சேக்கிழார்/அக்காலச் சைவசமய நிலை

விக்கிமூலம் இலிருந்து

5. அக்காலச் சைவ சமய நிலை

அநபாயன் முன்னோர்

சேக்கிழார் காலத்துச் சோழ அரசன் அநபாய சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கன். அவன், பல்லவர்க்குப் பின் வந்து, தென் இந்தியா முழுவதையும் பிடித்தாண்ட சோழப் பேரரசர் வழி வந்தவன். பெயர் பெற்ற சோழ வீரர்களான இராஜராஜன், இராஜேந்திரன் என்பவர் அவன் முன்னோர் ஆவர்.

இராஜராஜன்

இராஜராஜன் சிறந்த போர் வீரன். அவன் சேர, பாண்டிய நாடுகளை வென்றவன்; இலங்கைத் தீவைக் கைப்பற்றியவன்; குடகு, முதலிய மேல் கடற்கரை நாடுகளையும் மைசூர்ப் பிரதேசத்தையும் தெலுங்கு நாட்டையும் கைக் கொண்டவன். அவனே தென் இந்தியா முழுவதையும் சோழர் ஆட்சிக்குக் கொண்டு வந்த முதல் அரசன். அவன் வீரத்தில் சிறந்து இருந்தாற். போலவே, சிவ பக்தியிலும், சிறந்து விளங்கினான்.

அப்பெருமகன் தஞ்சாவூரில் பெரிய கோவில் ஒன்றைக் கட்டி அழியாப் புகழ் பெற்றான். அக்கோவிலே தஞ்சைப் பெரிய கோவில் என்பது. இராஜராஜன் முன் சொன்ன திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களைத் தேடி எடுத்தவன்; அவற்றை நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியவரைக் கொண்டு முறைப்படுத்தியவன்; அப் பதிகங்களைப் பல கோவில்களில் பாட ஏற்பாடு செய்தவன்.

இராஜேந்திரன்

இராஜராஜன் செல்வ மைந்தன் இராஜேந்திரன். இவன் தந்தையைப் போலச் சிறந்த வீரன். இலங்கை முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தியவன்; கங்கை வரை சென்று அரசர் பலரை வென்று புகழ் பெற்றவன்; கங்கை நீரைத் தோற்ற அரசர் தலை மீது வைத்துத் தன் தலைநகருக்குக் கொண்டு வரச் செய்தவன் ; தன் கங்கா விஜயத்துக்கு அடையாளமாகப் புதிய தலைநகரம் ஒன்றைக் கட்டி, அதற்குக் கங்கைகொண்ட சோழ புரம் என்று பெயர் இட்டவன்.

இப்பேரரசன் தன் கடற்படையைச் செலுத்தி நிக்கோபர் தீவுகள், மலேயா தீபகற்பம், சுமத்ரா, ஜாவாத் தீவுகள் முதலியவற்றை வென்றவன். இவன் சிறந்த சிவ பக்தன். இவன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய சிவன் கோவிலைக் கட்டினவன் ; கோவில்களில் தேவாரம் ஒதுபவரை மேற் பார்க்கவும் தேவாரத்தை நாடெங்கும் பரப்பவும் ஓர் அரசாங்க அதிகாரியை நியமித்தவன். அந்த அதிகாரிக்குத் தேவார நாயகம் என்பது பெயர். இராஜேந்திரன் பெரும் புலவன் ; புலவர் பலரை ஆதரித்தவன் ; பண்டித சோழன் என்ற பெயர் பெற்றவன்.

சமயத் திருப்பணிகள்

பல்லவர்க்குப் பின் நமது அநபாயன் காலம் வரை இருந்த சோழ அரசரும் அரச மாதேவியரும் சைவ மதத்தை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். அவர்கள் தேவார ஆசாரியர்கள் பாடிய திருக்கோவில்களைக் கருங்கற் களால் புதுப்பித்தனர்; அவற்றில் பூசை-விழா முதலியன குறைவில்லாமல் நடைபெறப் பல கிராமங்களை மானியமாக விட்டனர்; ஒவ்வொரு கோவில் மூர்த்தங்களுக்கும் ஆடை ஆபரணங்கள் அளித்தனர்; திருக் குளங்களைப் பழுது பார்த்தனர். ஒவ்வொரு பழைய கோவிலிலும் புதிய கோவிலிலும் தேவாரப் பாடல்களைப் பாட ஒதுவார்களை நியமித்தனர்.

மடங்கள்

பல ஊர்களில் கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன. அவற்றில் பலவகைச் சிவனடியார் தங்கி இருந்தனர். அவர்கள் கோவில்களைக் கண்காணித்து வந்தனர்; ஊரார்க்குச் சைவ சமய நூல்களைப் போதித்து வந்தனர் ; குளம், நந்தவனம், கோவில் இவற்றைத் தூய்மையாக வைத்திருந்தனர்; பூசைக்கு வேண் டிய மலர்களைப் பறித்து மாலைகள் தொடுத்தனர்; அருட் பாடல்களைப் பாடினர்; வெளியூரில் இருந்து வரும் அடியார்களை உபசரித்து அன்னம் இட்டனர். மக்களுக்கு இலவச வைத்தியம் செய்தனர். இப் பெருமக்கள் தொண்டுகள் பொது மக்களை நல்வழிப் படுத்தின. மன அமைதியையும் பக்தியையும் ஊட்டின.

நாயன்மார் உருவச் சிலைகள்

சோழ அரசர்கள் செய்த திருப்பணிகளால் நாட்டில் சைவம் வளரத் தொடங்கியது. சிவனடியார்கள் செய்த போதனையினால் மக்கள் அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறுகளையும் அறியலானார்கள்; அவர்களுள் மிகச் சிறந்த தேவார ஆசிரியர் மூவர் திருவுருவங்களையும் தத்தம் ஊர்க் கோவில்களில் வைத்துப் பூசிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாயனார் உருவமும் அவர் பிறந்த ஊர்க் கோவிலில் வைத்து வழிபடப் பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலில் திருநாவுக் கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், சிறுத்தொண்டர், சண்டீசர் முதலியவர் உருவச் சிலைகள் வைக்கப் பட்டன. அவற்றுக்கு நாள் தோறும் பூசைகள் நடை பெற்றன. திருவாரூர்க் கோவிலில் தேவார ஆசிரியர் மூவர் சிலைகளும் வைத்துப் பூசிக்கப்பட்டன.

இவ்வாறு நாடு முழுவதும் நாயன்மார்க்குக் கருங்கற் சிலைகளும் செப்புச் சிலைகளும் உண்டாக்கப் பட்டன; மக்களால் பயபக்தியுடன் வழிபடப் பட்டன; திருவிழாக்கள் நடைபெற்றன. பிரசங்கங்கள் மூலமாக அவர்கள் வரலாறுகள் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கப்பட்டன.

சித்திரங்கள்

சோழர்கள் கட்டிய பல கற்கோவில் சுவர்களில் நாயன்மார் வரலாறுகள் செதுக்கப்பட்டு இருந்தன. அச் சிற்பங்கள் பிராகாரம் சுற்றுவார் கண்ணையும் கருத்தையும் இழுத்தன. சில கோவில்களில் நாயன்மார் வரலாறுகளில் முக்கியமான பாகங்கள் சித்திர வடிவில் காட்டப்பட்டு இருந்தன. தஞ்சைப் பெரிய கோவிலில் இன்னும் அச் சித்திரங்களைக் காணலாம்; சுந்தரர் திருமணத்தைச் சிவபிரான் கிழவர் வடிவில் சென்று தடுத்தல், சுந்தரர் வெள்ளை யானை மீது திருக்கயிலை செல்லுதல், சேரமான் குதிரை மீது ஏறிச் சுந்தரரைப் பின் பற்றிப் போதல், சிவபெருமான் யோக நிலையில் இருத்தல், முதலிய காட்சிகள் சித்திர ரூபமாகக் காட்டப் பட்டுள்ளன.

இவ்வாறு நாயன்மார் வரலாறுகள் சிற்பங்கள் மூலமாக விளக்கப்பட்டு இருந்தன; சித்திரங்கள் மூலமாக விளக்கப்பட்டன; திருவிழாக்கள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டன; பிரசார மூலமாகவும் பொது மக்கள் நாயன்மார் வரலாறுகளை அறிந்திருந்தனர்.

தேவாரம்

நாயன்மார் பாடி வைத்த தேவாரப் பதிகங்களை இராஜராஜன் முறைப்படுத்தினான் அல்லவா? அந்தப் பதிகங்கள் பனை ஓலையில் இருந்தன. அதனால் பல ஏடுகள் நாளடைவில் அழிந்து விட்டன. இனி அவை அழியாதிருப்பதற்காக வேளாளர் தலைவன் ஒருவன் அவற்றைச் செப்பு ஏடுகளில் எழுதி வைத்தான். பல பெரிய கோவில்களில் தேவார ஏடுகள் பாதுகாக்கப் பட்டன. அவற்றை வைக்க ஒர் அறை, அவற்றைத் தினந்தோறும் எடுத்துப் பூசை செய்து பாட ஒரு மண்டபம் என்பவை பல கோவில்களில் கட்டப் பட்டன. இந்த வேலைகளைச் செய்ய ஒவ் வொரு கோவிலிலும் ஒருவர் அமர்த்தப்பட்டு இருந்தார்.

நாயன்மார் பெயர்கள்[குறிப்பு 1]

இவ்வாறு பொதுமக்கள் நாயன்மார்களைப் பற்றிய பல விவரங்களை அறியத் தொடங்கிய நாள் தொட்டு அவர்கள் தங்கள் பிள்ளைகட்கு நாயன்மார் பெயர்களை இடலாயினர். அக்காலக் கல்வெட்டுகளில் இப்பெயர்கள் காணப்படுகின்றன. ஆண்கள் ஆலாலசுந்தரன், திருஞான சம்பந்தன், திருநாவுக்கரசன், பரஞ்சோதி, கலியன், சிங்கன், கோட்புலி முதலிய (நாயன்மார்) பெயர்களை வைத்துக் கொண்டனர். பெண்கள் மங்கையர்க் கரசி, திருவெண்காட்டு நங்கை, பரவையார், திலகவதி முதலிய பெயர்களை வைத்துக் கொண்டனர்.

இவ்வாறு அக்கால மக்கள் தங்கள் பெயர்களை நாயன்மார் பெயர்களாக வைத்துக் கொண்டு வந்தனர் என்பதனால் அவர்கள் சைவ சமயத்தில் கொண்டிருந்த பற்றையும் நாயன்மார் வரலாறு களில் கொண்டிருந்த அன்பையும் நன்கறியலாம் அல்லவா ?


  1. நாயன்மார் அறுபத்து மூவர் பெயர்கள் :- 1. கண்ணப்பர், 2. கணம்புல்லர், 3. அரிவாள் தாயர், 4. நமிநந்தி அடிகள், 5. தண்டி அடிகள் 6. கோச்செங்கணச் சோழர், 7 புகழ்ச் சோழர், 8. கூற் றுவர், 9 எறிபத்தர், 10. புகழ்த்துணை, 11. காரைக் கால், அம்மையார், 12. மூர்த்தி, 13 ஐயடிகள் காட் வர் கோன், 14. சண்டேசுவரர், 15. திரு மூலர், 16. சாக்கியர், 17. அமர்நீதி, 18. திருநாவுக்கரசர் 19. திருஞான சம்பந்தர், 20. சிறுத் தொண்டர், 21. திருநீல கண்ட யாழ்ப்பாணர், 22 நீலநக்கர் 23. நெடுமாறர், 24. முருகர், 25. குங்கிலியக்கலயர், 26. மங்கையர்க்கரசியார் 27. குலச்சிறை, 28. அப்பூதி அடிகள், 29. பூசலர், 30. காரி, 31 அதிபத்தர், 32. கலிக்கம்பர், 33. கலியா, 34. சத்தியார், 35. வ்ாயிலார், 36. முனையடுவார், 37. இடங்கழி, 38. இயற்பகை, 39. நேசர், 40. இளையான்குடி 41 மெய்ப்பொருள், 42. திருநாளைப்போவார், 43. ஏனாதிநாதர், 44, ஆனாயர், 45, உருத்திர பசுபதி, 46. திருக்குறிப்புத் தொண்டர், 47. மூர்க்கர், 48. சிறப்புலி, 49. கணநாதர், 50. திருநீலகண்டர், 51. சுந்தரர், 52. சடையனார், 53. இசைஞானியார், 54. நரசிங்கமுனையரையர், 55. கலிக்காமர், 56. மானக் கஞ்சாற்ர், 57. பெருமிழலைக் குறும்பர் 58. கோட்புலி, 59. கழற்சிங்கர், 60. செருத்துணை, 61. சேரமான் பெருமாள், 62. விறல்மிண்டர், 63. சோமாசிமாறர்.