சேக்கிழார்/ஜீவக சிந்தாமணி
அரசன் அவை
அரச சபையில் அரசியல் விஷயங்கள் கவனிக்கப்பட்ட பிறகு, அரசன் மாலை நேரங் களில் புலவர்களுடன் பொழுது போக்குதல் வழக்கம். அநபாயன் முன்னிலையில் புலவர்கள் ஒரு தமிழ் நூலை எடுத்து முறையாகப் படித்து வருவார்கள்; அரசனுக்கு ஐயம் உண்டாகும் இடங்களை விளக்குவார்கள். அரசன் இவ்வாறு தன் காலத்திற்கு முற்பட்ட தமிழ் நூல்களைப் புலவர் படிக்கக் கேட்டு வந்தான். பெருமக்கள் பலரும் உடன் இருந்து கேட்பது வழக்கம்.
ஜீவக சிந்தாமணி
இவ்வாறு அநபாயன் கேட்டு வந்த நூல்களுள் சீவக சிந்தாமணி என்பது ஒன்று. அது சமண சமய காவியம். அது வட இந்தியாவில் வாழ்ந்த சீவகன் என்ற ஒர் அரசன் வரலாறு. அது வட வடமொழியில் செய்யப் பட்டிருந்தது. அதனைத் திருத்தக்க தேவர் என்பவர் ஒரு காவியமாகத் தமிழில் பாடினார். அத் தமிழ் நூல் அநபாயனுக்கு ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முற்பட்டது. அந்நூல் நல்ல தமிழ்ப் பாடல்களால் இயன்றது; படிக்கப் படிக்கச் சுவை தருவது. அதனால் புலவர் நாள்தோறும் படித்து வர, அநபாயன் இன்பமாகக் கேட்டு வந்தான்.
சீவகன் பிறப்பு
வட இந்தியாவில் ஏமாங்கத நாடு என்பது ஒன்று. அதனைச் சச்சந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் வேறோர் அரசன் மகளை மணந்து கொண்டான். அவன் அம் மணத்திற்குப் பிறகு அரசியல் காரியங்களைக் கவனிப்பதில்லை. அவன் தன் அமைச்சருள் ஒருவனான கட்டியங்காரன் என்பவனிடம் அரசியலை ஒப்பு வித்தான்; அவனை முழுவதும் நம்பி இன்பமாகப் பொழுது போக்கி வந்தான்.
கட்டியங்காரன் நயவஞ்சகன்; பேராசைக்காரன். அரசனைக் கொன்று அரசைக் கவர எண்ணினான்; படைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டான்; மற்ற அமைச்சர் கூறிய நல்லுரை களையும் கேட்கவில்லை. அவன் ஒரு நாள் திடீரென்று அரண்மனையை நோக்கிப் படையெடுத் தான். சச்சந்தன் கர்ப்பவதியான தன் மனைவியை [குறிப்பு 1]மயில் வாகனம் ஒன்றில் ஏற்றி ஆகாய வழியில் அனுப்பி விட்டான். பிறகு அவன் தன் அரண்மனை வீரருடன் கட்டியங்காரனை எதிர்த்தான்; போரில் அந் நயவஞ்சகனால் கொல்லப் பட்டான். உடனே கட்டியங்காரன் வெற்றி முழக்கத்துடன் அரியணையேறினான்.
வானத்திற் பறந்து சென்ற இராசமாதேவி முரசொலி கேட்டாள்; தன் ஆருயிர்க் காதலன் மடிந்தனன் என்பதை உணர்ந்தாள். உடனே மூர்ச்சை ஆனாள். அதனால் வாகனம் மேலே செல்லும்படி முறுக்காணியைத் தக்கவாறு திருப்பத் தவறினாள். உடனே விமானம் கீழே இறங்கி விட்டது. அஃது இறங்கிய இடம் சுடுகாடு; அதுவும் தலைநகரத்தின் சுடுகாடே ஆகும். அரசமாதேவி மயக்கம் தெளிந்தாள்; உடனே ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றாள்; அச் சுடுகாட்டில் அம் மகனை வைத்துக் கொண்டு செய்வது அறியாது புலம்பினாள். அப்பொழுது தெய்வம் ஒன்று அவளது தோழி போல் அங்குத் தோன்றி, இம் மகன் இந்நகர வணிகனால் சிறிது நேரத்தில் கொண்டு செல்லப் படுவான். அவனிடம் நின் மகன் வளர்ந்து வருவான். முடிவில் கட்டியங்காரனைக் கொன்று அரசினை அடைவான். கவலை ஒழிக,” என்றது.
சீவகன் வளர்ப்பு
கந்துக்கடன் என்பவன் ஒரு வணிகன். அவன் தன் ஒரு மகவைப் புதைக்க அங்கு வந்தான். அவன் இளஞ் சூரியினைப் போல விளங்கிய சீவகனாகிய குழந்தையைக் கண்டான் உள்ளத்தில் உவகை கொண்டான்; தன் குழந்தைக்குப் பதிலாக இறைவன் தனக்கு மற்றொரு குழந்தை யைக் கொடுத்தான் என்று எண்ணி மகிழ்ந்தான்; அக் குழந்தையைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அன்று முதல் சீவகன் அவ் வணிகனிடமே வளர்ந்து வரலானான்.
அரச மாதேவி சமணத் துறவிகள் வாழ்ந்து வந்த ஆஸ்ரமம் ஒன்றை அடைந்தாள் அங்குப் பற்று அற்ற நிலையில் தவம் செய்து கொண்டு இருந்தாள். கல்வி கற்றல்
ஐந்து ஆண்டுகள் ஆயின. சீவகன் பள்ளியில் விடப்பட்டான். ஒரு நாள் அச்சணந்தி என்ற முனிவர் வணிகன் வீட்டிற்கு வந்தார்; சீவகனைக் கண்டார்; அவன் தெய்வீகச் சிறுவன் என்று எண்ணினார். அவனுக்குக் கலைகளைப் போதிக்க விரும்பினார். சீவகன் வணிகனிடம் சென்ற பிறகு அவ் வணிகனுக்கு ஒர் ஆண் மகவு பிறந்து வளர்ந்தது. அப் பிள்ளையும் முனிவரிடம் கல்வி கற்கலானான்.
சீவகன் தரும சாஸ்திரங்களைக் கற்றான்; மற்போர், வாட்போர், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் முதலிய பயிற்சிகளில் தேறினான். அடக்கம், பெரியோரிடம் மரியாதை, கற்றவரிடம் கனிவு, எளியவரிடம் அன்பு முதலிய நல்ல பண்புகள் அவனிடம் இருந்தன. அதனால் அவனுடன் பழகிய பிள்ளைகள் அவனைத் தங்கள் தலைவனாகக் கொண்டாடினர். ஆசிரிய முனிவரும் வளர்த்த வணிகனும் அவனிடம் பேரன்பு காட்டினர்.
காளைப் பருவம்
சீவகன் பதினெட்டு வயதுடைய காளை ஆனான். அதற்குள் அவன் அரசர்க்குரிய கல்வியையும் போர்த் துறைகளையும் நன்றாக அறிந்திருந்தான். ஒரு நாள் முனிவர் அவனுக்கு அவனது வரலாற்றை விளக்கமாகக் கூறினார். காளை உடனே கட்டியங்காரனைக் கொல்லப் புறப் பட்டான். முனிவர், “அவனைக் கொல்லக் காலம் வரும்; அவசரப்படாதே” என்று அடக்கினார்.
கோவிந்தை-திருமணம்
தலை நகரத்தில் நந்தகோன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பசுக் கூட்டங்கள் செர்ந்தம். அவற்றைப் பக்கத்து மலை நாட்டு வேடுவர் கைப்பற்றிக் கொண்டனர்: கட்டியங் காரன் படைகள் சென்றும் அவற்றை மீட்க முடிய வில்லை. நந்தகோன் வருந்தி, "என் பசுக் கூட்டங்களை மீட்கும் வீரன் என் தவ மகளான கோவிந்தையை மணந்து கொள்வானாக!” என்று: பறை சாற்றினான். சீவகன் தன் தோழர்களுடன் சென்றான்; வேடுவரைத் தன் வில் வலியாலும் வாள் வலியாலும் புறங்கண்டான்; பசுக் கூட்டங் களை மீட்டுக் கொண்டு வந்தான்; அனைவரும் வாழ்த்துக் கூறக் கோவிந்தையை மணந்து கொண்டான்.
காந்தர்வதத்தை
இவள் ஓர் அரசன் மகள். இவள் சீவகன் இருந்த தலை நகரத்திற்குக் கொண்டு வரப் பட்டாள். ‘இவளை யாழில் வெல்பவன் மணப்பானாக!’ என்று பறையறைவிக்கப்பட்டது. சீவகன் எல்லா இசைக் கருவிகளையும் மீட்டுவதில் புகழ் பெற்றவன். ஆதலால் அவன் தன் திறமையைக் காட்டிக் காந்தர்வதத்தையை யாழ்ப் போட்டியில் வென்று மாலை சூட்டினான்.
பட்டம் பெறுதல்
இவ்வாறு சீவகன் தன் ஆற்றலைக் காட்டி மங்கையர் எழுவரை மணந்தான்; இறுதியில் கட்டியங்காரனைக் கொன்றான்; தந்தை இருந்த அரியணையில் அமர்ந்து இனிதாக அரசு செலுத்தினான். இவ் வரலாறு நூல் முதலிலுருந்து முடிவுரை வரை இன்பமாகவே இருக்கும்.
- ↑ மயில் உருவத்தில் செய்யப்பட்ட ஆகாய விமானம்.