசில் வேலைக்குப் போனால், பெருமை இல்லாமலிருக்குமா! லீவ் கிடைத்து வருகிறபோது, சுப்பு, கிராமத்திலே யாரிடம் பேசும்போதும், தனி மனிதனாகவே தென்பட்டான். விவ சாயத்தைப் பற்றியா பேசுவான்? தெரியாதே பேச! உலக விஷயங்களைப் பற்றி—அவசர அவசரமாக அவன் படித்துத் தெரிந்து கொண்ட அளவு கூறுவான். வாயைப் பிளந்து கொண்டு கேட்பார்கள் கிராமவாசிகள். செங்கோடனுக்குப் பெருமை! தன் மகனிடம் "சேதி" கேட்க, கிராமமே திரண்டு வருவது கண்டு. 'சூரியன் இருக்கே, சூரியன்" என்று ஆரம்பிப்பான் சுப்பு.

"சொல்லுப்பா! சூரிய பகவான்தான் கண் கண்டதெய்வம். அவருக்கு என்ன? சொல்லு" என்று பக்தியைச் செலுத்தியபடி கேட்பான் குட்டி.

"சூரியன், பகவானுமில்லே, மனுஷனுமில்லே! அது பெரிய நெருப்பு உருண்டைப்பா" என்பான் சுப்பு. குட்டி பக்கத்திலே இருக்கிறவனைப் பார்த்துக் கண் சிமிட்டுவான்.

"அப்படின்னா, அந்த உருண்டை உருளுதோ காலையிலேருந்து சாயரட்செ வரையிலே?" என்று கேலி பேசுவான் குப்பன். இதை எல்லாம் சமாளித்துக் கொண்டு. அவர்களுக்குப் பல விஷயங்களை விளக்குவான் சுப்பு.

"என்னென்னமோ சொல்றாண்டா நம்ப சுப்பு!" என்று புகழ்வார்கள். அவன் சொல்வது, சிலருக்கு விஷயம் புரியாவிட்டாலும் 'அது சரியாகத்தான் இருக்கும்; எல்லாம் சுப்புவுக்குத் தெரியும்' என்று கூறிவிடுவார்கள். பத்துக் காணி பூமிக்குச் சொந்தக்காரனானால்கூட, சுப்பு அடைய முடியாத மதிப்பு, "ஆபீஸ் வேலை" கொடுத்தது.

அவன் வேலை செய்து வந்த பத்திரிகை 'உலகம்' என்பது. விதவிதமான வண்ணப் படங்கள் நிரம்பியது. சிரமப்பட்டு, அந்தப் படங்களை எல்லாம் கத்தரித்து, ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்திலே ஒட்டி, செல்லாயிக்குத் தந்தான். தன் அண்ணன் கொடுத்த அந்தப் புத்தகத்தை அருமையான பொக்கிஷமாக மதித்தாள் செல்லாயி. உண்மையிலேயே. எப்போது சமயம் கிடைத்தாலும், அவளுக்கு அந்தப் படங்களைப் பார்ப்பதும், தன்னை ஒத்த பெண்களுக்குக் காட்டு வதும்தான் வேலை.

அந்த அரிய பொக்கிஷம் போன்ற புத்தகத்திலேகூட இரண்டோர் ஏடுகளைக் கிழித்துவிட்டாள் செல்லாயி அவளா செய்தாள் பாவம்! எல்லாம் அந்தப் பேய் செய்த வேலை என்று செங்கோடன் தன் மகனுக்குக் கூறினான். புத்தகம் கிழிந்ததைப் பற்றிக் கவலைப்படவில்லை சுப்பு. தன் தங்கையின் தேக நிலை பற்றித்தான் கவலைப்பட்டான்.

முன் தடவை வந்தபோது செல்லாயி, ஒரு குறையுமின்றித்தான் இருந்தாள். சொல்லப் போனால் ரொம்பச் சந்தோஷமாகவே இருந்தாள்.

"எங்கேம்மா போயிருந்தே?"—செங்கோடன் கேட்பான்.

"கொல்லைப் பக்கம்"—செல்லாயி சொல்வாள்.

"ஏனாம்?"

"சேங்கண்ணு அந்தப் பக்கமா போயிருக்கும்..."— குறும்புக்காரக் குப்பன் சொல்லுவான் அதுபோல.

அது, வசந்த காலம்— மனப்பருவத்தில்— அதாவது, வேலனுக்கும் செல்லாயிக்கும்...ஆசை பொறந்த சமயம். காதல் என்று பெயர் கூறத் தெரியாதல்லவா. கிராமத்தார்கள்தானே!

வேலன், குடிகாரக் கோவிந்தன் மகன். "இந்தப் பயலுக்கு அவங்க அப்பன் சுபாவம் கிடையாது. கள்ளுத் தண்ணியைக் காத தூரத்திலே கண்டாலே, வாந்தி எடுப்பான்" என்று வேலனைப் பற்றிப் பேசுவார்கள் ஊரார். மகன், மீசை கருக்கும் பருவம் வந்ததற்கும், கோவிந்தனுக்கு முடக்கு நோய் வந்ததற்கும், காலம் ஒத்து இருந்தது. ஆகவே, வேலன், விவசாய காரியத்தைக் கவனித்துக்கொண்டு, ஊருக்கு நல்லவனாக இருந்து வந்தான்.

"ரொம்பப் பொல்லாதும்மா, வேலு" என்று, அந்த ஊரிலேயே செல்லாயி ஒருவள்தான் சொன்னவள்.

பொல்லாதவனேதான் அவன். போகிறபோதும் வருகிறபோதும், ஏன், செல்லாயியை அப்படிப் பார்க்க வேண்டும், விழுங்கி விடுவதுபோல? ஆனால், செல்லாயியை மட்டுந்தான்! கண், மேயும் சுபாவம் கொண்டதல்ல.

"ஏம்பா! வேலு" என்று சிலர் தமாஷ் செய்வார்கள்.

"ஒண்ணுமில்லேண்ணே!" மிகப் பணிவாக, புன்சிரிப்புடன் கூறுவான்.

"ஆசைக்கினியவளே அல்லி ராணி!

அழகான மாதரசி அல்லி ராணி!

அருகினிலே வரலாமோ அல்லி ராணி!

என்று அவன் பாடினபோதுதான் செல்லாயிக்கே புரிந்துவிட்டது, தனக்கும், வேலன்மீது பிரியம் என்ற உண்மை.

கிராமக்கூத்து—வேலன்தான் அர்ஜுனன். வேறே யாரப்பா ராஜா வேஷத்துக்கு ஆள் இருக்கிறாங்க— என்று கூத்து வாததியார் குமரேசன் சொன்னபோது, வேலனுக்குப் பூரிப்புதான். அர்ஜுனன் பாடுவதற்கு அவர் சொல்லித் தந்த பாட்டை, அன்று அவன் அவ்வளவு உருக்கமாகப் பாடினான். அல்லி வேஷம் போட்டவன் பக்கத்திலேயேதான் நிற்கிறான். வேலனோ, அவனைப் பார்த்துப் பாடவில்லை— நேரே செல்லாயி இருக்கும் திக்கு நோக்கியே பாடினான். பிரபல நடிகன்கூட, அன்று வேலன் பாடியதுபோல் பாடியிருக்க முடியாது. செல்லாயிக்குச் சமர்ப்பித்த பாடலல்லவா அது!

"சூது தெரிஞ்சுப் போச்சு, உன் சூது;

மாது, நான் அறிவேனே உன் சூது!"

என்று அல்லி வேஷக்காரன் பாடினான்— செல்லாயிக்குப் பாடல் தெரியும்— எப்படிப் பாட முடியும்—வெட்கமாக இருக்குமே!

இந்தச் சமயத்திலே செல்லாயியைக் கண்டு, சுப்பன் பெருமைப்பட்டான். காட்டு மல்லிகை என் தங்கை நாட்டுப்புறத்திலே இருக்கிறாள்— காசம் பிடித்ததும், கண் மங்கினதுகளும் பட்டணத்திலே 'டால்' அடிக்கின்றன என்று எண்ணிப் பெருமைப்படுவான். இலேசாக வேலன் விஷயம் தெரிந்தது.

"செல்லா! நம்ம கொல்லைக் கோடியிலே இருக்கே ஒரு மரம், அது என்னா மரம்?" சுப்பு கேட்டான் ஓர் நாள்.

"அதுவாண்ணே, எனக்குத் தெரியாதே"— செல்லா வழக்கத்துக்கு மாறாகப் புளுகு பேசினாள். புரியாதவன் போலச் சுப்பு நடித்தான். "என்னம்மா, தினம் போகிறே வருகிறே, மரம் இன்னதுன்னு கூடவா தெரியாது" என்று கேட்டான். "பிசினி மரம் அண்ணே" என்று பதில் கூறி விட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

செங்கோடன் வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டே, "பாருடாப்பா, சாமர்த்தியத்தை. பிசினி மரமாம். தாலி கழுத்திலே ஏறுவதற்கு முன்னேயே, பேரைச் சொல்லக்கூடாதாம்! பிசினி மரம்! வேல மரம்னு சொன்னா, அவன் பேரு வருதுன்னு, என்னா யோசனை பாருடாப்பா!" என்று கூறினான்.

போதையில்லாத நேரமாகப் பார்த்து, கோவிந்தனிடம் பேசினான் செங்கோடன். “தைமாசம் முடிச்சிடுவோம்" என்று கோவிந்தன் கூறிவிட்டான். வேலன், கவர்ச்சியான தோற்றமுடையவனாகவும், உயர்ந்த குணமுள்ளவனாகவும், நல்ல உழைப்பாளியாகவும் இருப்பதையும், அவனிடம் செல்லாயி உள்ளன்பு கொண்டிருப்பதையும் கண்டு, சுப்பு, இது பொருத்தமான காதல் கலியாணம் என்றுகூறி மகிழ்ந்தான். போட்டோ எடுத்துப் போடலாம் பத்திரிகையிலே! எத்தனையோ தேய்ந்து போன திருமதிகளின் திருமண பிளாக்கு.கள் வெளிவருகின்றன! ஆனால் ஒரூர் உழவன் மகளின், உயர்ந்த அழகும், வேலனின் வீரத் தோற்றமும், பத்திரிகைக்காரருக்கு எப்படிப் பிடிக்கும்? பட்டிக்காட்டானுக படந்தானே அது! மிராசு வீடா, இல்லெ ஒரு டாக்டரா, படம் போட? ஆகவே சுப்பு அந்த ஆசையை அடக்கிக்கொண்டான். அவன் மனதில் தன் தங்கையும் வேலனும் சந்தோஷமாக இருக்கும் காட்சி, அப்படியே பதிந்து இருந்தது— போட்டோவைவிடத் தெளிவாக.

இந்த நிலையிலே, "செல்லாயிக்கு உடம்பு சரியில்லை; பிசாசு பிடிச்சுக்கிட்டு இருக்கு. பயப்பட வேணாம். தக்கது செய்து வர்றோம்" என்று கடிதம் வந்தால், சுப்பு திடுக்கிட்டுத்தேம்பி அழாமல் எப்படி இருக்க முடியும்? லீவ்இல்லை. எனவே, விவரமாகக் கடிதம் எழுதினான் தகப்பனாருக்கு. "பேயும் கிடையாது; பூதமும் கிடையாது. நோய்தான் அது. நல்ல மருந்து கொடுக்க வேணும்— வீணா மந்திரம்ணும், மாயம்ணும் செய்து, செல்லா உடம்பைப் பாழ்படுத்திவிடாதீங்க. நான் ஒரு பத்து நாள்லே வர்றேன்." என்று. கொஞ்சநாள், மகன் சொன்னபடித்தான் செங்கோடன் மந்திரக்காரனைக் கூப்பிடவே இல்லை. ஆனால், செல்லாயிக்கோ, உடம்பு இளைத்தது, ஒரே மயக்கம், தலைவிரி கோலமாகிக் கிடந்தாள்— கிணற்றிலே குட்டையிலேகூட விழுந்து விடுவேன்னு சொல்கிற அளவுக்குப் பேய் முற்றிவிட்டது.

"செல்லா! உடம்பு என்னம்மா செய்யுது?" அம்மா கேட்பாள் அன்புடன். கண்களிலே மிரட்சியுடன் செல்லாயி மௌனமாக இருப்பாள். தாய் மேலும் மேலும் கேட்டால், செல்லாயியின் கண்களிலே நீர் பொலபொலவென்று உதிரும். சாப்பாடு சரியாகக் கிடையாது. அழுக்குப் புடவை தான்—துவைப்பது கிடையாது— சமையல் செய்கிற இடத்தருகேயோ, புறக்கடை நடைப்பக்கமோ படுத்தபடி இருப்பாள். "எழுந்திரம்மா செல்லம்" உஹும்— "ஏம்மா!" "மயக்கமா இருக்கு"— இதேதான் பேச்சு. "மாமரத்துப் பிசாசு! வேறே ஒண்ணுமில்லே! இது நல்லாத் தெரியுது; நீ என்னப்பா செங்கோடா, நம்ம பூசாரி பொன்னனைக் கூப்பிட்டனுப்பி, மந்திரம் செய்யச் சொல்லு. ஏன் முழிக்கிறே"— பலர் கூறினர் இதுபோல. "என் மவன் சொல்றான், அதெல்லாம் வேணாம்னு" செங்கோடன் கூறுவான் அதற்குப்பதில்— குடிவெறியிலே, கோவிந்தனும் ஒருநாள் கூச்சலிட்டான். "மாமரத்துப் பிசாசு புடிச்சவளே, என்மவன் தலையிலே கட்டலாம்னு நினைச்சயடா.. டேய்..." என்று.

செங்கோடன் கண் எதிரேயும், கருத்திலும், செல்லாயி தான்— வேலன்— கோவிந்தன்— திருமணப் பந்தல்— இவை எதுவும் தெரிவது கிடையாது. "குடிகாரப்பய, ஏதோ கூவிகிட்டுக் கிடக்கட்டும்" என்று கூறிவிட்டான். எதற்கும் வேலனையாவது பட்டணத்துக்கு அனுப்பலாமா சுப்புவைப்பார்க்க என்று எண்ணினான். வேலன், "அப்பாவுக்கு உடம்பு ஒருவேளைப் போல இல்லெ— நான் எப்படிப் போன முடியும்?" என்று நிர்த்தாட்சணியமாகக் கூறிவிட்டான்.

"இவனைப் போய்த் தங்கமான பயல்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். தறுதலைப்பய மவன், தாலிக்கயத்தைத் தூக்கிகிட்டுத் திரிஞ்சான்; இப்ப என்னடான்னா தவப்பனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றான். கொடம் கொடமாக் குடிச்சுப் போட்டுக் கிடக்கிறான் அப்பன்காரன். இவரு உருகுறாரு. அந்த நாய்க சம்பந்தமே நமக்குக் கூடாது போ" என்று செங்கோடன் சலித்துக் கொண்டான்.

"போவுது, மெதுவாப் பேசுங்க. அது வேறே அவ காதிலே விழப்போவுது" என்று செங்கோடன் மனைவி, சிவப்பி கூறினாள்.

கொஞ்சநாள் கழித்துத்தான் சுப்பு வந்தான் - நிலைமையைக் கண்டான்— அவனுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. அவன் கேள்விகளுக்கும், "ஒண்ணுமில்லே- மயக்கம்" இரண்டே வார்த்தைதான் பதில்.

"ஏம்பா, வேலனை..." என்று ஆரம்பித்தான் சுப்பு.

"அவரு ரொம்பப் பெரியவருடாப்பா, அப்பனைவிட்டு அரை நொடி அப்படி இப்படி போகமாட்டாரு. எல்லாம் சுப்பு!மனுஷாளுங்க சுபாவம். இந்த மாதிரி நேரத்திலேதானே தெரியுது" என்று துவக்கி, வேலன் நடந்து கொண்ட போக்கைக் கூறினான் செங்கோடன். சுப்புவுக்கும் கோபந்தான். 'மடையன்! முட்டாள்! காட்டுப்பூச்சி!' என்று முணுமுணுத்தான். "ஏம்மா! பொழுதுபோக்கா படப் புஸ்தகத்தைப் பாரேன்" என்று சுப்பு தங்கைக்கு யோசனை கூறினான். செங்கோடன் புத்தகத்தைக் கொண்டுவந்து சுப்புவிடம் காட்டி "இதெக்கூடக் கிழிச்சி விடுதேப்பா. இதெல்லாமா நோய்? மாமரத்துப் பேயின் வேலைதாம்பா" என்றார்.

புத்தகத்தை வாங்கிப் புரட்டினான் சுப்பு. இரண்டோர் ஏடுகள் கிழிந்து கிடந்தன— மோட்டார்— ஒரு அலங்கார புருஷன் ஆகிய இரண்டு படங்கள் அவை. அலங்கார புருஷனின் படம் அலங்கோலமாகக் கிடந்தது. அவன் யார்? கொஞ்சம் ஆராய்ச்சி நடத்தினான். என்ன காரணத்தாலேயோ, செல்லாயி, அந்த ஆளிடமோ அல்லது அதேபோன்ற உருவமமைந்தவனிடமோ, கோபம் கொண்டிருக்கவேண்டும். ஏன்? பட்டிக்காட்டிலே, இப்படிப்பட்டவன், ஏன் வரப்போகிறான்? வந்திருந்தாலும், செல்லாயிக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்? யோசிக்க யோசிக்க அவனுக்குக் குழப்பம் அதிகரித்ததேயன்றி, விளக்கம் ஏற்படவில்லை. அவளோ, விறைக்கிறாள்— விம்முகிறாள்— விளக்கம் தருவதாக இல்லை. வேலனோ, 'யார் கண்டாங்கோ' என்று சுருக்கமாகப் பேசிவிட்டான். சுப்புவோ இந்தச் சிக்கு அறுக்காமல் இருப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டான்.

படப்புத்தகம், அவன் தயாரித்தது தானே— 'உலகம்' ஏட்டிலிருந்து சுத்தரித்து எடுத்த படங்களைக் கொண்டு. எனவே மோட்டாரும், சுந்தரப் புருஷனும், அவன் கத்தரித்த படங்கள்தான். யாரவன்? யோசித்தான நெடுநேரம்; புரியவில்லை. ஆபீசுக்குச்சென்றான். அங்கு கண்டுபிடித்தான் பழைய இதழ்களைப் புரட்டி-அவன் ஒரு சினிமா டைரக்டர்! சிங்-என்பது பெயர். கிராமக் காதல் என்ற உன்னதமான கதையை, டைரக்டர் படமாக்கிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் இதழில் இருந்தது. ஒரு சமயம், டைரக்டர் கிராமக் காட்சியைப் படமெடுக்கப்போயிருந்தாரோ? அப்போது ஒருவேளை, செல்லாயி அவனைக் கண்டிருக்க முடியுமோ— என்னமோ!டைரக்டரைச் சந்தித்துக் கேட்டாலொழியச் சிக்கல் தீராது என்று ஏற்பட்டது. பார்சல் கட்டும் 'பயலை' பிரபல டைரக்டர் சந்திப்பது,எப்படி? எப்படியாவது சந்தித்தாக வேண்டுமே! பலவிதமான முயற்சிகள் எடுத்தபடி இருந்தான். ஒருநாள், டைரக்டரே, ஆபீசுக்கு வந்தார்— எடிட்டரைப் பார்க்க!

"சார்! கிராமக் காதல், 'ரஷ்' போட்டுக் காட்டுகிறேன் வருகிறீரா?" என்று கேட்டார் டைரக்டர்.

உள்ளமோ ரஷ்யாவின் போக்கை ஆதரிக்கச் சொல் கிறது; பத்திரிகை முதலாளியோ அமெரிக்கக் கம்பெனிக்கு ஏஜண்டு. ஆகவே அவரோ, அணுகுண்டு, அன்பு மார்க்கத்தின் தூதுவனாக அமையும்படி அமெரிக்கா அபூர்வமாக வேலை செய்கிறது என்று பிரச்சாரம் செய்யச் சொல்கிறார். இந் நிலையிலே என்ன செய்வது என்று குழம்பிக் கிடந்தவருக்கு, படம் பார்க்க அழைப்புக் கிடைத்தது. எதிர்பாரா விருந்தாயிற்று.

என்ன காரணத்தாலோ, சுப்புவையும் அழைத்துச் சென்றார் எடிடர்.

அங்கு சென்றபிறகுதான் சுப்பு உண்மையைத் தெரிந்து கொண்டான்.

எடிடர் மிக மிகப் பாராட்டிய ஓர் காட்சி, கப்புவைத் தூக்கி வாரிப்போட்டது.

எருமை ஒன்று, வழக்கத்துக்கு மாறாக ஓடிவந்தது— அதன் பின்னே ஓடிவருகிறாள் ஒரு பெண்— வேறு யாருமில்லை— செல்லாயிதான்! செல்லாயியின் கழுத்திலே ஒரு ரோஜா மாலை!!

கொஞ்சம் தொலைவிலே ஓர் ஆலமரம். அதன் அடியிலே, வேலன், அண்ணாந்து பார்த்தபடி படுத்துக் கொண் டிருக்கிறான்— நாகரிக உடை அணிந்த ஒரு மாது, ஒரு திராட்சைப் பழக்கொத்தை அவனுடைய வாய்க்கு நேராகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்!

இந்த இரு காட்சிகள் போதாதென்று, சுப்புவே பதைக்கும்படியான வேறோர் காட்சியும் காட்டப்பட்டது.

செல்லாயி, ஒரு ஆப்பிளைக் கடித்துக் கொஞ்சம் தின்கிறாள். அதன் இனிப்பிலே இலயிக்கிறாள் போலும்! அதனாலேதான், முகம் அவ்வளவு 'களை'யாக இருக்கிறது என்று, அவன் முதலில் எண்ணிக் கொண்டான். ஆனால் காட்சியின் அடுத்த கட்டம் அவனைத் தூக்கி வாரிப்போட்டது. கடித்த ஆப்பிளை செல்லாயி, ஒரு ஆடவனிடம், (நாகரிக உடைக்காரன்) தருகிறாள். அவன் சந்தோஷமாக அதை வாங்கிக் கடித்துத் தின்கிறான்.— மீண்டும் அவளிடம் தருகிறான்.— மீண்டும் அவள், ஆப்பிளில் கொஞ்சம் கடித்துத் தின்கிறாள் — மீண்டும் அவனிடம் தருகிறாள்— மறுபடியும் அவன் அதைத் தின்கிறான். சுப்புவுக்கு வந்த கோபம் இவ் வளவு அவ்வளவு இல்லை.

காட்சி மாறிற்று— வேலனும்— செல்லாயியும், ஆத்திரத்துடன் சண்டை போடுகிறார்கள்— செல்லாயியின் தலைமயிரைப் பிடித்திழுத்து வேலன் துன்புறுத்துகிறான். செல்லாயி, அவனுடைய கையைக் கடித்து விடுகிறாள். அவன், செல்லாயியை, ஒரு மரத்தின்மீது மோதும்படி தள்ளுகிறான். இப்படிச் சண்டை நடக்கிறது.

எடிடர், படம் முதல் தரம் என்றார்.

டைரக்டர், 'படத்தின் முக்கிய பகுதிகளல்ல இவை. கிராமியக் காட்சிகள் சில இவை. படம் பூராவும் தயாரா னால், பட உலகுக்கே பெருமை தரும்' என்று கூறினார்.

"இந்தக் காட்சியிலே வரும் காதல் கட்டம், சண்டை, இவைகள் கதையிலே சம்பந்தப்பட்டவைகளல்லவா" என்றார் எடிடர். "சம்பந்தப்படுத்த வேண்டும்" என்றார் டைரக்டர். ஆனால், இந்தக் காட்சிகள் என் சமார்த்தியத்தின் பரிசு! கூறுகிறேன் கேளும்! இந்தக் காட்சிகளை நான் எப்படிச் சிருஷ்டித்தேன் என்பதை என்ற பீடிகையுடன், டைரக்டர், தன் திறமையை விளக்கலானார்.

கிராமக் காட்சியைப் படம் பிடிக்க, ஓரூர் என்ற கிராமம் சென்றேன்— கதா நாயகி ஒய்யாரியும், கதாராயகன் ஓங்காரமும் வந்திருந்தனர். 'எடிடர் சார்! உங்கள் மனதோடு வைத்துக் கொள்ளுங்கள். ஒய்யாரியின் உண்மைப் பெயர் குப்பி! சிங்காரம் என்பவனைத்தான் ஓங்காரம் என்று புதுப் பெயரிட்டேன்.'

கிராமம் அழகாக இருந்தது. கதாநாயகனிடம் கோபித்துக் கொண்டு கதாநாயகி ஊடல் செய்வதாகக் கதை. இதற்காக, கதாநாயகிக்கு ஒரு கிராமத்தானிடம் காதல் ஏற்பட்டதாக ஒரு கற்பனை செய்தேன்— கதாசிரியருக்கு நான் கூறிய பிறகுதான் விஷயம் தெரியும்.

கிராமத்தான் ஒருவனைக் கண்டேன்— ஒருவாரம் என்னிடம் வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். ஓய்யாரியும், ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டாள். அந்த இருவருந்தான் இவ்வளவு பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது நடித்ததாக! எல்லாம் டிரிக்ஷாட்

மரத்தடியிலே அவனைப் படுக்கச் செய்து, படம் பிடித்தேன் முதலில்.

பிறகு, ஒய்யாரி கையிலே திராட்சையைக் கொடுத்து, அதை அவள், யாருக்கோ தருகிற பாவனையுடன் ஒருபடம் பிடித்தேன். இரண்டையும் இணைத்தவுடன் கதை உருவாயிற்று! கட்டழகு வாய்ந்த ஒரு கிராமத்தானிடம், மையல் கொண்ட நாகரிக நங்கை, அவனுக்குத் தன் இருதயத்தைக் காணிக்கையாக்கி, அவனுடன் காதல் விளையாட்டு நடத்துகிறாள்— திராட்சை தருகிறாள்—என்று கதை வளர்ந்தது.

கிராமப் பெண்ணிடம் ஒரு ஆப்பிள் கொடுத்து, விட்டு விட்டுக் கடிக்கச் சொல்லிக் காட்சிகள் எடுத்தேன். நம்ம கதாநாயகனிடம் வேறோர் ஆப்பிள் கொடுத்து, அதேபோலச் செய்யச் சொல்லிப் படம் பிடித்தேன். இரண்டையும் பக்குவமாக ஒட்டினேன்—அதன் விளைவுதான்— கிராமப் பெண் நாகரிக புருஷனுடன் நடத்தும் 'பழக்கடி' விளையாட்டு.

இது மட்டுமா? இந்த இரண்டு காட்சிகளையும் அவசர அவசரமாகச் சரிசெய்து, பெண்ணுக்கு அவன் சம்பந்தப் பட்ட காட்சியும், அவனுக்கு அவள் சம்பந்தப்பட்ட காட்சியும் போட்டுக் காட்டினேன். அதன் விளைவுதான். அந்த அற்புதமான சண்டை!"

ஓங்கி அறைந்தான் சுப்பு, டைரக்டரை! அடுத்த விநாடி அவர் காலைப் பிடித்துக் கொண்டான். பயந்து விட்டார் டைரக்டர். பிறகு பரிதாபப்பட்டார், செல்லாயி— வேலன் விஷயத்தைச் சுப்பு விளக்கியதும்.

மோட்டார் கிளம்பிற்று ஓரூருக்கு. வேலனைத் தேடிப் பிடித்து, டைரக்டர் விஷயத்தை விளக்கினார்.

"அப்படிங்களா? ஐயையோ! நான், என் பத்தரைமாத்துத் தங்கத்தைச் சந்தேகித்துப் பதைக்கப் பதைக்கப் பேசி விட்டேனுங்களே" என்று குளறினான வேலன்.

செல்லாயிக்கும் விஷயம் விளக்கப்பட்டது. வேலனை வீணாகச் சந்தேகித்ததற்காக வருந்தினாள். இருவருக்கும் இடையே ஒரு டைரக்டரின 'வேலை' மூட்டிவிட்ட சந்தேகம், நாளாவட்டத்திலே 'பிசாசு' ஆயிற்று என்பதை வேலனும், சுப்புவும் புரிந்து கொண்டனர்— ஆனால் செங்கோடனுக்கு முடியாதல்லவா? அவன், பூசாரி பொன்னனை வேண்டிக்கொண்டான்— அவன் தன் வழக்கமான வேப்பிலை வீச்சை நடத்தினான்— இதற்குள் உண்மை விளங்கி, சந்தேகம் நீங்கிவிட்டதால், செல்லாயிக்கு இருந்துவந்த சஞ்சலம் அதன் விளைவாக ஏற்பட்ட மனக்குழப்பம், மயக்கம், ஏக்கம் திகில், யாவும் மறைந்துவிடவே, அவள், 'பழையபடி' சிரிப்புக்காரியானாள். செங்கோடன், பூசாரி பொன்னனுடைய மந்திரபலத்தாலே, தன் பெண்ணைப் பிடித்துக் கொண்டிருந்த மாமரத்துப் பிசாசு விலகிவிட்டது என்றே நம்பினான்— அதையே கிராமம் பூராவும் கூறினான். அவன் அறிவானா, பாவம், இவ்வளவு அலைச்சலும், ஆலமரத்துப் பிசாசின் வேலை என்பதை!