உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை

விக்கிமூலம் இலிருந்து
7
ராஜபார்ட் ரங்கதுரை

"அச்சாபீஸ் மானேஜரைப் போய்க் கேளுடா, இப்படித்தான் போஸ்ட்டர் போடுவதா என்று. போஸ்டர் போடுகிறார்களாம், போஸ்ட்டர்! இது என்ன, வாடகை சீன் போட்டாடும் வக்கற்ற கம்பெனி என்று எண்ணிக் கொண்டாரா? நான்தான். செலவு பற்றி யோசிக்கிற கம்பெனி அல்ல இது; போஸ்ட்டர் பிரமாதமான முறையில் இருக்க வேண்டும் என்று பன்னிப்பன்னிச் சொன்னேனே. ராஜபார்ட் என்ற எழுத்தை, இப்படியா கடுகு சைசில் போடுவது? போ! இந்தப் போஸ்டர் வேண்டாம். பெரிய எழுத்தில் ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று போடச் சொல்லு. (சற்று யோசித்து) டே! ராஜபார்ட் என்று மட்டும் அல்லடா, ராஜபார்ட் ராக ஆலாபன ரங்கதுரை பாகவதர் என்று போடச் சொல்லு'— என்று உற்சாகத்துடன் கூறி, கேட் கந்தசாமியை, டிராமா கம்பெனி முதலாளி குருமூர்த்தி அனுப்பிவிட்டு, கம்பெனி மானேஜரைக் கூப்பிட்டனுப்பி விட்டு, 'முருகா! கந்தா!' என்று கூறியவண்ணம் திண்டின் மீது சாய்ந்தார். அவர் சாய்ந்த அதிர்ச்சியால், பக்கத்திலிருந்த வெள்ளித்தாம்பாளம் ஆடி, அதிலே இருந்த வாசனைப் பாக்குத்தூள், ஜமக்காளத்தின்மீது சிதறிற்று. வேலைக்காரன் வந்ததும், அதைச் சுத்தப் படுத்தச் சொல்லலாம் என்று எண்ணி, அவர் வேறு சில முக்கியமான யோசனையில்ஈடுபட்டார்.

கம்பெனிக்கு நல்ல பேர்—புகழ்—வருவாய், பத்திரிகைகளில் பாராட்டுகள்— போட்டோக்கள். இந்த நிலைமை வெறும் எழுத்து வடிவோடு இல்லை— வெள்ளித் தாம்பாளமாக, வெல்வெட்டு மெத்தையாக, இரும்புப் பெட்டியாக உருவெடுத்துக் காட்டிற்று. நடிகர்கள் மட்டும் நூறு பேர்! எடுபிடிகள், எக்ஸ்ட்ராக்கள் முதலியவர்களைச் சேர்த்தால், ஒரு ஐம்பது தேறும். விருந்தாளிகள் ஒரு ஐம்பது பேர் இருக்கும்— ஆகமொத்தம், பகல் ஒரு மணிக்கு, சாப்பாட்டுக்கு, பந்தி உட்காருவதைப் பார்த்தால், குருமூர்த்திக்கு பரமானந்தமாக இருக்கும். உள்ளூர் பெரிய மனிதர் யாராவது இரண்டு பேரை அழைத்து வருவார், இதைப் பார்க்கட்டும் என்பதற்காகவே.

திண்டின்மீது சாய்ந்த குருமூர்த்தியின் மனக்கண்முன், நாலு நல்ல நடிகர்களே கிடையாது. இருந்த நாட்கள், வசூலான பணம் கொட்டகை வாடகைக்கும், பிட் நோட்டீசுக்குமே போதுமானதாக இல்லாத காலம்; இன்னும் அதற்கும் முன்பு, கம்பெனியே இல்லாமல், அவ்வப்போது ஊருக்கு ஊர், சிற்சிலரைப் பிடித்து, ஸ்பெஷல் கற்றுக் கொடுத்து 'கூத்து' ஆடிவந்த காலம்— இவைகளெல்லாம் கவனத்திற்கு வந்தன. "கூத்தாடி குருமூர்த்தி" என்ற பெயர் மறைந்து, "பாரதமாதா நாடகக் கம்பெனி முதலாளி குருமூர்த்தி" என்ற பெயர் வருவதற்கு இடையில், அவர் பட்ட கஷ்டங்கள் பலப்பல. அவைகளை எல்லாம் எண்ணினார்— அவருடைய முகத்திலே வெற்றிக்களை தாண்டவமாடிற்று. ஒரு கட்டு 'ரவேஸ்' வெற்றிலையுடன், மானேஜர் வந்து சேர்ந்தார்.

"நேற்று வசூல் எவ்வளவு?"

"நேற்று கொஞ்சம் மட்டம். சிறு தூறல்."

"தொகை என்னய்யா?"

"எழுநூற்று அறுபது!

"இவ்வளவுதானா?

"இவ்வளவுதானா!— " என்று அவர் கேட்டபோது, உள்ளூர அவருக்கே சிரிப்பு! ஏனெனில், அவர் "அறுபது" ரூபா வசூலையே, 'அதிர்ஷ்டம்' என்று எண்ணி வந்த நாட்கள் உண்டு!! கம்பெனி மானேஜரிடம், அவர் பேசி வந்த பல விஷயங்களிலே முக்கியமானது ரங்கதுரையின் போட்டோவைப் பற்றியது. மானேஜர் அவசரமாகச் சென்று, அழகான சட்டம் போடப்பட்டிருந்த போட்டோவைக் கொண்டுவந்து, குருமூர்த்தியின் எதிரில் வைக்க, அவர், ரவிவர்மா தீட்டிய லட்சுமி படத்தின் பக்கத்திலே, துரையின் போட்டோவை மாட்டி வைக்கும்படிக் கூறினார். மானேஜர், லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு நடுவில் இதைத் தொங்க விட்டார். இந்த மூன்று படங்களுக்கு மேலே, கம்பெனி முதலாளி குருமூர்த்தியின் பெரிய படம் ஒன்று இருந்தது. குருமூர்த்தி படங்களை மாறிமாறிப் பார்த்து மகிழ்ச்சியடைந்து, மானேஜரைப் பார்த்து, "நம்ம துரையுடைய முகத்திலே இருக்கிற களை இருக்கு பார், அடடா, அற்புதமானது; அதுதான் 'லட்சுமிகளை'ன்னு சொல்வது” என்று பாராட்டினார். மானேஜர், அதைத் தொடர்ந்து, துரையின் கண்ணொளி, குரலின் இனிமை, சங்கீத ஞானம், நடிப்புத் திறமை, இவைகளைப் பற்றி, ஊரார் உயர்வாகப் பாராட்டுவது என்பவை பற்றிச் சரமாரியாகப் பேசிவிட்டு, "தப்பித் தவறி, ரங்கதுரை மோட்டாரில் கடைவீதிப் பக்கம் போய் விட்டால் போதும்; ஒரே கூட்டம்! 'அதோ பார், ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்' என்று கூவிக்கொண்டே கூட்டம் ஓடிவரும்!" என்று முத்தாய்ப்பு வைத்தார். "ஆமாம்! இப்போது நம்ம துரையின் பெயர் பிரபல்யமாகி இருக்கிறது. எப்படி ஆகாமல் போகும்? டபுள்ராயல் ஆறு ஆயிரம், சிங்கிள் ராயல் ஒரு பத்து, ஆறு ராயல் ஒரு ஏழு ஆயிரம், இப்படி அல்லவா, 'பப்ளிசிடி' ஏறி இருக்கு! ஊரிலே ஒரு மூலை முடுக்குக்கூட பாக்கி கிடையாதே! போஸ்ட்டர் எங்கேயும் ஒட்டியிருக்கிறோம். அவ்வளவு விளம்பரமும், ரங்கதுரைக்குத்தானே! ஊர்ஜனங்கள், ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் என்று புகழ்கிறார்கள் என்றால், இதிலே ஆச்சரியமென்ன?" என்று விளக்கத்தை விவரமாகக் கூறினார் குருமூர்த்தி. அவருக்கு, ரங்கதுரையிடம், கோபமோ, பொறாமையோ இல்லை. ஆனால், மனம் எனும் கழனியில், இந்த விதையைத் தூவினால், பலன் தரும் அளவுக்குப் பலர், ஏர் உழுது இருந்த நேரம் அது!

"ரங்கதுரையின் மனம் சுத்தமானது, அவனுடைய சாரீரத்தைப் போலவே!"

"அதனாலேதான், அவன் முன்னுக்கு வருகிறான்— நாமும் பணம் என்று பார்க்காமல், அவனுடைய பேரும் புகழும் வளர வேண்டும் என்று பாடுபடுகிறோம்."

"இட்டார்க்கு இட்ட பலன்தானுங்களே."

"அதுசரி. நல்லவர்களின் போக்கு அது. வேறு சிலதுகள் இல்லையா? உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்து கொண்டு!"

"ஆனால் நம்ம ரங்குவின் சுபாவம் அப்படிப்பட்டதல்ல. உங்களிடத்திலே அளவு கடந்த அன்பு. நேற்றுக்கூட, 'நாடகம்' பத்திரிகை ஆசிரியர் ரங்கதுரையிடம், உமது ஆசிரியர் யார், எத்தனை வருஷமாக இந்த நாடகத் தொழிலில் இருக்கிறீர், நீங்கள் முதன்முதலா எந்த நாடகத்தில் நடித்தீர் என்றெல்லாம் கேட்டார். நம்ம ரங்குவின் பெருங்குணத்தைப் பாருங்கள், "என் ஆசிரியர் கலாகேசரி குருமூர்த்தியார்-நான் நாடகத் தொழிலிலே ஈடுபட்டதே அவருடைய சகாயத்தாலேயும், ஆசீர்வாதத்தாலேயும். சிட்சையாலேயுந்தான்" என்று கூறினான்.

"நல்ல பிள்ளை, நம்ம ரங்கு! நல்ல மனம்— குணம்! கலாகேசரின்னு நமக்கு டைடிலே கொடுத்துவிட்டானா! நம்மிடம் அவனுக்கு உள்ளபடியே அவ்வளவு ஆசை. பாவம்! அவன் ஆசையை நாம் கெடுப்பானேன். இனி, போஸ்ட்டர், பிட்நோட்டீஸ், விளம்பரங்களிலே, நம்ம பேர் போடும்போது, கலாகேசரி குருமூர்த்தி என்றே போடு. ரங்குவுக்குத் திருப்தியாக இருக்கும்.

இவ்விதமான உரையாடலுக்குப் பிறகு, குருமூர்த்தி, வளரும் வசூலின் காரணமாக முகம் மலர்ந்து, அந்த வசூலுக்கு முக்கிய காரணமாக இருந்துவந்த ரங்குவுக்கு, "பாதாம் கலந்த பால் கொடு, பத்து ரூபாய் கை செலவுக்கு கொடு, படுக்கையிவே இன்னும் இரண்டு தலையணை தைத்துப்போடு, ஆர்ட் அட்டையிலே அவன் போட்டோ ஒரு பத்தாயிரம் அச்சிட்டு, அட்டை இரண்டணா விதம், தியேட்டரிலே விற்பனை செய்ய ஏற்பாடு செய், ரங்குவின் புகழ் பரவட்டும்" என்று கனிவுடன் புதிய புதிய கட்டளைகள் பிறப்பித்துவிட்டுக் கண் அயர்ந்தார். கம்பெனியில் அப்போது 'கந்தலீலா' நாடகம்— பிரமாதமான வசூல்! ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்தான் முருகன்! மற்றப் பாகங்கள் வேறுபல நடிகர்கள்!! அவர்களின் பெயர், வெளியேகூடத் தெரியாது. தெரிவிக்கும் வழக்கம் கிடையாது.

குருமூர்த்தியின் குதூகலத்தைவிட ஒருபடி அதிகமாகவே இருந்தது. ரங்குவின் களிப்பு நாடகத் தொழிலிலே கிடைத்த நற்பெயர், செல்வாக்கு, ரங்குவின் இளம் உள்ளத்துக்குத் தேன் ஊற்றாக இருந்தது. குருமூர்த்தி, தன்னிடம் காட்டும் அன்பும், அக்கரையும், அவன் மனதை நெகிழச் செய்தது. மற்ற நடிகர்கள் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு, தனக்கு அவர் சலுகைகள் காட்டுவது, ரங்குவின் மனதிலே, அவர்மீது ஒரு பாசமே ஏற்படும்படிச் செய்துவிட்டது. குருமூர்த்தி, ரங்குவைப் பாகவதராக்கி, ராஜபார்ட்டாக்கி, ராக ஆலாபனராக்கி மகிழ்ந்தார். குருமூர்த்தியை கலாகேசரியாக்கி, ரங்கு மகிழ்ந்தான். ராஜபார்ட்டான ஆலாபன ரங்கபாகவதரின் நடிப்பு மிகமிக அருமையாக இருந்தது— அவர், சாரீரத்தின் இனிமையும், சங்கீத ஞானமும், எப்படி இருந்தது என்று, பொருத்தமான உபமானம் கூறவேண்டுமானால், நவயுகக் கலாகேசரி குருமூர்த்தியார் கம்பெனியை நடத்தும் விசேஷத் திறமையும், திறமையுள்ள நடிகர்களைக் கண்டுபிடித்து அவர்களின் திறமைக் கேற்ற இடமளித்து, அவர்களை முன்னேற்றத்துக்குக் கொண்டுவரும் "பக்குவ மான முறை" இருக்கிறதே, அதுபோன்று இருந்தது என்றுதான் கூறவேண்டும்"என்று ரசிகர்கள் பேசினர்; எழுதினர். அதாவது இருவரிடமும் நட்பும், அதனால் சிறுசிறு பலனும் பெற்றவர்கள்! வேறு சிலர்— அவர்கள் தொகை குறைவு— இருந்தனர். குருமூர்த்தியிடம் பேசும்போது "ரங்கதுரையுடைய நல்லகாலம், அதிர்ஷ்டம், உங்களுடைய ஆதரவு கிடைத்தது.

இப்போது அதனாலே, ராஜபார்ட் ஆனான்— பாகவதர் ஆனான்— நீங்கள் அவனுக்கு இவ்வளவு அன்பு காட்டியிரா விட்டால், அவன் சாரீரம் கட்டையாகி, சீந்துவாரற்று. எங்காவது பஜனை மடத்திலே போய், 'ராம நன்னுப் ரோவரா' பாடிக் கொண்டிருப்பான். அவனுடைய ஜாதக பலன், உங்களுடைய தயவு அவனுக்குக் கிடைத்தது" என்று பேசுவர்.

அப்போது குருமூர்த்திக்கு அறுபது ரூபாய் வசூலுடன் அல்லற்பட்ட காலம், நாலு நல்ல நடிகர்கள் கிடைக்காமல் கம்பெனி கஷ்டப்பட்ட நாட்கள், இவை மறந்து போகும்— டபுள் ராயல், சிங்கிள் ராயல்—ரங்கதுரைக்காகச் செய்த விளம்பரச் செலவு, இவை கவனத்திலிருக்கும். பெருமையுடன், "போகிறான் பாபம்! நமக்கு நாலு காசு செலவானாலும் பரவாயில்லை. அவன் முன்னுக்கு வந்தால் போதும்; அவன் அதை எண்ணினாலும் சரி, மறந்து மண்டைக் கர்வம் ஏறிவிட்டாலும் சரி, நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம" என்று கூறுவார். விஷ விதையை அப்போது தூவுவர், “அவனுக்கு மண்டைக் கர்வம் பிடித்ததோ, ஒழிந்தான் அதோடு என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உதவி இல்லை என்றால், ராஜபார்ட்டுமில்லை; ராக ஆலாயனமும் இல்லை. பிறகு, அவன்பாடு திண்டாட்டந்தான்” என்று கூறுவர். குருமூர்த்தியின் புன்னகை, "ஆமாம்” என்று கூறும். அதுபோலவே, ரங்கதுரையிடம் சென்று பேசுவர், "முன்பெல்லாம் உங்களுக்குத் தெரியாது-கொட்டகை இருக்கிற தெருவழியாகவே ஜனங்கள் நடமாட மாட்டார்கள். ராத்திரி பதினோருமணி வரைக்கும் பாண்டு வாசிப்பார்கள். வெளியே— டிக்கட் முப்பது நாற்பதுக்குக் கூட விற்பனையாகாது. சதா சர்வகாலமும், சாப்பாட்டுக் கஷ்டந்தான் கம்பெனியில். நடிகர் ஏது— டிரஸ் ஏது— சீன் ஏது! நீங்கள் வந்து சேர்ந்த பிறகுதான் குருமூர்த்திக்கு 'சான்ஸ்'. ஆயிரம், எழுநூறு என்று வசூல் ஏறிற்று. உங்களுடைய சாரீரம், அவருக்குச் சம்பத்தாக முடிந்தது." என்பார்கள். ரங்கதுரை "அவருக்கு, கலையிலே ரொம்பப் பிரியம். இதுபோலக் கம்பெனி வைத்து நடத்த ஆரம்பித்து இருபது வருஷங்களுக்குமேல் இருக்குமாமே" என்று புகழ்ச்சியாகத்தான் பேசுவான். விஷ விதையைத் தூவுபவரோ, "நடந்தது இருபது ஆண்டுகளாக—ஆனால் கம்பெனியில் நல்லவர்களே நுழையமாட்டார்கள்; நாகரிகமான இரண்டு பாட்டுப்பாட ஒரு நடிகன் கிடையாது—மதுரை வீரன் கதையும், மாடசாமி காமிக்கும் நடக்கும். கேட்பாரற்றுக் கிடந்தது. நீங்கள் வந்து சேர்ந்த பிறகுதான், கந்தலீலாவும் காதம்பரியும், டபுள்ராயலும், சினிமா ஸ்லைடும், கப்பும் கேடயமும், மாலையும், மரியாதையும், மதிப்பும் பணமும்! பெருமையாக இப்போது பேசிக் கொள்கிறார், 'நம்ம கம்பெனியைச் சாமான்யமாகக் கருதாதே! ராஜபார்ட்டாக ஆலாபன ரங்கதுரை பாகவதர் இருக்கிற கம்பெனி என்றால், அதிலிருந்து, கம்பெனி எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்ள வேண்டும்; குண்டு மல்லிப்பூ, குரோடென்ஸ் செடியிலே பூக்காது' என்று கதை அளக்கிறார்" என்று பேசுவர்.

"அவர் சொல்வது உண்மைதானே. குரோடன்ஸ் செடியிலே, குண்டு மல்லிகை பூக்குமா? ஒரு உபயோகமற்ற கம்பெனியிலே, விஷயம் தெரியாத முதலாளியிடம் சிக்கியிருந்தால் நமது நடிப்பும், சங்கீதமும் விருத்தியாகி இருக்க முடியுமா?" என்று வாதாடுவான் ரங்கதுரை. விஷப்பூண்டை விவசாயம் செய்து பழக்கமானவர்கள், 'உபமானம், எதற்கும் எப்படியும் சொல்லலாம். குண்டு மல்லி குரோடன்சிலே பூக்குமோ? என்று கூறிவிட்டால் தீர்ந்து போச்சா! நத்தையிலே முத்தில்லையா? சேற்றிலே செந்தாமரை இல்லையா! அதுபோல, குருமூர்த்தியிடம் ஒரு ரங்கபாகவதர் இருக்கிறார் என்று நாங்கள் கூடத்தான் உபமானம் கூறமுடியும்" என்பார்கள். ரங்கதுரையின் முகத்திலேயும் புன்னகை தவழும். கம்பெனிக்குச் சிறப்பளிக்கும் அளவுக்குத் தனது சங்கீதம் வளர்ந்திருக்கிறது; குருமூர்த்திக்கு இலாபம் கிடைக்கும் அளவுக்கு தன் நடிப்புத் தொழிலிலே நற்பெயர் கிடைத்திருக்கிறது என்று அந்தப் புன்னகை கூறும்.

உண்மை நிலையோ, இருவர் உள்ளங்களில் தவழ்ந்த எண்ணங்களுக்கும் விஷவித்திடுவோர் (மனதிலே இருந்ததோ இல்லையோ) உதட்டிலே தவழ்ந்து வந்ததுமான எண்ணங்களுக்கும் வெகுவெகு தொலைவிலே இருந்தது. இருவரில் யாரால் யாருக்கு இலாபம்,யாருடைய உதவியால் யார் சிறந்தனர் என்பதல்ல, முக்கியமானது.

அது, நீர்மேல் குமிழி போன்ற விஷயம். குருமூர்த்தி- ரங்கதுரை கூட்டுறவால் ஏற்பட்ட உண்மையான பலன் என்னவென்றால், நாடகக்கலை நாட்டிலே பரவ, ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் கலைத் துறைக்கே, இந்தக் கூட்டுறவின் பெரும்பலன் போய்ச் சேர்ந்தது—கலைத்துறைக்குப் போய்ச் சேர்ந்ததென்றால், கலை உள்ளம் படைத்த அசைவருக்கும் போய்ச் சேர்ந்தது என்றுதானே பொருள்! உண்மையில் பலன், குருமூர்த்திக்கும். ரங்குவுக்கும் கிடைத்ததைவிட நாடகக்கலைக்கே அதிகம் கிடைத்தது. ஒரு நல்ல நடிகளைக் காணவும், சுகமான சங்கீதத்தை அனுபவிக்கவும், நாகரிகமான நாடகங்களைப் பார்க்கவும், காசு செலவிட்டு கண் அரிப்பும், காது குடைச்சலும் பெற்று வந்த மக்களுக்கு, சுண்ணுக்கும், காதுக்கும் கருத்துக்கும் விருந்தும் கிடைத்து வந்தது. குருமூர்த்தி—ரங்கு கூட்டுறவு,

கலைத் துறைக்கு, ஒரு புதிய, சிறந்த, தேவையான உதவியாக இருந்தது. இந்த உண்மையை மறைக்குமளவுக்கு, டபுள் ராயல், சிங்கிள் ராயல் போஸ்ட்டர் பற்றிய பேச்சும், அறுவது வசூலான இடத்தில் ஆயிரம் வசூலாகிறது என்றபேச்சும் வளர்ந்தது. "கம்பெனியினால்தான் ரங்கதுரை, பாகவதரானார்'—ஒரு கட்சி; "ரங்குவால்தான் கம்பெனி உருவாயிற்று"—மற்றோர் கட்சி. இப்படி ஒரு ஆபத்தான நிலைமை வளரலாயிற்று"—குருமூர்த்தி, ரங்கதுரை இருவருமே, அந்த நிலைமைக்குப் பலியானார்கள்—இருவரும் அறியாமலேயே.

ஊருக்கு விடுமுறை பெற்றுப் போயிருந்த ரங்கு, கடிதம் எழுதியிருந்தான் குருமூர்த்திக்கு. 'இங்கு தாயாருக்கு இன்னும் நோய் குணமில்லை. அங்கு கம்பெனி வசூல் எப்படி? வசூல், ரொம்பக் குறைந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் வந்துவிடுகிறேன். நான் வந்த பிறகு 'கந்தலீலா" துவக்கி ஒரு மாதம் நடத்தினால், இப்போது கம்பெனிக்கு நஷ்டம் வந்திருந்தாலும் சரிப்படுத்திவிடலாம் " என்று எழுதியிருந்தான்.

"வருஷம் பத்தானால்கூட, நம்ம ரங்கதுரைக்குக் கம்பெனியிடம் உள்ள அக்கரையிலே, நூற்றிலே ஒரு பாகம்கூட, மற்ற நடிகர்களுக்கு வருவதில்லை. தாயாருக்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்குப் போயிருக்கிறான்; அந்த இடத்திலேகூட அவனுக்குக் கம்பெனியைப்பற்றிய கவலைதான்—வசூல் எப்படி இருக்கிறது—கந்த லீலா போடலாம்—நான் வந்துவிடுகிறேன் சீக்கிரம் என்று கடிதம் எழுதுகிறான். இப்படிப்பட்ட குணசாலிகள் இருந்தால்தானே, கம்பெனி உருப்படும்" என்று பெருமையுடனும், பூரிப்புடனும் பேசிவிட்டு, டானிக் பாட்டிலும், சாத்துக்குடியும் வாங்கி அனுப்பி வைப்பார் குருமூர்த்தி என்றுதான், ரங்கு எண்ணினான். முன்பெல்லாம் அவ்விதந்தான் நடைபெறுவது வழக்கம். விஷப் பூண்டு முளைத்துவிட்ட நேரத்திலே இந்தக் கடிதம் வந்தது. எனவே விளைவு வேறாகிவிட்டது. “மண்டைக் கர்வத்தைப் பார்த்தாயா, இந்த துரைக்கு? இவன் இல்லாததாலே வசூல் 'டல்'லாகிவிட்டதாம்! கிண்டலாகக் கடிதம் எழுதியிருக்கிறான். கவலைப்படாதே. நான்வந்த பிறகு, கந்தலீலாபோடலாம்; நஷ்டத்தை அப்போது சரிப்படுத்திவிடலாம் என்று கடிதம் போடுகிறான். இவன் இல்லாவிட்டால், நம்ம கம்பெனியே நடக்காது — நமக்கு வேறு நாதியே இல்லை என்று எண்ணுகிறான். இவனை நாம் பாகவதராக்கி, ராஜபார்ட் ஆக்கி, தோடிக்கும் தாளத்துக்கும் வித்தியாசம் தெரியாத அபசுரத்தை, ராக ஆலாபனராக்கி வைத்த பலன், இவன், நான் இல்லாவிட்டால் கம்பெனி எப்படி நடக்கும் என்று

மறைமுகமாக, நம்மையே கேள்வி கேட்கும் நிலைமையை உண்டாக்கிவிட்டது" என்று கடுமையாகப் பேசி, மானேஜரைக் கூப்பிட்டு. நாளையோடு 'நல்லதங்காளை' முடித்துக் கொண்டு, இரண்டு நாள் லீவ் விட்டு கத்தலீலா ஆரம்பிக்கச் சொல்லு—போஸ்ட்டரும் போடு' என்றார். கடிதத்தின் விளைவாக இதைக்கூறுகிறார் என்பதறியாத மானேஜர், "ரங்கதுரை வருவதற்கு, இன்னும் இரண்டு வாரம் ஆகுமாமே, கந்தலீலா எப்படி?" என்று கேட்க, குருமூர்த்தி, "யாரய்யா சுத்த மடையனா இருக்கறே! கோழி கூவியா பொழுது விடியுது. கந்தலீலா, ரங்கன் வராமே நடக்காதா—நடக்கக்கூடாதா—நடந்ததில்லையா? ரங்கதுரைதானா கம்பெனி? ஏன் உன் கண்ணிலே தாமு, சோமு, இவனுங்களெல்லாம் படவில்லையா? சோமு, முருகன்—தாமு, வள்ளி—ஆமாம், டபுள் ராயல் போடு— சுகசாரீர சம்பன்ன சோமுன்னு போஸ்ட்டர் அடி; கலர் போஸ்ட்டர்" என்று உத்தரவிட்டார். பத்திரிகையிலே இதுபோல விளம்பரம் வருவதற்கும், ஊரிலே ரங்கதுரையின் தாயாருக்கு 'க்ஷயம்' என்று டாக்டர் கண்டுபிடித்து, ரங்கனுக்குக் கூறுவதற்கும், நேரம் சரியாக இருந்தது. ரங்கதுரையின் மனம் புண்பட்டது. எவ்வளவு உள்ளன்போடு உழைத்தும், கம்பெனியிடம் அக்கரைவைத்தும், முதலாளி கடைசியில் சமயத்தில் நம்மைக் காலை வாரிவிடத்தானே செய்கிறார். சோமுவை வைத்துக் கம்பெனி நடத்துவேன், தாமுவாலே நடக்கும். நீ அவசியமில்லை என்று மறைமுகமாக நமக்குக் கூறத்தானே, நாமாகக் கடிதம் எழுதியும்கூட, இப்படி, நாடகத்தை, சோமுவைக் கொண்டு நடத்துகிறார். நன்றியை மறந்து நடந்து கொள்கிறார். எவ்வளவு பேர் நமக்குச் சொன்னார்கள், "நீ வராத முன்பு, கம்பெனி இப்படி இல்லை" என்று தூண்டினவர்கள், தூபமிட்டவர்கள் பேச்சை எல்லாம் அலட்சியப்படுத்தி, ஒரு நல்ல கம்பெனி நடக்க வேண்டும் - ஒரு நல்ல அனுபவமுள்ளவரால்தான் அதை நடத்த முடியும், குருமூர்த்தியார்தான் அதற்கு ஏற்றவர், என்று மனதார நம்பித்தானே உழைத்து வந்தேன்— அதற்குப் பலன், இதுதானா!" என்று எண்ணி வருத்தப்பட்டான்.

'முதல் போகம் ஆயிற்று; அறுவடை முடிந்தது; இனி இரண்டாம் போகத்துக்கு விதை தூவ வேண்டியதுதான்' என்று, விஷ விவசாயிகள் எண்ணினர்—மும்முரமாக அதிலே ஈடுபட்டனர் பயிர் செழித்தது!

"பாகவதர், 'ஆக்ட்' செய்யக் காணோமே, ஏன்?" குருமூர்த்தியைக் கேட்பர் சிலர்—கலைரசம் தேடுவோர். குருமூர்த்தி, அவர் கூறுவதன் பொருள் விளங்காதது போல இருந்துவிட்டு, "அடடே! ரங்கனைச் சொல்கிறீர்களா? நான் பாகவதர், பாகவதர் என்று சொன்னதும், யாரைச் சொல்கிறார்களென்பது தெரியாமல் திணறினேன் என்று கூறிவிட்டு, மானேஜரைப் பேச வைப்பார்; "நம்ம ரங்கன் விஷயத்தைக் கேட்கிறார்" என்று ஆரம்பிப்பார். மானேஜர், மளமளவென்று கொட்டுவார். "ரங்கயாகவதரா! அவர் நிலை இப்போது ரொம்ப உயர்ந்து போயிட்டுது சார். அவர் கம்பெனிக்கு வந்து நடிக்கமாட்டார்—கம்பெனி அவர் ஊருக்கு வந்து நடிக்க வேண்டுமாம். நன்றிகெட்ட பயல்கள் சார்! நான் ரொம்ப நாளாகச் சொல்லி வருகிறேன் இவருக்கு—வேண்டாம், நீங்கள் அவனைத் தூக்கித் தூக்கி விடுகிறீர்கள்—ஆபத்து—ஆபத்து என்று இவர் கேட்கவே இல்லை—கந்தலீலா போட்டால் அவன்தான் முருகன்--ராம லீலா போட்டால் அவன்தான் ராமன்—ராமதாஸ் போட்டால் அவன்தான் நவாபு, பவளக்கொடி நடத்தினால் அவன்தான் அர்ஜுனன்—இப்படி அவனுக்கே 'சான்ஸ்' கொடுத்தபடி இருந்தார்—இப்போது அவன் கோபுரத்தின் மீது ஏறிக்கொண்டான்" என்பார். குருமூர்த்தியோ, அதைப் பற்றிக் கவலைப் படாதவர் போல, "கோபுரத்தின் மேலே குரங்குகூடத் தாண்டா ஏறிக் கொள்ளும்; போடா போ! நம்ம கம்பெனியிலே, எத்தனையோ ரங்கு வந்தான்—சோமு வந்தான்—போனான்" என்று கூறுவார்.

இவ்வளவுக்கும், ரங்கனுக்கும் கம்பெனிக்கும், கணக்குப் பைசல் ஆகிவிடவுமில்லை—ரங்கதுரை வேறு கம்பெனிக்குப் போகவுமில்லை—ஸ்பெஷலுக்குக்கூடப் போகவில்லை.

கம்பெனி நின்றுவிடவில்லை! ரங்குவும் பட்டினியாக இல்லை!! கம்பெனியில் இல்லாதது ரங்கதுரைக்கு ஒருவகை நிம்மதி தரவே ஆரம்பித்தது. ரங்கு இருப்பதும் இல்லாது போவதும் கம்பெனியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை நிரூபித்தாக வேண்டிய பெரும் பொறுப்பு குருமூர்த்திக்கு ஏற்பட்டது. முதலிலே அவருக்குத் தோன்றிய யோசனை, சோமுவையோ, தாமுவையோ, 'தூக்கிவிட்டு' விளம்பரம் செய்து, இடத்தை அடைக்க வேண்டும் என்பதுதான். பிறகு, அதனால் ஏற்படும் சிரமமும், அதன் விளைவும் எப்படியாகுமோ என்ற கவலையும்ஏற்படவே, அந்த யோசனையைக் கைவிட்டு விட்டு, கம்பெனியில், கண்கவரும் சீன்கள், புதிய உடைகள், கலர் லைட்டுகள்—டர்னிங் சீன்கள் இவைகள் உண்டு என்பதையே அதிகமாக விளம்பரப்படுத்தி, யார் வேண்டுமானாலும் எந்த வேஷம் வேண்டுமானாலும், போடக் கூடிய விதமான, 'தசாவதாரம்' நாடகத்தைத் தயாரித்து கம்பெனியின் வலிவையும், வனப்பையும் வளர்க்கலானார். சோமு ஒரு நாளைக்கு மகா விஷ்ணுவாக வருவான்—ஒரு நாளைக்கு துவாரபாலகனாவான்—ஒரு நாளைக்கு தாமு கிருஷ்ணனாவான். மறுநாள் அவனே ருக்மணி வேஷம் போடுவான்; கம்சன் வேஷத்துக்கு கேட் கந்தனே பொருத்தம்—அவனுக்குப் பேசத் தெரியாது—ஆகவே அவன் வாய் அசைக்கட்டும் 'மைக்கிலே' சொக்கன் பேசிவிடட்டும்—என்று, இப்படிப்பட்ட ஏற்பாடுகளுடன் 'தசாவதாரம்' நடைபெற்று வந்தது. ரங்கதுரை இல்லாமல் கம்பெனி நடைபெற முடியும் என்பதை நிரூபித்துவிட்டார், குருமூர்த்தி. ரங்கதுரையால், கம்பெனியில் இல்லாமல் நான் இருக்க முடியும், என்று மட்டுந்தானே காட்ட முடியும்? அவன் வேறு கம்பெனியில் சேர முடியாது; மற்ற எந்தக் கம்பெனியிலும் அவன் விரும்பும் நிலைமை கிடையாது— அவனாகப் புதிய கம்பெனி வைக்கவும் முடியாது—-அவனுக்கு அதற்கு வேண்டிய ஆற்றல் கிடையாது; அவசியமும் ஏற்படவில்லை. இந்த நிலைமையிலேதான், ரங்கதுரையின் பூர்வோத்திரத்தைப் பற்றிக் குருமூர்த்தி காலட்சேபம் செய்யலானார். அதற்கு ரசமான பக்கவாத்தியக்காரர்களும் சேர்ந்தனர்.

"கம்பெனி, காட்பாடியில் நடந்து கொண்டிருந்தது. வசூல் கொஞ்சம் குறைவுதான். ஆனால் வசூலுக்காக அங்கு தங்கி இருக்கவில்லை. ‘கண்டிராஜா' தயாராகிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்திலே, குருமூர்த்தி ஒருநாள் உலாவப் போனார் (உலாவப் போனார் என்பதற்கு முழுப்பொருள், மளிகைக் கடைக்காரருக்குத் தரவேண்டிய கடனுக்குச் சமாதானம் சொல்லி ஜப்திக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் போனார் என்பது.) உலாவப் போன இடத்தில், நீதிநாதன் கோயிலில், உட்கார்ந்து கொண்டு, ரங்கு பாடிக் கொண்டிருந்தான். சாரீரம் சுகமாக இருந்தது—அவனிடம் பேசினதில், குணமும் நல்லதென்பது குருமூர்த்திக்குத் தெரிந்தது. தெரியவே, "தம்பி, இப்படிப்பட்ட சாரீர சம்பத்தை வைத்துக் கொண்டு, ஏன் இங்கு இருக்கிறாய்? இந்த நீதிநாதன் கோயிலிலே பெருச்சாளிகள் உலாவுமே தவிர, ஜனக்கூட்டமே அதிகம் இராதே—ஏன் நீ இங்கே இருக்கிறாய்—நம்ம கம்பெனிக்கு வந்துவிடு" என்று கூற, "எனக்குச் சங்கீதத்தில் பிரியம். கலைக்குப் பணி புரிய வேண்டும் என்பதிலே ஆர்வம்— ஆகவே அதை இங்கிருந்தே செய்ய முடியுமே" என்று வாதிட, "பைத்யக்காரா! இடத்துக்கு ஏற்றபடிதானே இயல்பு அமையும். நீதிநாதன் கோயிலிலே இருந்தால், உன் சாரீரம், கொஞ்ச நாளில் 'தர்பார்' இராகம் பாட மட்டும்தான் பயன்படும். இந்த இடம் உனக்கு ஏற்றதல்ல. வா, நமது கம்பெனிக்கு" என்று அழைத்து வந்தார். வந்த ரங்கன், கைகட்டி வாய்பொத்தி நின்று, குருமூர்த்தி குளிக்கப் போனால் செம்பு எடுத்துக் கொடுத்து, படுத்துக்கொண்டால், கை-கால் பிடித்து, சாப்பிட உட்கார்ந்தால் விசிறி கொண்டு வீசி, கம்பெனிக்குக் கிளம்பினால், கால் செருப்பும் கைக்குடையும் எடுத்துக் கொடுத்து, அடக்க ஒடுக்கமாக இருந்து பாகவதரானான்; ராஜபார்ட்டானான். இவ்வளவு பெரிய நிலைமைக்கு வந்த பிறகு, கம்பெனி நடப்பதே தன்னாலேதான் என்று எண்ணிக் கொண்டான். குருமூர்த்தி அவன் தலையில் ஒரு குட்டுக்குட்டி மூலையில் உட்கார வைத்துவிட்டு, "அடே, முட்டாளே! பார்டா நீ இல்லாமல் கம்பெனி, ஜாம் ஜாமென நடக்கிறது. நமது கம்பெனி முறை, அடிப்படையே அப்படிப்பட்டது—யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கம்பெனி நடக்கும்" என்று நிரூபித்துக் காட்டுகிறார். ரங்கதுரை, வெட்கமும் துக்கமும் தாங்காததாலே வெளியே தலை நீட்டுவதே இல்லை என்று குருமூர்த்திக்காக வாதாடுவதாக எண்ணிக் கொண்டு சிலர் பேசினர்—ஏசினர். இதற்கிடையில், திடீர் திடீரென்று புதிய புதிய நடிகர்கள் தோன்றுவர் கம்பெனியில்—பிறகு, தோன்றிய வேகத்தைவிட அதிக வேகத்தில் மறைவர்.

"ஒருநாள் எனக்குச் சரியாகத் தாளம் போட வராது" என்று ரங்கன் கிண்டல் செய்தான்.

"பலராமனாக நான் வேஷம் போட்டபோது, கிருஷ்ணனாக ரங்கு நடித்தான்—நான் அது தான் சரியான'சான்ஸ்' என்று, நல்ல 'டோஸ்' கொடுத்தேன். பாடத்தில் இல்லாததை எல்லாம் சேர்த்துக் கொண்டு.

"இந்தக் கம்பெனியில் புகுந்து கொண்டு, அவன், ஏகபோகம் அல்லவா எதிர்பார்த்தான்."

கம்பெனியின் "மற்றவர்கள்" பேசலாயினர் இதுபோல.

ரங்கதுரை கிராமத்தைவிட்டு நகரவில்லை. தாய்க்கு நோய் குணமாகவுமில்லை. அவன் சாரீரம் வெளியே கேட்கவில்லை—இராக ஆலாபனர்-இராஜபார்ட் என்ற போஸ்ட்டர்கள்—விளம்பரம் எதுவும் கிடையாது.

"இருட்டில் தள்ளப்பட்டுவிட்டான்"—சற்றுக் குதூகலத்தோடு பேசினர்—அவன் குணமறியாதார்.

"இப்போதுதான், கொஞ்சம் தாராளமாக உலாவ உலக விஷயத்தை உணர, நிம்மதியும் வசதியும் கிடைத்தது"—அவன் எண்ணினான் அதுபோல்.

கம்பெனியும் நடைபெற்று வந்தது—ரங்கனின் காலமும் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்த 'மெழுகு' நிலையை விட்டுவைக்கும் விருப்பம் இல்லாத சிலர், கொஞ்சம் 'அனல்' காட்ட வேண்டும் என்று கிளம்பினர்.

"கேள்விப்பட்டீர்களா விஷயத்தை? ரங்கதுரைக்கு ஒரு சான்ஸ் அடித்ததாமே. கிராமபோன் ரிகார்டு கொடுத்திருக்கிறானாம்—ஆயிரம் ரூபாயாம், பிளேட் ஒன்றுக்கு” என்று கூறினர், குருமூர்த்தியிடம். அவருக்குக் கோபம் வராமலா இருக்கும்! அவருடைய கோபத்தைக் குறைப்பதாக எண்ணிக் கொண்டும், ரங்குவின் குணம் மாறவில்லை என்பதை அவருக்குக் கூறவேண்டுமென்று நினைத்துக் கொண்டும், சில நற்குணம் படைத்தவர்கள், "பிளேட்டில்கூட, ரங்கதுரை உங்களைப் பற்றிய புகழ்தான் பாடியிருக்கிறார்" என்றனர். அவர் மனம் குளிரும் என்று எண்ணினர். விஷப் பயிரிடுவோர், "வேறு எதை அவன் பாடமுடியும்? அதைப் பாடினால்தானே "சான்ஸ்”—என்றனர். குருமூர்த்தி இதை ஆமோதித்தார். எனவே இதனையே, அனலாக்கி "ரங்கன் பிளேட் கொடுக்கப் போய்விட்டவன்—அதிலே பணம் திரட்டப் பார்க்கிறான்" என்று பேசலாயினர். 'பத்துப் பிளேட் கொடுத்தானாம். அதற்கு அவனுக்கு ஒரு தங்கப் பிளேட் பரிசு தந்தார்களாமே" ஒரு வதந்திப் பிரியர் கூறினார். "அந்தப் பிளேட்டிலே வைரம் ஏழு புதைத்துத் தந்தார்கள்!" —என்றார், பிளேட்டின் எடை, விலை,சகலமும் தெரிந்தவர் போல நடித்த ஒருவர்.

"தங்கப் பிளேட்! அதிலே வைரம் இழைத்திருக்கிறது!! பயல், மண்டைக் கர்வியாகாமல் எப்படி இருக்க முடியும் —குருமூர்த்தி எண்ணினார்.

"இவ்வளவும் தங்களால்"—தூபமிடுவோர் கூறினர்.

"இதை வெளிப்படுத்த வேண்டும்' தூண்டிவிடுவோர் பேசினர்.

"நான் இதையேதான் சொல்லிக்கொண்டு வருகிறேன். இதைச் சொன்ன உடனே, ரங்கதுரைமீது கோபம் பிறக்கிறது—பலபேர் ஏசுகிறார்கள். இப்படிப்பட்ட 'அந்தஸ்து' யாராலடா கிடைத்தது—அவரை மறந்துவிட்டாயே—கம்பெனியை விட்டுப் போய்விடுகிறாயே" என்றுகூடக் கேட்டனர் என்றார், ஒரு வெற்றி காணாதார்.

பிளேட் கிடைத்ததோ வெள்ளி! முலாம் தங்கம்! கிராம போனில் ரங்கு பாடும்போதுகூட, கம்பெனியில் இருந்தால் செய்யக்கூடிய கலைத்தொண்டிலே ஒரு பகுதியாவது பிளேட் கொடுப்பதன் மூலம் செய்வோம் என்று எண்ணிக்கொண்டுதானிருந்தான். அந்தச் செயலே துரோகச் செயலாகக் கூறப்பட்டது!

கம்பெனி நடந்து கொண்டிருந்தது—ரங்கதுரை தனி உலகில் சஞ்சரிக்கலானான்.

"ரங்கதுரை, இப்போதெல்லாம், நந்தவனத்திலேதான் இருக்கிறான்—ஒருவர் ஆரம்பிப்பார்.

"மலரின் மணத்தை ரசிக்கிறான் போலும்". இன்னொருவர், கிண்டல் செய்வார்.

"மரகதம் என்று ஒரு குட்டி உண்டு...." என்று குறும்பை இன்னொருவர் துவக்குவார்.

"ஏனய்யா மறைக்கிறீர்? அவளுடன் கூடிக்கொண்டு குஷாலாகக் காலந்தள்ளுகிறகிறான்—சொல்லேன்"-வேறொருவர், சம்பூர்ணமாக்குவார்!

மரகதம், மாளிகையில் மன்னார்சாமியுடன், மலர் தூவி விளையாடிக் கொண்டிருப்பாள்!

ரங்கதுரை ராக ஆராய்ச்சியிலோ, பிளேட் கம்பெனிக்காரரிடம் சொல்லி, கலை உயர்வுக்காக இதைச் செய்தால் நல்லது; அதைச் செய்தால் நல்லது என்று கூறுவதிலேயே காலங்கழித்து வந்தான்.

"அதோ பார், போகிறான்— ராஜபார்ட் ரங்கதுரை"— வீதியிலே ஒருவர் சொல்லுவார். வேறொருவர், "ரங்கன் என்று சொல்லேண்டா! ராஜபார்ட்டாம்,ராஜபார்ட்! அதெல்லாம் போய் ரொம்பக் காலமாகிவிட்டதடா!" என்பார்— ரங்கதுரையின் காதிலே, அந்தப் பேச்சு விழும்— ஆனால் அதேபோது, அதே ஆசாமிதான், "ரங்குவிடம் மற்றவர்கள் இராகம் பிச்சை கேட்க வேண்டும்— ராஜபார்ட்டுக்கு, ரங்குவை வீட்டால் வேறு யார் இருக்கிறார்கள்— ரங்குவின் ராக ஆலாபனத்தாலேதான் கம்பெனியே ஓடுகிறது வேறு கம்பெனியிலே மட்டும் ரங்கதுரை இருந்தால், இந்நேரம் எவ்வளவோ 'பெரிய' வித்வானாகியிருப்பார்" என்றெல்லாம் புகழ்ந்தவர். உள்ளன்புடன் என்பது கவனத்துக்கு வரும்— வந்ததும், முதலில் கிளம்பிய பெருமூச்சை, ஒரு புன்னகை கிளம்பித் தோற்கடித்துவிடும்.

ராஜபார்ட் ரங்கதுரை பாகவதரின் மனப்போக்கு, கம்பெனி முதலாளியின் போக்கினால் தாக்கப்பட்டதிலிருந்து படிப்படியாக மாறி மாறி, கம்பெனியில் நடிப்பதே மனக்கஷ்டத்தையும், வீண் சிரமத்தையுந்தான் தருகிறது என்ற எண்ணத்தை உண்டாக்கிற்று. இத்துடனும் நிற்கவில்லை. மனம்தானே! 'ரங்கதுரை இல்லாவிட்டால் கம்பெனி நடைபெறாதா?' என்ற பேச்சு, 'கம்பெனியில் இல்லாவிட்டால், ரங்கு நடமாடவே முடியாதா' என்ற பதிலொலியைத்தானே கிளப்பும்! ரங்கனின் பேச்சல்ல, அவன் நடவடிக்கை, அந்தப் பதிலைத்தான் தந்தது.

'கம்பெனி மூலம்' பெரும் புகழும் பணமும் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டான். ரங்கன் பணம் திரட்ட, சுகம் அனுபவிக்க என்று பேசினர்— ரங்கனை ஏச! ஆனால் அவர்களே, "கம்பெனியில் அவனுக்கு எவ்வளவு செல்வாக்கு, புகழ், வசதி, சுகம் தந்தார்கள்! அவைகளைப் பெற்றுக் கொண்டு, பெரும் புகழுடன் இருந்தவன் இப்படியானானே! இப்போது அவன் விலாசம் என்ன! அவனுக்கு ஏது செல்வாக்கு?" என்றும் பேசினர்—அதுவும் அவனை ஏசுவதாக எண்ணிக்கொண்டு. கம்பெனியில் பெரும் புகழும் பணமும் இருந்தும், ஏன் அதை இழக்க ரங்கன் துணிந்தான்?— இதை எண்ணுபவர்கள் இல்லை. 'சுகம், பணம்தேட கம்பெனியை விட்டு வெளியேறினான் என்று பேசுகிறோமே! அந்தச் சுகமும், பணமும் அவனுக்குக் கம்பெனியில் கிடைத்ததே! கிடைத்ததை விட்டுவிட்டு, வேறிடம் செல்வானேன்?'— என்றும் அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை; எண்ணம் வரவில்லை.

"ராஜபார்ட் ரங்கதுரை, வாழ்க்கையை நடத்துவது என்ற அளவுக்குத்தான் வந்துவிட்டான். அவன் ஏதேதோ செய்வான்— செய்யப் போகிறான் என்றெல்லாம் எண்ணினோம்— கடைசியில் அவன் வெறும் ஆளாகிவிட்டான்!பைத்யக்காரன். ஒரு விதத்திலே பார்த்தால் பரிதாபமாகக்கூட இருக்கிறது— என்றனர் சிலர்.

"என்னமோ சூது செய்கிறான்! ஏதோ சதி! என்று பேசினர் சிலர்.

"ரங்கதுரை, என்ன சதி செய்தாலும் நம்ம குருமூர்த்தியிடம் ஒன்றும் பலிக்காது” என்றனர் சிலர்.

"அவர் சும்மா இருந்தாலும், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்" என்றனர் வேறு சிலர்.

ரங்கதுரையோ, உள்ளூரில், வெற்றிலை பாக்குக்கடை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர் வெற்றிலை பாக்குக்கடை என்று போர்டு கிடையாது— ஆனால், ஊரிலே பேச்சு அவ்விதம்தான்.

வெற்றிலை பாக்குக் கடையின் மூலம் டபுள்ராயல், சிங்கள் ராயல் விளம்பரம் கிடையாது ரங்கதுரைக்கு! எப்படிக் கிடைக்கும்? ஆனால் அதேபோது கரகரப்பிரியாவுக்கான சாதகம், புன்னாகவராளிக்கான சாதகம், இவைகளும் அவனுக்கு இல்லை. இலாப நஷ்டக் கணக்குப் பார்த்தான்— சீராகத்தான் இருந்தது.

கம்பெனியின் நிலைமையைக் குருமூர்த்தி கணக்கிட்டுப் பார்த்தார்— அதுவும் சரியாகத்தான் இருந்தது.

"குருமூர்த்தி மிகவும் திறமைசாலி. ரங்கதுரை பாகவதர் என்று ஒருவனை ராஜபார்ட்டுக்குத் தயார் செய்தார், எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா? என்னமோ பேதப்பட்டு ரங்கதுரை பாகவதர் விலகிவிட்டார். கம்பெனிக்கும் கொஞ்சம் நஷ்டந்தான்—ஆனால் பார்த்துக் கொண்டேயிருக்கிறார் நல்ல ஆளாகவும், சமயமாகவும் கிடைக்கட்டுமென்று; கிடைத்தால், மற்றோர் ரங்கனைப் பாகவதராக்குவார்— அவரால் முடியும்" என்று பேசினர். நாடகம் பார்த்தோர், உண்மையிலே, அவரால் முடியும், ரங்கதுரைகளைப் பாகவதராக்க!

தன்னை ஏன் பாகவதராக்கவில்லை என்ற வருத்தம், சோமுவுக்கும் தாமுவுக்கும் உண்டு.

ஆனால் குருமூர்த்தி என்ன செய்வார்? மோரிலிருந்து தான் வெண்ணெய் எடுக்க முடியுமே தவிர, பன்னீரிலிருந்து கூட எப்படி எடுக்க முடியும்? அதுபோலத்தான்! ரங்கன் கிடைத்தால் பாகவதராக்க முடியும்— சோமுவை அப்படி ஆக்கமுடியாதே! அது அவருக்குத் தெரியும்— சோமுவுக்குத் தெரியாது.

ரங்கதுரை பாகவதர்— பழையபடி— சாதாரண ரங்கன் ஆனான். முன்பு பலபேர், அவனைக் கேட்டதுண்டு, "ஏண்டாப்பா ரங்கா! இவ்வளவு நல்ல சாரீரம் இருக்கும்டோது ஏன் இப்படி மங்கிக் கிடக்கிறாய்— ஏதாவது கம்பெனியில் சேர்ந்தால், பிரமாதமான பேர் வருமே" என்று, அதேபோல மீண்டும் கேட்கலாயினர். "ரங்கு! ஏன் இப்படி உன் திறமை பாழாகும்படி லிட்டு வைக்கிறாய். ராஜபார்ட்டாக இருந்தாய்; இப்போது வெற்றிலை பாக்குக் கடை வைத்துக் கொண்டாயே! நீ தோடி பாடினால், கவலை ஓடிப்போகுமே! காவடிச் சிந்து நீ பாடும்போது,வைஷ்ணவன்கூட சைவனாகி விடலாமா என்று எண்ணுவானே! இவ்வளவு திறமையையும் பாழாக்கிக் கொண்டு, சிசர் வேண்டுமா, வில்ஸ் வேண்டுமா, அசோகா பாக்குத்தூளா, சுகந்த துளா என்று கேட்டுக்கொண்டு, வெற்றிலைக் கடையிலே இருக்கிறாயே. இது சரியா?' என்று கேட்கலாயினர்.

"அது சரிங்க: விஷயம் பெரிது. விளக்கமாகக் கூற, நேரமில்லைங்க! உங்களுக்கு சோடா ஐஸ் போட்டு தரட்டுங்களா? வெறும் சோடாவே போதுமா?" என்று கேட்டுக்கொண்டே, கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தான் ரங்கன்.

வெற்றிலை பாக்குக் கடையிலே, முருகன் வேஷத்திலே எடுத்த போட்டோ, தொங்கிக் கொண்டிருந்தது. கம்பெனியில் ரங்கதுரை பாகவதரின் படம் இல்லை. சோமு, அந்தக் காலி இடத்தில் எந்தப் படம் புகுமோ என்று எண்ணிக் கொண்டிருந்தான். விநாயகர் படத்தைத் தொங்கவிட்டார் மானேஜர்.

கம்பெனிக்கும் நஷ்டமில்லை— குருமூர்த்தியார் கணக்குப்படி.

ரங்கனுக்கும் நஷ்டமில்லை— அவனுடைய நோக்கத்தின்படி.

இடையிலிருந்தோர், ரங்க பாகவதரை, வெற்றிவைக் கடை வைக்கச் செய்து விட்டோம் என்று பூரித்தனர்.

ரங்கனோ, வெற்றிலைக் கடையை நடத்தினால், அதனாலே என்ன? நான் கம்பெனியில் உழைத்தேன். அதனால் அங்கு உயர்ந்தேன். கம்பெனி முதலாளியிடம் மரியாதையும், அன்பும் காட்டினேன்; அதனால் அவர் என்னை ஆதரித்தார்; பாராட்டினார். இப்போது அதே முறையில் நடந்து கொள்கிறேன் இங்கு. அதனால் கடைவீதியில், நாலு பேர் என்னை நல்லவன் என்றுதான் சொல்லுகிறார்கள். இங்கு இருக்க வேண்டிய முறைப்படி, வெற்றிலை வாடாதபடி பார்த்துக் கொள்கிறேன்; பாக்குக் கெடாதபடி பார்த்துக் கொள்கிறேன்; சோடா கேட்டால், ஐஸ் கலந்து தரட்டுமா என்று கேட்கிறேன்— கடையைக் கண்ணுங் கருத்துமாய்க் கவனித்துக் கொள்கிறேன்— இதிலே புதிய சிரமமோ, கவலையோ காணோமே! பாகவதராக இருந்தாலும் இல்லா விட்டாலும், கடை நடத்தினாலும், நாடகமாடினாலும், எந்தக் காரியத்தைச் செய்தாலும், நல்லவனுக்கு, திறமைசாலிக்கு, உண்மை உழைப்பாளிக்கு, அவன் எந்த வேலையைச் செய்தாலும், அதிலே அவன் ஒரு குறிப்பிடத்தக்கவனாவான்— இது இயற்கை; நீதி! இதை, பொறாமை, பொச்சரிப்பு, கலகம் எதுவும் மாற்றாது! நாடகக் கம்பெனியில் ராஜபார்ட்டாக இருந்தேன்; இப்போது கடை வீதியில், என்னை வெற்றிலை பாக்குக் கடைக்காரர் சங்கத்துக்குக் காரியதரிசியாக்கித்தான் இருக்கிறார்கள்" என்றான்.

அவன் நிலை மாறியிருந்தது— அதை அவன் நிம்மதி என்றான்.

அவன் நிலை மாறியிருந்தது கண்டு, நிந்திப்பவர்கள், 'பார்! ஆசாமி என்ன கதியானான்! வெற்றிலைக் கடை வைத்திருக்கிறானையா. ராஜபார்ட்!!' என்று ஏளனம் செய்தனர்.

ஆனால் ஒருவராவது, ரங்கன் ராஜபார்ட் நிலையை இழந்தும், குருமூர்த்தி கம்பெனி ரங்கனை இழந்தும், அந்த இருவருக்கும் நஷ்டம் அல்ல என்றபோதிலும், நாடகக் கலைக்கு ஒரு நஷ்டம்; அதை ஈடுகட்டவும் முடியவில்லை என்பதைப்பற்றி எண்ணிப் பார்க்கவே இல்லை. கலைநுட்பம் உணர்ந்த மிகமிகச் சிறிய தொகையினருக்கு மட்டுந்தான், இந்த நஷ்டம் தெரிந்தது. அவர்கள் ரங்கனைப் பார்க்கும்போது, அதிகம் பேசுவதில்லை; எதுவும் வாதாடுவதில்லை. அவர்கள் குருமூர்த்தியிடமும் எதுவும் பேசுவதில்லை.

குருமூர்த்தி— ரங்கதுரை கூட்டுறவு, கம்பெனிக்கு இலாபமா, நஷ்டமா என்பதல்ல முக்கியமான பிரச்னை. கலைத்துறைக்கு, அவ்விதமான கூட்டுறவு நிச்சயம் தேவையாயிற்றே! அது எக் காரணத்தாலோ கெட்டுவிட்டதே! அதனால் கலைத்துறைக்கு நஷ்டந்தானே என்பதை அந்தச் சிறுதொகையினர் மட்டும் உணர்ந்து உருகினர். ஆனால் அவர்கள் சிறுதொகை! என்றைக்கேனும் ஒருநாள் சுரஸ்தானம் தவறி, யாராவது நடிகன் பாடும்போது, குருமூர்த்தியின் கண்களிலே நீர் தளும்பும். "குருமூர்த்தி கம்பெனிக்கு நேற்று போயிருந்தேனப்பா! இப்போது நீ இல்லாததால் சோபிக்கவே இல்லை நாடகம்" என்று என்றேனும் யாரேனும் கூறும்போது, ரங்கதுரையின் கண்களில் நீர் தளும்பும். அவர்களின் கூட்டுறவின் கடைசிப்பலன், அந்தக் கண்ணீர்த் துளிகள்தான் போலும்!