சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்)/தொண்டை நாடு - குன்றத்தூர்

விக்கிமூலம் இலிருந்து

துறைமுகப் பட்டினங்கள், கொற்கை முத்துக்குப் பெயர் பெற்ற பண்டைத் துறைமுக நகரம், இந்நாட்டை நீண்ட காலமாக ஆண்டு வந்தவர் பாண்டியர் என்பவர்.

நடு நாடு. சோழ நாட்டிற்கு வடக்கே உள்ள தென் ஆர்க்காடு மாவட்டத்தின் பெரும் பகுதி ‘நடு நாடு’ எனப் பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டில் பல சிற்றரசர் இருந்து, திருக்கோவலூர், திருநாவலூர் முதலிய ஊர்களைச் சூழவுள்ள நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். அந்நாடுகள் திருமுனைப்பாடி நாடு, மலையமானாடு எனப் பெயர்கள் பெற்றிருந்தன.

தொண்டை நாடு. இது செங்கற்பட்டு, வடஆர்க்காடு, சித்தூர் முதலிய மாவட்டங்களையும் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியையும் தன் அகத்தே கொண்டது. இதில் சிறப்புற்று விளங்கிய தலைநகரம் காஞ்சிபுரம் என்பது. இதன் சிறந்த துறைமுகப்பட்டினம் மல்லை (மகாபலிபுரம்) என்பது. இந்நாட்டிற் சிறப்புடைய பெரிய ஆறு பாலாறு என்பது இந்நாட்டில் மலைகள் மிகுதியாக உண்டு. வேங்கடம், காளத்தி, நகரி, நாகலாபுரம், இராமகிரி, வேலூர், செங்கற்பட்டு, சோழ சிங்கபுரம் முதலிய பல. இடங்களிலும் மலைத் தொடர்கள், தனி மலைகள் சூன்றுகள் இவற்றைக் காணலாம். இந்நாட்டின் பல பகுதிகளில் பெருங்காடுகளும் சிறிய காடுகளும் இருக்கின்றன. ஆங்காங்கு ஒன்றும் விளையாத பாலை நிலங்கள் காண்கின்றன. இவற்றுக்கு இடையே கண்ணுக்கு விருந்தளிக்கும் பசிய வயல்கள் காட்சி அளிக்கின்றன. சுருங்க கூறின், தொண்டை நாட்டில் நானிலத்து ஐந்திணை. வளங்களையும் கண்டு களிக்கலாம்.

பெயர்க் காணங்கள்: 1.” தொண்டை நாடு முதலில் ‘குறும்பர் நிலம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. குறும்பர் தம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு அங்குப் பொழுது போக்கினர். அவர்களே தங்கள் நாட்டை இருபத்து நான்கு கோட்டங்களாக வகுத்துக் கொண்டார்கள். அக் குறும்பர் காவிரிப்பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிபம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் குறும்பரை வென்று நாட்டைக் கவர்ந்தான். அன்று முதல் அந்நாடு அவன் பெயரால் ‘தொண்ட நாடு’ என வழங்கலாயிற்று”[1] என்பது செவிவழிச் செய்தியாகும்.

2. “கரிகாற் சோழன் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் காடு கெடுத்து நாடாக்கினான். பிறகு தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழிவந்த (நாகர் மகளுக்கும் சோழ மன்னனுக்கும் பிறந்த) இளந்திரையன் என்பவன் -ஆண்டதால், குறும்பர் நாடு ‘தொண்டை நாடு’ எனப் பெயர் பெற்றது” என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன்.

கரிகாலன் - இளந்திரையன்: ‘தொண்டை நாடு’ என்ற பெயர் எக்காரணம் பற்றி வந்தது என்பது இப்பொழுது திட்டமாகக் கூறுதற்கில்லை; ஆனால் சங்க காலத்தில் அந்நாடு சோழர் ஆட்சியில் இருந்தது என்பதை மட்டும் திட்டமாகக் கூறலாம். கி.பி. முதல் நூற்றாண்டினன் என்று கருதத்தகும் “கரிகாலன் இமயம் செல்லும்பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் சிறப்பைக் கூற, அச்சோழர் பெருமான் காஞ்சி நகரைத் தனதாக்கிக் குன்று போன்ற மதிலை எழுப்பினான்; தொண்டை நாட்டில் பலரைக் குடியேற்றினான்” என்பது பெரிய புராணக் . கூற்றாகும். “இளந்திரையன் என்பவன் காஞ்சியைத், தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்டு வந்தான்; அவன் பாண்டவரைப் போலப் பகைவரை வென்றவன். தொண்டையர் குடியிற் பிறந்தவன். பகைவர் அரண்களை அழித்தவன் நான்கு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன்; சிறந்த கொடையாளி.” என்று பெரும்பாண் ஆற்றுப்படை குறிக்கிறது.

இளங்கிள்ளி: ‘மணிமேகலை’ என்ற காவிய காலத்தில் (ஏறத்தாழ, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்) தொண்டை நாட்டை இளங்கிள்ளி என்பவன் ஆண்டு வந்தான். அவன் தமையனான நெடுமுடிக்கிள்ளி சோணாட்டை ஆண்டு வந்தான். இளங்கிள்ளி தொண்டை நாட்டை எதிர்க்கவந்த சேர, பாண்டியரைக் காரிக்கரை (இராமகிரி) என்ற இடத்தில் முறியடித்தான். இளங்கிள்ளி. காலத்திற்றான் மணிமேகலை என்ற மாதவி மகள் பௌத்த பிக்குணியாகிக் காஞ்சியை அடைந்தாள்; இளங்கிள்ளியின் உதவி கொண்டு புத்த பீடிகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வழிபடக் கோட்டங்கள் அமைத்தாள். பின்னர், அந்நகரத்திலேயே தங்கி அறவண அடிகளிடம் உபதேசம் பெற்றுத் தவம் கிடந்தாள். எனவே தொண்டை நாடு சங்க காலத்தில் சோழராட்சியில் இருந்தது என்பதற்குப் பண்டை நூல்கனே சான்றாகும்.

காஞ்சி மாநகரம் : இது வடமொழிப் புராணங்களில் பெயர் பெற்றதாகும். முத்தி தரும் நகரங்கள் ஏழனுள் ஒன்று. இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்து சமய போதனை செய்தார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் அங்குப் பல தூபிகளை நாட்டிப் பௌத்த சமயப் பிரசாரம் செய்வித்தான். . அசோகன் - நாட்டிய தூபிகளில் ஒன்று இயூன்-சங் காலம்வரை (கி.பி. 640-41) அங்கு இருந்ததாகத் தெரிகிறது. கி.மு. 150இல் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தமது விருத்தி யுரையில் காஞ்சி நகரைக் குறிப்பிட்டுள்ளார் எனின், காஞ்சி அப்பழங்காலத்திலேயே சிறந்த கலைப் பீடமாக விளங்கினதை அறியலாம். காஞ்சிபுரம் சங்ககாலத்திற் ‘கச்சி’ எனப்பட்டது. “அப்பெருநகரம் தேரோடும் தெருக்களைக் கொண்டிருந்தது; பழங்குடிகளையும் மதிலையும் பெற்றிருந்தது” என்று பெரும் பாணஆற்றுப்படை கூறுகின்றது.

பல்லவர் காலம்: பல்லவர் தொண்டை நாட்டைக் கைப்பற்றி ஏறத்தாழ 600 ஆண்டுகள் (கி.பி. 300-900) ஆண்டனர். அவர்கள் காலத்தில் தொண்டை நாடு பல துறைகளிலும் சிறப்புற்றது. காஞ்சி பல்கலைத் துறைகளிற் பெயர் பெற்று விளங்கியது. பிறநாட்டு மாணவரும் விரும்பி வந்து கற்குமாறு காஞ்சி வடமொழிக் கல்லூரி கல்வியிற் சிறப்புற்று விளங்கியது. “கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்” என்று திருநாவுக்கரசரும் தமது தேவாரத்திற் பாராட்டுவாராயினர். பல்லவர் நாட்டை வளப்படுத்தப் பல ஏரிகளை எடுப்பித்தனர்; பாலாற்றிருந்து பல கால்களைப் பெருக்கினர். அவர்கள் ஆட்சியில், தொண்டை நாட்டில் சைவமும் வைணவமும் செழித்து வளர்ந்தன.

பிற்காலச் சோழர் காலம்: பல்லவப் பெரு நாட்டிற்கு நடு நாயகமாக இருந்த தொண்டை நாடு, கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதித்த சோழனாற் கைப்பற்றப்பட்டுச் சோழப் பெருநாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அது முதல் தொண்டை நாடு ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் சோழர் ஆட்சியில் இருந்தது. சோழர் ஆட்சி வடக்கே கோதாவரி வரை பரவி இருந்த மையால் ஆந்திரப் பகுதியைக் கவனிக்கக் காஞ்சி ஒரு தலைநகரமாக இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காஞ்சியில் அழகுக்கு இருப்பிடமான அரண்மனை ஒன்று ‘பொன் மாளிகை’ என்ற பெயருடன் இருந்தது. சோழர் ஆட்சியிலும் காஞ்சிமா நகரம் வடமொழிக் கல்விக்கு நிலைக்களமாக விளங்கியது.

தொண்டை நாட்டுச் சிவத்தலங்கள்: காஞ்சி, திருமுல்லைவாயில், திருமயிலை, திருவான்மியூர், திருவொற்றியூர், திரு இடைச்சுரம், திருமாற்பேறு, திரு ஒத்தூர், திரு ஆலங்காடு, திருவூறல் போன்ற சிவத்தலங்கள் அப்பர் காலமாகிய கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே உயர்நிலையில் இருந்தன. அவை நாயன்மார் காலமான பல்லவர் காலத்தில் பின்னும் சிறப்புற்றன; ஆதித்த சோழன் மரபினர் காலத்தில் கற்றளிகளாக மாறிவிட்டன. பூசை, விழாக்கள் முதலிய சிறப்புகளில் செம்மையுற்றன. பாடல் பெற்ற கோவில்களைப் போலவே தொண்டை நாட்டுப் பிற (பல்லவர் - சோழர் கால)க் கோவில்களும் வர வரச் சிறப்புப் பெற்றுப் பொது மக்கட்குச் சமய உணர்ச்சியை ஊட்டி வந்தன.

தொண்டை நாட்டுக் கோட்டங்கள்: தொண்டை நாடு எப்பொழுது யாரால் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. என்பது திட்டமாக கூறமுடியாது. இருபத்து நான்கு கோட்டங்களின் பெயர்களும் பல்லவர் காலத்தில் வழங்கியவாறே பிற்காலச் சோழர் காலத்திலும் வழங்கி வந்தன. அவ்விருபத்து நான்கு பிரிவுகளாவன:

1.புழல் கோட்டம் 2.ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4. செங்காட்டுக் கோட்டம். 5. பையூர்க் கோட்டம். 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 3. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13. பல்குன்றக் கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16, செங்கரைக் கோட்டம் 17. படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்ற வட்டானக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேத்தூர்க் கோட்டம் 24. புலியூர்க் கோட்டம் என்பன.

புலியூர்க் கோட்டம்: இப்பகுதிக்குத் தலைநகரம் புலியூர் என்பது. அது, சென்னைக்கடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து அரைக்கல் தொலைவில் உள்ள சிற்றூர். அதனைச் சுற்றியுள்ள கோவூர், பூவிருந்த வல்லி, குன்றத்தூர் முதலிய ஊர்களைக் கொண்ட நிலப் பகுதி ‘புலியூர்க் கோட்டம்’ எனப்பட்டது.

குன்றத்தூர்: இது சென்னைக்கடுத்த பல்லாவரம் (பல்லவபுரமி) புகைவண்டி நிலையத்திலிருந்து நான்கு கல் தொலைவில் உள்ள சிற்றூர் ஆகும். இதற்குச் சென்னையிலிருந்து நேரே பேருந்து போகின்றது. இவ்வூர், சோழர் காலத்தில் சிறப்பாகச் சேக்கிழார் காலத்தில் சிறந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை, அதன் பழுதுபட்ட தோற்றம் கொண்டு கூறக்கூடும். இன்றைய குன்றத்தூர்- ‘திருநாகேச்சரம், நத்தம்’ என்னும் இரண்டு சிற்றூர்களாக இருக்கின்றது. இரண்டையும் ஏறத்தாழ அரைக்கல் நீளமுள்ள பழுதுபட்ட பாதை ஒன்றுபடுத்துகிறது. அப்பாதையின் இரண்டு பக்கங்களிலும் அங்கங்கே இரண்டொரு தெருக்களும் வீடுகளும் பசிய வயல்களும் காண்கின்றன. நத்தம் எனப்படும் சிற்றூரிற்றான் சேக்கிழார் கோவில் இருக்கின்றது. அக்கோவில் உள்ள இடத்திற்றான் சேக்கிழார் வாழ்ந்த இல்லம் இருந்தது என்று அங்குள்ள அவர் மரபினர் கூறி வருகின்றனர். நத்தம் பழமையான இடம் என்பதில் ஐயமில்லை சில இடங்களில் நீண்ட மதிற்சுவரின் பழுதுபட்ட பகுதிகள் காண்கின்றன. அங்குள்ள சைவ-வைணவக் கோவில்கள் பழுதுபட்டுவிட்டன. சில பகுதிகள் அழிந்து, கிடக்கின்றன; கல்வெட்டுகள் சிதைந்து காண்கின்றன. நத்தத்தில் உள்ள பெருமாள் கோவிலில் எழந்தருளியுள்ள திருமாலின் பெயர் திருவூரகப் பெருமாள் என்பது, அதற்கு அண்மையில் உள்ள சிவன் கோவில் மிகவும் பழுதுபட்டுக் கிடக்கிறது. அது சேக்கிழார் கோவிலுக்கு நேர் எதிரில் இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களிலும் மூன்றாம் இராசராசன் கல்வெட்டுகளும் பிற்கால் நாயக்க மன்னர் கல்வெட்டுகளும் காண்கின்றன. நத்தத்தின் உள்ள தெருக்களும் இல்லங்களும் பள்ளங்களும் மேடுகளும் தம் பழைமையைப் புன்முறுவலோடு உணர்த்திநிற்றலை ஆராய்ச்சியாளர்தாம் அறிதல் கூடும். சேக்கிழார் கோவிலுக்கு அண்மையில் ஒரு குளம் இருக்கின்றது. வயல்கள் செம்பரம்பாக்கத்து ஏரிப்பாய்ச்சலைப் பெற்றுச் செழித்துள்ளன. நத்தம் மலை மீதுள்ள முருகர் கோவில் சொக்கநாத நாயக்கர் காலத்தது கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் கட்டப்பட்டது. எனவே, சேக்கிழார் காலத்தது அன்று.

ஊரின் பண்டை நிலைமை: நத்தம் கல்வெட்டுகளைக் கொண்டும் சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் திருநாகேச்சரம் கோவிற் கல்வெட்டுகளைக் கொண்டும் காண்கையில் அப்பதி, சோழர் காலத்தில் பெரிய நகரமாக இருந்தது. சைவ வைணவக் கோவில்கள் நன்னிலையில் இருந்தன. கோவில் காரியங்களைக் கவனிக்கச் சபையார் இருந்தனர்: ஊர் ஆட்சியை நடத்த ‘ஊரவர்’ எனப்பட்ட ‘ஊர் அவையார்’ இருந்தனர் என்பன போன்ற செய்திகளை நன்கறியலாம்.

  1. R. Gopalan's Pallavas of Kanchi, pp. 26 - 27