உள்ளடக்கத்துக்குச் செல்

சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்)/சைவ சமய வரலாறு - சங்க காலம்

விக்கிமூலம் இலிருந்து

3. சைவ சமய வரலாறு

(சங்க காலம்)

முன்னுரை. உலகச் சமயங்களுட் பழைமையானவை. சில. அச் சிலவற்றுள் ஒன்று சைவ சமயம் என்பது சர். ஜான் மார்ஷல் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர் கருத்து. ரிக்வேத காலத்துக்கும் முற்பட்டது சைவ சமயம் என்பது மொஹெஞ்சொ-தரோ. மெசோபொடேமியா, கிரீட் எகிப்து, மால்ட்டா முதலிய இடங்களிற் கிடைத்த சிவலிங்கங்களால் வெளியாகிறது என்பதும் அன்னோர் கருத்தாகும். இச்சைவ சமயம் வேத காலத்தில் விளக்க முற்றிருந்தது என்பது வேதங்களால் விளங்குகிறது. பின்னர் மகாபாரதம் - இராமாயணம் போன்ற இதிகாச காலத்தில் மேலும் வளர்ச்சியுற்றிருந்தது என்பதற்குரிய சான்றுகள் இதிகாசங்களிற் காணலாகும். இவ்வளர்ச்சி படிப்படியாக முதிர்ந்தமைக்கு உரிய சான்றுகள் வடமொழிப் புராணங்களிற் புலனாகின்றன. அப்பண்டைக் காலத்திலேயே நம் நாட்டில் சிவ வணக்கத்துக்குரிய கோவில்கள் பல இருந்தன தீர்த்தங்கள் இருந்தன. மக்கள் இவ்விரண்டிற்கும் யாத்திரை செய்தனர். சிவபிரான் ஏனைய தேவர்க்கும் மேலானவன் என்ற பொருளில் ‘மகா தேவன்’ என்று வழிபடப்பட்டான். காசியிலிருந்து இராமேச்வரம் வரை கோவில்கள் இருந்தன. இஃது உண்மையாயின், இத்தமிழகத்திலும் இராமேச்வரம் உட்படச் சில கோவில்களேனும் அப் பண்டைக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் அல்லவா? காஞ்சி - ஏகாம்பரநாதர் கோவில், மதுரை - மீனாட்சியம்மன் கோவில் முதலியன எக்காலத்தில் உண்டாயின என்பது இன்று கூறக் கூடவில்லை.

சங்க காலக் கோவில்கள். சங்கத்தின் இறுதிக் காலம் ஏறத்தாழ கி.பி. 400 என்னலாம். அதன் தொடக்கம் கூறக்கூடவில்லை. இச்சங்க காலத்து மிகப் பழைய நூல் தொல்காப்பியம் என்பர். அதனைக் கொண்டு, வீரர் வணக்கத்துக்கு உரிய கோவில்களும் முருகன்-திருமால்-துர்க்கை முதலிய தெய்வங்கட்க்குக் கோவில்களும் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகிக்கலாம். புறநானூறு முதலிய தொகை நூல்களில் சிவபெருமான் - முருகன் - துர்க்கை - திருமால் - பலராமன் முதலிய கடவுளர் சிறப்புடைக் கடவுளராகக் கூறப்பட்டுள்ளனர். அதனால் அவர்கட்குக் கோயில் உண்மையை அறியலாம். ஆலமா செல்வனான சிவபிரானுக்கு நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆய்வேள் அளித்தனன் என்பதனால், கோவிலும் இலிங்கமும் (சிவனைக் குறிக்கும் மூலத்தான அடையாளம்) இருந்தன என்பது தெளிவு அன்றோ?

சிலப்பதிகாரம். சிலப்பதிகார காலத்தில் வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார், இவர்க்குக் கோவில்கள் இருந்தன. சிவன் - முருகன் - திருமால் - பலராமன் இவர்கட்கும் கோவில்கள் இருந்தன என்பது.

“பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோவிலும்
வால்வளை மேனி வாலியோள் கோவிலும்

நீலமேனி நெடியோன் கோவிலும்.....”

என வரும் சிலப்பதிகார அடிகளால் அறியப்படும்.

கோவில்கள். இக் கோவில்கள் சில இடங்களில் ‘மாளிகை’ எனவும் பெயர் பெறும். தெய்வக் கோவிலும் அரசன் கோவிலிலும் மண்டபங்கள் உண்டு. இவை யாவும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, தேரறி கயிறிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது,

“ஒருதிறம் சாரா வரைநாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து"

நெடுநல்வாடை


என வரும் அடிகளாலும்,
“அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று
மேவோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்”

சிலப்பதிகாரம்


என வரும் அடிகளாலும்,

“பைஞ்சேறுமெழுகாப் பசும்பொன் மண்டபம்”

என வரும் மணிமேகலை அடியாலும் நன் குணரலாம். கடைசியிற் கூறிய மண்டபம் பல நாட்டுக் கட்டடத்திறனாளருடன் தண்டமிழ் வினைஞர் சேர்ந்து சமைத்த அற்புத மண்டபம் என்று மணிமேகலை குறிக்கின்றது. அவ்வற்புத மண்டபத் தூண்கள்மீது பன்மணிப் போதிகைகள் இருந்தன. அவற்றின்மேற் பொன் விதானங்கள் இருந்தன. தரை சாந்தினால் மெழுகப்பட்டு இருந்தது.

இக்கோவில்கள் சுற்றுமதிலை உடையன. உயர்ந்த வாயில்களை உடையன. அவ்வாயில்கள் மீது உயர்ந்த மண்ணிடுகள் (கோபுரங்கள்) இருந்தன. அவற்றில் வண்ணம் திட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பனவும் மணிமேகலை முதலிய நூல்களிலிருந்து தெளியலாம்.

இக்கோவில்கள் அனைத்தும் சுடுமண்ணால் (செங்கற்களால்) ஆகியவை. மேற்புறம் உலோகத் தகடுகளும் மரப் பலகையும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இவ்வாறே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன. இக் கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களையுடைய வாயில்களும், அவ்வாயில்கட்குத் துருப்பிடியாதிருக்கச் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும் பொருத்தப்பட்டிருந்தன.

சிதம்பரம். சிதம்பரத்தின் பழைமை கூறுதற்கில்லை. பதஞ்சலி முனிவர் கூத்தப்பெருமான் நடனத்தைக் கண்டு களித்தார் என்பது புராணச் செய்தி. பதஞ்சலி காலம் கி.மு. 150 என ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர்பெற்ற சிதம்பரத்தில் உள்ள கூத்தப்பிரான் திருக்கோவில் ஏறத்தாழ, கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது விளங்கும். அது படிப்படியாகச் சிறப்பினைப் பெற்று அப்பர் காலத்தில் பெருஞ் சிறப்புற்று விளங்கியது. அவர் காலத்திலேயே சிற்றம்பலம் சிறந்திருந்தது. சிற்றம்பலம் என்ற துணையானே ‘பேரம்பலம்’ உண்மையும் பெறப்பட்டது. அப்பர் காலத்திலேயே பொன்னம்பலம் பொலிவுற்றது என்பதற்கு அவர் பதிகமே சான்றாகும். அப்பர்க்கு முற்பட்ட 'சிம்மவர்மன் என்ற பல்லவன். தன்னைப் பீடித்த உடல் நோயைப் போக்கிக்கொள்ளத் தில்லையை அடைந்தான், வாவியில் மூழ்கினான் பொன் நிறம் பெற்றான். அதனால் ஹறிரண்ய வர்மன் (பொன்னிறம் பெற்றவன்) எனப்பட்டான் என்று கோயிற்புராணம் குறிக்கிறது. அவனே சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று அறிஞர் கருதுகின்றனர்.

பாடல் பெற்ற கோவில்கள்: ஏறத்தாழ கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோச்செங்கட்சோழன் ' என்ற பேரரசன் 70 சிவன் கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் அருள்யுள்ளார். தமது காலத்திற்கு பெருங் கோவில்கள் 78 இருந்தன என்று அப்பர் அருளிப் போந்தார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இடையில் சம்பந்தர் மட்டும் ஏறக்குறைய 220 கோவில்களைத் தரிசித்துப் பதிகம் பாடினார் எனின், அவற்றுள் ஒன்றேனும் அவர் காலத்தில் உண்டானது என்ற குறிப்புக் காணப்படவில்லை எனின், அப்பர்-சம்பந்தர் காலத்திற்கு முன்பே இத்தமிழகத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட சிவன் கோவில்கள் இருந்தமை உண்மை அன்றோ? அக் கோவில்களில் ஆடல்-பாடல், நாளும் பலமுறை வழிபாடு, மக்கள் தவறாது கோவில் வழிபாடு செய்தல் முதலியன சிறப்புற இருந்த்ன அவை அப்பர் சம்பந்தர் காலத்திற் புதியவையாக உண்டாக வில்லை என்பதை நோக்க, பல நூற்றாண்டுகளாகவே இக்கோவில்கள் தத்தம் இடம் - பொருள்கட்கு ஏற்ப ஏற்ற மடைந்து விளங்கின என்பது தேற்றமன்றோ? கோவில் வகைகள்: தமிழ் நாட்டுக் கோவில்கள் (1) பெருங் கோவில், (2) இளங்கோவில், (3) மணிக் கோவில், (4) கரக் கோவில், (5) தூங்கானை மாடம், (6) மாடக் கோவில் எனப் பலவகைப்படும். இவற்றுள் பெருங்கோவில் என்பது தில்லை, மதுரை. திருவாரூர் போன்ற சிறந்த இடங்களிற் கட்டப்பட்ட பெரிய கோபுரங்கொண்ட கோவில்கள் ஆகும். இளங்கோவில் என்பது பெரிய கோவிலைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்து வழிபாடு நடைபெற்று வந்த சிறு கோவில் ஆகும். அது பெருங்கோவில் பிராகாரத்திற்கு உள்ளேயே இருக்கும். ஒரே ஊரில் இரண்டு கோவில்கள் இருந்தால், அளவுநோக்கி, ஒன்று பெருங்கோவில் என்றும் மற்றது இளங்கோவில் என்றும் கூறப்படலும் உண்டு. மாடக் கோவில் என்பது கட்டு மலையையும் யானை செல்லக்கூடாத திருமுன்பையும் உடையது. நன்னிலம், சாய்க்காடு முதலிய இடங்களில் உள்ள கோவில்கள் மாடக் கோவில்கள் ஆகும். மூலத்தானத்திற்கு மேலே உள்ள விமானம் (படுத்து) தூங்குகின்ற யான்ை வடிவில் அமையப்பெற்ற கோவில் துங்கானை'மாடம் எனப்பட்டது. பெண்ணாகடம், திருத்தணிகை முதலிய இடங்களில் இத்தகைய கோவில்களைக் காணலாம். திருவதிகைக் கோவில், திருக்கடம்பூர்க் கோவில்களின் உள்ளறைகள் தேர் போன்ற அமைப்புடையவை உருளைகளையும் குதிரைகளையும் கொண்டவை. இங்ங்னம் பலவாறு - அமைந்த இக்கோவில்கள் இன்று-நேற்று உண்டானவை அல்ல. அவை அப்பர் காலத்திற்கும் முற்பட்டவை.

பலவகை அடியார் சிவத் தலங்களில் பலவகை அடியார்கள் இருந்தனர். திருவாரூரில் விரிசடை அந்தணர், மாவிரதியர், காபாலிகர் பாசுபதர் முதலி யோர் வாழ்ந்தனர் என்று அப்பர் கூறியுள்ளார். அவர்கள் திடீரென்று அப்பர் காலத்தில் கடவுளாற் படைக்கப்பட்டவர். அல்லர் அல்லவா? என்வே மேற் சொன்ன பலவகைச் சிவனடியார்கள் அப்பர்க்கு முன்னமே இந்நாட்டில் வாழையடி வாழையாக வாழ்ந்தனராதல் வேண்டும். என்று சைவம் உண்டாயிற்றோ என்று சிவன் கோவில் உண்டானதோ - அன்று தொட்டே இந்நாட்டில் சிவனடியார்கள் இருந்து வந்தனர் என்பது அங்கைக் கனியாகும்.

முடிவுரை: இதுகாறும் கூறிவந்த செய்திகளால், சங்க காலத் தமிழகத்திலும் அப்பர்க்கு முற்பட்ட தமிழகத்திலும் பல சிவன் கோவில்கள் சிரிய நிலையில் இருந்தன: பலவகைச் சிவனடியார் இருந்தனர். கோவில்களில் ஆடல், பாடல், விழா, வழிபாடு முதலியன சிறப்புற நடைபெற்றன. கோவில் கட்டும் கலையில் நம்மவர் பண்பட்டிருந்தனர். சைவசமயம் அரசராற் பேணி வளர்க்கப்பட்டது என்பன போன்ற செய்திகளை அறியலாம்.